Pages

Monday 15 April 2013

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும் 

                           
நாட்டு நடப்புகள்.

           

நமது நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், மக்களுக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் விளையாட்டிலும், ஆராய்ச்சியிலும் நாம் சாதித்தது மிகமிகக் குறைவே? அதற்கு சாட்சி, 1896 வருடம் முதல் இது நாள் வரை 29 தடவை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஒருமுறை கூட தடகளப் போட்டியில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. அதேபோல் ஆராய்ச்சியில் 1930 ம் ஆண்டு சர். சி.வி. இராமன் பெற்ற பிறகு இதுநாள் வரை யாருமே நோபல் பரிசு பெறவில்லை. அதற்குக் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில முக்கியக் காரணங்களை பார்ப்போம்.

                 

முதலில் நமது கல்வி முறை. பெரும்பாலும் நமது கல்வி செய்முறையோடு இல்லாமல் வெறும் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரம் போலத் தான் இருக்கின்றது. அதில் வேதனைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் நன்றாக அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்கள் கூட பொறியியல், மருத்துவம், கணினி அல்லது   அறிவியலில் சிறப்பாக தேர்ச்சி பெறுவது கிடையாது. காரணம் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்கிற பழமொழிக்கேற்ப கடைசிவரை மனப்பாடமே செய்கின்றனரே தவிர செய்முறையில் அதிக நாட்டம் காட்டுவதில்லை.


பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, முனைவர் பட்டம் வாங்கும்போதே வயது அதிகமாகிவிடுகின்றது. அதன் பிறகு வேலை, கல்யாணம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கத்தில் சினிமா , டி .வி  என்று தொடர் பயணம் செய்வதால் ஆராய்ச்சி செய்து புதியவைகளை கண்டுபிடிப்பதற்கு நேரம் ஏது ? மேலும் பள்ளி பாடத்திலிருந்து கல்லூரி (கலை அல்லது பொறியியல்) பாடம் என்று மாறும்போது அவைகள் மிக மிக கடினமான பாடத்திட்டம் தான். 

 

அதை நடத்துபவர்களுக்கு அதிக கல்வியறிவு இல்லாததால் வெறும் வாசிப்பு (கணிதம், கணினி பாடம் உட்பட) மட்டும் கடமைக்கு வாசித்துவிட்டு வேலையை முடித்துக் கொள்கிறார்கள். ஏதேனும் சந்தேகம் வந்தால் சொல்லித் தருவதில்லை. மீறி தெரிந்துகொள்ள விரும்பினால் வலைதளத்தை நாடவேண்டிய சூழ்நிலை. அதற்கு நேரமும், பணமும் வேண்டும். வலைதளத்தில் உட்கார்ந்துவிட்டால்  பாடத்தைவிட படத்தையும், பாடலையுமல்லவா பார்க்கிறார்கள்!

    

அதேபோல் விளையாட்டிலும் இதேகதி தான். +2 வரை படிப்பில் கவனம் செலுத்தி திடீரென்று விளையாட்டில் ஆசியா அளவில் அல்லது ஒலிம்பிக் அளவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதா? இது விளையாட்டு அல்லது ஆராய்ச்சியில் மட்டும் பொருந்துவது கிடையாது. எல்லாத் துறைகளுக்கும்   பொருந்தும். 


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை... என்று பழமொழிகள் இருக்கின்றன. அதாவது சிறிய வயதிலிருந்தே ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி பெற முடியும். 'ஜிம்னாஸ்டிக்ஸ்'மற்றும் சர்கஸ்  விளையாட்டுகள்  இருக்கின்றது. அந்த விளையாட்டில் உடலை வளைத்து, மடக்கி, நீட்டி விளையாடுவார்கள். அது வயது வந்தவர்களால் செய்ய இயலாது. ஏனென்றால் அவகளின் உடல் ஒத்துழைப்பு தராது. அது போல ஆராய்ச்சியில் ஈடுபட நினைக்கும் மாணவர்கள் ஆறாவது வகுப்பிலிருந்தே அம்மாணவர்கள் விரும்பினால் கணிதம், அறிவியல் பாடங்களை ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது .... என்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரீட்சை வைத்தால் மூன்றரை ஆண்டுகளில் அந்த இரு பாடத்தில் +2 வரை உள்ள பாடத்தை படித்துவிடலாம்.

        

பிறகு கல்லூரி பாடங்களை படிக்கும்போது அவர்களுக்கு எளிதில் புரிவதோடு ஆழ்ந்து, சிந்திப்பதற்கும் நேரம் கிடைக்கும். இன்றிருக்கும் ஆராயச்சி மைக்ரோ அளவு என்று இருந்தது போய் நானோ அளவு நுட்பமாக இருந்தால் தான் சாதனை படைக்க இயலும். வெறும் பாடம் படித்து நோபல் பரிசு வெல்ல முடியாது. சிறு வயது முதற்கொண்டே ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு செய்முறை கல்வியோடு ஆராய்ச்சி படிப்பும் கொடுத்தால் பிற்காலத்தில் நம் நாடு நிறைய நோபல் பரிசு பெரும்.

                   

இதேபோல் சிறு வயது கொண்டே சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கடுமையான விளையாட்டுப் பயிற்சிகள் கொடுக்கும்போது கண்டிப்பாக நமது நாடு பல சாதனைகள் படைக்கும். இதனால் சிபாரிசுகள் தவிர்க்கப்படும். வேண்டுபவர்களை சேர்த்துக் கொள்வது என்பதை ஒழித்துவிடலாம். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. அவைகளை முறியடிப்பதற்கு விசேஷமான பயிற்சியும், விடா முயற்சியும் தேவை. அது உடனே வந்து விடாது. படிப்படியாகத் தான் வரும். இளமை மிகவும் அவசியம்.

         

உதாரணமாக செல்போனில் ஏதாவது புதுமை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு தூரம் வளந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கவே நிறைய மாதங்கள் தேவைப்படும். அதுமட்டுமா? ஆட்டோமொபைல், மருத்துவம், விவசாயம், எரிசக்தி, பொறியியல், இராணுவம், விண்வெளி,  இன்றைய வியாபார நுணுக்கம், கணினி, அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சியின் ஆழம் எவராலும் கணிக்க முடியாது. இந்நிலை இப்படியே நீடித்தால் ஆராய்ச்சி என்பதே மறந்து அந்நிய நாட்டை எப்போதும் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வந்துவிடும். அவர்கள் சொல்வது தான் விலை என்று வருவதற்கு நீண்ட நாட்கள் இல்லை.  

             

ஆக இந்த மாதிரியான பயிற்சிகள் தருவதால் மாணவர்களின் அறிவும் திறமையும் ஒழுங்கு படுத்தப்பட்டு கூர்மையாக்கப் படுகிறது. அடுத்தடுத்து அவர்கள் திறமைகளைப் பெருக்கிக்கொள்வதால் மற்றவற்றில் அதாவது வேண்டாத செயல்களில் கவனம் செலுத்துவது தவிர்க்கப் படுகின்றது. இதை அரசியல் தலைவர்கள் நன்றாக புரிந்துகொண்டு தகுந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுத்தால் நிச்சயம் நமது நாடு சிறந்த நாடாக மாறும். இப்போதே நமது பழைய கண்டுபிடிப்புகள் வெளிநாட்டுக்கு போய்விட்டது. மீதி இருப்பதையாவது காப்பாற்றப்படவேண்டும். இன்னும் பல சி.வி. ராமன்களை, இராமனுஜத்தை, ஜகதீஷ் சந்திர போஸ்களை உருவாக்குவது நமது கடமை அதற்கு விழிப்புணர்வும், நல்ல பாடத்திட்டமும் வேண்டும். வளர்ச்சிகள் கட்டாயம் இருக்கும். அதை நாம் பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

    

இளைஞர்களின் மாய வலையினை அறுத்தெறியுங்கள்.

ஆராய்ச்சிக்கு வசதியும், முதலிடமும் கொடுங்கள்.

          

நிச்சயம் 2020 ல் இந்தியா ஒரு வல்லரசு தான்.

              

இல்லையேல் பூஜ்யம் தான்.
       

No comments:

Post a Comment