Thursday, 14 March 2013

கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்' - YOU NEED A SAFETY RING

எதையும் கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? உங்களுக்கு அவசியம் தேவை 
ஒரு 'பாதுகாப்பு வளையம் ' -
 YOU NEED A SAFETY RING
நாட்டு நடப்புகள் 

நீங்கள் ஒரு காரியம்  செய்யும்போது  'அவர் சொல்லிவிட்டாரா ? அப்படியென்றால் அவர் சொன்னபடி அப்படியே செய்து விடுகிறேன் ' என்று எதையும் கண்களை மூடிக்கொண்டு செய்பவரா? ! அப்படியென்றால் உங்களுக்கு அவசியம் தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம் '. அதென்ன பாதுகாப்பு வளையம்? அதாவது தினமும்  மாறாத உங்களது இயல்பான வாழ்கையும், வாழும் விதமும் தான் பாதுகாப்பு வளையம்.!  இந்த வளையத்திற்குள் நிங்கள்  இருந்தால்  பிரச்சனைகள் இல்லாமல் உங்களது வாழ்க்கை நன்றாகவோ, சுமாராகவோ அல்லது கஷ்டப்பட்டோ ஓடிவிடும் . 
    

அதற்குக் காரணம் அதனுள் இருக்கும் வரை உங்களின் இப்போதைய  நிலைமை, உங்களுக்கிருக்கும் ஆதரவுகள்  மற்றும் சூழ்நிலை ஆகியவைகள் நன்றாக தெரியுமாகையால் அதன்படி அனுசரித்து சற்று கூட்டியோ , கழித்தோ வாழ்க்கை ஓட்டிவிடலாம். அந்த வளையத்திற்குள் இருக்கும் வரை உங்கள் வாழ்க்கை ஒரேயடியாய் உயர்ந்தோ அல்லது ஒரேயடியாய் மட்டமாக இருந்துவிடாமல் படிப்படியாய் மெல்ல மெல்ல உங்கள் வாழ்க்கை உயரும். 

        

ஆனால் சிலர் உங்களிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசி 'பேராசை' காட்டி நான் சொல்வது போல் செய்தால் வீடு வாங்கலாம், நகை , பணம், செல்வம்  எல்லாமே கிடைக்கும்' என்று அந்த பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வரும்படி ஆலோசனை சொல்வார்கள். விதவிதமாக கணித்து  யோசனை செய்து வரிசையாக பத்து வழிகள் சொல்வார்கள். அதில் குருட்டாம்போக்கில் இரண்டு மூன்று பலித்துவிடும். பிறகு என்ன! அவர் தான் எல்லாமே என்று எதை செய்தாலும் அவரின் ஆலோசனை படியே செய்வார்கள். நல்லது மட்டுமல்ல ! கெட்டவைகளும் அதில் அடங்கும்.

            

எத்தனை நாட்களுக்கு அது நடக்கும். புதுப்புது பிரச்சனைகள் வரும்போது அவரின் ஆலோசனைகள் லாபம் தராமல் நஷ்டம் தரும். 'நீங்க சொன்னது போல செய்தேன். ஆனா லட்சம் ரூபாய் நஷ்டம்' என்று பதட்டத்துடன் சொன்னால் 'லட்சம் ரூபாய் தானே! மறுமுறை வட்டியும் முதலுமாய் அஞ்சு லட்சம் கிடைக்கும் பாருங்க' என்று சொல்வார். அதுவும் நஷ்டம் பட்டு 'என்னங்க இப்படி ஆயிடுச்சி !' என்று கவலையோடு சொன்னால் 'கவலைப் படாதீங்க, இந்தமுறை உங்களுக்கு ஜாக்பாட் அல்லது பம்பர் பரிசு தான்' என்று சொல்லி அவர்களை நடுத்தெருவுக்கு விட்டுவிட்டு கிடைத்தவரை லாபம் என்று கிடைப்பதை சுருட்டிக்கொண்டு கம்பியை நீட்டிவிடுவார்கள். இந்த ஆலோசைகள் சும்மாவா சொல்வார்கள். ஆயிரக்கணக்கில் கறந்து அல்லவா சொல்வார்கள். 

    

இதற்குப் பெயர் தான் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவது என்பதாகும். ஓரிரு தடவைகள் நஷ்டப்படும்போதே சுதாரிக்க வேண்டாமா? அவர் ஒரு போலி ஆசாமி என்று விழித்துக்கொள்ளவேண்டாமா? ஓட்டாண்டி ஆகும் வரை கண்மூடித்தனமாக நம்பி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்தால் இந்த கதி தான்.

  

ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள்,விளையாட்டு வீரர்கள், நடிக நடிகையர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் நினைத்தால் தங்களின் பணபலத்தால் அத்தகையோர்களை தேடிக்கண்டு பிடித்து ஆயிரம் என்ன கோடி ரூபாய் கொடுத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டே வரலாம் இல்லையா! அவர்களும் ஏன் தோற்கிறார்கள்? நஷ்டம் அடைகிறார்கள். கடைசியில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிறார்கள். இதற்கு நூறு சதவீதம் காரணம் , அவர்கள் அதிக ஆசைப்பட்டு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவதே ! பெரும் வசதி படைத்தவர்கள் ஓரளவு சாமாளித்துவிடுவார்கள். ஆனால் நடுத்தரம் மற்றும் அடித்தட்டு மக்கள் அவ்வாறு பேராசை படும்போது இருப்பதை எல்லாம் இழந்ததோடு கடைசியில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர்களை அதள பாதாளத்தில் தள்ளும் அபாயம் வருகின்றது. 
                 
ஆகவே எதையும் கண்மூடிக்கொண்டு செய்யும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படியே செய்தாலும் எப்போதும் பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு செய்யுங்கள். அப்படி நீங்கள் நடப்பீர்களேயானால்  உங்களுக்கு வாழ்கையில் என்றும் நிம்மதி தான். எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நன்றி 
வணக்கம்.  

No comments:

Post a comment