Friday, 1 February 2013

உள்விதி மனிதன் பாகம் : 41 மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால் CHILLY, COCONUT CHANGE ITS CHARACTER?

உள்விதி மனிதன் 
                 

பாகம் : 41 நீ மாறுவது போல் மிளகாய் செடி இனிமையாகவும் , இளநீர் காரமாகவும்  மாறினால்?


                         
 IF CHILLY & COCONUT CHANGE ITS CHARACTER
சமமனிதக் கொள்கை 


  

மதுரை கங்காதரன் 

     


என் இனிய மனிதா! உனக்குள் நான் இரத்தத்தோடு கலந்து உயிர் ஓட்டமாக ஓடிக்கொண்டிருப்பது எதனால்? என்று மீண்டும் ஒரு முறை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். என்னுடைய கோடிக்கணக்கான வருட அனுபவத்தையும், ஆன்மபலத்தையும், அறிவும் கொண்டு உனக்கும் உன்னைச் சுற்றியிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல எண்ணங்களைத் தந்து நன்மை தரும் பல நல்ல செயல்களை உன் மூலம் நடத்திக் காட்டவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்திருக்கிறேன்.


               

மேன்மையான மனிதா! என்னால் எதுவும் செய்ய இயலும். அதற்குச்  சாட்சி இதுவரை, இப்போது நடந்து கொண்டிருக்கும் நன்மை, தீமை செயல்கள். மனிதா! இன்றைய உலகில் பலர் பேராசை கொண்டு மக்களுக்குத் தீமை செய்து அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்து இந்த உலகத்தையும் அழிவு தரும் பாதையில் செல்வதை உனது செயல் மூலமாக எனது பலம் கொண்டு  தடுக்காவிட்டால் இந்த மனிதகுலம் முற்றிலும் அழிந்து சுவடு தெரியாமல் மறைந்துபோகும். அதற்கு முன் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் பேச்சைக் கேட்டு நடந்தால் உனக்கும் மனித குலத்திற்கும் நன்மைகள் ஆயிரம் உண்டாகும். இனிமேல் தீயது மற்றும் அழிவு செயல்கள் நடக்காதவண்ணம் மனதிற்கு மனம் தூது சென்று கெட்டவர்களை நல்லவர்களாக்கி, நல்லவழியில் இந்த உலகத்தை கொண்டு சென்று 'புது உலகம்' செய்வதே இந்த உள்விதி  மனிதனின் குறிக்கோள். இதையும் உன்னைப்போல நல்லவர்களைக் கொண்டு தான் செய்யப் போகிறேன்.                         

பாசமுள்ள மனிதா! இனிமேல் இத்தகைய மாற்றம் சிறிது சிறிதாக ஏற்படும். அதைப் போகப்போக நீயே தெரிந்து கொள்வாய். எனது மனவலிமை மற்றொரு மனதினுள் புகுந்து அவர்களை மாற்றும் வல்லமை பெற்றது. மனிதா! இன்றைய உலகில் நெருங்கிய உறவுக்கு ஒரு நீதி! பிடிக்காத எதிரிக்கு ஒரு நீதி! நல்ல செயல்களை செய்பவர்களுக்கும், கீழ் ஜாதி, ஏழைகளுக்கும், பணக்கார வர்க்கங்களுக்கும் தனித்தனி நீதி வழங்கப்படுகிறது. சட்டப்படி சென்றால் அதிகம் செலவு. குறுக்குவழியில் சென்றால் குறைந்த செலவு. அதோடு வெளியில் தெரியாமலும் இருக்கும். இப்படி ஆட்சி நடந்தால் எப்படி அடித்தட்டு மனிதர் குலம் வாழ்வது. உலகம் எங்கே உருப்புடுவது? அதனைத் தடுக்க நேர்மையான, அனைவருக்கும் பொதுவான, பிடித்தமான, நியாயமான, எளிமையான, தலைவரும் நீதிமானும் விரைவில் அனுப்புகிறேன். உங்களின் கஷ்டமான வாழ்க்கைக்கு ஒரு விடிவெள்ளியாக அவர் செயலாற்றுவார்.                     

தன்னம்பிக்கை கொண்ட மனிதா! இந்தக் குறுக்கு புத்தி மனிதர்கள் தான் இப்போது ஆட்சி செய்து வருவதால் மக்களும் அதன் படி மாறிவிட்டனர். இது அவர்களே புதைகுழியில் விழுவதற்கு சமம் என்பதை இப்போதாவது தெரிந்து கொள். ஒவ்வொரு தேர்தலின் போது, சட்டம் மக்களைத்  தவறாமல் வாக்களிக்கச் சொல்கிறது. ஆனால் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமரும்போது அவர்கள் மக்களுக்கு கொடுத்த சொல்வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது நல்லதா! மக்களுக்கு மேலும் மேலும் சுமைகளை கூட்டிக்கொண்டே சென்றால் முடிவு அழிவு தான் என்பதை தீர்க்கமாக புரிந்துகொள். ஒருகட்டத்தில் சுமையைத் தாங்கும் மனிதர்கள் எல்லாம் குறைந்துவிட்டால் அந்தச் சுமைகளை சுமப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் அவர்களும் சுமைகளைச் சுமக்க முடியாமல் அவர்களே அழிந்துவிடுவார்கள்.

    


மென்மையான மனிதா! அதற்கு உலகத்தில் நடந்த ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். சில காலத்திற்கு முன் உலகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள ஆண்கள் அதிக பணம், நகை, சொத்து என்று கேட்க ஆரம்பித்தனர் ஆண்பிள்ளை பெற்றவர்கள். அதற்கு   வேறு வழியில்லாமல் பெண் பிள்ளைகளை அதிக வரதட்சனைகள் கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்தனர். அதனால் பெண் பிள்ளை பெற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அந்த கஷ்டத்தை போக்கிக்கொள்ள ஸ்கேன் செய்து அதன் மூலம் கருவிலே பெண் என்று தெரிந்தால் உடனே அதை கலைத்தனர். இப்படியே தொடர்ந்து நடக்க நாளடைவில் பெண்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது ஒருபக்கம். மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து பெண்கல்வி கொடுத்தனர் மறுபக்கத்தில். அதன் பலனாக பெண்கள் பலர் பல துறைகளில்  நுழைத்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். இப்போது ஆண்களுக்கு இணையாக ஓரளவிற்குப் பெண்கள் உருவாகி வருகின்றனர். 

         

பெருமை கொண்ட மனிதா! பெண் இனத்தை அடிமைபடுத்தி, இழிவு படுத்தி அவர்களைத் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி வந்த ஆண்வர்க்கம் இப்போது பெண்களைக்கண்டு சற்று பயப்படுகின்றது. அவனுடன் சரிக்குச் சமமாக போட்டி போட்டுக்கொண்டு பெண்கள் வருகிறார்கள். பெண்களை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அவர்களின் கைப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அவளின் கைப்பிடியை சற்று இறுக்கினால் உன்கதி என்னவாகும் என்று யோசித்துப்பார். பெண் செய்த வேலைகளை நீ செய்தே தீர வேண்டுமென்ற கட்டாயம் வந்துவிட்டதல்லவா? உன் சட்டத்தனம் இப்போது பெண்களிடம் செல்லுகின்றதா? உன்னைப் போன்று  அவளுக்கும் துணிவு, அறிவு வந்துவிட்டது. அவர்களை நீ அனுசரித்து நடந்தால் தான் உனக்கு மரியாதை. எவ்வளவு அதிகம் நீ அனுசரிக்கின்றாயோ அவ்வளவுக்கவ்வளவு உனக்கு மரியாதை. இது எதனால்?   

              


இனிமை மனிதா! இதேபோல் ஏழை, எளியவர்களை நசுக்கும் பணக்கார வர்க்கம் கூடிய விரைவில் அவர்களுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காமல் அவர்களின் வேலைகளை அவர்களே செய்துகொள்ளும் அவல நிலையை நீ பார்க்கத்தான் போகிறாய். ஒரு வேலை அவர்களுக்கு வேலைக்காரர்கள் கிடைத்து விட்டால் முன்பு போல் அவர்களிடத்தில் அதிகாரம் செலுத்த முடியாது. ஏழை எளிய குடும்பத்தில் இருக்கும் பல பிள்ளைகள் நன்கு கல்வி கற்று வெளி நாடு சென்று பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு தான் வருகிறது. அவர்களின் சம்பாத்தியத்தின் பலனாக அவர்களது குடும்பம் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அவர்களுக்கு மதிப்பு கூடி பெரிய பணக்காரர்கள் வேலையாட்களின் சொற்படி ஆடும் நிலைக்கு வந்துவிடுவர். இப்போதே அந்த நிலை சிறிதளவு வர ஆரம்பித்து விட்டது. இனி அவர்கள் ராஜ்ஜியம் தான். ஆகையால் எப்போதும் எல்லோருக்கும் நன்மை செய். அதுவே உனக்கு நல்லது.  

               

ஆற்றல் உள்ள மனிதா! இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் எல்லோரும் ஒரு பெரிய ஜால்ரா கூட்டத்ததை வைத்துக்கொண்டு தன்னலமும், தம்மக்கள் நலத்திற்க்காக மட்டும் பாடுபடுவதை இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் அனைவரும் ஒரு பெரிய அழிவு சக்திக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பதை எச்சரிக்கிறேன். அவர்களை நம்பி நம்பியே உனது வாழ்க்கை பாழாகப் போய்விட்டது என்பதை உணந்துகொண்டு இன்று முதலாவது விழிப்புடன் இரு. ஆட்சியாகளின் எண்ணங்கள் தலைகீழாக மாறிவருவதை புரிந்துகொள். பலகோடி பெறுமான சொத்துக்களை கணக்கு காண்பிக்கிறான். பின் எப்படி ஏழைகளை எண்ணிப் பார்ப்பான். அவனால் ஏழைகளுக்காக உழைக்க மனம் வருமா? அவன் தன்னுடைய சொத்துக்களை காப்பதே குறியாக இருப்பானே தவிர மக்கள் நலனில் அக்கறை இருக்குமா?

அன்பு மனிதா! மரம், கோடி, செடி, விலங்கு போன்றவைகளின் அடிப்படை குணங்கள் கொண்ட விதைகள் மாறாமல் இருக்கின்றது. அதாவது மிளகாய் செடி பக்கத்து பக்கத்தில் ரோஜா செடி, தென்னை மரம், வேப்பமரம் போன்றவைகள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஒன்றின் குணம் மற்றொன்றின் மேல் வருவதில்லை. மிளகாயின் காரம் வேப்ப மரத்திற்குச் செல்வதில்லை. வேம்பின் கசப்பு இளநீருக்கு மாறுவதில்லை. இளநீரின் இனிமை மிளகாய் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரே மண்ணில் இருந்தாலும் அதற்குண்டான குணமுள்ள சத்துக்களைத் தான் மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இது நாள் வரை அச்செயல் சரியாக நடைபெற்று வருக்கின்றது.

          

பாசமுள்ள மனிதா! ஒரு வேலை நீ உனது குணம் சுயநலத்திற்காக அடிக்கடி மாற்றிக்கொள்வது போல சில மிளகாய்ச் செடியானது,  பக்கத்தில் உள்ள இளநீரின் சுவை எடுத்துக்கொண்டும், சில தென்னை  மரமானது,   மிளகாயின் காரத்தை ஏற்றுக்கொண்டும் இருந்தால் உன்னால் எந்த மிளகாய் காரமானது, எந்த இளநீர் சுவையானது என்று அறிந்து கொள்ள முடியுமா? அப்படி நீ அறிந்து கொள்ள நினைத்தால் உனது ஆயுசு போதாது. உனது பசியும் தீராது. பசிக்குச் சோறு தேடுவதே உனக்கு பெரும் வேலையாய் இருக்கும். கிடைத்த உணவும் நீ நினைத்தபடி பசி தீர்க்குமா? என்பது அடுத்த கேள்வி?

மேன்மையான மனிதா! நீ சாப்பிடும்போது உன் வாயில் இருக்கும் ஒரே நாக்கு எவ்வாறு இனிப்பு சாப்பிடும்போது இனிப்புச் சுவையும், காரம் சாப்பிடும்போது காரத்தின் சுவையும் மாறாமல் கொடுப்பது போல, ஒரே மண்ணானது அந்தந்த விதையின் குணங்களுக்கு ஏற்ப அதன் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது. அதுவும் எனது படைப்பின் அற்புதம்! ஏன் அதிசயமும் கூட. அதேபோல் தீயதை அருகில் வைக்கும் போது நல்லதும் தீயவையாக மாறிவிடுகின்றது. ஒரு துளி விஷம் நல்ல பாலையும் விஷமாக மாற்றிவிடுகின்றது. நல்ல தக்காளி பக்கத்தில் அழுகிய தக்காளி வைத்துவிட்டால் நல்லதும் அழுகிவிடுகின்றது. ஏனெனில் எனது படைப்பில் தீயது நல்லதுவற்றில் கலக்கக்கூடாது. தீயது புதைத்தோ அல்லது அழித்தோ விடவேண்டும் என்பது தான் எனது நோக்கம். தீயது இருக்க இருக்க உனது உடல் நலத்திற்கு கெடுதல். அதன் மூலம் இந்த உள்விதி  மனிதனுக்கும் கெடுதல்.

           


நம்பிக்கை கொண்ட மனிதா! இந்த உலகில் மனிதனின் குணம் மாறாமல் இருக்கின்றதா? நல்ல எண்ணங்கள் கொண்ட பல மனிதர்கள்  திடீரென்று தீய செயலுக்கு அடிமையாகின்றான். அதேபோல் தீய செயல் செய்த ஒரு சில மனிதர்கள் திருந்தி நல்ல செயல்கள் செய்கின்றனர். மனிதர்கள் குணம் மாறும் தன்மையும், மரம், செடி, விலங்குகள் மாறாத குணமுடன் படைத்த ரகசியத்தை இப்போதாவது தெரிந்து கொள். மனிதா! அவைகளெல்லாம் முற்றிலும் உனக்காத்தான். அதாவது மா, பலா, வாழை மரங்கள் என்று பலவித ருசிகளை கொடுப்பதை நீ தின்று சந்தோசப்படுகிறாய். அதே மா, பலா, வாழை போன்றவைகள் இப்படி நினைத்தால் ... அதாவது 'நான் படைக்கும் கனிகள் எப்படியும் எனக்கு பயன் இல்லை. இந்த மனிதர்களுக்குத் தான் பயன்படப்போகிறது . ஆகவே எதற்கு நான் இந்த அற்ப மனமுள்ள மனிதனுக்காகக் கனி கொடுத்து தியாகம் செய்யவேண்டும். இனி நான் வளர்ந்து கனி கொடுக்கமாட்டேன்' என்று நினைத்துவிட்டால்.... உனது கதி என்னாவது? என்று கொஞ்சமாவது யோசித்ததுண்டா? 

பிரியமான மனிதா! நீ எப்படி இருக்கிறாய்? நல்லவர்களுடைய பணத்தை, செல்வத்தை, சொத்துக்களை தீயவழியில் அபகரித்து அது மற்றவர்களுக்கு கொடுக்க மனம் வராமல் நீயும், உனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க எண்ணுகிறாயே இது நியாயமா? உன் அறிவுக்குக் கீழ் உள்ளவைகளெல்லாம் குணம் மாறாமல் இருந்து உனக்கு உதவுவதால் தானே இத்தகைய தீய எண்ணம் உனக்கு வருகிறது. அவைகள் உனக்கு நன்மை தராமல் இருந்திருந்தால் நீ எப்போதோ அழிந்திருப்பாய்.

               


ஆறறிவு கொண்ட மனிதா! சூழ்நிலைக்குத் தக்கவாறு உனது குணம் மாறும்படி கொடுத்தது உனது அறிவும் ஆற்றலும் பெருக்குவதற்கும் அதைக் கொண்டு மனிதகுலத்திற்கு பல நன்மைதரும் செயல்களைச் செய்வதற்காகத் தான் என்பதை நினைவில் கொள். உனது பசிக்காக விலங்கினங்களை அழித்தாய். இருப்பிடத்திற்காக மரங்களை, காடுகளை அழித்து வருகிறாய். உனது அந்தஸ்துக்காக உனது நல்ல எண்ணங்களை அழித்து வருகிறாய். இன்னும் இவ்வாறு செய்துகொண்டே போனால் நீயும் ஒரு நாள் அழிந்து விடுவாய். ஆகவே இப்போது முதல் நீ ஆக்கப்பூர்வமான செயல்களை ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காக நான் உனக்குள் உள்விதி  மனிதனாக இருக்கிறேன். என் மூலம் இந்த உலகம் புதுப்பிக்கப்படும். அந்த புது உலகத்தில் மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பது உறுதி.


உன்னை நல்ல குணவானாக மாற்றிக்கொள்!
                 
நன்மை தரும் செயல்களைச் செய்து வாருங்கள்.

          

No comments:

Post a comment