Friday, 2 August 2013

உண்மை என்பது ஆமை (சிறுகதை) மதுரை கங்காதரன்

உண்மை என்பது ஆமை (சிறுகதை)
மதுரை கங்காதரன் /

 

வேலைத் தேடி உள்ளே நுழைந்தபோது அந்த பொழிவான காட்சியோடு கம்பீரமாக பிரமாண்டமான கட்டிடம் 'வேலா இன்டெர்நேசனல்' என்ற புகழ்பெற்ற நிறுவனம் கணேசனை சற்று மயங்க வைத்தது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென ஓங்கி வளர்ந்து நிற்கும் செழுமையான மரங்கள் , வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள் வெகுவாக அவரைக் கவர்ந்தது. இந்த நிசக்காட்சியெல்லாம் அவனின் கடந்த கால ஒரு நிகழ்ச்சி தவிடுபொடியாக்கியது.    

இருப்பினும் 'இங்கே எப்படியும்  தனக்கு வேலை கிடைக்கும்'  என்று மிகவும் தன்னம்பிக்கையோடு காத்திருந்தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு சரியான வேலை கிடைக்காதது அவருக்கு பெரிய வருத்தமாக இருந்தது. இருப்பினும் அவரின் விடாமுயற்சிக்கு அவருக்கு நல்ல வேலை கிடைப்பது ஒரு சவாலாக இருந்தது.

சிலு சிலுவென இருக்கும் வரவேற்பு அறையில் உட்கார்ந்தபடி அடிக்கடி சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி பார்க்கும்போது முகத்தில் ஒருவித பயம் தெரிந்தது. குறிப்பாக 'இதற்குமுன் தான் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து இங்கு யாரும் வேலைக்குச் சேர்ந்திருக்கக் கூடாது' என்கிற ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அந்த பயத்தில் யாரைப் பார்த்தாலும் அவருடைய இதயம் படபடத்தது.

எம்.டி யின் அழைப்புக்காக காத்திருந்தார் கணேசன். இந்த நேர்முகத் தேர்விலும் இங்குள்ள எம்.டி கட்டாயம் "ஏன்?முன்பிருந்த கம்பெனியிலிருந்து விலகி இங்கு வந்து சேருகிறீர்கள்" என்று கேட்பார். சம்பளம் போதவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அது அப்பட்டமான பொய் என்று தெரிந்துவிடும். ஏனெனில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் முதல் பத்து இடத்தில் இருக்கும் அதிக சம்பளம் கொடுக்கும் நிறுவனம். ஆகையால் இங்கும் நடந்த உண்மை சொல்லியேத் தீர வேண்டும். பின்னாளில் யாராவது சொல்லி உண்மை தெரிய வந்தால் நிரந்தரமாகவே தனக்கு கெட்டப்பெயர் வந்துவிடும். ஆகையால் இந்த இடத்திலும் தான் வேலை தேடி வந்த  காரணத்தைச் சொல்லி விடவேண்டும். வேலை கொடுப்பது , கொடுக்காத்தது அவர்களின் பிரியம்' என்று மனதில் உறுதி கொண்டார்.

பயப்படும்படியான அந்த உண்மையான நிகழ்ச்சியை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.

கணேசனுக்கு பிரபல நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளம் வாங்கும் 'கேசியர்' வேலை. ஆனால் கேசியர் வேலையத் தவிர அந்த நிறுவனத்தில் நடக்கும் அனைத்து வேலையும் அவர்க்கு அத்துப்படி. மிகவும் துடிப்பான, ஆர்வமான, சுறுசுறுப்பான இளைஞர். ஆகையால் 'ன்' என்று ஒருமையில் குறிப்பிடாமல் 'ர்' என்று குறிப்பிடுவது நல்லது என்றே தோன்றுகின்றது. அவர் வேலையில்சேர்ந்த ஐந்து வருடத்தில் எந்தவித 'கருப்பு புள்ளி' இல்லாமல் அனைவரையும் அனுசரித்து தனது கடமையைத் தவறாது செய்து வந்தார். அந்த கடமைக்கு 'களங்கம்' ஏற்படுமபடியான அந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் புகழ்ந்தவர்கள் காரி உமிழ்ந்தார்கள்.

"மிஸ்டர் கணேசன்! ஒரு ஐந்து லட்சம் ரூபாயை அரேஞ்ச் பண்ணி இந்த அக்கவுண்ட்லே உடனே கட்டிடு. கோ ...கோ.... ஹரி அப் !" என்று அவசரப்படுத்தினார். 
கணேசனும் கவனமாக ஐந்து லட்சம் ரூபாயைச் சேர்த்து பத்திரமாக ஒரு பையில் வைத்துக் கொண்டு வங்கியை நோக்கி வண்டியை விட்டார் கணேசன்.

அதே சமயத்தில்...

வாழ்க்கையை இழந்து தற்கொலைக்குத் துணிந்து ரயில் தண்டவாளத்தை நோக்கிப் புறப்பட்டார் ராகவன். 'நன்றாக உழைத்து மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டும்' என்கிற லட்சியக் கனவோடு நகரத்திற்கு நுழைந்தார் . வேர்வையைச் சிந்தி மூளையைக் கசக்கி   உழைத்தார்.. உழைத்தார்.. இருப்பினும் போட்டியைச் சமாளிக்க முடியாமல் அவர் எடுத்த எல்லாவிதமான முயற்ச்சியும் தோல்வியில் முடிவடைந்தது. அதனால் அவருக்கு இமாலய அளவு அனுபவமும், எதையும் தாங்கும் இதயமும், 'எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும்' என்கிற நெளிவு சுளிவுகளை கற்றுத் தேர்ந்திருந்தார். ஆனாலும் தோல்வி மேல் தோல்வி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. அந்த சமயத்தில் அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி காற்றில் பறந்தது. 'தோல்வி அடைந்தவனுக்கு இந்த உலகத்தில் இடமில்லை' என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். அவனுடைய கவனம் தன் தலையை தண்டவாளத்தில் வைத்து உயிரை விடவேண்டும் என்பதற்காக ஆவேசமாக , வேகமாக நடந்தார். அவர் வேகத்தை தடை போடும்படி ஒரு பையின் கைப்பிடி அவரது காலை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டதால் அவரின் நடைவேகம் குறைந்து நிற்க வேண்டிய அவசியம் வந்த்து . காலைச் சுற்றிக்கொண்டிருந்த அந்த பையை கையால் எடுத்தார்... அந்த பையைத் திறந்தார்.

அதேசமயத்தில்... மறுபக்கம் ..

கணேசனின் வண்டி வங்கிக்கருகில் நின்றது. அவர் பத்திரமாக வைத்திருந்த கைப்பையை எடுக்க விரைந்தார். அப்போது தான் தெரிந்தது அந்த கைப்பை காணவில்லை என்று! பதறினான். என்ன செய்வதறியாது அங்கிங்கு ஓடினார். துடித்தார். அவர் தான்  வந்த வழி முழுவதும் அந்தப் பையைத் தேடினார். யாராவது தன் கைப்பையை வைத்திருக்கிறார்களா ? என்று கண்ணில் பட்ட  அனைவரையும் கூர்ந்து பார்த்தார். யாராவது பையை எடுத்துத் தரமாட்டார்களா? என்கிற நப்பாசை அவரிடத்தில் மேலோங்கி இருந்தது. அவ்வளவு பெரிய நகரத்தில் கூட்டம் கூட்டமாக வந்து போகும் இந்த இடத்தில் யாரிடத்தில் பையைக் கேட்பது. இந்த காலத்தில் அப்படி எடுத்தவர்கள் திருப்பிக் கொடுப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? 

நேரம் ஆக ஆக நிறுவனத்திலிருந்து போன் மேல் போன் வந்து கொண்டிருந்தது. 
" என்ன மிஸ்டர் கணேசன்.. இன்னுமா பணம் கட்டவில்லை? பணம் கட்டாம என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று அவருடைய மேலாளர் விரட்டிக் கொண்டிருந்தார். 

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவருடைய துக்கம் பேசவிடாமல் செய்தது. சிறிது நிதானித்து..
" சார்! பணம்... பணம் .. தொலைஞ்சிடுச்சு சார்! அதைத் தேடிட்டிருக்கேன் சார்!"
"என்ன மேன் சொல்றே? பணம்... தொலைஞ்சுடிச்சா! அஞ்சு லட்சம் மேன். அஞ்சு லட்சம்! என்ன செய்வீங்களோ ..ஏதுசெய்வீங்களோ எனக்குத் தெரியாது. இன்னைக்கு அஞ்சு லட்சம் அந்த அக்கவுன்ட்லே கட்டியாகணும்" என்று போனை கட் செய்துவிட்டார் அவருடைய மேலாளர்.

தேடித் தேடி அசந்து போய் நிர்கதியாய் அவருடைய மேலாளரின் முன்னால் நின்றார்.

"வா மேன் வா! உன்னாலே எனக்கு மேலிடத்திலே கெட்டபேர் கெடச்சிருச்சு. பணம் தொலைஞ்சது உண்மையா இருந்தாலும் யார் அதை நம்புவாங்க! நீங்க தான் திருடியிருபீங்கன்னு தான் எல்லோரும்  சொல்லுவாங்க. போலீசுக்குப் போனா நம்ம நிறுவனத்தின் மானம் தான் போகும். இது நாள் வரைக்கும் நீங்க நேர்மையாய் நடந்த ஒரே காரணத்திற்காக நான் போலீஸுக்கு போகப் போறதில்லை. ஆனா உங்களுக்கு  இன்று முதல் இங்கு வேலையில்லை. நீங்க  போகலாம். இனி மேலும் நீங்க இங்கு வேலை செஞ்சா மத்தவங்க உங்களை நிம்மதியாக வேலை செய்ய விடமாட்டாங்க! 'திருட்டுப் பட்டம்' கட்டி 'திருடன்..திருடன்' என்று தான் கூப்பிடுவாங்க! உங்களோட நன்மையைக் கருதி இத்தோடு இங்கிருந்து போய்விடுங்க" என்று கறாறோடு மனிதாபிமானமுடன் சொன்னார்.

மறுநாளிருந்து கணேசன் அங்கு வேலைக்கு வராத காரணம் முதலில் தெரியாமல் இருந்தாலும் போகப்போக நடந்த உண்மைச் சம்பவம் கசிய ஆரம்பித்தது. 

" என்ன , நம்ம கணேசனா ஐந்து லட்சம் ரூபாயைத் திருடிவிட்டானா?" என்று ஆச்சரியமாய் விசாரித்தனர் பலர்.
"அடத் திருடலைன்னு சொல்றாங்க. தொலைச்சிப்புட்டானாம்" என்று சிலர் சொன்னார்கள்.
கடைசியில் "சும்மாவா? ஐந்து லட்சமில்லே! இது தான் சான்ஸ் என்று அபேஸ் பண்ணிகிட்டான்" என்று நரம்பில்லாத பல நாக்குகள் அவருக்கு 'திருட்டுப் பட்டம்' நிரந்தரமாக கட்டியது.

அன்று முதல் அவர் செல்லும் கம்பனியில் வேலை கேட்கப் போகும் போது யாராவது எப்படியாவது ஒருவர் அங்கு அவருடன் வேலை பார்த்தவர் இருப்பார். மனிதனுக்குரிய கெடுக்கும் புத்தி அவரிடத்தில் இல்லாமலா இருக்கும். எல்லோரும் காட்டிக் கொடுப்பது போல் அவரை தனது மேலதிகாரியிடத்தில் போட்டுக் கொடுத்து அந்த வேலைக்கு வெற்றிகரமாக் 'ஆப்பு' வைப்பது வழக்கமாகிவிட்டது.  இனி உள்ளூரில் வேலை கிடைப்பது ரொம்பவும் கஷ்டம் என ஊகித்து வெளியூரில் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தார்.இந்த நிமிடம் வரை அவருடன் வேலை பார்த்தவர்கள் யாரும் இல்லாதது, கண்ணில் படாதது அவருக்கு பெரும் நிம்மதியைத் தந்தது. அவருடைய நம்பிக்கையில் இடி விழுந்தது என்றே சொல்லவேண்டும். ஆம்! அவருடைய பழைய நிறுவனத்தில் தன் பக்கத்து சீட்டில் இருந்துகொண்டு வேலை பார்த்த, தன்னைப் பற்றி நன்றாக தெரிந்த, பொறாமை குணம் கொண்ட ராஜேஷ் அவரை எதேச்சையாய் பார்க்க கணேசனின் உடம்பு வெலவெலத்துப் போனது. உடம்பெல்லாம் வேர்த்தது.

" இங்கேயும் வந்துட்டீயா? இங்கே கட்டாயம் உனக்கு வேலை கிடைக்காது. முதல்லே உன்னைப் பற்றிய எல்லா விவரத்தையும் எங்க எம்.டி கிட்டே சொல்லிய பிறகு தான் மறு வேலை" என்று விறுவிறுவென்று எம்.டி அறைக்குள் நுழைந்தார் ராஜேஷ்.   


"சார்! மே ஐ கம் இன் சார்!"
" யெஸ் மிஸ்டர் ராஜேஷ் ! கம் இன். என்ன விசயம் இவ்வளவு வேகமா வர்றீங்க? ஏதாவது தலை போகிற காரியமா?"

" அதை விட மேலே சார்! இன்று நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறாரே கணேசன் என்கிற கேண்டிடட் , அவர் நல்லவர் கிடையாது! முதல்லே 'இங்கே உனக்கு வேலை இல்லைன்னு' துரத்துங்க. அவரை வேலைக்கு வச்சுகிட்டா நம்ம கம்பனிக்குத் தான் அவமானம்."


"என்ன அப்படி சொல்றீங்க! பார்த்தா நல்ல நேர்மையான கடமை தவறாத மனுசனா தெரியுறாரு!"


" ஆளைப் பார்த்து எடை போடாதீங்க. அவர் ஒரு மகா திருடர். முன்னாலே நான் வேலை பார்த்த கம்பெனிப் பணத்தை ரூபாய் ஐந்து லட்சம் அபேஸ் பண்ணிகிட்டாரு" என்று விலாவாரியாக கணேசனைப் பற்றி பத்த வைத்துக்கொண்டிருந்தார்.


உள்ளே சென்ற அவரது முன்னால் சக தொழிலாளி ராஜேஷ் உடனே வெளியில் வராததை நினைத்து சற்று பதற்றப்பட்டார். கடைசியாக நம்பிக்கை இழந்து இந்த இடத்திலும் தனக்கு வேலை கிடைக்காது என்கிற முடிவோடு அந்த இடத்தை  விட்டு நகர்ந்து வெளியே செல்ல ஆயுத்தமானார். அப்படி போக நினைக்கும் போது வரவேற்பில் இருந்த பெண் தனது இனிமையான குரலில்
" சார்! எங்கே போறீங்க ? இன்னும் கொஞ்ச நேரத்திலே எம்.டி உங்களைக் கூப்பிடப்போகிறார் " என்று அவரைத் தடுத்தார்.

" இல்லேம்மா, ஒரு அவசர காரியமா உடனே நான் வெளியே போயாகனும்" என்று உண்மையை மறைத்து வெளியே செல்ல முரண்டு பிடித்தார்.


"சார்! எங்க எம்.டி யோட ஒரு பொதுவான உத்தரவு என்னான்னா எம்.டி ஐ பார்க்க வந்தவர்கள் எக்காரணம் கொண்டும் பார்க்காம போகக் கூடாது. உங்களுக்கு அவசரம்னா சொல்லுங்க. எம்.டி கிட்டே ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கித் தர்றேன். நீங்க அவரைப் பார்க்காம போனா என்னைத் தான் திட்டுவார். ப்ளீஸ் பீ சீடட்" என்று அமர வைத்தார்.


வரவேற்பு பெண் இவ்வாறு கூற ஒருபுறம் கணேசன் அந்த எம்.டி யின் குணத்தை நினைத்துப் பெருமைபட்டார். மறுபுறம் தன்னைப் பற்றிய விவரங்களை ராஜேஷின் மூலமாக அவர் தெரிந்துகொள்ளும்போது கூனிக்குறுகியல்லவா அனைவரையும் கடக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வந்தது வந்துவிட்டோம். இனி சான் முங்கினால் என்ன? முழுசும் முங்கினால் என்ன? நான் உண்மையானவன் என்று என் மனசுக்குத் தெரியும். யார் நம்பினாலும் என்ன ? நம்பாவிட்டாலும் என்ன? அதுபத்தின கவலை இனிபடக் கூடாது என்று உறுதியாய் இருந்தார். நிறைய குழப்பத்துடன் இருந்த கணேசனை வரவேற்பு பெண்,

"சார்! உங்களை எங்க எம்.டி கூப்பிடுறார். எங்க எம்.டி நல்ல எம்.டி. அவருக்கு கீழே வேலைப் பார்க்க நீங்க கொடுத்துவச்சிருக்கணும். கண்டிப்பாய் இந்த வேலை உங்களுக்கு கிடைத்தே தீரும். நம்பிக்கையோடு போங்க!" என்கிற இனிமையான ஆறுதல் வார்த்தைகள் இதமாகவும் கணேசனுக்கு புதுத் தெம்பையும் கொடுத்தது.

கணேசன் எம்.டி யின் அறைகுள்ளே நுழைவதற்கும், அறையிலிருந்து அனைத்தையும் ஒன்றுவிடாமல் பத்த வைத்து ராஜேஷ் வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது. பதற்றத்துடன் உள்ளே நுழைந்தார்.

"குட் மார்னிங் சார்" என்று கணேசன் சொல்லியது தான் தாமதம்


"நீங்க.... தான்..... அந்த ஐந்து  லட்சம் ரூபாயை...." என்று எம்.டி  முழுவதும் சொல்லி முடிப்பதக்குள்

"சாரி சார்! உங்களுக்கு நான்  தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிக்கவும். இங்கே வேலை கிடைக்காது என்று நல்லாவே தெரிஞ்சு போச்சு. என்னுடன் வேலை பார்த்த ராஜேஷ் எல்லா விவரத்தையும் சொல்லியிருப்பார். நான் வர்றேன் சார்" என்று அவசரம் அவசரமாக கிளம்பி போவதற்குள்

" நில்லுங்க மிஸ்டர் கணேஷ். உங்களை நான் போகச் சொல்லலேயே. மிஸ்டர் கணேஷ். இது நாள வரைக்கும் உங்களைப் பற்றி நீங்க போன இடங்களில் உங்களுடன் வேலை பார்த்தவர்கள் சொல்லியதாலே வேலை கிடைக்காம போயிருக்கலாம். அது நான் செய்த புண்ணியம் என்று தான் நினைக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு வேறு எங்கேயாவது வேலை கிடைச்சிருந்தால் உங்களை நான் பார்க்க முடியாமலே போயிருக்கும். உங்களை இந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்பினா நான் தான் பாவி, துரோகி, திருடன் இன்னும் எல்லாம்.." எம்.டி என்ன சொல்கிறார் என்று ஒன்றும் புரியாமல் விழித்தார்.

"என்ன சார்! என்னென்னமோ பேசுறீங்க? இந்த திருடனைப் பார்த்தா இப்படி பேசுறீங்க!"


" என்ன நீங்க திருடனா? உண்மையிலேயே நான் தான் திருடன். சுயநலவாதி..காரியவாதி..சந்தர்ப்பவாதி..இன்னும் என்னென்ன இருக்கோ அதெல்லாம் எனக்குப் பொருந்தும். இது நாள் வரைக்கும் எனக்குள்ளே புதைந்திருக்கும் உண்மை எங்கே வெளியில் வராம ஊமையாய் இருந்துவிடுமோன்னு நினைச்சேன். ஆனா உண்மை ஆமை வேகத்திலே வந்தாலும் சரியான நேரத்திலே வந்திருக்கு. ஆமாம் மிஸ்டர் கணேஷ்! நான் அமெரிக்காவிலே செட்டில் ஆக முடிவு பண்ணிருக்கேன். அதற்காக என்னுடைய இடத்திலேருந்து இந்த நிறுவனத்தை நல்ல முறையில் பார்த்துகிறதுக்கு நேர்மையான ஒருவரை தேடிக்கொண்டிருந்தேன். நான் யாருக்காக இத்தனை நாளா காத்துக்கொண்டிருந்தேனோ அவரே என் கண் முன்னாடி தெய்வம் போல் காட்சி கொடுக்கிறதை புண்ணியமா நினைக்கிறேன். இந்த ஆஸ்தி, அந்தஸ்து, பதவி, பணம் எல்லாமே உங்களோட திருட்டுப் பட்டத்தினாலே வந்தது. அந்த திருட்டுப் பட்டத்தை நான் துடைத்து எனக்கு மனநிம்மதி தர்றது உங்களோட கையில் இருக்கு. இன்று முதல் நீங்கள் தான் இந்த நிறுவனத்தின் எம்.டி. இது மட்டுமல்ல. இன்னும் நான்கு கம்பெனிகள் இருக்கு. அதையும் நீங்க தான் கவனிக்கணும். இது என்னோட ஆணையா இல்லாம உங்களுக்கு நான் செய்யும் பிரதிஉபகாரம், பிராயச்சித்தமா நினைக்கிறேன்" என்று எம்.டி பேசுவதை பாதியிலே குறுக்கிட்டு

"என்ன சார் சொல்றீங்க. நான் இங்கு வேலை தேடி வந்தவன். என்னைப் போய் முதலாளி அது இதுன்னு பெரிசா பேசுறீங்க. அதுவும் நான் சுமந்து கொண்டிருக்கும் என்னோட திருட்டுப் பட்டத்தாலே வேலை கிடைக்குமோ கிடைக்காதோன்னு  ஒருவித பயத்தோட வந்தவனை தங்க சிம்மாசனத்திலே உட்காரவைக்கும்  அளவுக்கு நான் என்ன அப்படி புண்ணியம் பண்னினேன். முன்னே பின்னே தெரியாத உங்களுக்கு நான் எப்படி உங்களுக்கு உதவினேன். உங்க அந்தஸ்து உயர்வுக்கு நான் எப்படி காரணமாய் இருந்தேன்" ஒன்றும் விளங்காமல் எம்.டி யின் பதிலுக்காக காத்திருந்தார்.

"மிஸ்டர் கணேஷ். சுமார் அஞ்சு வருசங்களுக்கு முன்னாடி என்னோட வாழ்கையிலே பல தோல்விகளை சந்தித்து விரக்தியடைந்து தற்கொலை முடிவுக்கு வந்தப்போ தான் நீங்க தொலைச்ச ஐந்து லட்சம் பணம் என்னோட காலடியில் மாட்டிக்கொண்டது. அந்த பையைத் திறந்து பார்த்தபோது தான் அதிலே ரூபாய் இருப்பது தெரியவந்தது. தற்கொலை பண்ணிக்கப் போறவனுக்கு எதற்கு இந்த பணம்? இந்த பணம் யாருக்குச் சொந்தமானதோ அவரிடத்தில் கொடுக்கவிடவேண்டுமென்று நினைத்து  அந்த பையில் விலாசமோ அல்லது ஏதேனும் போன் நம்பரோ இருக்கான்னு துளாவிப் பார்த்தேன். எதுவுமே அதில் இல்லை. அதனாலே தற்கொலை நேரத்தை சற்று தள்ளிப் போட்டு ரெண்டு மணிநேரம் அங்கேயே காத்திருந்தேன். அந்த நாள்லே கூட்டம் அதிகமாய் இருந்தாலே உங்களாலே என்னை கண்டுபிடிக்க முடியல்லைன்னு நினைக்கிறேன். என்னாலேயும் உங்களை கண்டுபிடிக்க முடியல்லே. நேரம் ஆக ஆக தற்கொலை முடிவை விட்டுவிட்டேன். ஆனா இந்த பணத்தை உரியவங்க கிட்டே சேர்க்கவேண்டுமென்கிற உறுதி இருந்தது. நேரம் வரும்போது கொடுத்துவிட வேண்டும் என்று காத்திருந்தேன். ரொம்ப நம்பிக்கையோடு அந்த பணத்திலே சின்னதா ஒரு பிசினஸ் பண்ணினேன். நல்ல லாபம். அதற்கு முன்னாடி நான் வாழ்கையிலே எவ்வளவு தோல்வி அடைந்தேனோ அதைவிட நூறு மடங்கு வெற்றி எனக்கு கிடைச்சுட்டே இருந்தது. நான் தொட்டதெல்லாம் வெற்றி தான். உங்களோட இந்த கைப்பை தான் இத்தனை நாளும் தெய்வமா நினைச்சு கும்பிட்டு வர்றேன்" அந்த கைப்பையை காண்பிக்க கணேசனின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் அருவியாய் கொட்டியது. மேலும் எம்.டி தொடந்து ..

"ஒவ்வொருடைய வாழ்கையில் பெரிய அதிர்ஷ்டம் ஒரு தடவை கதவைத் தட்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கேன். உங்களாலே என்னோட வாழ்கையிலே நிஜமாயிடுச்சு" இவ்வாறு சம்பாசனை தொடர்ந்துகொண்டிருக்க ..

வெளியில் இருந்த ராஜேஷின் எண்ணம் 'ஏன்? எம்.டி கணேசனை துரத்தவில்ல்லை. ரொம்ப நேரமா என்ன பேசிட்டுயிருககாங்க. எல்லாமே நான் சொல்லிட்டேனே! பேசுவதற்கு ஒண்ணுமே இல்லையே' என்று சற்று குழம்பியபடி இருக்கும்போது ..


எம்.டி யின் அறை கதவு திறந்தது.


எல்லோரும் அதிசயத்தில் மூழ்கும் காட்சி ஆனால் ராஜேஷுக்கு அந்த காட்சி அதிர்ச்சி தந்தது.

ஆம். எம்.டி அவர்கள் கணேசனை கைத்தாங்கலாக அழைத்து வெளியே வந்தார்.எல்லோரையும் அழைத்தார். அனைவரும் ஒன்று கூடினர்.

" டியர் ஆல் ! உங்களுக்கு ஒரு இன்ப   அதிர்ச்சியை தரப்போறேன். இன்று முதல் இந்த நிறுவனத்தின் எம்.டி இந்த மிஸ்டர் கணேசன். இந்த நிறுவனமட்டுமில்லாம எல்லா நிறுவனங்களையும் இவர் தான் நிர்வாகிப்பார். நீங்கள் எந்த அளவுக்கு எனக்கு ஒத்துழைப்பு தந்தீர்களோ அதைவிட கூடுதல் ஒத்துழைப்பு தந்து நமது நிறுவனத்தை மென்மேலும் உயர பாடுபடவேண்டுமென்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். கமான் மிஸ்டர் கணேசன்! டேக் யுவர் ஹானரபில் எம்.டி சீட் " என்று எம்.டி அறைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு ராஜேஷிக்கு நீண்டநேரமாகியது.


ஆனால் வரவேற்பில் இருந்த பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை காணப்பட்டது.888888888888888888888888888888888888
வடித்தவர் ...

- கு.கி. கங்காதரன் நன்றி வணக்கம்.


***********************************************************************************
   

No comments:

Post a comment