Pages

Friday 16 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 30 நிறைவாய் வாழ உள்விதி மனிதனை நினை! - ALWAYS THINK INNER MAN



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை  

பாகம்: 30 நிறைவாய் வாழ உள்விதி மனிதனை நினை!  

ALWAYS THINK INNER MAN, HE WILL TAKE CARE!
  

பெருமையுள்ள மனிதா!   இந்த மானிட உலகில் ஒரு சிலர் சம்சார பந்தம் மிகவும்       கொடுமையானதாகவும்     அது       எப்போதும்        கஷ்டத்தைக்  கொடுப்பதாகவும்   அந்த   சம்சாரக்       கடலை   விட்டுவிட்டோ   அல்லது  அதை       தவிர்த்தால்    தான்   பக்தி   நெறியில்   ஈடுபட்டு, வாழ்க்கையில்    முக்தி அடைய  முடியும்  என்று பரவலான எண்ணம் சிலரிடம் இருக்கின்றது.  அப்போது  தான்  மனநிம்மதி ஏற்படும்    என்பது    உண்மையா?  என்று சிலருக்குச் சந்தேகம் வரலாம்.    இந்த    மாதிரி யெல்லாம்  சொன்ன     காலமும், சூழ்நிலையும் நாம் சற்று     சிந்தித்துப்  பார்க்கவேண்டும். அப்போது எல்லாவற்றிற்கும்    காலம்,     நேரம்       தாரளமாக     இருந்தது.  போட்டி, பொறாமை  இல்லாத காலம். பொய், ஏமாற்று , பித்தலாட்டம்,  சூது வாது, வஞ்சகம் இல்லாத காலம். அரசன் முதல் ஆண்டி வரையிலும் நீதிக்கும், உண்மைக்கும்,     சத்தியத்திற்கும்   கட்டுப்பட்ட   காலம்.    கடவுளுக்கும், ஆன்மீகத்திற்கும் பயந்த காலம். 



இந்த காலம் அப்படியா? கோவில் சொத்துகளைக் கொள்ளையடிக்கிறனர், கோவில் உண்டியல் உடைத்து பணம், நகைகளைத் திருடுகின்றனர், இவ்வளவு  ஏன் ? கோவில் சிலைகளை, விக்கிரகங்களை திருடி விற்கின்றனர். கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வருகின்றனர். அந்த மாதிரி செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனே  தெய்வமே தண்டிப்பதில்லை. ஆகவே தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கை சற்று குறைந்து இருக்கின்றது. ஆனால் 'எப்போதும் தெய்வம் நின்று (நிதானமாகத்) தான் தண்டனை கொடுக்கும்.' அதற்குக் காரணம் திருடன் விதிவசத்தால் திருடுகிறான். அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருவோம் என்று  தெய்வம் நினைக்கிறது என்பது தான் உண்மை. அப்போதும் திருந்தவில்லையென்றால் அவன் அழிவது தவிர வேறு வழியில்லை. 



என் இனிய மனிதா! இன்றைய சூழ்நிலை! உனக்கு எதையுமே பொறுமையாக சிந்திப்பதற்கு நேரமில்லை. எல்லோரும் இயந்திரமாய் இயங்குகிறார்கள். இதில் இந்த உள்விதி மனிதனைப் பற்றிய சிந்தினை எப்படி இருக்கமுடியும்? மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஜீவ ஓட்டம் உண்டு. இந்த உயிர் ஓட்டத்திற்குக் காலாகாலம் 'உணவு' கொடுத்தே தீரவேண்டும். இது தான் காலத்தின் கட்டாயம். இந்த ஒரு காரணத்திற்காகத் தான் இந்த உலக மக்கள் பயந்து ஓரளவு ஒழுங்காக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. மின்சாரம், பணம் போன்றவை மட்டுமே போதும் என்றிருந்தால் இந்நேரம் உலகம் அழிந்திருக்கும். பெரிய கோடிஸ்வரனுக்கும், ஏழைக்கும் உணவு அவசியம் வேண்டும். அதை வியர்வை சிந்தி பாடுபட்டால் தான் கிடைக்கும். பணக்காரன் உடல் உழைப்பதற்குத் தயாராக இல்லை. அதை ஏழைகளால் மட்டுமே செய்ய முடியும். அதனால் அவர்களை அழிக்க முடியாது. இப்போது புரிகின்றதா? ஏழைகளை ஏன் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று!



என் பாசமுள்ள மனிதா! இந்த ஜீவ ஓட்டம் ஒழுங்காக இருந்தால் தான் நீ விரும்பியதை அனுபவிக்க முடியும். அதனால் தான் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கின்றனர். சிலர் பேராசையினால் குறுக்குவழியில் அளவுக்கு அதிகமாக செல்வங்களை தலைமுறை தலைமுறையாய் அனுபவிக்கச் சேர்த்து வைத்து வருகின்றனர். அதனால் தலைக்கணம் கொண்டு இந்த உள்விதி மனிதனையும் மற்றவர்களையும் மதிக்காமல் நடந்துகொண்டு வருவதை நான் கவனித்துக்கொண்டு வருகிறேன்.

மனிதா! உலகச் சரித்திரத்தைச் சற்று புரட்டிப் பார்! உலகாண்ட மாவீரன் நெப்போலியனின் வாரிசுகள் எங்கே? ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரின் வாரிசுகள் எங்கே? ஒரு காலத்தில் உலகம் பாதியளவு ஆண்ட ஆங்கிலேயர்களின் வாரிசுகள் எங்கே? சரித்திரம் அப்படியிருக்க, 'இது  என் நாடு? நான் தான் ஆளுவேன்! எனக்கடுத்து எனது வாரிசு ஆளவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கும்  தலைவர்களின் எண்ணம் நிறைவேறுமா? தவறான வழியில் செல்வம் சேர்த்தால் அவர்களின் வாரிசுகள் ஒருநாள் முகவரி தெரியாமல் வீதிக்கு வரத்தான் செய்வார்கள். பிறரை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சேர்த்திருக்கும் பெரிய பணக்காரரின் வாரிசு ஒரு நாள் ஏழையாக மாறும் காலம் வரும்! அதை வருங்கால சரித்திரம் உனக்கு எடுத்துச் சொல்லும். அதிக ஆட்டம் போட்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு இது தான் கதி! 



இரக்கமுள்ள மனிதா! அவர்களுக்குள்ளும் நான் தான் இருக்கிறேன். அவர்களிடத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான செல்வங்கள் யாவும் அவர்களுடையது இல்லை. அதனால் தான் அதை வெளியே சொல்லமுடியாமல், திருட்டுப் பொருட்கள் போல மற்றவர்களுக்குத் தெரியாதவாறு மறைத்து, மனதில் ஒருவித பயத்துடன், மடியில் கணத்துடன், சொந்த உறவுகளையும் நம்பாதவனாய், நிம்மதியில்லாமல், எந்நேரமும் தூக்கமில்லாமல், சோறு தண்ணீர் கூட ஒழுங்காய் சாப்பிட முடியாதவனாய் அவதிக்குள்ளாகிறானே அதிலிருந்து உனக்குத் தெரியவில்லையா? அவனுக்குள் இருக்கும் நான் அவனின் இந்த தீய செயலுக்காக எப்படி ஆட்டிப்படைக்கிறேன் என்று!

பிரியமுள்ள மனிதா! நல்லவன் தான் இந்த உலகில் சுதந்திரமாக வாழ்வான். அவனுக்குத் தான் நான் கொடுத்த செல்வங்கள் அனைத்தும் வெளிப்படையாக, ஒளிவுமறைவில்லாமல் அனுபவிக்கும் உரிமை இருக்கின்றது. அதன் மூலம் தான் அவன் தன்னுடைய  காலத்தை எந்தவித பயமில்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். மனிதா! உனது வயிறு காயாமல் இருக்க நீ  உழைக்க வேண்டியிருக்கின்றது. மற்றவர்களுக்கு அனுசரித்து நடக்கவேண்டிய சூழ்நிலையும், கட்டுப்பாடும் மற்றும் பயத்துடன் ஒழுங்காக நடந்து வாழ்ந்து வரவேண்டியிருக்கின்றது. மனிதா! ஆண்டி முதல் மகான்கள் வரையில் இந்த சிறு வயிறுக்குத் தகுந்தவாறு சாப்பாடு கொடுக்காவிடில் அவனின் ஆன்ம ஓட்டத்திற்குக் கஷ்டம் கொடுத்துவிடுவேன். அதனால் தான் சொல்கிறேன் 'உன் வயிறை நன்றாக பார்த்துக்கொள் ' என்று. 



நலமுள்ள மனிதா! இந்த உலகில் இன்று உள்ள சூழ்நிலையில் கேட்பார் பேச்சை கேட்டு உன்னிடத்தில் இருக்கும் செல்வத்தை ஏமாற்றிப் பெறுவது யார், எத்தகையர்? என்று தெரியாமலே உனது செல்வத்தை செல்வம் சேருகின்ற  இடத்திலேயே கொடுத்து ஏமாந்து வருகிறாய். மனிதா! இந்த உலகில் நீ வந்ததன் நோக்கம் என் படைப்புகளை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகத் தான். அதை உன் கண்ணெதிரே உன் செயலில் மூலம் நடத்தி உனது பிறவிப் பெரும்பயனை அடைவாயாக! அதில்லாமல் மற்றவர்களின் செல்வத்தை ஏமாற்றி அதை அடைய நினைத்தால் அது மாபெரும் தவறு. 

நன்மை தரும் மனிதா! நீ உழைத்து சம்பாதித்த சிறு செல்வத்தை  தீய எண்ணங்கள் கொண்ட பிறரிடம் தானமாகவோ, தர்மமாகவோ, அன்பளிப்பாகவோ கொடுத்து ஏமாறாதே. நீ எந்த நோக்கில் கொடுத்தாயோ அதுபோல் அவர்கள் நடந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்களது சொந்த நலனுக்காகவே அதை உபயோகிப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கொஞ்சம் கூட தானமாகத் தரமாட்டார்கள். ஒன்று கேட்கிறேன்! பெரிய பணக்காரர்கள், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், அரசாங்கத்திற்கில்லாத அக்கறை உனக்கேன் வருகின்றது? அப்படிச் செய்து ஏமாந்துவிடாதே!  



பாசமுள்ள மனிதா! உன் நெஞ்சைத் தொட்டுச் சொல். உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனை ஒரு நாளைக்கு எத்தனை தடவை அல்லது எவ்வளவு நிமிடம் நினைக்கிறாய்? அப்படி நினைப்பதற்கு உனக்கு நேரம் இருக்கின்றதா! அப்படி ஒருவேளை சதா என்னை நினைப்பதால் உனக்கு என்ன பயன் கிடைக்கும்? நீ என்னை எப்படி நினைத்தாலும் உனது வயிற்றுப் பசியை ஒரு வேளைக்கு தள்ளியோ, ஒரு நாளைக்குத் தள்ளியோ, ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு நிச்சயம் தள்ளிப் போடமுடியாது. அப்படிப்பட்ட செயலை என்னைத் தவிர வேறு யாராலும் செய்ய இயலாது. ஆனால் அந்த செயல் நடந்தே தீரவேண்டுமென்று தான் உயிரினங்களுக்கு நான் வகுத்து வைத்திருக்கும் விதி. அதை யாராலும் வெல்லமுடியாது. அப்படியும் யாராவது ஒருவர் உனது வயிற்றுப் பசியை ஒரு நாளைக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கிறேன் என்று சொன்னால் அவர் தான் என்னை விட அதிக வல்லமை படைத்தவர். அது வரை இந்த உலகம் எனது கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.




இனிமையான மனிதா! நீ இளமையாய் இருக்கும்போது என்னை எள்ளளவும் நினைக்காமல் உன்னைப் பற்றியும், உனது சந்தோசத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் நினைக்கிறாயே, அதற்கு மட்டுமல்ல உனது படைப்பு! நீ உனது உறவுகளையும், சுற்றியிருப்பவர்களையும் நல்வழியில் சந்தோசப்படுத்தி அவர்களை ஒரு குறையுமில்லாமல் வைத்துக்கொண்டால் நான் மிகவும் ஆனந்தப்படுவேன். ஏனெனில் அவர்களுக்குள்ளும் எனது பரிசுத்த ஜீவ ஓட்டம் தான் ஓடுகின்றது. அதை ஒரு குறையுமில்லாமல் செய்வதே உனது பிறவிக்கடன்.




நன்றியுள்ள மனிதா! ஒருவர் ஒருவேலையும் செய்யாமல் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டுமென்று, வேளாவேளைக்கு அவர் உணவு உட்கொண்டு சதா என்னைப் பற்றியே நினைப்பதில் எந்தவித பலனும் கிடைக்காது. உனக்குள்ள கடமைகளையும் நீ தவறாமல் செய்து கொண்டே இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரே ஒரு நிமிடம் என்னைப் பற்றி நினைத்தாலே போதும். எப்படியென்றால் உன்னிடம் அன்புமிக்கவர்களை நீ தினமும் 24 மணிநேரம் நினைத்துக்கொண்டா இருக்கிறாய். சரி அப்படியே ஒரு நாள், அதிகம் போனால் ஒரு வாரம் நினைக்கலாம். இன்னும் அதிகமாக நினைப்பாயானால் உனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். இது தான் உண்மை. இதை உன்னால் மறுக்க முடியுமா? மேலும் நீ சற்று வசதியாக இருந்தால் என்னை கண்டும் காணாமல் போய்விடுகிறாய். அப்படித்தானே! மனிதா! எப்போதும் எந்நேரத்திலும் உன்னால் முடித்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து தவறவே தவறாதே! அல்லது அவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்கிற மனோபாவமாவது  வளர்த்துக் கொண்டாலே போதும். நீயோ அந்த உதவியை பகட்டு மேனி கொண்ட போலியான மகானிடத்தில் காட்டி உனக்கு முக்தியும், மோட்சமும் கிடைக்குமென்று நம்பி ஏமாந்து வருகிறாய் ! ஜாக்கிரதை!  



உள் மனிதனில் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்..
               

1 comment: