Pages

Monday 3 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான் - INNER MAN WILL CARRY YOUR WORRIES


உள்விதி மனிதன்  

சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 



பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்
INNER MAN WILL CARRY YOUR WORRIES



பிரியமுள்ள மனிதா! ஆதிகாலம் முதல் இந்தக் கணினி யுகம் வரையில், இன்னும் நீ மாறப்போகும் சூழ்நிலை, அந்தந்த சமயத்தில் உனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் மிகவும் எளியமுறையில் உலகத்தில் எங்கேயாவது மூலைமுடுக்குகிலிருந்து இந்த உள்விதி மனிதனை உடைய ஒருவனால் அல்லது ஒரு சிலரின் முயற்சியால் உனக்குத் தவறாது கொடுத்துக்கொண்டு வருகிறேன். உனது உயிர் ஓட்டத்திற்குப் பயன் தராததை நான் பெரும்பாலும் உனக்கு எளிதாகத் தெரியாதவாறு ரகசியமாக புதைத்தோ அல்லது மறைத்தோ வைத்திருக்கிறேன். எனது நோக்கம் முதலில் உனது அகத்தின் தேவைகளை ஒரு குறையுமில்லாமல் நானாக கொடுத்து பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு புறத்திற்கு தேவையானதை நீயாக உனக்கு தேவைப்படும் நேரத்தில் தேடித்தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்.



என் இனிய மனிதா! உனது உயிர் ஓட்டத்திற்குத் தேவையானவைகள் நீ ஜனித்த பிற்பாடா வந்தவை. இல்லவே இல்லையே. உனது பிறப்பிற்கு முன்னால் உனக்குத் தேவையானவற்றை மிகக் கவனமாக திட்டமிட்டு எல்லா நேரத்திலும் எல்லாக் காலத்திலும் எனது மனித படைப்பின் பெருமையைக் குறைக்காத வண்ணம் இந்த உலகில் நீ எல்லாவற்றையும் அனுபவிக்கும் வண்ணமே எற்படுத்தியவை. உணவும் அதற்குத் தேவையான மலை, காற்று, சூரிய ஒளி , நிலம், ஆகாயம் எல்லோருக்கும் எளிதாக கிட்டத்தட்ட சமமாக கிடைக்கும் வண்ணம் அதே சமயத்தில் மனித சக்திக்கு அடங்காதவாறு  மிகவும் உதவியாக  படைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் யாருக்கும் அடிமையாகாத வண்ணமும் கூட.



பெருமை கொண்ட மனிதா! இவ்வளவு ஏன்? பெண்ணிற்கு மார்பில் இரு தனங்களை அவளுள்ளே ஒரு ஜீவன் வளர்வதற்கு முன்னமே ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் வளர்த்து, குழந்தை பிறந்தவுடன் அதிலிருந்து சத்தானப் பாலை சுரக்கச் செய்து குழந்தையான உனக்குப் பசி தெரியாதவாறு சரியான நேரத்தில் திட்டமிட்டுச் செய்துள்ளேன். அதை இந்த உள்விதி மனிதனைத் தவிர வேறு யாரால் செய்யமுடியும்?     



சக்தி மனிதா! ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள். தங்கம், வைரம் போன்றவைகளை அதிகமாகவும், எளிதாகவும் கொடுத்து, உணவு வகையறாக்களை உனக்குத் தெரியாதவாறு நான் புதைத்து வைத்திருந்தால்  உனது வாழ்க்கை என்னாவது? எனது ஜீவ ஓட்டத்திற்குச் சக்தி ஏது? இதிலிருந்து உனது ஜீவ விருத்தி மற்றும் படைப்பின் பெருமையை அறிகிறாயா? அப்படி செய்யாதற்கு என்ன காரணம் இப்போது புரிகின்றதா? அவைகளெல்லாம் பொக்கிஷம் அல்ல. ஒருவகையில் அதுவும் விஷம் தான். அவைகள் அரிதாக கிடைப்பதினால் அவைகளுக்கு மதிப்பு அதிகம் என்று நினைக்காதே! அவைகளை நீ வெளியே கொண்டுவந்து உன்னால் மதிப்பு தரப்பட்டது. அவைகள் நீ உயிர் வாழ்வதற்கு கொஞ்சம் கூட பிரயோசனம் இல்லாதது. இப்போது உனது ஆன்ம ஓட்டம் மற்றும் அது தரும் உணவின் மகத்துவம் புரிந்துகொள். எனது நல்ல எண்ணங்களை அறிந்து கொள்.



பெருமை மிக்க மனிதா! யார் ஒருவர் உனது ஜீவ ஓட்டத்திற்குத்  துணையாக சுத்தமான உணவுக்கு வழிவகை செய்து இந்த உலகை செழிக்க வைக்கிறார்களோ அவர்களே நாங்கள். இந்த உள்விதி மனிதன் ! மனிதா! தன்னால் செய்ய முடியாத சில செயல்கள் பிறர் செய்யும்போதும், அதைப் பற்றிச் சொல்லும்போதும் மிகவும் பரவசப்பட்டு அவர்களிடம் உனது உடமைகளை இனாமாகக் கொடுத்து இழக்கவும் செய்கிறாய். அவர்களே உன் வாழ்வுக்கு அடைக்கலம் தருபவர் என்று எண்ணுகிறாய். அவர்கள் போலிகள். அவர்களை ஒரு போதும் நம்பாதே!



மேன்மை குணமுள்ள மனிதா! எல்லோருக்கும் எல்லாவகையான ஆற்றலை இந்த உள்விதி மனிதனால் படைக்கப் பெற்றிருக்கிறார்கள். உனக்குள் ஏராளமான பொக்கிஷப் புதையல்கள் இருக்கின்றன. யார் எதைத் தேடுகிறார்கள்? யாருக்கு எது விருப்போமோ அவைகளையெல்லாம் கடின உழைப்பு, முயற்சி கொண்டுத் தேடி அவர்கள் அடைகிறார்கள்! உன்னால் செய்ய முடிந்ததை ஒருவேளை பிறரால் செய்ய முடியாது. மற்றவர்களால் செய்ய முடிந்ததை ஒருவேளை உன்னால் செய்ய முடியாது. ஆனால் எல்லாமே ஒருவரால் செய்ய இயலாது. அவ்வளவு ஆற்றல் இந்த உலகில் யாருக்கும் இல்லை.



மகிழ்ச்சி கொண்ட மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு உனக்குத் தேவையாவற்றை செய்யவைக்கிறேன். அதுமட்டுமா? உனது குழந்தை குட்டிகளுக்கு தேவையானவை, குடும்பத்திற்குத் தேவையானவை, உனது வாழ்க்கை சந்தோஷத்திற்கு எது தேவையோ அதைச்  செய்ய வைக்கிறேன். மனிதா! வருங்காலத்தில் மனிதனின் பேராசையினால் ஒரு குறிப்பிட்ட தலைகளுக்குக் கீழ் இந்த உலகம் இயங்கும். அப்போது அவர்கள் 'இந்த உலகத்தில் எங்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் யாருமில்லை ' என்று கொக்கரிப்பார்கள். 'கடவுளை அதாவது இந்த உள்விதி மனிதனை மதிக்காமல் பல இழி செயல்களைச் செய்வார்கள். எல்லோரும் தங்களுக்கு அடிமைகள் என்பது போல நடந்து கொள்வார்கள். 

பெருமை கொண்ட மனிதா ! நீ என்ன தான் தலைகீழாக நடந்தாலும் உன்னால் ஒரு சில செயல்கள் தான் செய்ய முடியும். உன்னால் தூக்க முடிகின்றளவிற்குத்  தான் பாரம் தூக்க முடியும். அளவுக்கு மிஞ்சிய பாரத்தை தூக்க நினைத்தால் அல்லது அனுபவிக்க நினைத்தால் உன் கதி என்னவாகுமென்று உணர்ந்து கொள். அளவுக்கு அதிகமான சொத்துக்கள், பொருட்கள் இருப்பவர்களிடத்தில் எப்படி அந்த அளவு பொருட்கள் சேர்ந்தது? உன்னைப் போல பலரும் அவர்களிடத்தில் ஏமாந்ததால்! ஆரம்பத்தில் எல்லோருக்கும் கொடுத்த சம பங்கை அவர்கள் பலவிதத்தில் உனக்கு ஆசை காட்டி அபகரித்துக் கொண்டவர்கள். இனிமேலாவது உனது பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள் ! என்று எச்சரிக்கவே உனக்குள் உள் மனிதனாக வந்துள்ளேன்.



சக்தி கொண்ட மனிதா  ! நீ எப்போதும் விழித்துக் கொள்ளாமல் இந்த உள்விதி மனிதனை பலவிதத்தில் கஷ்டப் படுத்துகிறாய்! என்னால் உனக்கு உதவி செய்ய முடியாதபடி உனது வீணான எண்ணங்கள் தீயசெயலில் ஈடுபடுகின்றது. முடிவில் அளவில்லா துன்பத்தைச் சந்தித்து மகிழ்ச்சியை இழக்கிறாய்! உன் பொருட்களை உனக்காகவும், உனது சந்ததியினருக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யாமல் என்னைப் பலவழியில் அவமதித்து பேராசை மற்றும் சுயநலத்திற்காக தகாத செயல்களைச் செய்கின்றாய். நீ அவ்வாறு செய்யாமல் நீ இழந்ததை மீட்டு உன்னிடத்தில் கொடுத்து உனது குடும்பவாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். 

ஆற்றல் கொண்ட மனிதா! என்னை மதி! உன் வாழ்வு செழிக்கும். மனிதா! அனைத்தும் இழந்த பிறகு தான் என்னை உணருகிறாய்! உனது தீய செயலைப் பற்றி கவலைகொள்கிறாய் ! உன்னை மன்னிக்குமாறு என்னிடம் மன்றாடுகிறாய்! மனிதா! நான் உனது தீய செயலுக்கு மன்னிக்கத் தயார்! ஆனால் உன் செய்கையால் பாதித்தவர்களை யார் இரட்சிப்பார்கள்! நீ செய்த தீய செயலுக்குப் பிராயச்சித்தமாக அவர்களுக்கு இன்றிலிருந்து நல்ல, நன்மை தரும் செயலைச் செய்து நீ செய்த பாவத்தை கழுவிக்கொள்! உனக்கு வரப்போகும் பெரும் தண்டனையிலிருந்து காத்துக் கொள்..!



உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...


1 comment: