Pages

Monday, 17 December 2012

முத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறு கதை MUTHU HOUSE Vs OLDAGE HOUSE (SMALL STORY)

முத்து இல்லம் Vs  முதியோர் இல்லம்  - சிறு கதை 
MUTHU HOUSE Vs OLD AGE HOUSE (SHORT STORY)
MADURAI GANGADHARAN
மதுரை கங்காதரன் 




   

'முத்து இல்லம் ' என்று அழகாக பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...

" இப்போது திருப்தியா அலமேலு ! நீ நினைச்சது போல செஞ்சாச்சு " என்றான் ராஜா என்ற முத்துராஜன்.

"என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம் ! ஏன்? உங்களுக்குமில்லையா ?இல்லே  நம்ம மாலா, லீலா குழந்தைங்களுக்குமில்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்றீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.



அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. நேற்று வரை இருந்த உணவு கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த நாளையில் இந்த உணவு தான் இந்த வேளைக்குச் சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவு சாப்பாடு என்று ஒன்று அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம் அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்கு தீனிகள் அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம் நீளமாக மாறின. சாயும்கால குழந்தைகளின் படிப்பு சீரியல் பார்ப்பதிலும், பாட்டு கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள் வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.



காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படி கூப்பிடாதவன் அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெரிந்தான்.

அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்துராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியை கையில் தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாக தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதை சற்று வருடியது. 

'ஒருவேளை பெரியவருக்கு முடியாமல் இருக்குமோ அல்லது அவர் வெளியூர் ... ' இப்படி பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தது.

அவன் பெரியவரை தேடுவதற்கு காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால் அந்த பெரியவர் தினசரியை கையில் வாங்கும் போது எப்போதும் அந்த பையனிடத்தில் " இவ்வளவு சின்ன வயசுலே பொறுப்பா நல்ல உழைக்கிறே. அதேபோல் நல்லா படிச்சு பெரிய உத்தியோகம் கிடைச்சு கை நிறைய சம்பாதிச்சு உங்க அம்மா அப்பாவை கண்கலங்காம கடைசிவரை காப்பாத்தனும் ! புரிஞ்சுதா ? " என்ற அவரின் அன்பான பேச்சு அவனுக்கு அலாதியான உற்சாகமும், உத்வேகமும் அவனை எப்போதும் நன்றாகவும்  நேர்மையாகவும் உழைக்கச் செய்தது. படிக்கவும் செய்தது. 

அவன் அந்த வீட்டை கடந்து சென்ற சில நிமிடங்களில் 



"அம்மா ... பால் .." அந்த பால்கார அம்மாவும் பலமுறை கூப்பிட்டும் கதவை யாரும் திறக்காததால் அவள் கொண்டு வந்த பாலை வாசலிலே வைத்துவிட்டுச் சென்றாள். அப்படி வைத்துவிட்டுச் செல்வது அவளுக்கு முதல் முறையும் , புதிய அனுபவமாகவும் இருந்தது.

அவளுக்கும் அன்றைய நிகழ்வு ஏதோ ஒரு பெரிய இழப்பை தந்தது. இந்த 'அலமேலு ' அம்மாவுக்கு என்ன ஆச்சோ , ஏதாச்சோ ? என்று ஒன்றும் புரியாதவளாய் அந்த வீட்டை விட்டு நகர்ந்தாள்.



அந்த பால்கார அம்மாளின் ஏக்கத்தில் ஒரு அர்த்தமிருந்தது. எப்போதும் நாள் தவறாமல் அந்த அலமேலு அம்மாள் அந்த காலை நேரத்திலே தலை நிறைய பூவோடும், மஞ்சள் முகத்தில் அழகாக குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு பளிச்சென்று பிரகாசமான சேலை உடுத்திக்கொண்டு கால் சலங்கை ஒலியுடன்  ஒய்யாரமாய் நடந்து வந்து ஒரு அழகிய புன்னகையுடன்  பாலை வாங்கியபடி, " என்னம்மா, சௌக்கியமா? நேத்து உன்னோட பையனுக்கு உடம்பு முடியல்லைன்னு சொன்னேயே இப்போ எப்படி இருக்கான்? செலவுக்கு ஏதாச்சும் வேணும்னா வாங்கிக்கோ? திருப்பித் தரவேண்டாம். குழந்தையே நல்லா கவனிச்சிக்கோ. அவன் நல்லா படிச்சு பெரியவனா வளர்ந்த பின்னே உனக்கு கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்துவான் பயப்படாதே" என்று ஆறுதல் வார்த்தையோடு தன்னம்பிக்கையும் கொடுப்பாள். அந்த இனிமை கலந்த அமுதமான பேச்சை கேட்பதற்கு அந்த பால்கார அம்மாள் ஆவலுடன் துள்ளி துள்ளி வருவாள்.

இந்த பின்னணியிலும் அந்த வீட்டுப் பெரியவர் தான் இருக்கிறார். அவருக்கு எல்லாமே நேரம் தவறாமல் ஒழுங்காகவும், எல்லாவற்றிலும் அளவுடனும், அனைவரிடத்தில் அன்பாகவும், உதவியாகவும் இருக்கவேண்டும் என்கிற கண்டிப்புத் தன்மையோடு இருக்கச் சொல்பவர் . அது மட்டுமா? காலையில் அனைவரும் எழுந்து அவரவர் வேலையை சரியாக அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதை  ஒரு 'இராணுவச் சட்டம் ' போல கடைபிடிக்கச் செய்வார். அதில் ஓன்று அலமேலு கண்டிப்பாக காலையில் எழுந்து , குளித்து மங்களக் கோலத்துடன் பாலை வாங்கி அனைவருக்கும் காபி போடவேண்டும் என்றும், அனைவரிடத்திலும் அன்புடன் பழகிப் பேசவேண்டும் என்கிற எழுதாத சட்டமும் அடங்கும். 



அவளும் சென்ற பிறகு முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியான பயிற்சி' செய்வதற்கு தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவைகளைச் செய்ய தவறுவதில்லை.              

வீட்டிலிருந்து பதில் ஏதும் வராத காரணத்தினால் 'அழைப்பு மணி 'யை ஒரு முறை அழுத்திவிட்டு வாசல் கதவைப் பார்த்தார். மீண்டும் அதே அமைதியாக இருந்ததினால் மற்றொரு முறை அந்த அழைப்பு மணியை அழுத்தினார். தனது நண்பனோ அல்லது வேறு யாராவது கதவைத் திறக்க வருவார்கள் என்று உறுதியாக காத்திருந்தார்.

அவருக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அவரும், முத்து ராஜாவும் இந்த பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தது முதல் நேற்று வரை ஒரு நாள் கூட இப்படி 'அழைப்பு மணியை ' அழுத்திவிட்டு காத்திருந்ததாக நினைவில்லை. எப்போதும் அவர் வருவதற்கு முன்பே முத்து ராஜன் 'டான் ' என்று நிற்பான்.

அன்று நடந்த இந்த நிகழ்ச்சி அவருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. 'ஏன்? இப்போது வரை யாரும் கதவை திறக்க வரவில்லை'  என்று பலமான யோசனை செய்து கொண்டிருக்கையில்  கதவு மெல்ல திறக்கும் சப்தம் கேட்டது. கதவு திறந்தது முத்து ராஜன் இல்லை. அவள் மனைவி என்று கதவு திறந்தவுடன் தான் அவருக்கு தெரிந்தது. முழுவதும திறந்து " அவரு தூங்குறாரு, இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வாசலில் இருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். அலமேலுவும் தான் புகுந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அன்று தான் மிகவும் தாமதமாக எழுந்துள்ளதை அவளுக்கே அப்போது தான் தெரிந்தது.

அந்த பதிலை கேட்ட நடேசனுக்கு தூக்கி வாரிப்போட்டது. முத்து ராஜன் அவனுடைய பால்ய நண்பன்.  உடல் ஆரோக்கியத்தில் முத்து ராஜனுக்கு அதிக  அக்கறை இருந்தது. காரணம் அவனுடைய வேலை பளு. ஏனென்றால் அவனுடைய உயர்ந்த பதவி. இதை செய்யாமல் இருந்தால் வேலையில் அவனுக்கு சுறுசுறுப்பே வராது என்பதை உணர்ந்தான்.

வேறொரு காரணம், ஒரு நாள் மிகுந்த வேலை காரணமாக சற்று மயக்கமாக வருகின்றது என்று அவருடைய குடும்ப மருத்துவரை பார்த்தார்.

"இங்கே பாரு ராஜா, நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை. ஒன்னு ஒன்னு நான் சொல்லி நீ தெரிஞ்சுகிறதுக்கு. உனக்குத் தேவை சத்தான பழமை உணவு, அளவான சாப்பாடு,  தினமும் சிறிது நேரம் நடை மற்றும் தியானப் பயிற்சி " என்பதை அவரது  டாக்டர் எச்சரித்தாலும் அவன் பொருட்படுத்தாமல் இருந்தாலும் அவனின் அப்பா ஒரு பழைமையான மனிதர் என்கிற காரணத்தினால் இதை அவனுக்கு மட்டுமில்லாமல் தெரிந்தோ தெரியாமலோ கட்டளையிட்டு நடைமுறை படுத்தி வந்தார். 

வேறு வழியில்லாமல் அனைவரும் வேண்டா வெறுப்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் கம்பு, கேப்பை மற்றும் சற்று குறைவான் எண்ணெய் , சர்க்கரை, புளி , உப்பு போன்றவைகளையும்  ஏற்றுக் கொண்டனர். உண்மையில் அதன் பிறகு யாருக்கும் எந்தவித உடல் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக காலத்தைக் கழித்து வந்தனர். குறிப்பாக முத்து ராஜாவுக்கு நடை, தியான பயிற்சி கட்டாயம் செய்தே தீரவேண்டும். அதற்கு அந்த வீட்டுப் பெரியவர் பொறுப்பேற்றுக்கொண்டு தினமும் அவனை எழுப்பி தயார்படுத்தி வந்தார்.

அவனுடைய நண்பனுக்குத் தெரியும். முத்து ராஜனின் அப்பா இருப்பதால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று. கட்டுப்பாடான அளவான உணவு, இந்த பயிற்சிகள் இருப்பதால் தான் அவன் எவ்வித மன அழுத்தமில்லாமல் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்பவன். ஏன், வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவது போன்றவைகளை கூட நேரம் தவறாமல் சரியாகச் செய்வார். அத்தகைய  நண்பனுக்கு இன்று என்ன வந்தது ? ஏன் பயிற்சிக்கு வரவில்லை ? போன்றவற்றிற்கு விடை தெரியாமல் அந்த இடத்தைவிட்டு தனியாக கடந்து சென்றார்.

வராமல் இருப்பதற்கு காரணமும் இருந்தது. நீங்கள் பிறகு தெரிந்து கொள்வீர்கள். (கதையை  தொடர்ந்து படிக்க)



வீட்டினுள் .. சமயலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்துகொண்டும் மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்கு காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால் தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோவென்று அரைகுறையாக நடந்தது.




இது இப்படி இருக்க, வாசலில் 'பள்ளி வாகனம்' இருமுறை 'ஒலிப்பான் ' சப்தத்துடன் நின்றது. வாகன நடத்துனர் ஆச்சரியமாக வீட்டு வாசலை பார்த்தான். குழந்தைகள் வருவதான அறிகுறிகள் இல்லது போகவே வாகன ஓட்டுனருக்கு மீண்டும் ஒரு தடவை ஒலிப்பானை எழுப்பச் சொன்னார். அதற்குள் வீட்டிலிருந்து மாலா , லீலா இரு குழந்தைகள் ஒருகையில் புத்தகப் பையையும், மறு கையில் மதிய உணவையும் தூக்கிக்கொண்டும் அரைகுறையுடன் சீவிய சடைப் பின்னலுடனும், முகத்தில் திட்டு திட்டாக  பவுடர் அப்பிக்கொண்டும், சரியாக அணியாத சட்டை, காலில் நுழைந்தும் நுழையாததுமாய் அணிந்த காலணிகளுடன் சற்று அலங்கோலமாய் விறுவிறுவென்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறிச்சென்றனர்.

குழந்தைகளின் இத்தகைய செயல்கள் நடத்துனருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. வழக்கம் போல் அவர்கள் எப்போதும் நன்றாக அலங்கரித்து எவ்வித பதட்டமுமில்லாமல் பள்ளிவாகனத்தை எதிர்நோக்கி இருப்பார்கள். நேற்று வரை அவர்களுக்காக சில வினாடிகள் கூட காத்திருந்தது கிடையாது. மேலும் அவர்களை அந்த வீட்டுப் பெரியவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பேருந்தில் பத்திரமாக ஏற்றிவிட்டு கையசைக்கும் போது குழந்தைகளும் "தாத்தா , நான் போயிட்டு வருகிறோம் ' என்று அவர்களும் கையசைப்பார்கள். இவைகளைக் காணாதது நடத்துனருக்கு காரணம் தெரிந்திருக்க் வாய்ப்பில்லை.



ஒரு வழியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு அலமேலு அவசரம் அவசரமாக தன கணவருக்கு காலை உணவை பரிமாறினார். இதுவரை பார்க்காத உணவு வகைகள். அதனால் சற்று அதிகமாகவே சாப்பிட்டான். அவனின் கை கடிகாரம் அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்பதை உணர்த்தியது. அதை அறிந்து கொண்டு அவனின் கை பேசியையும், அலுவலகப் பையையும் கொடுத்து கையில் இரு சக்கர வாகனத்தின் சாவியை கையில் திணித்தாள். எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்ற பிறகு 'அப்பாடா ' என்கிற பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள் .

இது நாள் வரை ஒரு நாள் கூட இவ்வளவு அவசரமுடன், எந்த ஒரு  வேலையும் அரைகுறையாக செய்தது கிடையாது. அப்போது தான் நேற்று காலையில் நடந்த நிகழ்ச்சியை சற்று அசைபோட்டுப் பார்த்தாள்.



" இதோ பாரு ராஜா, உங்களுக்கு நான் பாரமா இருந்தா அல்லது உங்க சுதந்திரத்திற்கு தடையா நான் இருந்தா இப்போவே என்னை முதியோர் இல்லத்திலே சேர்த்திடுங்க. உங்களோட மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நான் கெடுக்க விரும்பலே. நான் சந்தோசமா போகிறேன். இனிமே உங்க இஷ்டப்படி எப்போது வேண்டுமானாலும் எழுந்திருங்க, டி.வி பாருங்க, சாப்பாடு சாப்பிடுங்க, தூங்குங்க. ஏனென்னா எனக்கு உங்க சந்தோசம் முக்கியம். அதற்கு குறுக்கே நான் இருக்க விரும்பலே. நீங்க விருப்பப்பட்டா மாசம் ஒரு தடவை என்னை வந்து பாருங்க. அதுவும் இல்லேன்னா கை பேசியில் பேசுங்க.எல்லாவற்றிற்கும் நான் தயார் " என்று சொன்னவுடன் உடனே முத்து ராஜன் அலமேலுவுடன் கலந்தாலோசித்து குழந்தைகளின் ஒப்புதலுடன் அவரை அந்த பெரியவரை அன்றே முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

இவ்வளவு நினைவுக்கு வந்தும் காலை முதல் நடந்த பரபரப்பு, மனதில் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. ஒரு வேளை தாங்கள் எடுத்த முடிவு தவறோ! என்கின்ற சந்தேகமும் அவளுக்கு வந்தது. ஆனால் மறு நிமிடமே சற்று சுதாரித்து இன்று தானே ஆரம்பம். நாட்கள் போக போக எல்லாம் முன்பு போல சரியாக நடந்துவிடும். மீண்டும் பெரியவரை இங்கு அழைத்து வந்தால் நம்முடைய சுதந்திரம் பறிபோய்விடும். ஆகவே பல்லைக் கடித்துக்கொண்டு சற்று பொறுமையாக அதே சமயத்தில் சுதந்திரமாக இருக்க முடிவு செய்தாள்.

சற்று நேரத்தில் பக்கத்திலிருந்த வேறொரு பெரியவர் "அம்மா, அலமேலு ! நான் காலையிலிருந்து உங்க வீட்டு நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லாமே தலைகீழாக இருந்தது. பிறகு தான் என் பையன் சொல்லி எனக்கே தெரிந்தது. உங்க மாமனாரை முதியோர் இல்லத்திலே சேர்த்ததா சொன்னான். என்னையையும் எப்போ எனது பையன் சேர்க்கப் போகிறானோ எனக்குத் தெரியல்லை. எனக்கிருந்த ஒரு துணையும் இப்போ இல்லை. பழகுவதற்கு நல்ல மனுசர். நல்ல சிந்தனை உடையவர். எல்லோருக்கும் முகச்சுளிவு இல்லாமல் வேண்டிய உதவி செய்வார். அவர் அங்கு எப்படி இருக்கிறார் என்பதை அவ்வப்போது கொஞ்சம் சொல்லாம்மா. சரி.. சரி நீங்க நல்லபடியா இருங்க. நான் வர்றேன் " என்றதுக்கு அவளும் தலையை பலமாக ஆட்டியபடி அனுப்பிவைத்தாள்.

நாட்கள் வேகமாக பறந்தன. அதற்குள் மாதங்கள் ஆறு கடந்தன. ஒரு நாள் ,

"என்னங்க, நாளைக்கு அரை நாள் விடுப்பு போடுங்க"

"ஏன், என்ன விஷயம்? எனக்கு அலுவலக்கத்திலே நிறைய வேலை இருக்கு. முக்கியமான கூட்டம் இருக்கு. நான் கட்டாயம் இருந்தே ஆகணும். வேணும்னா , பெர்மிசன் போடுகிறேன். விஷயம் சொல்லு "

" ஒன்னுமில்லைங்க , நம்ம குழந்தைங்களோட பள்ளி தலைமை ஆசிரியர் நம்மை சந்திக்கச் சொல்லி குறுந்தகவல் ஓன்று வந்தது. என்ன காரணம் என்று குழந்தைங்களுக்கும் தெரியல்லே. பள்ளிக்குப் போய் அவங்களை சந்திச்சாத் தான் விஷயம் தெரியும் " என்றாள் அலமேலு. முத்து ராஜனும் சரி என்று ஒத்துக்கொண்டான்.

மறு நாள் காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு அலமேலுவை முத்து ராஜன் அவசரப்படுத்தினான்.

" இன்னைக்கு என்னமா ஆச்சு, பழைய சுறுசுறுப்பு இப்போ இல்லையே. பம்பரம் போல் காலை முதல் தூங்கும் வரை வேலை செய்வே. இப்போ அது காணாமே!" அவன் பதற்றத்துடன் கேட்டான்.

" என்னமோ தெரியல்லைங்க , ஒரு வாரமா வேலையில்லே கவனம் செலுத்த முடியாமே ஒருவித ஈடுபாடும் இல்லாம உடம்பு சோர்வா இருக்கு. இன்னைக்கு சரியாப் போய்விடும், நாளைக்குச் சரியாப் போகும் என்று அலட்சியமா இருந்தேன். ஆனா நாளாக நாளாக அதிகமா போகுது தவிர குறைந்த பாடு தெரியல்லே. ரொம்பவே அசதியா இருக்கு"

"என்னம்மா , இப்படியிருக்கே, ஒரு நாள் கூட நீ இப்படி சொன்னது கிடையாது. எனக்கு ரொம்பவே படபடக்குது. முதலே டாக்டர் வீட்டிற்குப் போவோம். பிறகு ஸ்கூலுக்குப் போவோம் " என்றான்.

" முதல்லே ஸ்கூலுக்கு, சாயந்தரம் டாக்டர் வீட்டிற்கு. உங்களுக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்க. இதோ ரெடியாயிடுறேன்" என்று நிமிடத்தில் தயாரானாள் .

பள்ளியில் நுழைந்தவுடன் நல்லவேளையாக தலைமை ஆசிரியாசிரியரைக் காண வேறு யாருமே இல்லாத்தலால் அவர்கள் அந்த அறையில் நுழைந்தனர்.

அவர்களே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.



"நாங்க மாலா , லீலா வின் பெற்றோர்கள். சந்திக்க வேண்டுமென்று மெசேஜ் வந்தது. என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிறதுக்கு வந்திருக்கோம். குழந்தங்க ஏதாவது தப்பிதமா... " சந்தேகத்தோடு கேட்டார்கள்.

"நோ.. நோ..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நல்ல படிக்கிற குழந்தைங்க. எப்போதும் துருதுருன்னு இருப்பாங்க. ஆனா போன டெஸ்டுக்கு முன்னாடி எப்போதும் முதல் மார்க் வாங்குவாங்க. இப்போ நான்காவது ரேங்க் வந்திருக்காங்க. அதிகமா டி.வி பார்க்கிறாங்களா? காலையிலே எழுந்து  படிக்கிறதில்லையா? நல்லா சாப்பிடுறதில்லையா?   அல்லது வேறு ஏதாவது குறை இருக்குதா ? அதோடு  கண் பார்வை அவசியம் செக் அப் செய்யுங்க. படிக்கிறதுக்கு ரொம்ப திணறுராங்க  ... ஆரம்பத்திலே கவனிச்சுகிட்டா உங்களுக்கு லேசா இருக்கும். கடிவாளம் பிடிக்காம அவங்க போக்குலே போகவிட்டா அப்பறம் உங்களுக்குத் தான் கஷ்டம். எல்லாம் உங்க கையிலே தான் இருக்கு ! " என்று கனிவோடும்  ஒருவித உரிமையோடு அடுக்கினார் தலைமை ஆசிரியர்.

"இனிமே அவங்க நல்லா படிப்பாங்க. நாங்க அவங்களை சரியா பார்த்துக்கிறோம். அதில்லாம உடனே இன்றைக்கே அவர்களை கண் சோதனைக்கு அழைத்துச் செல்கிறேன்." என்று இருவரும் தலைமை ஆசிரியரின் நேரத்தை வீனாக்கதவாறு அவரை கும்பிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்தனர். 

அலுவலக வேலை அவசரமாக இருந்தததால் அலமேலுவை [பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு வேகமாக அலுவலகம் சென்றான் முத்து ராஜன்.

வழக்கமாக எப்போதும் குழந்தைகளுடைய பேருந்து முதலில் வரும். அதற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்துத் தான் முத்து ராஜன் வருவான். அன்று நேருக்கு மாறாக நடந்தது. இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாக பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். இந்த காட்சியை கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை கால் உதறியது. அந்த நிகழ்வை கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.



"மிஸ்ஸஸ் முத்து ராஜன் நீங்க டென்சன் ஆகாதீங்க. அப்புறம் இவனை கவனிக்க முடியாது. என்ன நடந்ததுன்னா மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகும் நல்லாத் தான் இருந்தான். ஆனால் காலையில் ரொம்பவே வேலை. அவருடைய 'பாஸ் ' இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவன் மட்டுமே பார்த்தான். அதனாலே கொஞ்சம் பிரசர் அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய வரும்போது பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் இது ஆரம்பம் தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும் என்றும் சொன்னார்." என்றனர் அவர்கள்.

அவர்கள் பேச பேச அதை கேட்க கேட்க அவளின் உடல் தெம்பு குறைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

"அப்போ நாங்க கிளம்புறோம். நாலு நாள் லீவு போட்டு நல்லா ஓய்வு எடுத்த பிறகு ஆபீஸ் வரலாம். ஆனா லீவு போட அவன் ஒத்துக்க மாட்டான். நீங்க தான் சம்மதிக்க வைக்கணும்." உடனே பதில் சொல்ல முடியாதவளாய், கஷ்டப்பட்டு சுயநினைவுக்கு வந்தவளாய்

"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. காபி..." என்று முடிக்காததற்க்கு முன்பே

"முதல்லே அவரை பாருங்க. நல்லா படியாக இருக்கும்போது மீண்டும் பார்க்க வருகிறோம். அப்போது கொடுக்கலாம்." என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.

கடிகாரத்தைப் பார்த்தாள். அவரைப் பார்த்தாள். நேரம் மெதுவாகவே நகர்ந்தன. அவன் நன்றாகவே தூங்கி கொண்டிருந்தான். சற்று நேரத்தில் குழந்தைகள் வந்தனர். அவர்களின் அப்பா என்றைக்குமில்லாமல் சீக்கிரமாகவே வந்து அதுவும் தூங்குவதைக் கண்டு அதிசயப் பட்டனர்.

அவர்களை முந்திக்கொண்டு "ஷ் ஷ் .. கொஞ்சம் அமைதியா இருந்து கை கால் கழுவிவிட்டு சாப்பிடுங்க. வீட்டுப்பாடம், படிக்கிறது ஏதாச்சும் இருந்தா டி.வி பார்க்காம உடனே செய்துடுங்க. நாம எட்டு மணிக்கு நம்ம டாக்டர் வீட்டுக்குப் போகப் போகிறோம். எதுக்குன்னு கேள்வியைக் கேட்காம உடனே வேலையை பாருங்க " என்று சற்று அதட்டியவாறு குழந்தைகளிடம் பேசினாள்.



வெகு நேரம் கழித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் முத்து ராஜன்.

"இப்போ எப்பிடிங்க இருக்கீங்க"

"எனக்கு ஒண்ணுமில்லை. ஆமா நம்ம குழந்தைங்க வந்துட்டாங்களா? என்ன பண்ணுகிறாங்க."

"அவங்க அப்பவே வந்துட்டாங்க. பாடங்களைப் படிக்கிறாங்க. டாக்டர் வீட்டுக்குப் போகவேனும்னு சொல்லியிருக்கிறேன்."

" யாருக்கு ? என்னாச்சு? "

"என்னாச்சா! உங்களுக்குத் தான். ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டேன். என்னோட உசுரு இப்போ என்கிட்டே இல்லை. டாக்டர் உங்களை டெஸ்ட் பண்ணி உங்களுக்கு ஒன்னுமில்லைன்னு அவர் வாயாலே சொன்னாத் தான் எனக்கு நிம்மதி ."

"சரி.. சரி உன்னோட திருப்திக்காக தான் நான் சம்மதிக்கிறேன். ஆனா ஒன்னு. நீயும் குழந்தைகளும் அப்படியே செக் அப் செய்துகிறதா இருந்தாத் தான் நான் வருவேன் " என்றான்.

"அதெல்லாம் அங்கே போய் பேசிக்கலாம். இப்போ ஆகவேண்டியதைப் பாருங்க " என்று அலமேலுவின் பேச்சுக்கு அனைவரும் ஏற்றுக்கொண்டு தயாரானார்கள்.

அவர்கள் செல்ல இருப்பது அவர்களின் குடும்ப நல டாக்டர். அவர்களின் உடல் கூறுகள் மற்றும் ஆரோக்கியம் அவருக்கு அத்துப்படி. ஒரு வகையில் முத்து ராஜனின் நண்பரும் கூட.

ஏற்கனவே கை பேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் வருவதை சொல்லியிருந்ததால் அவர் வீட்டில் இருந்தார். அவர்களின் வருகையை எதிர்பார்த்து இருந்தார். அவர்கள் அவ்வாறு அப்படி பார்க்க வந்தது எப்போது என்று சரியாக ஞாபகத்தில் இல்லை. கை பேசி மூலம் தொடர்பு கொள்வதோடு சரி.



" என்ன ராஜா, நீங்க எல்லோரும் இங்கு வந்து ரொம்ப நாளிருக்கும். அதிசயமா இருக்கு. ஆனா உங்க எல்லோர்ருக்கும்  உடம்பு சற்று பெருத்திருக்கு. ஏண்டா ராஜா இப்போதும் நடை, தியான பயிற்சி செய்கிறாயா? மிஸஸ் ராஜா நீங்க வழக்கம் போல காலையில் எழுந்திருச்சு அரக்க பறக்க வேலை செய்யாம நல்லபடியா வீட்டு வேலை செய்றீங்க தானே ? பசங்களா நீங்க டி.வி பார்க்காம நல்லா படிக்கிறீங்களா? " நேரில் பார்த்தவாறு கேள்விகளை அடுக்கினார்.

அதற்கு யாருமே பதில் சொல்லவில்லை.

"ஆமா, ஒன்னு கேட்க மறந்துட்டேன். உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

அதற்கும் அமைதி தான் பதிலாக இருந்தது.

" நான் ஒரு அதிகபிரசங்கி. உங்க பிரச்னைக்கு நேரடியா வராம ஏதேதோ பேசுகிறேன். சரி யாருக்கு என்ன பிரச்சனை. தொலைபேசியிலே சொல்லாத அளவுக்கு.?"

முத்து ராஜன் சொல்ல வாயெடுக்க போது " நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இவங்க அப்பா, அதான் என்னோட மாமனார் இருக்கிற வரைக்கும் எல்லாமே சரியாக நடந்தது. அனேகமாக அவரு எங்க கூட இருக்கும்போது நாங்க தலைவலி, காய்ச்சல் னு படுத்தது கிடையாது. அனா இன்று தான்  முதல் முறையாக அவரு ஆபீஸ்லே மயக்கம் போட்டு விழுந்திட்டாறு. காரணம் மன அழுத்தமாம், இரத்தக் கொதிப்பாம். அதனாலே செக் அப் செய்துக்க வந்திருக்கிறோம் "

அவளை இடை மறித்து முத்து ராஜனும் அவன் பங்கிற்கு 

"டாக்டர், அவளுக்கு கூட அவ்வப்போது உடம்பு அசதி ன்னு  படுத்துக்கிறா ? கேட்டா ஒன்னுமில்லைன்னு மழுப்ப்புரா. அதே போல் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யனும். சரியா படிப்பதில்லை என்று அவர்களின் தலைமை ஆசிரியர் சொல்லியிருந்தார்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

" ஆக எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு." என்றவாறு அவர் அவர்களுக்கு வேண்டிய பரிசோதனைகளைச் செய்தார். அவரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். நீண்ட நேரம் மௌனம் சாதித்தார்.

" என்னப்பா.. ஒன்னும் பேசாம இருக்கிறே. அவ்வளவு பெரிய வியாதியா?" என்று கேட்டான் முத்து ராஜன்.

" அப்ப்டியெல்லாம் இல்லை. நிரந்தரமான, ஆரோக்கியமான , நல்ல தீர்வுக்கு யோசனை செய்கிறேன். ஆமா, இந்த பிரச்சனைங்க ஆரம்பிச்சு குறைஞ்சது ஐந்து மாசமாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆமா , நீ எப்போது உங்கப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்?"

"சரியாச் சொல்லனும்னா ஒரு ஆறு மாசம் இருக்கும் "

மீண்டும் யோசனையில் மூழ்கினார்.

" ஆமா, நான் தெரியாமத் தான் கேட்கிறேன். எங்களோட உடம்பு சரியில்லாததிற்க்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? என்னமோ அவர் இருந்ததாலே எங்க உடம்பு சரியாய் இருந்தது போலவும், அவர் இல்லாததால் எல்லாப் பிரச்சனைகள் வந்தது போலவும் பேசுறீங்க."



"ராஜா.. நீ என்ன நினைச்சாலும் சரி அது தான் உண்மையான காரணம். நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்தது உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உங்க மனைவி வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம், அது மட்டுமில்லே எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம் உங்களுக்கு பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம , உடம்பு கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாபிடுங்க. முடிவு உங்கள் கையில் !" என்றார் ஆணித்தரமாக.

அவர் பேசியது அவர்களின் காதுகளில்புகுந்து . மனது வழியாக இதயத்தில் நுழைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அலமேலுவும் முத்து ராஜாவும் கண்களில் பேசிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். முத்து ராஜன் அந்த மருந்து சீட்டை கையில் எடுத்து கிழித்துப் போட்டான்.

" இப்போ இந்த சீட்டு எங்களுக்குத் தேவையில்லை. எங்களோட தவறை உணர்ந்து விட்டோம். வயதானவர்கள் சுமைகளாக எண்ணியிருந்தோம். ஆனால் உண்மையில் அவர்கள் தான் எங்களின் சுமை தாங்கினு உணர்ந்துட்டோம். இப்போதே முதியோர் இல்லத்திற்குச் செல்கிறோம். அப்பாவை கையேடு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம். முத்து இல்லம் பழைய படி சந்தோசமாக இருக்கும். கட்டாயம் எங்கள் தவறை என்னப்பா மன்னிப்பார். அந்த உறுதி எனக்கு இருக்கின்றது."

"அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.

"ஐய்யா .. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.



அனைவரும் டாக்டரிடம் விடைபெற்று முதியோர் இல்லத்தை நோக்கிச் சென்றனர்.



முற்றும்   

முத்து இல்லம் Vs  முதியோர் இல்லம்  - சிறுகதை 

MUTHU HOUSE Vs OLD AGE HOUSE (SHORT STORY)

MADURAI GANGADHARAN

மதுரை கங்காதரன்    

'முத்து இல்லம் ' என்று அழகாகப் பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...

 "இப்போது திருப்தியா அலமேலு! நீ நினைச்சது போல செஞ்சாச்சு" என்றான் ராஜா என்ற முத்துராஜன்.

        "என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம்! ஏன்? உங்களுக்கும் இல்லையா? இல்லே  நம்ம மாலா, லீலா  குழந்தைங்களுக்கும் இல்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்கிறீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.

       அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது 'முத்து இல்லம். நேற்று வரை இருந்த உணவுக் கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த இந்த நாளையில் இந்த இந்த வேளைக்கு இந்த இந்த உணவுதான்  சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவுச் சாப்பாடு என்ற ஒன்று, அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம், அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்குத் தீனிகள், அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம், நீளமாக மாறின. சாயும் கால குழந்தைகளின் படிப்பு, சீரியல் பார்ப்பதிலும், பாட்டுக் கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள், வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

       காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படிக் கூப்பிடாதவன், அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெறிந்தான்.

அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே,  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்து ராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியைக் கையில்தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாகத் தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதைச் சற்று வருடியது. 

 'ஒருவேளை பெரியவருக்கு முடியாமல் இருக்குமோ அல்லது அவர் வெளியூர் ... ' இப்படிப் பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தது.

 அவன் பெரியவரைத் தேடுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த பெரியவர் தினசரியைக் கையில் வாங்கும் போது எப்போதும் அந்த பையனிடத்தில் "இவ்வளவு சின்ன வயசிலே பொறுப்பா நல்ல உழைக்கிறே. அதேபோல் நல்லா படிச்சு பெரிய உத்தியோகம் கிடைச்சு கை நிறைய சம்பாதிச்சு உங்க அம்மா அப்பாவை கண்கலங்காம கடைசிவரை காப்பாத்தனும்! புரிஞ்சுதா? " என்ற அவரின் அன்பான பேச்சு அவனுக்கு அலாதியான உற்சாகமும், உத்வேகமும் அவனை எப்போதும் நன்றாகவும்  நேர்மையாகவும் உழைக்கச் செய்தது. படிக்கவும் செய்தது. 

           அவன் அந்த வீட்டைக் கடந்து சென்ற சில நிமிடங்களில்..

        "அம்மா ... பால் .." அந்த பால்கார அம்மாவும் பலமுறை கூப்பிட்டும் கதவை யாரும் திறக்காததால் அவள் கொண்டு வந்த பாலை வாசலிலே வைத்துவிட்டுச் சென்றாள். அப்படி வைத்துவிட்டுச் செல்வது அவளுக்கு முதல் முறையும், புதிய அனுபவமாகவும் இருந்தது.

 அவளுக்கும் அன்றைய நிகழ்வு ஏதோ ஒரு பெரிய இழப்பைத் தந்தது. இந்த 'அலமேலு ' அம்மாவுக்கு என்ன ஆச்சோ , ஏதாச்சோ ? என்று ஒன்றும் புரியாதவளாய் அந்த வீட்டை விட்டு நகர்ந்தாள்.

 அந்தப் பால்கார அம்மாளின் ஏக்கத்தில் ஒரு அர்த்தமிருந்தது. எப்போதும் நாள் தவறாமல் அந்த அலமேலு அம்மாள், அந்த காலை நேரத்திலே தலை நிறையப் பூவோடும், மஞ்சள் முகத்தில் அழகாக குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு பளிச்சென்று பிரகாசமான சேலை உடுத்திக்கொண்டு கால் சலங்கை ஒலியுடன்  ஒய்யாரமாய் நடந்து வந்து ஒரு அழகிய புன்னகையுடன்  பாலை வாங்கியபடி, "என்னம்மா, சௌக்கியமா? நேத்து உன்னோட பையனுக்கு உடம்பு முடியல்லைன்னு சொன்னேயே இப்போ எப்படி இருக்கான்? செலவுக்கு ஏதாச்சும் வேணும்னா வாங்கிக்கோ? திருப்பித் தரவேண்டாம். குழந்தையே நல்லா கவனிச்சிக்கோ. அவன் நல்லா படிச்சு பெரியவனா வளர்ந்த பின்னே உனக்கு கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்துவான் பயப்படாதே" என்று ஆறுதல் வார்த்தையோடு தன்னம்பிக்கையும் கொடுப்பாள். அந்த இனிமை கலந்த அமுதமான பேச்சைக் கேட்பதற்கு அந்த பால்கார அம்மாள் ஆவலுடன் துள்ளித் துள்ளி வருவாள்.

இந்த பின்னணியிலும் அந்த வீட்டுப் பெரியவர் தான் இருக்கிறார். அவருக்கு எல்லாமே நேரம் தவறாமல் ஒழுங்காகவும், எல்லாவற்றிலும் அளவுடனும், அனைவரிடத்தில் அன்பாகவும், உதவியாகவும் இருக்கவேண்டும் என்கிற கண்டிப்புத் தன்மையோடு இருக்கச் சொல்பவர் . அது மட்டுமா? காலையில் அனைவரும் எழுந்து அவரவர் வேலையைச் சரியாக அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதை  ஒரு 'இராணுவச் சட்டம் ' போல கடைப்பிடிக்கச் செய்வார். அதில் ஒன்று அலமேலு கண்டிப்பாகக் காலையில் எழுந்து , குளித்து மங்களக் கோலத்துடன் பாலை வாங்கி அனைவருக்கும் காபி போடவேண்டும் என்றும், அனைவரிடத்திலும் அன்புடன் பழகிப் பேசவேண்டும் என்கிற எழுதாத சட்டமும் அடங்கும்.

அவளும் சென்ற பிறகு முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியானப் பயிற்சி' செய்வதற்குத் தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவற்றைச் செய்யத் தவறுவதில்லை.              

       வீட்டிலிருந்து பதில் ஏதும் வராத காரணத்தினால் 'அழைப்புமணி 'யை ஒரு முறை அழுத்திவிட்டு வாசல் கதவைப் பார்த்தார். மீண்டும் அதே அமைதியாக இருந்ததினால், மற்றொரு முறை அந்த அழைப்புமணியை அழுத்தினார். தனது நண்பனோ அல்லது வேறு யாராவது கதவைத் திறக்க வருவார்கள்’ என்று உறுதியாகக் காத்திருந்தார்.

அவருக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அவரும், முத்து ராஜாவும் இந்த பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தது முதல் நேற்று வரை ஒரு நாள் கூட இப்படி 'அழைப்புமணியை ' அழுத்திவிட்டுக் காத்திருந்ததாக நினைவில்லை. எப்போதும் அவர் வருவதற்கு முன்பே முத்து ராஜன் 'டான் ' என்று நிற்பான்.

அன்று நடந்த இந்த நிகழ்ச்சி அவருக்குச் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. 'ஏன்? இப்போது வரை யாரும் கதவைத் திறக்க வரவில்லை'  என்று பலமான யோசனை செய்து கொண்டிருக்கையில்  கதவு மெல்லத் திறக்கும் சப்தம் கேட்டது. கதவு திறந்தது முத்து ராஜன் இல்லை. அவள் மனைவி என்று, கதவு திறந்ததுடன்தான் அவருக்கு தெரிந்தது. முழுவதும் திறந்து " அவரு தூங்குகிறார், இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்குக் காத்திருக்காமல் வாசலிலிருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாகச் சமையலறைக்கு ஓடினாள். அலமேலுவும் தான் புகுந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அன்று தான் மிகவும் தாமதமாக எழுந்துள்ளதை அவளுக்கே அப்போதுதான் தெரிந்தது.

அந்த பதிலைக் கேட்ட நடேசனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. முத்து ராஜன் அவனுடைய பால்ய நண்பன். உடல் ஆரோக்கியத்தில் முத்து ராஜனுக்கு அதிக  அக்கறை இருந்தது. காரணம் அவனுடைய வேலைப் பளு. ஏனென்றால் அவனுடைய உயர்ந்த பதவி. இதைச் செய்யாமல் இருந்தால் வேலையில் அவனுக்குச் சுறுசுறுப்பே வராது என்பதை உணர்ந்தான்.

வேறொரு காரணம்,  ஒரு நாள் மிகுந்த வேலை காரணமாக சற்று மயக்கமாக வருகின்றது என்று அவருடைய குடும்ப மருத்துவரைப் பார்த்தார்.

"இங்கே பாரு ராஜா, நீ இன்னும் சின்ன குழந்தை இல்லை. ஒன்னு ஒன்னு நான் சொல்லி நீ தெரிஞ்சுகிறதுக்கு. உனக்குத் தேவை சத்தான பழமை உணவு, அளவான சாப்பாடு,  தினமும் சிறிது நேரம் நடை மற்றும் தியானப் பயிற்சி " என்பதை அவரது  டாக்டர் எச்சரித்தாலும் அவன் பொருட்படுத்தாமல் இருந்தாலும் அவனின் அப்பா ஒரு பழைமையான மனிதர் என்கிற காரணத்தினால் இதை அவனுக்கு மட்டுமில்லாமல் தெரிந்தோ தெரியாமலோ கட்டளையிட்டு நடைமுறைப் படுத்தி வந்தார்.

வேறு வழியில்லாமல் அனைவரும் வேண்டா வெறுப்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் கம்பு, கேப்பை, சிறுதானியங்கள் மற்றும் சற்று குறைவான எண்ணெய், சர்க்கரை, புளி, உப்பு, போன்றவற்றையும்   ஏற்றுக் கொண்டனர். உண்மையில் அதனால், யாருக்கும் எந்தவித உடல் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாகக் காலத்தைக் கழித்து வந்தனர். குறிப்பாக முத்து ராஜாவுக்கு நடை, தியானப் பயிற்சி கட்டாயம் செய்தே தீரவேண்டும். அதற்கு அந்த வீட்டுப் பெரியவர் பொறுப்பேற்றுக்கொண்டு தினமும் அவனை எழுப்பி தயார்ப்படுத்தி வந்தார்.

அவனுடைய நண்பனுக்குத் தெரியும். முத்து ராஜனின் அப்பா இருப்பதால்தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று. கட்டுப்பாடான அளவான உணவு, இத்தகையப் பயிற்சிகள் இருப்பதால்தான் அவன் எவ்வித மன அழுத்தமில்லாமல் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகின்றது. ஏன், வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவது போன்றவற்றைக் கூட நேரம் தவறாமல் சரியாகச் செய்யும் பழக்கமும் கொண்டவர். அத்தகைய  நண்பனுக்கு இன்று என்ன வந்தது? ஏன் பயிற்சிக்கு வரவில்லை? போன்றவற்றிற்கு விடை தெரியாமல் அந்த இடத்தைவிட்டு தனியாகக் கடந்து சென்றார்.

வராமல் இருப்பதற்குக் காரணமும் இருந்தது. நீங்கள் பிறகு தெரிந்து கொள்வீர்கள். (கதையைத்  தொடர்ந்து படிக்க)

வீட்டினுள் .. சமையலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டும், மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்குக் காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால்தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோ வென்று அரைகுறையாக நடந்தது.

இது இப்படி இருக்க, வாசலில் 'பள்ளி வாகனம்' இருமுறை 'ஒலிப்பான் ' சப்தத்துடன் நின்றது. வாகன நடத்துநர் ஆச்சரியமாக வீட்டு வாசலைப் பார்த்தான். குழந்தைகள் வருவதான அறிகுறிகள் இல்லது போகவே வாகன ஓட்டுநருக்கு மீண்டும் ஒரு தடவை ஒலிப்பானை எழுப்பச் சொன்னார். அதற்குள் வீட்டிலிருந்து மாலா , லீலா இரு குழந்தைகள் ஒருகையில் புத்தகப் பையையும், மறு கையில் மதிய உணவையும் தூக்கிக்கொண்டும் அரைகுறையுடன் சீவிய சடைப் பின்னலுடனும், முகத்தில் திட்டு திட்டாக  பவுடர் அப்பிக்கொண்டும், சரியாக அணியாத சட்டை, காலில் நுழைந்தும் நுழையாததுமாய் அணிந்த காலணிகளுடன் சற்று அலங்கோலமாய் விறுவிறுவென்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறிச்சென்றனர்.

குழந்தைகளின் இத்தகைய செயல்கள் நடத்துநருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. வழக்கம் போல் அவர்கள் எப்போதும் நன்றாக அலங்கரித்து எவ்வித பதட்டமுமில்லாமல் பள்ளி வாகனத்தை எதிர்நோக்கி இருப்பார்கள். நேற்று வரை அவர்களுக்காக சில வினாடிகள் கூட காத்திருந்தது கிடையாது. மேலும் அவர்களை அந்த வீட்டுப் பெரியவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பேருந்தில் பத்திரமாக ஏற்றிவிட்டுக் கையசைக்கும் போது பேருந்தில் உள்ளப் பள்ளிக்குழந்தைகளும் "தாத்தா, நாங்க போய்ட்டு வருகிறோம் ' என்று அவர்களும் கையசைப்பார்கள். இவற்றைக் காணாதது நடத்துநருக்குக் காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

       ஒரு வழியாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு, அலமேலு அவசரம் அவசரமாக தன் கணவருக்குக் காலை உணவைப் பரிமாறினார். இதுவரை பார்க்காத உணவு வகைகள். அதனால் சற்று அதிகமாகவே சாப்பிட்டான். அவனின் கைக்கடிகாரம் அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்பதை உணர்த்தியது. அதை அறிந்து கொண்டு அவனின் கைப்பேசியையும், அலுவலகப் பையையும் கொடுத்து, கையில் இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கையில் திணித்தாள். எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்ற பிறகு 'அப்பாடா ' என்கிற பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள் அலமேலு.

       இது நாள் வரை ஒரு நாள் கூட இவ்வளவு அவசரமுடன், எந்த ஒரு  வேலையையும் அரைகுறையாகச் செய்தது கிடையாது. அப்போதுதான் நேற்று காலையில் நடந்த நிகழ்ச்சியை சற்று அசைபோட்டுப் பார்த்தாள்.

       "இதோ பாரு ராஜா, உங்களுக்கு நான் பாரமா இருந்தாலோ அல்லது உங்கச் சுதந்திரத்திற்குத் தடையா நான் இருந்தாலோ இப்போவே என்னை முதியோர் இல்லத்திலே சேர்த்திடுங்க. உங்களோட மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நான் கெடுக்க விரும்பலே. நான் சந்தோசமா போகிறேன். இனிமே உங்க இஷ்டப்படி எப்போது வேண்டுமானாலும் எழுந்திருங்க, டி.வி பாருங்க, சாப்பாடு சாப்பிடுங்க, தூங்குங்க. ஏனென்னா எனக்கு உங்க சந்தோசம் முக்கியம். அதற்குக் குறுக்கே நான் இருக்க விரும்பலே. நீங்க விருப்பப்பட்டா மாசம் ஒரு தடவை என்னை வந்து பாருங்க. அதுவும் இல்லேன்னா கை பேசியில் பேசுங்க. எல்லாவற்றிற்கும் நான் தயார் " என்று சொன்ன உடனே முத்து ராஜன் அலமேலுவுடன் கலந்தாலோசித்து குழந்தைகளின் ஒப்புதலுடன் அவரை அந்த பெரியவரை அன்றே முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

       இவ்வளவு நினைவுக்கு வந்தும் காலை முதல் நடந்த பரபரப்பு, மனதில் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. ஒரு வேளை தாங்கள் எடுத்த முடிவு தவறோ! என்கின்ற சந்தேகமும் அவளுக்கு வந்தது. ஆனால் மறு நிமிடமே சற்று சுதாரித்து இன்று தானே ஆரம்பம். நாட்கள் போகப் போக எல்லாம் முன்பு போலச் சரியாக நடந்துவிடும். மீண்டும் பெரியவரை இங்கு அழைத்து வந்தால் நம்முடைய சுதந்திரம் பறிபோய்விடும். ஆகவே பல்லைக் கடித்துக்கொண்டு சற்று பொறுமையாக அதே சமயத்தில் சுதந்திரமாக இருக்க முடிவு செய்தாள்.

       சற்று நேரத்தில் பக்கத்திலிருந்த வேறொரு பெரியவர் "அம்மா, அலமேலு ! நான் காலையிலிருந்து உங்க வீட்டு நடவடிக்கைகளைபார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லாமே தலைகீழாக இருந்தது. பிறகு தான், என் பையன் சொல்லி எனக்கே தெரிந்தது. உங்க மாமனாரை முதியோர் இல்லத்திலே சேர்த்ததா சொன்னான். என்னையும் எப்போ எனது பையன் சேர்க்கப் போகிறானோ எனக்குத் தெரியலை. எனக்கிருந்த ஒரு துணையும் இப்போ இல்லை. பழகுவதற்கு நல்ல மனுசர். நல்ல சிந்தனை உடையவர். எல்லோருக்கும் முகச்சுளிவு இல்லாமல் வேண்டிய உதவி செய்வார். அவர் அங்கு எப்படி இருக்கிறார் என்பதை அவ்வப்போது கொஞ்சம் சொல்லும்மா. சரி.. சரி நீங்க நல்லபடியா இருங்க. நான் வர்றேன் " என்றதுக்கு அவளும் தலையை பலமாக ஆட்டியபடி அனுப்பிவைத்தாள்.

       நாட்கள் வேகமாகப் பறந்தன. அதற்குள் மாதங்கள் ஆறு கடந்தன. ஒரு நாள்,

       "என்னங்க, நாளைக்கு அரை நாள் விடுப்பு போடுங்க"

       "ஏன், என்ன விஷயம்? எனக்கு அலுவலகத்திலே நிறைய வேலை இருக்கு. முக்கியமான கூட்டம் இருக்கு. நான் கட்டாயம் இருந்தே  ஆகணும்.  வேணும்னா , பெர்மிசன் போடுகிறேன். விஷயம் சொல்லு "

"ஒன்னுமில்லைங்க , நம்ம குழந்தைங்களோட பள்ளி தலைமை ஆசிரியர் நம்மை சந்திக்க சொல்லி குறுந்தகவல் ஒன்று வந்தது. என்ன காரணம் என்று குழந்தைங்களுக்கும் தெரியல்லே. பள்ளிக்குப் போய் அவங்களைச் சந்திச்சாத்தான் விஷயம் தெரியும் " என்றாள் அலமேலு. முத்து ராஜனும் சரி’ என்று ஒத்துக்கொண்டான்.


       மறு நாள் காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு அலமேலுவை முத்து ராஜன் அவசரப்படுத்தினான்.

"இன்னைக்கு என்னமா ஆச்சு, பழைய சுறுசுறுப்பு இப்போ இல்லையே? பம்பரம் போல் காலை முதல் தூங்கும் வரை வேலை செய்வே. இப்போ அது காணாமே!" அவன் பதற்றத்துடன் கேட்டான்.

"என்னமோ தெரியல்லைங்க, ஒரு வாரமா வேலையிலே கவனம் செலுத்த முடியாமே ஒருவித ஈடுபாடும் இல்லாம உடம்பு சோர்வா இருக்கு. இன்னைக்கு சரியாப் போய்விடும், நாளைக்குச் சரியாப் போகும் என்று அலட்சியமா இருந்தேன். ஆனா, நாளாக நாளாக அதிகமா போகுது தவிர குறைந்த பாடு தெரியலே. ரொம்பவே அசதியா இருக்கு" என்று சுருதி குறைந்தபடிச் சொன்னாள் அலமேலு.

"என்னம்மா, இப்படியிருக்கே, ஒரு நாள் கூட நீ இப்படிச் சொன்னது கிடையாது. எனக்கு ரொம்பவே படபடக்குது. முதலே டாக்டர் வீட்டிற்குப் போவோம். பிறகு ஸ்கூலுக்குப் போவோம் " என்றான்.

"முதல்லே ஸ்கூலுக்கு, சாயந்தரம் டாக்டர் வீட்டிற்கு. உங்களுக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்க. என்ன, சரிதானே. கொஞ்சம் பொறுங்க. இதோ ரெடியாயிடுறேன்" என்று நிமிடத்தில் தயாரானாள்.

பள்ளியில் நுழைந்தவுடன் நல்லவேளையாகத் தலைமை ஆசிரியாசிரியரைக் காண வேறு யாருமே இல்லாதலால் அவர்கள் அந்த அறையில் நுழைந்தனர்.

அவர்களே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

"நாங்க மாலா, லீலாவின் பெற்றோர்கள். சந்திக்க வேண்டுமென்று மெசேஜ் வந்தது. என்ன விஷயம்? என்று தெரிஞ்சுகிறதுக்கு வந்திருக்கோம். குழந்தைங்க ஏதாவது தப்பிதமா... "  " என்று சந்தேகத்தோடு கேட்டார்கள்.

"நோ.. நோ..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல படிக்கிற குழந்தைங்க. எப்போதும் துருதுருன்னு இருப்பாங்க. ஆனா, போன டெஸ்டுக்கு முன்னாடி எப்போதும் முதல் மார்க் வாங்குவாங்க. இப்போ நான்காவது ரேங்க் வந்திருக்காங்க. அதிகமா டி.வி பார்க்கிறாங்களா? காலையிலே எழுந்து  படிக்கிறதில்லையா? நல்லா சாப்பிடுகிறதில்லையா?   அல்லது வேறு ஏதாவது குறை இருக்குதா ? அதோடு  கண் பார்வை அவசியம் 'செக் அப்' செய்யுங்க. படிக்கிறதுக்கு ரொம்ப திணறுராங்க  ... ஆரம்பத்திலே கவனிச்சுகிட்டா உங்களுக்கு லேசா இருக்கும். கடிவாளம் பிடிக்காம,  அவங்க போக்குலே போகவிட்டா அப்பறம் உங்களுக்குத்தான் கஷ்டம். எல்லாம் உங்க கையிலே தான் இருக்கு! " என்று கனிவோடும்  ஒருவித உரிமையோடு அடுக்கினார் தலைமை ஆசிரியர்.

       "இனிமே அவங்க நல்லா படிப்பாங்க. நாங்க அவங்களை சரியா பார்த்துக்கிறோம். அதில்லாம உடனே இன்றைக்கே அவர்களைக்  கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறோம்." என்று இருவரும் தலைமை ஆசிரியரின் நேரத்தை வீணாக்காதவாறு அவரைக் கும்பிட்டுப் பள்ளியை விட்டு வெளியே வந்தனர்.

 
       அலுவலக வேலை அவசரமாக இருந்ததால் அலமேலுவை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு வேகமாக அலுவலகம் சென்றான் முத்து ராஜன்.

மாலையில், வழக்கமாக எப்போதும் குழந்தைகளுடைய பேருந்து முதலில் வரும். அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் கழித்துத்தான் முத்து ராஜன் வருவான். அன்று நேருக்கு மாறாக நடந்தது. இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று, சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாகப் பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். 

இந்த காட்சியைக் கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை, கால் உதறியது. அந்த நிகழ்வைக் கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.

       "மிஸ்ஸஸ் முத்து ராஜன். நீங்க டென்சன் ஆகாதீங்க. அப்புறம் இவரைக் கவனிக்க முடியாது போயிடும். என்ன நடந்ததுன்னா மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகும் நல்லாத்தான் இருந்தார். ஆனால் காலையில் ரொம்பவே வேலை. வருடைய 'பாஸ்’ இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவர் மட்டுமே பார்த்தார். அதனாலே கொஞ்சம் பிரசர்’ அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய, நம்ம அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர்’ இருப்பதை உறுதி செய்தார். ஆனால், இது ஆரம்பம்தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும்’ என்றும் சொன்னார்" என்றனர் அவர்கள்.

அவர்கள் பேசப் பேச அதைக் கேட்கக் கேட்க அலமேலுவின் உடலின் தெம்பு குறைந்து  சில்லென்று ஆகிவிட்டது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

"அப்போ நாங்க கிளம்புறோம். நாலு நாள் லீவு போட்டு நல்லா ஓய்வு எடுத்த பிறகு ஆபீஸ் வரலாம் என்று இவருடைய பாஸ் சொன்னார். ஆனா லீவு போட இவர் ஒத்துக்க மாட்டார். நீங்க தான் சம்மதிக்க வைக்கணும்"

உடனே பதில் சொல்ல முடியாதவளாய், கஷ்டப்பட்டு சுயநினைவுக்கு வந்தவளாய்..

"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

காபி...” என்று முடிக்காததற்கு முன்பே

"முதல்லே அவரை பாருங்க. நல்லபடியாகக் குணமான பின்னே ஒரு நாளைக்கு நாம மீண்டும் பார்க்க வருகிறோம். அப்போது கொடுக்கலாம்." என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.

       கடிகாரத்தைப் பார்த்தாள். அவரைப் பார்த்தாள். நேரம் மெதுவாகவே நகர்ந்தன. அவன் நன்றாகவே தூங்கிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் குழந்தைகள் வந்தனர். அவர்களின் அப்பா என்றைக்குமில்லாமல் சீக்கிரமாகவே வந்து அதுவும் தூங்குவதைக் கண்டு அதிசயப்பட்டனர்.

       அவர்களை முந்திக்கொண்டு "ஷ் ஷ் .. கொஞ்சம் அமைதியா இருந்து கை, கால் கழுவிவிட்டு சாப்பிடுங்க. வீட்டுப்பாடம், படிக்கிறது ஏதாச்சும் இருந்தா டி.வி பார்க்காம உடனே செய்துடுங்க. நாம எட்டு மணிக்கு நம்ம டாக்டர் வீட்டுக்குப் போகப் போகிறோம். எதுக்குன்னு கேள்வியைக் கேட்காம உடனே வேலையை பாருங்க " என்று சற்று அதட்டியவாறு குழந்தைகளுக்குக் கட்டளையிட்டாள் அலமேலு.

       வெகு நேரம் கழித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் முத்து ராஜன்.

"இப்போ எப்படி இருக்குங்க?"

"எனக்கு ஒன்றுமில்லை அலமேலு. ஆமா, நம்ம குழந்தைங்க வந்துட்டாங்களா? என்ன பண்ணுகிறாங்க."

"வங்க அப்பவே வந்துட்டாங்க. பாடங்களை படிக்கிறாங்க. டாக்டர் வீட்டுக்குப் போகவேணும்னு சொல்லியிருக்கிறேன்"

"யாருக்கு? என்னாச்சு? "

"என்னாச்சா!   உங்களுக்குத்தான். ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டேன். என்னோட உசுரு இப்போ என்கிட்டே இல்லை. டாக்டர் உங்களை டெஸ்ட் பண்ணி உங்களுக்கு ஒண்ணுமில்லைன்னு அவர் வாயாலே சொன்னாத்தான் எனக்கு நிம்மதி

"சரி.. சரி.. உன்னோட திருப்திக்காகத்தான் நான் சம்மதிக்கிறேன். ஆனா ண்ணு. நீயும் குழந்தைகளும் அப்படியே செக் அப்’ செய்துகிறதா இருந்தாத்தான் நான் வருவேன் " என்று அடம் பிடித்தான் முத்து ராஜன்.

"அதெல்லாம் அங்கே போய்ப் பேசிக்கலாம். இப்போ ஆகவேண்டியதைப் பாருங்க " என்று அலமேலுவின் பேச்சுக்கு அனைவரும் ஏற்றுக்கொண்டு தயாரானார்கள்.

அவர்கள் செல்ல இருப்பது அவர்களின் குடும்ப நல டாக்டர். அவர்களின் உடல் கூறுகள் மற்றும் ஆரோக்கியம் அவருக்கு அத்துப்படி. ஒரு வகையில் முத்து ராஜனின் நண்பரும் கூட.

ஏற்கனவே கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் வருவதை சொல்லியிருந்ததால் டாக்டர் வீட்டில் இருந்தார். அவர்களின் வருகையை எதிர்பார்த்து இருந்தார். அவர்கள் அவ்வாறு அப்படி பார்க்க வந்தது எப்போது என்று அந்த டாக்டருக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. கைப்பேசி மூலம் தொடர்பு கொள்வதோடு சரி.

       "என்ன.. ராஜா, நீங்க எல்லோரும் இங்கு வந்து ரொம்ப நாளிருக்கும். அதிசயமா இருக்கு! ஆனா உங்க எல்லோருக்கும்  உடம்பு சற்று பெருத்திருக்கு. ஏண்டா ராஜா? இப்போதும் நடை, தியான பயிற்சி செய்கிறாயா? மிஸஸ் ராஜா நீங்க வழக்கம் போல, காலையில் எழுந்திருச்சு அரக்க பறக்க வேலை செய்யாம, நல்லபடியா வீட்டு வேலை செய்றீங்க தானே? பசங்களா.. நீங்க டி.வி பார்க்காம, நல்லா படிக்கிறீங்களா? " நேரில் பார்த்தவாறு கேள்விகளை அடுக்கினார் அந்த டாக்டர்.

            அதற்கு யாருமே பதில் சொல்லவில்லை.

       "ஆமா, ண்ணு கேட்க மறந்துட்டேன். உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

            அதற்கும் அமைதி தான் பதிலாக இருந்தது.

"நான் ஒரு அதிகப்பிரசங்கி. உங்க பிரச்னைக்கு நேரடியா வராம ஏதேதோ பேசுகிறேன். சரி யாருக்கு என்ன பிரச்சனை? தொலைப்பேசியிலே சொல்லாத அளவுக்கு.?"

       முத்து ராஜன் சொல்ல வாயெடுக்க போது "நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இவங்க அப்பா, அதான் என்னோட மாமனார் இருக்கிற வரைக்கும் எல்லாமே சரியாக நடந்தது. அனேகமாக அவரு எங்க கூட இருக்கும்போது நாங்க தலைவலி, காய்ச்சல்னு படுத்தது கிடையாது. னா, இன்று தான்  முதல் முறையாக அவரு ஆபீஸ்லே மயக்கம் போட்டு விழுந்திட்டாரு. காரணம்.. மன அழுத்தமாம், இரத்தக் கொதிப்பாம். அதனாலே செக் அப்’ செய்துக்க வந்திருக்கிறோம் "

       அவளை இடைமறித்து முத்து ராஜனும் அவன் பங்கிற்கு

       "டாக்டர், அவளுக்குக் கூட அவ்வப்போது உடம்பு அசதின்னு  படுத்துக்கிறா ? கேட்டா ண்ணுமில்லைன்னு மழுப்புறா. அதே போல் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யணும். சரியாப் படிப்பதில்லைன்னு அவங்களோடத் தலைமை ஆசிரியர் சொல்லியிருந்தார்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் முத்து ராஜன்.

       " ஆக, எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு." என்றவாறு அவர் அவர்களுக்கு வேண்டிய பரிசோதனைகளைச் செய்தார். அவரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். நீண்ட நேரம் மௌனம் சாதித்தார்.

       " என்ன டாக்டர்.. ஒண்ணும் பேசாம இருக்கிறே. அவ்வளவு பெரிய வியாதியா?" என்று கேட்டான் முத்து ராஜன்.

"உங்களுக்குப் பயப்படும்படியா ஒண்ணுமில்லே. உங்களுக்குள்ள வியாதி ஆரம்பக்கட்டத்திலே இருக்கு. இப்போதிலிருந்து கவனிச்சுக்கிட்டா ரொம்ப நல்லது. தனாலே, நிரந்தரமான, ஆரோக்கியமான, நல்ல தீர்வுக்கு யோசனை செய்கிறேன். ஆமா, இந்த பிரச்சனைங்க ஆரம்பிச்சு குறைஞ்சது ஐந்து மாசமாவது இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆமா , நீ எப்போது உங்கப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தே? ஞாபகம் இருக்கா?"

       "சரியாச் சொல்லனும்னா ஒரு ஆறு மாசம் இருக்கும்"

       மீண்டும் யோசனையில் மூழ்கினார்.

       "ஆமா, நான் தெரியாமத் தான் கேட்கிறேன். எங்களோட உடம்பு சரியில்லாததிற்கும், எங்கப்பாக்கும் என்ன சம்பந்தம்? என்னமோ அவர் இருந்ததாலே எங்க உடம்பு சரியாய் இருந்தது போலவும், அவர் இல்லாததால் எல்லாப் பிரச்சனைகள் வந்தது போலவுமில்லே நீங்க நினைக்கிறீங்க" 

       "ராஜா.. நீ என்ன நினைச்சாலும் சரி. அதுதான் உண்மையான காரணம். நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக  அதிகாலையிலே எழுந்து, அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்து, உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உன் மனைவி, வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம்? அது மட்டுமில்லே, எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம், உங்களுக்குப் பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம, உடம்புக்குக் கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுகிறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாப்பிடுங்க. முடிவு உங்கள் கையில்!" என்றார் ஆணித்தரமாக.

       அவர் பேசியது அவர்களின் காதுகளில் புகுந்து . மனது வழியாக இதயத்தில் நுழைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, அலமேலுவும் முத்து ராஜாவும் கண்களில் பேசிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். முத்து ராஜன் அந்த மருந்து சீட்டை கையில் எடுத்துக் கிழித்துப் போட்டான்.

"இப்போ இந்த சீட்டு எங்களுக்குத் தேவையில்லை. எங்களோட தவறை உணர்ந்து விட்டோம். வயதானவர்கள் சுமைகளாக எண்ணியிருந்தோம். ஆனால், உண்மையில் அவர்கள்தான் எங்களின் 'சுமைதாங்கி'னு உணர்ந்துட்டோம்.  இப்போதே முதியோர் இல்லத்திற்குச் செல்கிறோம். அப்பாவைக் கையேடு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம். முத்து இல்லம்’ பழைய படி சந்தோசமாக இருக்கும். கட்டாயம் எங்கள் தவறை எங்கப்பா மன்னிப்பார். அந்த உறுதி எனக்கு இருக்கின்றது"

       "அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.

       "ஐய்யா.. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.

       அனைவரும் டாக்டரிடம் விடைபெற்று முதியோர் இல்லத்தை நோக்கிச் சென்றனர்.

முற்றும்

 

முத்து இல்லம்                முதியோர் இல்லம்  -

சிறுகதை 

'முத்து இல்லம் ' என்று அழகாகப் பொன் எழுத்துக்களால் பொறித்திருந்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...

 

       "இப்பொழுது திருப்தியா மரகதம்? நீ நினைத்தது போல, என் அப்பாவை முதியோர் இல்லத்திலே சேர்த்துவிட்டோம்" என்றான் மாணிக்கம்

       "என்னங்க, எனக்கு மட்டுமா மகிழ்ச்சி! ஏன்? உங்களுக்கும் இல்லையா?  இல்லை, நம்முடைய பொன்னி, செல்வி  குழந்தைகளுக்கும் இல்லையா?" என்று சற்று உயர்ந்த குரலில் அழுத்தமாகப் பேசினாள் மரகதம்.

       அவ்வீட்டில், இதுநாள் வரையிலிருந்த அளவு சாப்பாடு,’ அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது.  தொலைக்காட்சி  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. காணாமல் போயிருந்த நொறுக்குத் தீனிகள், அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம், நீளமாக மாறின. மாலை நேரத்தில், குழந்தைகளின்  படிப்புக்குப்  பதில்,  ‘தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலும், பாட்டுக் கேட்பதில் கழிந்தன. வாயில் நுழையாத உணவகச் சாப்பாடு வகைகள், வீடு தேடி வந்தன. இந்த திடீரென்று பூத்த மகிழ்ச்சியில், மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

       காலையில், அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல தினசரியைப் போடும் பையன், "ஐயா..ஐயா..ஐயா" என்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால், அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெறிந்தான்.

நேற்று வரை, இவ்வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது மாணிக்கத்தின் அப்பா  முருகவேல்  காலையில் காத்திருந்து,  அன்றைய  தினசரியைக்  அவர் கையில்தான் வாங்குவார்.  

 

'பெரியவருக்கு முடியாமல் இருக்குமோ? அவர் வெளியூர்...?' இப்படிப் பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தது.

 

அந்தப் பையன் பெரியவரைத் தேடுவதற்குக் காரணம், அவர், அவனிடத்தில் "இவ்வளவுச் சிறிய வயதிலே நன்றாக உழைக்கிறாய். நன்றாகப் படித்து, பெரிய வேலை கிடைத்துக் கைநிறையச்  சம்பாதித்து, உன்  அம்மா, அப்பாவைக்  கண்கலங்காமல் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்! புரிகிறதா?" என்ற அவரின் அன்பான பேச்சு,  அவனுக்கு மேன்மேலும் தன்னம்பிக்கையை வளர்த்தது.

அவன் சென்ற சில மணித்துளிகளில்..

"அம்மா.. பால்.." அந்தப் பால்கார அம்மாவும் பலமுறை கூப்பிட்டும் கதவை யாரும் திறக்காததால், அவள் கொண்டு வந்த பாலை வாசலிலே வைத்துவிட்டுச் சென்றாள்.

 

இந்த  'மரகதம்' அம்மாவுக்கு என்னவாகியிருக்கும்?  என்று ஒன்றும் புரியாதவளாய் அவ்விடத்தை விட்டு ஏமாற்றத்துடன் நகர்ந்தாள்.

            எப்பொழுதும் மரகதம், அதிகாலையிலேயும் தலையில் நிறையப் பூவோடும், மஞ்சள் முகத்தில் அழகாகக் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, புன்னகையுடன்  பாலை வாங்கியபடி, "பால்கார அம்மா, சௌக்கியமா? நேற்று உன்னுடையப் பையனுக்கு உடம்பு முடியவில்லை என்று சொன்னாயே இப்பொழுது எப்படி இருக்கிறான்? செலவுக்கு பணம் வேண்டுமென்றால் நான் கொடுக்கிறேன்? " என்ற அந்த ஆறுதலும், இனிமை கலந்த அமுதமான பேச்சும், அந்தப் பால்கார அம்மாவுக்குப் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் தந்தது என்பதே உண்மை.

பால்காரியும் சென்ற பிறகு, மாணிக்கத்தின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியானப் பயிற்சி' செய்வதற்குத் தனது நண்பன் மாணிக்கம் வீட்டிற்கு முன்பு நின்றான்.

 'அழைப்புமணி'யை ஒரு முறை அழுத்திவிட்டு வாசல் கதவைப் பார்த்தான்.

'ஏன், யாரும் கதவைத் திறக்க வரவில்லை?' என்று பலமான சிந்தனை செய்து கொண்டிருக்கையில்,  கதவு மெல்ல திறக்கும் ஓசைக் கேட்டது.  கதவைத்  திறந்தது,  மாணிக்கம் இல்லை. அவன் மனைவி மரகதம் என்று  கதவைத்  திறந்தபோதுதான் அவனுக்கேத் தெரிந்தது.

"அவர் தூங்குகிறார்,  இனிமே தினமும் நடைப்பயிற்சிக்கு வரமாட்டார். முடிந்தால் வாரம் ஒரு நாள், அதுவும் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வருவார்" என்றவாறு அவனுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் வாசலிலிருந்த தினசரியையும்,  பாலையையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாகச் சமையலறைக்கு ஓடினாள் மரகதம்.

அப்பதிலைக் கேட்ட நடேசனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. மாணிக்கம், அவனுடைய பால்ய நண்பன். மாணிக்கத்தின் உடல் ஆரோக்கியத்தில், நடேசனுக்கு அதிக  அக்கறை இருந்தது. காரணம்,  ஒரு நாள் மாணிக்கம், வேலைப்பளு காரணமாக  அலுவலகத்தில் மயங்கி விழுந்துவிட்டான்.  

அன்றே மாணிக்கம், நடேசனுடன் அவனுடையக் குடும்ப மருத்துவரைப் பார்த்தான்.

"இங்கே பாருங்கள் மாணிக்கம், உங்களுக்குத் தேவை  சத்தான  பாரம்பரிய உணவு,  அளவான சாப்பாடு,  தினமும் நடை மற்றும் தியானப் பயிற்சி!"  என்பதை வலியுறுத்தினார்  அவனுடையக் குடும்ப மருத்துவர்.  நடேசன், அதனைப் பொறுப்பேற்று மாணிக்கத்தின் அப்பா மூலம் தவறாமல் செயல்படுத்தி வந்தான்.  

 ‘இன்று, மாணிக்கம் ஏன் நடைப்பயிற்சிக்கு வரவில்லை?’ போன்றவற்றிற்கு விடை தெரியாமல் அந்த இடத்தைவிட்டு தனியாகக் கடந்து சென்றான்.

வீட்டினுள்.. சமையலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் மரகதம், குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டும்,  மறுபுறம் மாணிக்கம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான்  இந்த பரபரப்புக்குக் காரணம், மாணிக்கத்தின் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டபடியால் அன்று அனைவரும் நேரம் தாழ்ந்து எழுந்ததால் வந்த வினை.

கண்மூடித் திறப்பதற்குள், வீட்டு வாசலில் பள்ளி வாகனம்’  இருமுறை  'ஒலிப்பான்'  சப்தத்துடன் நின்றது. அதற்குள், வீட்டிலிருந்து பொன்னி, செல்வி இருவரும் ஒருகையில் புத்தகப்பையையும்,  மறுகையில் மதியவுணவையும் தூக்கிக்கொண்டு,  சற்று அலங்கோலமாய் விறுவிறுவென்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறிச்சென்றனர்.

நேற்று வரை,  அந்த வீட்டுப் பெரியவர் குழந்தைகளைப் பேருந்தில் பத்திரமாக ஏற்றிவிட்டுக் கையசைக்கும் போது, பேருந்தில் உள்ளப் பள்ளிக்குழந்தைகளும்  "தாத்தா,  நாங்களும் போய்விட்டு வருகிறோம்' என்று அவர்களும் கையசைப்பார்கள்.

எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்ற பிறகு 'அப்பாடா ' என்கிற பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள் மரகதம். அப்போதுதான், நேற்று காலையில் நடந்த நிகழ்ச்சியைச் சற்று அசைபோட்டுப் பார்த்தாள்.

"இதோ பார் மாணிக்கம், உங்களுக்கு நான் பாரமா, உங்கள் சுதந்திரத்திற்குத் தடையா இருந்தால்,  இப்பொழுதே என்னை  முதியோர் இல்லத்தில்’ சேர்த்துவிடுங்கள். உங்களுடைய மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நான் கெடுக்க விரும்பவில்லை. இனிமேல் உங்களுடைய விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், சாப்பாடு சாப்பிடலாம்,  தூங்கலாம்.  அதற்குக் குறுக்கே நான் இருக்க விரும்பவில்லை." என்று சொன்ன உடனே மாணிக்கம், மரகதத்துடன் கலந்து பேசி குழந்தைகளின் ஒப்புதலுடன் மாணிக்கத்தின் அப்பாவை, அன்றே முதியோர் இல்லத்தில்சேர்த்துவிட்டனர்.

இவ்வளவும் மரகதத்தின் நினைவுக்கு வந்தது. காலை முதல் நடந்த பரபரப்பு,  மனதில் எழுந்த படபடப்பு இன்னும் அடங்கவில்லை. ஒரு வேளை நாங்கள் எடுத்த முடிவு தவறோ! என்கின்ற ஐயமும் அவளுக்கு இருந்தது. மீண்டும் மாமனாரை இங்கு அழைத்து வந்தால், நம்முடைய சுதந்திரம் பறிபோய்விடும். ஆகவே பல்லைக் கடித்துக்கொண்டு சற்று பொறுமையாக இருக்க முடிவு செய்தாள்.

நாட்கள் வேகமாகப் பறந்தன. அதற்குள் மாதங்கள் ஆறு கடந்தன. ஒரு நாள்,

         "என்னங்க,  நாளைக்கு, நீங்கள் அரை நாள் விடுப்பு போட வேண்டும்"

         "ஏன், என்ன விசயம் மரகதம்?

"ஒன்றுமில்லைங்க, நமது குழந்தைங்களோட பள்ளித் தலைமை ஆசிரியர் நம்மை  சந்திக்கச் சொல்லி  குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார்" என்றதும் மாணிக்கம் சரி” என்று ஒத்துக்கொண்டான்.

மறுநாள் காலையில், பள்ளிக்கூடம் செல்வதற்கு மாணிக்கம்,  மரகதத்தை அவசரப்படுத்தினான்.

"இன்றைக்கு என்ன ஆகிவிட்டது மரகதம்? பழைய சுறுசுறுப்பு இல்லையே?" அவன் பதற்றத்துடன் கேட்டான்.

"என்னமோ தெரியவில்லைங்க,  ஒரு வாரமா. உடம்பு சோர்வாக இருக்கிறது.  இன்றைக்குச் சரியாப் போய்விடும், நாளைக்குச் சரியாகப் போய்விடும்’ என்று அலட்சியமா இருந்துவிட்டேன். ஆனால், நாளாக நாளாகக் கூடுகிறது தவிரக் குறைந்தபாடு இல்லை" என்று குறைந்த சுருதியுடன் சொன்னாள் மரகதம்.

"அப்படியானால் மரகதம்! முதலில் நாம், நமது குடும்ப மருத்துவர்  வீட்டிற்குப்  போகிறோம். பிறகு பள்ளிக்குச் செல்வோம்" என்றான்.

"இல்லைங்க,  முதலில் பள்ளிக்கு! மாலையில் மருத்துவர் வீட்டிற்கு! என்றபடி விரைவில் ஆயத்தமானாள் மரகதம்.

பள்ளியில், தலைமை ஆசிரியாசிரியரைச் சந்திக்க அறையில் நுழைந்தார்கள்.

அவர்களே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

"நாங்கள் பொன்னி, செல்வியின் பெற்றோர்கள். சந்திக்க வேண்டுமென்று  குறுந்தகவல் வந்தது. குழந்தைகள் ஏதாவது தவறாக..." என்று ஐயத்துடன் கேட்டார்கள்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நன்றாகப் படிக்கின்ற குழந்தைகள். ஆனால்,  சென்ற தேர்வுவரை முதல் மதிப்பெண் வாங்கியவர்கள். இந்தத் தேர்வில் நான்காவதாக வந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் 'கண்' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திணறித் திணறிப் படிக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளின் ஆதாரத்தைக் கண்டறிந்து தொடக்கத்திலேயே சரி செய்தால் நல்லது" என்று கனிவாகக் கூறினார் தலைமை ஆசிரியர்.

அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவர்கள், "இனிமேல் அவர்கள் நன்றாகப் படிப்பார்கள். அவர்களுக்கு யாரால்? எதனால்? இந்தப் பிரச்சனைகள்  வந்தது என்பதை ஆராய்ந்து உடனே தீர்த்துவிடுகிறோம்" என்று உறுதியளித்து,  அவரைக் கும்பிட்டுப் பள்ளியை விட்டு வெளியே வந்தனர்.

 மரகதத்தைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு வேகமாக அலுவலகம் சென்றான் மாணிக்கம்.

மாலையில், வழக்கமாகக் குழந்தைகளுடைய பேருந்து முதலில் வரும். பிறகு, ஒரு மணி நேரம் கழித்துத்தான் மாணிக்கம் வருவான். அன்று நேர்மாறாக நடந்தது. இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற மாணிக்கம், அன்று, விரைவாகவே அலுவலகச் சிற்றுந்தில் அவனுடையச் சக ஊழியர்கள் இருவருடன் வீட்டிற்கு வந்தான். அந்த இருவரும், அவனை இருபக்கத்தில் கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டு, மெதுவாக வீட்டிற்குள் இருக்கும் கட்டிலில் படுக்க வைத்து காற்றாடியை வேகமாகப் பறக்கவிட்டனர்.

இந்தக் காட்சியைக் கண்ட மரகதம், "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை, கால் உதறியது.

"திருமதி மாணிக்கம், நீங்கள் பதற்றம் படக்கூடாது. என்ன நடந்தது? என்றால்.. காலையில் இவருக்கு நிறைய வேலை இருந்தது. இவருடைய 'துறைத்தலைவர்’  இன்றைக்கு விடுமுறை. எல்லா வேலைகளையும் இவர் மட்டுமே பார்த்தார். அதனால், 'இரத்த கொதிப்பு' கூடியிருக்கும் என்று நினைக்கிறோம் என்றனர்.

"இவர் நன்றாக ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். மேற்கொண்டு உதவி தேவைப்பட்டால் நாங்கள் வருகிறோம்" என்று விடைபெற விளைந்தனர்.

உடனே பதில் சொல்ல இயலாமல், சிரமத்துடன் சுயநினைவுக்கு வந்தவளாய்..

"உங்கள் உதவிக்கு நிறையவும் நன்றி. ஏதாவது சாப்பிட...” என்று முடிப்பதற்கு முன்பே

"முதலில் இவரைக் கவனியுங்கள்.  நாளைக்கு நாங்கள் பார்க்க வருகிறோம்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

மரகதம், கடிகாரத்தைப் பார்த்தாள். அவனைப் பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சற்றுநேரத்தில் குழந்தைகள் வந்தனர்.

அவர்களை முந்திக்கொண்டு மெல்லியக் குரலில் "பொன்னி, செல்வி, நீங்கள் இருவரும் கை, கால் கழுவிய பின் சாப்பிட்டு முடித்து விடுங்கள். வீட்டுப்பாடம், படிப்பது ஏதாவது இருந்தால் தொலைக்காட்சிப் பார்க்காமல் உடனே செய்து முடிக்க வேண்டும். நாம் எல்லோரும் எட்டு மணிக்கு நமது குடும்ப மருத்துவர் வீட்டுக்குப் போகப் போகிறோம்" என்று குழந்தைகளுக்குக் கட்டளையிட்டாள் மரகதம்.

வெகுநேரம் கழித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் மாணிக்கம்.

"இப்பொழுது எப்படி இருக்குங்க? உடம்பு பரவாயில்லையா?"

"யாருக்கு? என்னாகிவிட்டது? "

"யாருக்கா? உங்களுக்குத்தான். ஒரு வினாடிப் பதறிப் போய்விட்டேன். என்னுடைய உயிர் இப்பொழுது என்னிடத்தில் இல்லை. மருத்துவர்,  உங்களைப்  பரிசோதித்து  'ஒன்றுமில்லை'ன்னு அவர் வாயாலே சொன்னால்தான் எனக்கு நிம்மதி” என்றாள் மரகதம்.

அனைவரும் அவர்களின் குடும்பநல  மருத்துவர் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள். அவருக்கு  அவர்களின் உடல் கூறுகள் மற்றும் ஆரோக்கியம் அத்துப்படி.

         "என்ன.. மாணிக்கம்? அனைவரும் இங்கு வந்தது எனக்கு வியப்பாக இருக்கிறது.. உங்கள் உடம்பிலே நல்ல மாற்றம் தெரிகிறது. ஆமாம்,. உன் அப்பா முதியோர் இல்லத்தில் நன்றாக இருக்கின்றாரா? நான் ஒரு அதிகப்பிரசங்கி. உங்களின் பிரச்சனைக்கு நேரடியாக வராமல் ஏதேதோ பேசுகிறேன். சரி, யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை?

மரகதம் நடந்தனவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தாள்

          "ஆக, எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது." என்றவாறு அவர் அவர்களுக்கு வேண்டிய பரிசோதனைகளைச் செய்து முடித்துவிட்டு நீண்ட நேரம் மௌனம் சாதித்தார்.

"உங்களுக்குப்  பயப்படும்படியாக ஒன்றுமில்லை.  ஆனால்,  உங்களுடைய பிரச்சனைக்குக் காரணம் நீங்கள்தான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மருத்துவர்.

"ஆமாம் மாணிக்கம், நீ உன் அப்பாவை எப்பொழுது முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்? ஞாபகம் இருக்கிறதா?"

       "சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆறு மாசம் இருக்கும். ஆமா, நான் தெரியாமல்தான் கேட்கிறேன்,. எங்கள் பிரச்சனைகளுக்கு நாங்கள் எப்படிக் காரணமாக முடியும்?

"மாணிக்கம்.. நீ என்ன நினைத்தாலும் சரி. அதுதான் உண்மை. காரணம்.. உன் அப்பா, உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து, உங்களுக்குப் பலவிதத்தில் உதவியாக இருந்ததோடு உங்கள் எல்லோரையும் உணவு, ஒழுக்கம், ஆரோக்கியத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். கடைசியாக, உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். மருந்து, மாத்திரை இல்லாமல், உங்கள் உடம்பு சௌகரியத்துடன்  இருக்க வேண்டுமென்று விரும்பினால், இப்பொழுதே உன் அப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வாருங்கள்.  இல்லையென்றால், சாப்பாட்டுக்குப் பதிலாக நான் கொடுக்கின்ற இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாப்பிடுங்கள். முடிவு உங்கள் கையில்!" என்றார் ஆணித்தரமாக.

              அவர் பேசியது அவர்களின் காதுகளில் புகுந்து . மனது வழியாக இதயத்தில் நுழைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, மரகதமும்  மாணிக்கமும் கண்களில் பேசிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். மாணிக்கம் அந்த மருந்து சீட்டை கையில் எடுத்துக் கிழித்துப் போட்டான்.

இப்போதே முதியோர் இல்லத்திற்குச் செல்கிறோம். அப்பாவைக் கையேடு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வோம். முத்து இல்லம்’ பழைய படி மகிழ்ச்சியில் மிதக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது.                

                                    ***முற்றும்***

No comments:

Post a Comment