Pages

Tuesday, 30 October 2012

உள்விதி மனிதன் பாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு - DO GOOD THINGS AS A LEADER


உள்விதி மனிதன்  


சம மனிதக்  கொள்கை. 

பாகம்:24 நன்மை செய்யும் 
தலைவனாக இரு !

AS A LEADER DO GOOD THINGS 

என் இனிய மனிதா! சென்ற அத்தியாயத்தில் உனக்குள் இருந்துகொண்டு உன் அக உடலைச்  சுத்தமாக வைத்துகொண்டு இருப்பதைப் பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் என்னால் அவ்வளவு எளிதாக உன் மனதை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. அந்த தோல்வியை நான் ஒத்துக் கொண்டேத்  தீரவேண்டும். உனது மனம் அடிக்கடி சஞ்சலப்படுகிறது. நிலையாக இல்லாமல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, மனிதர்களுக்குத் தகுந்தவாறு, செயலுக்குத் தக்கவாறு திடீர் திடீரென்று மாற்றிக்கொள் கிறாய். உன்னுடைய எண்ணங்களை என்னால் அவ்வளவு எளிதாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் இனிமேலும் நான் தோல்வி அடையத் தயாராக இல்லை. உன் மனதைத் தூய்மைபடுத்தி உலகத்தைப்  புதுஉலகமாக மாற்றி, உன்னை அனைவருக்கும் நன்மை செய்யும் மனிதனாக ஜொலிக்கச் செய்வதே எனது அடிப்படையான நோக்கமாகும்.


என் பிரிய மனிதா! உனக்குள் இருக்கும் நான் கோடிக்கணக்கான வருடங்கள்  அனுபவமுள்ளவன் என்று முன்னமே சொல்லியிருந்தேன். அதாவது புலியின் வீரம், நரியின் தந்திரம், எறும்பின் உழைப்பு, குயிலின் இனிமை, மயிலின் நடனம், யானையின் பலம், சிங்கத்தின் கம்பீரம், போன்றவற்றைக்  கொண்டுள்ளேன். அவைகளை ஒன்று திரட்டி  உனது எண்ணக்கிடங்கில் இதுநாள் வரையில் நீ செய்த கெட்டவைகளை வெளியே எட்டிப் பார்க்காதவாறு அடிபாதாளத்தில் புதைத்தும், நல்லவைகளை எளிதில் கிடைக்கும்படி மேலேயும் வைத்துள்ளேன். ஆனால் நீயோ சில நேரங்களில் என் அனுமதி பெறாமல், நான் தடுத்தும் கேளாமல் தீய காரியங்களை செய்துவிடுகின்றாய். பிறகு கஷ்டப்படுகின்றாய். உன்னால் நானும் கஷ்டப்படுகிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்படி ஒரு அணுவாக இருந்து, கருவாக மாறி, மனிதப்பிறவி என்னும் உருவத்தை அடைந்து பாதுகாப்பாய் பிறக்கின்றாய். அந்தச் செயல்களையெல்லாம் நீ நினைத்துப் பார்க்கிறாயா! சொல்லப்போனால் உன்னை நானே விரும்பி உருவாக்கியவன்! அதற்காக நீ எனக்கு எவ்வளவு கோடி கொட்டிக்கொடுத்தாய்? எல்லாமே இலவசமாகத் தானே உனக்குத் தருகிறேன். நான் மிகவும் இரக்கத்துடன் இருப்பதால் தானே நீ அலட்சியமாக இருக்கின்றாய். நீ இப்போது எடுத்த இந்த  ஜென்மத்தில் நான் சொன்ன கடமைகளை மறந்து என் அனுமதியின்றி பலவித தீய செயலுக்கு செய்யத்துணிந்ததால் இப்போது நீ கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கின்றாய்.


மதிப்புள்ள மனிதா! நீ கொண்டிருக்கும் இந்த உயிர் தாங்கிய உடல், உருவம் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் பலன். என்னைத் தவிர, என் துணையில்லாமல் உன்னால் ஒரு துரும்பு கூட எதையும் படைக்க முடியாது. அதற்கு நீ இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உழைக்கவேண்டும். ஆகையால் உனக்கு இருக்கும் சிறிய ஆயுளில் என்னில் கைபோட்டுக் கொண்டு என் பின்னால் நடந்து வந்தால் நீ நன்மை அடைவாய்!


இரக்கமுள்ள மனிதா! சிலர் உன்னை அவர் முன்னே உட்கார வைத்துக்கொண்டு உனக்காக அவர்கள் நன்மை தரும் செயல்கள் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதும் செய்யாமல் சும்மா ஏதோ ஆழமாக ஏதோ யோசனை செய்வதுபோல் பாவனை செய்து 'உனக்கு அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று வீண் ஜம்பம் பேசி, வாயில் ஏதோ முணுமுணுத்து உன்கையில் ஏதோ ஒன்றைக் கொடுக்க, நீயும் அதை பயபக்தியோடு வாங்கிக் கொள்கிறாய். அதற்குப் பரிகாரமாய் உன்னிடத்தில் இருக்கும் பாடுபட்டு நீ உழைத்த செல்வத்தை அவர்களைப் போன்றோர்களுக்கு இனிமேலும் அள்ளிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவேன். எங்கே எத்தனை முறைகள் இப்படிப் போன்றோர்களுக்குச் செல்வத்தைக்  கொடுத்திருப்பாய். அப்படி இருக்கும்போது நீ கஷ்டப்படும்போது அவர்கள் உனக்கு ஏதாவது உதவி செய்தார்களா? நீ அவர்களிடத்தில் கொடுத்த செல்வங்கள் ஒருவழிப் பாதைப் போல! அங்கே போனால் திரும்ப வராது என்று இப்போது தெரிந்து கொண்டாயா? உன்னைப் போன்றவர்களிடத்தில் வாங்கிய செல்வங்களை அவர்களின் சுய தேவைக்காக அல்லவா பூர்த்திசெய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து முதலில் தூரவிலகிக் கொள். உன் தீய எண்ணங்களுக்கு அவர்களும் ஒரு காரணமாகும். நீ நினைத்து வந்த காரியம் நல்லது, கெட்டது எதுவென்று தெரியாமலே உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்தக் காரியத்தை செய்யத் தூண்டுபவர்களாயிற்றே! 

நட்பு கொண்ட மனிதா! எனது உலகம் இருள் சூழ்ந்தது. எனது ஜீவ ஓட்ட ஆற்றல் இருளில் இயங்கினாலும் எந்த ஒரு தடையும் இல்லாமல் ஒழுங்காக இயங்குகின்றது. உனது ஆற்றலோ  வெளிச்சத்தில் இயங்குகின்றது. எப்படி என்று புரிகின்றதா! உனது இரு கண்களை மூடிக்கொள். இருள் சூழ்ந்து இருக்கின்றதல்லவா! ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொள். உன் சுட்டு விரலை மெல்ல மெல்ல உன் நெற்றிக்கருகில் கொண்டுவந்து தொடு. இப்போது என்ன உணர்கின்றாய்! உன் தொடுதலால் எனது ஆற்றல் அதிகப்படுகின்றது. அந்த ஆற்றலை உனக்கு திரும்பவும் தருகிறேன். இந்த தொடுதல் மூலம் உனக்கும் எனக்குமுள்ள உறவு புதுப்பிக்கப் படுகின்றது. இப்படியே எனக்காக தினமும் சில நிமிடங்கள் பயிற்சி எடுத்துக்கொள். புத்துணர்ச்சி பெறுவாய். பலம் அடைவாய்!



பண்புள்ள மனிதா! எத்தனை வருடம் தவம் புரிந்த முனிகள், ரிஷிகள் என்றாலும் அவர்களின் தவவலிமையை அவ்வளவு எளிதாக மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. அதை பாக்களினால், மந்திரங்களினால் உனக்குக்  கொடுத்தாலும் உனக்கு முழு பலன் கிடைக்காது. அறிவும், புத்தியும், உழைப்பும், முயற்சியும் உனக்குள் இருந்தாலும் நீ பயன்படுத்தும் முறையில்  பொறுத்துதான் பலன் கிடைக்கும். ஆனால் அவ்வளவு கஷ்டம் நீ படத் தேவையில்லை. அவ்வளவு நேரம் நீ செலவழிக்கத் தேவையில்லை. அத்தனையும் மொத்த உருவமாக உனக்குள் நான் இருக்கிறேன். இந்த உலகம் சென்ற சில வருட காலமாக  அபரிவிதமான மாற்றங்கள் அடைந்துள்ளது. இனிமேலும் மாற்றங்கள் பல காணும். அதனைத் தடுத்த நிறுத்த முடியாது. உனக்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. மாற்றங்கள் என்கிற போர்வையில் தீய சக்திகள் உன்னை வாட்டிவதைக்க வந்து கொண்டிருக்கின்றன. நீ ஏமாறும் சமயம் அல்லது மயங்கும் சமயத்தில் உன்னை சாய்க்க வலம் வந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நேரத்தில் அப்படிப்பட்ட செயல்களின் வருகையை தெரிந்து கொண்டால்  பலவித கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். ஆகையால் நீ செய்யும் காரியங்களை ஒன்றுக்குப் பத்து முறை யோசித்து என்னிடம் ஆலோசித்து முடிவுகொள். ஒரு செயல் செய்யும்போது உனது உடல் சாதாரணமாக, மனம் படபடப்பாக இல்லாமல் இருந்தால் நான் 'சரி ' என்கிற உத்தரவு தந்துள்ளேன் என்று அர்த்தம். உன் உடலில் ஏதேனும் மாறுதல் உண்டானால் 'அது தவறு' என்றும் அப்படிச் செய்வதாக இருந்தால் நன்றாக பலமுறை யோசித்துச் செயல்படு. எக்காரணம் கொண்டும் அவசரமாகச்  செயல்படாதே! அது கட்டாயம் தவறாய் முடியும்.


என் அருமை மனிதா! வெற்றிக்குப்  பலவழிகள் இருக்கின்றன. உனக்குத் தேவை நிரந்தர வெற்றி. அதனால் பலருக்கு நன்மை கொடுக்கும் நல்ல வழியில் செல். மற்றவர்களைக் கெடுத்து அல்லது ஏமாற்றி வெற்றி பெற ஒருபோதும் நினைக்காதே! அது நிரந்தரமான வெற்றி அல்ல. உனது வெற்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அது மற்றவர்ககளை அழித்துவிட கூடாது. ஒரு மனிதன் தனியாக நின்று வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமான காரியம். அப்படி அடைந்தால் அது சிறிய வெற்றியாக இருக்கும். ஆனால் உனது பெரிய வெற்றிக்கு பல நல்ல மனிதர்களின் நட்பை ஏற்படுத்தித் தருகிறேன். அவர்களை உன்னுடன் இணைத்துக் கொள். அதன் ஆற்றல் பலமடங்கு பெருகும். அதன் வெற்றி இமாலய வெற்றியாகும். 

பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் காரண கர்த்தாவாகவும், தலைவனாக அவர்களை நல்ல வழிகாட்டி நடத்திச் செல்பவனாக இரு. அதற்கு வேண்டிய அறிவையும், ஆற்றலையும் உனக்குத் தருகிறேன். எளிதில் வெற்றி அடைவாய்.

ஒரு காரியம் செய்யும்போது உனக்கு நுணுக்கமான அறிவு தேவைபடுகின்றது. அதேபோல் அந்த செயலின் தன்மையை உயரே பறக்கும் பறவையைப் போல் கழுகுப் பார்வை போல் முழுமையாகத்  தெரிந்து கொள்ளவேண்டும். அந்தச்  செயலின் விளைவுகளை கடைசிவரை கற்பனை செய்து அதில் வெற்றி கிட்டுவதுபோல் இருந்தால் மட்டுமே அந்தச் செயலை செய்யத் தொடங்கவேண்டும். அதில் ஏதேனும் தவறு இருப்பதாக நீ உணர்ந்தால், அந்தக் காரியத்தை உடனே தள்ளிப் போட்டு மீண்டும் செயலில் மாற்றம் செய்து வெற்றி கிட்டும்வரை (கற்பனையில்) மாற்றம் செய்யப்படவேண்டும். அப்படிச் செய்யும்போது உனக்கு தோல்வியே அண்டாது.

என் இனிய மனிதா! நான் உனது எண்ணங்களின் மூலம் வழிகாட்டுகிறேன். அதன் மூலம் உனது வாழ்வில் முன்னேறும் சக்தி தானாக வரும். அதுவே நீ தலைவனாக மாற்றும் சக்தி என்பதை தெரிந்துகொள். நான் உனக்குக்  கற்பனையில் தன்னம்பிக்கை கொடுத்து உதவுபவன். அதை வைத்துக் கொண்டு செயலாற்றினால் உனது நல்ல குறிக்கோளை இலகுவாக அடையலாம்.

என் பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் குறைவாக பேசு. நிறையகேள். கேட்பதில் நானும் அதிகமாக பங்குகொள்ள முடியும். எனது உணர்வின்மூலம் நீ செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறேன். என் உணர்வோடு கலந்த உன் செயலால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நன்மையையும் கூட வரும். சில மனிதர்கள் சீக்கிரம் எப்படியாவது சம்பாதித்து மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக துடிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகின்றனர். அவைகள் அத்தனையும் ஒரு ஊசிமுனையளவு கூட உனது ஜீவ ஓட்டத்திற்குப் பயன்படாது. எனது ஆன்ம ஓட்டத்திற்குச் சுத்தமான காற்றும், உணவும் வேண்டும். அவ்வளவே. உன் சிறிய வயிறு தான் எனது ஜீவ வீடு. அதில் எரியும் தீபம் உனக்கு அதிக சக்தி கொடுக்கும். 

பண்புள்ள மனிதா! ஒருவேளை அளவிடமுடியாதச்  செல்வத்தை நீ சேமித்தோ அல்லது பதுக்கியோ வைத்திருப்பது போல் அளவுக்கு அதிகமாக உணவையும் சேமிக்கும் சக்தி உனக்கு கொடுத்திருந்தால் இந்த உணவு, தனி மனிதக்கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். அதனால் அனைவருக்கும் உணவு கிடைக்காத சூழ்நிலை உண்டாயிருக்கும். அதற்காகத்தான் உணவின் ஆயுளை மிகவும் குறைத்திருக்கிறேன்.. எனக்கு சுத்தமான உணவு வேண்டுமானால் அதை நீண்ட நாட்களுக்கு வைக்கவிடாமல் உடனே பிறர்க்கு கொடுக்கச் செய்கிறேன். அல்லது கெட்டுப்போக வைக்கிறேன். அதன் மூலம் மனித ஜீவன்களை  ஆரோக்கியமாகவும் அதேவேளையில்  அழிவிலிருந்துக்  காக்கும்படிச் செய்கிறேன்.   

பிரியமுள்ள மனிதா! உன்னை நீயே நிர்வாகித்தால் தான் உன் திறமை அதிகரிக்கும். அதன் மூலம் சிறந்த தலைவனாகவும் மாறமுடியும். அதற்கு பொறுமை, பொறுப்பு, சுயமுயற்சி, ஈடுபாடு, புதுமையை அறிந்து ஏற்றுக்கொள்ளுதல், மற்றவர்களின் உணர்வை மதித்து நடத்தல், 'தான்' என்ற ஆணவம் இல்லாமல் இருத்தல், நன்மை தரும் நல்ல எண்ணங்களை வளர்த்தல் ஆகிய நற்குணங்கள் தேவை. தலைமுறை இடைவெளியை அறிந்துகொண்டு நடக்கும் தன்மை, காலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப செயலாற்றும் தன்மை, பொறாமை இன்மை, மற்றவர்களை வழிநடத்தும் தன்மை, மற்றவர்களை மரியாதையாய் ஏற்றுக்கொள்ளும் தன்மை, இரக்க குணம், மனித நேயம் கடைசியாக என் ஜீவ ஆற்றல் அனைத்தும் உனக்கு வந்து சேரும். அவ்வாறு செய்வதினால் நீ மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத்  திகழ்வதோடு வழிகாட்டியாகவும் இருக்கச் செய்கிறேன். 

பெருமை மிக்க மனிதா! 'பாஸ்' என்கிற அதிகார தோரணை விடத் தலைவராக நல்லெண்ணம் கொண்டு நன்மை செய்பவராக இருப்பதற்கு நான் உனக்கு வேண்டிய அளவு உதவி செய்கிறேன். உனது சர்வாதிகாரம் மற்றவர்களுக்கு அச்சத்தைத் தரும். அதனால் உறவுகள் சுமூகமாக இல்லாமல் போய்விடும். ஆனால் தலைவனால் மட்டுமே சுமூகமான உறவுகளை ஏற்படுத்த முடியும். நான் உனக்குள் இருப்பது எனது வயிற்று பிழைப்பிற்காக மட்டும் இருக்கவில்லை. உனக்குள் இருக்கும் திறமைகளைப்  பயன்படுத்தி நான் படைத்த உலகத்தைக் காப்பாற்றி அனைவருக்கும் நன்மை செய்து அதன்மூலம் உனக்கு மனநிறைவு மற்றும் நிம்மதியான பெருவாழ்வு தரவே உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து கொண்டு உன்னை இயக்குகிறேன். நான் சொல்வது எனக்காக அல்ல. உனக்காக. ஊராரின் நன்மைக்காக.


மேன்மையான மனிதா! நான் உனக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கைத்  தத்துவத்தை இப்போது சொல்கிறேன் கேள். 

மலரும் மலர்கள் வாசனையும் அழகும் உனக்காக அன்றி மலர்களைத் தாங்கிய செடிகளுக்கில்லை. அனைத்தும் உனக்காக மலர்ந்தவை.

மழை நீர் முழுவதும் பயிர்களுக்கு மட்டுமின்றி உனக்காகவும் கொடுக்கப்பட்டவை.

பசுவின் பால் முழுவதும் கன்றுக்கு இல்லை. பெரும்பகுதி உனக்காகத்தான் படைக்கப்பட்டவை.

மரத்தின் கனிகள் அனைத்தும் மரத்திற்கு இல்லை. பெரும் பங்கு உனக்காக நான் தந்தவை.

நெல், கோதுமை மணிகள் அனைத்தும் நிலத்திற்கு செல்வதில்லை. உனக்காக உருவானவை.

இயற்கையின் அழகு உனக்காக படைக்கப்பட்டதேயன்றி வேறு ஒருவருக்கும் இல்லை.

அன்பு கொண்ட நல்ல உள்ளங்கள் உனது நன்மைக்காக மட்டுமே கொடுத்தவை.

இந்த உள்விதி மனிதன் உனது வாழ்வு சிறக்கவே அன்றி எனது சுயநலத்திற்கு அல்ல.

நான் படைத்த அனைத்தும் பிறர்க்கு கொடுக்கவேயன்றி எனது பிழைப்பிற்காக இல்லை என்பதை புரிந்து கொள்.

உன் கடமைகளை  சரியாக செய்!

நன்மைகள்  தானாக வரும்!

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்...


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
---------- Forwarded message ----------

Friday, 26 October 2012

'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம். A LIFE LESSON FROM SUGARCANE


அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம்.
A LIFE LESSON FROM SUGARCANE


வாழ்க்கை சிலருக்கு இனிக்கின்றது. சிலருக்கு கசக்கின்றது. ஏன்? எதற்கு இந்த வேறுபாடு! அதாவது ஆசை கொண்ட வாழ்கை அனுபவித்து முடிந்தவுடன் அடங்கிவிடுகின்றது. அதன் பிறகு வாழ்கை கசந்துவிடுகின்றது. ஆனால் அக்கறையுள்ள வாழ்க்கை ஆயுள் முழுவதும் இனிமையாக அனுபவிக்கச் செய்ய உதவுகின்றது.


வாழ்க்கை சிலர் மேலிருந்து கீழாக ஆரம்பிப்பார்கள். சிலர் கீழிருந்து மேலே செல்வார்கள். என்ன புதிராகத் தெரிகின்றதா? இங்கு தான் 'கரும்பு ' நமக்கு வாழ்கை பாடத்தை உணர்த்துகின்றது. அதாவது  சிலர் கஷ்டமான (கசப்பான) செயல்களான கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையை கையில் கொண்டு வாழ்க்கையை கரும்பின் மேலே கசப்பிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கீழே வர வர 'வெற்றி ' என்ற இனிப்பை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கிறார்கள். பலர் கேளிக்கை, வெட்டிப்பேச்சு, சிரிப்பு , கேலி, கூத்து, கும்மாளம் என்பவற்றில் கவனம் செலுத்தி வாழ்கையை கரும்பின் கீழ்பகுதி இனிப்பிலிருந்து துவங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை போக போக கசந்து  வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு உதாரணம், படிக்கும் இளைஞர்கள் பலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா, பாட்டு, கேலி பேசி பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் போது  சில இளைஞர்கள் மட்டும் தீவு போல் தனியே பொறுப்புடன் படித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கும் வெட்டி பேச்சு, அரட்டை அடிக்கவேண்டுமென்று நினைப்பு வராதா! ஆனால் அவர்களின் மனதில் 'இப்படி அரட்டை அடிப்பதற்கு இது சமயமல்ல!' என்று நன்றாக உணர்ந்தவர்கள். படிக்கும் வாய்ப்பை இப்போது விட்டுவிட்டால் பரீட்சையில் தேறும் வாய்ப்பு  பிரகாசமாக இருக்காது. அதன் பிறகு வாழ்கை முழுவதும் முன்னேறும் வாய்ப்பு பறிபோய்விடும். ஆகவே படிப்பு கசந்தாலும் போக போக இனிப்பான பல வெற்றிகள் கிடைக்கும் என்று உறுதிகொண்டவர்கள்.

அலுவலகத்தில் சிலர் தங்களுடைய வேலை முடிந்த பிறகும் பக்கத்தில் உள்ளவர்கள், எதிரில் உள்ளவர்கள் என்னென்ன வேலை செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். விளையாட்டாய் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட வேலைகள் , பின்னாளில் அதுவே அவருக்கு ஒரு சிறந்த மேலாளராக ஆகும் வாய்ப்பு கிடைக்கின்றது. அவர்கள் நினைத்திருந்தால் பத்தோடு பதினொன்றாக இருந்துகொண்டு பொழுதை கழித்திருக்கலாம். அவர்களுக்கு வாழ்கையில் முன்னேறவேண்டுமென்ற அக்கறை இருப்பதால் இது கசப்பாக இருந்தாலும் அவர்களின் ஆர்வம் செய்யச் சொல்கின்றது. வருங்காலத்தில் கிடைக்கப்போகும் இனிப்பான வாழ்க்கைக்கு அவர்கள் தங்களை இப்போதிலிருந்து தயார்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றியும் காண்கிறார்கள்.


வாழ்கையில் முன்பகுதியை அனுபவிக்க நினைப்பவர்கள் பின் பகுதியில் பத்து மடங்கு கஷ்டப்பட நேரிடும்.

ஆனால் முன்பகுதியில் கஷ்டப்படுபவர்கள் பின்பகுதியில் நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்பார்கள்.

நீங்கள் உங்களுக்குள்ள கரும்பான வாழ்கையை கீழிருந்து மேலாக செல்லப் போகிறீர்களா? அல்லது மேலிருந்து கீழாக வரப்போகிறீர்களா?

முன் கஷ்டம் (கசப்பு)! பின் சுகமா? (இனிப்பா?)     

அல்லது 

முன் சுகம் (இனிப்பு) பின் கஷ்டமா? (கசப்பா?)


(கரும்பு) முடிவு உங்கள் கையில்.
இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Tuesday, 23 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 23 உள் உடலைத் தினமும் சுத்தம் செய்வது யார்? WHO IS CLEANING YOUR INNER BODY?



உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 

பாகம்: 23 உன் உள் உடலைத்  தினமும் 
சுத்தம் செய்வது யார்?
WHO IS CLEANING YOUR INNER BODY?



என் இனிய மனிதா! எனக்கு இருக்கும் ஆதங்கம், அவசரம், ஆசை என்னவென்றால் உனது ஜீவ ஓட்டம் நிற்ப்பதற்கு முன்னே நான் உனக்களித்தச் செல்வங்களை பத்திரமாக மீட்டு உன்னிடம் கொடுப்பது தான். என்னென்ன செல்வங்கள் என்று கேட்கிறாயா! இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். 

* ஆரோக்கியமான உடல் மற்றும் மனம், 
* எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பது மூலம் உன்னை என்றும்     
   இளமையாக  வைத்திருத்தல்,
* அன்பான குடும்பமும், உறவும்,
* பேர் சொல்லும் நன்மக்கட்செல்வமும்,
* எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமும்,
* மானம் காக்கும் உடையும்,
* சகாதாரமான இருப்பிடமும்,
* பசியறியாமல் இருக்க உணவும்,
* பசுமை மாறாத இயற்கை வளமும்,
* நல்ல நட்பை நாடும் நண்பர்களும்,
* வாக்கு தவறாத குணமும்,
* பிறர்க்கு அள்ளித் தருவதற்குச் செல்வமும்,
* தடைபடாத உனது இளமையின் கல்வி,
* செல்வங்களை சேர்க்கும் நல்ல தொழிலும்,
* துன்பம் இல்லாத பெருவாழ்வும்,
* சான்றோர்களை மதிக்கும் குணமும்,
* பெரியவர்களின் நல்லாசியும் 
* நிறைந்த ஆயுளும் 
* என்னை மறக்காமல் இருக்கும் மனம் 

பிரியமுள்ள மனிதா! இந்த செல்வங்களில் இப்போது உன்னிடத்தில் என்னென்ன இருக்கின்றது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னிடத்தில் பாதிக்கும் கீழ் உள்ளது தான் என்னை பாதித்த விஷயம். அனைத்தையும் உனக்கு கொடுப்பதற்குத் தான் இத்தனை படாதபாடு படவேண்டியுள்ளது. உன்னை என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வருமாறு கூறுகிறேன். இப்போதாவது என் வாக்கு உன் மனதில் பிரதிபலிக்கின்றதா! இன்னமும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் நம்பிக்கை இழக்கவில்லை! உன்னை ஜெயிக்க வைப்பதே என் குறிக்கோள் கூட.

பாசமுள்ள மனிதா! நீ மூச்சு இழுத்துவிடும் போது என்ன நடக்கிறது என்று தெரியுமா! சுத்தமான காற்று உள்ளே உடலுக்குள் இழுத்து அசுத்த காற்றை வெளியே தள்ளுகிறேன். அப்போது ஏதேனும் சிறிய தூசி இருந்தால் உடனே தாமதிக்காமல் உன்னிடம் கேட்காமல்  இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியே தள்ளி விடுகிறேன் எனபதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். காற்று சுத்தமாக தான் இருக்கவேண்டும் என்று ஏன் நான் அடம்பிடிக்கிறேன் - விரும்புகிறேன் - பிடிவாதம் பிடிக்கிறேன் - மறைமுகமாக கட்டளையிடுகிறேன் ஏனென்றால் சுத்தமான காற்று ஒன்றினால் தான் உன் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும். அந்தக் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உனது ஜீவ ஓட்டத்தின் ஆயுள் கெட்டியாக இருக்கும். காற்று தான் என் முதல் ஜீவ நாடி. அதேபோல் நீ உண்ணும் உணவும், நீரும் கூட சுத்தமாக இருக்கவேண்டும். அப்போது தான் உன்னை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். கெட்ட அல்லது அசுத்தமான காற்று அல்லது உணவு எனது ஆன்ம ஓட்டத்தை பாதிக்கச் செய்து உன்னை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ அழித்துவிடும். பிறகு நான் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். 

மதிப்புமிக்க மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு என்ன செய்கிறேன்? என்னால் உனக்கு என்ன லாபம்? உள்விதி மனிதன் என்று யாருமில்லை! அவன் தயவுத் தேவையில்லை என்று ஒரு இளைஞன்  என்னுடன் விவாதம் செய்தான்.அதற்கு நான் அவனிடம் கோபப்படவில்லை. 

"அப்படியா, உன்னைப்போன்ற ஒருவனைத் தான் இதுநாள் வரை தேடிக்கொண்டு இருந்தேன்" என்றேன்.
  
"எதற்காக ?" என்று கேட்டான்.
"அறுசுவை உணவுகொண்டு உனக்கு பரிமாற !" என்று சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினேன்.

"மூன்று நாட்கள் தான் உங்களுடன் தங்குவேன்" என்று கண்டிப்பாகச்  சொன்னான்.
"அதுவே எனக்கு அதிகம்" என்று அவனை உட்கார வைத்து மரியாதையாக அனைத்தையும் பரிமாறினேன்.

சாப்பிட்டுக்கொண்டே "என்ன தான் நீங்கள் அன்பாக உபசரித்தாலும் நான் அசர மாட்டேன். எனது எண்ணத்தை இந்த உள்விதி மனிதனால் மாற்றமுடியாது " என்று என்னை எச்சரித்தான்.
நானும் "ம் .." என்று தலையாட்டினேன்.


சும்மா சொல்லக்கூடாது அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிமுடித்தான். 
"ரொம்ப திவ்யமாக இருக்கின்றது" என்று எனக்குச் சான்றிதழ் கொடுத்தான்.
"சும்மாவா, அனைத்தும் தனி நெய்யினால் தயாரித்தவை " என்றேன்.
"அப்படியா!" என்று கைகழுவ சென்றான். கழுவுகிறான், கழுவுகிறான் கழுவிக்கொண்டே இருந்தான்.


"என்னப்பா! இன்னும் கை கழுவி முடிக்கவில்லையா ? " 
"எண்ணெய் கையில் ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. சோப்பு இருந்தால் கொடுங்களேன் "
நானும் அவனுக்கு சோப்பு கொடுத்தேன். கையை சுத்தமாக கழுவிமுடித்தான். சோப்பை என்னிடத்தில் திரும்ப கொடுத்தான். நான் வாங்கிக்கொள்ள மறுத்தேன். காரணம் தெரியாமல் முழித்தான். நானே அதற்கான விளக்கத்தைச் சொன்னேன்.


"இளைஞனே, வெளியே உன் கையில் ஒட்டிய எண்ணெயை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்தாயே ! உனக்குள்ளேயும் இதே எண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்குமல்லவா! அதை யார் சுத்தம் செய்வது. இந்தா இந்த சோப்பை முழுங்கு! தானாக சுத்தம் ஆகிவிடும் " என்றேன்.
முதல் முறையாக அவன் ஏதோ உணர்ந்தவனாய் , "இது நாள் வரை நான் என் உடலுக்குள்ளே சுத்தம் செய்யவில்லை. ஆனால் இன்றளவும் அது சுத்தமாக இருக்கின்றது.. எப்படி என்று தெரியவில்லை? என்று என்னிடத்தில் கேள்விகுறியோடு பதில் சொன்னான்.


"இப்போது தெரிந்து கொள் ! உனக்குள் இருக்கும் நான் எவ்வித சோப்புத் துணை இல்லாமல் நீ சாப்பிடும் போது, ஏதாவது குடிக்கும்போதும் உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டு வருகிறேன் என்று இப்போதாவது தெரிந்ததா!" என்றேன்.

"தெரிந்தது . பாதியளவு நீ இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். முழுமையாக இல்லை! " என்றான். இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் வந்தது. இன்றைக்கு என்ன விருந்தோ என்று ஆசையுடன் இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் அவனுக்கு முன் முதல் நாள் ஆஹா...ஓஹோ..என்று சாப்பிட்ட சாப்பாட்டை அவனருகில் வைத்தேன். மூக்கைப் பொத்திக்கொண்டு ..

" இவ்வளவு நாற்றம் அடிக்கின்றது. இதை யார் சாப்பிடுவது?" என்று சண்டை போடாத குறையாக கேட்டான். நானும் விடாமல் 
"இதைத்தானப்பா இரண்டு நாளுக்கு முன் நன்றாக இருப்பதாகச்  சொன்னாய்.!"
"ஆமாம் சொன்னேன். இப்போது கெட்டுவிட்டது. அதை சாப்பிட முடியுமா!"

"இது தானே இப்போது உன் உடலில் இருக்கும். அது எப்படி கெடாமல் எவ்வித துர்நாற்றமும் இல்லாமல் யார் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?" என்றேன். இப்போது எவ்வித பதிலும் பேசாமல் பிறகு சிறிது நேரம் சிந்தித்து "இப்போது எல்லாம் புரிந்தது. என் உடல் சுத்தம், எண்ணத்தின் சுத்தத்திற்குக் காரணம் தாங்கள் தான் என்று இப்போது ஒத்துக்கொள்கிறேன். இனிமேலும் இந்த மாதிரியான சந்தேகம் வரவே வராது" என்று என்னைப் பற்றி முழுமையாக இப்போது உணர்ந்தான். நீங்களும் இந்த உள்விதி மனிதன் உங்கள் உடலுக்குள் என்னென்ன வேலைகள் செய்கிறான் என்று புரிந்ததா? புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Monday, 22 October 2012

உள்விதி மனிதன் பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடி வருடம் INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS



உள்விதி மனிதன் 

 சம மனிதக் கொள்கை 
பாகம்:22 உள்விதி மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம் 
INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS

பிரிய மனிதா! இந்த உள்விதி மனிதன் சொல்வது அனைத்திலும் உனக்கு உடன்பாடு இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு மனிதன் மேல் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதன் பகையாளியாக பார்க்கிறான். எதனால்? எல்லாமே பேராசை மற்றும் புகழுக்காக! இந்த பூமி இதைவிடப்  பேராசை பிடித்தவர்களும், புகழுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களும் வாழ்ந்து அழிந்த சரித்திரத்தை  இன்றும் மக்கள் மறக்கவில்லை என்றே சொல்லலாம். அவர்கள் போட்ட 'பகைமை' விதை, நாட்டிற்கு நாடு பகையைத் தூண்டிவருகின்றது. அதன் மூலமாக  ஒரு நாட்டைப் பிடிக்கும் ஆசை, அங்குள்ள செல்வங்களைக்  கொள்ளையடிக்கும் பேராசை, பணியாவிட்டால் மக்களை வதைக்கும் செயல் இன்னும் இவ்வுலகில் ஒரு சில நாடுகளில் தொடர்கின்றது. அது ஒருவழியாக குறைந்துவிட்டது எனலாம். ஆனால் அதுவே வேறுவிதமாக  ஒரு நாட்டின் தலைவர் மக்களிடத்தில் பலவழிகளில் கொள்ளை அடிக்கும் நிலைமையை இன்று காண்கிறோம். அதுவும் நிலைமாறி நாட்டுக்கு நாடு பகை என்று போய் இன்று அந்த தொத்து வியாதி மாநிலத்திற்கு மாநிலம் பகையாக உருமாறியும், வீடுகளுக்குள்ளேயும் பகைமை விதை வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கின்றது. இப்படியே இருக்கவிட்டால் உன்னில் இருக்கும் எனக்கும், உனக்கும் அந்த பகைக்கு ஆளாகி இந்த உலக மக்களை அழிப்பதோடு நில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்குச் சொர்க்மாகத் திகழும் இந்த பூமியையே அழித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 



என் இனிய மனிதா! இதன் காரணமாகத் தான் நானாக சிவனே என்று இருந்த இந்த உள்விதி  மனிதனான நானே உனக்கு மீண்டும் அறிமுகம் செய்து, மக்கள் இழந்த சந்தோஷத்தை, நிம்மதியை, மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பதற்கு வந்துள்ளேன். உன் மூலமாக அதை நிறைவேற்றும் காரண கர்த்தாவாகவும் மாறிவிட்டேன். இனி என் விருப்பபடி, உன் துணை கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து இந்த உலகத்தின் சுபிட்சதிற்க்காக உன்னுள் அடிக்கல் நாட்டிவிட்டேன். 



பிரியமுள்ள மனிதா! 'உனக்கு என்ன என்னைவிட  அதிகமாக  திறமை மற்றும் அனுபவம் இருக்கின்றதா?' என்று என்னைப்பார்த்து எள்ளி நகையாடலாம் அல்லது சந்தேகமாகவும் இருக்கலாம்! எனது பிறப்பு, எனது ஆயுள், எனது அனுபவம் இன்றும், இனிமேலும் யாராலும் கணக்கிடமுடியாது. நான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டேன். நான் தான் இறப்பற்றவன். ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு செல்பவன். அப்படியென்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் பயணம் இதற்குமுன் எங்கெங்கெல்லாம் இருந்து வந்திருப்பேன், நான்  அவர்களிடத்திலிருந்து எவ்வகையான அனுபவங்களைப் பெற்றிருப்பேன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! பற்ப்பல அறிஞர்கள், பெரியோர்கள், மகான்கள், முனிகள், ரிஷிகள், அரசர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் சிந்தனைச்சிற்பிகள், அறிவியல் மேதைகள், பொருளாதார நிபுணர்கள், வியாபாரமேதைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் இப்போது பிறக்கும் குழந்தைகள் கற்கால குழந்தையாக இல்லாமல் செல்போன்களைக்கூட எளிதாக கையாள்கிறது. அதற்குப் பிறப்பிலே அத்தனை அறிவு, திறமை எங்கிருந்து வந்தது. பலவகையான மொழிகள் பேசுகின்றன. அவைகளெல்லாம் என் அறிவு, என் ஆற்றல் படி , எனது சொல்படி, எனது அனுபவப்படி நடப்பதால் தானே வந்திருக்கின்றது.

என்பாசமுள்ள மனிதா! இறப்பவர்களுடைய ஜீவ ஓட்டம் நின்றாலும், அந்த ஜீவன் அந்த உடலை விட்டுவிட்டு புதிதாகப் பிறக்கப் போகும் ஜீவனை இயக்கவல்லது. அதற்கு ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொடுக்க வல்லது. அந்த ஓட்டம் தான் உன்னுடைய உடம்பில் இரத்த ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. என்னுடைய முன் ஜென்ம எண்ணங்கள், திறமைகள், ஆற்றல் எல்லாமே உனக்குள் புதைந்து இருக்கின்றன. உனக்குத் தேவையானதை நீ இந்த உள்விதி மனிதன் மூலமாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அவைகளைக் கொடுத்து உன்னை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது குறிக்கோள். 



பண்புள்ள மனிதா! அனைவருக்குள்ளும் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்கள் ஒளிந்து இருக்கின்றன என்று இப்போதாவது புரிந்து கொண்டாயா! அந்த அற்புதச் சக்தியினால் தான் முட்டாள்களும் திடீரென்று மேதையாகின்றனர். இயற்கையில் ஒரு கூழாங்கல் வைரமாக மாறாது. ஆனால் மனிதனில் அந்த அற்புதங்கள் நடக்கும். நேற்று வரை ஏழையாய் இருந்தவன் திடீரென்று பணக்காரனாக மாறுக்கிறான். எல்லாம் இந்த உள் மனிதனின் செயலால் தான். ஆனால் எல்லாவற்றையும் நான் கொடுத்திருந்தாலும் நீ அதிலிருந்து கொஞ்சம் தான் எடுத்துக் கொண்டிருக்கின்றாய். இன்னும் இருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை எடுத்துக்கொள்ள மறுக்கிறாய்.

இரக்கமுள்ள மனிதா! அதனுள் பெரியோர்களின் நீதிபோதனைகள், வற்றாத செல்வங்கள் அடையும் வழிவகைகள், நாட்டுத் தலைவர்களின் அதிகாரங்கள் மற்றும் நீதிமான்களின் சட்டங்கள், பல அரசர்களின் வெற்றிவழிகள், வீர தீரச் செயல்கள், உலக கல்விகள், மக்களுக்காக நேர்வழியில் உழைத்த தலைவர்களின் எண்ணங்கள், விஞ்ஞான அறிஞர்களின் அறிவியல் சாதனைகள், தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் கலைகளில்  சிறந்தவர்கள், விவசாயிகள், பலத்தரப்பட்ட தொழிலாளர்களின் கஷ்ட நஷ்ட அனுபவங்கள், முதலாளிகளின் எண்ணங்களும் செயல்களும் இவைகள் அனைத்தும் அடங்கும். உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.   

மதிப்புமிக்க மனிதா! சில மனிதர்கள் பல நூல்கள் கற்று கல்விமானாக ஆவதும், கடின உழைப்பில் செல்வச் சீமானாக விளங்குவதும், நாடு போற்றும், மக்கள் போற்றும் தலைவராக ஜொலிப்பதும், அரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகுக்கு கொடுக்கும் அறிஞராக போற்றுவதும், சத்திய வழியில் ஆன்மீக குருவாக மக்களுக்கு பல நன்மைகள் செய்வதும், சில நாட்டுத்தலைவர்கள் நல்லாட்சி நடத்துவதும் எப்படி ஏற்படுகின்றது. இவைகளெல்லாம் எனது அனுபவ அறிவை தந்து அதன் ஆற்றலை வெளிப்படுத்துவதால் தான் என்பதை தெரிந்து கொள்.

இனிய மனிதா! இவர்கள் இப்படியிருக்க சிலர் கெட்ட வழியை தேர்ந்தெடுத்து உலகத்தையும், உலக மக்களையும் மாசுபடுத்துகின்றனர். அந்த மாதிரியான எண்ணங்களை அழிக்கவே எல்லோரிடத்திலும் உள்விதி மனிதனாக வந்திருக்கிறேன். நல்ல மனிதர்கள் சிலர் இருப்பதனால் தான் ஓரளவாவது மழை பெய்கின்றது. பூமி நனைகின்றது. மக்களின் வயிறு நிறைகின்றது. ஓரளவு மகிழ்ச்சி கிடைக்கின்றது. 

இனிமையான மனிதா! நீ எப்படி முன்னேறினாலும், எதைப்  படைத்தாலும், எதைக் கண்டுபிடித்தாலும் என்னைவிட அதிகமாக முன்னேறிவிடமாட்டாய். ஆகவே உனது முன்னேற்றங்களை நல்லவழியில் பயன்படுத்தி மக்களுக்குப் பல நன்மைகள் கொடுத்து வாழ்க்கையைச் சிறப்படையச் செய்யவே உனக்குள் இருக்கிறேன்.


உள்மனிதனின் கோடி ஆண்டு அனுபவம் உனக்குக்  கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் ! 
    உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்- IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்-
IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR 


பணம் ஒரு மிகப்பெரிய ஆயுதம். அது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். கடவுள் படைத்த இந்த அற்புத உலகில் மனிதன் சக்தி வாய்ந்தவன் என்று சொன்னால், மனிதன் படைத்ததில் மிக மிக சக்தி வாய்ந்தது 'பணம் ' என்று சொன்னால் மிகையாகாது.


பஞ்சபூதத்தில் இதை ஆறாவதாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதை ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதாவது 'தீ ' விளக்காக இருக்கும் வரையில் அது மற்றவர்களுக்கு ஒளி தந்து உதவுகிறது. அதுவே பெரிய நெருப்பாக பற்றி எரியும் போது , தீ உருவான இடத்தையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் அழிக்கவல்லது. பணம் அளவோடு இருக்கும் வரையில் அது அமைதியாக இருக்கச் செய்கிறது. அளவுக்கு அதிகமாகும் போது அது தனது விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்கின்றது. பணம் நீ கையாளுவதை பொறுத்து தெய்வமாக கருணை காட்டும். அதுவே சாத்தானாக மாறி தீமையை உண்டாக்கும்.

பணம் நமது மனப்பான்மை , நம்பிக்கை மற்றும் ஐடியாக்களை வளர்க்கிறது. ஆனால் எப்போதும் பணம் இருக்கும்போது உன்னைப்பற்றியும், பணத்திற்கும்  உனக்குமுள்ள உறவை பற்றியும் தெளிவாக மனதில் வைத்துகொள். பணம் தேவையான அளவு இருந்தால் நாம் சொல்வதை பணம் கேட்கும். தேவைக்கு அதிகமாக இருந்தால் அது சொல்வதை நாம் கேட்கவேண்டியிருக்கும். 


பணம் அமைதியை கெடுக்கவல்லது. குணத்தை மாற்றவல்லது. உறவுகளை எதிரியாக நினைக்கச் சொல்கிறது. நட்பை பகையாய்  பார்க்கச் செய்கிறது. அன்பை அரக்கத்தனமாய் நினைத்துப் பார்க்கிறது. மரியாதை உள்ளவர்களை அவமதிக்கிறது. 'நான்' என்கிற அகந்தையும் , தலைக்கணமும் வளர்க்கிறது.  ஆசையை பேராசையாக மாற்றி அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. பையில் பணம் கூடக்கூட மனதில் 'கணம் ' கூட ஆரம்பித்து விடுகின்றன.


பணத்தைக் கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கமுடியும். ஆனால் குணத்தை வாங்க முடியாது. அதாவது அன்பு, கருணை, பாசம், நேசம், இரக்கம் , கல்வி மற்றும் வீரம் முதலியவைகள் . 

பணம் நமக்கு அடிமையாக இருக்கவேண்டுமென்றால்.... 


* எண்ணத்தில் கவனம் இருக்க வேண்டும்.

* காட்டுகின்ற உணர்வில் உண்மை இருக்கவேண்டும்.

* செயல்கள் சத்தியப் பாதையில் இருக்கவேண்டும் 

* செயல்களின் விளைவுகள் நன்மை தரக்கூடியதாய் இருக்கவேண்டும்.   

பணம் இருக்கும் போது நீ எதைப் பார்க்கிறாயோ அதைக்கொண்டு தீர்ப்பு சொல்லாதே. சிந்தித்து செயல்பாடு. எப்போதும் உன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் விழிப்புடன் இரு. வாழ்கையில் நீ முன்னேறும்போது உனது குணம் மிளிர்கின்றதா என்பதை உறுதி செய்துகொள். 


பணம் உன்னிடம் ஒட்டியிருக்கும் வரை மற்றவர்கள் உன்னிடம் ஒட்டியிருப்பார்கள். பணம் உன்னைவிட்டு விலகி விட்டால் நீ மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். 

பணத்தின் மீது நமது கவனம் கூடக் கூட அது போகும் திசையிலெல்லாம் நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


மனிதன் 'நார் ' என்றால் பணத்தை  'பூ ' என்று என்று சொல்லலாம். அதாவது மனிதனுக்கு மதிப்பு பணத்தால் மட்டுமே வருகின்றது. 


பணமுள்ளவனிடத்தில் குணமும் இருப்பது தான் மிகவும் சிறப்பு. அது தான் மனிதனை தெய்வமாக காட்டும்.

'பணம்' சம்பாதிப்பது 'மரம் ' நடுவதற்க்குச் சமமாகும். அதாவது நட்டவனுக்கு பலன் தருவதைக்காட்டிலும் மற்றவர்களுக்கு அதிக பலன் கொடுக்கின்றது. 


பணத்தை சம்பாதிக்க வேண்டும்!


அதேசமயத்தில் குணத்தை இழக்காமல்!

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com