Pages

Sunday 4 October 2015

SECOND JUDGEMENT – A SMALL STORY IN TAMIL

தலைப்பு: திருத்திய இரண்டாம் தீர்ப்பு
SECOND JUDGEMENT – A SMALL STORY IN TAMIL
சிறு கதை
மதுரை கங்காதரன்
இந்த முறையாவது சிறுகதை போட்டியில் கலந்து சிறந்த எழுத்தாளர்கான விருது வாங்கியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான் மாணிக்கம். ஒவ்வொரு வருடமும் மிகச் சிறந்த படைப்பைப் படைத்து எழுதி அனுப்பினாலும் அவனால் இது வரையில் ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்காத ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அவனுடைய ஆதங்கமெல்லாம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்புகள் சொல்லுகிறாற் போல் இல்லையே என்பது தான்! பிறகு எப்படி எந்த அடிப்படையில் தேர்வுக் குழுவினர்கள், நடுவர்கள் அத்தகைய படைப்புகளை தேர்ந்தெடுக்கிறார்களோ? மேலும் அவர்களுக்கு பரிசளிக்க பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்து பத்திரிகை மற்றும் பல ஊடகங்களுக்கு பிரமாதமாக செய்தியாகக் கொடுத்து அவர்களை மென்மேலும் கௌரவிப்பது தான் அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருந்தது.

அந்த வருடத்தில் நடக்கும் சிறுகதைப் போட்டிக்கு புதிய கருத்துக்கள், எளிய நடை, இந்தக் கால நடைமுறைக்குத் தேவையான மாற்றங்கள்,அன்றாடம் எல்லோரும் எதிர் கொள்ளும் பெரிய பிரச்னையும் அதற்கு எளிமையான தீர்வு கொண்டதொரு மிகச் சிறந்த சிறுகதையைப்  படைத்தான். அதைத் திரும்ப திரும்பப் படித்து பலவித மாற்றங்களைச் செய்து மெருகேற்றி இறுதியில் அருமையான படைப்பாக வந்ததில் அவனுக்கு பரமதிருப்தி உன்டாயிற்று. இந்த முறை கட்டாயம் தனக்கு பரிசு கிடைக்குமென்ற நம்பிக்கை மாணிக்கத்திற்கு இருந்தது.

மாணிக்கத்திற்கு எழுதுவதென்பது பொழுதுபோக்காக இருந்துவிடாமல் அதன் மூலம் சமுதாயம், கல்வி, அரசியல் ஆகியவற்றில் மக்களிடையே விழிப்புணர்வும் சமுதாயத்திற்கு நல்ல பலனும் கொடுக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத் தான் எழுத்துலகில் பிரவேசிக்கத் துடித்தான். என்ன தான் ஆர்வம், திறமை,அறிவு இருந்தாலும் எல்லாமே 'நினைத்தவாறு நடக்கவா செய்கிறது? தேர்வின் முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு மாணவன் போல, தேர்தலின் முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அரசியல்வாதி போல போட்டியின் முடிவை எதிர்நோக்கி இருந்தான்.

போட்டியின் முடிவும் வந்தது. எப்படியும் தனக்கு ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும் என்று நம்பிய அவனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது! எல்லோரும் எதிர்பார்த்தது போல முதல் பரிசு புகழ் பெற்ற எழுத்துச்சிற்பி ஆனந்தனுக்கு கிடைத்த செய்தி மாணிக்கத்திற்கு மென்மேலும் மகிழ்ச்சியில் மிதக்கச் செய்தது. தனக்கு கிடைத்த ஆறுதல் பரிசுக்காக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை அக்கறையாக கேட்டதைக் காட்டிலும் முதல் பரிசு கிடைத்த அந்த எழுத்துச்சிற்பி ஆனந்தனுக்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டிருந்ததை கேள்விபட்டு துள்ளிக் குதித்தான். வாழ்நாளில் தான் ஒரு பெரிய சாதனைபடைத்ததாக உணர்ந்தான். அது பற்றிய செய்தி வானொலி ,தொலைக்காட்சியில் பலர் பாராட்டுவதை ஆர்வமாகக் கேட்டான். அதேபோல் செய்தித்தாளில், பத்திரிக்கைகளில் அச்செய்தி வந்ததை மகிழ்ச்சியோடு படித்தான்.

இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றும் புரியாதது போல தான் இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த  அவன் அம்மா,"ஏண்டா, உனக்கு வரும் வாழ்த்துக்களை படிப்பதிலே, கேட்பதிலே அக்கறை காட்டாமே யாரோ ஒரு எழுத்தாளன் முதல்பரிசு வாங்கியிருக்கிறதுலே அப்படி என்ன உனக்கு சந்தோசம்!" என்று சத்தம் போட்டாள்.

"சும்மா இரும்மா! உனக்கு ஒண்ணும் தெரியாது. அவர் முதல் பரிசு வாங்கியது நான் வாங்கியது போல!" என்று புதிர் போட்டான். "அதில்லேடா, அரக்கோணத்தில் பெய்த மழையைப் பார்த்து அரேபியாவிலே இருக்கிறவங்க சந்தோசப்பட்ட கதைபோலயில்லே இருக்கு. போச்சி, உனக்கு என்னமோ ஆயிடுச்சி!" என்ற புலம்பலோடு வீட்டு வேலையில் ஈடுபட்டாள்.

அன்று மாலையில் சின்னத்திரையில் இந்தியத் தொலைக்காட்சியில் முதன்முதலாக அப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எழுத்துச்சிற்பி ஆனந்தத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது படைப்பின் விமர்சனங்களும் அது உருவான விதமும் என்பதை ஒரு தொலைக்காட்சி நிலையம் நேரடி பேட்டி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்த இனிய மாலை நேரம் வந்தது. மாணிக்கம் ஆர்வமாக உட்கார்ந்திருக்க அவனின் அம்மாவும் 'தலையெழுத்தே' என்று கூடவே அமர்ந்தாள். அந்த அரங்கில் பல துறையைச் சேர்ந்த சுமார் முப்பது பேர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்து பார்க்கும்படி பிரம்மாண்டமாக பேட்டி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

பேட்டி ஆரம்பமானது. வழக்கமாய் ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பின் "உங்களுக்கு 'எழுத்துச்சிற்பி' என்கிற பட்டம் எப்படி கிடைத்தது?" என்று கேட்க
"நான் படைப்பது ஒவ்வொன்றும் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சமுதாயத்தில் இருக்கும் பல கறைகளை பொசுக்கி சிறந்த மனித இனம் படைக்கும்படியாக ஒவ்வொரு சொல்லும் செதுக்கியிருக்கிறேன். அதைப் படிப்பவர்கள் மனதில் எளிதாக பதிகின்றன. அதேசமயத்தில் இனிமையாகவும் இருக்கின்றன. வீண்வரிகள் ஏதும் இல்லாதலால் எனக்கு இந்தப் பட்டம் கிடைத்தது.
"இந்த முதல் பரிசு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றதா?"
"ஒவ்வொரு எழுத்தாளனுக்கு இது தானுங்க ஊக்க மருந்து! இந்த ஊக்கம் கிடைக்கிறதாலேத் தானே பல புதுமைகள் பொரிதட்டி வெளியில் வந்து சமுதாயத்திலே பெரிய அதிர்வலையை தரமுடிகிறது!"
"இந்தப் படைப்பு எப்படி உங்களுக்கு வந்தது. இதிலே உங்களுடைய வழக்கமான பாணி துளிகூட இல்லைன்னு உங்களுடைய வாசகர்கள் கூறுகின்றனரே அது உண்மையா?"
"இந்தப் படைப்பும் சமுதாயத் தாக்கம் தான். அவலங்களை கூர்மையான வார்த்தைகளால் படைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்து போல இது  எனது நடையில்லாமல் முற்றிலும் மாறுபட்ட படைப்பு" என்றார் பணிவான குலுடன்.
"நீங்க புதிய, வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?"
"புதிய எழுத்தாளர்களே! நீங்கள் தினமும் தவறாது எழுதிக் கொண்டே இருங்கள். எழுதியதை மென்மேலும் மெருகேற்றுங்கள். எழுதியவுடனே 'வெற்றி' கிடைப்பது கடினம் தான். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கட்டாயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களே! வெறும் பணத்திற்காக மட்டும் உங்கள் படைப்புகளை விலை பேசாதீர்கள். உங்கள் படைப்பு அர்த்தமுடன் என்றும் எல்லோரும் வணங்கும் சிலையாக இருக்க வேண்டும். வெறும் ஒரே நாளில் முளைத்த அழகான காளானாய் இருப்பது நல்லதல்ல. ஆரம்பத்திலே உங்கள் படைப்புகள் மக்கள் ஏற்றுக் கொள்வது சற்று சிரமம் தான். ஆனால் உங்களது முயற்சியை விட்டுவிடக் கூடாது. வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களே! புதிய தலைமுறைக்கு இடம் விடுங்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். அவர்களை நசுக்கும் எமனாய் மாறாதீர்கள்" என்று முழங்கிட அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அவரை மேலும் பாராட்டி மகிழந்தனர்.

