Pages

Monday, 5 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன். YOUR AGE IS MORE THAN A CRORE

உள்விதி மனிதன்  

சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.
YOUR AGE IS MORE THAN A CRORE


என் இனிய மனிதா! இந்த உள்விதி மனிதன், இப்போது இருக்கும் உலக நடப்புகளில் உனக்கு விழிப்புணர்வு வரவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறவன். அவ்வாறு இருந்தால் தான் நீ எப்போதும் சந்தோஷமாக வாழமுடியும். இப்போதுள்ள சில போலி ஆசாமிகள் 'மகான்கள்' என்கிற போர்வையில் தன்னைத் தேடி வருபவர்களை ஞான திருஷ்டியில் பார்கின்றவர் போல பாசாங்கு செய்து அவர்களை அஹா....ஓஹோ.... என்று புகழ்வதோடு அவர்களின் பெயர், ஊரின் பெயர், குடும்பத்தை பற்றிய விவரங்கள் தெளிவாக சொல்வதை வைத்துக்கொண்டு அவர்களை உண்மையான மகான்கள் என்று நம்பி விடுகின்றனர். அதற்காக அவர்கள் கேட்கும் பொருளை, பணத்தை கொடுக்கத் தயாராகவும் இருப்பது தான் கொடுமை.



என் அன்பு மனிதா! இந்த நவீன உலகத்தில் ஒருவரைப்பற்றி அறிந்து கொள்வது மிகவும் எளிது என்று இப்போது தெரிந்து கொள். அவர்கள் சொல்வது எல்லாம் இல்லாத ஒன்றா? அப்படிச் சொல்வதால் உனது கஷ்டம் தீர்ந்துவிடுமா? மேலும் சிலர் ஏதோ ஒரு மந்திரம் சொல்லி விபூதி, குங்குமம் இன்னும் பல பொருட்களை வரவழைத்துக் கொடுக்கின்றனர். இதைப் பார்ப்தற்காகவா அங்கு சென்றாயா? அல்லது உனது கஷ்டங்களை போக்குவதற்கு வழி தெரிந்து கொள்ளப் போனாயா? இவைகளைப் பார்ப்பதால் உனக்கென்ன லாபம்? எத்தனையோ உண்மையான ஆன்மீகப் பெரியார்கள், மகான்கள் இந்த பூமியில் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் இந்த மாதிரி சித்து வேலைகளை காட்டி மக்களை மயக்கி பொருட்களை பறித்துள்ளனரா?

பிரிய மனிதா! மேஜிக் நிபுணர்கள் இதைவிட நன்றாக ஆச்சரியப்படும் வகைகளில் மாயாஜால மந்திரவித்தைகள் செய்வார்கள். அவர்கள் மண்ணைப் பொன்னாக மாற்றுவார்கள்! சாதாரண பேப்பரை ரூபாய் நோட்டாக, அமெரிக்க டாலராக மாற்றிக் காண்பிப்பார்கள். இறந்தவர்களை  உயிரோடு திரும்ப வரவழைப்பார்கள். மந்திர குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு உயிருள்ள பறக்கும் புறா, துள்ளும் மீன்கள் இன்னும் பல வித்தைகள் செய்து காட்டுவார்கள். அனைத்திற்கும் மேலாக தண்ணீரில் நடப்பார்கள், ஆகாயத்தில் மிதப்பார்கள், மறையவும் செய்வார்கள். இருக்கின்ற பொருட்களை மறைத்தும், இல்லாத பொருட்களை வரவழைத்தும் காட்டுவார்கள். கண்களை மூடிக்கொண்டு கார் ஓட்டுவார். கண்களை மூடிக்கொண்டு ஒருவர் எழுதியதை படிப்பார்கள்!! இதையெல்லாம் பார்த்த நீ அவர்களை என்ன சொல்லுவாய்? கடவுளின் மறுஅவதாரம் என்றா கூறுவாய்? கூறமாட்டாய். ஏனென்றால் அது தந்திர கண்கட்டு வித்தை என்று இலகுவாய் எடுத்துக் கொள்கிறாய். அவர்கள் அதைச் செய்வது மனிதர்களை ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்க அல்ல. அவர்கள் வயிற்றிப் பிழைப்பிற்காக. உன்னை சந்தோஷப்படுத்துவதற்காக. அவர்கள் உன்னிடத்தில் 'வித்தை' என்று சொல்லியே செய்து காண்பிக்கிறார்கள்.

பாசமுள்ள மனிதா! என்னைத் தவிர வேறு யாராலும் ஒரு துரும்பு கூட உயிரை வைத்துப் படைக்க முடியாது. மேலும் ஒவ்வொரு படைபிற்கும் செயல், காலம், நேரம் என்று இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திடீர் திடீரென்று சட்டென்று எதையும் படைக்க இயலாது. நான் நினைத்தால் கூட முடியாது. நானும் காலத்திற்கு கட்டுப்பட்டவன்.

பண்புள்ள மனிதா! படைப்பில் பல சூட்சமங்கள் இருக்கின்றன. அதாவது ஒரு ஜீவனுக்கு வேண்டிய ஆதாரத்தை கவனமாக சிறிது சிறிதாகக் குறிந்த நேரத்தில், குறித்த அளவில், குறிப்பிட்டவர்களின் துணையின் மூலமாகக் கலந்தோ அல்லது சேர்த்தோ கொடுக்கிறேன். அதோடில்லாமல் அவற்றின் அளவு, அவற்றின் உணர்வு, வளர்ச்சி என்னைச் சேர்ந்தது. மனிதா ! இப்போது தெரிந்து கொள். ஒரு ஜீவனை உருவாக்க கருவோடு நின்றுவிடாமல் அதை உன்னுள் உள்ள தண்ணீரில் பத்திரமாக வைத்திருக்கிறேன். உயிருக்குத் தேவையானக் காற்றும்,  காற்றில் கரைந்துள்ள  வெப்பத்தை உனது உடலில் செலுத்தி, ஜீவனுக்கு உண்டான சத்துள்ள உணவை உன் மூலம் உள்ளே செலுத்தி, நீ வெளியில் வந்து சுகமான வாழ்வதற்கு நிலத்தையும்  தந்திருக்கிறேன். அதாவது  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களைக் கொண்டு தான் உன்னை சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கியிருக்கிறேன். இந்த ஐந்தில் ஒன்று இல்லையென்றாலும் எந்த ஒரு ஜீவனும் உருவாகாது. இப்போதாவது நான் உனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் அனுபவ அறிவை தெரிந்து கொள். அது எதையும் செய்யவல்லது என்று.



மதிப்பு மிக்க மனிதனே! மேலும் பல விளக்கங்களைத் தர கடமை பட்டிருக்கிறேன். அதன் மூலம் பலவற்றை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். மனிதா! இந்த உலகத்தில் பலவிதமான, பலத்தரப்பட மனிதர்கள், பலவித சூழ்நிலைகளில், பலரோடு, பலவித தகுதிகளில், பலவிதமான நிலைகளில், பலவிதமான உணவு, உடை, இருப்பிடங்களில், பலவிதமான உணவு வடிவங்களில், பலவிதமான மாதிரியில் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அது எப்படி முடிகின்றது என்பது தெரிகின்றதா?

மேன்மை மனிதா! முன்பு சொன்னது போல் அனைவரிடத்தில் இருக்கும் இந்த உள்விதி மனிதன், கோடிக்கணக்கான வருட அனுபவமுள்ளதால் மட்டுமே அனைத்து வகையான வகைகளை எந்த சூழ்நிலையில் எப்படி வாழவேண்டும்? என்கிற அனுபவம்  கொடுக்க முடிகின்றது. அந்த அறிவு அவர்களுக்கு உடனே வந்துவிடுகின்றது. அதனால்  தான் எந்த சூழ்நிலையிலும் வாழத் தயாராக உள்ளான். இந்த அனுபவங்கள் நான் தராமல் இருந்தால் உன்னால் உன்னைச் சுற்றி நடப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதன் மூலம் பலவிதமான பலன்களை பெற்றிருக்க முடியாது. மனிதா! இப்போது பிறக்கும் குழந்தைகள் கூட உடனே தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தங்களை தாங்களே தயார்படுத்திக் கொண்டு அதன்படி வாழ ஆரம்பிக்கின்றது. ஆக மனிதா! நீ இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த உலகில் வாழமுடியும். ஆனால் நீ இப்போது இருக்கும் மனிதனாக அல்ல. உள்விதி  மனிதனாக! இந்த உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டமாக. இன்னும் புதுப்புது உடல்களில் புகுந்து ! அதாவது உனது உடலில் எனது ஆன்ம ஓட்டம் ஓயும் வரை உனது ஆயுள்  இருக்கும் . 



இனிய மனிதா! நான் உனக்குள்ளிருந்து இந்த உலகிற்குத் தகுந்தாற்ப்போல் உடனே மாற்றி விடுவதால்  இந்த உலகில் சண்டை சச்சரவுகள் மிகச்சிறிய அளவிலே நடக்கிறது. மனிதா! என்னால்  உன்னை சாந்தசொரூபியாக வைத்துக்கொள்ள முடியும். அதேசமயத்தில் உன்னைக் காத்துக்கொள்ள வீறுகொண்டு எழும் பலமுடனும் நடந்து கொள்ள வைக்க முடியும். மனிதா! இந்த உள்விதி மனிதனுக்கு வேதாந்தம், சித்தாந்தம் என்று பலவகை நூல்கள் இருப்பது தெரிகின்றது. அவைகளெல்லாம் வாழ்க்கை நூல்கள் என்று பலர் சிரமப் பட்டு பாராயணம் செய்து அதை பிறர்க்கு விற்றுக் கொண்டிருக்கின்றனர். தங்களை வித்துவான் என்றும் காட்டிக் கொள்கின்றனர். 



இரக்கமுள்ள மனிதா! ஒருவன் படித்தால் மட்டும் சிறந்தவனாக இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு. படித்தவாறு யார் ஒருவர் அதை பின்பற்றுகின்றனரோ அவர்கள் தான் சிறந்தவர்கள். மனிதா! வெறும் படிப்பு ஒருவேளை உணவிற்குகூட உதவாது. அது ஏட்டுக் கல்வி. எந்த ஒரு கல்வியும் செயல் இல்லாமல் இருந்தால் அவைகள் பொழுது போக்கு கல்வி என்றே எடுத்துக்கொள்ள முடியும். அதாவது திசை காட்டிகள்  கீழே கிடந்தால் அதன் பயன் இருக்குமா? அந்த திசை காட்டிகள் சரியான திசையில் நின்று  காட்டிக்கொண்டிருந்தால்  தான் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆனால் வாழ்க்கைக்  கல்வியை யார் கற்றுக் கொடுக்கின்றனரோ அவர்களே சிறந்தவர்கள். அவர்களிடம் உனது  வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சி அடைவதற்கான வழியையும் கற்றுக்கொள்ளலாம்.



மரியாதைக்குரிய மனிதா! உனது ஒரு சான் வயிற்றுக்கு தினமும் என்னென்ன வேலைகள் செய்கிறாய்? எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறாய்? சில வேளைகளில் தொழிற்க் கல்வி பயிலாமல் வெறும் புத்தக படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வளவு சிரமப்படுகிறாய்? அவைகளிருந்து நீ விழித்துக் கொள். அவர்கள் உன்னை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று இப்போது தெரிந்துகொள்.  மனிதா! நான் உனக்கு செல்வங்களுடன் அறிவும் கொடுத்து இருக்கிறேன். அறிவு என்பது வெறும் பாராயணம் செய்வது மட்டுமல்ல. அதன் மூலம் பல நன்மை தரும் செயல்கள் செய்து மற்றவர்களையும்  அதில் இணைத்து அவர்களது நல்வாழ்வுக்காகவும் பாடுபடுவதே மனிதப் பிறவியின் தத்துவம். இந்த அனுபவம் இந்த உள்விதி மனிதனுக்கு மிகவும் பயன்படும். அதன் மூலம் இன்னும் மனிதக்குலத்திற்கு பல நன்மைகள் செய்யலாம். அகவே கல்வியை கற்பதோடு மட்டுமில்லாமல் அதன்படி நடப்பவர்களை மட்டும் நம்பினால் உனக்கு எந்த காலத்திலும் கஷ்டம் வராது. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாய்.


மேலும் இந்த ஆன்ம ஓட்டம் தொடரும். 

1 comment: