Pages

Tuesday 30 October 2012

உள்விதி மனிதன் பாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு - DO GOOD THINGS AS A LEADER


உள்விதி மனிதன்  


சம மனிதக்  கொள்கை. 

பாகம்:24 நன்மை செய்யும் 
தலைவனாக இரு !

AS A LEADER DO GOOD THINGS 

என் இனிய மனிதா! சென்ற அத்தியாயத்தில் உனக்குள் இருந்துகொண்டு உன் அக உடலைச்  சுத்தமாக வைத்துகொண்டு இருப்பதைப் பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் என்னால் அவ்வளவு எளிதாக உன் மனதை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. அந்த தோல்வியை நான் ஒத்துக் கொண்டேத்  தீரவேண்டும். உனது மனம் அடிக்கடி சஞ்சலப்படுகிறது. நிலையாக இல்லாமல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, மனிதர்களுக்குத் தகுந்தவாறு, செயலுக்குத் தக்கவாறு திடீர் திடீரென்று மாற்றிக்கொள் கிறாய். உன்னுடைய எண்ணங்களை என்னால் அவ்வளவு எளிதாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் இனிமேலும் நான் தோல்வி அடையத் தயாராக இல்லை. உன் மனதைத் தூய்மைபடுத்தி உலகத்தைப்  புதுஉலகமாக மாற்றி, உன்னை அனைவருக்கும் நன்மை செய்யும் மனிதனாக ஜொலிக்கச் செய்வதே எனது அடிப்படையான நோக்கமாகும்.


என் பிரிய மனிதா! உனக்குள் இருக்கும் நான் கோடிக்கணக்கான வருடங்கள்  அனுபவமுள்ளவன் என்று முன்னமே சொல்லியிருந்தேன். அதாவது புலியின் வீரம், நரியின் தந்திரம், எறும்பின் உழைப்பு, குயிலின் இனிமை, மயிலின் நடனம், யானையின் பலம், சிங்கத்தின் கம்பீரம், போன்றவற்றைக்  கொண்டுள்ளேன். அவைகளை ஒன்று திரட்டி  உனது எண்ணக்கிடங்கில் இதுநாள் வரையில் நீ செய்த கெட்டவைகளை வெளியே எட்டிப் பார்க்காதவாறு அடிபாதாளத்தில் புதைத்தும், நல்லவைகளை எளிதில் கிடைக்கும்படி மேலேயும் வைத்துள்ளேன். ஆனால் நீயோ சில நேரங்களில் என் அனுமதி பெறாமல், நான் தடுத்தும் கேளாமல் தீய காரியங்களை செய்துவிடுகின்றாய். பிறகு கஷ்டப்படுகின்றாய். உன்னால் நானும் கஷ்டப்படுகிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்படி ஒரு அணுவாக இருந்து, கருவாக மாறி, மனிதப்பிறவி என்னும் உருவத்தை அடைந்து பாதுகாப்பாய் பிறக்கின்றாய். அந்தச் செயல்களையெல்லாம் நீ நினைத்துப் பார்க்கிறாயா! சொல்லப்போனால் உன்னை நானே விரும்பி உருவாக்கியவன்! அதற்காக நீ எனக்கு எவ்வளவு கோடி கொட்டிக்கொடுத்தாய்? எல்லாமே இலவசமாகத் தானே உனக்குத் தருகிறேன். நான் மிகவும் இரக்கத்துடன் இருப்பதால் தானே நீ அலட்சியமாக இருக்கின்றாய். நீ இப்போது எடுத்த இந்த  ஜென்மத்தில் நான் சொன்ன கடமைகளை மறந்து என் அனுமதியின்றி பலவித தீய செயலுக்கு செய்யத்துணிந்ததால் இப்போது நீ கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கின்றாய்.


மதிப்புள்ள மனிதா! நீ கொண்டிருக்கும் இந்த உயிர் தாங்கிய உடல், உருவம் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் பலன். என்னைத் தவிர, என் துணையில்லாமல் உன்னால் ஒரு துரும்பு கூட எதையும் படைக்க முடியாது. அதற்கு நீ இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உழைக்கவேண்டும். ஆகையால் உனக்கு இருக்கும் சிறிய ஆயுளில் என்னில் கைபோட்டுக் கொண்டு என் பின்னால் நடந்து வந்தால் நீ நன்மை அடைவாய்!


இரக்கமுள்ள மனிதா! சிலர் உன்னை அவர் முன்னே உட்கார வைத்துக்கொண்டு உனக்காக அவர்கள் நன்மை தரும் செயல்கள் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதும் செய்யாமல் சும்மா ஏதோ ஆழமாக ஏதோ யோசனை செய்வதுபோல் பாவனை செய்து 'உனக்கு அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று வீண் ஜம்பம் பேசி, வாயில் ஏதோ முணுமுணுத்து உன்கையில் ஏதோ ஒன்றைக் கொடுக்க, நீயும் அதை பயபக்தியோடு வாங்கிக் கொள்கிறாய். அதற்குப் பரிகாரமாய் உன்னிடத்தில் இருக்கும் பாடுபட்டு நீ உழைத்த செல்வத்தை அவர்களைப் போன்றோர்களுக்கு இனிமேலும் அள்ளிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவேன். எங்கே எத்தனை முறைகள் இப்படிப் போன்றோர்களுக்குச் செல்வத்தைக்  கொடுத்திருப்பாய். அப்படி இருக்கும்போது நீ கஷ்டப்படும்போது அவர்கள் உனக்கு ஏதாவது உதவி செய்தார்களா? நீ அவர்களிடத்தில் கொடுத்த செல்வங்கள் ஒருவழிப் பாதைப் போல! அங்கே போனால் திரும்ப வராது என்று இப்போது தெரிந்து கொண்டாயா? உன்னைப் போன்றவர்களிடத்தில் வாங்கிய செல்வங்களை அவர்களின் சுய தேவைக்காக அல்லவா பூர்த்திசெய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து முதலில் தூரவிலகிக் கொள். உன் தீய எண்ணங்களுக்கு அவர்களும் ஒரு காரணமாகும். நீ நினைத்து வந்த காரியம் நல்லது, கெட்டது எதுவென்று தெரியாமலே உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்தக் காரியத்தை செய்யத் தூண்டுபவர்களாயிற்றே! 

நட்பு கொண்ட மனிதா! எனது உலகம் இருள் சூழ்ந்தது. எனது ஜீவ ஓட்ட ஆற்றல் இருளில் இயங்கினாலும் எந்த ஒரு தடையும் இல்லாமல் ஒழுங்காக இயங்குகின்றது. உனது ஆற்றலோ  வெளிச்சத்தில் இயங்குகின்றது. எப்படி என்று புரிகின்றதா! உனது இரு கண்களை மூடிக்கொள். இருள் சூழ்ந்து இருக்கின்றதல்லவா! ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொள். உன் சுட்டு விரலை மெல்ல மெல்ல உன் நெற்றிக்கருகில் கொண்டுவந்து தொடு. இப்போது என்ன உணர்கின்றாய்! உன் தொடுதலால் எனது ஆற்றல் அதிகப்படுகின்றது. அந்த ஆற்றலை உனக்கு திரும்பவும் தருகிறேன். இந்த தொடுதல் மூலம் உனக்கும் எனக்குமுள்ள உறவு புதுப்பிக்கப் படுகின்றது. இப்படியே எனக்காக தினமும் சில நிமிடங்கள் பயிற்சி எடுத்துக்கொள். புத்துணர்ச்சி பெறுவாய். பலம் அடைவாய்!



பண்புள்ள மனிதா! எத்தனை வருடம் தவம் புரிந்த முனிகள், ரிஷிகள் என்றாலும் அவர்களின் தவவலிமையை அவ்வளவு எளிதாக மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. அதை பாக்களினால், மந்திரங்களினால் உனக்குக்  கொடுத்தாலும் உனக்கு முழு பலன் கிடைக்காது. அறிவும், புத்தியும், உழைப்பும், முயற்சியும் உனக்குள் இருந்தாலும் நீ பயன்படுத்தும் முறையில்  பொறுத்துதான் பலன் கிடைக்கும். ஆனால் அவ்வளவு கஷ்டம் நீ படத் தேவையில்லை. அவ்வளவு நேரம் நீ செலவழிக்கத் தேவையில்லை. அத்தனையும் மொத்த உருவமாக உனக்குள் நான் இருக்கிறேன். இந்த உலகம் சென்ற சில வருட காலமாக  அபரிவிதமான மாற்றங்கள் அடைந்துள்ளது. இனிமேலும் மாற்றங்கள் பல காணும். அதனைத் தடுத்த நிறுத்த முடியாது. உனக்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. மாற்றங்கள் என்கிற போர்வையில் தீய சக்திகள் உன்னை வாட்டிவதைக்க வந்து கொண்டிருக்கின்றன. நீ ஏமாறும் சமயம் அல்லது மயங்கும் சமயத்தில் உன்னை சாய்க்க வலம் வந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நேரத்தில் அப்படிப்பட்ட செயல்களின் வருகையை தெரிந்து கொண்டால்  பலவித கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். ஆகையால் நீ செய்யும் காரியங்களை ஒன்றுக்குப் பத்து முறை யோசித்து என்னிடம் ஆலோசித்து முடிவுகொள். ஒரு செயல் செய்யும்போது உனது உடல் சாதாரணமாக, மனம் படபடப்பாக இல்லாமல் இருந்தால் நான் 'சரி ' என்கிற உத்தரவு தந்துள்ளேன் என்று அர்த்தம். உன் உடலில் ஏதேனும் மாறுதல் உண்டானால் 'அது தவறு' என்றும் அப்படிச் செய்வதாக இருந்தால் நன்றாக பலமுறை யோசித்துச் செயல்படு. எக்காரணம் கொண்டும் அவசரமாகச்  செயல்படாதே! அது கட்டாயம் தவறாய் முடியும்.


என் அருமை மனிதா! வெற்றிக்குப்  பலவழிகள் இருக்கின்றன. உனக்குத் தேவை நிரந்தர வெற்றி. அதனால் பலருக்கு நன்மை கொடுக்கும் நல்ல வழியில் செல். மற்றவர்களைக் கெடுத்து அல்லது ஏமாற்றி வெற்றி பெற ஒருபோதும் நினைக்காதே! அது நிரந்தரமான வெற்றி அல்ல. உனது வெற்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அது மற்றவர்ககளை அழித்துவிட கூடாது. ஒரு மனிதன் தனியாக நின்று வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமான காரியம். அப்படி அடைந்தால் அது சிறிய வெற்றியாக இருக்கும். ஆனால் உனது பெரிய வெற்றிக்கு பல நல்ல மனிதர்களின் நட்பை ஏற்படுத்தித் தருகிறேன். அவர்களை உன்னுடன் இணைத்துக் கொள். அதன் ஆற்றல் பலமடங்கு பெருகும். அதன் வெற்றி இமாலய வெற்றியாகும். 

பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் காரண கர்த்தாவாகவும், தலைவனாக அவர்களை நல்ல வழிகாட்டி நடத்திச் செல்பவனாக இரு. அதற்கு வேண்டிய அறிவையும், ஆற்றலையும் உனக்குத் தருகிறேன். எளிதில் வெற்றி அடைவாய்.

ஒரு காரியம் செய்யும்போது உனக்கு நுணுக்கமான அறிவு தேவைபடுகின்றது. அதேபோல் அந்த செயலின் தன்மையை உயரே பறக்கும் பறவையைப் போல் கழுகுப் பார்வை போல் முழுமையாகத்  தெரிந்து கொள்ளவேண்டும். அந்தச்  செயலின் விளைவுகளை கடைசிவரை கற்பனை செய்து அதில் வெற்றி கிட்டுவதுபோல் இருந்தால் மட்டுமே அந்தச் செயலை செய்யத் தொடங்கவேண்டும். அதில் ஏதேனும் தவறு இருப்பதாக நீ உணர்ந்தால், அந்தக் காரியத்தை உடனே தள்ளிப் போட்டு மீண்டும் செயலில் மாற்றம் செய்து வெற்றி கிட்டும்வரை (கற்பனையில்) மாற்றம் செய்யப்படவேண்டும். அப்படிச் செய்யும்போது உனக்கு தோல்வியே அண்டாது.

என் இனிய மனிதா! நான் உனது எண்ணங்களின் மூலம் வழிகாட்டுகிறேன். அதன் மூலம் உனது வாழ்வில் முன்னேறும் சக்தி தானாக வரும். அதுவே நீ தலைவனாக மாற்றும் சக்தி என்பதை தெரிந்துகொள். நான் உனக்குக்  கற்பனையில் தன்னம்பிக்கை கொடுத்து உதவுபவன். அதை வைத்துக் கொண்டு செயலாற்றினால் உனது நல்ல குறிக்கோளை இலகுவாக அடையலாம்.

என் பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் குறைவாக பேசு. நிறையகேள். கேட்பதில் நானும் அதிகமாக பங்குகொள்ள முடியும். எனது உணர்வின்மூலம் நீ செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறேன். என் உணர்வோடு கலந்த உன் செயலால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நன்மையையும் கூட வரும். சில மனிதர்கள் சீக்கிரம் எப்படியாவது சம்பாதித்து மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக துடிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகின்றனர். அவைகள் அத்தனையும் ஒரு ஊசிமுனையளவு கூட உனது ஜீவ ஓட்டத்திற்குப் பயன்படாது. எனது ஆன்ம ஓட்டத்திற்குச் சுத்தமான காற்றும், உணவும் வேண்டும். அவ்வளவே. உன் சிறிய வயிறு தான் எனது ஜீவ வீடு. அதில் எரியும் தீபம் உனக்கு அதிக சக்தி கொடுக்கும். 

பண்புள்ள மனிதா! ஒருவேளை அளவிடமுடியாதச்  செல்வத்தை நீ சேமித்தோ அல்லது பதுக்கியோ வைத்திருப்பது போல் அளவுக்கு அதிகமாக உணவையும் சேமிக்கும் சக்தி உனக்கு கொடுத்திருந்தால் இந்த உணவு, தனி மனிதக்கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். அதனால் அனைவருக்கும் உணவு கிடைக்காத சூழ்நிலை உண்டாயிருக்கும். அதற்காகத்தான் உணவின் ஆயுளை மிகவும் குறைத்திருக்கிறேன்.. எனக்கு சுத்தமான உணவு வேண்டுமானால் அதை நீண்ட நாட்களுக்கு வைக்கவிடாமல் உடனே பிறர்க்கு கொடுக்கச் செய்கிறேன். அல்லது கெட்டுப்போக வைக்கிறேன். அதன் மூலம் மனித ஜீவன்களை  ஆரோக்கியமாகவும் அதேவேளையில்  அழிவிலிருந்துக்  காக்கும்படிச் செய்கிறேன்.   

பிரியமுள்ள மனிதா! உன்னை நீயே நிர்வாகித்தால் தான் உன் திறமை அதிகரிக்கும். அதன் மூலம் சிறந்த தலைவனாகவும் மாறமுடியும். அதற்கு பொறுமை, பொறுப்பு, சுயமுயற்சி, ஈடுபாடு, புதுமையை அறிந்து ஏற்றுக்கொள்ளுதல், மற்றவர்களின் உணர்வை மதித்து நடத்தல், 'தான்' என்ற ஆணவம் இல்லாமல் இருத்தல், நன்மை தரும் நல்ல எண்ணங்களை வளர்த்தல் ஆகிய நற்குணங்கள் தேவை. தலைமுறை இடைவெளியை அறிந்துகொண்டு நடக்கும் தன்மை, காலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப செயலாற்றும் தன்மை, பொறாமை இன்மை, மற்றவர்களை வழிநடத்தும் தன்மை, மற்றவர்களை மரியாதையாய் ஏற்றுக்கொள்ளும் தன்மை, இரக்க குணம், மனித நேயம் கடைசியாக என் ஜீவ ஆற்றல் அனைத்தும் உனக்கு வந்து சேரும். அவ்வாறு செய்வதினால் நீ மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத்  திகழ்வதோடு வழிகாட்டியாகவும் இருக்கச் செய்கிறேன். 

பெருமை மிக்க மனிதா! 'பாஸ்' என்கிற அதிகார தோரணை விடத் தலைவராக நல்லெண்ணம் கொண்டு நன்மை செய்பவராக இருப்பதற்கு நான் உனக்கு வேண்டிய அளவு உதவி செய்கிறேன். உனது சர்வாதிகாரம் மற்றவர்களுக்கு அச்சத்தைத் தரும். அதனால் உறவுகள் சுமூகமாக இல்லாமல் போய்விடும். ஆனால் தலைவனால் மட்டுமே சுமூகமான உறவுகளை ஏற்படுத்த முடியும். நான் உனக்குள் இருப்பது எனது வயிற்று பிழைப்பிற்காக மட்டும் இருக்கவில்லை. உனக்குள் இருக்கும் திறமைகளைப்  பயன்படுத்தி நான் படைத்த உலகத்தைக் காப்பாற்றி அனைவருக்கும் நன்மை செய்து அதன்மூலம் உனக்கு மனநிறைவு மற்றும் நிம்மதியான பெருவாழ்வு தரவே உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து கொண்டு உன்னை இயக்குகிறேன். நான் சொல்வது எனக்காக அல்ல. உனக்காக. ஊராரின் நன்மைக்காக.


மேன்மையான மனிதா! நான் உனக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கைத்  தத்துவத்தை இப்போது சொல்கிறேன் கேள். 

மலரும் மலர்கள் வாசனையும் அழகும் உனக்காக அன்றி மலர்களைத் தாங்கிய செடிகளுக்கில்லை. அனைத்தும் உனக்காக மலர்ந்தவை.

மழை நீர் முழுவதும் பயிர்களுக்கு மட்டுமின்றி உனக்காகவும் கொடுக்கப்பட்டவை.

பசுவின் பால் முழுவதும் கன்றுக்கு இல்லை. பெரும்பகுதி உனக்காகத்தான் படைக்கப்பட்டவை.

மரத்தின் கனிகள் அனைத்தும் மரத்திற்கு இல்லை. பெரும் பங்கு உனக்காக நான் தந்தவை.

நெல், கோதுமை மணிகள் அனைத்தும் நிலத்திற்கு செல்வதில்லை. உனக்காக உருவானவை.

இயற்கையின் அழகு உனக்காக படைக்கப்பட்டதேயன்றி வேறு ஒருவருக்கும் இல்லை.

அன்பு கொண்ட நல்ல உள்ளங்கள் உனது நன்மைக்காக மட்டுமே கொடுத்தவை.

இந்த உள்விதி மனிதன் உனது வாழ்வு சிறக்கவே அன்றி எனது சுயநலத்திற்கு அல்ல.

நான் படைத்த அனைத்தும் பிறர்க்கு கொடுக்கவேயன்றி எனது பிழைப்பிற்காக இல்லை என்பதை புரிந்து கொள்.

உன் கடமைகளை  சரியாக செய்!

நன்மைகள்  தானாக வரும்!

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்...


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
---------- Forwarded message ----------

1 comment: