Pages

Tuesday, 16 April 2013

தாய் மொழி எப்போது வளரும்? WHEN WILL BE THE MOTHER TONGUE GROW? நாட்டு நடப்புகள்

தாய் மொழி எப்போது வளரும்? 
WHEN WILL BE THE MOTHER TONGUE GROW?
நாட்டு நடப்புகள் 


உலகத்தில் எவ்வளவோ மொழிகள் உள்ளன. ஆனால் சில மொழிகளே பேசப்பட்டு, எழுதப்பட்டு, படிக்கப்பட்டு வருகின்றன. பல மொழிகள் தாய் மொழியாகவே இருந்தாலும் அவைகள்  வெறும் பேச்சளவில் தான் இருக்கின்றன. அதிகமாக எழுதப்படுவதோ, படிக்கப்படுவதோ கிடையாது. ஏன்? அவ்வகையான மொழிகள் வளரவில்லை? அப்படியானால் ஒரு தாய்மொழி வளரவேண்டுமென்றால் என்னென்ன தேவை? என்பது பற்றி பார்ப்போம்.


இதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏழை வீட்டில் யாராவது வேலைக்காரர்கள் இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்களின் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டிற்கு போதுமா? அதாவது தனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா? இன்றைய காலகட்ட்டத்தில் எல்லாமே வியாபார நோக்கில் தான் எந்த ஒரு காரியமும் நடைபெறுகின்றது. அதாவது மொழியின் வளர்ச்சி உட்பட. எந்த மொழி வழியில் பாடங்களை, கல்வியைக் கற்றால் நிறைய சம்பாதிக்கலாம்? என்பதை மனதில் கொண்டே கல்வியைக் கற்கின்றனர். அவ்வாறு கற்றுக்கொண்டால் தான் கை மேல் பலன் கிடைக்கும் என்று எண்ணி எப்பாடுபட்டாவது எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கற்கின்றனர்.. தாய் மொழியாக  இல்லாமல் இருந்தாலும் சரி. வாயில் நுழையாமல் இருந்தாலும் சரி. அம்மொழியை கற்கின்றனர்.


அதாவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி வளரவேண்டுமானால் வெறும் கதை, கவிதை,  இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றில் மட்டும் இருந்தால் போதாதது. அதை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பாதிக்க முடியுமா? அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிகக் குறைவாகும். எந்த மொழியில் கலை, கணினி, அறிவியல், மருத்துவம், அதிநவீன பலதுறை  பாடங்கள், இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மக்களிடையே எளிதாக, வேகமாக பரிமாற்றங்கள் நடைபெறுகின்றதோ அம்மொழியே சந்தேகமில்லாமல் மிக வேகமாக வளரும். அம்மொழியையே மக்கள் பிரயாசைபட்டு கற்பர். அம்மொழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி அதைப்பற்றி கவலை கொள்ளாமல் கற்பார். 


எடுத்துக்காட்டாக தமிழ் எங்கள் மூச்சு , தமிழ் எங்கள் உயிர்  என்று பல தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் மேடைகளில், சின்னத் திரைகளில் முழங்கிவருகின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கவா அவ்வாறு பேசுகின்றனர். இல்லவே இல்லை. தங்கள் சுயநலத்திற்காகவும், பட்டம், பதவி மற்றும் நாலு காசு சம்பாதிப்பதற்கு தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விவரமாக அவர்களின் வாரிசுகளுக்கு அந்நிய மொழிக்கல்வியைத் தான் கறக்கச் செய்து வருகின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை. பின் எப்படி அவர்கள் தாய் மொழியை வளர்ப்பார்கள். பொதுவாக அனைத்து மொழிகளுக்கும் ஆங்கில மொழி ஒரு எமனாக இருப்பது உண்மை. அது பல தாய் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வருகின்றது.


இவ்வளவும் கண் கூடாக தெரியும் போது 'மொழி வளரவில்லையே' என்று கூப்பாடு போடுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா? தாய் மொழி கற்ற அனைவருக்கும் வேலை உண்டா? நம்முடைய அன்றாட தேவைக்கு வெளி மாநிலத்திடம் கையேந்தி நிற்கின்ற நிலை.நம் நாடோ அந்நியனின் உதவியை கையேந்தி நிற்கும் நிலை. கிட்டத்தட்ட அந்நியனின் கைபொம்மையாய் இருக்கிறோம். ஏனெனில் நம்மிடம் நுட்பமான அறிவுள்ளவர்கள் ரொம்ப பேர் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளும் செய்து தருவதில்லை. ஆகையால் அறிவும், திறமையும் மிக்கவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று அந்நாட்டிற்க்காக உழைக்கின்றனர்.


தாய் மொழியைக் கற்பதைக் காட்டிலும் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்றால் அறிவியல் ஆராய்ச்சி செய்வது எளிது. அதோடில்லாமல் நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்கின்றனர். ஏனெனில் அந்த மொழியில்  தான் இன்றைய தினம் வரை உள்ள அனைத்து துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வலைதளத்தில் வேகமாக , எளிதாகவும் கிடைக்கின்றன, ஆனால் தாய் மொழியில் அனைத்துக் கட்டுரைகளை 'தமிழாக்கம்' செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.


அதாவது தமிழறிவு பெற்ற அறிவியலறிவு அறிஞர்கள் யாருமே இல்லை எனலாம். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்களுக்கு தகுந்த ஊதியமோ , வசதியையோ செய்து தருவதில்லை. மேலும் ஆங்கில மொழி வளர்ச்சி காட்டுத்தீ போல் அனைத்து மீடியாக்களில் பரவிவிட்டது. ஏன்? மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் தமிழ் மொழி வழி இல்லை எனலாம். அதனால் பள்ளிவரை தமிழ் வழி பாடத்தைக் கற்றவர்கள் கல்லூரியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆங்கிலம் வளருவதைத் தடுக்க யாராலும் முடியாது. ஒருவேளை தடுத்தால் கிடைக்கும் வருமானம் போய்விடும் என்று எல்லோருக்கும் தெரியும் .


இந்த நிலை தொடருமேயானால் தாய் மொழி வெறும் கேளிக்கைகளுக்கும், வியாபாரத்திற்கும் தான் உதவும். மொழி வளர உதவாது. ஒருவேளை தாய் மொழி வளர வேண்டுமானால் அது பணக்கார மொழியாக மாறவேண்டும். தமிழைக் கற்றவர்களுக்கெல்லாம் கை நிறைய சம்பளம் தரவேண்டும். அதை கற்பவர்களுக்கு ஊக்கத் தொகை தரவேண்டும். அந்நியர்கள் இங்கு வந்து தமிழைக் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். தமிழில் வெளியாகும் அறிவியல் ஆராச்சிக் கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் மற்றும் விருதுகள் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.


உலகளவில் தமிழைப் பரப்புபவர்களுக்கு தகுந்த வசதியும், சம்பளமும் தரவேண்டும். அதாவது ஆஸ்கார் விருது வாங்குவதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம் என்பது போல அன்னிய மொழி படங்கள் தமிழில் 'டப்' செய்தால் அந்த மாதிரி திரைப்படங்களுக்கு விருது கொடுக்கவேண்டும். வந்தாரை வாழவைத்து, அதிக சம்பளம் கொடுக்கும் பணக்கார மொழியாக தமிழை மாற்றவேண்டும். அவ்வாறு பணக்கார மொழியானால் அதன் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.


இன்றைய நிலையில் 'ஆங்கில மொழி' பணக்கார மொழியாக விளங்குகின்றது. அதை பின் தொடர்ந்து பல மொழிகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் பல தாய் மொழிகளுக்கு ஆபத்து தான். நமது மத்திய மாநில அரசுகளும் அந்நிய மொழியை ஊக்குவிக்கத்தான் செய்கின்றது. ஏனென்று கேட்டால் அதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கின்றதாம். அதற்கு முக்கிய காரணம், பல தலைவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது தான். 


அவர்கள் மற்ற மொழிகளை தாமும் படிக்காமல், மற்றவர்களையும் படிக்கவிடாமல் பல ஆண்டுகள் இருந்ததால் மற்ற மொழிகளின் வளர்ச்சி நமக்கு தெரியாமல் போனது. ஆகையால் இப்போது எதற்கெடுத்தாலும் அந்நியனின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலைமை. நமது நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு அந்நியனை பல சலுகைகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கணினி, மருத்துவம், மின் சக்தி, ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் அந்நியன் தயவினால் நடைபெறுகின்றது. ஏனெனில் அவர்களிடத்தில் தொழில் நுட்பம் இருக்கின்றது. திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை மற்றும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும், பணவசதியும் இருக்கின்றது.

ஆகவே நமது தாய் மொழியை பணக்கார மொழியாக்குவோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வேண்டும். பல மொழியில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்தால் நிச்சயம் நடக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் கட்டாயம் தாய் மொழி வளரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாமே நமது மொழியின் பெருமையை பேசி சுயதம்பட்டம் பேசுவதை நிறுத்திவிட்டு மற்ற மொழியினர் நம் மொழியை பெருமையாக பேசுமளவிற்கு செய்தால் தான் தாய் மொழி வளரும்.

நன்றி 
வணக்கம்.