Pages

Wednesday, 28 August 2013

சொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் ) சிறுகதை


சொல்ல துடிக்கும் காதல்


 (மறைந்தவள் வந்தாள் )
சிறுகதை 
மதுரை கங்காதரன் 

'மனைவி சாரதா' இல்லாமல் சுந்தரின்  வீடு வெறுமையாக காணப்பட்டது.  

சாரதா இருந்தபோது ,  சுந்தர் காலை ஐந்தரை மணிக்கே சுறுசுறுப்பாய் எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே சூடான சுவையான தேநீர் ஒரு புறம் தயார் செய்ய மறுபக்கத்தில் தன் இரு குழந்தைகளான  மாலா மற்றும் கோபியை அணைத்தபடி படுத்திருக்கும் அவள் மனைவி சாரதாவை எழுப்ப சுந்தர் தனது மெல்லிய குரலில் "டார்லிங் , யுவர் டேஸ்டி டீ இஸ் ரெடி " என்று சொல்வதோடு பேஸ்டுடன் தண்ணீரில் நனைந்த பிரஷ் ஐ அவள் கையில் கொடுத்து " கெட் அப் டார்லிங் " என்று எப்போதும் சாரதாவை எழுப்புவது வழக்கம்.


அதற்கு அவள் சற்றும் தாமதிக்காமல் எழுந்து கொண்டே  " உங்களை எத்தனை தடவை சொல்றது ! நம்ம குழந்தைங்க பெரியவங்காளாக ஆயிட்டாங்க. இன்னும் நீங்க நேத்து தான் நமக்கு கல்யாணமானது போல 'டார்லிங்.. டார்லிங்' என்று கூப்பிடாதீங்கன்னு. இதை  மத்தவங்க கேட்டா நம்மளை பத்தி என்னான்னு நினைப்பாங்க ? முக்கியமா நம்ம குழந்தைங்க என்ன நினைப்பாங்க?"

"சரி டார்லிங்.. இனிமே நான் அப்படி கூப்பிட மாட்டேன். ஆனா நீயும் என்னை 'டார்லிங்'ன்னு கூப்பிடக் கூடாது ..சரியா ?"

"அது மட்டும் என்னால முடியாது டார்லிங். அது நான் சாகிற வரைக்கும் நடக்காது. மத்தவங்க என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நாம இப்படியே இருப்பேம். அப்படி கூப்பிடும்போது நாம் ஒருவித அன்னியோன்னியத்தை உணர்கிறோம். அதனாலே ஏன் ? மத்தவங்களைப் பத்திக் கவலைபடனும் ?" என்று சொல்லிவிட்டு பல்லைத் தேய்த்துவிட்டு  தேநீரை சுவைத்துக் கொண்டே சாரதா ..

" என்னமோ டார்லிங். நீங்க டீ போட்டு அதை உங்க கையாலே கொடுத்து அதை நான் குடிக்கிற போது அன்னைக்கு முழுதும் எனக்கு சுறுசுறுப்பும், தெம்பும், புத்துணர்ச்சியை தருது. காலையிலே எழுந்து டீ போட்டுத் தர்றது உங்களுக்கு கஷ்டமா இருக்குதா? உங்களை இந்த அளவுக்கு வேலை வாங்குவேன்னு நீங்க நினைச்சதுண்டா ? "

"என்ன டார்லிங் அப்படி சொல்லிட்டே ! உன்னோட வேலை நான் செய்யக்கூடாதா ? என்னுடைய பிரியத்தை இதன் மூலம் காட்டுறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதேன்னு சந்தோசபடுறேன் . இதுக்கும் மேலேயும் நான் ஏதாவது செய்யனும்னாலும் சொல்லு டார்லிங் நான் செய்யுறேன். என்னோட உயிரே நீ தான். நீ எது சொன்னாலும் செய்தாலும் சரியா இருக்கும். அதுவும் நம்ம குடும்ப நன்மைக்காக இருக்கும். நீ எது செய்யச் சொன்னாலும் எனக்கு நோ அப்ஜக்சன் !  "

" டார்லிங் ! உண்மையில்  நான் உங்களை ஹஸ்பண்டா கிடைக்க ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்"


"இல்லே டார்லிங் ! நான் தான் உன்னை அடையுறதுக்கு கொடுத்து வைச்சுருக்கிறேன்"  என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான் சுந்தர்.

உண்மையில் சாரதா காட்டும் அன்புக்கு என்றைக்குமே  எல்லோரும் மகிழ்ச்சி தான்.. 

அப்படி இருந்த சுந்தருக்கு இன்றைக்கு என்னவாயிற்று ! காலை ஏழு மணியாகியும் சோம்பேறியாய்ப் படுத்திருந்தான்.


அதைப் பார்த்த அவனின் மகள் மாலா தன் தம்பியிடம் " கோபி, அப்பா முன்னைப்போல இல்லை. ரொம்பவே மாறிட்டார். அதுவும் தலைகீழாக ! முன்னே எல்லாம் ஹோட்டலுக்கும், சினிமாவுக்கும், கடைக்கும் நாம சொல்றதுக்கு முன்னாடி அவரே அம்மாவையும், நம்மையும் மகிழ்ச்சியோடு கூட்டிட்டுப் போவார். வீடு சுத்தமாக வைத்துக் கொள்வதாகட்டும், படிப்பு சொல்லித் தருவதாகட்டும், துணிகளுக்கு அயன் செய்வதாகட்டும், அம்மாவோடு சேர்ந்து விதவிதமான சமையல் செய்வதாகட்டும் எப்பவும் பம்பரம் போல சுத்தி சுத்தி வந்து செய்வாரு. ஆனா இப்போ நம்ம அப்பாவா இப்படி மாறிட்டாருன்னு நினைக்கத் தோணுது. எதுலேயும் ஒரு பிடிப்பு இல்லாம ரொம்பவே மாறிட்டாரு. அப்பாவைப் பார்த்தா பாவமா இருக்கு. இந்த நிலைமையிலே அவருக்குச் சுமையா நாம இருக்கிறதா நினச்சா அதைவிட கஷ்டமா இருக்கு." என்று எதுவும்  செய்வதறியாமல் வருத்தமாக சொன்னாள் .

"மாலா அக்கா ! அம்மா இருக்கும்போது எல்லாமே நல்லாத் தான் நடந்து வந்தது. இப்ப அம்மா இல்லாம அப்பா ரொம்பவே சோர்ந்திட்டார். அக்கா, அம்மா வருவாங்களா ? 


" கோபி, நீ வேணும்னா பாரேன் . கட்டாயம் அம்மா வந்தே தீருவாங்க. அதிலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அம்மா, நம்ம அப்பாகிட்டே எவ்வளவு பாசமா இருந்தவங்கன்னு நமக்கு நல்லாவேத் தெரியும். நமக்காகட்டும் , அப்பாவுக்காகட்டும் ! யாருக்காவது ஒண்ணுன்னா எவ்வளவு துடி துடிப்பாங்க. அப்பா கண்ணுலே தூசி விழுந்து கண்ணீர் வந்தாலும் பொறுக்காது அம்மாவுக்கு . 'ஏன் ? அழுறீங்க. டோன்ட் வொரி ! எது வேண்டுமானாலும் நான் பார்த்துக்கிறேன்னு' தைரியம் கொடுப்பாங்க. எல்லாரையும் அணு அணுவா கவனிச்சுக்குவாங்க. உடம்புக்கு ஒண்ணுன்னா சரியாகிற வரைக்கும் விடாம நல்லா பார்த்துக்குவாங்க. நம்ம மேலே அவ்வளவு அக்கறை !. இந்த மாதிரி அம்மா கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்கனும். 

அப்பா கூட இப்படி அம்மாவைப் பற்றி பலமுறை நம்ம கிட்டே சொல்லியிருக்காங்க. அதாவது 'என்னோட லைப்லே நான் 'ஜீரோ' வாக இருந்த என்னை ஹீரோவாக, ராஜாவாக மாத்தினதோடு இல்லாம அந்தஸ்து கூட்டி எல்லோருக்கும் முன்னாலே கௌரவமா நிமிர்ந்து நடக்க வச்சது உங்க அம்மா' தான்னு எவ்வளவு பெருமையா பேசுவாரு. எங்கே போனாலும் நம்மையும் அழைச்சுட்டு போவாங்க. அவங்க ரெண்டு பேரும் நம்ம கிட்டே காட்டின அன்பு இந்த உலகத்திலே வேறு யாராலேயும் காட்டியிருக்க முடியாது" என்று  கடந்த காலத்தை ஒரு முறை நினைத்துப் பார்த்து பேசினாள் மாலா.

"ஆமாம் அக்கா. யாருக்காவது கொஞ்சம் இருமல், காய்ச்சல் வந்தாப் போதும். உடனே தெர்மா மீட்டரை வாயில் சொருகி ஓ ... 99.5 டிகிரி இருக்கு. கையோடு டாக்டர்கிட்டே காட்டி தகுந்த மருந்து மாத்திரை ஊசி போட்டு வந்திடுவாங்க. டாக்டரும் அவங்களை நல்லாவே பாராட்டுவாங்க. எப்படீன்னா  "பரவாயில்லையே, நோய் சின்னதா இருக்கும் போதே வந்திடுறீங்களே, உங்களைப் போல எல்லோரும் இருந்தா டாக்டருக்கு டென்ஷன் மிச்சம். உங்களுக்கும் அனாவசிய செலவுமிருக்காதுன்னு சொல்லுவாரு." என்று கோபி ஒப்பித்தான்.

"அதுமட்டுமா கோபி ! நேரத்திற்கு வித விதமான சத்துள்ள காய்கறிங்க, கம கமன்னு மணக்கும் சாப்பாடு, ருசியான டிபன் செஞ்சு கொடுப்பாங்க. அதுவுமில்லாம தவறாம பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலே கலந்து கொண்டு டீச்சர்கிட்டேயும், பிரின்சிகிட்டேயும் நாம எப்படி படிக்கிறோம்?ன்னு அக்கறையா கேட்பாங்க. டீச்சர்கிட்டே பல   சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. ரொம்ப சிக்கனமா இருப்பாங்க , ஆனா தேவையானவற்றை வாங்காம இருக்கமாட்டாங்க. வாங்கினவற்றை நல்லாவே பராமரிப்பாங்க" அம்மாவின் பெருமைகளை அடுக்கினாள் மாலா.

" ஆமாம் அக்கா, அம்மா இருக்கும்போது அப்பா நம்மளை எப்படியெல்லாம் கவனிப்பாங்க. ஸ்கூலுக்கு முடித்து வந்த பின்னே பைகளை செல்பில் வைத்து டிபன் பாக்சை கழுவி நமக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து பாடங்களில் இருக்கும் சந்தேகத்தை அழகாக புரியும்படி எளிதாக சொல்லிக் கொடுக்கிறதிலே அப்பாவுக்கு நிகர் அப்பாதான். அம்மா மேலே அப்பாவுக்கு அலாதியான பிரியம்"

" ஆமா கோபி! அதுக்கு மேலே அப்பாவுக்கு எந்தவித கெட்ட பழக்கமில்லை என்பது தான் ஆறுதலான விஷயம். அப்படி கெட்ட பழக்கம் ஏதாவது இருந்திருந்தா அம்மா இல்லாத இந்த நாள்லே நம்மையெல்லாம் மறந்து என்னென்னமோ செய்துட்டிருப்பார். அதனாலே கோபி, நம்மளாலே அப்பாவுக்கு எந்த தொந்தரவும் வராம பார்த்துக்குவோம் சரியா.." என்று மாலா சொல்ல அவனும் தலையாட்டினான்.

மீண்டும் "அக்கா, அம்மா வருவாங்களா ?"

" கட்டாயமா ! அம்மா, நம்ம மூவரையும் அவங்க கண்ணுக்குள்ளே வச்சு எவ்வளவு காபந்து பண்ணுனவங்க. இந்த மாதிரி பாசமா இருந்தவங்க நம்ம எல்லாரையும் விட்டுட்டுப் போக அவங்களுக்கு மனசு வருமா ? அவங்க கட்டாயம் வருவாங்க. பழையபடி சந்தோசமா இருக்கச் செய்வாங்க !".

"அக்கா, நீங்க இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க. அப்படி நடந்தா எனக்கு மகிழ்ச்சி தான் " இவ்வளவு நேரம் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே  சுந்தர் அவசரம் அவசரமாக எழுந்து சமையலறைக்குச் சென்று விறு விறுவென்று இட்லி வேக வைத்து சட்னி அரைத்து குழந்தைகள் இருவரையும் சாப்பிட வைத்து டிபன் கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் வழக்கம் போல வேலைக்கு கிளம்பிச் சென்றான்.

அன்று சனிக்கிழமையாதலால் குழந்தைகள் வருவதற்கு முன்பே சீக்கிரமாக சுந்தர் வீட்டிற்கு வந்து விட்டான். வழக்கத்திற்கு மாறாக மிகவும் அசதியாக கட்டிலில் படுத்துவிட்டான். சிறிது நேரம் தான் தூங்கியிருப்பான் அவனை யாரோ அன்னியோன்னியமாக எழுப்பும் ஒரு உணர்வு. நம்பவே முடியாதபடி அவன் கண்ணெதிரே அவள் மனைவி சாரதா! கண்களை நன்றாக கசக்கிப் பார்த்தான்.

"என்ன டார்லிங்! இவ்வளவு ஆச்சரியமா பார்க்குறீங்க? நான் வரமாட்டேன்னு நீங்க நினைச்சுட்டீங்களா? இதோ உங்க முன்னாடி உங்க டார்லிங்.." என்று மென்மையான இனிய குரலில் சுந்தரை எழுப்பினாள் சாரதா.

அவன் தன் கண்களை அகல விரித்து "டார்லிங்...  நீ.. நீ..."

" நான் ..நானே தான். இந்த நேரத்தில் என்ன தூக்கம்? ஏதாவது உங்க உடம்புக்கு.."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை"

" ஏன் ? வீடு இவ்வளவு இருட்டா இருக்கு? சன்னலைத் திறந்து காற்றோட்டமா வச்சுக்கக் கூடாதா? சற்று உரிமையாக கட்டளையிட்டாள் சாரதா.

கொஞ்சமும் தாமதம் செய்யாது சன்னல்கள் அத்தனையும் திறந்துவிட்டு சில்லென்று காற்று வெளியிலிருந்து உள்ளே வருமாறு செய்தான் சுந்தர்.

" காலண்டர்லே நான் கிழித்துவிட்டுப் போன தேதி வரை அப்படியே இருக்கு. தேதியை  கிழிப்பதற்கு கூட நான் வந்து சொல்ல வேண்டுமா?"

உடனே காலண்டரின் தேதிகளை கிழித்து அன்றைக்கு நடக்கும் தேதிக்கு கொண்டு வந்தான் சுந்தர். அந்த அறையை விட்டு சமையலறையில் நுழைந்தாள் சாரதா.


                          

"ம் ... எவ்வளவு ஒட்டடை ! மிக்சி, கிரைண்டர், ஸ்டவ் எல்லாம் நான் இருக்கும்போது துடைத்தது வைத்ததோடு சரி. அதுக்குப் பிறகு எதுவுமே பண்ணலே போலிருக்குதே !"

மட மடவென்று சமையலறையில் ஒட்டடையடித்து , அங்குள்ள எல்லா சாமான்களையும் பளபளவென்றாக்கினான். 

" சூப்பர், வெரி நைஸ் ! இப்ப எப்படி இருக்கு பார்க்கிறதுக்கு! இப்போ சமையலறை ஓகே. ஆனா துணிமணிங்க ஆங்காங்கே இறைஞ்சிருக்கே. நல்லா அயன் பண்ணி மடித்து பீரோவில் வைப்பதில்லையா? செஞ்ச வேலை எல்லாமே மறந்து போச்சு இல்லையா?"

கொஞ்சம் கூட நேரம் வீணாக்காமல் எல்லாவற்றையும் அயன் பண்ணி மடித்து பீரோவில் வைத்தான்.



"வெரி குட் .. இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கிற நீங்க ஏன் இப்படி சோம்பேறியா மாறீட்டீங்க. எல்லாமே நான் சொல்லி சொல்லி செய்ய வேண்டுமா? ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லுறேன். நான் இல்லாத போதும் இருக்கிறதா நினைச்சுக்குங்க. எல்லாமே பழையபடி சந்தோசமா நடக்கும். சரி..சரி ..குட்டிங்களோட புத்தகங்கள் ஏன் அட்டை போடாம லேபிள் ஒட்டாம இருக்கு?"

"அது வந்து... அது வந்து.. சரி போனது போகட்டும். இதோ கொஞ்சநேரத்திலே எப்படி முடிக்கிறேன்னு பாரு" என்று சொல்லியபடி அவன் கைகள் அவளைப் பார்த்துக்கொண்டே அருமையாக அட்டைபோட்டு , லேபிள் ஒட்டினான்.

"நேம், ஸ்டாண்டர்டு, செக்சன், ஸ்கூல் பேரு எழுதுங்க. உங்க எழுத்து தான் குண்டு குண்டா அச்சடித்தாப் போல அழகா இருக்குமே. எல்லாத்துக்கும் எழுதி முடிங்க"

அவள் சொன்னது போல அழகாக எழுதி அடுக்கி வைத்தான்.அவளது பார்வை அடுத்ததிற்குத் தாவியது.



" ஆமாம், இந்த டி.வி, வாசிங் மெசின், டைனிங் டேபிள் இப்படி அழுக்கு அடைஞ்சிருக்கு. இதையெல்லாம் சுத்தம் செய்வதற்கு சாமான்கள் பலது வச்சிருப்பீங்களே"

ஆமாம்.. என்று தலையாட்டிக்கொண்டே திருப்புளி, கொறடு, ஸ்பானர் ஆகியவற்றைக்கொண்டு அனைத்தையும் டகடகவென்று கழற்றி நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பொருத்தி புத்தம் புதிதாக்கினான். அதை செய்து முடிக்க தொடர்ந்து.. " ஆமாம், ஏன் இந்த லைட் எரியவில்லை? பேன் சுத்தவில்லை? எத்தனை நாளா இப்படி இருக்கு? இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்துக்கு ஏன் என்னை சொல்லும்படியா வைச்சுகிறீங்க? இதனாலே தான் நான் என்னவோ உங்களை தலையானை மந்திரம் இல்லே இல்லே மெத்தை மந்திரம் சொல்லி என்னோட முந்தானையிலே முடிச்சு வைச்சிருக்கிறதா சொல்றாங்க!" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள் சாரதா.

அவள் சொன்ன்னது தான் தாமதம் . டெஸ்டரை எடுத்து லூசாக இருந்த வயரை சரி செய்து லைட்டை எரிய விட்டான். பேனை சுற்றவிட்டான்.

"ஓகே..ஓகே.. பாத் ரூம்லே  ஊற்றி, பிளிச்சிங் போட்டு தேய்த்து சுத்தமா வைச்சுருக்காப்போலே இருக்கு. ரொம்ப நல்லது.அது சரி குட்டிங்க சைக்கிள்  எடுத்துக் கொண்டு போகலையா? அதுவும் ஏதாவது சரி செய்யனுமா?"

சொல்லும் போதே சைக்கிளில் காற்றடித்தான். மேலும் நன்றாக துடைத்தான்.ஆயில் ஊற்றி ஒரு தடவை சக்கரத்தை சுற்றி பிரேக் பிடித்து சரி பார்த்தான்.

"சாமி ரூம் எப்படி இருக்கு ! மாதம் ஒரு முறை திருமஞ்சனம் செய்வதுண்டா?"

"இதோ" வென்று சாமி போட்டோக்களை இறக்கி சுத்தம் செய்து சந்தானம், குங்குமமிட்டு அழகாக அடுக்கிவைத்துக்கொண்டே சுந்தர்



" டார்லிங் .. உனக்கு தெய்வம் இந்த சாமிங்க என்றால் எனக்கு நீ தான் தெய்வம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஏன் மீனாட்சி ஆட்சி தான் வீட்டிலே நடக்கிறதா கேலி பண்ணட்டும். பெண்டாட்டிதாசன் என்று கூட சொல்லட்டும். அதற்கெல்லாம் நான் கவலை படமாட்டேன். ஏன்னா உன்னை கல்யாணம் செய்துட்ட பின்னே தான் எனக்குள்ளே உள்ள திறமை என்னான்னு தெரிஞ்சது. நீ கொடுத்த ஊக்கமான தன்னம்பிக்கை வார்த்தைகளாலே என்னோட வளர்ச்சி ரொம்பவே அதிகமாயிடுச்சு. புரோமோஷன் சரி, சம்பளம் உயர்ந்தது எல்லாமே உன்னோட கைவண்ணம் தான். எனக்குள்ளே இருந்த திறமைகளை பொறுமையாக எடுத்துச் சொல்லி, தட்டிக் கொடுத்து, முத்தம் கொடுத்து என்னை பெரிய ஆளாக மாற்றும் மந்திரம் நீ சொன்னது தான். எப்போதும் எனக்கு நல்ல வழி காட்டிட்டே இருக்கிறே. பொம்பளைங்க பேச்சே கேட்கக் கூடாதுன்னு சொல்றது சுத்த முட்டாள் தனம். அவங்களுக்கும் நல்லதை சொல்லும் அறிவிருக்குது. அதனாலே யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை. உன்னோட பெருமையை எனது ஆயிசு முழுக்கும் சொல்லிட்டே இருப்பேன்" பரவசமாய் பேசினான் சுந்தர்.

"என்னங்க, நீங்க என்னை ரொம்பவே புகழுறீங்க. அதுக்கெல்லாம் எனக்கு அருகதை இருக்கான்னு தெரியல்லே. ஆனா என்னையும் ஒரு ஜீவனா மதித்து மரியாதை கொடுத்து, உங்களுக்கு சமமா ஏன் அதைவிட கூடுதலாக இடம் கொடுத்து பொறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடி கொடுத்த பெருமையெல்லாம் நீங்க எனக்கு கொடுத்த சுதந்திரத்தாலே வந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி நான் பொறந்த வீடு தான் எனக்கு பிடிக்கும்.ஆனா அங்கே இருந்ததை விட நீங்க இங்கே  கொடுத்த கூடுதல் சுதந்திரம், பாதுகாப்பு, அன்பு, மகிழ்ச்சி எனக்கு பொறந்த வீட்டை மறக்கச் செய்தது என்னான்னா  நீங்க என்னிடத்தில் காட்டின பொறுமை, அமைதி, அன்பு,மரியாதை, மதிப்பு, நல்ல கவனிப்பு தான்.இன்னும் சொல்லப் போனா இங்கே இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னுடைய ஆத்ம திருப்தி உங்களோட இருக்கிறதாநினைச்சு பெருமைபடுறேன். ஒரு பெண்ணா பொறந்த பெருமை இப்போது தான் முழுமையா அடைஞ்சுருக்கேன்" அவளும் தனக்குள் இருப்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லிக் கொண்டே 

"சரி, சரி குட்டிங்க ஸ்கூல்லேயிருந்து வந்துருவாங்க. மசமசவென்று நிக்காதீங்க. அவங்களுக்கு வேண்டிய சாப்பாடு, காய்கறீங்க , கொழம்பு , ரசம், பால் ரெடியா வையுங்க " என்று வேகப்படுத்தினாள் சாரதா. சமையலறையிலிருந்து வாசனை தெரு வரைக்கும் வந்தது.

                            
குழந்தைங்கள் இருவரும் தெருவில் வரும்போதே "என்னடா கோபி. நம்ம வீட்டு சமையலறையிலிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ரொம்ப ஸ்வீட்டா வாசனை வருது. அம்மா சமைக்கிறப்போ வர்ற வாசனை போல் இருக்கு. கோபி!    உண்மையிலே  அம்மா வந்துட்டாங்க போலிருக்கு." 

" ஆமாம் அக்கா.. நீங்க சொன்னது பலிச்சிருச்சு"

ஆர்வமாக வீட்டினுள் நுழைந்தார்கள். அப்பாவின் கைவண்ணம் அங்கே நடந்துகொண்டிருந்தது. 

"அக்கா இங்கே பாருக்கா. டி.வி., வாசிங் மெசின், புக் ஸெல்ப், சைக்கிள், லைட், பேன் ஓடுது, சன்னல் கதவு திறந்து காத்து ஜிலு ஜிலுவென்று வருது, சாமியறையிலிருந்து  சந்தன வாசனை வருது.." என்று கோபி அடுக்கிக்கொண்டே போனான்.



மாலாவும் தன் பங்கிற்கு வீட்டை சுற்றிப் பார்த்தவாறு "டேய் கோபி, இது நம்ம வீடா அல்லது வேறு வீட்டிற்கு வந்துட்டோமா?ன்னு சந்தேகமா இருக்கு! இப்போ தான் வீடு முன்னே போல இருக்கு!"

"எனக்கும் தாங்கா அப்படி தோணுது"

"இந்த மாற்றத்திற்கு காரணம், காரணகர்த்தா யார் என்று தெரியாமல் அதிசயமாய் விழித்தார்கள். அதற்குள் அவர்களின் அப்பா சுந்தர்"என்ன குட்டிங்களா, என்ன இப்படி பார்கிறீங்க. யார் இப்படி செஞ்சாங்கன்னு கேட்கிறீங்களா. எல்லாமே நான் தான் செஞ்சேன். அமாம் ! உங்க அம்மா இங்கே வந்தாங்க..." என்று ஒரு ஆச்சரியத்தை சொல்ல ..உடனே இருவரும் ஒரே மாதிரியாக 

"என்ன .. அம்மா வந்தாங்களா?"

"ஆமாம், குட்டிங்களா. அம்மா வந்து இது ஏன் இப்படி இருக்கு , அது ஏன் அப்படி இருக்குன்னு கேட்டாங்க. நம்ம குழந்தைங்களை ஒரு குறையுமில்லாம நல்ல கவனிச்சிக்குங்கன்னு சொன்னாங்க. அவங்க ஏற்கனவே எனக்கு சொல்லிக் கொடுத்த வேலைகளை ஒண்ணு ஒண்ணா செய்யச் சொன்னாங்க. என்னமோ தெரியல்லே உங்கம்மாகிட்டே ஏதோ அபார சக்தி இருக்கு. அந்த சக்தி தான் என்னை இப்படியெல்லாம் செய்ய வச்சிடுச்சி . அப்பறம் அவங்க ' நான் இல்லாவிட்டாலும் இப்படித்தான் வீட்டை இப்படித் தான் சுத்தமா வச்சுக்கிறனும்ன்னு' சொன்னாங்க " என்று அவன் மனைவி சாரதாவின் வரவை எடுத்துச் சொல்ல 



"கோபி, நான் சொன்னேன்லே, அம்மா வருவாங்கன்னு. அதேபோல  வந்துட்டாங்க. இப்போ தான் அப்பா பழைய அப்பாவாக மாறிட்டார். அப்பா கிட்டே எவ்வளவு சுறுசுறுப்பு! அம்மா கொடுக்கும் டானிக் வார்த்தைகளிலே எவ்வளவு பலம் இருக்கு. அவங்களை நினைச்சாலே எவ்வளவு சந்தோசம் கிடைக்குது" என்று மாலா உணர்ச்சிவசப்பட இருவரும் தன் அம்மா இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கே அழகான மாலை போட்ட பிரேமுக்குள் சாரதா மெல்லிய புன்னகையோடு தெய்வமாக இருந்தாள்.

இருவரும் கண்களை மூடிக்கொண்டு "நன்றி அம்மா ! இப்படித் தான் உங்க நினைவு எப்போதும் அப்பாவுக்கு வரணும். அதோடு எப்பவும் நீங்க எங்களோடு இருக்கணும் " என்று வேண்டிக்கொண்டனர்.

அவர்களின் வேண்டுதல் ஏற்றுக்கொண்டது போல் சாரதா தலையாட்டுவது அவர்கள் உணர்ந்தார்கள்.



அன்று இரவு சுந்தர் சாரதா முன்னின்று "டார்லிங் .. நான் இப்போ இருக்கிறது போல் எப்போதும் இருப்பேன். சரி தானே" என்றான்.



"சரி தான் . நான் வேணும்னா உங்களை விட்டு பிரிஞ்சேன்  . இந்த உலகிலே யார் தான் நிரந்தரமாக இருக்க முடியும். நான் கொஞ்சம் முன்னாடி போயிட்டேன். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தா சந்தோசமாக இருந்திருக்கும். அதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு. அதுவுமில்லாமே என்னோட நோய். நான் பிரிய வேண்டிய சூழ்நிலை. அதுக்காக நீங்க பயப்படக் கூடாது! சோர்ந்து போகக் கூடாது! நீங்க ஒரு ஆண் ! எவ்வளவு துணிச்சலா  தன்னம்பிக்கையோடு இருக்கணும்? நீங்க நினைச்சா எல்லாமே ஒரு விரல் நுனி அளவு தான்.கணவன் இல்லாத பெண்கள் எத்தனையோ பேர் சாமர்த்தியமா வேலைக்கு போறாங்க. வீட்டை நல்ல கவனிக்கிறாங்க. குழந்தைங்களை நல்லா வளர்த்து படிக்க வச்சு பெரியாளாக்குறாங்க. அவங்களாலே முடியறது உங்களாலே கட்டாயம் அதை விட கூடுதலாக நடத்திக் காட்ட முடியும். நான் எப்போதும் உங்க கூட இருப்பேன். நோ பியர் ஐ அம் ஹியர். ஐம் ஆல்வேஸ் வித் யூ . குட் நைட் ..ஹாவ் எ ஸ்வீட் ட்ரீம்ஸ் .. பைய் .." என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சாரதா.



அன்று முதல் அங்கு எல்லோரும் சாரதாவின் நினைவோடு சந்தோசத்தை மட்டுமே அனுபவித்து வந்தனர்.



                                                                                                      .கு.கி.கங்காதரன் 


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி ..



வணக்கம்..


***********************************************************************************************
     

No comments:

Post a Comment