Pages

Tuesday, 1 June 2021

அறிமுக தத்துவவியல் - 2. கேள்விதான் நிரந்தர பிரச்னை என்றால், சிந்தனைதான் நிரந்தர பதில் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

 

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

 2. கேள்விதான் நிரந்தர பிரச்னை என்றால், சிந்தனைதான் நிரந்தர பதில்

(ஏனென்றால், பதில்கள் பிறந்து இறப்பவை. கேள்வியும் சிந்தனைகளும்தான் சாகாவரம் பெற்றவை)

நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு

 • எது சரியான அரசாட்சி?
 • எது சரியான சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு?
 • இறைவன் இருக்கிறானா?
 • ஆன்மாவின் இருப்பும் அதன் இலக்கும்
 • முந்தைய சந்ததியினரைக் காட்டிலும் இக்காலச் சந்ததியினர் நடத்தையில் முன்னேறியிருக்கிறார்களா?

இவைகளுக்கு இதுதான் விடை! என எந்தக் கேள்விக்கும் தனி ஒரு விடை கூறமுடியுமா?

விடைகள் பலவாக இருக்கும் போது, அறிவியல் அவ்விடைகளிடையே ஒன்றைக் கணக்கிட்டு இதுதான் சரியானது எனக் கூறினாலும், காலப்போக்கில் அது சரியானது அல்ல என அனுபவமே காட்டிக் கொடுக்கிறது. என்றால் அந்த அறிவியலே கேள்விக்குரியது ஆகிறது அல்லவா?

இப்படி இருக்கும் போது,, என்ன செய்வது என்பதைவிட என்ன செய்துவிடக்கூடாது என அறியலாம். அதாவது சந்தேக மனோபாவத்தைக் (Scepticism) கைகொள்ளாமை இன்னும் மோசமாகச் சொல்வதென்றால் எதையும் எதிர்த்து எரிந்து விழுதலைக் Cynicism) கை கொள்ளாமை.

ஓர் அறிவியல்பூர்வ மனிதனுக்கு இது சகஜம்தான். ஆனால் தத்துவபூர்வ மனிதனோ ஒரு விஷயத்தை ஊடுருவிச் சிந்திப்பது அல்லது ஊடுருவிச் சிந்திப்பதற்கு முயற்சிப்பது என்பதைத் தன் ஆளுமையில் (personality) கலந்துவிட்டவன். அறிவியல் அன்றைய அறிவின் ஊடுருவல் வரை ஒன்றை உண்மை அல்லது உண்மையல்ல எனக் கூறும். ஆனால், தத்துவம் அந்த அறிவின் ஊடுருவல் மனிதனுடன் வளரக்கூடியது என்பதையும் கணக்கிடுகிறது. எனவே, தத்துவம் என்பது தீர்க்க சிந்தனை (Reflective thinking) பற்றிய அறிவியலாகும்.

சிந்தித்து சிந்தித்து விடைகண்டு குடும்பம் நடத்தும் அதன் தலைவனாகிய தந்தையின் சிந்தனையை அறியாமல் குழந்தை எல்லாவற்றிற்கும் விடை இருப்பதாக ஒரு கற்பனையில் விளையாடிக் கொண்டே இருக்கிறது.

எது சிறந்த காலம்? எல்லாவற்றுக்கும் விடை இருக்கும் காலமா? எல்லாமே கேள்வியாக உள்ள காலமா? அல்லது இரண்டின் கலப்புடனான காலமா? சிந்திப்பதை முக்கியமாகக் கருதக் கற்றுக்கொடுத்த வாய்ப்பு ஒன்று என்றும் வரலாற்றில் வரவில்லை என்பது பலர் நினைப்பது போல் உண்மை அல்ல. பல வந்திருக்கின்றன. ஆனால், மனிதனின் சுகநாட்டத்தால் அவ்வப்போதிருந்த “நிச்சய” நிலைப்பாடுகளைத் (Condition fixes) தொற்றிக் கொண்டு வாழ்ந்து முடிந்தானேயன்றி சிந்திப்பதை சுகமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் என்பதுதான் உண்மை. இன்றளவும் அதுதான் நடக்கிறது.

ஆனால் அவனுடைய சிந்தனை அவனை தன் அறிநிலைக்கும் அதற்கு ஏற்ப உலகக் கண்ணோட்டம் கொள்ளவும் வைக்கிறது. மனிதனுக்கு அறிநிலை (awareness) இருக்கிறது. அதன்படி, அவனுடைய இருப்பு இரண்டு நிலைகளில் இருக்கலாம்.

 • குறை நிலை
 • நன்னிலை

இப்போது மனிதர்களில் எத்தனை விதங்கள் என இதனை வைத்து ஆராயலாம்.

வ. எண்.

மனிதர்களின் வகைகள்

உலகக் கண்ணோட்டம் (world view)

1

குறை திலை, நன்னிலை என இரண்டு இருப்பதை அறியாதவர்கள்

குழந்தை, மூளை மற்றும் மனக்கோளாறு ஊள்ளவர்கள்.  அறியாமையே ஆனந்தம்

2

அறிந்தாலும் குறைநிலையிலிருந்து நன்னிலை நோக்கி முன்னேற விரும்பாதவர்கள்

காரணங்களைப் பொருத்து மாறுவது.

காரணங்கள்  ---

சோம்பல்

அறிவுள்ளவனை அண்டிப் பிழைத்தல் அறிவுடைமை

ஞானம்

இன்றைய நன்னிலை நாளைய குறைநிலை

பயம்

கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டுவிடுமோ?

அறிவின்மை

ஆகாததற்கு ஆசைப்படாதே

முயற்சித்தும் பயனின்மை

விளையாட்டு வினையாகும்

குறைநிலை மோசமாகாதிருந்தால் போதும் எனும் மனநிலை

உள்ளதைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு

3

குறைநிலையிலிருந்து நன்னிலைக்கு முன்னேற முயற்சிப்பவர்கள்

உன் வாழ்க்கை உன் கையில்

4

குறைநிலையினை வென்று நன்னிலைக்கு வந்தவர்கள்

முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்

5

நன்னிலையிலிருந்து குறைநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்

விதி வலியது

6

இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறவர்கள்

வாழ்க்கைங்கிறது ஆத்துலே ஒரு கால்: சேத்துலெ ஒரு கால்

7

குறைநிலையிலுள்ளோர் நன்னிலையிலுள்ளோரைப் பார்த்துப் பொறாமை

நீ என்ன கொம்பனா?

8.

நன்னிலையிலுள்ளோர் குறைநிலையிலுள்ளோரைப் பார்த்து ஏளனம்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

9

தானும் குறைநிலையிருந்தாலும் பிற குறையிலையிலுள்ளோர் முன்னேற்த் தடை செய்வோர்

என்னாலே முடியாததை நீ மட்டும்

அடைஞ்சிடுவியாக்கும்?

10

நன்னிலையிலுள்ளோர் பிற நன்னிலையிலுள்ளோரைக் குறைநிலைக்குத் தள்ளப் பார்த்தல்

என் ஏணிதான் பெரிசா இருக்கணும்.

11

தான் குறைநிலையிலிருந்தாலும் குறைநிலையிலுள்ளோருக்கு நன்னிலை நோக்கி முன்னேற உதவுதல்

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்துமே.

 

இத்தனை நிலைப்பாடுகளுக்கும் அறிவியல் தனித்தனி பதில் கூறும். ஆனால் தத்துவம் “உலகக் கண்ணோட்டம்” என்ற ஒற்றைப் பதிலில் எல்லவாவற்றையும் அடக்கும்.

ஒருவரின் உலகக் கண்ணோட்டம் அந்த ஒருவரின் நடத்தையை நிர்ணயிக்கிறது என்பதுதான் தத்துவவியலின் ஆத்திசூடி. அது தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை மாற்ற முடிந்தால்தான் உலகம் மாறும்.

உலகக் கண்ணோட்டம் என்பதுதான் என்ன ? “தன்னறிவுக்கு முழுமை எனத் தோன்றும் ஒன்றை நோக்கிய வாழ்நாள் நகர்வு. ஆனால் அந்த “முழுமை” ஒருவன் அனுபவத்தால் வளர்ச்சி அடைகையில் அதுவும் பின்னம்தான் என அறிய நேரிடும்போது புது முழுமை காணும் வாழ்நாள் நகர்வு கை கொள்கிறான்.” இது ஒரு தொடர்பயணம். சமுதாயம் எது நன்னிலை என நிர்ணயிக்கிறதோ அதற்கு நல்ல பிள்ளை ஆவதை முக்கியமாகக் கருதும் வரை இப்பயணம்.

தான் ஒன்றை முழுமை என நினைத்தது எப்படி பின்னம் என அறிய வந்தது என வாழும்போதே யாரும் நுண் குறிப்புச் சிட்டை (log book) வைத்துக் கொள்வதில்லை. ஒருவர் தன் உலகக்கண்ணோட்டதை

 • அறியாதிருக்கலாம்
 • அறிந்திருந்தாலும் சொல்லமாட்டாதிருக்கலாம்
 • மாறிச்  சொல்லவேண்டும் எனக் கபடமின்றி மாறிச் சொல்லலாம்
 • மாறிச் சொல்லவேண்டும் எனக் கபடத்துடன் மாறிச் சொல்லலாம்
 • சரியாகச் சொல்லலாம்.
 • சொல்ல மறுக்கலாம்.

இவைகளுக்கும் காரணம் அவரவர் உலகக் கண்ணோட்டம்தான்.

உலகக் கண்ணோட்டம் வைத்திருப்பதிலிருந்து இரு வகையினம் மட்டுமே தப்பிக்க முடியும்.

 • குழந்தைகள்
 • மூளை மற்றும் மனக் குறைபாடு உள்ளவர்கள்

இவர்களைத் தவிர தத்துவத்திலிருந்து யாரும் தப்பவில்லை.

தொடரும் ....

1 comment: