Monday, 7 October 2013

தொழிலாளியான ஒரு முதலாளி - சிறுகதை - மதுரை கங்காதரன்

தொழிலாளியான ஒரு முதலாளி 


சிறுகதை 

மதுரை கங்காதரன்
எங்கிருந்தோ ஒரு வானொலியில் "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனைத்திந்திய வியாபாரிகள் சங்கம் கடுமையாக கண்டனம் " தெரிவிக்கும் செய்தியை அலறலுடன் தந்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் 

'இது நம்ம உணவகத்தில்' வழக்கம்போல் சாப்பிடுவதற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதை நல்ல முறையில் நடத்தும் திருப்பதி தனது ஹோட்டலுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களை புன்சிரிப்புடன் கண்ணால் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களை செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்கிடையில் அவருடைய கண்கள் வெளியில் யாரையோ பார்ப்பதற்குத் தேடிக்கொண்டிருந்தது.

அவர் எண்ணம் உண்மையாக்கும் வண்ணம் அவருடைய நண்பர் கந்தன் அவசரமாக வருவதை ஊகித்த்தவராய் விறுவிறுவென்று வெளியே சென்று சற்று உரத்த குரலில் 
"முதலாளி ! ஏன் இவ்வளவு வேகமாக போறீங்க? உடம்பை நல்லா பார்த்துக்குங்க. அதிகமா உழைச்சு ஆரோக்கியத்தை கெடுத்துகிறாதீங்க !" என்று உரிமையாக எச்சரித்தார்.

அவர் அந்த வார்த்தைகளை நன்றாகவே காதில் வாங்கிக்கொண்டு அதை ஆமோதிக்கும் விதமாக சற்று தலையை ஆட்டிவிட்டு நேரம் இல்லாத காரணத்தினால் அந்த இடத்தை கடந்து சென்றார்.

அவருடைய நினைவுகள் சற்று பின்னோக்கி அசைபோட்டது.

எப்போதும் திருப்பதி, கந்தனை 'முதலாளி, முதலாளி' என்றே கூப்பிட்டுப் பழக்கம். கந்தன் தொழிலில் சிறந்த நிர்வாகி. தொழில் உள்ள நெளிவு சுளிவுகளை அக்குவேறு ஆணிவேராய் திருப்பதிக்கு சொல்லிக்கொடுத்து தன்னைப்போல அவரையும் முதலாளியாக்கிப் பார்த்தவர். அந்த விசுவாசம் தான் இந்த 'முதலாளி' பட்டம்.

'முதலாளி' என்பது கந்தனின் பழைய பட்டம். இப்போது என்னவோ அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்க்கிறார். முதலாளி ஸ்தானத்திலிருந்து தொழிலாளியாக அவர் மாறியது ஒரு கொடுமையான நிகழ்ச்சி.

சூதாடித் தோற்றவர்கள், குடித்துக் கெட்டவர்கள், உறவினால் கெட்டுப் போனவர்கள், ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போன்றவர்களில் இவர் எந்த ரகம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

சில வருடங்களுக்கு முன் திருப்பதியும், கந்தனும் தனித்தனியாக சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் சிற்றுண்டிச் சாலை வைத்து வியாபாரத்தை வெற்றிகரமாக நல்ல முறையில் நடத்தி வந்தனர். அந்த மகத்தான வெற்றிக்கு பின்னால் அவர்கள் வழங்கி வந்த பழமையான உணவுவகைகளும் அதை சாப்பிட்ட  மக்கள் ஒருவித தெம்பையும்  சுறுசுறுப்பையும் தருவதாக உணர்ந்தது தான் காரணம்.  அதிலும்  முக்கியமாக  கேப்பை, கம்பு, கோதுமை மற்றும் உளுந்து சேர்ந்த உணவுப்பதார்த்தங்கள். மேலும் எளிய மக்களுக்கேற்ற மிக மலிவான விலையில், சுகாதாரணமான முறையில், நல்ல சுவையோடு நாக்கு ருசியோடு எளிமையான வழியில் மக்களுக்கு வழங்கி வந்தார்கள் . அவர்கள் செய்து வந்தது 'வியாபாரம்' இல்லை. ஒரு 'சேவை' என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் லாபம் அதிகமில்லாமல் எதோ கொஞ்சம் கிடைத்தால் போதும் என்று திருப்தியுடன் நிம்மதியுடன் நடத்தி வந்தனர். 

அவர்களின் அணுகுமுறை, நல்லெண்ணம், மலிவுவிலையில் நல்ல தரமான உணவுகளை வழங்கியதால் நாளுக்கு நாள் அவர்களின் புகழ் எந்தவித விளம்பரமில்லாமல் , பந்தா இல்லாமல் கொடிகட்டிப் பரவத் தொடங்கியது. சாப்பிடுவதற்காக மட்டுமின்றி பார்சலுக்காகவும் கூட்டம் கூட்டமாக அந்த இரு கடைகளில் மக்கள் முற்றுகையிட்டு வந்தனர். பலர் அந்த இரு கடைகளில் தான் சாப்பிடவேண்டுமென்று காக்கவும் செய்தனர்.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் பலவிதமாக அவர்களுக்கு பலவித ஆலோசனைகள், யோசனைகளை சொல்லி வந்தனர். அதற்க்கெல்லாம் சரியான பதிலை இருவரும் ஒரேமாதிரியாக சொல்லி வந்தார்கள். எப்படியென்றால் , தினமும் இருவரும் கடைகளை மூடிய பிறகு ஒரு பத்து நிமிடமாவது அன்று நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுருக்கமாக பரிமாறிக்கொண்டு விட்டுத் தான் தங்கள் வீட்டிற்கு செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

கந்தன் கடைக்கு வரும்  வாடிக்கையாளர் ஒருவர் சொன்ன யோசனை ஒன்று, 
"கடையிலே ஓஹோன்னு வியாபாரம் நடக்குது! ஆனா கடைக்கு வெளிச்சம் போதாது. ரொம்ப மங்கலாத் தெரியுது. பிரகாசமான டிஸ்கோ லைட்டுகளைப் போட்டு ஜெகத்ஜோதியாக எரிய விடுவது தானே?" என்பதற்கு 
"அதெல்லாம் எதுக்குங்க? இப்போ இருக்கிற மின்வெட்டு பிரச்சனையிலே அதிக லைட்டுகளை எரியவிடுறது அவ்வளவு நல்லதல்ல.அதில்லாம கரண்ட் பில் அதிகமாவரும். டீசல் செலவும் கூடும். அதெல்லாம் கட்டுபடியாகாது." என்று கூறிவிடுவார்.

திருப்பதி கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ,
"கடைய பெரிசா கட்டி, ஏ.சி ஆக்கி ஜமாய்ச்சுட வேண்டியது தானே !"

"பண்ணலாம். ஆனா அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட நீங்க  சாப்பிடுற உணவு பொருட்களின் மேல் தான் வச்சாகணும். அதிக விலைக்கு விற்கணும். அதெல்லாம் சரிபட்டு வராது. நம்மிடம் வருகிற 'கஷ்டமர்கள்' எல்லோரும் ஏழை எளியவங்க. அன்றாடம் சாப்பிடுற பொருட்களை அவர்களாலே அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் சாப்பிடுற கொஞ்சத்திலேயும் மண்ணு விழுந்திடும். அவர்கள் படும் அந்த கஷ்டத்தை என்னாலே பார்க்க முடியாது!" என்கிற ஆணித்தரமாக வந்த பதிலால் மேற்கொண்டு அவர்களை பேசவிடாமல் செய்து விடும்.

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' 'கிடைத்தவரையில் லாபம்' என்று பொதுவான வியாபார நோக்குள்ள மனிதனின் செயல்பாட்டுக்கு மாறாக அவர்களின் பதில் இருந்தது.       

எல்லாமே சரியாக, பிரச்சனையிலாமல் கதை நகர்ந்தால் சுவாரஷ்யம் வருமா? ஒருவரை ஹீரோவாக்க வேண்டுமென்றால் வில்லன்னு ஒருத்தர் இருக்கனுமில்லே. அந்த வில்லன் ஒருநாள் இரவு நேரத்தில் காரிலிருந்து வந்திறங்கினார்."டிரைவர், ராத்திரி வேலையாயிடுச்சு. இந்த ஏரியாவிலே டேஸ்டா சாப்பிடுறதுக்கு நல்ல கடை எதாச்சும் இருக்கா. கொஞ்சம் டிபரண்டா இருந்தா ரொம்ப நல்லது.ரொம்ப நாளாகவே நாக்கின் சுவை தெரியாமலே இருந்த ராஜாங்கம் தன் ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினார். அவர் ஒரு கோடீஸ்வரர். பணத்தை எதில் போட்டு லாபம் எப்படி அதிகம் அள்ளலாம் என்பது அவருக்கு அத்துப்படி. அதேபோல் ஒருவரை தன பேச்சு ஜாலத்தில் மயக்கி தன் காரியத்தை எப்படி சாதிக்கலாம் என்பதும் அவருக்கு கை வந்த கலை. தேன் தடவிய பேச்சு, மென்மையான வார்த்தைகள், சிரித்த முகம், அக்கறையான விசாரிப்பு இவைகள் அனைத்தும் பக்கா நடிப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் நம்பும்படியாக செய்யும் சாதூர்யம் அவரிடத்தில் பிறவியிருந்தே இருந்து வந்தது  எனலாம். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு வியாபாரத் தந்திரமிக்க நரி. இல்லையென்றால் ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர், இன்று எப்படி அவரால் கார், பங்களான்னு அதிக சௌரியங்களுடன் வாழமுடிகின்றது! "சார் .." என்று தலையைச் சொரிந்தார் டிரைவர்.
"என்னப்பா தலையை சொரியிரே. சும்மா சொல்லு. நல்ல கடை இருக்கா?"
"இருக்கு சார். ஆனா அந்த இடத்திலே நீங்க எப்படி உட்கார்ந்து சாப்பிடுவீங்கன்னு யோசிக்கிறேன்?"
"சாப்பிட இடமா முக்கியம்? செத்த நாக்குக்கு ருசி கிடைச்சா போதாது? எந்த இடமானாலும் பரவாயில்லை. நான் வரத்தயார்!" என்றார் ராஜாங்கம்.

டிரைவர் நேராக 'இது நம்ம உணவகத்திற்கு' வண்டியை விட்டார். கார் நிறுத்துவதற்கு அசௌகரியமாக இருந்தாலும் மிகுந்த சிரமத்துடன் ஒருவழியாக நிறுத்திவிட்டு அந்த கடைக்கு இருவரும் நுழைந்தார்கள். ஏற்கனவே டிரைவர் சொன்ன அத்தனை கண்டிசனுக்கும் கட்டுப்பட்டவராய் அவருடைய கௌரவத்திற்கு குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக அந்த கடையை பலமுறை சுற்றும்முற்றும் பார்த்தவாறு உள்ளே நுழைந்தார். மக்கள் சாப்பிடுவதற்கு இடம் பிடிப்பதை பார்க்கும்போது அங்கு 'மியுசிக்கல் சேர்' விளையாட்டு நடைபெறுவதுபோல் ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டது. அங்கு நடப்பது எல்லாமே அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. அவர்களின் நல்ல நேரம் தாமதமில்லாமல் இருவருக்கும் நல்ல இடத்தில் உட்கார இடம் கிடைத்தது.

எல்லாமே டிரைவர் தான் ஆர்டர் கொடுத்தார்.

"சார், இந்த அயிட்டம் நல்லா இருக்கும். அந்த அயிட்டம் அந்தமாதிரி ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்" என்று டிரைவர் பேச்சால் சொல்லுவதை ராஜாங்கம் தன் நாவின் சுவையால் உண்மையை உணர்ந்தார். டிரைவர் சொல்லியது  கொஞ்சமே  தான் என்பது அப்போது அவர் உணர்ந்தார்.
"பில் எவ்வளவு?" என்று கேட்டபோது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
"என்ன இவ்வளவு தானா? எப்போதும் நான் ஸ்டார் ஹோட்டல்களுக்குத்தான் போய் பழக்கம். அங்கு ருசியும் இருக்காது.மண்ணுமிருக்காது. ஆனா பில் மட்டும் ஆயிரக்கணக்கில்..ஆனா இங்கே இருக்கே.. ருசி..ஆஹா .. தேவாமிர்தம்ன்னு நான் கேள்விபட்டிருக்கேன்.ஆனா இப்போது தான் அதை ருசிச்சிருக்கிறேன்" என்று டிரைவரை புகழ்ந்து தள்ளினார். அவரே தொடர்ந்து

"நானும் எவ்வளவோ பெரிய பெரிய ஊர்லே பல இடத்திலே சாப்பிட்டுயிருக்கேன்.ஆனா இவ்வளவு விலை குறைச்சலிலே நல்ல ருசியோடு நான் சாப்பிட்டதேயில்லை. இந்த இடத்தை காட்டியதற்கு ரொம்ப நன்றி. இன்னொன்று முக்கியமா நான் இங்கே வர்ற மூணு மாசத்துக்குள்ளே  ஒரு நல்ல வியாபாம் தொடங்குற விசயமா தங்குறதா ப்ளான் போட்டிருக்கிறேன் . என்ன வியாபாரம்ன்னு இன்னும் முடிவு பண்ணலே. ஆனா அதிக லாபம் தரக்கூடிய வியாபாரமா இருக்கனும்னு குறியாக இருக்கிறேன். அது வரை மூன்று வேலைக்கும் இந்த கடையிலே தான் எனக்கு சாப்பாடு அரேன்ஞ் பண்ணிடு" என்று சொல்லி முடிப்பதற்குள்

"சார், இந்த ஒரு கடை மட்டும் இல்லே சார். இன்னும் கொஞ்ச தூரத்திலே இதேபோல இன்னொரு கடையும் இருக்கு. இங்கே எப்படி என்ன என்ன இருக்கோ அப்படியே அங்கேயும் இருக்கு" என்று சொன்னதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்.

"உண்மையாகவா? அப்படீன்னா இந்த கடைக்கு போட்டிக்கடைன்னு சொல்லு"

"அது தான் சார் இல்லை. இரண்டு பேரும் திக் பிரண்ட்ஸ். அவர்களிடையே போட்டி பொறாமை இது நாள் வரைக்கும் இருந்ததில்லை. ஒருவருக்கொருவர் உதவி செய்துக்குவாங்க. சில சமயத்திலே தங்களுக்கு வர்ற கஸ்டமர்களை கூட்டத்திற்குத் தகுந்தாற்ப்போல் மாறி மாறி திருப்பிடுவாங்க. பெரிய ஆர்டர் வந்தா இருவரும் சேர்ந்து தான் செய்து தருவாங்க" என டிரைவர் பேச பேச அவர் மனதில் வேறொரு யோசனையும் தோன்றியது.

நேரத்திற்குத் தகுந்தாற்ப்போல் இருகடைகளில் மாறி மாறி சாப்பிட்டு வந்தார். வித்தியாசமே தெரியாத அதே ருசி. நாட்கள் நெருங்க நெருங்க பலவிதமான வியாபாரத் திட்டங்களை பலமாக யோசித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.

அன்றும் வழக்கம் போல் டிரைவருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ராஜாங்கம்.

" சார். எவ்வளவு நாளைக்குத் தான் இப்படி இந்த மாதிரியிடத்த்திலே சாப்பிட்டுயிருப்பீங்க. உங்களுக்கு இருக்கிற பணத்திற்கும், வசதிக்கும் ஏன் இதேபோல் ஒரு கடையை வைக்கக் கூடாது? இப்போது நடக்கிற வியாபாரத்திலே 'பாஸ்ட் புட்' பிசினெஸ் தான் ரொம்ப லாபம் தரக்கூடியது. மக்களுக்கும் அத்தியாவசியமானது"  என்று சொன்ன வார்த்தைகளில் கிளம்பிய தீப்பொறியானது அவர் மனதில் பெரிய திட்டமாக எரியத் தொடங்கியது.

மறுநாள் அவருக்கே உண்டான் வியாபாரத் தந்திரத்தை செயல்படுத்த ஆரம்பித்தார். ராஜாங்கம் முதலில் திருப்பதி கடையினை குறி வைத்தார்.

" சார், நான் இந்த ஏரியாவிலே பதினைந்து வருமா கடை நடத்துறேன். ரொம்ப லாபம் இல்லாமே ஏழை எளியவங்களுக்கு ஒரு சேவையாக நினைச்சு கடமையை செய்யுறேன். உங்களோட கண்டிசனை ஏத்துக்க என்னாலே முடியவே முடியாது" என்று கறாரா சொல்லி முடித்தார்.

"நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க. நீங்க தினமும் தயார் பண்ணுகிற அத்தனையும் 20 % அதிகம் கொடுத்து தவறாம வாங்கிக்குறேன். அதை புதுசா தொடங்கும் என்னோட கடையிலே வச்சு வித்துக்கிறேன். ஒரு மணி நேரத்திலே உங்களுக்குண்டான பணம் கொடுத்துடுறேன். தினமும் மாங்கு மாங்குன்னு , லோ லோன்னு லோல் பட்டு கஷ்டப்படவேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். என்ன சொல்றீங்க?" என்று திருப்பதியை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்த போராடினார். முடிவில்

" சாரி சார். என்னை மன்னிக்கணும். நீங்க எத்தனை முறை கேட்டாலும் எவ்வளவு பணம் கொட்டிக்கொடுத்தாலும் இந்த வியாபாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தார்.

'தான் நினைத்தது சாதிக்க முடியவில்லையே' என்று வருத்தப்பட்டார். அனேகமாக அவருக்கு இது தான் முதல் தோல்வியாக இருக்கும். இருப்பினும் திடீரென்று வேறொரு முயற்சி செய்து வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டார்.

அடுத்த குறி கந்தன் கடைக்கு வைத்தார்.ராஜாங்கத்தின் 'ஆசை' என்கிற ராட்சச அலையில் அவர் அகப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

"என்னமோங்க. திருப்பதி என்னோட பால்ய நண்பன். அவன் ஒரு முடிவு எடுத்தார்னா அது சரியாகத் தான் இருக்கும். ஆனா எனக்கும் வயசாயிடுச்சி. தினமும் ஒரேமாதிரியாக உழைக்க முடியல்லே. ஆனா இதனாலே என் நண்பன் கடைக்கு பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு தான் என்னோட எண்ணம்" என்று தன் இயலாமையும் அபிப்பிராயத்தையும் எடுத்துரைத்தார்.

"கந்தன். நீங்க எதற்கும் பயபடாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். வர்ற ஒன்றாம் தேதியிலேயிருந்து உணவுகளை தயாரித்துக் கொடுத்திடுங்க. 20% அதிகமா பணம் வாங்கிக்குங்க. இந்தாங்க ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ்" அவர் கையில் திணித்து வெற்றிப் புன்னைகையோடு அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை மும்முரமாக சிந்திக்கத் தொடங்கினார்.

வழக்கம் போல் அன்றைய இரவில் இருவரும் சந்தித்தனர்.

"என்ன முதலாளி. அந்த பணக்கார ராஜாங்கம் சொன்ன கண்டிசனுக்கு ஒத்துக்கிட்டீங்க போலிருக்கே! எனக்கென்னமோ அவரோட பேச்சும் நடையும் சரியாத்தெரியல்லே. ஏதோ பெரிசா ஒரு சதி திட்டம் போட்டு உன்னை பாதாளக் கிணத்திலே தள்ளி அழிக்கப் பார்க்கிறார்ன்னு தோணுது" என்றார் திருப்பதி.

"ஏன் அப்படி நினைக்குறே. இது ஒரு நல்ல வாய்ப்பா ஏன் நினைக்கக் கூடாது!  நீயும் பேசாம நான் செஞ்சபடி செஞ்சுடு. ஒரு நாள்லே ஓடா உழைச்சி சம்பாதிக்கிறதை ஒரே மணிநேரத்திலே கிடைச்சுருதில்லே. மத்த நேரத்திலே வேற வியாபாரம் பண்ணலாம்" என்று சொல்லி முடிப்பதற்குள்

"முதலாளி, அது மட்டும் என்னாலே முடியாது. என் மனசுக்கு சரிப்படல்லே.நான் போயிட்டு வர்றேன்" என்று என்றைக்குமில்லாமல் பாதியிலே பேச்சை நிறுத்திவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

ஒன்றாம் தேதி வந்தது. வழக்கமாக வரும் கந்தன் கடை வாடிக்கையாளர்களிடம்
"இன்று முதல் இங்கு எதுவும் கிடைக்காது. புதுசா தொடங்கிய அந்த கடைக்கு என்னோட அத்தனை உணவுப்பொருட்களையும் கொடுக்க முடிவு செய்துட்டேன். உங்களுக்கு வேணும்கிறதை அங்கு வாங்கிங்க" என்று திருப்பிவிட்டார்.

புதிய கடை ! பகட்டான தோற்றம். பிரகாசமான விளக்குகள். ஏ.சி வசிதிகள் இன்னும் பல சௌரியங்களுடன் இருந்தது. மக்களும் மிகவும் சந்தோசமாக அனுபவித்தனர். முதலில் மலிவான விலையில் கொடுத்தவர் , போகப்போக விலையினை உயர்த்தினார். தினமும் சாப்பிடும் மக்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. சிறிது நாட்களிலே அனைத்தும் மூன்று மடங்கு விலையில் விற்பனையாகியது. இதை எல்லோரும் கந்தனிடத்தில் ஒரு குறையாகவே இப்படி சொல்லிவந்தனர்.

"முதலாளி. நீங்க கடை நடத்தியபோது விலை குறைவா இருந்தது. இப்போது மூணு மடங்கு விலை கொடுத்து சாப்பிடுறோம்.திருப்பதி கடையிலே கூட்டமோ கூட்டம். அவரு பாவம் முடிஞ்ச வரைக்கும் கொடுக்கிறாரு. மேலும் சீக்கிரமே தீர்ந்திடுது. அடுத்து நாங்க இந்த கடையிலே தான் அதிக பணம் கொடுத்து சாப்பிடவேண்டியிருக்கு" என்று பலர் கூறியதை ராஜாங்கத்திடம் கேட்டே விட்டார்.

" சார், இது உங்களுக்கே சரியா இருக்கா? நான் விலை குறைவா உங்களுக்கு கொடுக்கும் பொருட்களை மூன்று மடங்கு விலைக்கு விக்கீறீங்க. அது ரொம்ப அநியாயம்" என்று பொறுமினார்." இங்கே பாரு கந்தா, இது என்னோட கடை. பல லட்சம் முதல் போட்டு செலவு செஞ்சு  கட்டிய கடை. அதையெல்லாம் எப்படி எடுக்கிறது? இவ்வளவு லாபம் வச்சு வித்தாத் தான் ஒரு வருசத்திலே போட்டதை எடுக்கமுடியும். பின்னே எப்படி கோடி கோடியா சம்பாதிக்கிறது? உன்னைப்போல வியாபாரம் பண்ணினா ஆயுசுக்கும் கஷ்டம் தான். நீ உன் வேலையைப் பார். எனக்கு எது எது எப்போ எப்போ செய்யனும்ன்னு தெரியும். இந்த வியாபாரத் தந்திரம் உனக்குத் தெரியாது" என்று அவருடைய கோரிக்கையை முற்றிலும் நிகாரித்துவிட்டார்.

வேறு வழியில்லை என்று வாயை மூடிக்கொண்டு தொடர்ந்து சப்ளை செய்து வந்தார்.

வழக்கம் போல இரவு சந்திப்பிற்கு காத்திருந்தார் முதலாளி என்ற கந்தன். அவருக்குத் தான் ஒரு மணிநேரத்தில் பணம் கிடைத்துவிடுகிறதே! மீதி நேரம் பொழுது போக்கும் நேரம் தானே? இருவரின் சந்திப்பு நேரம் வந்தது.

"என்ன முதலாளி ! எப்படியிருக்கீங்க?"
"நல்லா இருக்கேன். கை மேலே பணம். குறைஞ்ச உழைப்பு. கவலையில்லாம இருக்கிறேன். இப்போதாவது உன்னுடைய முடிவு மாத்திக்கிறதா உத்தேசம் இருக்கின்றதா?
"முதலாளி அது பத்தி பேச வேண்டாம். மற்ற விசயத்தைப் பேசுவோம்" என்று பொதுவாக பேசிவிட்டுப் பிரிந்தனர்.

விலை அதிகமாக இருந்தாலும், பகட்டான தோற்றத்திற்காகவும், ருசிக்காகவும் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அலை மோதியது. ஆகையால் கந்தனின் தினமும் சப்ளை செய்யும் அளவு அவருக்குப் போதவில்லை. கந்தனிடம் எப்படியும் தினச் சப்ளை அளவு இருமடங்கு வாங்கவேண்டும் என்கிற திட்டம் போட்டார். மீண்டும் சதிவலையை விரித்தார். இப்போது அவர் 'சேம் சைடு கோல்' போட்டார்.

ஒரு நாள் ராஜாங்கம் அவசரம் அவசரமாக கந்தனிடம் சென்று "கந்தா, நாளை முதல் ஒருவாரத்திற்கு எந்த சரக்கும் எனக்கு வேண்டாம். நான் சொல்லும்போது கொடுத்தல் போதும்" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்."சார், என்ன சொல்றீங்க. ஒரு வாரத்திற்கா? என்னோட செலவுக்கு இந்த வியாபாரத்தை நம்பித் தான் இருந்தேன். இப்போ திடீரென்று இப்படி சொன்னால் எப்படி? செலவுக்கு நான் எங்கே போவேன்? இந்த ஒரு வாரத்திற்கு நான் எப்படி இந்த வியாபாரம் பார்ப்பேன்? நான் வித்தாலும் யாரும் வாங்க மாட்டாங்களே ! ஆமா சார் நான் தெரியாமத் தான் கேட்கிறேன்.  எதற்கு இந்த அதிரடி மாற்றம்?" ஒரு குழந்தைத்தனமாக கேட்டார்.

"அது ஒண்ணுமில்லே. நீ சப்ளை செய்யும் அளவு உடனே தீர்ந்துவிடுகின்றது. எனக்கு இப்போது சப்ளை அளவு போல இரு மடங்கு வேண்டும். காற்றுள்ள போதே வியாபாரத்தை கூட்டி அதிக லாபம் சம்பாதிக்கனுமில்லே. ஒவ்வொருநாளும் எனக்கு லாபம் வர்றது விட்டுப்போகுது ! "

"இதோ பாருங்க இப்போது இருக்கும் அளவுக்குத்தான் என்னிடம் வசதி இருக்கின்றது.அதிக அளவு சப்ளைக்கு நான் எங்கே போவேன்?"

" எங்கேயும் போகவேண்டாம். என்னோட இடத்துக்கு வாங்க. எல்லா வசதியும் செஞ்சுத் தர்றேன். நீங்க ரெண்டு மணி நேரம் மட்டும் மேற்ப்பார்வை பார்த்தாப் போதும். மீதி நேரம் உங்க விருப்பப்படி நடந்துக்குங்க. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்கிருங்க. நான் இப்போது எவ்வளவு பணம் கொடுக்கிறேனோ அது தான் கிடைக்கும். அதிகம் கேட்டால் 'உன்னோட சப்ளையே வேண்டாம். எப்படி வசதி?"சார், அது மட்டும் சொல்லிடாதீங்க. எனக்கு இந்த தொழில் தவிர வேறு ஏதும் தெரியாது. உங்க இஷ்டப்படியே அங்கு வந்து வேலை செய்யுறேன்" என்று வேறு வழி தெரியாமல் ஒத்துக்கொண்டார். இந்த வேளையில் தான் தன் நண்பன் திருப்பதி இந்த விஷயத்தில் எடுத்த முடிவு கட்டாயமாக நினைவுக்கு வந்திருக்கும்.

அன்று முதல் கந்தன் ஒரு தொழிலாளி போல் தினமும் சரியான நேரத்தில் அவசரம் அவசரமாக திருப்பதியின் கடை வழியாக செல்வது வழக்கம். திருப்பதியும் அவர் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு தன்னுடைய கடைக்கு வருமாறு அழைத்தும் கந்தன் வரவில்லை. அது மிகவும் கௌரவக் குறைச்சலாகவும், தங்களுடைய நட்புக்கு களங்கம் வந்துவிடுமோ என்றும் பயப்படார்.

இவ்வளவும் திருப்பதியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. சற்று பெருமூச்சியுடன் அவரது கடையை கவனிக்கச் சென்றுவிட்டார்.

முதலாளிகளின் ஆசை அளவோடு இருக்குமா? இன்னும் அதிகம் .. இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கவேண்டும் என்று இருக்கின்றவர்களை சக்கையைப் பிழிவது தானே இயற்கை. அதற்கு இந்த ராஜாங்கம் விதிவிலக்கல்லவே. ஒரு மணி நேர உழைப்பு , இரண்டு மணி நேரமானது. இரண்டு..மூன்று..என்று கடைசியில் பன்னிரண்டு மணிநேரம் அதே சம்பளத்தில் வேலைகளை வாங்கத் தொடங்கினார்.

இதனால் தினமும் இருவரின் சந்திப்பு குறைந்து வந்தது. பிறகு அவ்வப்போது நடந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

"முதலாளி, இப்படி துரும்பாட்டம் இளைச்சிப் போயிட்டீங்களே. முகம் கலையில்லாமல் வாடி வதங்கி போயிருக்குதே"

"அட போப்பா. நீ ஒண்ணு. என்னை இனிமே முதலாளின்னு கூப்பிடாதே. நான் இப்போ ஒரு கூலித் தொழிலாளி. இன்னும் சரியா சொல்லப் போனால் அந்த பணக்காரனுக்கு அடிமைத் தொழிலாளி. நான் இப்போ மனதளவிலும், உடலளவிலும் படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. என் போல கஷ்டம் யாரும் படக்கூடாது. என் வாழ்க்கை சின்ன வியாபாரம் பண்ணும் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும். அப்போ நீ எவ்வளவோ தடுத்தும் நான் கேட்கவே இல்லை. பின் விளைவுகளை யோசிக்காம நான் முடிவு எடுத்தது ரொம்ப தப்புன்னு இப்போ உணர்றேன். அந்த புதுப்பனக்கரனின் வாய்ஜாலத்தில் மயங்கி இப்போ வாழ்கையில் பிடிப்பில்லாம நடைபிணமா அலையுறேன். நான் செஞ்ச காரியம் எவ்வளவு மடத்தனமானது. நல்லவேளை அந்த பாதாளக்குழிக்குள்ளே உன்னையும் தள்ளப் பாத்தேனே! நீ விழிச்சு சுதாரிச்சுட்டே. என்னை போல நீயும்  அந்த சுழியிலே மாட்டியிருந்தா.. நினைச்சுப்பார்கவே பயம்மா இருக்கு. வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைச்சு நாட்டு நடப்பு தெரியாம என்னோட சுதந்திரத்தையும், உரிமையும் இழந்து அவரின் கைப்பொம்மையாய் மாறிவிட்டேன். ஒரு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ருசியான உணவுகளை கொடுத்துக் கொண்டிருந்தவன் இப்போ.. என் பொருளுக்கு இந்த பணக்காரன் சொல்வது தான் விலை. மக்களும் வேறு வழியில்லாமல் வாங்கியேத் தீர வேண்டுமென்கிற தலையெழுத்தாகிவிட்டது. லோக்கல் முதலாளிகங்களோட ஆதிக்கமே சமாளிக்க முடியல்லேயே, இன்னும் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கிற இந்த அரசாங்கத்தின் முடிவினாலே என்னைப்போல எத்தனைப் பேரோட வாழ்க்கை சீரழியப்போகுதோ. அது நினைச்சா தான் என் கண்ணு கலங்குது. அவங்களோட குழந்தை குட்டிகள் என்ன பாடுபடப்போகுதோ? இதனாலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போறாங்களோ?ன்னு தெரியல்லே. இந்த மாதிரி பணக்காரங்களோட ஆசை அடங்கப்போறதில்லை அதனாலே விலைவாசி ஏறுவது நிற்கப் போறதில்லை. ஆனா ஒன்னுமட்டும் உறுதி. இதுபோல செயல்களை ஆரசாங்கம் ஊக்குவிச்சா மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகத் தான் போகும். அதற்கு என்னோட வாழ்கை ஒரு உதாரணம். இதனாலே பலர் தற்கொலைக்கும் ஆளாக நேரிடும்.

ஒரு முதலாளி என்னை எப்படி அடிமையாக்கினான்? நான் எப்படி அவங்களோட ஆசை வலையிலே மாட்டிக்கிட்டேன்னு எல்லோருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும். இப்படி ஏமாறுவது நான் தான் கடையாக இருக்கவேண்டும். மக்களோட நல்ல வாழ்க்கைக்காக தயவுசெய்து நீயும் தப்பித்தவறி இந்த சகதியிலே சிக்கிடாதே. முடிந்தால் பிரச்சாரம் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்து. அதுக்கு நான் ஒன்றும் கவலைப்பட மாட்டேன். அவமானமாகவும் நினைக்க மாட்டேன். இந்த பாடம் இத்தகைய காலகட்டத்துக்கு கட்டாயம் வேண்டும்.அப்போதாவது எல்லோருக்கும் விழிப்புணர்வு பிறக்கட்டும். இதுவே அரசாங்கத்திற்கும் மக்கள் சமுதாயத்திற்கும் நான் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்' என்று தன மனதில் புதைந்து கிடந்த , புளுகிக்கிடந்த வார்த்தைகளை காட்டருவியாய்க் கொட்டினான்.

இவற்றையெல்லாம் திருப்பதி அமைதியாக கேட்க அவனின் இருதயத்தில் ஒருவகை சுமை ஏறுவதை உணர்ந்தான். இந்த சுமையை இறக்கவேண்டுமென்றால் நாளை முதல் "சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நாட்டிற்கும், மக்களுக்கும்" நல்லதல்ல என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்.

இன்னும் கந்தனின் குமுறல் அடங்கவில்லை போலும். கடைசியாக " ஒரு முதலாளியோ, ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ தாமாகவே முன்வந்து பல சலுகைகளோ அல்லது பண உதவியோ கொடுக்கிறார்கலென்றால் நிச்சயமாய் அது மக்களின் வாழ்கையிலே மண்ணு விழப்போகிறதுன்னு அர்த்தம். அதை நல்லாவே புரிஞ்சுகிட்டேன். புலி போல சுதந்திரமா உலா வந்துகிட்டே இருந்தேன். நானே வழியப்போய் புலிக்கூன்டிலே அகப்பட்டுக்கொண்டேன். இப்போ சர்கஸ் புலிபோல அந்த பணக்கார ராஜாங்கம் ஆட்டிப்படைக்கிறான். இந்த கதி யாருக்கும் வரக்கூடாது" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு நாளைய விடிவுக்கு விடை தேட விடை பெற்று சென்றார்.

வழக்கம் போல் கந்தனை  " முத ..... " முதலாளி என்று கூப்பிட எண்ணினான். ஆனால் கூப்பிடலாமோ வேண்டாமோ என்று ஒருவித முழிப்புடன் பேச்சில்லாமல் நகர்ந்து சென்றார்.

******************************************************************************  

No comments:

Post a comment