"கடைசியாக நீங்கள் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று பேட்டி எடுப்பவர் கேட்டது தான் தாமதம்..
"இதுவரை நீங்கள் பார்த்தது, இந்த ஆனந்தன் கொடுத்த பேட்டி என்று நினைக்காதிங்க! இப்போது நீங்கள் தருகின்ற பேரும் புகழும் எனக்குச் சேர்ந்தது அல்ல!" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட அதை நேரடியாய் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஒருவித அதிர்ச்சியில் உறைந்தனர்.

"நான் சொல்லப் போறது பிரமிப்பாக இருக்கலாம். எனக்கு முதற்பரிசு பெற்றுத் தந்த சிறுகதையை நான் எழுதியதல்ல!" என்ற போது கவனித்துக் கொண்டிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது. அது மாணிக்கத்தின் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை.

"என்னடா சொல்றான்! முதல் பரிசு கதை தன்னுடையது இல்லைன்னு சொல்றான். பின்னே அது யாரோட கதையா இருக்கும்!" என்று சற்று யோசிக்க
"இரும்மா, குறுக்கே குறுக்கே பேசாதே! அவரு என்ன சொல்றாருன்னு பார்போம்".
எழுத்தாளர் தொடர்ந்தார்."இந்தப் போட்டி அறிவிச்ச உடனே நான் ஒரு கதையை எழுதினேன். அப்போது ஒருவன் ஆக்ரோசமாக என்னை வந்து பார்த்ததோடு இல்லாமல் அவனுடைய சில படைப்புகளை என் மேசையின் மீது வைத்துவட்டு 'ஐயா நீங்க பெரிய புகழ்பெற்ற எழுத்தாளர். உங்களிடத்தில் இவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். என்னுடைய ஆதங்கத்தைக் கேளுங்கள்.   எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கி எனது படைப்புகளை கொஞ்சம் படியுங்கள்' என்றான். அவன் கொண்டுவந்திருந்த படைப்புகளை நிதானமாகப் படித்துக் கொண்டிருக்கும் போது பலவற்றை நன்கு விளக்கினான். உண்மையில் அவைகளெல்லாம் காலத்தால் அழியாத படைப்பகள்! ஏன்? அவைகள் படைப்பின் புது இலக்கணம் என்றும் கூறலாம். மக்களைத் தட்டியெழுப்பி விரைந்து ஓட வைக்கும் வரிகள். அனைவரையும் கவரும் புதுநடை, எளிதான அதேசமயத்தில் ஆழமான கருத்துக்கள். எல்லாமே நேர்த்தியாக இருந்தது. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்தேன்.

அதற்கு அவனோஇவ்வளவு சிறப்புகள் இருந்தும் ஏனோ என்னுடைய படைப்புகள் எதிலும் பிரசுரிக்கத் தகுதியில்லை என்று நிராகரித்துவிட்டார்கள். அதற்கெல்லாம் காரணம் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள்" என்று கரித்துக் கொட்டினான். .
"நா.... நானா...எப்படி?"
"இப்போதெல்லாம் யாருங்க படைப்புகளைப் பார்த்து பரிசு கொடுக்கிறாங்க? ஆளைப் பார்த்து, பேரைப் பார்த்து தானே பரிசு கொடுக்கிறாங்க! தே மாதிரி பேரைப் பார்த்து தானே பேச்சை கேட்கிறாங்க! அதுக்கும் ஒருபடி மேலே அவர்கள் எவ்வளவு உளறிக் கொட்டினாலும் கைதட்டுது ஒரு கூட்டம். அந்த மாதிரிக் கலாச்சாரம் இருக்கும் வரை என்னைப் போல படைப்பாளிகளின் படைப்புக்கு மதிப்பு ஏது? என்று உணர்வுகளைக் கக்கினான்.

"கூடவே கூடாது. உன்னைப் போன்ற படைப்பாளிகள் நாட்டிற்குத் தேவை! மக்களை சிந்திக்க வைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கும் படைப்புகள் நீ எழுத வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்!" என்று கூறினேன்.
"நீங்கள் மனது வைத்தால் என் ஆசை நிறைவேறும் வாய்ப்பிருக்கின்றது"
"எப்படி?"
"இந்த வருடம் நடக்கும் சிறந்த எழுத்தாளர்கான படைக்கும் போட்டியில் உங்கள் பெயரில் என் படைப்பு வர வேண்டும். அதுதான் என் ஆசை. அப்போதாவது என் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா என்று பார்போம்!"

"இப்படிச் செய்வது முற்றிலும் தவறு தான். இருந்தாலும் உன் படைப்புக்கு எனக்கு உரிமை கொடுப்பதால் உனக்காக ஒத்துக் கொள்கிறேன். உண்மை என்னவென்று எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். பலருக்கு நன்மை கிடைப்பதால் இதைச் செய்வதில் பாவமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை! என் படைப்பு உன் பெயரில் வரவேண்டும்" என்றேன். அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான். இன்று இப்போது அவனுடைய படைப்பு தான் எல்லோராலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. என் வாழ்நாளில் இன்று போல் பேரும் புகழும் இது நாள் வரை என் படைப்புகளுக்குக் கிடைக்கவில்லை" என்று நீண்ட உரையாடலை முடிக்க உடனே பேட்டி எடுப்பவர் "நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையானால் யார் அந்த படைப்பாளி?" ஆர்வத்துடன் கேட்டார்.

"அவர் தான் திரு மாணிக்கம்! அவரின் திறமை இனி வரும் படைப்புகளில் உங்களுக்குத் தெரிய வரும். இந்த முதல் பரிசு அவருக்கு தான் சேர வேண்டும்! அவரை வரவழைத்து இதே போல் ஊடகங்கள் அவருக்கு பரிசுகள் கொடுத்து பெருமை சேர்க்க வேண்டும். அதோடு அவருக்குச் 'சிந்தனை ஞானி' என்கிற பட்டத்தை தர வேண்டுமென்று பரிந்துரைக்கின்றேன் " என்று கூற

அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் அம்மா பிரமிப்பில் வாயடைத்துப் போனாள். மாணிக்கத்திற்கோ அந்த எழுத்தாளரின் பெரும்தன்மையை நினைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டான்.


############################################################################################

No comments:

Post a Comment