Pages

Wednesday 6 February 2013

A SPL T.V INTERVIEW WITH U FOR UR MEGA SUCCESS - மெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்

                
மெகா சாதனை படைத்த 
உங்களுடன் ஒரு சிறப்பு பேட்டி - டி .வி யில் -


A SPECIAL T.V INTERVIEW WITH YOU 
FOR YOUR MEGA SUCCESS 
வெற்றி வாழ்க்கைக்கான 100வது வழி 
மதுரை கங்காதரன்    

                 

நீங்கள் இன்று இப்போது வாழ்க்கையிலும், தொழிலிலும் பல வெற்றிகளைக் குவித்த ஒரு சாதனையாளர் என்று வைத்துக்கொள்வோம். ( ஒருவேளை இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சாதனையாளர் தான். ஏனென்றால் இந்த 100 % வெற்றி வாழ்க்கைக்கான வழிகளை படித்ததால் கட்டாயம் நீங்கள் உங்கள் வாழ்கையில் வெற்றி பெற்றே தீருவீர்கள்! இது நிச்சயம்). ஆகையால் உங்களை பேட்டி காண புகழ்மிக்க டி.வி மீடியா ஒன்று உங்கள் முன் இருக்கிறார்கள். அவர்கள் உங்களிடத்தில் சில கேள்விகளைக் கேட்டால் உங்கள் பதில் என்னாவாக இருக்கும் என்கிற ஒரு கற்பனை. உங்கள் பதில் முன்னேறத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கைத் தரக்கூடிய உந்து சக்தியாக இருக்கவேண்டுமென்பதால் இந்த பேட்டி சற்று உணர்ச்சிபூர்வமான பேட்டி என்றும் வைத்துக்கொள்ளலாம்.    

              

நீங்கள் : வணக்கம் 

மீடியா: வணக்கம். கோடிக்கணக்கான நேயர்களின் சார்பாக பலவித முயற்சிகளுக்கிடையே உங்களை பேட்டி காண்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நீங்கள்: அது நான் செய்த பாக்கியம். எனது வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும் எனது அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில்  நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

மீடியா: உங்களது இந்த உலகளவு 'இமாலய வெற்றி' எப்படி கிடைத்தது என்பதை எங்களுக்கு இந்த சொற்ப நிமிடத்தில் சொல்லமுடியா விட்டாலும் ஒரு சில முக்கியமாக கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதில் கேட்க ஆர்வமாக காத்திருக்கிறோம்.  

நீங்கள்: எல்லோரும் என்னிடம் ' நான் எவ்வாறு எல்லோரும் ஆச்சரியம் படும் வகையில் சாதனை புரிந்தேன் என்றும் அதன் ரகசியத்தையும் கேட்கிறார்கள்'. நான் நிஜத்தை சொல்லவேண்டுமென்றால் யாருக்குமே தெரியாத காரியத்தை நான் செய்யவில்லை. எனக்கு அடிப்படையிலே வாழ்கையில் எப்படியும் நேர்மையாய் உழைத்து முன்னேறவேண்டு மென்ற ஒரு வைராக்கியம் இருந்தது.


மீடியா: வெறும் வைராக்கியம் மட்டும் இருந்துவிட்டால் இத்தகைய சாதனை நிகழ்த்திவிட முடியுமா? அதற்கு பணமும், வாய்ப்பும் வேண்டுமல்லவா?

          


நீங்கள்: நீங்கள் சொல்வது சரிதான். நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவனல்ல! ஏழை குடும்பம் குடும்பம் தான். ஓரளவு படித்தேன். ஆனால் நான் படிக்கும் போதே பல வெற்றியாளர்களின் சரித்திரத்தை படித்தும், நான் சந்தித்த முதலாளிகளின் அனுபங்களை பலவற்றை கேட்டும் அறிந்துகொண்டேன். சிலரை எனது முன்மாதிரியாகவும், என்  வாழ்கையில் அக்கறை காட்டுபவர்களிடம் ஆலோசனையும் கேட்டிருக்கிறேன். அதில் முக்கியமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் , என்னதான் நம்மிடம் திறமையும், தகுதியும், நம்பிக்கையும் இருந்தாலும் அது தொழிலுக்கு உதவாது. தொழில் தொடங்க பலரை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களின் நட்பை தக்கவைத்துக்கொள்ள உதவி மனப்பான்மையோடு அன்பும், பொறுமையும் வேண்டும் என்றும் அறிந்து கொண்டேன். மேலும் எவ்வளவு தான் பணமிருந்தாலும் வியாபார அனுபவமில்லாமல் இருந்தால் விரைவில் நஷ்டமடைந்துவிடுவோம் என்றும் தெரிந்து கொண்டேன்.   


மீடியா: சிலர் வியாபாரம் ஆரம்பித்தால் உடனே அதிக லாபம் பார்க்கலாம் என்று ஆசை காட்டுகிறார்களே ? அது நிசமா? அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன?


நீங்கள்:  முன் அனுபவம் இல்லாமல் எப்பொழுதும் எதிலும் வெற்றி பெற முடியாது. மேலும் கடுமையான போட்டி நிறைந்த இந்த உலகில் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது.

மீடியா: சற்று புரியும்படியாக சொல்லுங்களேன்.

நீங்கள்: அதாவது பெரிய பெரிய சுறா மீன்களுக்கிடையே தான் என்னைப் போன்ற சிறிய மீன் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. அதில் கற்ற பாடம், எவ்வளவு சிறிய மீனானாலும் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருந்தால் எந்தவித அலைகளையும் சமாளித்துவிடலாம். ஆனால் நீந்தாமல் (அல்லது செத்த சுறா) எவ்வளவு பெரிய சுறாவாக இருந்தாலும் அலைகள் அவைகளை கரையில் தள்ளிவிடும்.  

மீடியா : இந்த சிறிய மீன் எப்படி சுறாவாக மாறியது என்று சொல்லுங்களேன். நாங்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

நீங்கள்: ஆரம்பத்தில் நான் ஒரு சிறிய கடையில் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. பெரிய கடையில் வேலைக்குச் சேர்ந்தால் ஒவ்வொரு துறைக்கு தனித்தனி பொறுப்பாளர்கள் இருப்பார்கள். ஆகையால் அனைத்து விசயங்களையும் கற்றுக்கொள்வது அதிக காலமாகும். ஆனால் சிறிய கடையில் பொருட்களை கொள்முதல் செய்வது முதற்கொண்டு, வாடிக்கையளைர்களை திருப்தியுடன் கவனிப்பது வரை ஒருவரே பார்க்கவேண்டும். அது கடினமான காரியம் என்றாலும் குறைந்த காலத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.  


மீடியா: அப்படியென்றால் உங்களிடம் அனைத்து பொறுப்புகளையும் கொடுக்க வேண்டுமென்றால் முதலாளிக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமல்லவா? எவ்வாறு நம்பிக்கை பெற்றீர்கள்?  

நீங்கள்: சரியாய் சொன்னீர்கள்! அங்கே தான் எனது நேர்மை உதவி செய்தது. லாபம் மற்றும் நல்ல பெயர் தரக்கூடிய காரியத்தை சிறப்புடனும், பொறுப்புடனும் செய்வேன். அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதை முடித்தே தீருவேன். அதே சமயத்தில் நஷ்டமும், கெட்ட பெயர் தரும் குறுக்கு வழியில் முதலாளியே செய்யச் சொன்னாலும் அதை கண்டிப்பாக செய்யமாட்டேன். ஆரம்பத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் பின்னாளில் அவரின் வியாபாரம் பெருகுவதை பார்த்துவிட்டு என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். 

           


மீடியா: அப்படி நீங்கள் வளரும் போது எதிரிகள் அதை தடுத்திருப்பார்களே? அதை எப்படி சமாளித்தீர்கள்? 

நீங்கள்: ஊரும், உறவும் எனது நேர்மையைப் பார்த்து 'பிழைக்கத் தெரியாதவன்' என்று பரிகாசம் செய்தது. அதை இந்த காதில் வாங்கிக்கொண்டு அந்த காதில் விட்டுவிட்டேன். எனக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் யார் சொல்கிறார்களோ அவர்களின் படி தான் நடந்து கொண்டேன். 


மீடியா: இவ்வளவு தடைகளைகளையும் உங்களால் எப்படி தாண்டிவர முடிந்தது?

நீங்கள்: தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. காலையில் எழும்போதே பிரச்சனையுடன் தான் எழுவேன். தூங்கும்போது பிரச்சனைகளுடன் தான் தூங்குவேன். பிரச்சனைகள் எதிர்கொள்ள எதிர்கொள்ள எனக்கு தெளிவு பிறந்தது. நல்லது கெட்டது சீக்கிரமே தெரிந்துகொண்டேன். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறந்தது. மனம் உறுதியானது. தேடுதல் அதிகமானது. அதிலிருந்து விடுபட யோசனை பலமானது. பிரச்சனைகள் ஒவ்வொன்றும் நீங்கியது.

மீடியா: உங்கள் வாழ்வில் உங்களின் முன்னேற்றத்திற்கு தூண்டியவர்கள் யார்?

நீங்கள்: பரபரப்பான இந்த உலகத்தில் யாரைப் பற்றி யார் கவலை படுவார்கள்? என்னைப் பற்றி நான் தான் கவலை பட வேண்டும். அடுத்தவர் சாப்பிட்டால் எனது வயிறு நிறைந்துவிடுமா? எனக்குள் இருந்த வேகம் அதாவது சமுதாயத்தில்  உயர்ந்த அந்தஸ்து பெறவேண்டுமென்ற என்னுடைய தணியாத தாகம் என்னை மென்மேலும் முயற்சி செய்ய வைத்தது. இந்த கனவு என் வாழ்நாளில் கூடிய விரைவில் பலித்தே தீரும் என்று நம்பினேன். நான் அந்த மாதிரி கனவு காணும்போது எனது குறிக்கோளில் பாதி அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். அது எனக்குள் ஒருவித புத்துணர்ச்சியும், ஆர்வத்தையும், இடைவிடாது வேலை செய்யும் களைப்பு தெரியாத கடின உழைப்பை கொடுத்தது.  

          


மீடியா: உங்கள் குறிக்கோளை அடைவோமா? மாட்டோமா? என்கிற சந்தேகம் இருந்ததா? 

நீங்கள்: சிறு சிறு தோல்விகள் என்னை தழுவும்போது அத்தகைய சந்தேகம் வந்தது. ஆனால் நான் துவண்டுபோவதை பார்த்த எனது முதலாளி எனக்கு ஊக்கம் கொடுத்து மனதை திடப்படுத்தினார். அந்த திடம், துணிவு தான் என்னை புது மனிதனாக மாற்றியது. அவர் எனக்கு அறிவுரை சொன்ன வார்த்தைகள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றது. அந்த வார்த்தை தான் ' இந்த உலகில் வாய்ப்புகளும் சக்திகளும் நிறைந்து இருக்கின்றன. உனது அறிவு தேடுவதை பொறுத்து வாய்ப்புகளும், உனது உடல் கேட்பதைப் பொறுத்து சக்தியும் தேடித் தேட, கேட்க கேட்க கிடைக்கும்' என்றார். அது தான் இன்று வரை எனக்கு கிடைக்கிறது. 


மீடியா: ஒரு மனிதனாக சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் கடமைகளை எப்போது உணர்ந்தீர்கள்?

நீங்கள்: சில கேள்விகள் என்னுள் எழும்போது தான் அதை உணர்ந்தேன். அவைகள் இதோ. பஞ்சை கொடுத்த இயற்கை அல்லது கடவுள் ஏன் உடையாக கொடுக்கவில்லை? கனிகளை கொடுக்கும் மரம் ஏன் கனிகளை எட்டா உயரத்தில் இருக்கிறது? கடலில் மீன்களைக் கொடுத்தவன் ஏன் அவைகளை பிடிப்பதற்கு வலைகளை கொடுக்கவில்லை. தினமும் பசிக்கின்ற நமக்கு ஏன் பக்கத்தில் உணவுகள் கிடைக்கும்படி செய்யவில்லை? ஆறறிவு கொண்ட மனிதனின் சக்தியை ஏன் மூளைக்குள் ஒளித்து வைத்தான்? கண்ணுக்குத் தெரியும் பல அதிசயத்தை படைத்தும் அதை அனுபவிக்க ஆசையிருந்தும் ஏன் அதை அடைவதற்கு பாதை போடவில்லை போன்றவைகள்..


மீடியா: அப்பப்பா ! என்னே உதாரணங்கள்! ஏன் என்கிற உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?

நீங்கள்: எனக்கு கிடைத்த ஒரே பதில் 'தேடு . உனக்கு எல்லாம் கிடைக்கும்' என்பது தான்.


மீடியா: எதைத் தேடுநீர்கள் ? என்ன கிடைத்தது? தேடுதல் மட்டும் இருந்தால் போதுமா?

நீங்கள்: சமூகத்தில் எனது முகவரியைத் தேடுனேன்? அது கிடைத்தது! அதனால் தான் எனைத் தேடி நீங்கள் வந்திருக்கிறீர்கள். 'தேடுதல்' என்னை வாழ்கையில் 'சும்மா' இருக்கவிடவில்லை. 'இதோ கொஞ்ச தூரம் . உனது குறிக்கோள் அடைய ! என்று ஆசை காட்டி, ஆசை காட்டி அதாவது குதிரையை களைப்பு தெரியாமல் ஓட வைக்க வேண்டுமென்றால் அதன் முன்னே புல்லை கட்டி விடுவார்களாம். அதை எப்படியும் எட்டவிட நினைத்து ஓடிக்கொண்டே இருக்குமாம். அதுபோல எனது குறிக்கோள் என்கிற 'புல்' லை பிடிக்க பிடிக்க அது ஓட ஓட என்னை அறியாமலே உயர்ந்து கொண்டே இருந்தேன். 


மீடியா: அது சரி, உங்கள் முதலாளியை விட்டு ஏன் வந்தீர்கள்? அவருக்கு நீங்கள் துரோகம் செய்தீர்களா?

நீங்கள்: ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் எனக்கு இருக்கும் வேகத்தையும், துடிப்பையும், ஆர்வத்தையும் கண்டு அவராகவே எனக்கு ஒரு வழி செய்து கொடுத்தார். அது நாள் வரை அவரிடத்தில் விசுவாசமாக இருந்ததால் ஒரு சிறு தொகை கொடுத்து தனியாக வியாபாரம் செய்யச் சொன்னார். அதை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். அதே வழியில் நான் உயர்ந்த நிலையை அடைந்தபோது என்னுடன் விசுவாசகமாக நல்ல , நேர்மையாக வேலை செய்த பலபேருக்கு தனியாக அவர்களின் இஷ்டப்படி வியாபாரம் செய்வதற்கு வழிவகை செய்து கொடுத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது.

      


மீடியா: வியாபாரம் ஆரம்பித்த உடனே வெற்றி பெற்றுவிட்டீர்களா?

நீங்கள்: இல்லை. வேலை செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பதை அறிந்தேன். வியாபாரத்தில் எல்லாவிதமான பொறுப்புகளை கட்டாயம் செய்தே தீரவேண்டும் என்கிற நிர்பந்தம் இருந்தது. முக்கியமாக குறிக்கோள் , திட்டம் அதை நடைமுறை படுத்தும் துணிவு வேண்டும். அதே சமயத்தில் எல்லோரையும் அனுசரித்து பழகும் குணமும் கூடவே இரக்க குணமும் வேண்டும். 


மீடியா: அந்த சமயத்தில் உங்களுக்கு உதவி செய்ய யாராவது வந்தார்களா?

நீங்கள்: நான் கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் உற்றமும், சுற்றமும் ஏன் நட்பும் வரவில்லை. அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. எனது வேலை அனுபவம் எனக்கு கை கொடுத்தது.

           


மீடியா: எப்போதாவது சோர்வு அடைந்தீர்களா?

நீங்கள்: பல முறை!


மீடியா: அப்போது என்ன வகையான எண்ணங்கள் வந்தது? எப்படி அவைகளை விரட்டியடித்தீர்கள்?

நீங்கள்: புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்த மாதிரி நான் 'ஒட்டகச் சிவிங்கி' யிடம் ஒரு பாடம் கற்றேன். 


மீடியா: என்ன 'ஒட்டகச் சிவிங்கி' யிடமா? கொஞ்சம் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

நீங்கள்: 'ஒட்டகச் சிவிங்கி' விலங்குகளில் மிக உயரமானது தான். அது நின்று கொண்டே தான் தனது குட்டியை போடுகின்றது. குட்டியை ஈன்றவுடன் அது சும்மா இருப்பதில்லை. 'பாவம் இப்போது தானே பிறந்துள்ளது' என்று இலேசாக விடுவதில்லை. அப்போதே பிறந்தாலும் அந்த குட்டி எழுந்து நடக்கும் வரையிலும் தன குட்டியை காலால் உதைத்துக்கொண்டே இருக்கும். தாய் உதைக்க உதைக்க பலம் பெறுகிறது. குட்டியும் சிக்கிரமே எழுந்து நடந்துவிடுகிறது. அது போல எனக்கு நானே மனதில் உதைத்துக் கொண்டேன். எடுத்த காரியம் முடியாதை வரை விடாமல் முயற்சி செய்தேன். அந்த உந்து சக்தி தான் இந்த சாதனை படைக்க உதவியது.


மீடியா: இன்னும் ஏதேனும் சாதனை படைக்கும் திட்டம் இருக்கின்றதா/

நீங்கள்: ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரை எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளேன் என்பதை இட எவ்வளவு நல்ல செயலுக்காக பணத்தை செலவிடுகின்றேன் என்பது தான் முக்கியம். எவ்வளவு பெரிய பணக்காரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாத்தித்தாலும் கொடுப்பது மிக மிகக் குறைவு தான். அவர்கள் போல் நான் இருக்க விரும்பவில்லை. ஏழை, எளியோர்களுக்கு வாரி வழங்கவும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும், ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கவும், விவசாயம் அழிந்த வருவதை தடுக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் பெருக்கவும், மின்பற்றாக்குறை தீர்ப்பதற்க்கும் அதன் சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக நான் சம்பாதித்த செல்வத்தின் பெரும் பகுதியை ஒதுக்குவதாக இருக்கிறேன். இதில் இளைஞர்களுக்கு முதலுரிமையும், அவர்களுக்கு வழிகாட்டியாக உண்மையில் திறமை மிக்க கல்வி ஆசான்களையும் நியமிப்பதாக இருக்கிறேன்.  

           

மீடியா: அடேயப்பா. அரசாங்கம் செய்ய வேண்டிய செயல்களை தனி ஒரு மனிதனாக செய்யும் துணிவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதுநாள் வரை சாதனை படைத்த நீங்கள் உங்கள் வருங்கால திட்டமும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள். உங்களுக்கு உதவ எங்கள் மீடியா என்றும் தயாராக இருக்கிறது. 

நீங்கள்: எனக்கு நீங்கள் உதவ நினைத்தால் உங்கள் மீடியா வாயிலாக தினமும் அடிக்கடி என்னுடைய திட்டத்தை இளைஞர்களுக்கு சேர வழி செய்யவேண்டும். அவர்கள் எந்தத் துறையில் படித்தாலும் சரி அவர்களின் எதிர்காலம் சிறப்பாய் அமைத்துத் தர நான் தயாராய் இருக்கிறேன்.


மீடியா: அதாவது 'சுவாமி விவேகானந்தர்' சொன்னது போல் 'எனக்கு அறிவும் , ஆற்றலும் உள்ள பத்து இளைஞர்களைக் கொடுங்கள்! இந்த இந்தியாவை முன்னேற்றிக் காட்டுகிறேன்' என்கிற வாக்கியம் உங்கள் முயற்சியின் மூலம் இந்த நாடு 'வல்லரசு' நாடாக விளங்க எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் வேலை பளுக்கிடையே எங்களுக்காக, எங்கள் நேயர்களுக்காக உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி , வணக்கம்.

நீங்கள்: வணக்கம். வாழ்க இளைஞர்கள். வளர்க அவர்களது செயல்கள்!

                  

1 comment: