உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
சமமனிதக் கொள்கை
பாகம் : 31 வயதானவர்களுக்கு உள்விதி மனிதன் செய்யும் உதவி-
INNER MAN'S HELP TO AGED PEOPLE
என் இனிய மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் ஜீவ ஓட்டத்துடன் பேசுகிறேன். என்னைப்பற்றி இப்போது சற்று தெளிவாக புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். மனிதா! ஞானம், நல்ல செயல்கள், அறிவு, உணர்வு, ஆயுள், கல்வி, ருசி இவைகள் போன்றவைகளெல்லாம் பிறர் உனக்கு அன்பளிப்பாகவோ, தானமாகவோ, பணம் கொடுத்தோ வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது உன்னால் முடியவே முடியாது.
நேசமுள்ள மனிதா! உனக்குத் தேவையென்றால் அதை அடைவதற்கோ அல்லது அதை பெறுவதற்கோ நீ தான் முழு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அவைகள் வெறும் அருளினாளோ, பக்தியினாலோ, செல்வங்களினாலோ, தீட்சையினாலோ, பாடுவதினாலோ, ஆடுவதினாலோ, படித்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதினாலோ, பேசுவதினாலோப் பெற முடியாது. உன் செயலினால் தான் அதை அடைய முடியும். வேண்டுமென்றால் அவர்களின் துணையை நாடலாம் . அறிவுரையை பின்பற்றலாம். ஆனால் செயல் முக்கியம். அதைப் பொருத்து தான் உனக்குப் பலன் கிடைக்கும்.
அன்பு மனம் கொண்ட மனிதா! மேலும் இவைகளைத் தருகிறவர்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அப்படியிருந்தாலும் அதை எவ்வாறு கண்டுகொள்வது என்ற சந்தேகம் உன் மனதில் எழலாம் ! அது கண்டு கொள்வது ஒன்றும் பிரமாதமில்லை. யார் ஒருவர் உன்னுடையப் பசியை தள்ளிப்போடும் செயல் செய்கிறார்களோ அவர்களே நீ தேடிக்கொண்டிருக்கும் குருக்கள், மகான்கள்! மனிதா! உன்னாலும் அந்தப் புனிதமான, தூய்மையான நிலையை அடைய முடியும். அதற்கு உனது கடமையை தினமும் தவறாது அன்புடனும் நல்ல எண்ணங்களுடன் பிறர்க்கு நன்மை தரும் செயல்கள் செய்தாலே போதுமானது. நீயும் ஒரு மகானின் அந்தஸ்து அடையலாம். அதற்கு இந்த உள்விதி மனிதனின் ஒத்துழைப்பு உனக்கு எப்போதும் உண்டு. ஏனெனில் மனித பிறப்பு எடுத்திருக்கும் எல்லோரும் இத்தகைய நற்கதி அடைய வேண்டுமென்பதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அப்போது தான் நீ நினைக்கும் செயல்கள் மகிழ்ச்சியாக நடக்கும்.
பெருமைக்குரிய மனிதா! இந்த நவநாகரிக கணினி உலகில் பலர் தங்களை அண்டியிருக்கும் சற்று வயதானவர்களைக் (தாய் தந்தை மற்றும் உறவினர்கள்) கீழ்த்தரமாகவும், இளக்காரமாகவும், மரியாதை இல்லாமல் பேசுவதும், வேண்டாதவர்களைப் போலவும், அவர்கள் ஒரு சாபக்கேடு போலவும் நடந்துகொள்ளும் விதம் எனக்கும் மிகவும் துக்கத்தை தருகிறது. அவர்கள் தங்களுடைய ஒரு சாண் வயிற்றுக்காக உன்னிடத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனை தருகின்றது. நீயே இவ்வாறு நினைத்தால் நான் எப்படி உன்னிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்? உன்னிடத்தில் இதைவிடக் கடுமையாக நடந்துகொள்ள முடியும்!
பாசமுள்ள மனிதா! உனக்காக, உன் மகிழ்ச்சிக்காக எவ்வளவோ அற்புத படைப்புகளை படைத்துள்ளேன். அதற்கு உன்னிடத்தில் எந்த ஒரு விசுவாசமும், பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த வயதானவர்கள் தானே உன்னை ஆக்கியவர்கள், படைத்தவர்கள், உனக்கு இந்த பிறவியைக் கொடுத்தவர்கள். அவற்றையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவர்களை தினமும் இம்சைபடுத்தி சுடுசொற்களைக் கொண்டு தாக்கி தினம் தினம் அவர்களின் ஜீவ ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறாயே, அந்தச் செயலுக்கு அர்த்தம் என்ன? அதற்குப் பெயர் தான் சுயநலம் என்பதா? பேராசை என்பதா? போலி அல்லது வறட்டு கெளரவம் என்பதா? அவர்களை மதிக்கக் கூடாது என்கிற எழுதாத சட்டம் நடைமுறையில் இருப்பது மனித படைப்புக்கு அவமானமாகும். அவை இனிமேலும் நீடித்தால் இந்த உலகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக நீ இப்போதிலிருந்து அவர்களின் நல்வாழ்வுக்காக கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்கொள்.
இரக்கமுள்ள மனிதா! கொசு என்று கேவலமாக எண்ணுகிறாயே, அந்தக் கொசுவுக்கும் கூட வாழ்கையில் மேல் எவ்வளவு அக்கறை அல்லது ஆசை? நம்மைப் போல் அது அனுபவிப்பதில்லை. அனுபவிக்கவும் முடியாது. தன்னுடைய ஆயுள் சில நாட்களே இருந்தாலும் அது உயிர் வாழ்வதில்லையா? மனிதனில் ஓடும் இரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் நம்மை அடித்து கொன்றுவிடுவார்கள் என்பதால் கொசுக்கள் மனிதனைக் கடிக்காமல் தானே நெருப்பில் குதித்து மாண்டுபோகின்றதா? அல்லது கொசு உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகின்றதா? அப்படியில்லையே. தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மனிதனைக் கடிக்கச் தான் செய்கின்றது. அதனால் சில இறக்கின்றது. பல உயிர் வாழ்கின்றது! கொசுவிற்கே இந்த உயிர் மேல் ஆசை. இதை போல் சில மணிநேரமே ஆயுள் இருக்கும் ஈசலுக்கும் தான் எத்தனை ஆசை !
மதிப்புமிக்க மனிதா! அதுமட்டுமா! புல் பூண்டுகள் நீ கால்பட்டு மிதித்தாலும், பிடுங்கி எடுத்தாலும், எரித்து அழித்தாலும் அது மீண்டும் மீண்டும் வளர்வது ஆசையினாலா? ஒரு சிறிய விதை கூட காய்ந்துவிடாமல் எப்படியாவது, எந்த மூலையிலாவது புதைந்து ஒரு சொட்டு தண்ணீர் கொண்டு வளரத்துடிப்பது வாழ்கையின் மகத்துவம் நீ உணருவதற்காகப் படைத்துள்ளேன்.
பொறுமையுள்ள மனிதா! இவ்வகை ஜந்துகளுக்கே உயிர்மேல் ஆசை இருக்கும் போது பலவற்றை வாழ்ந்து அனுபவித்த வயதானவர்களுக்கு உயிர்மேல் எவ்வளவு ஆசை இருக்கும் என்பதை நினைத்துப் பார். நீ வாழ்கையில் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த வகையானப் படைப்புகளைப் படைத்துள்ளேன். மனிதா! என்னால் உன்னை அசையா மரமாகவோ, பேசாத விளங்கினமாகவோ படைத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதால் என் படைப்பை யார் அனுபவிப்பார்கள்? அதற்காகவா அத்தனையும் படைத்து அதை பார்க்க உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கிறேன்?
உண்மையுள்ள மனிதா! வயது என்பது இயற்கையானது. கட்டாயம் மனிதப் பிறவிகள் மற்றுமுள்ள உயிரினங்கள் எதிர்கொண்டேத் தீரவேண்டிய காலம். அப்படியிருக்கும்போது வயதானவர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டி அல்லது மனதில் வைத்துக்கொண்டு சிலர் அவர்களைக் கொடுமை படுத்துவதை என்னால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. இனிமேல் அவ்வாறு நடந்துகொண்டால் இந்த உள்விதி மனிதன் உன்னை நிம்மதியாக வாழவிடமாட்டான்.
பிரியமான மனிதா! நீ மற்றவர்களுடைய நலனுக்காக நல்லவழியில் நல்ல செயல்கள் செய்யாமல் இருந்தால் அது மன்னிக்கமுடியாத மானுட தர்மமாகும். நீயும் ஒரு நாள் அவர்களைப் போல வயோதிகனாக மாறப்போகிறாய். அவர்கள் படும் அவஸ்தை மற்றும் கஷ்டம் நீயும் ஒருநாள் அனுபவிக்கப் போகிறாய். அப்போது நீ என்னிடம் 'எனக்கு உதவி செய்' என்று மன்றாடுவாயானால் அதற்குப் பலன் கிடைக்காது. ஏனென்றால் நீ மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறாயோ அதுபோலத் தான் உன் வாழ்விலும் பிரதிபலிக்கும் . அது தான் இந்த உள்விதி மனிதன் வகுத்து வைத்திருக்கும் சட்டம்.
நல்ல குணமுள்ள மனிதா! நீ உனது நல்ல செயல்கள் மூலம் இந்த உள்விதி மனிதனைக் கவனிப்பாயானால் நான் அதற்குப் பரிகாரமாகப் பல நன்மைகளைத் தருவேன். அப்படியில்லாமல் நீ என்னை தீய செயல் கொண்டு பழக்குவாயானால் அதற்கு உபகாரமாக உனக்குத் தீமையையே தருவேன். இது உறுதி. ஆகவே வயதான இந்த அனுபவமிக்க உள்விதி மனிதனையும், உன்னைச் சார்ந்து இருக்கும் வயதானவர்களை தினமும் நன்றாக கவனித்தாயானால் உனக்கு எப்போது மகிழ்ச்சி தான். உனது வயதான காலத்தில் இந்த உள்விதி மனிதன் உனக்கு மகிழ்ச்சி பல அளிப்பான். இதை நம்பினால் நீ நலம் பெறுவாய்.
உள்விதி மனிதனின் இந்த ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்.
வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தினமும் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சியைக் கற்றுக்கொடுங்கள்.
Very good..
ReplyDelete