Pages

Saturday, 19 January 2013

'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை 'UNDERSTANDING' GIVES HAPPY AND SUCCESSFUL LIFE

'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை 
'UNDERSTANDING' GIVES HAPPY AND 
SUCCESSFUL LIFE
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 
சுமூகமான வாழ்க்கைக்கும் , வெற்றி வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது 'புரிதல்' என்பதில் சந்தேகமே இல்லை. வீட்டிலும் சரி, வியாபாரத்திலும் சரி, தொழிலும் சரி, வேலையிலும் சரி, சேவையிலும் சரி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டால் வாழ்கையே இனிமையாக இருக்கும். எவ்வளவு வேகமாக ஒருவரை புரிந்து கொள்வீரோ அவ்வளவு வேகமாக அவர்களின் மூலம் மகிழ்வு பெறுவீர்கள். 
ஒவ்வொரு வினாடியும் மாறும் இந்த உலகத்தில் மனிதனின் மனமும் மாறும் தன்மை பெற்றுவிட்டது. அப்படியிருக்கும் போது மனிதர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கடினமான வேலை தான். மனிதன் நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இருப்பது சந்தேகம் தான். மனிதனை சுற்றியிருக்கும் சூழ்நிலை அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு ஒருவரை , உறவுகளை, சுற்றங்களை, சமூகத்தினரை, உலகத்தை புரிந்துகொள்ள முடியும். மாறும் மனதிற்கேற்றவாறு உங்களுடைய 'புரிந்து கொள்வதிலும்' மாற்றம் தேவைபடுகிறது. 
நேற்றைய விலை இன்று இல்லை. நேற்றைய இடத்தில் இன்று இருப்பதில்லை, நேற்று வாங்கிய இடத்தில் இன்று வாங்குவதில்லை. நேற்று போல் அரசாட்சி இன்று இல்லை, நேற்று இருந்தது இன்று இல்லை, நேற்று இருந்தவன் இன்று இல்லை. இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். பேசி பேசி புரிந்துகொள்ளுதலை அதிகப்படுத்த முடியாது. பெரும்பாலும் நம்பிக்கையின்மையின் காரணமாக எல்லாவற்றையும் மேலோட்டமாகவே பேசுவதால் 'புரிதல்' சற்று கடினமாகிறது. ஒருவேளை வெளிப்படையாக பேசிவிட்டாலோ,  அதுவே பலவீனமாக எடுத்துக்கொண்டு அவர்களை  கைபொம்மையாய் மாற்றிவிடுகின்றனர்.
'புரிதல்' அதிகப்படுத்த உங்களுக்குள் இருக்கும் இரகசியங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குணத்தை மட்டும் தெளிவாக காட்டுங்கள். தேவையான , பொதுவானவற்றை  மட்டும் தெளிவாக பேசினால் போதும். உங்கள் குணத்தை முன்னமே பேசினால் நல்லது.
புரிதலுக்கு முட்டுக்கட்டையாக பலகாரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது உங்களது எண்ணங்களையும், விருப்பங்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதாலும், முழுமையாக பகிர்ந்து கொள்ளாததாலும் ஆகும். பெரும்பாலோர் தங்கள் எண்ணங்களை வெளியில் சொல்லாமல் மனதிற்குள் புதைத்தும், விட்டுகொடுத்தும், மற்றவர்களை அனுசரித்தும் வாழ்கின்றனர். அவைகளை கடைபிடிக்கும் வரையில்  புரிதல் நன்றாக செயல்படுகின்றது. ஒரு கட்டத்தில் அதன் அளவு மீறும்போது 'விரிசல்' விழுகின்றது. அதுவே உறவு முறிவிற்கும் , தோல்விக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. அனுசரிப்பு இருக்கவேண்டியது தான். ஆனால் அதை சொல்லிவிடவேண்டும். 'எனக்கு இது பிடிக்காது. ஆனால் உங்களுக்காக இதை இப்போது செய்கிறேன். மீண்டும் செய்யமாட்டேன்' என்று சொல்லும்போது மீண்டும் அத்தகைய நிகழ்வு தவிக்கப் படுகின்றது. அதனால் புரிதல் மேம்படுகின்றது. மேலும் சிலவற்றை மாற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. 

கோபம் :

கோபம் வருவதிற்கு முக்கிய காரணம் ஆணவம், அகங்காரம், ஈகோ. 'நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்' என்கிற உணர்வு அதிகமாகும்போது 'புரிதல்' குறைகின்றது. கோபம் சுயநலத்தின் வெளிபாடு. எதிரில் உள்ளவர்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் செயல்படுவதும், பழிக்குப்பழி நோக்கம், உயர்ந்தவன் என்பதை திமிராக காட்டுவதாகும். அப்படி நீங்கள் இருந்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. ஆனால் கோபம் அன்பாக மாறும்போது இருவருக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை உண்டாகின்றது. மகிழ்ச்சி கிடைப்பதுடன் வெற்றியும் பெறலாம்.

விருப்பு வெறுப்பு:

உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அதை பிடிவாதமாக செய்யச் சொல்வது அதிக பிரச்சனைகளைத் தரும். இங்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விட்டால் இருவருடையை எண்ணங்களும் ஈடேறும். இருவரும் நன்மை பெறுவீர்கள்.

தெளிவு இல்லாமை:

சொல்லவேண்டியதை தெளிவாகச் சொல்லாமலும், செய்ய வேண்டியதை சரியாக செய்யாமலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழம்பும்போது உங்களை யாரும் நம்பமாட்டார்கள். அதற்கு சிறந்த ஆலோசகரை நியமித்தோ அல்லது அவர்களை கலந்து ஆலோசித்து அதன்படி சொல்லும்போது சொல், செயல் இரண்டும் ஒத்துப் போகும். அந்த நம்பிக்கை உங்களுக்கு வெற்றி கொடுக்கும்.

பொறாமை:

பொறாமை என்பது தீர்க்கமுடியாத ஒரு மனோவியாதி. அதற்கு இயலாமையும், முயலாமையும் காரணமாகும். அதற்கு உங்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மனவலிமை, ஆற்றல், திறமை தேவை. 'அவன் முன்னேறிவிட்டான். அவனின் முன்னேற்றத்தை தடுத்து அழிக்க வேண்டும்' என்கிற எண்ணங்களை எக்காரணம் கொண்டும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. பொறுமையுடன் உங்கள் திறமையை அதிகப்படுத்திக்கொண்டால்  உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி.

அலட்சியம்:

எதையுமே அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயல்பட்டால் எல்லோருமே உங்களை மதிப்பர். உங்களிடம் அன்பு காட்டுவர். கெட்ட எண்ணம் இல்லாமல் நல்ல எண்ணங்களோடு இருக்கும் உங்களை நன்றாக புரிந்துகொண்டு உதவிகள் பல செய்வதால் உங்கள் வாழ்க்கை சுவையாக மாறும்.

இதைதவிர உங்களுக்கு பகையுணர்வு அறவே இருக்கக்கூடாது. ஒற்றுமையோடு செயல்படவேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கவேண்டும். 
இனி உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை தான்.        
நன்றி 
வணக்கம்.

1 comment: