Pages

Tuesday, 19 March 2013

உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHES TO UPLIFT YOUR LIFE

 உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை 
   
108 WISHES TO UPLIFT YOUR LIFE 

தினம் தினம் காலைபொழுது விடியும்போது கூடவே விடியாத கஷ்டங்கள் பலவும் கண் முன்னால் வந்து பயமுறுத்துவது தான் தினமும் எதிர்கொள்ளும் உண்மை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் தங்குவதோ காயங்களும் , வலிகளும் தான். அத்தகைய சந்தர்ப்பத்தில் யாருடைய உதவியைத் தேடுவது? எவ்வாறு உதவிகளைக் கேட்பது? 

இதோ, உங்களுக்கு  மட்டுமில்லாது அனைவருக்கும் பொதுவான 108 அருள்களை எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் அசையாத நம்பிக்கை தந்து வாழ்வில் தினமும் மகிழ்ச்சியை எப்போதும் அள்ளித்தர மாலையாகத் தொகுத்து கொடுத்துள்ளேன். தங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு அமைதியான நேரத்தில் இந்த அருள்மாலையினை சொல்லிக்கொண்டு வந்தால் நினைத்த காரியம் இனிதே நடக்கும். எதைக்கண்டு பயம் கொள்ளாமல் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். நாளுக்கு நாள் இந்த அருள்மாலையினைச் சொல்ல சொல்ல அதன் பலன் உங்களுக்கு கைமேல் கிடைக்கும். அனைத்தும் சொல்ல முடியாவிட்டாலும் ஏதாவது ஆறு மட்டும் சொன்னாலேப் போதும்.  இப்போதே சொல்ல ஆரம்பியுங்கள்...

   1. இப்பிறவியைக் கடக்க சக்தி தந்தருள்வாய்
   2. இன்றும் உன்னை மறவாத வரம் தந்தருள்வாய்

   3. நல்ல காலைப் பொழுதை தந்தருள்வாய்
   4. நலமிக்க உடலைத் தந்தருள்வாய்

   5. ஞாயிறு போல் பிரகாசம் தந்தருள்வாய்
   6. சந்திரனின் குளிர்ச்சியைத் தந்தருள்வாய்

   7. குடும்பம் செழிக்க மகிழ்வைத் தந்தருள்வாய்
   8. குறைவில்லாத நிறைவுகளைத் தந்தருள்வாய்

   9. கனி கொடுக்கும் காலத்தை தந்தருள்வாய்
 10. கருணை மிக்க தரிசனம் தந்தருள்வாய்

 11. கஷ்டத்தை அகற்றி சுகத்தை தந்தருள்வாய்
 12. கஷ்டமில்லாப் பெருவாழ்வு தந்தருள்வாய்

 13. உன்னை அடைய நற்கதி தந்தருள்வாய்
 14. உயிர்களை இரட்சிக்க வரம் தந்தருள்வாய்

  15. பகை விரட்டும் வீரம் தந்தருள்வாய்
  16. பந்தங்களை காக்க அன்பைத் தந்தருள்வாய்

  17. உழைப்பவர்களுக்கு உயர்வைத் தந்தருள்வாய்
  18. உண்மையாய் இருப்போருக்கு ஆசி தந்தருள்வாய்

  19. வலிமையான இதயத்தை தந்தருள்வாய்
  20. வளமையான எண்ணங்களைத் தந்தருள்வாய்

  21. எதையும் தாங்கும் பொறுமை தந்தருள்வாய்
  22. எல்லோரும் போற்றும் பெருமை தந்தருள்வாய்

  23. சாதிக்கும் தன்னம்பிக்கை தந்தருள்வாய்
  24. சாய்ந்து விடாத முயற்சியைத் தந்தருள்வாய்

  25. இனிமையான உறவுகளத் தந்தருள்வாய்
  26. இணைபிரியாத நட்புகளைத் தந்தருள்வாய்

  27. உலகம் போற்றும் அறிவைத் தந்தருள்வாய்
  28. உலகைக் காக்கும் சக்தியைத் தந்தருள்வாய்

  29. வாழ்கையில் அதிர்ஷ்டம் தந்தருள்வாய்
  30. வருபவனவற்றில்  வெற்றியைத் தந்தருள்வாய்

  31. பொய் களவு கலவாமை தந்தருள்வாய்
  32. பொன்னான வாய்ப்புகளைத் தந்தருள்வாய்

  33. சிந்தனையில் திடம் தந்தருள்வாய்
  34. சிதறாத கவனம் தந்தருள்வாய்

  35. காரியத்தில் நிதானம் தந்தருள்வாய்
  36. காற்றும் மழையும் அளவோடு தந்தருள்வாய்

  37. பயத்தை துரத்தும் உறுதியைத் தந்தருள்வாய்
  38. பயன் தரும் நினைவுகளைத் தந்தருள்வாய்

  39. கேட்கும் வரத்தை தந்தருள்வாய்
  40. கேடு ஒழிக்கும் பலத்தை தந்தருள்வாய்

  41. எதையும் ஏற்கும் பக்குவம் தந்தருள்வாய்
  42. எதையும் கற்கும் அனுபவம் தந்தருள்வாய்

  43. சாகா வரம் தரும் கல்வியைத் தந்தருள்வாய்
  44. சாகும் பின்னும் புகழைத் தந்தருள்வாய்

  45. தேன் கலந்த சொற்களைத் தந்தருள்வாய்
  46. தேடிக்கிடைத்திடாத செல்வங்களை தந்தருள்வாய்

  47. வற்றாத அமுத சுரபியைத் தந்தருள்வாய்
  48. வாரி வழங்கும் குணத்தினை தந்தருள்வாய்

  49. பொருள் ஈட்டும் வழியைத் தந்தருள்வாய்
  50. பொறாமை படாத உள்ளத்தினைத் தந்தருள்வாய்

  51. நோயில்லா நீண்ட ஆயுளைத் தந்தருள்வாய்
  52. நோன்பு கொண்டு தூய உள்ளம் தந்தருள்வாய்

  53. நிறைவேறும் ஆசைகளைத் தந்தருள்வாய்
  54. நிறைவான மனதினைத் தந்தருள்வாய்

  55. பசித்தோர்களுக்கு அமுதினைத் தந்தருள்வாய்
  56. பஞ்சம் தீர்க்க வழியினைத் தந்தருள்வாய்

  57. இழந்த செல்வங்களைத் தந்தருள்வாய்
  58. இருள் நீக்கி ஒளியைத் தந்தருள்வாய்

  59. உயர்வு தாழ்வில்லா சமுதாயம் தந்தருள்வாய்
  60. உயர்ந்தோர்களுக்கு இரக்க குணம் தந்தருள்வாய்

  61. மக்களைக் காக்கும் ஆட்சியைத் தந்தருள்வாய்
  62. மக்களைப் போற்றும் தலைவர்களைத் தந்தருள்வாய்

  63. சுயநலம் அழித்து பொதுநலன் தந்தருள்வாய்
  64. சுரக்கும் இன்பம் கோடி கோடித் தந்தருள்வாய்

  65. லஞ்சம் வாங்காத கைகளைத் தந்தருள்வாய்
  66. லட்சியப் பயணத்தில் வெற்றியைத் தந்தருள்வாய்

  67. காலமும் நேரமும் கைகொடுக்கத் தந்தருள்வாய்
  68. காணும் திசையெங்கும் நீயாக தந்தருள்வாய்

  69. நரகம் வழி அடைத்து சொர்க்கம் தந்தருள்வாய்
  70. நரன் வாழ்வு போக்கி தேவன் வாழ்வு தந்தருள்வாய்

  71. கலைகளைக் கற்கும் திறனைத் தந்தருள்வாய்
  72. கலையாத கல்வியினைத் தந்தருள்வாய்

  73. காண்பவர் கண்படும் அழகினைத் தந்தருள்வாய்
  74. கண்டு வணங்கும் பணிவினைத் தந்தருள்வாய்

  75. மாய வலையில் சிக்காதபடி வரம் தந்தருள்வாய்
  76. மாய வடிவைக் காண அகக்கண்களைத் தந்தருள்வாய்

  77. எந்நாளும் உனைப் போற்றும் நாவினைத் தந்தருள்வாய்
  78. எந்நிலையிலும் மறவாத உள்ளத்தைத் தந்தருள்வாய்

  79. எங்கும் எதிலும் மகிழ்ச்சியைத் தந்தருள்வாய்
  80. எட்டுத் திசைகளில் அமைதியைத் தந்தருள்வாய்

  81. பாசமுடன் வாழ்த்தும் நல்இதயங்களைத் தந்தருள்வாய்
  82. பாவத்தை அழித்து வளமான வாழ்வினைத் தந்தருள்வாய்

  83. பேராசை கொள்ளாத மனதினைத் தந்தருள்வாய்
  84. பேர் சொல்லும் பிள்ளைகளைத் தந்தருள்வாய்

  85. நாட்டுக்குநாடு ஒற்றுமையினைத் தந்தருள்வாய்
  86. நாடு போற்றும் சாதியினைத் தந்தருள்வாய்

  87. பயம் வரும்போது உன்துணை தந்தருள்வாய்
  88. பேய் பிசாசு ஓட்டும் துணிவைத் தந்தருள்வாய்

  89. ஏமாறாமல் விழிப்புணர்வைத் தந்தருள்வாய்
  90. ஏன் என்கிற கேள்விகளுக்கு பதிலைத் தந்தருள்வாய்

  91. ஊசல் இல்லாத நிலையினைத் தந்தருள்வாய்
  92. ஊக்கம் கொடுக்கும் நெஞ்சத்தைத் தந்தருள்வாய்

  93. கொடியவர்களிமிருந்து விடுதலைத் தந்தருள்வாய்
  94. கொடுத்து சிவக்கும் கரங்களைத் தந்தருள்வாய்

  95. மயக்கம் கலக்கம் குழப்பமில்லாமைத் தந்தருள்வாய்
  96. மதி கொண்டு விதியை வெல்லத் தந்தருள்வாய்

  97. தோல்விகளைத் தாங்கும் மனதினைத் தந்தருள்வாய்
  98. தோல்வி காணும்போது ஆறுதல் தந்தருள்வாய்

  99. வேதனைகளை சாதனைகளாக மாற்றித் தந்தருள்வாய்
100. வேர் போன்று உறுதியினைத் தந்தருள்வாய்

101. சோர்வின்போது சத்தான மந்திரம் தந்தருள்வாய்
102. சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பைத் தந்தருள்வாய்

103. எளியோருக்கு அன்பு கருணை தந்தருள்வாய்
104. எண்ணுபவர்களுக்கு உதவிகளைத் தந்தருள்வாய்

105. கடன்படாத செல்வத்தினைத் தந்தருள்வாய்
106. கடல் அலையைப்போல பாசத்தினையைத் தந்தருள்வாய்

107. உன்னை ஆட்கொள்ளும் உரிமையைத் தந்தருள்வாய்
108. உன்னையே சரணாகதி அடைய தந்தருள்வாய்


   

நன்றி 
வணக்கம். 

1 comment: