பிரச்சனை தீர்க்க முடியும் என்று
தன்னம்பிக்கை கொள் -
.. HAVE CONFIDENT TO SOLVE YOUR PROBLEM YOURSELF
தன்னம்பிக்கை கட்டுரை
மதுரை கங்காதரன்
எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், குருவாக இருந்தாலும் அவர்களால் உனது குறைகளையும், கஷ்டங்களையும் கேட்க முடியுமே தவிர உனது குறைகளை தீர்க்க முடியாது. அதுவும் நீ எவ்வளவு லட்சம் கொடுத்தாலும் நடக்காது. அதாவது உனது பசியை போக்குவதற்கு அவர்களுக்கு அறுசுவை உணவும், முக்கனியும், பொன்னும் , பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. உனக்கு பசியென்றால் நீ சாப்பிட்டால் தான் உன் பசி அடங்கும்.
உனது கஷ்டத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யாராலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எவரேனும் உனது கஷ்டத்தை தீர்க்கிறேன் என்று சொன்னால் அதற்காக பணம் கேட்டால் கட்டாயம் அவர்கள் போலி ஆசாமிகள். அவர்கள் உன்னிடம் பணம் இருக்கும் வரை கறந்துவிட்டு டாட்டா காட்டி 'எஸ்கேப்' ஆகிவிடுவார்கள். அந்த நிலையில் உனக்கு கூடுதல் கஷ்டம் வந்து சேரும்.
உனக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் நிதானமாக யோசி. உடனே யோசிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் அப்போது நீயே பெரும் குழப்பத்தில் இருப்பாய். உனது மனம் தெளிவகாவும், யோசிக்கின்ற நிலையிலும் இருக்காது. சிறிது நேரம் விட்டு அல்லது ஓரிரு நாட்கள் தள்ளியோ பிரச்சனையின் ஆழத்தைப் பொறுத்து நேரம் எடுத்துக்கொண்டு யோசித்தால் மிகவும் நல்லது.
பிரச்சனைக்கான காரணம் நீயா ? அல்லது வெளியிலா? என்பதை உறுதிபடுத்திக்கொள். உன்னால் என்றால் பிரச்சனையை மேலும் வளரவிடாமல் சமாதானமாகவோ அல்லது அதனின்று விலகியோ அல்லது துண்டித்தோ விடு. அதை கண்டும் காணாமல் இருந்து விட்டால் அந்த பிரச்சனை விதை உன் கண்ணுக்குத் தெரியாமலே நெடு நெடுவென்று வளர்ந்து வெட்ட முடியா பெரிய மரமாக வளர்ந்து உன் முன் தினமும் தோன்றி பேயாட்டம் ஆடிவரும். நாளடைவில் அதுவே உனக்கு எமனாகவும் மாறி உன்னை அழித்துவிடும் ஜாக்கிரதை!
பிரச்சனை எழும்போது உன் பவீனத்தை பயன்படுத்தி கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி விடுவார்கள். அல்லது தேனாக பேசி உன் பக்கத்தில் மிகப் பெரிய குழியை தோண்டி விடுவார்கள். அப்போது உனது உறவையும் (மனைவியும், பிள்ளைகளையும்), நீ தேடி வைத்த செல்வங்களையும் பத்திரமாக நினைவில் வைத்துக் கொள். எனென்றால் பல போலி ஆசாமிகள் உனது பிரச்னையை போக்குகிறேன் என்று சொல்லி முதலில் உன்னையும் உனது உறவுகளையும் பிரிப்பார்கள். அப்போது தானே உன்னிடமிருந்து பணத்தை பிடுங்குவது எளிதாக இருக்கும். உன்னுடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் கொண்டு போக கொண்டு போக பிரச்சனை பெரிதாக்குமே ஒழிய பிரச்சனைகள் தீராது. அதுவும் ஒரு சிறிய பிரச்சனை நூறு பிரச்னைக்கு வழிவகுத்து விடுவார்கள். மேலும் பிரச்சனை தீக்க வேண்டும் என்கிற வேகத்தில், அல்லது எண்ணத்தில் பணத்தை தண்ணீராய் செலவு செய்வீர்கள். கடைசியில் பிரச்சனை தீராது. பணமும் இருக்காது.
உதாரணமாக பல பிரச்சனைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றது. குறித்த நேரத்தில் தீர்க்க முடிகின்றதா? இவ்வளவுக்கும் படித்தவரும், சட்டத்தைக் கரைத்து குடித்தவர்கள் தான் பிரச்சனை தீர்க்க வாதாடுகிறார்கள். இதற்கும் மேலாக நீதிபதியோ தீர்ப்பை கூறாமல் ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பதிலிருந்து உனக்கு புரிகின்றதல்லவா! ஏனெனில் உனது பிரச்சனை தீர்ப்பதில் அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் அக்கறை இல்லை என்றே கூறலாம்.
ஆக உனது பிரச்சனைகளை உன்னால் தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள். சிக்கல்களை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க முயற்சி செய். கட்டாயம் எந்த பிரச்சனையும் நீ தீர்த்து விடலாம்.
ஆக உனது கஷ்டத்தைப் போக்க தன்னம்பிக்கையுடன் வழி தேடு. நிச்சயம் வழி தெரியும். அதில் பயணம் செய். தொலைந்த மகிழ்ச்சி மீண்டும் உன்னிடம் ஒட்டிக்கொள்ளும். வழிகள் உனக்கு உதவி செய்யும் நட்பாகவோ, உறவாகவோ, இரக்கம் படைத்த மனிதர்களாகவோ இருக்கலாம்.
நன்றி
வணக்கம்.
நல்லதொரு தன்னம்பிக்கை கட்டுரை... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDelete