Pages

Tuesday, 1 January 2013

பணம் பேசுகிறது (புதுக்கவிதை ) -IF MONEY TALKS

பணம் பேசுகிறது (புதுக்கவிதை)


IF MONEY TALKS



- மதுரை கங்காதரன் -



கடவுள் உன்னைப் படைத்தான்
இரக்கம் இருந்தது
உலகு செழித்தது



நீ கடவுளை வெல்ல நினைத்தாய்
நினைத்ததை சாதிக்க எண்ணினாய்

என்னை படைத்தாய்
கடவுளை மறக்கச் செய்தாய்

புது உலகம் பிறந்தது
கடவுள் உலகம் மெல்ல மறைகிறது



எல்லாம் பணமயமானது 
கடவுளையும் பணம் வாங்கியது

நன்றி காட்டத் தவறச் செய்தது
மனித நேயத்தை மறக்கச் செய்தது

கல்வி வீரம் விட நான் உயர்ந்தவன் என்றது 
கல்வி அறிவு காட்ட சிலராவது வேண்டும்

வீரம் காட்ட ஒருவராவது வேண்டும்
பண பலம் காட்ட யாரும் தேவையில்லை.

உனக்குள் இதயம் இருக்கின்றது
எனக்குள் மதிப்பு இருக்கின்றது

இதயத்தால் அனைவரையும் வாங்கலாம்
அந்த இதயத்தையே நான் வாங்கிடுவேன்

எனக்கு கால்கள் உண்டு
எங்கும் நடப்பேன் உன் மூலமாக

எனக்கு இறகுகள் உண்டு
எங்கும் பறப்பேன் உன் மூலமாக

பேசாதவர்களை பேச வைப்பேன்
பேசுபவர்களை மௌணியாக்குவேன்

செய்யாதவர்களை செய்ய வைப்பேன்
செய்பவர்களை அடக்கி வைப்பேன்

கடவுள் உன்னை ஆட்டுவிப்பதை
நம்ப மறுக்கிறாய்.

நான் அனைவரையும் ஆட்டுவிப்பதை
ஏற்றுக்கொள்கிறாய்

நான் இருப்பதால் உனக்கு பலம்
நான் இல்லாவிட்டால் உனக்கு பயம்

எனக்கு பாமரனும் ஒன்று
பணக்கார வர்க்கமும் ஒன்று

நாய் பூனையும் ஒன்று
கழுதையும் குதிரையும் ஒன்று

என்னை அடைவது கடினம்
என்னை காப்பது அதைவிட கடினம்

ஏமாற்றுபவர்களுக்கு ஒரு கண் என் மீது
திருடனுக்கோ இருகண்களும் என் மீது

எப்போது உன்னிடம் வருவேன் நான் அறியேன் 
எப்போது பிறரிடம் செல்வேன் யாரும் அறியார்  

என்னை அடைய போட்டி போடுவார் 
என்னை கட்டிப் போட யாரும் கிடையார்

நான் இல்லாமல் நீ இல்லை 
நீ இல்லாமல் எனக்கு மதிப்பில்லை 

கடவுள் படைத்த உனக்கு அழிவுண்டு
நீ படைத்த எனக்கு அழிவில்லை

என்னை பதுக்கிவைப்பவர்கள்
பதுங்கி வாழ்வார்கள்



நல்லவனிடத்தில் இருந்தால் நன்மை
கெட்டவனிடட்தில் இருந்தால் தீமை

என்னால் நல்லவன் கெட்டவனாகிறான்
என்னால் கெட்டவன் நல்லவனாகிறான்

என்னால் உனக்கு பதவி தர முடியும்
பாழும் கிணற்றில் தள்ள முடியும்

சிறிதளவு இருந்தால் நான் அவர்களுக்கு அடிமை
அதிகமாக இருந்தால் அவர்கள் எனக்கு அடிமை

என்னால் மண்ணை வாங்க முடியும்
என்னால் பொன்னை வாங்க முடியும்



என்னால் மனிதனைக் கூட வாங்க முடியும்
என்னால் எமனைக்கூட நாளை வரச் செய்வேன் 

நான் உணர்ச்சியில்லாதவன்
நான் ஓரறிவும் இல்லாதவன்

என்னால் நீ அறிவிழப்பது நியாயமா
என்னால் நீ பகைமை சம்பாதிப்பது தர்மமா

நீ மனது வைத்தால் நானும் மனிதனாக முடியும்
நல்லவர்கள் என்னை ஆளட்டும்

பேராசை கொள்பவர்களை ஒழித்துவிடு
பணப்பைத்தியங்களை வைத்தியம் பார்த்து விடு

திருடர்கள் திருந்தட்டும்
எமாற்றுபவர்கள் அழியட்டும்



இந்த உலகில் மனிதன் சிரிக்கட்டும் 
அன்பு என்றும் நிலைத்து நிற்கட்டும்.

1 comment: