Pages

Wednesday, 18 July 2012

உள்விதி மனிதன்- பாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள்விதி மனிதன் - HAPPY FAT MAN IS INSIDE YOU


உள்விதி மனிதன் ( சம மனிதக்  கொள்கை) - 
 ( EQUAL HUMAN POLICY)

ஆன்மீக கட்டுரை - மதுரை கங்காதரன் 


முன்னுரை 
வாழ்க்கைப் பயணத்தின் முதலும் முடிவும் 
 முழுநீளக் கட்டுரை 
மதுரை கங்காதரன் 

     உலகத்தில் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியது மனித வாழ்க்கை! இந்த பூமி எவ்வளவோ ஜீவராசிகளை சந்தித்திருக்கின்றன. ஆனால் மனிதனை படைத்த பிறகுதான் அவன் ஏன் எதற்காகப் பிறக்கிறான்? என்ன சாதிக்கப் போகிறான்? அல்லது எதைக் கொடுக்கப் போகிறான்?என்று சற்று ஆழமாகவே யோசிக்க வைத்துவிட்டது எனலாம். எல்லா ஜீவராசிகளுக்கும் வாழ்க்கை வழிமுறைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒரேமாதிரியாய் அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கின்றன. ஆனால் மனிதனோ மாறிக்கொண்டே இருக்கின்றான். ஏன்? என்று கேட்டால் அவனுக்கு 'ஆறு அறிவு' இருக்கின்றது. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாய் சிந்தனை செய்ய முடியாது. ஒரே மாதிரியாய் காலத்தைத் தள்ளவும் முடியாது! என்று வாதாடுகிறான்.

     'மானிடனாய் பிறத்தல் அரிது' என்றிருந்தது ஒரு காலம். ஆனால் இன்று 'மானிடனாய் பிறக்காமல் இருத்தல் பெரிது' என்று பேச வைத்துவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்? இவைகளைச் செய்தவன் யார்? எதற்காக இப்படி ஆட்டிப்படைக்கிறான்? ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்வோம். அவனை ஏதோ ஒரு காரணத்திற்காக யாரோ ஒருவனோ அல்லது பலரோ (எதோ ஒரு சக்தியோ அல்லது பல கண்காணாச் சக்தியோ)  ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்றே வைத்துக்கொள்வோம், அதை சரி, என்று ஒத்துக் கொண்டால் அவனுடைய / அவர்களுடைய  எண்ணங்களெல்லாம் நடந்தேறியதா? அவன் / அவர்கள் நினைத்த செயல்கள் முடிந்துவிட்டதா? அல்லது இன்னும் தொடர்கிறதா? என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் முடிவு....? இதுநாள் வரை இன்னும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவே இருக்கின்றதே? என்கிற கேள்வி எழுவது நியாயமே.

      மனிதனுடைய வாழ்க்கைமுறை மாத்திரம் முறையில்லாமல் மிகவும் வேகமாக மாறி வருகின்றன. அதற்கெல்லாம் அறிவுதான் காரணமா? அப்படியென்றால் அந்த அறிவை கொடுப்பவன் யார்? அவனும் ஒரு மனிதனாய் இருந்தால் அவனின் ஆயுள் எவ்வளவு காலம் இருக்கும்? என்று யோசிக்க வைக்கின்றது. ஒருவேளை மனிதனை உருவாக்கியவர்கள் - கட்டுப்படுத்தியவர்கள் - ஆட்சி செய்தவர்கள் - ஆட்டிப்படைத்தவர்கள் இருக்கின்றார்களா? அல்லது  எப்போதோ இறந்துவிட்டார்களா? கட்டாயம் அவர்கள் / அந்த சக்தி (விதி - Program) இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் மனிதன் ஏதோ ஒரு விதி (Program) என்கிற சக்தியினால் தானே காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி மாறி செயல்பட்டுவருகின்றான் என்று அர்த்தம். அப்படியென்றால் விதியை யார் எழுதுகிறார்? அதன் சக்தி இத்தகைய பல கேள்விகளுக்கெல்லாம் பெரிய பெரிய மகான்கள், முனிவர்கள், ஆன்மீகவாதிகள், அறிஞர்கள் என்று யாரிடத்திலிலாவது ஏதோ ஒரு வழியில் அந்த சக்தியைப் (விதி - Program) பற்றி சொல்லி வைத்திருப்பார்கள் அல்லது சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்பதே உண்மை.

      அப்படியென்ன அந்த (விதி) சக்தியில் இருக்கின்றது?. எங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு? என்று நீங்கள் என்னிடம் கேட்பது புரிகிறது. அவர்களும் மனிதர்கள்தானே! அவர்கள் என்ன புதிதாகச் சொல்லப் போகிறார்கள்? என்று அறிவாளிகளும் முட்டாள்களும் பேசிக்கொண்டு வருக்கின்றனர்.

    மனிதனில் கோடான கோடி பேர் வாழ்ந்து மறைந்துவிட்டனர். அவர்களெல்லாம் சொன்னது என்ன? என்று பொதுவாகச் சொல்லப்போனால்...

மண்ணுலகம் மெய் என்பார்கள் வாழ்கிறவர்கள்
விண்ணுலகம் மெய் என்பார்கள் வீழ்ந்தவர்கள் - ஆனால்
வாழ்கிறவர்கள் ஒருநாள் வீழ்ந்தே தீருவர்
இதுதான் மெய்யான வாழ்க்கைப் பயணம்!

மேற்கண்ட வாசகத்தைச் சொல்லாத ஞானிகளே இல்லை என ஆணித்தரமாகச் சொல்லலாம்.

  மனிதனின் கரு உருவாகும்போதே அவன் பூமியில் பிறக்கப்போகிறான் என்ற அறிகுறி தெரிய ஆரம்பித்துவிடுகிறது. அவனே உள்விதி மனிதன்! அதாவது அவன் வாழ்வின் ஆரம்பமும் முடிவும் அந்த விதி படியே நடக்கும். அவ்விதியை வெகு சிலரே அறிவர். மனிதன் பூமியில் பிறக்கும்போதே அன்றிலிருக்கும் சூழ்நிலைக்கேற்ப உருவெடுத்து அறிவினை அடக்கியபடி வெளியே வருகிறான். அப்படி வெளிவந்தவனின் வாழ்க்கைப் பயணம் நம்மால் தெரிந்து கொள்ள முடியாதா? நம்மால் உருவான நம்மைப் போன்ற மனிதன் ஏன் நம் எண்ணப்படி வளரவில்லை? என்ற கேள்விக்குப் பதில் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் புரியாத புதிராக இருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆஸ்தியைச் சேர்த்த - அடைந்த மனிதன் - தான் முடிவில் அஸ்தியாகிவிடுவோம் என்பதை மறந்துவிடுவதால்தான் இந்த முடிவா?

     அப்படியென்றால் மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும்? அதற்கெல்லாம் விதிமுறைகள், வாழ்க்கை முறைகள் இருக்கின்றவா? எப்படி வாழ்ந்தால் நிம்மதியாய் - மனநிறைவாய் - மகிழ்ச்சியாய் வாழலாம் என்றெல்லாம் கேட்கத் தோன்றும். அதற்கெல்லாம் பதில் 'ஆம்' இருக்கின்றது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் - அதிசயப்படுவீர்கள். அந்த உள்விதி மனிதனை அறிந்துகொண்டால் என்றும் மகிழ்ச்சியாய், நிம்மதியாய் இவ்வுலகில் வாழலாம். இக்கட்டுரை படித்தபின் உண்மையில் யோசித்துப்பார்த்தால் அப்படியொன்று 'இருக்கின்றது' என்று முடிவுக்கு வருவீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தெளிவு பிறக்கும். சரியான பாதை தெரியும். அதைப் பற்றி விளக்கமாக இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம்.    


நான் எழுதிய இந்த 'உள்விதி மனிதன்' என்கிற கட்டுரைத் தொடரில் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் 'ள்விதி மனிதனைப்' பற்றிச் சற்று விவரமாக எழுதியுள்ளேன். உள்விதி மனிதனைப் பற்றிப் பிறரிடம் பேசும் போதோ அல்லது அதைப் பற்றி உரையாற்றும் போதோ மக்களிடத்தில் நான் நினைத்த உணர்வோ அல்லது மாற்றமோ அல்லது புரிதலோ அல்லது அதனை ஆணித்தரமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை என்னால் பார்க்க இயலவில்லை. அது எனக்கு சற்று ஏமாற்றமே அளித்தாலும் அதைப் பற்றி பிறர் புரிந்துகொள்ளும் வகையில் எவ்வாறு கொடுக்கலாம்? என்று சிந்திக்கத் தூண்டியதே உண்மை

பெரும்பாலான மக்கள் அதிகமான நேரங்களில் வெகு யதார்த்தமாகவும், சராசரியான சிந்தனை செய்பவர்களாகவும், மேலோட்டச் சிந்தனை உடையவர்களாகவும், நிலையில்லாதச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்அவர்கள் பெரும்பாலும் புகழ் பெற்ற, அவர்களுக்கு வேண்டிய, பிடித்த அல்லது பணக்கார மக்களின் பேச்சைக் கேட்பவர்களாகவும் பார்ப்பவர்களாகவும் அதில், தங்களது மனதைச் செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள். அவைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கின்றதா? இல்லையா? என்று பெரும்பாலோர் எண்ணுவதில்லை. இந்த நிலையில் இருக்கும் அவர்களை கவர, அவர்களுக்குத் நன்கு தெரிந்த, அவர்கள் விரும்பும், மதிக்கும், பொதுவாக ஏற்றுக்கொள்ளும் விதியின் வழியாக இந்த 'உள்விதி மனிதன்' சிந்தனையினை எளிய உதாரணங்கள் மூலம் அவர்களை ஏற்கச் செய்வதில்தான் எனது வெற்றி இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன்.

 அது எப்படி இருக்கிறதென்றால்? திருக்குறள் சபையில் திருக்குறளைப் பற்றிப் பேசினால் அங்கிருக்கும் பார்வையாளர்கள் அந்தத் சிந்தனைகளை  முழுவதுமாகவோ அல்லது ஓரளவிற்கோ ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதே சொற்பொலிவை சாதாரண மக்கள் கூடியிருக்கும் அரசியல் கூட்டத்தில் பேசினால் அதேத் தாக்கம் உண்டாகுமா என்பது ஐயமே? ஆக, அந்தந்தக் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் நமது சிந்தனை கலந்த பேச்சானது இலேசான, எளிதான முறையில் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உரையாற்றினால்தான் ஓரளவிற்கு அவர்களிடம் சென்றடையும் என்று  எதிர்பார்க்கலாம். சிறந்த பேச்சாளர்கள், புகழின் உச்சியில் இருப்பவர்கள்  எல்லோரும் அதனை மிகச் சரியாகக் கடைபிடித்துப் புகழும் வெற்றியும் பெறுகின்றார்கள். இதுதான் அதன் இரகசியமும் கூட.

    அதன்படி நமக்குள் இருக்கும் ள்மனிதனை 'ள்விதி மனிதன்' என்று பெயர் கொடுத்தால் எல்லாப் பிரிவு மனிதர்களிடம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த உள்விதி மனிதனை மூச்சாகவோ, இரத்த ஓட்டமாகவோ, ஆன்மாவாகவோ, ஆவியாகவோ, பரமாத்மா ஆகவோ, ஜீவாத்மா ஆகவோ, உள்மனமாகவோ, சத்தியமாகவோ, மெய்யாகவோ, உயிராகவோ, இதயமாகவோ, இறைவனாகவோ, இயற்கையாகவோ, அன்னையாகவோ, பிடித்தவர்களாகவோ ஆராதனை செய்து கொள்ளலாம். ஏனெனில் விதியைப் பற்றி அறியாத, தெரியாத, நம்பாத மனிதன் இல்லை என்றே கூறலாம். தினமும் பெரும்பாலான மனிதர்கள் 'எல்லாம் என் தலைவிதி' என்றும் 'எல்லாம் விதி' என்றும் பேசுவதை நாம் பார்த்து வருகிறோம் என்பது உண்மைதானே?

தாய் வயிற்றுக்குள் குழந்தை உருவாகும்போது கூடவே உள்விதிமனிதன் என்பவன் உருவாகிவிடுகிறான். அதாவது மனிதனின் விதியை உயிராகவும், இரத்த ஓட்டமாகவும், ஆன்ம ஓட்டமாகவும் வைத்துக்கொண்டு அவனின் வாழ்க்கை சரித்திரத்தை எழுத ஆரம்பித்துவிடுகிறான். தொடக்கத்தில் குழந்தையாக இருக்கும்போது உள்விதி மனிதனுக்கு வேலை பளு குறைவு. ஆனால் வயது ஏறஏற உள்விதி மனிதனானவன், வாழ்க்கையில் மனிதன் செய்கின்றப் பாவபுண்ணியத்திற்கேற்ப விதியை எழுதுவதோடு அதற்குரியத் தண்டனையும் பலனையும் தரும் வேலைக்குப் பொறுப்பாளனாகிறான்.

ஒருவன் சட்டத்தையும், தர்மத்தையும் ஏன்? மனிதர்களையும் கூட ஏமாற்றிவிடலாம். ஆனால் உள்விதி மனிதனை யாராலும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. நாம் உறங்கும்போதும் அவன் விழித்திருப்பான். அவனுக்கு உறக்கம் என்பதே கிடையாது. நாம் செய்யும் தவறுக்கேற்ப ஏதாவது ஒரு வகையில் தண்டனை கொடுப்பான். அது நம்முடையத் தனிப்பட்டதாகவோ அல்லது நமது குடும்பத்திற்கோ, உறவிற்கோ, பிடித்தவர்களுக்கோக் கொடுக்கலாம். அதேவேளையில் நாம் புண்ணியம் செய்தால் நமக்கு ஏழேழு பிறவிகளுக்கும் நன்மைகளை வாரிவாரி வழங்குபவன்.

     உயிரே விதி! விதியே உயிர்! மனித உயிரானது நல்ல உயிர், கெட்ட உயிர் என்று இரண்டும் சேர்ந்த கலவை. நல்ல உயிர் விகிதம் அதிகமாக இருக்கின்ற மனிதனானவன், பிறர்க்கு நன்மை செய்பவனாகவும் அதனால் எப்போதும் மகிழ்ச்சி உடையனவாகவும் இருப்பான். மாறாக, கெட்ட உயிர் விகிதம் அதிகமாக இருக்கின்ற மனிதனானவன், பிறர்க்கு தீமை செய்பவனாகவும் அதனால் பெரும்பான்மையான நேரங்களில் துன்பப்பட்டே இருப்பான். ஆகவே, ஒரு மனிதன் மேன்மையாவதும், துயரப்படுவதும் அவன் செய்யும் நன்மை, தீமை பொறுத்துள்ளது.

     அந்த உள்விதி மனிதன்தான், மனிதனுள் இருந்துகொண்டு அம்மனிதனை ஆட்டுவிக்கிறான். எல்லாச் செயலை செய்யவும் வைக்கிறான். அதனால்,  உள்விதி மனிதன் உங்களை விட எல்லா விதத்திலும் முதன்மையானவன். அவன் உத்தரவில்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அவன் உங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிடும் எஜமான்- சிறந்த வழிகாட்டி - குரு - ஆசான் - உதவிக்கரம் நீட்டுபவன் - சர்வ வல்லமைகாரன் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மனிதனுக்கு அறிவு, திறமை, புத்தி, வீரம் எதை வேண்டினாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளித் தருபவன். அந்த உள்விதி மனிதன் நியாத்திற்குத் தோள் கொடுக்கும் தோழனாகவும்,  அநியாத்தை அழிக்கும் எதிரியாகவும் விளங்குபவன்.

உள்விதி மனிதனானவன், அம்மனிதன் செய்யும் பாவத்தின் தன்மையைப் பொறுத்து மன்னிக்கவும், தண்டனை கொடுக்கவும், பிரச்சனை கொடுக்கவும், உயிரை எடுக்கவும் செய்யும். அதேபோல், புண்ணியத்தின் தன்மையைப் பொறுத்து நன்மையும், மகிழ்ச்சியையும், ஆயுளைக் கூட்டவும் செய்யும். உயிரை எடுக்கும் எமன்கூட இந்த  உள்விதி மனிதனைப் பார்த்துச் 'சலாம்' அடிக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது. உள்விதி மனிதன், தனது நல்லது கெட்டனவற்றின் எச்சரிக்கைகளை 'அசிரீ' குரலாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்து அம்மனிதன் மட்டும் கேட்கும்படி பேசும். அதன்படி நடக்கும் மனிதனுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாது. காலநேரம் பார்க்காமல் திடீர் திடீரென்று தண்டிப்பதும், திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் கொடுப்பதும் அதுவேஉள்விதி மனிதனை நட்புடன் ஏற்றுக்கொண்டால் உங்களது வாழ்வில் உன்னதம் உண்டாகும்.

இந்த உலகத்தில் தினமும் எங்கேயோ ஓரிடத்திலோ அல்லது பல இடங்களிலோ, நம் அறிவுக்கும் கண்களுக்கும் எட்டாதவாறு இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தவறாமல் சிலபல செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவை என்னவென்றால், எதிலாவது இயற்கையாகப் புதியது தானாக உருவாவதும்மனிதனால் புதியதை உருவாக்குவதும் அல்லது ஏற்கனவே உள்ளதைப் புதுவிதக் கோணத்தில் படைப்பதும், ஏதாவதுப் புதிதாகச் சொல்வதும் ஆகும். அதற்கு காரணம், கால மாற்றத்தை ஈடு கொடுக்க வேண்டியக் கட்டாயமாகும். அதற்கு, இரு நிகழ்வுகள் தேவைப்படுகின்றது. அதாவது அறிவியலில் இல்லாது ஒன்றைப் புதியதாகக் கண்டுபிடிப்பது (Invention) என்றும்புவியியலில் நமது கண்களுக்குத் தெரியாமல் புதைந்து இருப்பதை அல்லது கண்களுக்குத் தெரியாத விசயங்களை கண்டுபிடிப்பது (Discovery) என்றும் சொல்வார்கள்.

 உதாரணமாக பூமிக்கடியில் புதைந்திருக்கும் தங்கம், வெள்ளி, வைரம், எண்ணெய் வளங்கள், நிலக்கரி, இரும்பு போன்றவைகளை Discovery வகையைச் சேர்ந்தது. அதாவது நமது கண்களுக்குப் புலப்படாத விசயங்களை பிற சாதனங்களின் உதவியால் கண்டுபிடிப்பதை Discovery என்று சொல்வார்கள். மேலும் உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், நிலவில் நீர் இருப்பதை இசுரோவிஞ்ஞானிகள் கண்டுபிடித்ததையும், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழும் சூழ்நிலை இருக்கிறது என்று நாசாவிஞ்ஞானிகள் கண்டுபிடித்ததையும் கூறலாம்.

    ஆனால் Invention என்பது எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியாக இதற்கு முன் இல்லாததை புதிதாகக் கண்டுபிடிப்பது. அவைகள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை கலந்தோ, இணைத்தோ, மாற்றம் செய்தோ கொடுப்பதாகும். அதற்கு உதாரணம் இப்போது வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கு துறைகளான விவசாயம், மருத்துவம்பொறியியல், கணினி, தகவல் தொழில் நுட்பம், இரசாயனம், கட்டுமானம், இயந்திரவியல், அறிவியல், பௌதிகம் போன்றவைகள் இதில் அடங்கும்.  

   இவைகளெல்லாம் எதற்காகவென்றால் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப மாறிவரும் மனிதர்களின் எண்ணங்களுக்கேற்ப மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தால் தான் ஆறறிவு இருக்கும் மனித வாழ்க்கையில் ஒரு அர்த்தம் - ஆர்வம் - ஆனந்தம் இருக்கும்.

     ஒரு உதாரணமாக முன்பெல்லாம் தொலைக்காட்சியில் ஒரே ஒரு சேனல் தெரியும். அதில் தினமும் நமக்கு பிடிக்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்வதே பெரிது. ஞாயிறு அன்று பழைய படம். விளையாட்டு நிகழ்ச்சிக்கு தவம் கிடக்க வேண்டும். ஆனால் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள். நினைக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். அது மட்டுமா? விதவிதமான கணினி மற்றும் கைபேசிகளில் தினமும் எத்தனை எத்தனை கவர்ச்சிமிகு வரிசைகள்- வளர்ச்சிகள்- அற்புதங்கள் அரங்கேறுகின்றன. இவைகள் எல்லாம் மனிதனை மயக்க நிலைக்கு தள்ளி அவனின் அறிவை மழுங்கச் செய்கின்றதா? அல்லது அறிவை விழிப்படையச் செய்கின்றதா? என்பதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    மனிதன் இல்லாமல் உலகம் இல்லை. வாழ்க்கை இல்லாமல் மனிதன் இல்லை. அந்த வாழ்க்கையில் மனிதனுக்கு வயது ஏற ஏற பலவித பாரங்கள் வந்து சேருகின்றன. அவைகள் மனபாரம் (ஏமாற்றம், தோல்விகளால் ஏற்படுவது), கடன்பாரம் (பிறரிடம் பலவிதங்களில் கடனாக பெற்ற உதவிகள்), வாழ்க்கை பாரம் (அன்றாட தேவைக்கு அல்லாடும் நிலை), ஆசை பாரம் (கார், பங்களா, பணம், வீடு, பதவி, பலவற்றை அனுபவிக்க ஆசை), உடல் பாரம் (பசி, பிணிகள்). அப்போது உங்களது உடல் கூட பாரம் தான். அதனால் தான் அவ்வப்போது ஓய்வு தேவைபடுகிறது. ஆமாம், அத்தனை பாரங்களும் சுமப்பது யார்? என்று கேட்டால் உறுதியாக அவரவர்கள் தான். அத்தகைய பாரங்களை சுமப்பதால் தான் மனிதனின் ஆயுள் குறைகிறது. அது சரி! உங்களது பாரத்தை சுமப்பது யார்? உங்கள் எடை ஐம்பது கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களா இந்த பாரத்தை சுமக்கிறீர்கள்? எங்கே ஒரு பத்து கிலோ அளவுள்ள ஏதோ ஒரு எடையினை உங்கள் முதுகில் கட்டிக் கொள்ளுங்கள். எத்தனை வருடங்கள், எத்தனை மாதங்கள் இல்லை இல்லை எத்தனை மணிநேரம்? எத்தனை நிமிடங்கள்? உங்களால் சுமக்க இயலும்? அப்படி இருக்கும் போது உங்கள் எடையை நீங்கள் கருவில் உருவானது முதல் உங்கள் உடல் மண்ணில் புதையும் வரை உங்களிடத்தில் இருக்கும் ஒருவரால் தானே  சுமக்க முடியும்?

    உங்கள் வயது ஏற ஏற உடல் எடையும் ஏறுவது பாரமாக கருதாமல் உங்களுக்குத் தெரியாமல் யார் அவ்வாறு சுமந்து கொண்டு இருக்க முடியும்பாரத்தை மட்டுமா சுமந்து நிற்கிறார்? நடக்கிறார்! ஓடுகிறார்! பறக்கிறார்! தாவுகிறார்! யோசிக்கிறார்! சண்டை போடுகிறார்! இன்னும் என்னென்னமோ செய்கிறார்! அனைத்தும் எழுதுவதற்கு கூறுவதற்கு ஆயுள் போதாது.  இதென்ன எதிலும் இல்லாத இது நாள் வரை கேள்வி படாத புதிர் போல் இருக்கின்றதே! என்று நீங்கள் அதிசயப்படுவது போல் தெரிகின்றது! அதாவது நீங்கள் ஒன்றும் எடையில்லா அல்லது அற்ப எடை கொண்ட 'காற்று' கிடையாதே?! எந்த ஒரு பாரமும் மனிதன் போன்ற ஜீவராசிகளால் யாராவது ஒருவரால் மட்டுமே சுமக்க முடியக்கூடியது! அப்படியென்றால் மனிதனின் பாரம் கட்டாயம் ஒரு மனிதனால் மட்டுமே சுமக்க சாத்தியமானது. அவன் தான் உனக்குள் இருக்கும் அபரிவிதமான சக்தி கொண்ட விசித்திர குணம் கொண்ட விந்தைகள் பல புரியும் சக்தி கொண்ட 'உள்மனிதன்' தான் அவன்.

   இந்த உள்விதி மனிதன் தான் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை தனியே பிரித்து உங்களுக்கு வேண்டிய அறிவையும் நீங்கள் இயங்கும் ஆற்றலையும் இரத்த ஓட்டம் மூலமாக கொடுத்து உதவுகிறான். இச்செயல் உள்விதி மனிதனைத் தவிர கொஞ்சம்கூட பிசகாது எந்நேரமும் உள்விதி மனிதனைத் தவிர வேறு யாராலும் இம்மியளவு கூட செய்ய முடியாது.

  நீங்கள் அணுவாய் இருந்தது முதல் கருவாய் உருவெடுத்து மனிதனாய் மாறியது முதல் மடிவது வரை இந்த 'உள்விதி மனிதன்' தான் எல்லாவிதமான பாரத்தை சுமக்கிறான் என்கிற மிகப்பெரிய உண்மையை நீங்கள் போகப்போக நன்றாக புரிந்து கொள்வீர்கள்! பெரும்பாலும் நம்முடைய பாரம் தான் நமக்குப் பெரிதாய்த் தெரியும்! அது பற்றி மிகுந்த கவலையும் கொள்வோம். இருவர் சந்தித்தனர். தங்களது பாரங்களைப் பற்றி பேசிக்கொண்டனர். 'எனது பாரத்தை நீ கொஞ்சம் இறக்கி வை' என்று ஒருவன் கூற, மற்றொருனோ 'என் பாரத்தையே என்னால் இறக்கி வைக்க முடியவில்லை! உன் பாரத்தை எப்படியப்பா இறக்கி வைக்க முடியும்? என்று கூறினானாம். இங்கு பாரம் என்பது 'வாழ்க்கைச் சுமை' என்கிற பொருள்.

     மூடியிருக்கும் உங்களது பெட்டியில் நீங்களாக திறந்து பார்த்து அதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளாத வரையில், அல்லது உண்மையில் எல்லாம் தெரிந்த ஒருவர் அதில் உள்ளதை உள்ளபடியே உங்களுக்குச் சொல்லாத வரையில் உங்களுக்கு அதில் என்னென்ன உள்ளது என்று தெரியவே தெரியாது! அதில் இருப்பதை நான் சொல்கிறேன்என்று சொல்லும் பலர் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உன் பெட்டியின் வெளித்தோற்றத்தை பார்த்து விட்டு, அல்லது யாரோ ஒருவர் கூறியதை கேட்டு அல்லது தாமாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்து அல்லதுஉன்னிடத்தில் என்ன சொன்னால் மகிழ்ச்சி அடைந்து அதற்கு பிரதிபலனாக அதிக காணிக்கை கொடுப்பாய்! என்று மனிதனின் ஆசைக்குத் தகுந்தவாறு பேசித் தான் இது நாள் வரை பிறரை ஏமாற்றி பொய் சொல்லி வருகின்றனர். இங்கு 'பெட்டி' என்பது உனக்குள் இருக்கும் 'உள்விதி மனிதனைக் குறிப்பது.

   அதோடு நிற்காமல் பிறரை எளிதாக ஏமாற்ற ஏதேதோ கணக்கு போட்டு கூட்டி கழித்து பெருக்கி வகுத்து கடைசியில் அவர் ஏதோ ஒரு கிடைத்த விடையைக் கொண்டு அதன் பலன்களையும் பரிகாரங்களையும் கூறுகிறார்களே! அது சரியென்று ஒரு சிலர் கூறுவதும் அதையே வேறு ஒருவர் 'அந்த கணக்கு தவறு' என்று கூறுவதும் கடைசியில் எல்லோரையும் குழப்பி எல்லோரையும் திண்டாட வைத்து அதில் அவர்கள் குளிர் காயந்து வருகிறார்கள் என்பது தான் மெய்.

     எது நடந்தாலும் - எல்லாம் நடந்து முடிந்த பின்னர் எல்லோரும் சொல்லும் ஒரே பதில் 'நான் தான் அப்பவே சொன்னேன், கேட்டீர்களா? இப்ப பாருங்க கஷ்டப்படுறது நீஙகள் தான்? என்று சொல்லிய வேகத்தில் 'அதற்கு பரிகாரம் இத்தனை ஆயிரம் ரூபாய் கொடுங்கள்நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று கையில் உள்ள செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் கறந்த பின்னர் 'எல்லாம் உங்கள் தலையெழுத்து' என்று சொல்லி அவர்களை கழற்றி விட்டு அவர் வேலையில் கண்ணும் கருத்துமாய் செயல்பட அடுத்தவரிடம் கறக்கும் வேலையில் இறங்கிவிடுவது தான் அன்றாடம் நாம் பார்க்கும் நிகழ்ச்சி.
 
      சிலசமயம் ஒரு சில வாக்குகள் பலித்துவிடுவதால் அதுவே உண்மை என்று நம்பி அவர்களிடம் மென்மேலும் ஏமாந்து விடுகின்றனர். எத்தனை நாளைக்குத் தான் 'பொய்' வேஷம் உண்மையாகத் தெரியும். ஒரு நாள் வேஷம் கலைந்து தானே தீர வேண்டும். அப்போது தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இந்த 'உள்விதி மனிதனை' நோக்கி முறையிடுகின்றனர். சட்டியில் எது இருக்கின்றதோ அது தான் உள்ளே நுழையும். அகப்பையில் வரும். அதுபோல உள்விதி மனிதன் என்னும் சட்டியில் எண்ணற்ற பொக்கிஷங்கள் இருந்தாலும் அதை எடுப்பதற்கு ஆசையும் ஆர்வமும் உன் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கவேண்டும்.

      உங்கள் பசிக்கு நீங்கள் தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் இந்த உலகத்தை அனுபவிக்க உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும். மற்றவர்களின் அல்லது உங்கள் கூட உள்ளவர்களின் செல்வம், பணம், பேரும் புகழும், அறிவு, ஆற்றல் வீரம் போன்றவைகள் என்றுமே உங்களுடையது ஆகாது. அவற்றில் சில ஓரளவுக்கு உதவலாம். ஆனால் வாழ்க்கை முழுவதும் என்றும் அது உனக்கு உதவுவது சந்தேகமே! அது எப்படியென்றால் கண்ணாடியில் தெரியும் பணம், தங்கம், வைரம், வைடூரியம் உங்களுக்கு உதவுமா? அதுவே புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டியிருந்தாலும், அதைப் பற்றி அழகாக பேசினாலும் உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்பது இப்போதாவது உணர்வீர்களாக!

    இவ்வுலகில் மாற்றங்கள் எதில் எதில் நடைபெறுகின்றதென்றால் சமுதாயத்தில், கலாச்சாரத்தில், உறவுகளில், நடை உடை பாவனையில், பேச்சில், நாகரீகத்தில், குடும்பத்தில் ஏன் தனி மனிதனிடத்திலும் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு ஏன் ஏழை, பணக்காரனாக ஆவதும், பணக்காரன், ஆண்டியாக மாறுவதும் நம் கண் முன்னே நடக்கும் 'கண்ணா மூச்சி' விளையாட்டே அதற்குச் சான்று.

     அழகியவற்றைப் பார்ப்பது, ரசிப்பது, சுவைப்பது சிறிது நேரமே கண்ணிற்கு குளிர்ச்சி தரலாம். அதுபோல் இனியவற்றை கேட்பது சிறிது நேரமே குளிர்ச்சி தரலாம். அது இல்லாவிட்டாலும் நமக்கு ஒன்றுமே ஆகிவிடாது. ஆனால் எல்லாவற்றையும் விட 'வயிற்றுக் குளிர்ச்சி' தான் அனைத்திலும் சிறந்தது. அதல்லாமல் உயிர் வாழ்தல் முடியவே முடியாதே! அதாவது உள்விதி மனிதனின் சட்டப்படி ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் - நல்லவனாக, கெட்டவனாக, திருடனாக, கொலைகாரனாக, பொய்யனாக இருந்தாலும் அவன் வேளை தவறாமல் ஆரோக்கிய உணவை சாப்பிட்டு இருக்கும் வரையில் அவனை எமனாலும் உயிரை எடுத்திட முடியாது. உணவு தான் ஒருவன் வாழ்க்கைக்கு முக்கியம். உடல் ஆரோக்கியமும், மனவலிமையும், பசியும் பட்டினியும் தான் ஒருவன் மரணத்தை நிச்சயிக்கும். எந்த வகையிலாவது ஆரோக்கியமுள்ள ஒருவன் பசியில்லாமல் சாப்பிட்டு வந்தால் உயிர் பிழைப்பது உறுதி. இனி ஒவ்வொரு பாகமாக கட்டுரையின் வாயிலாகப் பார்ப்போம்.


பாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள்விதி மனிதன்
HAPPY FAT MAN IS INSIDE YOU.

ஆன்மீக கட்டுரை - மதுரை கங்காதரன் 


     இனிய மனிதா ! நான் தான் உன்னுள் இருக்கும்  உள்விதி மனிதன் பேசுகிறேன்! நீ வாழும் இந்த உலக வாழ்கையில் 10 வயது முதல் 100+ வயது வரை உள்ள எல்லோரும்  'நாம்  எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்றுதான் விரும்புவார்கள். அதை தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். கடைசியில் வழக்கம்போல சரியானபடி  அவனுக்கு விடையோ அல்லது மகிழ்ச்சியோ கிடைக்காமல் வாழ்க்கை முழுவதும் திண்டாடுகிறான். அவனும் விடாமல் ஆன்மீக ஞானிகள் சிலரிடத்தில் அந்த மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்? கடையில் கிடைக்குமா? பஜாரில் கிடைக்குமா? என்று அவர்களிடத்தில் கேட்டால் அவர்கள்  என்ன சொல்லுவார்கள்? 'அங்கெல்லாம் கிடைக்காது ' என்ற பதில் தானே சொல்லுவார்கள். உங்கள் வாழ்க்கையில்  எப்போதும் மகிழ்ச்சியை தருவதற்குத்தான் உனக்குள் இருக்கும் இந்த  உள்விதி மனிதன் வந்திருக்கிறேன் . உண்மையில் மகிழ்ச்சி என்பது எங்கு, எப்படி, யாரால், எப்போதெல்லாம் கிடைக்கும்? என்ற விடை தெரியாத கேள்விக்கு விடை சொல்லவே உன் முன் வந்திருக்கிறேன்.



       அருமை  மனிதா ! மகிழ்ச்சியான வாழ்க்கை, பணம் மற்றும் செல்வத்தில் கிடைக்குமா? கேளிக்கை மற்றும் விளையாட்டில் கிடைக்குமா? அல்லது உனக்குத் தெரிந்த வேறு எதிலாவது தினமும் மகிழ்ச்சி கிடைக்கின்றதா ? என்று கேட்டால் 'இல்லை' என்றோ , ஏதோ ஒரு சில நேரத்தில் கிடைக்கிறது என்ற பதில் தான் அநேகமாக எல்லோரிடத்திலும் வரும் . அப்படித்தானே?

        ஒருவேளை இப்படி கூட நீங்கள் நினைக்கலாம். அதாவது உலகில் உள்ள கோடிஸ்வரர்கள் , பெரிய அரசியல்வாதிகள், சிறந்த டாக்டர்கள், சினிமாவில் உள்ளவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் கட்டாயம் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள் ! சரிதானே. ஆனால் உண்மையில் அவர்கள் கூட ஏதோ சில காரணங்களினால் மகிழ்ச்சியை தொலைந்துவிட்டு கஷ்டமான சூழ்நிலையில் தான் இருக்கின்றனர் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது. அப்படியே எடுத்துக்கொண்டால், பின்பு யார் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்? அப்படிப்பட்ட "மகிழ்ச்சியான மனிதன்" உண்மையில் இருக்கின்றானா? என்று என்னிடம் கேட்டால் 'நான் ஆமாம் 'என்று தான் சொல்லுவேன்.

   இந்த  பதிலை கேட்டவுடன் 'என்ன? என்ன?'வென்று ஆச்சரியமாய்  பார்ப்பது  தெரிகின்றது. அதன் பதிலை நானே சொல்கிறேன். உலகில் உள்ள எல்லா மனிதனும்   மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறான். ஆனால் நீ காணும் மனிதன் அல்ல. அவன் வெளி மனிதன்? எல்லா மனிதனில் 'உள்விதி மனிதன்' ஒருவன் இருக்கிறான். அவன் தான் எப்போதும் மகிழ்ச்சியான மனிதன். என்ன புதிர் போடுகிறாயா உள்விதியாவது? மனிதனாவதுன்னு இருக்கிறதாவது? அதெப்படி எனக்குத் தெரியாமே எனக்குள்ளே ... எப்படி ?? ...ஆயிரம் கேள்விகள்  உனக்குள்ளே ஓடுவது தெரிகின்றது.இதோ  அதற்கான விளக்கங்கள் ..

          அன்பு மனிதா ! உனது உடம்பில் மகிழ்ச்சி தரக்கூடிய அங்கங்கள் எவை? எவை? என்று உனக்குத்தெரியும் . இருந்தாலும் மீண்டும் நானே சொல்கிறேன். அவைகள் கண்கள், மூக்கு, நாக்கு, காதுகள் மற்றும் உணர்வுகள் இவைகளெல்லாம் மனிதனின் வெளியில் இருப்பவை. விஞ்ஞானத்தின் படி வெளியில் எது இருக்கின்றதோ அதற்குச் சமமாக உள்ளேயும் இருக்க வேண்டும். ஆக மனிதனுக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று நான், உள்விதி மனிதன் மற்றொன்று நீ. அதாவது வெளி மனிதன். 

   மதிப்பு மிக்க மனிதா ! உள்விதி மனிதனாகிய நான், எப்போது மகிழ்சியாய் தான் இருப்பேன். உடனே 'அந்த மகிழ்ச்சியை ஏன் எனக்கு தரவில்லை' என்று தானே கேட்கிறாய். மனிதா ! நான் உனக்கு தரத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீ தான் பெற்றுக்கொள்ள மறுக்கிறாய். என்னை நீ இலேசாகவும், துட்சமாகவும் , துரும்புக்குச் சமமானதாகவும் நினைக்கிறாய். ஆனால் எனக்காகத்தான் நீ இருக்கிறாய் என்று பல சமயத்தில் மறந்து விடுகின்றாய். சரி. இது நாள் வரை உனக்கு  மகிழ்ச்சியை தராமல் இருந்துவிட்டேன். ஆனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். உன்னை எப்போதும் மகிழ்ச்சியில் வைத்துக்கொள்வது என்று. அதே  சமயத்தில் நான் எப்படிப்பட்டவன்? எனக்கு என்ன என்ன பிடிக்கும்? என்னுடைய குணாதிசியங்கள் எவை எவை என்று நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் காட்டும் நல்வழியில் தான் நீ எப்போதும் செல்ல வேண்டும். அவ்வப்போது நீ தவறு செய்ய நேர்ந்தால் நான் எச்சரிப்பேன். எக்காரணத்தைக் கொண்டும் நீ, நான் சொல்லும் வழியிலிருந்து தவறக் கூடாது.

     இனிய மனிதா ! உள்விதி மனிதனாகிய எனக்கு எப்போதும், எதிலும், எதுவும் நல்லது மட்டும் தான் பிடிக்கும். நான் எப்போதும் நல்லதையே நினைப்பவன்,நல்லதையே செய்பவன், மகிழ்ச்சி, ஆரோக்கியம் , நன்மையை பேணி காப்பவன். எனக்கு கெட்டது  எதுவும் பிடிக்காது. அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். சில உதாரணத்தின் மூலம் உங்களுக்கு நான் விளக்குகிறேன்.



     அன்பு மனிதா ! முதலில் நீ சாப்பிடுவதை எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் அது தானே தினமும் நேரம் தவறாமல் எடுத்துக் கொள்கிறாய். அது எதற்காக? எப்படிப்பட்ட உணவை நான் விரும்புகிறேன்? என்று சொல்கிறேன். நீ எனக்கு கொடுக்கும் உணவு வாய் வழியாக உள்ளே போகுமுன்னே அந்த உணவு நல்லதா அல்லது கெட்டதா என்று முதலில் வெளிமனிதனாகிய உனக்கு கொடுத்திருக்கும் மூக்கு, நாக்கு மூலம் மணம் மற்றும் சுவைக்கான சோதனை நடக்கும். இரண்டும் நன்றாய் இருந்தால் மட்டுமே நான் உள்ளே செல்ல அனுமதிப்பேன். ஒருவேளை கெட்ட  வாசனையாக இருந்தால் உடனே நீ மூக்கை பொத்திக்கொண்டுவிடுகிறாயே! அதாவது நான் சிறிய அளவு கெட்ட வாசனையைக்கூட நான் உள்ளே அனுமதிக்க மாட்டேன். அதேபோல் பிடிக்காத உணவு , கெட்டுப்போன உணவை என்னை மீறி சாப்பிட்டால் உடனே நான் அடையாளம் கண்டு மீண்டும் வாய் வழியாகவே வெளியே தள்ளி விடுவேன். அது நஞ்சாக அல்லது சாராயமாக  இருந்ததால் உடனே திருப்பி வெளியே தள்ளி விடுவேன். ஏன் சிறு கல் அல்லது தலை முடியாக இருந்தாலும் அவைகள் என்னை விட்டு தாண்டிச் உள்ளே செல்லாது. அவ்வளவு சுத்தமாக இருக்க நினைப்பவன்.

      சிறப்பு மனிதா! உனக்கு பிடிக்காத ஒலியை  கேட்டல் அதை உள்ளே அனுப்பாமல் இரு கைகளை கொண்டு காதுகளை அழுத்தி பிடிக்க வைப்பேன். அதேபோல் உன் உடம்பில் ஏதேனும் எறும்போ , பூச்சியோ ஊறினால் உடனே கைகளைக் கொண்டோ, உடம்பை ஆட்டியோ அது வெளியே விழும் வரை தட்டிவிடப் பார்ப்பேன்.  



       அருமை மனிதா ! அதேபோல் நீ புகை பிடிக்கும் போது அதை உள்ளே ஏற்றுக்கொள்ளாமல் பல முறை இருமல் மூலம் வெளியே தள்ளி விடுவேன்.  என் நோக்கம் நீ உட்கொள்ளும் உணவு சத்துள்ளதாகவும் , ஆரோக்கியம் தருவதாகவும் இருப்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பவன். அப்படிப்பட்ட நல்ல உணவை உன் உடம்பு பாகங்களுக்கு எந்த எந்த பாகங்களுக்கு கொடுத்து உன்னை பலசாலியாகவும், அறிவுள்ளவனாகவும் வைத்துகொள்பவன். அதேபோல் சத்தை உறிஞ்சி கழிவை உடனே வெளியேற வைப்பவன்.

     அன்பு மனிதா! வெளிமனிதாகிய நீ கெட்டதை  எது உள்ளே அனுப்பினால் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உன் உடம்பை சரியான சீதோஷணத்திற்குத் தக்கவாறு உடம்பிற்கு ஏற்றவாறு எந்த அளவும் மாறாமல் எப்போதும் சரியாக வைத்துக்கொள்வேன். அது என் கடமை. அப்படி மீறி அளவுக்கு உஷ்ணம் அதிகமாகவோ அல்லது வெகு குறைவாகவோ எடுத்துக் கொண்டால் உன் உடம்பை கஷ்டப்படுத்துவேன், மனதை கஷ்டப்படுத்துவேன், அதை சரி செய்யும் வரை உனக்கு வலி மற்றும் பல தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டே இருப்பேன். இதிலிருந்து தெரிகின்றதா? நான் எவ்வளவு சுத்தமானவன், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பவன் என்று. எங்கு சுத்தம் இருக்கின்றதோ அங்கு சந்தோஷம்  கட்டாயம் இருக்கும். அதுவே உள்விதி மனிதன் வாழும் இடம். அந்த சந்தோஷத்தை தான் நான் உனக்கு கொடுக்க விரும்புகிறேன். இதில் எந்த ஒரு இரகசியமும் இல்லை. இது நான் எல்லாவிதத்திலும் உனக்கு வழிகாட்டுகிறேன். உன்னோடு பேசிக்கொண்டும் இருப்பேன். 

    இனிய மனிதா! உன் வேலை பளுவில், அவசர காரியங்களினால் நான் பேசுவது உனக்கு கேட்பதில்லை, அதனால் நான் காட்டும் வழியையும் உன்னால் காண முடிவதிலை. எப்போதும் உனது அன்றாட வாழ்விலே மூழ்கிவிடுவதால் இந்த உள்விதி மனிதனை கண்டும் காணாமலும், எப்படியும் நான் உதவி செய்வேன் என்கிற நம்பிக்கையில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறாய். அது உண்மை தான். ஆனால் அதுவும் ஒரு அளவுக்குத் தான் உதவி செய்ய முடியும். பல வேளைகளில் உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி மிக அதிகமாகிவிடுவதால் நான் அடையும் மகிழ்ச்சி உனக்கு கிடைப்பதில்லை. இன்று முதல் எனக்கும் உனக்கும் உள்ள இடைவெளி இருக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நான் அடையும் மகிழ்ச்சி இம்மியளவு கூட குறையாமல் உனக்கு கொடுக்க உத்தேசித்துள்ளேன்.  அதற்கு நான் எப்போதும உனக்கு ஆலோசனை சொல்பவனாகவும், நல்ல வழி  காட்டுபவனாகவும், உன்மனத்திற்கு எப்போதும் நல்ல அறிவுறை சொல்பவனாகவும் இருக்கப்போகிறேன். என் செயல்பாடுகள் இனி வரும் காலங்களில் உனக்கு எப்போதும் மகிழ்ச்சியையே தரும். அந்த மகிழ்ச்சி கடலில் மூழ்கி அழகிய நன்முத்துக்களை எடுக்கத் தயாராக இருப்பாயாக!                  

  
இன்னும் பலவற்றை சொல்ல மீண்டும் வருவேன். ..           




             

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

3 comments: