உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்
YOU MUST ACT IN GOOD ROLE
பெருமைக்குரிய மனிதா! உலகச் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார். இந்த உலகம் எதற்காகப் படைக்கப்பட்டது என்று தெரியவரும். அதாவது நீ உனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் மற்றும் துயரம் தரக்கூடிய பாவச்செயலைச் செய்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்காக அல்ல. இந்த உள்விதி மனிதனின் படைப்புகளை ரசித்து, மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக உனக்கு ஜீவ ஓட்டத்தை கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போதாவது தெரிந்து கொள். அதுவும் எனது படைப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்குமாறு அளந்து அளந்து கஞ்சத்தனமாகப் படைக்கவில்லை. எங்கு நோக்கினும் நீ சந்தோசத்தை அனுபவிக்க, நீ காணுமிடமெல்லாம் பலவித அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளேன். ஆனால் சில சுயநலமிக்க மனிதர்களால் எல்லோரும் சமமாக அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, பேராசைகளை வளர்த்து சுயலாபத்திற்காக தகாத தீயவழியில் சென்று தன்னுடைய அறிவையும், திறமையும் பிறரை ஏமாற்றுவதில் அக்கறை கொள்வததோடு நிற்காமல் அவர்களை அடிமைபடுத்தித் துன்புறுத்துகிறார்கள்.
என் இனிய மனிதா! அத்தகைய அரக்க குணம் வாய்ந்தவர்களை அழித்து உன்னைப் போன்றவர்களின் துன்பத்தைத் துடைத்து எப்போதும் மகிழ்ச்சியைத் தரவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அதற்குண்டான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றாய் என்பதால் உனக்கு எப்போதும் உதவி செய்வதற்காக உனக்குள் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவதோடு உனக்கு வழி நடத்திச் செல்லவும் வந்துள்ளேன். மனிதா! விவரமில்லாத, விழிப்புணர்வு இல்லாத மனிதர்களின் பலவீனத்தை அறிந்துகொண்டு தகுந்த சமயத்தில் சில பலசாலி மற்றும் அறிவுள்ள மனிதர்கள் அவர்களுக்குத் தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்து உனது அறியாமை, இயலாமை, முயலாமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உன்னை ஏமாற்றி, அவர்களின் வலையில் சிக்கவைத்து வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
என் பாசமுள்ள மனிதா! உனக்கும் வேறுவழியில்லாமல் உனது வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்களிடம் ஆடு, மாடு போல் அடிமைபட்டு உனது உழைப்பை உறிஞ்சி அரை வயிறு கஞ்சி கூட வேளாவேளைக்குத் தராமல் உன்னை அவர்கள் தரும் இம்சையிலிருந்து காக்கவே உள்விதி மனிதனாக, உனது ஆன்ம ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அந்த சுயநலவாதிகள் அப்படிச் செய்கிறார்கள் என்றால் உனக்கு கிடைத்த அந்த கொஞ்சம் காசு, பணம், செல்வத்தையும் பகட்டு வேஷத்திற்காகவும், வறட்டு கௌரவத்திற்காகவும், கேலி கூத்தில் ஈடுபட்டும் , தீய பாதையில் சென்றல்லவா நீ தொலைத்து வருகின்றாய். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி உன்னை ஒழுக்கச்சீலனாக மாற்றி உனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரவே உனக்குள் வந்துள்ளேன்.
என் பிரியமுள்ள மனிதா! அப்படிப்பட்ட உனது வாழ்க்கைக் கடனிலிருந்து காப்பாற்றி உன்னை நீயே பாழ்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்தி உனக்கு நல்லவழி காட்ட ஆர்வத்துடன் உனக்குள் எழுந்தருளி நிற்கிறேன். மனிதா! இனிமேல் உன்னைச் சார்ந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் நலனுக்காக, நன்மைக்காக உனது உழைப்பை அவர்களுக்குத் தாராளமாகக் கொடு. அது உனது வயிற்றுப் பிழைப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உதவும்.
புத்திகூர்மையுள்ள மனிதா! வசதி படைத்தவர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்காதே! அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய எச்சில் கையைக்கொண்டு காக்கையை விரட்டாதவர்கள். அவர்கள் எப்படி உனது கஷ்டத்தை அறிவார்கள். மேலும் அவர்களைச் சாராதே! அவர்களின் பேச்சு தேன்கலந்த நஞ்சு. உன்னை அழிக்கவே பார்க்கும். உனக்கு எவ்வித பலனும் தராது. ஏழைசாதியினர்கள் மற்றும் நேர்மையுடையவர்கள் தான் உனக்கு உதவி செய்வர். அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடு. அது நன்மை தரும்.
ஆற்றல் கொண்ட மனிதா! நீ நினைத்தால் உனது உழைப்பை விலைமதிப்பற்றப் பொன்னாக மாற்றலாம். அதைக்கொண்டு உனது வாழ்வை செழிக்கச் செய்யலாம். அதற்காக உனது சுயநலத்தை அகற்றி உனக்குள்ள கடமைகளை தவறாது செய். பிறகு உனது குடும்பம் பட்ட கடனை அடை.க்கப் பாடுபடு. உனது குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பதற்கு உழை. பகட்டு வாழ்கையைத் துற. நிரந்தரப் 'பசியின்மை ' மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகச் சோர்வில்லாமல் உழை. அதை செய்வதால் நீ என்னுடைய 'காத்தல்' தொழிலுக்கு உதவி செய்வதுபோலவாகும்.
சக்தியுள்ள மனிதா! இந்த உலகில் சுமார் எழுநூறு கோடி மக்கள் இருக்கின்றார்கள். இன்னமும் அதிகமாவார்கள். அவர்களத்தனை பேர்களையும் நான் ஒருவன் காக்க முடியுமா என்று யோசித்துப் பார். மனிதா! பணம் கொடுத்தால் உனக்கு காட்சி தருவேன் என்றும் அந்த பணத்தைக்கொண்டு நீ நினைக்கும் எந்த செயலையும் நான் செய்துவிடுவேன் என்றும் என்னை அற்பத்தனமாக எண்ணிவிடாதே. நான் நினைத்தால் உனது பத்து மாத பிறப்பைக் கூட பத்துவருடம் தவமிருந்தால் தான் கிடைக்கும் என்று செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உனது கதி என்னவாகும்?
பண்புள்ள மனிதா! பிறப்பு என்பதை ஓரளவு கஷ்டம் கொடுக்காதவாறு அதே சமயத்தில் நீ பிறப்பின் மகிமையை அணு அணுவாக ரசிக்கும்படி பல அற்புதங்களை செய்துவருகிறேன். ஏழை எளியவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து பிறப்பை எளிமையாக்கி இருக்கிறேன். அவர்களுக்கு அள்ளி அள்ளியும் தந்துள்ளேன். இனி அதோடு அவர்களின் ஏமாளித்தனத்தை போக்கி, அறியாமையை அகற்றி அவர்களுக்குச் சிறந்த அறிவு, கல்வி, செல்வம் கொடுத்து எப்போதும் மகிழ்ச்சி கொடுக்கவே இந்த உள்விதி மனிதன் வந்துள்ளான். அதேபோல் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்குப் பிறப்பை எளிதாகக் கொடுக்காமல் சில மாதங்கள் / வருடங்கள் காக்க வைத்துத் தருகிறேன். ஏனென்றால் அவர்களின் செல்வங்கள் அப்போதாவது ஏழைகளுக்கு போய்ச் சேரவேண்டும் என்ற ஒரே காரணம் தான்.
மேன்மையுள்ள மனிதா! ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களிடம் நீ மிகவும் நேர்மையாகவும், விசுவாசமாகவும், நன்றியுடனும் நடந்துகொள். உனது நல்ல எண்ணத்தைக் கண்டு அவர்களும் நல்லவர்களாக மாறி அவர்களின் சொத்து கொஞ்சமாவது உனக்கு வந்து சேரும். அப்படி உன்னிடம் வந்த பிறகு ஒன்று மட்டும் செய்துவிடாதே. அவற்றை எக்காரணத்தைக் கொண்டும் உனது சுயநலத்திற்காக வைத்துக்கொள்ளாதே! அப்படி செய்தால் உன் கதி அதோ கதி தான்.
நன்மை தரும் மனிதா! சிலர் முகவரி தெரியாதர்கள் திடீரென்று தொழிலில் லாபமடைவர். நடிப்புத் தொழிலில் புகழ்பெறுவர். அரசியல் பதவி அடைவர். எழுதுவதில், நடனத்தில், பேச்சில் ஜொலிப்பர். இவன் வாழ்கையில் தேறமாட்டான் என்றிருந்தவர்கள் பணம், புகழ் பெறுவார். எதிர்பாராமல் சிலருக்கு உயர்ந்த பதவி, சிலருக்கு உயர்ந்த அந்தஸ்து, ராஜ வாழ்க்கை கிடைக்கும். அவைகளெல்லாம் எனது அருளினால், எனது உதவியால் மற்றவர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்பதற்காக அளிக்கப்பட்டவை. ஆனால் பணத்தைக் கண்டவுடன் அவர்கள் புத்தி மாறி அவர்களுக்குக் கிடைத்தப் பணம் பிறர்க்குப் பங்கு கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் செல்வங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பிரித்து கொடுக்க வந்துள்ளேன்.
நற்குணமுள்ள மனிதா! அத்தகைய செல்வங்கள் இனிமேல் உனக்கும் எதிர்பாராமல் கிடைக்கச் செய்வேன். அதை வைத்துக்கொண்டு நல்ல வழியில் நன்மை தரும் செயல்களைச் செய். மனிதா! உன்னுடைய செயல்கள் அனைத்தும் அறிவேன். இதுநாள் வரை மௌனமாய் இருந்த எனக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டாய். இனிமேல் நான் மௌனமாய் இருந்தால் உனக்கு ஆபத்து. இந்த உலகுக்கும் ஆபத்து. உன்னுடைய தேவைகள் எனக்குத் தெரியும். இனிமேல் என்னைப் பேசவிடு. நான் காட்டும் வழியில் நட. உன்னால் செய்ய முடியாத, மக்களுக்குக் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நான் கொடுக்கிறேன். என்னுடன் வா!
நன்றியுள்ள மனிதா! உனது பிறப்பிலிருந்து முடிவுவரைக்கும் எத்தனையோவிதமான வேஷங்களைத் தந்திருக்கிறேன். அதாவது குழந்தை, இளமை, முதுமை என்றும் அதற்கேற்றாற்ப்போல் அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளேன். அவைகளெல்லாம் எதற்காக? மனிதா! விலங்கினங்களுக்கு, பறவைகளுக்கு, புல் ,பூண்டு, தாவர மரம் செடி, கொடிகளுக்கு அதனுடைய செயல்கள் ஒன்றே ஒன்று தான் இருக்கும். அதுவும் மாறாதது. ஆப்பிள் மரத்தில் தப்பித்தவறி கூட தக்காளி பழம் காய்ப்பதில்லை. நெல் கோதுமையாக மாறுவதில்லை. கரும்பு போட்டு வாழையாக பலன் கிடைப்பதில்லை. புலி பசித்தாலும் புல் தின்பதில்லை. யானை, ஆடு பசித்தாலும் மாமிசம் புசிப்பதில்லை.
இனிமையான மனிதா! அவைகளெல்லாம் அதனுடைய செயல்களை மாறாமல், மறக்காமல் செய்து வருகின்றது. அதேபோல் பாம்பின் விஷம் அமுதமாக மாறுவதில்லை. இவைகள் இப்படியிருக்க!! மனிதனோ ???? நேற்றுவரை நல்லவனாக இருந்தவன் திடீரென்று தீயச்செயளைச் செய்கிறான். நேற்றுவரை நல்ல ஆசாமியாக இருந்தவன் இன்று பலேஆசாமியாக மாறிவிடுகிறான். அதற்கு எதிராக வெகுசிலர் தீயதைச் செய்தவர்கள் திருந்தியிருக்கிறார்கள். மனிதா! உனக்கு பிறப்பு கொடுத்ததே உன்னை நான் சந்தோசமாக வைத்துக்கொண்டு பிறரையும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வதே எனது குறிக்கோள்.
பிரிய மனிதா! நீ புத்துணர்ச்சிப் பெறுவதற்காகவே உன்னை விதவிதமாகப் படைத்துள்ளேன். அதேபோல் பல மாற்றங்களையும் தந்துள்ளேன். அனுபவம் ஏற ஏற காலத்திற்க்கேற்ப பல புதுமைகளையும், மாற்றங்களையும் உன் மூலமாக நிகழ்த்தி வருகிறேன். அதேபோல் உனக்கு உறவுரீதியாக, பொருளாதாரரீதியாக பல வேஷங்களைத் தந்துள்ளேன். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, மாமா, மாமி இன்னும் பல. அதேபோல் பொருளாதாரரீதியாக குரு, ஆசான், ஆசிரியர், வியாபாரி, வேலையாள், தொழிலாளி, அரசியல்வாதி, டாக்டர், இன்ஜீனியர், பத்திரிக்கையாளர் போன்றவைகள் உனது அறிவு, வசதி, அந்தஸ்து, படிப்புக்கேற்றபடி வேஷங்கள் கிடைக்கின்றன.
தன்னம்பிக்கை மனிதா! சிலர் குறுக்கு வழியில் பெரிய வேஷங்களைப் பெற்று அதைக் கலைக்காமல் நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்கிறான். மனிதா! சினிமா, நாடகத்தில் ஒரு நடிகன் ராஜா வேஷம் கிடைக்கும்போது அதில் வரும் மக்கள் அனைவரும் அவருக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவருக்கு அடிமையாக இருப்பார்களா? அதுபோல குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட வேஷம் போட்டு அது முடிந்தவுடன் அதை கலைத்து வேறு புது வேஷம் போட்டால் தான் மதிப்பு இருக்கும்.
பெருமை கொண்ட மனிதா! நான் கொடுக்கும் வேஷம் பலருக்கு நன்மை தருவதாக இருந்தால் மட்டுமே அதை நிரந்தரமாக போட வழிவகுத்துத் தருவேன். ஆனால் தீய செயல் செய்யும் வேஷம் போட்டால் உடனே அதனை எறியச்செய்து விடுவேன். சிலர் என்பேச்சைக் கேட்காமல் அதை நிரந்தரமாகப் போடுகிறார்கள். அது அவர்களுக்கு கெடுதலில் தான் முடியும்! என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொள்கிறார்கள். மனிதா ! உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும். எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கட்டும்.
உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...
No comments:
Post a Comment