Pages

Sunday, 6 June 2021

அறிமுக தத்துவவியல் - 3. அடி விழுந்தாலும் சந்தோஷம் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

 

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

          3. அடி விழுந்தாலும் சந்தோஷம்

தத்துவவியலைக் கேள்வி கேட்டு பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தத்துவவியல் அவைகளையும் தன் எல்லைக்கோட்டில் வைத்து அழகு பார்க்கிறது. ஏனென்றால்,

·          இறைமையை ஒப்புக்கொள்ள ஒரு தத்துவம்

·          இறைமையை மறுக்க ஒரு தத்துவம்

·          தத்துவத்தை மறுத்தால் அதுவும் ஒரு தத்துவம்

1 புலனெல்லை அறிவு வாதம் – Positivism.

Positivism என்ற வார்த்தையில் உள்ள Positive என்ற மூலவார்த்தைக்கு “positive Thinking” என்பதில் வருவது போன்று “நம்பிக்கை” என அர்த்தம் கொள்ளக்கூடாது. இங்கு positive என்றால் position என்பதாக அர்த்தம் செய்ய வேண்டும். மனிதன் அறியும் ஒரு விஷயம் அவன் புலன்களில் ஏற்படுத்தும் ஓர் அதிர்வு வரை அது உண்மை. அவைகளைத் தாண்டி ஏதேனும் கற்பிதம் செய்வதும் விவாதம் செய்வதும் வீண். அவ்விஷயத்துடன் புலன்கள் கொள்ளும் position தான் Positivism.

தத்துவத்தின் வேர்மூலத்தையே ஆட்டிவைப்பதான இதுவும் ஒரு தத்துவம்.

2 சந்தேகவாதம் – Scepticism

பழங்காலத்தில் இதற்கு இருந்த அர்த்தத்தை முதலில் பார்ப்போம். பிறகு இதன் தற்கால உருமாற்றத்தை அறியலாம்.

முற்காலத்தில், இறைமையையும் ஆன்மீகத்தையும் முன்னிலைப் படுத்தி, வாழ்வில் வரும் அச்சங்களை வென்று அமைதிப்படுத்த இறைக் கருத்து போதித்த தத்துவங்களை விலக்கி, இறைமை, ஆன்மா என இவ்விரண்டும் தவிர பிற வகைகளில் விளக்கம் தந்த அமைதிப்படுத்த சிந்தித்தவர்கள் இறைமையல்லாத பல தத்துவங்களை முன் வைத்தனர். அவர்கள் இறைமையை சந்தேகப்பட்டதால் சந்தேகவாதம் எனும் கருத்து உருவானது.

தற்போது, சந்தேகவாதத்தின் நவீன உருவம் என்னவென்று பார்ப்போம்.

அதாவது இறைமையோ இறைமை மறுப்போ சிந்தனையாளர்கள் ஆயிரம் சொல்லிவிட்டுப் போகட்டும். முன் நிற்கும் துயரமே சத்யம். அதிலிருந்து தப்பித்து ஓடும் இதய பலவீனக்காரனா மனிதன் ? தத்துவங்கள் பல. எது சரியென சந்தேகத்துடன் ஆராய். மனிதத்தீர்ப்பு ஒருவேளை மூடத்தனமாக இருக்கலாம். எது சரியான தீர்ப்பு என சந்தேகத்துடன் ஆராய். புலன்கள் ஏமாற்றலாம். ஏமாறாதிருக்க என்ன செய்யலாம் என சந்தேகத்துடன் ஆராய். இவைகளைத்தான் இக்கால சந்தேக வாதம் முன்வைக்கிறது. இது மனிதத் துயரத்தை மனிதனே நேர்சந்திப்பில் தீர்க்கப் பார்ப்பது. யாரோ பார்த்துக் கொள்ளட்டும் என பொறுப்பு கை நழுவவிடுவதல்ல.

3 அறியவொணா வாதம் Agnosticism

புலப்படும் மூலகங்களைக் கொண்டு அவைகளின் மூலங்களைக் காண முடியாது எனக்கூறும் வாதம். இது மூலத்தை மறுக்காமல் ஆனால் அதனிடன் தகுதியின்றி அணுகுவதைத் தடுக்கிறது.

 

தத்துவவியலின் ஆதாரப் பிடிமானம்

அறிவியலின் ஒரு விசித்திரப் போக்கு என்னவென்றால் அது மனிதனால் தோற்றுவிக்கப்பட்டு மனிதனைத் தோற்கடிக்கத் தெரிந்த ஒன்று.

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வ வாழ்க்கைக்கு எனக் கூறப்பட்டு ஆரம்பித்திருத்தாலும், நடந்து முடிந்த போர்கள் அனைத்தும் அறிவியலின் அழிவுப் பக்கத்தைப் பார்த்துவிட்டன. இப்போது கேள்வி என்ன எழுகிறது என்றால், அறிவியலை அழிவுப்பாதைக்குப் பயன்படுத்தாத ஒழுக்கம் மனிதனுக்கு எது கற்றுக் கொடுக்கும்? இதற்கு தத்துவவியலில்தான் விடை இருக்கிறது.

தத்துவம் பற்றிய உலகக் கண்ணோட்டம்

தத்துவம் என்றால் என்ன எனும் கேள்விக்கு மாணவர்களின் பதில்கள். ஆனால் அவைளில் சில சரியல்ல., சில பகுதி சரி,

1.   எந்தக் கேள்விக்கும் அல்லது பிரச்னைக்கும் தர்க்க ரீதியான பதில்

2.   வாழ்வின் அர்த்தம் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழி

3.   அனுபவம் மற்றும் தீர்ப்பு அடிப்படையிலான நம்பிக்கைகளும் நடத்தைகளும்

4.   மக்களின் வெவ்வேறு நோக்குகளும் நம்பிக்கைகளும்

5.   தனிமனித அபிப்பிராயங்கள்

6.   ஒரு மனச் சட்டகம்

7.   ஞானிகளின் போதனை

8.  ஒருவனின் நுண்ணறிவுத் திறமைகளைக் கையாளும் விதம்

9. ஒழுக்க விதி மற்றும் பகுத்தறிவின் அடிப்படையிலான கண்ணோட்டம்

10. சிந்திக்க, விவாதிக்க, பகுத்தறியச் சொல்லிக்கொடுக்கும் கலை,

11.  கூட்டச்சிக்கலாய் இருக்கும் ஒரு விஷயத் தொகுப்பை எளிய பகுதிகளாக எல்லா கோணங்களிலிருந்தும் தொகுத்துக் கூறுவதான ஒரு மொழிபெயர்ப்பு

12.  பரம்பரை, பரம்பரையாக இறக்கிவிடப்படும் நம்பிக்கைகள், கதைகள், சடங்குகள், அனுபவஙக்ள்.

இவர்களில் எத்தனை பேர் தங்களின் கருத்துக்களை சரியானவையா இல்லையா என பிறரிடம் விவாதித்திருப்பார்கள்? விவாதித்திருந்தால் தத்துவத்தின் முதல் படி எடுத்து வைத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இன்றைய இளைஞனிடம் அவனுடைய தந்தை கொடுக்கக் கூடிய மிகப் பெரிய சொத்து இது எனலாம். அதாவது எதனையும் –- தன்னுடைய தலையாட்டிகளிடம் மட்டுமல்ல -- நானாவித மக்களிடம் விவாதித்து அறியும் ஆவலை கடைசி விடாதிருத்தல்.

உலகக் கண்ணோட்டம் என்பது தத்துவத்தின் தனிமனிதக் கையடக்கப் பிரதி.

தொடரும் ....

No comments:

Post a Comment