Pages

Wednesday 3 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலைச் செய்- LEAVE YOUR BAD THINGS - ENSURE GOOD ACTIONS

உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 


பாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டுவிடு- 
காக்கும் செயலைச் செய்துவிடு-
LEAVE YOUR BAD THINGS - 
ENSURE GOOD ACTIONS TO ALL 



மேன்மையான மனிதா! இந்த உலகில் இதுவரை பல உருவங்களில் (கற்காலம் முதல் கணினி காலம் நீங்களாக) மனிதன் ஆண்டு வந்துகொண்டிருக்கின்றான். அப்படி ஆண்டு வந்தவர்கள் பெரும்பாலும் சுயநலக்காரர்களாக இருந்ததோடுமட்டுமில்லாமல் மக்களையும் அவ்வாறு இருக்கச் செய்திடும் அவலம் நடைபெற்று வருகின்றது. இனிமேல் அப்படி நடக்காமல் தடுக்க  நான் ஒரு முட்டுக்கட்டை போடுவதற்கு வந்துள்ளேன். அந்த அகம்பாவம் பிடித்தவர்களால் உலகில் உள்ள மனிதயினம் தினமும் செத்துச்செத்து பிழைக்கும் வாழ்கையை எதிர்கொண்டு அதை சமாளிக்க வழிதெரியாமல் இதுநாள் வரை மனதிற்குள் ஏங்கி தவித்துக் கொண்டுயிருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாததால் நான் இப்போது உன் முன் உள்விதி  மனிதனாக வந்துள்ளேன்.



பிரிய மனிதா! இந்த உலகம் என் கையில் இருப்பதால், மகிழ்ச்சி ஒன்றே மனிதனுக்கு கொடுக்கவேண்டும் என்கிற ஒரே  நோக்கத்தில்  அனைவருக்கும் பொதுவாகப் பலவிதமானப் படைப்புகளை படைத்து இருக்கிறேன். படைத்துக்கொண்டும் வருகின்றேன். உலக மக்களாகிய நீங்கள் எல்லோரும் சேர்ந்து சிந்தித்து படைத்ததை காட்டிலும் அதிகமாக  படைப்புகளை, விந்தையான படைப்புகளையல்லவா நான் படைத்து வருகிறேன். அதை உனக்கு இலவசமாகக் கொடுத்துள்ளேன். அதற்கெல்லாம் எனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறாய்? நீ படைக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விலை அல்லது மதிப்பு வைத்துள்ளாயே, நான் படைத்ததை மாதிரியாக வைத்தல்லவா நீ படைத்து புகழை பெறுகின்றாய்! நான் படைத்ததற்கு மதிப்பு உன்னால் போட முடியுமா? அல்லது அந்த மதிப்பை  உன்னால் சிறிதளவாவது எனக்குத் தரமுடியுமா!

பாசமுள்ள மனிதா! நான் கேட்பதெல்லாம், நான் படைத்த இந்த உலகை சீரும் சிறப்புமாய் கவனித்து, எல்லா மனிதர்களுக்கும்  நான்  படைத்ததை எல்லாம்   மகிழ்ச்சியாய் அனுபவிக்கச் செய்தாலே எனக்கு சந்தோஷம் . இந்த உலகம் செழிப்பதற்கு பல வழிகள்  நான் அருளிய போதிலும் அவைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு , புதிதாக ஏதோ சாதிக்க எண்ணி ஏதேதோ செய்ய ஆரம்பித்திருக்கின்றாய். அது உன்னை அழிவுக்கு வழிவகுக்கும் புதைகுழி!  நீ அந்த புதை குழியில் விழுந்துவிடாமல் உன்னை காப்பாற்றவே அவசரமாக உன்னை சந்திக்க வந்துள்ளேன். இதுநாள் வரை தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ பல தவறுகள் செய்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் உனக்கு நன்மைசெய்யும் விதமாக நான் உனக்குள் உள்விதி  மனிதனாக வந்துள்ளேன். போனது போகட்டும் விட்டுத் தள்ளு. வருவது நன்மையாக இருக்கும்படி நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமேல் உன்னைவிட்டு எப்போதும் பிரியமாட்டேன். உன்னுடனேயே இருந்து உன் நன்மைக்காக பாடுபட்டு உனக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சியை அள்ளித்தரப் போகிறேன். அதை நீ தினந்தோறும் பெற்று இன்பமயமாய் வாழ்ந்து அனுபவிப்பாயாக! மேலும்   மனிதகுலத்தை செழிக்க செய்வதற்கான அத்தனை உதவிகளையும் உனக்குள்ளிருந்து  உன் மூலம் செய்யப் போகிறேன். 


இரக்கமுள்ள மனிதா! இந்த உலகம் அழியாமல் இருப்பதற்கு உன் மூலம் பலசெயல்களை செய்ய ஆயுத்தமாகிவிட்டேன். நான் படைத்த அற்புத உலகை, மனித படைப்பை அவ்வளவு எளிதாக  அழிக்க விடமாட்டேன். எப்படியெல்லாம் உன்னை காக்கவேண்டும் என்று நான் நன்றாக திட்டமிட்டுள்ளேன். உலகம் இன்னும் எத்தனை கோடி வருடம் ஆனாலும் யாராலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க எண்ணியவர்கள் பலரையும்  ஏற்கனவே அழித்துவிட்டேன். இனி அப்படி அழிக்க எண்ணுபவர்களை சிலரே இருப்பதால் அவர்களையும்  எளிதாக உன்வாயிலாக அழித்துவிட்டு உன் பெருவாழ்வுக்கு வழிசெய்து உன்னுடனே காலத்தை கழிக்க வந்துள்ளேன்.

மதிப்புள்ள மனிதனே! நான் மனிதனை வேறுபாடு இல்லாமல் ஆண் , பெண் இனத்தை ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும்  நோக்கத்துடன் ஒரே மாதிரியாகவும், ஒரே சக்தி உடையவர்களாகவும் அல்லவா படைத்தேன். அதை மறந்து சில சுய நல பேராசைக்காரர்கள் பெண் இனத்தை அடிமை படுத்தியல்லவா வைத்திருந்தார்கள்? அவர்களை வளரவிடாமல் இத்தனை காலம் தட்டி தட்டியல்லவா பூட்டி வைத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களின் சுயநலமிக்க  எண்ணங்களை சாதித்துக் கொண்டிருந்தார்கள். இனி அது நடக்காது! அவர்களுக்கும் உரிமை இருக்கின்றது இந்த உலகத்தை அனுபவிக்க. அவர்களின் உதவி இல்லாமல் இனி யாரும் என் படைப்புகளை அனுபவிக்க முடியாது. அவர்களுக்குள் இருக்கும் அதிக சக்தியும், ஆற்றலையும், புத்தி கூர்மையும் இது நாள் வரை பயன்படுத்தாமல் இருந்துவந்தார்கள். இனிமேல் அவர்கள் பலவித செயல்களை  செய்து சாதனை படைப்பார்கள். அதற்கு நான் ஒத்துழைப்பதுபோல் நீயும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி செய்வதால் இந்த உலகம் அழியும் நிலையிலிருந்து விடுபடும். உனது வாழ்வும் சுபிட்ஷம் பெறும் . 



அன்பு மனிதனே! நீ எவ்வளவு பெரிய சுயநலக்காரன், நான் எவ்வளவு பெரிய இரக்கமுள்ளவன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! ஒரு கொசுவை கொன்றால் ஏன்  என்று கேட்பாரில்லை? ஒரு கரப்பான் பூச்சியை சாகடித்தால் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்! அது போல் ஆடு, மாடு, கோழி அப்படித்தானே! ஏனென்றால் ஐந்தறிவுக்கு கீழ் உள்ள ஜீவராசிகளை உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அறிவையும், பலத்தையும் பெற்றுவிட்டாய். அதோடுமட்டுமில்லாமல் அவைகளை உன்னிஷ்டம் போல் ஆட்டிவைக்கவும் துணிந்துவிட்டாய். அதற்காகவா உனக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுத்தேன்.  அனைத்து ஆற்றல் , அறிவுள்ள நான் உன்னை ஆட்டிவைக்க எத்தனை வினாடிகள் பிடிக்கும்? அதை நான் விரும்பவில்லை! ஆட்டை கடித்து, மாட்டைகடித்து இப்போது என்னையல்லவா கடிக்க எண்ணுகிறாய்! நான் நினைத்தால் நீ தவறு செய்யும் ஒவ்வொரு தடவையும் உன்னை தண்டிக்க முடியும். அப்படிச் செய்தால் நான் கட்டாயம் கொடுங்கோலனாக இருப்பேன். அப்படி பழி வாங்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை. உன்னை உன் வாழ்நாளில் திருத்தி அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் மனிதனாக மாற்றி என்னைப் போன்று உன்னை உருவாக்கவே வந்துள்ளேன். அதற்காக உன் வாழ்நாள் முழுவதிலும் நீ திருந்துவதற்கு பல வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றேன். அதை உதாசீனப்படுத்துவதோடு நீ திருந்த மறுக்கின்றாய்.  நீ திருந்தாமல் மேலும் மேலும் தவறு செய்வதை தடுக்கவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்து உன்னை திருத்தி நல்வழியில் அழைத்துச் செல்லவே இப்போது உன் முன்னே நின்று பேசுகிறேன்.

இனிய மனிதா! விலைபெறாத ஒரு பிச்சைக்காரன் இறந்துவிட்டால் யாரும் கேட்பாரில்லை. ஆனால் ஒரு தலைவன் இறந்துவிட்டால் ஆ...ஊ...என்று வருத்தப்படுகிறாய்! அலட்டிக்கொல்கிறாய்! ஏன்  இந்த பாகுபாடு? சந்தனக்கட்டையில் எரித்தால் சொர்க்கத்திற்கும், மண்ணில் புதைத்தால் நரகத்திற்குமா செல்கிறார்கள்! பகட்டினால், பாசம் போல் வேஷம் போட்டு, ஆடம்பரமாக டாம்...தூம் ....என்று இறப்பதை கொண்டாடினாலும் நான் அனைவரையும் ஒன்றாகவே ஆட்கொள்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்பு மனிதா! ஒரு மனிதன் ஒரு மனிதனை கொலை செய்தால் அவனை சிறையில் தள்ளி சித்திரவதை செய்கிறாய். ஏன்? தூக்கில் கூட போடுகிறாய்! ஆனால் நாடுகளுக்கிடையே நிகழும் போரில் லட்சகணக்கான மக்களை சாகடிக்கும் போது யார் யாரை தண்டிக்கிறார்கள்! இந்த மாதிரி என் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் செயல் இனி நடக்காது! ஏனென்றால் அதில் கெட்ட மனிதர்களோடு நல்லவர்களுமல்லவா சாகின்றனர்! அது போல் இனி நடக்காமல் தடுப்பது எனது குறிக்கோளாகும்.



பிரிய மனிதா! இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு 'நான் என்ன செய்தேன் 'என்று நீ கேட்க விரும்புவது எனக்குத் தெரிகின்றது. ஆனால் நான் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தேன் என்று தப்புக்கணக்கு போடுகிறாய்! அதாவது ஒரு மனிதன் சிறிய தவறு செய்யும்போது தண்டித்தால் நான் கருணைக்கடலாக இருக்கமுடியாது. அவன் தனது தவறுகளை உணர்ந்து திருந்தமாட்டானா என்கிற நப்பாசையால் அவனுக்கு நான் உடனடியாக தண்டனையைக் கொடுக்க விரும்பவில்லை. தவறு செய்வது அவன்  புதைகுழியில் விழுவதற்குச் சமம். மேலும் மேலும் தவறு செய்யும்போது அதல பாதாளத்தில் போய்விடுவதால் அவனைக் காப்பாற்ற யாருமில்லாமல் அவனே அழிந்துபோகின்றான். 

பாசமுள்ள மனிதா! நான் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு காத்தல் தொழிலை உன்னிடம் ஒப்படைத்தது உன்னை என்னைப்போல் மேன்மையான நிலைக்கு உயர்த்துவதுதான் என்னுடைய  நோக்கமாகும். அதைவிட்டு விட்டு 'காத்து ரட்சிக்கிறேன் ' என்பது போல் பாவனை செய்து அவர்களை பலவழிகளில் கொடுமைபடுத்தி, வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கிக் கொண்டு வருவதை இன்றோடு முடிவுக்கு கொண்டுவர எண்ணியுள்ளேன். 


இனிமையான மனிதா! இன்று முதல் இந்த இலட்சியம் கொள். நீ வந்திருப்பது உனது பேராசையை நிறைவேற்ற அல்ல. என் படைப்புகளை காத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் பயணிக்கவே வந்துள்ளாய் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு நான் உனக்கு தந்த அடிப்படை தேவைகளை கொடுத்து உதவு! அதைவிட உனக்கு வேறு வேலை இல்லை. இப்போதே வீண் காரியங்களில் ஈடுபடாமல் மக்களை இரட்சிக்க உடனே புறப்படு. நானும் வருகிறேன்! இல்லையேல் அது போன்றவர்களை நானே அழித்து  என் சக்தியை காட்டி அதை  நிருபிக்க வேண்டியிருக்கும்.

மனிதா அழிவு எண்ணத்தை விட்டுவிடு!


காக்கும் எண்ணத்தை வளர்த்துவிடு!

என் கடமையில் நீ பங்கு கொண்டு 
அனைவருக்கும் மகிழ்ச்சியை  தந்துவிடு!     

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

1 comment:

  1. சந்தனக்கட்டையில் எரித்தால் சொர்க்கத்துக்கும் சாதா கட்டையில் எரித்தால் நரகத்துக்கும் போவார்களா..super..

    ReplyDelete