Pages

Friday 15 February 2019

SHRINKAGE OF EDUCATION WILL BE SEEN BY 2025 - 2025ல் சுருங்கிப் போகும் கல்வி


SHRINKAGE OF EDUCATION WILL BE SEEN BY 2025
2025ல் சுருங்கிப் போகும் கல்வி 
கட்டுரை 
கு.கி.கங்காதரன் 
   கடந்த சில ஆண்டுகளாக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் விவசாயம், கால்நடை சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் அதன் ஆராய்ச்சிப் படிப்புகள் கண்டும்காணாதுபோல் விட்டதால் அதன் தாக்கம் இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. கணினிப் படிப்பு படித்தால் மட்டுமே பெருமையும், சிறப்பும் வருவதோடு அதிக சம்பளமும் கிடைக்கும் என்கிற 'மாயபிம்பம்' ஏற்படுத்தியதன் விளைவு, இப்போது அதன் வளர்ச்சி முட்டிமோதி நின்றதோடு மற்றப் பாடப்பிரிவுகளில் வளர்ச்சியும் மந்தமாக்கி அல்லது அடியோடு நிறுத்திவிட்டது என்பதே சரி.

    குறிப்பாக பொறியியல் தொழிற்நுட்பக் கல்லூரிகள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோகும் அபாயம் கண்கூடாகவேத் தெரிகின்றது. ஏனென்றால் பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு பெற பொறியியலில் பட்டப்படிப்போ, முதுகலை பட்டமோ அல்லது முனைவர் பட்டமோ தேவையில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. அதில் வேலை பார்க்கப் பத்தாவது, பன்னிரண்டாவது, டிப்ளோமா இருந்தால் போதும் என்கிற அளவில் இருந்து வருகின்றது. அதன் தாக்கம் கடந்த 2018 ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டதாகத் தோன்றுகின்றது. 2017 வரை கல்லூரிவளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் 2018 வருடத்தில் முற்றிலும் இல்லாமல் போனது. அப்படியே வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அது ஒரு கண்துடைப்பாகவே இருக்கின்றது. இதற்கு காரணம், கணினியானது பொறியியலில் நுழைந்து பல வேலைகளை எளிமையாக்கியது என்றுதான் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒன்று, பொறியியல் இயந்திரம் இருந்தால் தான் அல்லது உருவாக்கினால்தான் கணினிக்கு வேலை இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஒருவேளை 'கணினி' தவறு செய்தாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ யார் எப்படி எப்போது சரி செய்வார்கள்? என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?

        இந்த காரணத்தினால் தான் சென்ற வருடம் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு சேருவதற்குப் பலவித சலுகைகளோடு கூவி கூவி அழைத்தாலும் மாணவர்களை ஓரளவுக்கே, அதாவது 30 சதவீதமே நிரப்ப முடிந்தது. பல பொறியியல் கல்லூரியில் ஒருவர்கூட சேராமல் இருந்த அவலநிலையும் அரங்கேறியது. அதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடிக்கொண்டே வருகின்றனர். இந்த 2019ம் ஆண்டு சேர்க்கை மேலும் சரியும் என்பதே உண்மை நிலவரம். அதற்கான அறிகுறி மிக நன்றாகவே தெரிகின்றது. ஏன் இனிமேல் ..டி யில் கூட படிப்பதற்கு மாணவர்கள் இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் வேலைக்கு உத்திரவாதம் கொடுக்காத படிப்பை கஷ்டப்பட்டு அதேவேளையில் அதிக பணம் செலவழித்து படிப்பதில் புண்ணியம் உண்டா?

 இதனால் பணக்காரர்கள் மட்டும் பொழுது போக்கிற்காக பொறியியல் படிப்பார்கள். தேர்ச்சி பெறுவார்கள். பெரிய பெரிய பதவியில் உட்காருவார்கள். நல்ல சம்பளமும் சலுகைகளும் பெறுவார்கள். அதாவது அரசியலும், அரசியல்வாதிகளும் இப்போது எப்படி பெரிய பதவிக்கு தேர்வுபெறுகிறார்களோ அவ்வாறு தான் இனி பொறியியல் கல்லூரிகளிலும் நடக்கலாம். அதனால் கல்வியின் நிலை கூடிய விரைவில் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கின்றது. இதன் தாக்கம், கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்களின் நிலையும் அவர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகுமல்லவா? அவர்களால் வேறு வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் இது வரை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே தெரிந்த அவர்களுக்கு திடீரென்று 'வேலை செய்யவேண்டும்' என்று கட்டாயப் படுத்தினால் அவர்களால் செய்ய இயலுமா? அனுபவம் இல்லாத எட்டுக்கல்வி தொழில் நிறுவனங்களுக்கு உதவுமா? என்று இதன் மூலம் அப்பட்டமாகத் தெரிகின்றது தானே?

       பொறியியல் பட்டபடிப்புக்கே மாணவர்கள் சேருவதற்கு இந்த நிலை என்றால் முதுகலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டத்திற்கு கட்டாயம் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே சேர்க்கை இருக்கும். அதனால் ஆராய்ச்சி கல்வி முற்றிலும் தடைபட்டு போகும். அதனால் நாட்டின் முன்னேற்றம் அடியோடுத் தடைபட்டுப்போகும்.

     அதில் கொட்டப்படும் நிதி இதுவரை வீணாகியது போல இனிமேலும் வீணாகப் போகும். அதாவது இதுவரை நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமைகொள்ளும் அளவிற்கு ஏதாவது ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளார்களா? நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை மேலாண்மை, உணவுஉற்பத்திப் பெருக்கம் என்று இதில் முன்னேற்றம் தரும் உலகமே மெச்சும் அளிற்கு எந்த ஒரு சிறப்பான கண்டுபிடிப்புகள் நடந்துள்ளதா? கண்டிப்பாக இல்லை தானே. அப்படியென்றால் இதுவரை ஆராய்ச்சிக்காக செலவழித்த பணத்திற்கு பலன் ஏதும் இல்லை தானே உண்மை! வெறும் ஏட்டைப் படித்து இப்படி செய்தால் அப்படி கிடைக்கும் என்று வாயில் வடை சுட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடைமுறையில் பின்னடைவு இருக்கின்றதே தவிர முன்னேற்றம் என்பது இல்லை. அப்படி ஏதேனும் இருத்தால் அது கண்டிப்பாக வெளிநாட்டினரைப் பார்த்து காப்பி அடித்ததாகவே இருக்கும். இதுதான் இன்றைய கல்வியின் இலட்சணம்!   
      இதற்கு காரணம், முதல் கோணம் முற்றிலும் கோணம் என்று சொல்வார்களே அப்படிச் சொல்வதே சரி. அதாவது எட்டாவது வரை 'அனைவருக்கும் தேர்ச்சி' என்கிற சட்டம் வந்ததால் ஆரம்பத்திலிருந்து கல்வியைச் சொல்லித் தருவது ஏனோதானோவென்று ஆகிவிட்டது. மாணவர்களின் வருகை பற்றிக் கவலையில்லை. மாங்கு மாங்கு என்று சொல்லிக் கொடுத்தாலும் ஒன்று, இல்லை சொல்லிக்கொடுக்காமல் தூங்கி வழிந்தாலும் ஒன்று என்றாகிவிட்டது. ஏனெனில்எப்படி இருந்தாலும் அனைவரும் தேர்ச்சி தானேஎன்கிற அசட்டையான போக்கு பல ஆசிரியர்களிடத்தில் காணப்படுவதால் ஒட்டுமொத்த கல்வியையும் மாணவர் மனப்பாங்கினையும் மாற்றி விட்டது என்றே சொல்லவேண்டும்.

      இதில் கூத்து என்னவென்றால் ஒரு மாணவன், நான் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டேன் என்றோ, நான் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றோ வருத்தப்படுவதே கிடையாது. 'அச்சச்சோ, நான் இப்போது குறைவான மதிப்பெண் எடுத்தால் உயர்வகுப்பு, பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்விலும் கூடுதல் மதிப்பெண் எடுக்க முடியாதே' என்று எள்ளளவும் உணர்வதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பு கூடுகிறது. அதோடு பள்ளிக் கட்டணமும் கூடுகிறது. கூடவே பள்ளியின் வருமானமும் கூடுகின்றது. ஆனால் அதற்கான பலனோ பூஜ்யமே.

        பொதுவாக ஐ..டி, ..எம் படிப்புகள் மிகவும் கௌரமிக்க படிப்பு. அதிக அறிவு உள்ளவர்களுக்கே அதில் படிக்க இடம் கிடைக்கும் என்பதே நியதி. அங்குள்ள மாணவர்களும் சரி, விரிவுரையாளர்களும் சரி, வெறும் 'மனப்பாடம் பண்ணும் இயந்திர மனிதர்கள்' என்று இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. இங்கு படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவே பணியாற்றுவர். அரிதாக தொழில் நிறுவனங்களுக்குச் செல்வர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறந்ததால் ..டி, ..எம் படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைத்தது. ஆனால் இப்போது பொறியியல் கல்லூரிகள் மூடிக்கொண்டே வருவதால் அதில் படித்த மாணவர்களின் பாடு திண்டாட்டமாகவே இருக்கின்றது.

    பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பல பொறியியல் நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் 10 வது, 12 வது அல்லது டிப்ளோமா படித்தவர்களையே வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ..டி, ..எம் படித்தர்களை எங்ஙனம் வேலைக்கு அமர்த்துவார்கள். மேலும் பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு டிரைனிங் அல்லது அப்பரிண்டிஷ் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இதற்கு ..டி, ..எம் படித்தர்கள் உடன்படுவார்களா? அப்படியே ..டி, ..எம் படித்தர்களை தொழில்முனைவோராக மாற்றினாலும், இப்போதுள்ள காலகட்டத்தில், உலகளாவிய தொழில்போட்டியை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பது கோடி ரூபாய்க்கான கேள்வி! 
                
      மாணவர்களின் 'பொறியாளர்' கனவை பயன்படுத்தி அவர்களின் சேர்க்கைகளை கூட்டும்விதமாக புதுப்புதுப் பாடப்பிரிவுகள் துவங்கி அவர்களின் வாழ்க்கைக் கனவுகளை தகர்த்தப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று பல பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன என்பது கசப்பான இப்போதுள்ள நிலை. எப்போது 2000ம் ஆண்டு முதல் உலகப் பொருளாதாரம் என்று பேசப்பட்டதோ அன்றிருந்து இன்று வரை கல்வி உட்படப் பல துறைகள் உலக நாட்டுடன் போட்டிபோட முடியாமல் திணறிக்கொண்டு வருகிறோம். நாம் பொருட்களை விற்கும் பல நாட்டினர்களின் முகவர்களாகவே இருக்கின்றோம். பொருட்களை உற்பத்தி செய்யும் முதல்வர்களாக மாறாமல் இருக்கிறோம். ஆனால் இந்த அரசின் கொள்கையான 'இந்தியாவில் உற்பத்தி' என்கிற நடைமுறை வெற்றியடைந்தால் கட்டாயம் பல துறைகளில் முன்னேற்றம் காணலாம்.       

      இன்றுள்ள மாணவர்களின் கல்வியறிவு, திறமை, புத்திசாலித்தனம் குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்நுட்பம் வளர்ந்து வரும் இவ்வேளையில் அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு அராய்ச்சிக் கூடங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு எந்த ஒரு இயந்திரமும், சாதனமும் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது வேலை செய்யும் நிலை இருக்காது. அதற்கு சாட்சி, யு.டியூப் இல் வெளிநாட்டினரே பெரும்பாலும் எல்லாவித அறிவியல், மருத்துவம், பொறியியல் செயல்முறை விளங்கங்கள் வழங்கி வருகின்றனர். அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடிவதில்லை. அதற்குச் சாதனங்கள் சரியாக வேலை செய்ய வேண்டும். இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதைப் பற்றிய விளக்கம் சரியாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் மேல் கல்வியைப் பற்றிய ஆர்வமும் மாணவர்களின் மேல் அக்கறையும் சோம்பேறிதனமில்லாத சுறுசுறுப்பும் கட்டாயம் வேண்டும். இப்போதும் இங்குள்ளவர்கள் பதிவு செய்த யுடியூப் இல் பல கல்வி வீடியோக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் செயல்முறை விளக்கம் இல்லாத மனப்பாடம் செய்து ஒப்பிப்பிக்கும் வீடியோக்களே உள்ளன. இது கல்விக்குச் செய்யும் ஒருவகை துரோகம் அல்லவா?  

  இங்குள்ள சட்டமாகட்டும், தொழிலாகட்டும், வரி ஆகட்டும், சுற்றுச்சூழ்நிலை ஆகட்டும், பொருளாதாரம் ஆகட்டும் எல்லாமே மேலை நாட்டினர்களின் காப்பி தான் அதிகமாக இருக்கும். சுயமாக சிந்தித்து செயல்படுத்துவது மிகக் குறைவே. அங்குள்ள சூழ்நிலை, பொருளாதாரம், கட்டமைப்பு வசதி இங்கு ஒத்து வருமா? என்று பார்ப்பதில்லை. அவர்கள் செய்கிறார்களா? நாமும் செய்வோம். அவர்கள் அழிக்கிறார்களா? நாமும் அழிப்போம் என்கிற விதியே தொடர்கிறது. அதற்கு உதாரணம் ஹெல்மட் அணிவதை கட்டாயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் சாலை வீதிகள் சரியில்லை. சுற்றுப்புற மாசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக அமுல்படுத்த முடியவில்லை.

      இந்நிலை தொடர்ந்தால் இன்னும் ஐந்து வருடங்களில் கல்விக்கான உதவியை கையேந்தும் நிலை கட்டாயம் வரும். அதற்கு மேலைநாட்டு பல்கழகங்கள் இங்கு முளைக்கும். கூடவே மேலைநாட்டு விரிவுரையாளர்களும் இங்கு வந்து செயல்முறையில் பாடங்களை சொல்லித் தருவார்கள். நாம் ஆ... வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கவேண்டியது தான். ஆகையால் மேலைநாட்டுப் பாடங்களை ஒதுக்கித் தள்ளி நம்நாட்டிற்குத் தேவையான அறிவியல், மருத்துவம், விவசாயம், கால்நடை, நீர்மேலாண்மை, பொருளாதாரம், கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து ,'நம் கல்வி நமக்கே' என்று உறுதிமொழி கொண்டு அதற்கான ஆராய்ச்சிகளை தொடரந்து செய்து அதனை செயல்முறைப்படுத்தி அதன் பலனை நாட்டிற்கு அர்பணிக்கும் எண்ணத்தை உருவாக்கினால் மட்டுமே நாடு சிறப்படையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.   
******************************       


No comments:

Post a Comment