Pages

Thursday, 10 October 2013

ஏழைகளின் பலிபீடம் சட்டம் ! சிறுகதை - மதுரை கங்காதரன்

ஏழைகளின் பலிபீடம் சட்டம் !

சிறுகதை 

மதுரை கங்காதரன் 



57 A  வட்டப் பேருந்து சற்று அதிகமான பயணிகளைத் தாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் ..

"எல்லோரும் டிக்கெட்களை கேட்டு வாங்கிக்குங்க. கண்டக்டர் வரலேன்னு சொல்லிடாதீங்க" என்று அத்தனை கூட்டத்திலும் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார். அவரே மேலும் " பஸ் ஸ்டாண்டிலே 'செக்கர்' இருப்பாரு, எல்லோரும் அவங்க அவங்க டிக்கெட்டுகளை கையில் எடுத்து வைச்சுகுங்க" என்று டிக்கெட் வாங்காமல் இருப்பவர்களை கடைசியாக மறைமுகமாக எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.


பேருந்து நிலையத்தை நோக்கி உள்ளே சென்று அதற்குரிய நடை மேடையில் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த, டிக்கெட் பரிசோதகர் வாசலில் நின்று "எல்லாரும் அவரவர் டிக்கெட்டுகளை காட்டுங்க"என்று ஒவ்வொருவரையாக அவரவரின் டிக்கெட்டுகளை  சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பக்கதிதில் பேருந்து நடத்துனர் நின்று கொண்டிருந்தார்.


"என்ன கண்டக்டர்! எல்லோருக்கும் டிக்கெட் போட்டுட்டீங்களா? 'லாக் சீட்' காட்டுங்க" என்று மேலோட்டமாக எந்தெந்த நிறுத்தத்தில் எந்தெந்த விலையில் டிக்கெட் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு "எல்லா பாசிஞ்சர்களை கீழே இறங்கியாச்சா?" ஒரு குரல் கொடுத்தார் பரிசோதகர்.

"இல்லே சார்! பாதி கூட்டம் உள்ளே இருக்கு" என்று பதிலளித்தார் கண்டக்டர்.

ஒரு பயணி டிக்கெட்டை காட்ட, அதை பார்த்த டிக்கெட் பரிசோதகரோ "இது இந்த பஸ்ஸில் கொடுத்த டிக்கெட் இல்லே. இன்னொரு டிக்கெட் இருக்கும். நல்லா பாருங்க" என்றார்.


அவரும் சட்டைப் பையை துலாவியபடி "இந்த டிக்கெட்டா ?" என்று காட்ட "ஆ.. சரி இந்த டிக்கெட் தான்" என்று அவரை அனுப்பினார்.

கடைசியாக ஐந்து மாணவர்கள் செக்கரின் முன் நின்றார்கள்.அதில் ஒருவன் தன டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்தான்.

முதலானவனிடத்தில் "எங்கேப்பா உன்னோட டிக்கெட்?"

"டிக்கெட் வாங்கலே சார்!"

"என்ன டிக்கெட் வாங்கலேயா ?"

" உங்க அப்பா பேரு என்ன?"

" டாக்டர் சீதாபதி சார். இந்த ஊரிலே பெரிய டாக்டர்!  தெப்பக்குளம் பக்கத்தில் இருக்கிறாரு"

" ஓ .. அந்த டாக்டரா! அட எங்களோட பேமிலி டாக்டர். ஏன்பா, நீ எல்லாம் வண்டியிலே வராம ஏம்பா பஸ்ஸிலே ..?"

"வண்டி ரிப்பேர் ! அதனாலே பஸ்ஸிலே வந்தேன்"

"சரி.. சரி கண்டக்டர் இவன் நம்ம பையன். விட்டிடுங்க. நீ போப்பா ! அப்பாவை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்க" என்று அவரை அனுப்பி 

இரண்டாமவனிடத்தில் 

"நீ ஏன்பா டிக்கெட் எடுக்கலே? உங்கப்பா பேரு என்ன? என்ன வேலையிலே இருக்கிறாரு?"

"சார்! என்னோட அப்பா பேரு சப் -இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம். பி 2 விலே இருக்கிறார்!"

"அவரோட பையனா? இந்த மாசம் ப்ரோமோசன் வரும்னு சொன்னாரு. வந்துடிச்சா?"

" இன்னும் வரலே சார்! அதைத் தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்" 

"சரி.. சரி நீ போகலாம். இன்னொரு தடவை இப்படி செய்யகூடாது சரியா?" என்று செல்லமாக அதட்ட அவனும் தலையாட்டிக் கொண்டே நடையைக்கட்டினான்.

மூன்றாமவனிடத்தில் .

"சார் என்னுடைய அப்பா பேரு ராஜ குரு. இரண்டாவது வார்டு கவுன்சிலர்!"

"அடடா ...உங்கப்பாவைத் தான் பார்க்கணும்ன்னு நினைச்சேன். ஒண்ணுமில்லே தம்பி! அடுத்த மாசம் வீடு கட்டணும்னு ப்ளான் வச்சிருக்கேன். அதுக்கு உங்கப்பாவோட உதவி தேவை. அப்பா கிட்டே சொல்லி வை. வீட்டிலே வந்து பார்க்கிறேன். நீங்க போகலாம் தம்பி" என்று அனுப்பிவிட 

நான்காமவனிடம்..

"சார் ! நான் தாசில்தார் சதாசிவமோட பையன் !!!"

" ரேசன் கார்டு விஷயமா பார்க்கணும்னு. சரி நீங்க கிளம்புங்க ராஜா! எதுக்கும் இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்றேன். ம் ...அடுத்து .."

ஐந்தாமவனிடம் 

"சார் ! எங்கப்பா பேரு மாடசாமிங்க. கூலி வேலை பார்கிறாருங்க."

"என்ன கூலித் தொழிலாளியா? அப்ப 'பைன் ' கட்டு."

" சார். என்னோட டிக்கெட் என்னோட பிரண்டு கிட்டே இருக்கு.அவன் தான் எனக்காக டிக்கெட்டை எடுத்தான். அவன் முன்னாடி உள்ள ஸ்டாப்பிலே இறங்கிட்டான். வேணும்னா கண்டக்டர்கிட்டே கேட்டுப் பாருங்க. கடைசியா அவனுக்குத் தான் இரண்டு டிக்கெட் போக மீதி சில்லறை கொடுத்தார்."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ உன்கிட்டே டிக்கெட் இல்லாததாலே பைன் கட்டு." என்றார் கறாராக!

இதை ஆச்சரியமாக பார்த்த கண்டக்டர், " சார்! டிக்கெட் எடுக்காத அந்த நாலு பசங்களும் வசதியானவங்க. ஆனாலும் அவங்கெல்லாம் ஒன்பது ரூபா கொடுத்து டிக்கெட் எடுக்கலே. அவங்களை விட்டுட்டீங்க. ஆனா கடைசியாக வந்த பையன் ஏழை. ஆனா அவன் சொன்னது உண்மை. இவனோட பிரண்டு இவனுக்காக டிக்கெட் எடுத்துட்டான். இவனை போய் பைன் கட்டச் சொல்றீங்களே, அது நியாயமா?" அந்த ஏழை மாணவனுக்காக பரிந்து பேசினார் கண்டக்டர்.     


"என்னப்பா ! நீ புரியாத ஆளாயிருக்கிரே. அந்த நாலு பசங்களோட அப்பாக்கள் ரொம்ப பெரிய பதவியிலே இருக்காங்க. அவங்களாலே எனக்கு கட்டாயம் ஏதாவது காரியம் ஆகும் அல்லது ஆதாயம் இருக்கும்.  அதுவுமில்லாமே அவங்களை பகைச்சுட்டா என்னோட வேலைக்கு ஆபத்து வந்தாலும் வந்துவிடும். ஆனா இந்த ஏழை பையனோட அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவராலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும் அவராலே என்னை எதுவும் பண்ண முடியாது. மேலிடத்திலே இந்த மாதிரி ஒண்ணு இரண்டு கேசுங்க பிடிச்சுக் கொடுத்தாத் தான் நான் இந்த பதவியிலே தங்க முடியும்.அதனாலே இந்த பையன் 'பைன் ' கட்டிட்டா விட்டுவிடுங்க. இல்லாட்டா போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லுங்க" என்று தன் கடமை தவறாத குணத்த்தை அந்த ஏழை பையனிடம் காட்டிச் சென்றான்.

*********************************************************************************************************************

No comments:

Post a Comment