பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும்
வாங்கும் சந்தை -
OLD GOLD, SILVER JEWELRIES BUY / SALES BAZAAR.
இப்படியும் நடக்கலாம் எதிர் காலத்தில்
ஒரு சமயத்தில் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வேண்டுமென்றால் வருடக்கணக்கில் காத்திருந்தோ அல்லது அதிக விலை கொடுத்தோ வாங்க வேண்டும். நாளடைவில் புதிய பொருளாதாரக் கொள்கை படி பலவித நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அதிக உற்பத்தி செய்து சந்தையில் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் குறைவாக இருந்த வாகனங்கள் போக போக விலை அதிகமாகியது. அதோடு நில்லாமல் தவணை முறை விற்பனையாலும் விலையை அதிகமாக்கிவிட்டது என்று சொல்லலாம். மேலும் தினம் தினம் புதிது புதிதாக வரும் மாடல்களை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆகையால் கையில் இருக்கும் வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்க ஆரம்பித்தனர்.
பெரிய நிறுவனங்களைப் போல் 'ஷோ ரூம்' வைப்பதற்கு பணமில்லாதவர்கள் 'செகண்ட்ஸ் சேல்ஸ்' என்று தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அதிலும் அவர்கள் பழைய வாகனத்தை புதிய வாகனத்தைப் போல் மாற்றி விற்கின்றனர். தரமாக , குறைவான சரியான விலையில் வாகனங்கள் கிடைப்பதால் மக்களுக்கும் திருப்தி தான்.
இதேபோல் இப்போது தங்கத்திற்கு வருவோம். தங்கத்தை தாங்காதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம். அதை விரும்பாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம். அது அந்த காலம். இப்போது மக்கள் தங்கத்தை தேவை இருந்தால் மட்டுமே வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். ஏனென்றால் அதன் விலை. நேற்றைய விலை போல் இன்றில்லை. ஒரு நேரத்தில் அதன் விலை விறு விறுவென்று ராக்கெட் வேகத்தில் ஏறி கிராமுக்கு 3150 ரூபாய் தொட்டது. உடனே மீடியாக்கள் அதன் விலை வெகுவிரைவில் கிராம் ரூபாய் 5000 க்கு தொடும் என்றனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதற்கு மாறாக இப்போது கிராம் ரூபாய் 2850 க்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட கிராமுக்கு ரூபாய் 300 குறைவு. மேலும் சிலர் அப்போதைய விலையில் கிராம் ரூபாய் 160 க்கும் குறைவாக விற்று வருகிறார்கள்.
இது எதனால்? மக்களுக்கு தங்கம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதைத் தான் காட்டுகிறது. அதற்கு முக்கியமான காரணம் விலைவாசி தான். ஒரே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் , போக்குவரத்து செலவு, பால் மின் கட்டணம், வாடகை, கேளிக்கை செலவு, கல்வி போன்றவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. இப்படியே போனால் யார் தங்கத்தை வாங்குவார்கள்? வயிற்றுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கவே மக்கள் திண்டாடுகிறார்கள்?!
இந்த விலையேற்றம் எதனால் ஏற்பட்டது? சில வருடத்திற்கு முன் தங்கம் விலை சீராக இருந்தது. அதேபோல் ஏறுவது இறங்குவது குறைவாகவே இருக்கும். ஆனால் எப்போது ஊக வணிகத்தில் தங்கம் போன்ற பலவகைகள் நுழைந்ததோ அப்போதிலிருந்து ஏறுமுகம் தான். தங்கம் கிராமுக்கு ரூபாய் 600 இருக்கும்போது பல பெரிய நிறுவனங்கள், முதலாளிகள், பணம் படைத்தவர்கள், வங்கிகள் போன்றவர்கள் வாங்கி குவித்தனர். ஏனெனில் தங்கம் நமது நாட்டு மக்களின் அந்தஸ்து அடையாளம். எப்படியும் ஏறத்தான் செய்யும் என்கிற உறுதியான நம்பிக்கை. அதே போல் அதன் விலையும் சிகரத்தை தொட்டது. அதற்குத் தகுந்தாற்போல் மீடியாக்களும் நிறைய 'பில்ட் அப்' செய்து தங்கத்தை எட்டாத விலைக்கு வைத்துவிட்டார்கள்.
அதனால் ஏராளமான சிறிய நகை கடை மற்றும் ஆசாரிகள் இப்போதும் சிரமப் பட்டு வருகின்றனர். தங்கத்தை வாங்காமல் இருக்க முடியாது. இன்றைய சூழ் நிலையில் தங்கத்தை வாங்குபவர்கள் மிக மிக குறைவு தான். அதை அடகு வைத்து வீணாக வட்டி கட்டும் சூழலில் தான் இப்போது மக்கள் இருக்கின்றனர். இதனால் அடகு கடைகள் அதிகமாக முளைத்து விட்டனர். சிறிது பணத்திற்கு அதிகமான நகைகள் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். மேலும் அதை திருப்புவது அவ்வளவு எளிதாகவும் இல்லை. அதோடில்லாமல் பல அடகு கடை தங்கத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி ஓடிவிடுகின்றனர். அவர்களை பிடிப்பது குதிரைக் கொம்பு தான்.
இப்படி இருக்கும்போது இனி வரும் காலத்தில் 'எக்ஸ் ஷோ ரூம் தங்க நகைகள் விற்பனைக்கு' என்று வருவதற்கு வெகுதூரத்தில் இல்லை. ஏராளமான நகை கடைகள் இருப்பதாலும், மேலும் அவர்களால் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட முடியாத்தாலும் பழைய தரமான 916 நகைகளை பாலிஷ் செய்து குறைந்த விலையில் கூலி, சேதாரம் இல்லாமல் விற்கும் நிலை உருவாகும். மக்கள் ஒரு சாரார் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் ஒரு சாரார் நல்ல விலைக்கு விற்கவேண்டுமென்று விரும்புகின்றனர். அடகு வைத்து வட்டி காட்டுவதற்கு பலர் தயாராக இல்லை. அதில் நம்பிக்கையும் குறைந்து வருகின்றது. ஆகையால் நெட்டையோ குட்டையோ விற்பதில் விருப்பம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விற்பதற்கு அவர்களுக்கு தெரிந்த நம்பிக்கையானவர்கள் ஒரிருவர்கள் தான் இருப்பதால் சற்று கஷ்டப் பட்டு வருகின்றனர். அவர்களிடத்தில் அவ்வளவு இருக்குமா என்பது சந்தேகமே? ஆனால் இதேபோல் தரமான நம்பிக்கையான நகை வியாபாரிகள் பலர் இருந்தால் பல வாடிக்கையாளர்களுக்கு கூலி, சேதாரம் இல்லாமல் குறைந்த விலையில் தரமான நகைகள் கிடைக்குமல்லவா?
அதேபோல் வரும் நாட்களில் உலகத்தில் இதுநாள் வரை நடை பெறாத வியாபாரம் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் 'பழைய நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை' என்று வரும். அதில் பெரிய நிறுவனம் முதல் சிறிய வியாபாரிகள் வரை கலந்து கொளவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த சந்தை அனாவசியமாக யாரும் நுழையாத வண்ணம் அவர்களும் இருப்பிட முகவரி, போட்டோ மற்றும் அனுமதி பெற்ற நம்பிக்கையான தங்க நகை புரோக்கர், ஆசாரிகள் அல்லது ஏஜென்ட் அல்லது நகை கடை உரிமையாளர் மூலமாக வியாபாரம் நடைபெறும். சந்தையில் தங்கம் தரம் பார்ப்பவர்களை கூட நியமிக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகை கட்டடித் தான் கலந்து கொள்ளவேண்டும். இதில் நல்ல பயனும் , வியாபாரமும் இருக்கும். இதனால் சிறிய தங்க நகை வியாபார்கள் புத்துயிர் பெறுவார்கள். அவர்களின் வாழ்கையும் மலர்ச்சி பெறும் . பலருக்கு நன்மை உண்டு.
இதில் காணப்படும் சிறப்பு அம்சங்கள்:
1. நம்பிக்கையான வியாபாரத்தின் மூலம் உடனே பணம் கிடைக்கிறது.
2. அன்றைய விற்பனை விலையிலிருந்து மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். (அது வாடிக்கையாளரின் அவசரம் மற்றும் நிதானம் பொருத்து விலை மாறும்)
3. கூலி , சேதாரம், கல் போன்றவற்றின் விலை இல்லாமல் வாங்கலாம்.
4. வரிகள் கிடையாது.
5. 916 தங்கம் தரம் கிடைக்கும்.
6. பழைய டிசைன்கள் இப்போது அதிக கிராக்கி. உறுதியும் கூட.
7. தங்கம் மட்டுமில்லாமல் வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்றவைகளும் விற்கலாம்.
8. அடகு வைக்கும் வட்டி பணம் குறைகிறது.
9. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறிய கொலுசு, மோதிரம் , தோடு போன்றவைகளை எளிதாக வாங்க உதவிடும். (அவர்கள் பெரிய நகைக்கடைக்கு போக தயங்குவார்கள்)
10. மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரும் அற்புத முயற்சி.
11. இறக்குமதி குறைக்கவும், இந்திய நாணய மதிப்பை கூட்டுவதற்கும் பயன்படும்.
வந்தால் வரவேற்போம்!
அது வருகின்ற நாளை எதிர்பார்ப்போம்.
நன்றி!
வணக்கம்.
No comments:
Post a Comment