Wednesday, 24 April 2013

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? எத்தனை காலம் தான் ஏமாறுவது?HOW MANY YEAR THEY CAN CHEAT?

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? 
எத்தனை காலம் தான் ஏமாறுவது?HOW MANY YEAR THEY CAN CHEAT?
நாட்டு நடப்புகள்.


                          

நமது நாட்டில் எல்லாவிதமான வளங்கள், அதாவது மனிதவளம், கனிமவளம், தொழில் வளம், அறிவு வளம் போன்றவைகள் இருந்தும் ஏன் இன்னும் அடிமைத்தனமாக அந்நிய நாட்டை எதிர்பார்த்து இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் சில உண்மைகள் தெரியவரும்.முதலில் இந்த வரியினை நன்றாக உள்வாங்கினால் உண்மைகள் புரியவரும். எந்த தலைவர்  அதாவது மறைந்த தலைவர் அல்லது ஆன்மீகவாதி அல்லது எழுத்தாளர், கவிஞர், நடிகர், சமூக அக்கறைவாதி, நன்கொடையாளர் போன்றவரைப் பற்றி எப்போதும் பேசுகின்றனரோ அவர்களிடத்தில் செயல் இருக்கவே இருக்காது. அதாவது தான் பின்பற்றுபவர் (தலைவர்) செய்த செயலில் 50 விழுக்காடு (பாதியளவு) கூட வேண்டாம். ஒரு 25 விழுக்காடு (கால்வாசி அளவு) அளவாவது செயலில் இருந்தால் தானே அந்த தலைவரை பற்றி பேசுவதில், பின்பற்றுவதில் அர்த்தமுள்ளது. வெறும் பேச்சு வயிற்றை நிரப்பாது என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்..


 

அந்த காலத்து பெருமைமிக்கத் தலைவர்கள் எப்படி இருந்தார்கள்? ஒரு உதாரணமாக மகாத்மா காந்தியின்ஆசிரமத்தில் ஒரு நாள் ஒரு மூதாட்டி ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்து மகாத்மாவின் முன் நிறுத்தினார். மேலும் அவள் "இந்த சிறுவன் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று எத்தனை முறை நானும், மருத்துவரும் கூறிப் பார்த்துவிட்டோம். ஆனால் நிறுத்தியபாடு இல்லை. நீங்கள் தான் அறிவுரை கூற வேண்டும்" என்று முறையிட்டாள். அதற்கு மகாத்மா அவர்கள் "இன்று நான் அவனுக்கு அறிவுரை கூறமுடியாது. ஒரு வாரம் கழித்து வாருங்கள்.நான் அறிவுரை கூறுகிறேன்" என்றார்.ஒருவாரம் கழித்து வந்தனர். வந்த பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அந்த சிறுவனிடத்தில் மகாத்மா அவர்கள்  "இனிமேல் மருத்துவர் கூறும் வரை இனிப்பு சாப்பிடாமல் இருக்கவேண்டும் சரியா!" என்று சொன்னவுடன் அந்த சிறுவனும் "சரி. அப்படியே செய்கிறேன்" என்று மறுக்காமல் ஒத்துக்கொண்டான். இந்த ஒருவாரத்தில் என்ன நடந்தது , எப்படி சிறுவனிடத்தில் இந்த மனமாற்றம் வந்தது? என்று தெரியாமல் விழித்தாள் அந்த மூதாட்டி . விடை தெரியாமல் மகாத்மாவிடமே கேட்டுவிட்டாள். அவரும் சிரித்துக் கொண்டே, "அதுவா! சென்ற வாரம் வரை எனக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அப்படி இருக்கும்போது நான் எப்படி இச்சிறுவனுக்கு அறிவுரை கூறுவேன். ஆகையால் நான் சென்ற வாரத்திலிருந்து இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆகையால் என்னால் எளிதாக இச்சிறுவனுக்கு அறிவுரை கூறமுடிந்தது. நான் வெறும் பேச்சினால் அறிவுரை கூறியிருந்தால் கட்டாயம் அவன் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான். நான் செயலில் செய்து காட்டியதால் இதை சாதிக்க முடிந்தது" என்று விளக்கம் அளித்தார்.அத்தகைய தலைரை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் செயலில் இருக்கிறார்கள்? "வறுமையை ஒழிப்போம்" என்று குரல் கொடுப்பவர்களோ ஒருவேளை கூட பட்டினி இருக்காமல் வேளாவேளைக்கு மூக்கைப் பிடிக்க சாப்பிடுகிறார். பின் எப்படி அவர்களது செயலில் உண்மை இருக்கும். அவர்களுடைய பேச்சு பலிக்குமா?இன்னும் சிலர் "லஞ்சம், ஊழல் ஒழிப்போம் ! கறுப்பு பணம் ஒழிப்போம் ! " என்று கீறல் விழுந்த ரெகார்டை போல ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் ஒரு விழுக்காடு கூட குறைக்க முடியவில்லை. மாறாக கூடிக்கொண்டே போகிறது. ஏனெனில் நாளுக்குநாள் அக்கட்சியை சேர்ந்தவர்கள் லஞ்சத்திலும், ஊழலிலும் ஏன் கறுப்புப் பண சர்ச்சையில்  சிக்கி இருப்பதால்  அவர்கள் பேச்சு இன்று வரை மக்களிடத்தில் எடுபடவில்லை. அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் இல்லை. சொல்கிறவர்கள் முதலில் எப்போதும் தான் சுத்தமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களும் கை சுத்தமாக இருக்கச் செய்திடவேண்டும். ஒவ்வொரு முறையும் நிரூபிக்கவும் செய்திட வேண்டும்.அன்றாடம் விலைவாசி, கல்வி கட்டணம், அரிசி, காய்கறி , போக்குவரத்துக் கட்டணம், பெட்ரோல், டீசல், வரி ஏற்றம், மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு என்று பலவற்றை சமாளிக்க முடியாமல் மக்கள் தினந்தோறும் திண்டாடித் தவிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது மென்மேலும் விலைவாசி ஏற்றுவதையும், வரி ஏற்றத்தையும் தவறாமல் செய்யும் அரசு பற்றி உயர்வாக மதிக்கமுடியுமா? அவர்கள் புகழ் பெற்ற தலைவர்களின் வாரிசு அல்லது பின்பற்றுபவர் என்று பறை சாற்றுவதில் அர்த்தம் உண்டா? அவர்களால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா? ஓரடி காலால் தெருவில் நடந்துவர முடியுமா? பின் எப்படி மக்களின் கஷ்டத்தை போக்குவர்?போதாத குறைக்கு மக்கள் வரிப்பணத்தில் உலக நாடுகள் சுற்றுப்பயணம். எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து பயணம் மேற்கொள்ளவேண்டும். அதனால் ஏதேனும் பலனுண்டா? அது போதாதென்று ஜி 8, ஜி 20, பிரிக் மகாநாடு என்று பலவற்றில் கலந்து கொண்டு என்ன பேசி முடிவு எடுக்கிறார்கள் என்று கடவுளுக்கே வெளிச்சம். எல்லாமே ஒரு ஒப்புக்குத் தான் நடக்கிறது. அதுவும் மகாநாட்டில் கலந்துகொள்ளும் நமது தலைவர்களைப் பார்த்தால் கட்டாயம் நமது நாடு ஏழை நாடு என்று சொல்லமாட்டார்கள். அவ்வளவு டிப்-டாப்பாக உடை, அதோடு வாரிவழங்கும் உதவிகள்??? இதற்கு மூலக் காரணம், நாம் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விதம் தான். அது அரசியலாக இருந்தாலும் சரி ! ஆன்மீகமாக இருந்தாலும் சரி. வெறும் செல்வாக்கு மற்றும் மூப்பு அடிப்படையில் தான் நடைபெறுகின்றது. அரசியல் தலைவரின் வாரிசுக்கும்  தலைவராகும் தகுதி வந்து விடுகின்றது. மக்களும் அதை ஏற்றுக்கொள்கின்றனர். அதேபோல் ஆன்மீகத் தலைவரையும் தேர்ந்தெடுப்பது கூட. அந்த தலைரைப்போல் தியாகம் மற்றும் மக்கள் மேல் அக்கறையாக இருக்கின்றனரா? என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். அந்த ஆன்மீகத் தலைவரைப் போல் விரதம் மற்றும் தவம் புரிகின்றனரா? என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றனர். வெறும் தேன் தடவிய பேச்சில் மயங்கி தங்களைடைய சுயமரியாதையை, செல்வத்தை இழந்து காலம் முழுவதும் கஷ்டப்படுவது தொடர்கதையாகவே இருக்கின்றது.எனக்கு இதுவும் புரியவில்லை. அரசியலில் , ஆன்மீகத்தில் உள்ளது போல் டாக்டரிடத்தில் பணிபுரியும் பத்து வருட அனுபவமுள்ள கம்பவுன்டரை அல்லது நர்சை ஏன் டாக்டராக இருக்க தகுதி கொடுப்பதில்லை. என்ஜீனியரிடத்தில் பணிபுரியும் பத்து வருட கொத்தனாருக்கு ஏன்  என்ஜீனியர் பட்டம் தருவதில்லை. பிரபல எழுத்த்தாளர் வாரிசு சிறந்த  எழுத்தாளராக ஆவதில்லை / ஆக முடிவதில்லை. பிரபல பாடகர் வாரிசு ஒரு சிறந்த பாடகனாக ஆவதில்லை. பிரபல விளையாட்டு வீரரின் வாரிசு சிறந்த விளையாட்டு வீரனாக ஆவதில்லை. ஒரு சிறந்த விஞ்ஞானியின் வாரிசு பிரபல விஞ்ஞானியாக ஆகமுடிவதில்லை. இப்படி இருக்கும் போது அரசியலில் மட்டும் எப்படி ஆகமுடிகின்றது ?இன்றைய தலைவர்களுக்கு தெளிவான நிரந்தரக் கொள்கை இல்லை. காலத்திற்குத் தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளும் அறிவும், திறமையும் இல்லை. தொழில், விவசாயம், பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு குறைவு தான். அதை செயல்படுத்தும் திறமை  குறைந்து காணப்படுகின்றது. ஆனால் சில தலைவர்கள் மிகப் பொறுப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தன் மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருப்பதை மறுக்கமுடியாது. ஆகவே மக்கள் கொடுக்கும் நல்ல வாய்ப்பினை தன்னலம் கருதாது பொதுநல நோக்குடன் செயல்பட்டால் தாங்கள் பின்பற்றும் தலைவரை கௌரவப் படுத்துவதுடன், ஏழைகளின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடிப்பதோடு உலக சரித்திரத்தில் பொற்காலமாய் பொறிக்கப்படும் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை. நன்றி 


வணக்கம். 

No comments:

Post a comment