Pages

Saturday 1 September 2012

அப்பா Vs மகன் - (அப்பா மகன் போட்டி) சிறு கதை FATHER Vs SON (SHORT STORY) BY MADURAI GANGADHARN

அப்பா Vs மகன் - சிறு கதை 
FATHER Vs SON (SHORT STORY)
BY MADURAI GANGADHARN
- மதுரை கங்காதரன் 


கடையில் மும்முரமாக வியாபாரம் செய்துகொண்டிருந்தார் கந்தசாமி. அவ்வப்போது அவரது மகன் கோவிந்தசாமி அப்பாவுக்கு துணையாய் பள்ளி விடுமுறை நாட்களில் கடையை கவனிக்க போவான்.அவனுக்கும்  கடையில் உள்ள சாமான்களின் பெயர்களும் விலைகளும் நன்றாக தெரியும்.'மீன் குஞ்சுகளுக்கு நீந்த கத்துகொடுக்கவா வேண்டும் ?!'

முக்கியமாக அவனுடைய அப்பா பஜாரில் கொள்முதல் செய்ய போகும்போதெல்லாம் இவன் தான் வியாபாரத்தை கவனித்துக் கொள்வான். வாடிக்கையாளர்கள் பலரும் அவனுடைய வியாபாரத் திறமையை கண்டு ஆச்சரியப்பட்டுப் போவார்கள். 'இளம் பயமறியாது' இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் ஆனால் இவன் விஷயத்தில் 'இளம் கன்று சூதும் அறியாது' என்பது தான் உண்மை.இவன் அனைவரிடத்திலும் அன்பாக பேசுவது, நேர்மையான வியாபாரம், பொருட்களை சரியானபடி எடை போடுவது, சரியான விலை, சரியாக சில்லறை கொடுப்பது போன்ற குணங்களின் காரணமாக வாடிக்கையாளர்கள் இவன் இருக்கும்போது தான் அதிகம் வர ஆரம்பித்தனர்.

ஆனால் இவனுடைய அப்பா நேர் எதிர். பொருட்களை சரியான அளவை விட சற்று குறைவாகவே அளந்து போடுவார். விலை சற்று அதிகமாக இருக்கும்.பேச்சில் கூடுதல்  கடுமை தெரியும். எப்போதும் சிடு சிடுவென்று இருப்பார். சரியான சில்லறை கொடுப்பதில்லை.

இவரிடத்தில் எல்லாப் பொருட்கள் இருப்பதாலும், இவரைத்தவிர சொல்லிக்கொள்ளும் படியாக வேறு கடை அந்த ஏரியாவில் இல்லாததாலும் மக்கள் வேறு வழியில்லாமல் அவரிடத்தில் பொருட்களை வாங்கி வந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல அனைவரும் கந்தசாமி கடையில் இருக்கும் நேரத்தில் " உங்க மகன் கோவிந்தசாமி எங்கே?" என்று ஏறக்குறைய எல்லாருமே கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அவர், "அவனா! பள்ளிகூட விடுமுறையில் தான்  அதுவும் படிப்பு மற்றும் வீட்டுப்பாடம் எழுதிய மீதி நேரத்தில் தான் கடைக்கு வருவான்" என்று பதில் கொடுத்து வந்தார்.

அவர் ஒன்றை மட்டும் சற்று தாமதமாக கவனித்தார். அது என்னவென்றால், தான் நாள் முழுவதும் செய்கின்ற  வியாபாரம், எனது மகன் ஒரே மணி நேரத்தில் செய்து வருகிறானே !  அவனிடத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல்  போக கடைசியில் வாடிக்கையாளர்களிடமே கேட்டுவிட்டார்.

" ஏனுங்க! எப்போதும் நீங்க அதிகமான சாமான்களை   என்கிட்டே வாங்குவீங்களே இப்போதெல்லாம் மிகக் குறைவாக வாங்குறீங்க? வேறு  எங்கேயாவது வாங்குறீங்களா?   அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க! உங்க கடையிலே தான் வாங்குறேன்! ஆனால் நீங்கள் இல்லாதபோது உங்க மகன் இருக்கும்போது எங்களுக்கு தேவையான எல்லா சாமான்களையும் வாங்குறேன்!"

"ஏன்? என்னிடத்தில் வாங்ககூடாதா ?"

"உங்களிடமா? நீங்கள் வியாபாரம் செய்யும் முறையும் , நேர்மையின்மையும்  எங்களுக்கு பிடிக்கவே இல்லை. முக்கியமா குறைந்த அளவு எடை , அதிகமான விலை தான் காரணம். உங்க மகன் ஒவ்வொரு பொருளையும் தங்கம் போல நிறுத்தி எடைபோடுகிறான்! உங்களுக்கு இந்த மாதிரி தங்கமான பையனை கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்! " என்று அவருடைய  மகனை வாயாரப் புகழ்தார்.

இது போதாதா? ஒரு வியாபாரிக்கு ! 'அவனிடத்தில் இது பற்றி பேச வேண்டு'மென்ற முடிவோடு அவனது மகன் வரவை எதிர்நோக்கி இருந்தார் கந்தசாமி . வழக்கம்போல அவரது மகன் கடைக்கு வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததும் " கோவிந்தா! நீ வியாபாரம் செய்யுற விதம் எனக்கு பிடிக்கவேயில்லை. இப்படி நேர்மை,நேர்மைன்னு வியாபாரம் பண்ணினா அப்பறம் நமக்கு கிடைக்கும் லாபம் குறைஞ்சுடும். பின்னே எப்படி சொத்து சேர்க்க முடியும் ? இனிமேல்  நான் எப்படி வியாபாரம் செய்யுறேனோ அப்படி வியாபாரம் செய்தால் போதும் " என்று கடிந்து கொண்டார்,

"அப்பா !   அது மட்டும் முடியாது! நம்மிடம் வருபவர்கள் நம் தெருவில் உள்ளவர்கள்.அவர்களுடைய நிலை நமக்கு நன்றாக தெரியும். அன்றாடம் கூலிக்கு வேலை செய்து தினம் கிடைக்கும் சொற்ப பணத்தில் நம்மிடம் சாமான்களை வாங்கி வருகிறார்கள். விலைவாசி விக்கிற விலையிலே அவர்களை மேலும்  ஏமாற்றுவது என்பது எனக்கு கொஞ்சம் மனமில்லை, இஷ்டமுமில்லை!" என்று பதிலளித்தான்.

இதை கேட்டதும் அவருக்கு கோபம் பொங்கியது. அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. பேச்சு நீண்டு கொண்டே போனது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அவனது மகன் கோவிந்தசாமி அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

"சரிங்கப்பா! உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன போட்டி. அதிலிருந்து நீங்கள் எப்படி இருக்கின்றீகள்! உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அதேபோல் உங்களைப் பற்றிய அவர்களின் மனநிலையும் தெரிந்து கொள்ளலாம்" என்று தனது போட்டியைப் பற்றி சொன்னான். அவரும் "ப்பூ.. இவ்வளவு தானா போட்டி ! கட்டாயம் இதில் நான் தான் வெற்றி பெறுவேன். நீ சின்ன பையன்! இந்த கடையை நான் தான் இருபது வருஷமா கவனிச்சுட்டு வர்றேன். யாரு எப்படின்னு உன்னை விட எனக்கு தான் நல்லா தெரியும்." என்றார்.

"அப்பா ! நாளை முதல் எனக்கு பத்து நாட்கள் அரையாண்டு விடுமுறை. போட்டி நடத்துறதுக்கு இது தான் சரியான சமயம். அதேபோல இந்த சந்தர்ப்பத்தை விட்டால் எனக்கு வேறு நல்ல சந்தர்பம் கிடைக்காது!" என்றான். இப்போது தான் கோவிந்தசாமிக்கு சற்று மனம் திருப்பதியானது.

போட்டியின் படி இந்த பத்து விடுமுறை நாட்கள் அவன்தான் வியாபாரம் செய்வது தான் பந்தயம். என்ன நடந்தாலும் கோபம் கூடாது.பொறுமை யாக கடைசிவரை இருக்கவேண்டும். முடிவு தானாக வருவது தான் என்றபடி ' அப்பா மகன் போட்டி' துவங்கியது.

மறுநாள் முதல் பையன் கோவிந்தசாமி கடையை பார்த்துக்கொண்டான்.வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் அவன் இருக்கும் போது சாமான்களை வாங்கிச்சென்றனர். வியாபாரம் அமோகமாக நடந்தது. ஆனால் நாள் முழுவதும் அவன்  கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தது  எல்லோருக்குமே ஆச்சர்யத்தை தந்தது.

"தம்பி! கோவிந்தா ! எங்கே உங்கப்பாவை? இன்று முழுவதும் கடைப் பக்கம் காணோம். எனக்கு நினைவு தெரிந்த நாள்லே இருந்து ஒருநாள் கூட அவர் கடையில் இல்லாததை பார்க்கவேயில்லை. அப்பா ஏதாவது கடை விஷயமா வெளி ஊருக்கு போயிருக்கிறாரா? அல்லது உங்களுடைய உறவினர் விசேஷத்திற்கு போயிருக்கிறாரா? அவரு லேசுலே யாரையும் நம்ப மாட்டாரே! " என்று ஒருவர் பையன் கோவிந்தசாமியிடம் கேட்டார்.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேங்க! என் அப்பா நேற்று கடையிலிருந்து வீட்டிற்கு போறப்போ எவனோ ஒருவன் மோட்டார் சைக்கிளை கொண்டு எங்கப்பாவை இடிச்சுட்டான்  ! கால் முறிவு இல்லை , ஆனால் சற்று பலமான அடிபட்டிருச்சி. கையிலேயும் நல்ல அடி" என்று சொன்னது தான் தாமதம்



"வேணும், வேணும் உங்கப்பாவுக்கு! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே தம்பி! எங்களை எப்படியெல்லாம் ஏமாற்றியிருப்பார் ? குறைச்சு எடைபோட்ட கை, அதிகமா வாங்கின பணம்! அந்த கையிலே தானே வாங்கியிருப்பார்! அவருக்கு நல்லா வேணும். இப்படி அப்பப்போ அனுபவிக்கிறது தான் நரகம் போலிருக்கு. எங்களுக்கு செஞ்ச அந்த பாவம்  தான் மனிதனை இப்படி படுக்க வச்சிடுச்சி போல இருக்கு! இப்போதாவது உங்கப்பாவுக்கு புத்தி வருதான்னு பார்ப்போம். நீ ஒன்னும் கவலை படாதே தம்பி ! நாங்க உனக்கு பக்க பலமா இருக்கிறோம். கடையை நல்லாபடியா  நடத்து. ஏதாவது உதவி வேணும்னா நாங்க செய்யுறோம். " என்று வாடிக்கையாளர் ஒருவர் ரொம்பவே பட பட வென்று பேசி பொரிந்து தள்ளியதுடன் சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

அவர் மட்டுமில்லை. வந்த சிலர் "தம்பி, இனிமேல் கடையை நீயே நல்ல படியா பார்த்துகப்பா ! உங்கப்பா இந்த வயதான காலத்திலேயே நேர்மை இல்லேன்னா, இன்னும் எப்போது நல்ல படியா வாழ்ந்து புண்ணியத்தை தேடிக்கப்போறார்?. அவர் கடைக்கு வராத வரைக்கும் நல்லது ! அவர் இனிமேல் செய்யும் பாவமாவது குறையும். கடைக்கு வர ஆரம்பிச்சா பாவம் கூடும்.இன்னும் இதுமாதிரி பெரிசு பெரிசா அனுபவிப்பார்" அன்று வந்தவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் சாபம் கொடுத்தது போல் ஒரே மாதிரியாய் தான் பேசி சென்றனர்.

"சரிதானுங்க, உங்களைப் போல பெரிய மனசு இருக்கிறதனாலே நாங்க இந்த நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறோம். நீங்க விருப்பபட்டா ஒரு தடவை எங்கப்பாவை இதோ பத்து வீடு தள்ளித் தான் இருக்கு. அவரை பார்த்துட்டு ஆறுதல் சொல்லிட்டு வர்றிங்களா ? " என்றான் பையன் கோவிந்தசாமி.

உடனே பதிலுக்கு "தம்பி ! நான் எதுக்கு அவரை பார்க்கப் போகணும். அவரென்ன உத்தம சீலரா? அல்லது நேர்மையானவரா? நானும் வருஷ கணக்கிலே சாமான்களை இங்கே தான் வாங்கிட்டு வர்றேன். அதற்கு அவர் செய்யும் ஏமாற்று வியாபாரம் எங்களாலே பொறுத்துக்கொள்ள முடியல்லே! தட்டி கேட்கவும் நேரம் வரல்லே! இப்ப கடவுளா பார்த்து இந்த தண்டனைய கொடுத்து வீட்டிலே உட்கார வச்சுருக்கார். வீட்டிலே உட்கார்ந்தே இருக்கட்டும். பாவ மூட்டையை குறைச்சு கொள்ளட்டும் " என்று மனதில் பட்டதை பேசிவிட்டு உடனே நகர்ந்தார்.

அன்று ஒருவர் கூட அவர் வீட்டிற்கு ஏன், எப்படி என்று கூட யாரும் விசாரிக்க போகவில்லை. ஒரு உண்மையென்னவென்றால் கடையின் பின்னால் மறைந்து கொண்டு அன்று முழுவதும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரைப் பற்றி பேசிய பேச்சுகளை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் அவன் அப்பா கந்தசாமி.

எல்லோரும் தனக்கு அளித்த சான்றை இன்று தான் அறிந்தார். தன்னைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேசியது அவர் எண்ணிய போது மேலும் அவருக்கு ஆத்திரம் பொங்கியது. இருப்பினும் போட்டியின் விதியின் படி கோபப்படாமல் இருந்தார். 

மகன் கோவிந்தசாமி தனது அப்பா கந்தசாமியிடம் "பார்தீங்களாப்பா ! அனைவரும் என்ன நினைகிறாங்கன்னு ? உங்களை பத்தி என்னென்ன பேசினாங்க! ன்னு நல்லா கேட்டீங்களா? இனிமேலாவது இப்போ நடந்ததை மனசுலே வச்சுட்டு இனிவரும் காலங்களிலேயாவது  நேர்மையா வியாபாரம் செஞ்சா உங்க பாவமெல்லாம் குறையும். மக்கள்கிட்டே நல்ல மதிப்பும் பெறுவீங்க!" என்று அப்பனுக்கு அறிவுரை இல்லை இல்லை உபதேசம் செய்தான்.

இதற்ககெல்லாம் மசிந்து விடுவாரா என்ன? கந்தசாமி.

"சரி மகனே! என்னோட முறை முடிஞ்சிருச்சு , ரெண்டு நாள் கழிச்சு உன்னோட முறை வரும் அப்போது என்ன நடக்கிறதுன்னு பார்ப்போம். " என்று பதிலுக்கு சவால்விடுத்தார்.

ரெண்டு நாட்கள் சென்றன.

கந்தசாமி கடையிலிருந்தார். அவர் இருந்ததால் வாடிக்கையாளர் களுக்கு ரொம்ப ஆச்சரியம்.

"ஐயா! உங்களுக்கு அடிபட்டதா உங்க மகன் சொன்னான்.நீங்க மறுபடியும் கடைக்கு வர்றதுக்கு பத்து நாட்களாவது ஆகும்முன்னு சொன்னான்.ரெண்டு நாள்லே திரும்பி வந்திட்டீங்க!இதெல்லாம்  அவனோட புண்ணியம் தான் உங்களை சீக்கிரமா குணமாக்கிடுச்சி தான்னு சொல்லணும்  " என்று மீண்டும் அவரது பையனைப்   பற்றி புகழ்தனர்.

மேலும் அவரே 

"சரி உங்க மகன் வீட்டிலே என்ன செய்யுறான் ? இப்போது அவனுக்கு லீவு தானே ! ஏன் கடைக்கு வரவில்லை? " என்று அவனைப் பற்றி விசாரிக்க, கந்தசாமியோ "அவனா...அவனுக்கு நேற்று திடீரென்று ஜுரம், டாக்டர் அவனை ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்.வீட்டில் தான் படுத்துத்திருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே "அது இருக்கட்டும். உங்களுக்கு என்ன சாமான் வேண்டும்னு .... " அவர் பேசியது காதில் வாங்குறதுக்கு முன்னே மிகவும் பதற்றத்தோடு ," சாமான் வேண்டாம், ஒண்ணும்  வேண்டாம். அந்த நல்ல தம்பிக்கா ஜுரம்? கடவுளே ! ஏன்பா , நல்லவங்களை இப்படி சோதிக்கிறே?" ம்.. சற்று யோசித்தவராய் "உங்க வீடு எங்கிருக்கு? ங் ... அந்த பத்தாவது வீடு தானே? வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி முக்குலே உள்ள கோவிலுக்கு சென்று அவனுக்காக பிரார்த்தனை பண்ணிட்டு, விபூதியை அவன் நெத்தியிலே வச்சா தான் எனக்கு நிம்மதி வரும்." என்று விறு விறுவென்று ஓடினார். அவருடைய இந்த செயலைப் பார்த்து வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்தார் கந்தசாமி .

அவனிடம் இப்படி இவர்கள் கண்மூடித்தனமாய் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்களே என்று எண்ணி சற்று மகிழ்ந்தார்.

அவர் உண்மையில் சொன்னதை செய்கிறாரா அல்லது சும்மாவாக சொன்னாரா? என்பதை பார்க்க சற்று நேரம் பொறுத்து தன மகனை பார்க்க விரைந்தார். வீட்டில் யார் யாரோ சிலர் தன் மகன் கோவிந்தசாமியின் உடல்நலத்தை விசாரித்துகொண்டிருன்தனர்.

வீட்டினுள் நுழைந்ததும் அவனது மகனின் நெற்றியை முதலில் பார்த்தார். பார்த்ததும் அவரின் கை கால்கள் உதறியது. அவனது நெற்றி முழுவதும் விபூதி,குங்குமம். அதை பார்த்தவர் "மகனே ! என்ற பாசக்குரலோடு சற்று சப்தமாக "நான் உன்னிடத்திலே தோத்துட்டேன். நீ வச்ச போட்டியிலே நான் தோத்துட்டேன் வருஷ கணக்கா வராத புத்தியை சொற்ப நாள்லே நான் யார் ? எப்படிப்பட்டவன் ? ன்னு புரிய வச்சுட்டே ! மக்களோட குறைகளை அந்த மகேஷன் கவனிச்சுக்குவான் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கேன். இது நாள் வரைக்கும் மகேஷன் வரல்லே. ஆனால் இப்போ என் மகன் உருவிலே அந்த மகேஷனா வந்துட்டான். எனக்கு பாவ விமோட்சணம் கொடுத்துட்டான்!   இனிமேல் 'என் வழி தனி வழியில்லை! இனி என் வழி என் மகன் வழி ன்னு சொல்றதிலே பெருமை படுறேன். நான் உயிரோட இருக்கும்போதே உன்னோட புகழை ஜனங்க மூலமா கேட்குறதுக்கு நான் செஞ்ச பாக்கியம். கடைசி  காலத்திலே எனக்கு புண்ணியம் தேடி கொடுத்துட்டே.எல்லோரும் உன்னிடத்த்லே காட்டுற பாசத்தையும் அன்பையும் நினச்சு சந்தோஷப்படுறேன்." என்று சொல்லிக்கொண்டே போக வீட்டில் இருந்த அவரது மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. " அப்பாவும் புள்ளையும்  என்ன பேசிட்டுயிருக்கீங்க! என்ன போட்டி? யார் யாருக்கும் போட்டி , யார் ஜெயிச்சா ? ஒண்ணுமே புரியலே !  " என்று எதுவும் பிடிபடாமல் முழித்தாள்.

"ஒண்ணுமில்லே காமாட்சி! உன்னோட புருஷனுக்கு இப்போ தான் புத்தி வந்திருக்கு! அதை கொடுத்தது வேறு யாருமில்லை, நம்ம தங்கமான மகன் தான்.அந்த பரம சிவனுக்கு முருகன் உபதேசித்தது  வெறும் கற்பனை கட்டுக்கதைன்னு நினைச்சேன். ஆனா அது உண்மை தான்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன். இந்த கந்தசாமி வீட்டிலே என் மகன் எனக்கு புத்தி சொல்றப்போ அந்த புராணக்கதை நிஜக்கதை தான். ஒரு மனுஷன் நல்லவனா? கெட்டவனா?ன்னு தெரிஞ்சுக்க அவனுடைய இறப்பு சொல்லும்ன்னு கேள்விபட்டிருக்கேன். ஆனா அப்படி தெரிஞ்சு பிரயோசனமில்லை. கெட்டவன் கடைசிவரையில் கெட்டவனாகவே சாகவேண்டுமா ? அவன் திருந்துவது எப்போ? அது இப்போ புரிஞ்சுடிச்சி. ஒரு மனுஷனுக்கு ஆபத்தோ அல்லது கஷ்டம் வரும் சமயத்தில் மனுஷங்க அவனைப் பத்தி பேசிக்குவாங்கள்ளே அப்போது தெரியும் அவன் நல்லவனா? கெட்டவனா?ன்னு. இதுநாள் வரை  நான் கெட்டவனா பல தவறான காரியங்களை செய்திருக்கிறேன் . என் மகன் வச்ச போட்டியாலே நான் நல்லவனா மாறிட்டேன். கெட்டவனா சாகவேண்டிய என்னை திருத்தி நல்லவனாக மாற்றிவிட்டான். அதை நினச்சா பெருமையா இருக்குது.விவரமா சொல்றேன் கேட்டுக்க. கொஞ்சம் நாளா நான் கடையிலே இருக்கிறப்போ அவ்வளவா வியாபாரம் நடக்கலே! ஆனா நான் வெளியே போயிருந்தபோது நான் நாள் முழுவதும் பண்ற வியாபாரம் அவன் ஒரு மணிநேரத்திலே பண்ணிவிடுவான்.இப்படி பலநாட்களா நடந்தது. வர்ற வாடிக்கையார்கள் எல்லோரும் என் மகனோட நேர்மையான வியாபாரம் , அன்பான பேச்சை பெருமையாய் பேசுவாங்க . எனக்கு அவனுடைய இந்த செயல் எனக்கு ஆத்திரத்தை தந்தது. 'இப்படியிருந்தால் உங்களோட கடைசி காலத்திலே நல்லா அனுபவிப்பீங்க' என்று என்னிடம் சொல்வான்.அதுக்கு நான் 'என்னடா கடைசி காலம் ! எனக்கு ஏமாற்றியாவது பணத்தை சம்பாதிக்கனும்ன்னு பேராசை இருந்தது. ஆனா அவன் ஒரு நாள் என்னிடத்தில் 'ஜனங்க உங்களைப்  பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கனு'ம்னு அவன் சொல்ல அதை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு நானும் அவனும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தி போட்டி வச்சிருந்தோம். அந்த நாடகத்தோட முடிவு தான் இது. எனக்கு அடிபட்டிருச்சி என்று ஜனங்ககிட்டே சொல்றப்போ யாரும் என்னை பத்தி கவலை பாடலே.அப்போதும் யாரும் அனுதாபப்படாம  என்னை ரொம்பவே கீழ்தரமா எல்லோரும் பேசினாங்க. ஆனா என் மகனுக்கு லேசான ஜுரம்ன்னு கேட்ட உடனே யார் யார் எப்படியெல்லாம் பதறினார்கள். தங்களோட சொந்த புள்ளையைவிட மேலா எல்லோரும் பார்க்க வந்தார்கள். என் புள்ளே எனக்கு 'நேர்மை' பாடத்தை நல்லாவே கத்து கொடுத்துட்டான். இந்த நிமிஷமே கடைக்கு போய் மகன் காட்டிய வழியின் படி நேர்மையான வியாபாரம் செய்ய போகிறேன். ஒன்னு தெரிஞ்சது. 'எனக்கு  எல்லாம் தெரியும்' என்கிற ஆணவத்தோடு இருந்தேன்.' இப்போ தான் தெரிந்தது சிறுகளிடம் கூட நல்ல எண்ணங்கள் இருக்குதுன்னு"என்று சொல்லியவாறு கடைக்கு புண்ணியம் தேட போனார் கந்தசாமி.   


 




எல்லோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். உங்க பையன் அல்லது மகள் கிட்டே  ஏன் எல்லோரிடத்திலேயும் உள்ள நல்ல பழக்கத்தை  ஏற்றுகொள்ளுங்க. நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் , மதிப்பு, மரியாதை கிடைக்கும்.



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 




1 comment: