Wednesday, 17 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம் - A JOYFUL NEW WORLD

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம் : 18 மனிதா ! மகிழ்ச்சி கொண்ட 
புது உலகம் செய்வோம் -
WE WILL MAKE A JOYFUL NEW WORLD


இனிய மனிதா! உள்விதி மனிதன் உன்னுடன் பேசுகிறேன்! நீ செய்யப் போகும்  செயல் நல்லதா? அல்லது கெட்டதா? என்று எனது ஜீவ ஓட்டத்தின் மூலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன்! அதை நீ உணர்ந்திருக்கின்றாயா? நீ நினைக்கும் எண்ணத்தில் அல்லது செய்யும் செயலில் ஏதேனும் தீமை விளைவிப்பதாக இருந்தால் அதை கோபமாக வெளிக்காட்டுவேன், இதயம் படபடக்கும், உடல் வேர்க்கும், உடம்பு நடுங்கும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும், மூச்சு வேகம் அதிகரிக்கும், உடலின் வெப்பம் கூடும், எதோ ஒருவித பயம் உடல் முழுவதும் பரவும், யாரை பார்த்தாலும் ஓடி ஒளிந்து கொள்ளச் சொல்லும். குற்றஉணர்வு எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இவைகளெல்லாம் எனது ஜீவ அல்லது இரத்த ஓட்டமே செய்கின்றது. இந்த உள்விதி மனிதனின் எச்சரிக்கை என்று புரிந்து கொள். அந்த தீய செயலுக்கு நான் உடந்தை இல்லை என்று இப்படிப்பட்ட உணர்வின் மூலமாக உனக்கு உணர்த்துகிறேன் என்பதை இப்போதாவது தெரிந்துகொள்.அன்பு மனிதா! உனக்குள் மேற்கூறிய செயல் நடக்கிறதென்றால் அந்த செயல் செய்யலாமா! வேண்டாமா! என்று என்னுடன் வாதம் செய். உனக்கு அதிக சக்தி தருகிறேன். அந்த நடுக்கத்தை நான் போக்குகிறேன். நீ  திணறாவண்ணம்  தைரியம் தருகிறேன். என்னுடன் பேசும்போது உனக்கு அனைத்துவிதமான பயம் நீங்கும். இனி உனக்கு நான் புது சக்தியைத் தருகிறேன். நான் இருக்கும் போது பயம் கூடாது.மதிப்புள்ள மனிதா! கடவுளை அறிவது பரமரகசியம் என்றும் அதை வெளியே சொன்னால் பலன் கொடுக்காது என்று பலர் சொல்லி அறிந்திருப்பாய். அது சரிதானா? பிரிய மனிதா! எந்த ஒரு ரகசியமான பொருட்களோ, செயல்களோ, எண்ணங்களோ இந்த உலகில் இருந்தால் அது மானிடஜென்மங்களுக்குப் பயன்படாது. அதைப் பற்றி நீ அதிகமாக கவலை கொள்ளவேண்டாம். ரகசியம் என்பது இருவருக்கிடையே நடக்கும் ஒருவகைப் பரிவர்த்தனை. அது சக்தியாக இருந்தாலும், அறிவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் தான் அதற்குப் பெருமை உண்டு. மதிப்பு உண்டு. அப்போது தான் பலருக்குத் தெரியும். அவர்களுக்கும் உபயோகமாகவும் இருக்கும். தெரிந்து கொள்ளாத, அறியப் படாத எந்த ஒரு ரகசியமும் உனக்கு அவசியமற்றவை. உனது வாழ்கையில் உபயோகப்படாதவை என்பதை நினைவில் வைத்துக் கொள். சொல்லப்போனால் அந்த இரகசியத்தால் உனக்கு குழப்பமும், கெடுதலும் உண்டாகும். ஏன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னைக் கொள்ளும் நஞ்சு என்றும் தெரிந்து கோள். அதனால் அவைகளின் மீது நாட்டம் கொள்ளாதே! புரிகின்றதா?பாசமுள்ள மனிதா! அதாவது ஒரு தகப்பன் நீண்ட காலம் கடுமையாக உழைத்து, பொருட்களை, பணத்தை சேர்த்து வைத்து கொஞ்சமாய் செலவு செய்து, அவருடைய மனைவி, மக்களுக்குத் தெரியாமல் கண்காணாத இடத்தில் அவருக்கு  மட்டும் தெரியும் இடத்தில் சேர்த்த செல்வங்களை ஒளித்து வைத்தார். தேவைப்படும் நேரத்தில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்து வந்தார். அவருடைய கடைசி காலத்தில் அந்த இரகசிய இடத்தை தன்னுடைய மக்களுக்கு தெரிவிக்காமலே அவருடைய ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம்  நின்று விட்டது. அந்த ரகசிய இடத்தில் இருக்கின்ற செல்வம் யாருக்குத் தெரியும். யாருக்கும் பயன்படாமல் வீணாக அல்லவா போய்விட்டது. அவர் தன்னுடைய  மக்களுக்குத் தர நினைக்காத செல்வதைப் பற்றி அவருடைய மக்கள் கவலைகொள்வார்களா? இதற்காவா அவர் கடுமையாக உழைத்து சம்பாதித்தார். அதுபோல நான் எந்தவிதமான ரகசியத்திற்கு அப்பாற்ப் பட்டவன். 

இரக்கமுள்ள மனிதா! உன் ஜனனம் உனது கண்களுக்குத் தெரியாத ஆண் - பெண் என்ற இரண்டு ஜீவ அணுக்களால் உண்டானது என்று சொன்னால் நீ நம்ப மாட்டாய். அதை என்  செயலின் மூலம் எனது மகத்தான ஆன்மா ஓட்டத்தின் சக்தியினால் காட்டவே ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அதை பொத்தி பொத்தி அந்த கரு, ஜீவ உடலாக உருவாதற்கு இந்த உள்விதி  மனிதனின் உடல், பொருள், ஆவி இந்த மூன்றையும் கொடுத்துப் பத்து மாதத்தில் ஒரு குழந்தையாக மாற்றி உன்னை போல் அனுபவிக்கவும், மகிழ்ச்சியாக இந்த குழந்தையைக் காக்கும் பொறுப்பை நான் உனக்குத் தந்திருக்கிறேன்.

அன்பு மனிதா! நீ கருவாக உருவாகி பிறகு குழந்தையாக மாறும்போது உனக்கு சுவாசம் கொடுத்து, அதற்குண்டான பக்குவத்தை கொடுத்து அவளை தாயாக்கி, புதிய ஜீவ ஓட்டமுள்ள ஜீவனை தனியாக பிரித்து இந்த பூமியில் பிறக்கச் செய்து அதனுள் ஆன்ம ஓட்டமாக இருந்து வாழ்க்கைக்குத் உதவி  புரிந்து வருகிறேன். புதிதாக ஜீவன் உருவாகும்போது எனது வேலை அதிகமாகிறது. உனக்குள்ள இந்த உலகப் பங்கை நான் உனக்கு கொடுக்கவேண்டுமல்லவா! அதற்குத் தான் இந்த உள்விதி மனிதன் எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. அதற்குள் நீ திசை மாறிப் போகநினைக்கும்போது உன்னை இழுத்து என் வழிக்கு கொண்டு வந்து, உன்னை ஆயுள்  முழுவதும் காப்பாற்றும் அந்த 'காத்தல்' வேலையை செய்யவே உனக்குள் நான் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். இனிய மனிதா! இப்போது சொல். இந்த பூமியின் ரகசியத்தைக் காக்க நினைத்து உன்னைக் கருவிலேயே முடித்துவிட்டால், என்னால் படைக்கப் பட்ட இந்த உலகத்தை யார் அனுபவிப்பது? இந்த உலகில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நீ தான் தலைவன். உனக்குத் தான் மனித உயிர்களை காக்கும் சக்தியும், அதோடு மற்ற அனைத்து உயிர்களையும் காக்கும் சக்தி உன்னிடத்தில் இருக்கின்றது. அதை அழியாதவாறு தொடர்ந்து தரவே உனக்குள் இந்த உள்விதி மனிதனாக வந்துள்ளேன். இந்த காக்கும் சக்தியை வீணாக்காதவாறும் உனது உயிர் ஓட்டம் தடைபடாமலும்  இருப்பதற்கு உதவி செய்ய வந்துள்ளேன்.பாசமுள்ள மனிதா! என்னால் தான் பாரதி உருவில் 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார். அது தான் உண்மை. அது தான் சத்தியம். 

அன்பு மனிதா! முன்பு கல்வி, வீரம், ஆன்மிகம் குருகுலம் முறையில் நடந்தது. அதில் அரச குடும்பம் மற்றும் உயர் குடும்பம் கல்வி, கேள்விகளில் கற்று திகழ்ந்தனர். மக்களைக் காக்கும் கல்வியைக்  கற்றனர். அதனுடன் ஆன்மீக ஒழுக்கத்தையும் கற்றனர். ஆனால் சதா தெய்வம், கடவுள் தொண்டு செய்து, கடவுளின் புகழை பாடிக் கொண்டிருந்தனரா? அவர்கள் கற்றது, கற்பிக்கப்பட்டது இந்த மனித குலத்திற்கு நன்மை செய்வது எப்படி? அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படித் தடைபடாமல் அளிப்பது ? அவர்களைக் காப்பது எப்படி? எதிரிகளிடமிருந்து மக்களை, நாட்டைக் காப்பது எப்படி? உணவு தானியங்கள் பஞ்சமில்லாமல் எல்லா காலத்திலும் கிடைக்கப் பெறுவது எப்படி? விவசாயத்தை மழையினால் செழுமைபடுத்துவது எப்படி? ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளைக் காப்பது எப்படி? நீதி தவறாமல் அரசாள்வது எப்படி?  போன்றவைகளைத் தான் அதிகமாகக்  கற்றுக்கொண்டனர். அது அந்தக் காலம்.இனிய மனிதா! இந்த காலத்தில் கல்வி கற்றவர்களா ஆட்சி செய்கிறார்கள்? கல்வி வாடை தெரியாதவனுக்கு கல்வி அமைச்சர் பதவி! நிதி என்றால் என்னவென்றே தெரியாதவருக்கு நிதியமைச்சர். மக்களின் நிலைமை புரிந்து கொள்ளாதவருக்கு பெரிய அமைச்சர் பதவி! விவசாயம் தெரியாதவருக்கு விவசாயத்துறை அமைச்சர். பக்கத்து நாட்டை பற்றித் தெரியாதவருக்கு வெளியுறவு துறை அமைச்சர்! இப்படி தகுதி இல்லாதவர்களை எல்லாம் அமைச்சராக்கி கொள்வதன் ரகசியம், மேல்மட்டத் தலைவர்களுக்கு எப்போதும் ஜால்ராவாக இருப்பதற்குத் தான். எல்லாம் தெரிந்த மனிதனை நிர்வாகத் திறன் இல்லாத தலைவரால் சமாளிக்க் முடியாது. ஆக இப்போதுள்ள தலைவர்களா அநேகர் தனது சொந்த லாபத்திற்கும், பெரும் புகழும் பெறுவதற்கும் மக்களாகிய உன்னைப்போன்றோரையும் என்னையுமல்லவா அடிமையாக்கிவிட்டனர். இனி இந்த நிலை நீடித்தால் மனித குலம் அவதிப்படும். கூடிய விரைவில் மக்களிடையே எழும் போட்டியினால் மனிதகுலம் அழிவதற்குள்  எல்லோரையும் காக்கும் பொருட்டு நான் உனக்குள் வந்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! எல்லோரும் உயிர் வாழவேண்டும், உணவு கிடைக்கவேண்டும் அதற்காக இலவசமாக பஞ்சபூதங்களாகிய காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு (சூரிய ஒளி ) ஆகியவை அளவுக்கு அதிகமாகவே தந்திருக்கின்றேன். உனக்கு எளிதாக இருப்பதற்காக மரங்களைக் கூட சிறிய விதைகளாகக் கொடுத்திருக்கிறேன். ஏனெனில் உன்னிஷ்டப்படி அதை எங்கு வேண்டுமானாலும் விதைத்துக் கொள்ளலாம். இப்படி இருக்கும்போது நான் படைத்த உலகத்தை நான் இருக்கும்போதே, நான் அமைத்ததை மாற்றியமைக்கத் துணிந்ததை எண்ணி வருத்தமடைகிறேன். அதாவது விவசாயம் செய்த நிலத்தை மாடி வீடு கட்டினால் பின்னால் அதுவே உனக்கு எமனாக மாறிவிடும் என்பதை உஷார் படுத்தவே நான் வந்துள்ளேன்.

பிரிய மனிதா! எந்த நாட்டில் விவசாயம் அழிகின்றதோ அங்கே மறைமுகமாக பாலைவனம் உருவாதற்கு வழிசெய்கிறாய். இதனால் இப்போது உனக்கு பணம் கிடைக்கும். ஆனால் உனது சந்ததியினர் நீ இப்போது செய்த காரியத்தை மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் அப்போது வேதனைபடுவதை நீ இப்போது நினைத்துப் பார். இதை எப்போதும் மறந்துவிடாதே! நான் இலவசமாக கொடுத்ததைக் கொண்டு, உணவு உற்பத்திச் செய்கின்ற பூமியைப் பற்றி கவலைபடாமல் கட்டாந்தரையாக்கி அதை பளிங்குகற்களால் மாட மாளிகை, கூட கோபுரங்களைக் கட்டினால் போதுமா! குடியிருக்க அழகான வீடுமட்டும் இருந்துவிட்டால் போதுமா! உணவுக்கும், தண்ணீருக்கும் எங்குபோவாய்?இனிய மனிதா! பூமிக்கு நான் தரும் இயற்கையானச் செழுமையினால் தான் மனிதனின் வாழ்க்கை மகிழ்ச்சி அடையமுடியும். ஆனால் அதை சுயநலத்திற்காக, நீ படைத்தச் சலவை பணத்திற்கு அதை அழிக்க நினைப்பதைத் தடுத்து நிறுத்தவே நான் வந்துள்ளேன். என்னுடைய தாராள மனம், பொதுவான நோக்கம், நன்மையான குணம் அனைத்தும் உன்னுடையத் திமிறினால், தீய எண்ணங்களினால் குறைந்துவருவதை தெரிந்து இனிமேலாவது சுதாரித்துக் கொள். உனக்கு மிகவும் அவசியமானதை நீ பார்த்தால் தெரிவது போல் உனது தேவைக்கும் அதிகமாக பூமிக்கு மேலேயும், உனக்குப் பயன்படாத அல்லது சிறிது மட்டும் தேவைப்படும் பொருட்களை உனக்கு கண்களுக்கு அல்லது உனது அறிவுக்கு எட்டாத அளவுக்கு பூமிக்குக் கீழே அல்லவா படைத்திருந்தேன். ஆனால் உனது அறிவினால் அதை மேலே கொண்டுவந்து உனது இடத்தில் பரப்பிக்கொண்டு வந்தால் கடைசியில் நீ நிற்பதற்கு கூட இடமிருக்காது. ஜாக்கிரதை. நான் எண்ணுவதற்கு நேர் மாறாக, தலைகீழாக போனால் மனித இனத்தை நானே அழிந்துவிட நேரும். எனது ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை கூட அழிக்க வல்லது. இப்போதே தண்ணீர்  கொடை குறைந்து சூரிய வெப்பக் கோடை அதிகரித்து வருகின்றதா! ஏன் இந்த மாற்றம். நீயாக நிறுத்தாவிடில் எனக்கு யாருக்குள் புகுந்து எப்படி நிறுத்துவது நன்றாக அறிவேன். அதற்கான தருணம் வந்துவிட்டதால் நீ இதுநாள் வரை தேடியும் கிடைக்காமல் நானாகவே வந்துள்ளேன்.

மதிப்புமிக்க மனிதா! இந்த மாற்றம் நீடித்தால் நான் படைத்த இந்த உலகில் நானே அழிந்துபோக நேரிடும். அதை தவிர்க்கத் தான், என்னையும், உன்னையும் காப்பாற்றிக் கொளவதற்கு உன் மூலமாகப் பல நன்மைதரும் காரியங்களைச் செய்யப் போகிறேன். உனக்கு நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுத்து, பசியை நீக்கி, பஞ்சபூத அழிவிலிருந்து காக்கவே செயல்பட ஆரம்பித்துள்ளேன். இனி இந்த உலகம் புதுபிக்கப் படப்போகிறது. புது உலகம் படைத்து உன்னைப் போன்றவர்களின் ஆற்றல் மற்றும் அறிவை உபயோகித்து பெருவாழ்வு வாழ வழிகாட்டியாகவும் இருக்க வந்துள்ளேன்.பெருமை மிக்க மனிதா! என்னை உணர்வது எல்லோராலும் முடியும். ஆனால் அதை ரகசியம்.. ரகசியம் என்று ஒரு சிலர் கூறி உன்னைப்போன்றோர்களை ஏமாற்றி வருகிறார்கள். நீயோ அவர்களிடத்தில் ஏமாந்து கொண்டு உன் செல்வத்தை , பணத்தை அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டி கொண்டும், மறைமுகமாக உனது கடமையை மறக்கடித்து, தொடர்ந்து கஷ்டங்களை கொடுத்து கடைசியில் அவர்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பதைத் தடுக்கவே உள்விதி மனிதனாக உனக்குள் வந்துள்ளேன். என்னைப் பற்றி சிந்திக்காமல், என் உதவியை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் தேன் கலந்த நஞ்சான பேச்சில் மயங்கி என்னை உதாசீனப்படுத்துவதை இப்போதாவது நிறுத்திக்கொள். 

இனிய மனிதா! நான் என்னுடைய படைக்கும் தொழிலை அறிவுள்ள உனக்குக் கொடுத்தால் இந்த உலகம் சுபிட்சம் அடையும். அனைவரும் மகிழ்ச்சியடைவர் என்று இருந்த எனது எண்ணம் இப்போது பாழாய் போகுமுன் உன்னை நல்ல வழிக்கு கொண்டு வந்து எனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளவே வந்துள்ளேன். இனிமையான மனிதா! தினமும் எத்தனை ஜீவன்களின் ஆன்ம ஓட்டத்தைத தடைபடாமல் இயங்கச் செய்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் உன் முன்னால் நான் நிற்பேன். வேஷம் போடும் மனிதனை நம்புவதும், அவனுக்குத் துணை போவதை இதோடு நிறுத்திக்கொள். புது உலகம் படைப்பதற்கும், மனித ஜீவ ஓட்டங்களை காப்பதற்க்கும் இப்போதிலிருந்து நல்ல முடிவு எடுத்து அதன் படி நடப்பாயாக!

                

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
  
  

No comments:

Post a comment