Pages

Thursday, 20 December 2012

இன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்

இன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் கூட 
 
நாளைய 
மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்


  

(இதில் வரும் மாணவர்கள் என்பது மாணவியருக்கும் பொருந்தும்)


   

மாணவர்கள் என்பவர்கள் தாமரை பூ போல ஆவார்கள். தாமரை பூவானது நீரின் மட்டத்த்திற்க்கேற்ப உயரும். அதுபோல் மாணவர்களின் திறமையும் அறிவும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் அளவையும், கற்றுக்கொடுக்கும் விதத்தையும் பொறுத்து உயரும் . ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது மாணவர்களின் அவர்களுக்கு எளிதில் புரியுமாறும் மனதில் நன்கு பதியுமாறு நடத்த வேண்டும். அப்பொழுது தான் மாணவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள். அதன்படி கடைபிடிக்கவும் செய்வார்கள்.


  

'மாதா, பிதா, குரு தெய்வம் ' இந்த வாக்கியம் நாம் கேள்விப்பட்ட ஒன்று தான். 'இதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கின்றது?' என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகின்றது. இந்த வாக்கியத்தில் தான் வாழ்கையின் ரகசியமே அடங்கியுள்ளது. அதாவது நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஒரு தாயால் தான் பெற்றுத் தர முடியும். அதுபோல் நல்ல சிந்தனையும், பழக்கவழக்கங்களை கற்றுத் தரவேண்டிய கடமை தந்தையிடத்தில் இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் குழந்தைப் பருவம் பெற்றோர் கையில் தான் இருக்கின்றது. அதுவே அவர்களது வாழ்கையின் அடித்தளமுமாகும். ஆக குழந்தைகள் வளரும்போதே பெற்றோர்கள் அவர்களுக்கு பல நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

 

குழந்தைகளின் இயல்பான குணமான சேஷ்டைகள் செய்வது, அடம்பிடிப்பது, செய்யக்கூடாத செயலைச் செய்வது, அழுது சாதிப்பது, விலை உயர்ந்த அல்லது ஆபத்தான பொருட்களை அலட்சியத்துடன் கையாள்வது போன்றவைகளை எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஏனென்றால் அவர்களின் அறிவு அவ்வளவு தான். அவர்களிடம் உங்களைப் போல அறிவின் முதிர்ச்சியை எதிர்பார்ப்பது நல்லதா? அவர்கள் இந்த உலகத்திற்கு புதிது. அனுபவம் என்பது அவர்கள் இனிமேல் தான் பெறவேண்டும். அதற்கு நீங்கள் தான் உறுதுணையாக இருக்கவேண்டியது அவசியம்.எல்லாவற்றையும் சமாளிக்கும் உபாயம் கட்டாயம் பெற்றோர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக அப்பேற்ப்பட்ட குழந்தைகளிடத்தில் பக்குவமாகவும், அன்பாகவும், அவைகளில் பக்கத்தில் இருந்து நீங்களும் ஒரு குழந்தையாக மாறி அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பொருளில், செயலில், பாடலில், படத்தில் ஈடுபாடு இருக்கும். அதை எவ்வளவு சீக்கிரமாக தெரிந்துகொள்வீரோ அவ்வளவு எளிது குழந்தைகள் பராமரிப்பது.


  

குழந்தை பருவம் தான் மனித வாழ்கையில் முதல் பருவம். வாழ்கையின் அடித்தளம் கூட. அந்த பருவம் நன்றாக இருந்தால் தான் மாணவர் பருவம் சிறந்தும், இளைஞர் பருவம் பெருமை படக்கூடியதாயும் இருக்கும். மேலும் ஆசிரியர்களின் அறிமுகம் குழந்தை பருவம் முதலே ஆரம்பித்து விடுகின்றது. 

 

சில குழந்தைகள் நாம் மொபைல் போன்கள, டி.வி மற்றும் கணினிகளை இயக்குவதை பார்த்து பார்த்து அதேபோல் எளிதாக பழகிவிடுகின்றனர். அதாவது சிறு வயது முதற்கொண்டே அவர்களுக்கு ஒலி - ஒளி பரிட்சயம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அந்த உபகரணத்தின் மூலம் பார்த்து பலவற்றை தெரிந்து அதன்படி செய்தும் விடுகிறார்கள். அதாவது டி.வி யில் வரும் விளம்பரங்கள், பாடல் மற்றும் நடன அசைவுகளை அப்படியே செய்து காட்டுகிறார்கள். ஒருசில வேலைகளின் அது ஆபத்தானதாகவும் முடிகின்றது. அதாவது டி.வி யில் வரும் கதாநாயர்கள் அதிக சக்தி பெற்று உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்வது உணமை என நம்பி அவர்களும் அவ்வாறே செய்து அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது. ஆகவே அத்தகைய நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் பார்ப்பதை தவிக்கவேண்டும். அல்லது அது வெறும் கதை உண்மையல்ல என்பதை மனதில் பதியவைக்க வைக்கவேண்டும்.


  

குழந்தை பருவம் தான் விதை உருவாகும் பருவம். அந்த விதை காலம் காலமாக அனைவருக்கும் பயன்படும் ஆலமரம், வேலமாமாக இருக்கலாம். அல்லது உபயோகமில்லாத பதராக இருக்கலாம். 


  

ஒரு விதை நல்ல வளமானதாக இருந்தால் மட்டும் போதாது. அந்த விதை நன்றாக வளைந்து பலன் தர வேண்டுமானால் அது புதைகின்ற மண்ணின் வளமும், வளர்வதற்கு நல்ல சீதோசனமும் இருக்கவேண்டும். கூடவே அதற்கு வேண்டியபோது வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி வந்தால் தான் நாம் நினைக்கும் அளவு பலன் தரும். 


  
அதுபோல மாணவன் என்பவன் ஒரு விதை. அவன்  நல்ல மாணவனாக இருந்தால் மட்டும் போதாது. அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்கு பாடம் கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் கல்வி அறிவும், நல்ல பழக்கவழக்கங்களையும், சிறந்த ஒழுக்கத்தையும் தராமல்  கற்றுத் தர வேண்டும். அது விதைக்கு, மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்குச் சமானம். அவ்வாறு ஆசிரியர்கள் நடந்துகொளும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்பட்டு அதன் பலனாக அந்த மரத்திலிருந்து நல்ல கனிகள் கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அதவே சமுதாயத்தில் அரிய பெரிய சாதனைகள் செய்யவல்ல காரியங்களை செய்து முடிக்கச் செய்யும். மாணவனின் செயலை பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம். என்னென்றால் பள்ளி ஆசிரியரிடத்தில் அவனிருப்பது அதிகபட்சம் ஆறு மணி நேரமே. மீதம் பதினெட்டு மணி நேரம் அவன் பெறோர்களின் பாதுகாப்பில் தான் இருக்கிறான். அதாவது பள்ளியில் கற்பதை சரியாக வீட்டில் செய்கிறானா என்பதை பெற்றோர்கள் தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


    

மாணவ பருவத்தில் பெறோர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது 'கைபேசி ' கொண்டு அதிகமாக பேசுகின்றானா? அல்லது எப்பொழுதும் குறுந்தகவல்கள் அனுப்புகிறானா? கணினியில் தேவையற்ற வலைதளத்தை பார்கின்றானா? நண்பர்களுடன் வீண் பேச்சு, சினிமா, பார்ட்டி, ஊர் சுற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றானா? என்பதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். அதேபோல் தவறாமல் வீட்டுப்பாடங்களை படிக்கின்றானா? எழுதுகின்றனா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். அடிக்கடி பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அவனின் கல்வி அறிவையும், திறமைகளையும், நடவடிக்கைகளையும் ஆசிரியர்கள் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

  

ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களிடம் நல்ல முறையில் பழக வேண்டும். அந்த உறவு வரையறுக்கப் பட்ட எல்லைக்குள்ளே தான் இருக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் அதை மீறி தாண்டிவிடக்கூடாது. அது மாணவ மாணவியருக்கும் பொருந்தும். ஒருவேளை வரையறை மீறும்போது அவர்களின் எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் மாறி ஒழுக்கமின்றி போவதற்கு  வாய்ப்பு அதிகமாகின்றது. அதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல், வெட்டி பேச்சுகளிலும், தேவையற்ற செயலில் ஈடுபட்டு பள்ளிக்கும் , வீட்டிற்க்கும் அவபெயரை ஏற்படுத்தும் நிலைமை உண்டாகின்றது. சுருங்கச் சொல்லப்போனால் ஆசிரியர்கள் - மாணவ மாணவியர்களின் உறவு தாமரை இலையில் உள்ள நீர்த்துளிபோல் ஒட்டியும் ஒட்டாதவாறும் இருந்தால் இருவருக்கும் நன்மை தரும்.  அப்படி இருப்பதால்  ஆசிரியர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.  


  

பள்ளி வகுப்பில் மாணவர்கள் அனைவரும் சீருடையில் மட்டும் இருந்தால் மட்டும் போதாது. அவர்களை வழிநடத்தி பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர்களின் எண்ணமும் செயலும் கூட ஒரேமாதிரியாக இருக்கவேண்டும். அதாவது அனைத்து மாணவர்களையும் ஒரேமாதிரியாக நடத்தவேண்டும். எக்காரணம் கொண்டும் சாதி , மொழி, இனம், அந்தஸ்து, உறவு போன்றவற்றிற்கு இடம் கொடுத்து பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது. அவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வியறிவு புகட்டும்போது எல்லோருக்கும் சீராக வழங்கவேண்டும். ஆனால் பின்தங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தியும், ஒரு தடவைக்கு இரு தடவை சொல்லிக் கொடுத்து புரியும்படி செய்ய வேண்டும்.


  

அதிலும் குறிப்பாக 'ஹாஸ்டலில்' தங்கி படிக்கும் மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் தனிக்கவனம் கொண்டு பாடங்களை கற்றுக்கொடுப்பது அவசியம். அவர்களுக்கு பெற்றோர்களின் நினைவு வராமல் இருக்க ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர்களின் ஸ்தானத்தில் இருந்துகொண்டு அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தும் தரவேண்டும். அதனால் கூட சில மாணவர்கள் நல்ல திறமைகள் இருந்தும் அவர்களால் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதை ஆசியர்கள் புரிந்து கொண்டு, அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு செயல்படும்போது அவர்களுக்கு ஏற்படும் தோல்விகளை யும், தீய சிந்தனைகளையும் தடுக்கலாம். இத்தகைய கவன மிகுதியால் அம்மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதுடன் பள்ளிக்கு நல்ல பெயரையும் தேடி தருவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


  

ஆசிரியர்கள் வகுப்பில் நுழைகின்ற போது எப்பொழுதும் புன்னகையுடனும் பாடங்களை சொல்லித் தரும் ஆர்வத்துடன் மற்றும் அக்கறையுடனும் நடந்துகொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு நுழையும்போதே கடுகடுப்பான முகத்துடனும், கோபத்துடனும் இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் தாங்கள் அனைவருக்கும் கல்விச் சேவை செய்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் மாணவர்களிடத்தில் ஏதேனும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அவர்களை கடுமையான விதத்தில் நடந்துகொள்வதோ, தகாத சொல்லில் விமர்சிப்பதோ, அடிப்பதோ, அசிங்கப் படுத்துவதோ , தண்டிப்பதோ அறவே கூடாது. மேலும் கண்டிப்பினால் சாதிப்பதைக் காட்டிலும் அன்பினால் தான் அதிகம் சாதிக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதுவே நிரந்தரமான தீர்வும் கூட. கடுமையான தண்டிப்பினால் வீண் பிரச்சனைகள் ஏற்படும்  சுமூகமான உறவும் கெடுவதற்கும் வாய்ப்புகள் நிறைய உண்டு.


  

அப்படி ஒருவேளை ஒரு மாணவன் தவறு செய்தவனாக இருந்தாலும் அவனை பல மாணவர்களுக்கு முன் நேரடியாக கண்டிப்பதை தவிர்த்து , அவனை தனியாக அழைத்து அவர்களுக்கு புரியும்படியாக அறிவுரை வழங்கவேண்டும். இதனால் அம்மாணவனுக்கு தன் மேல் ஆசிரியர் காட்டும் அக்கறையை நினைத்து அவன் திருந்துவதோடு அந்த ஆசிரியரின் மேல் அதிக பற்றும் , மரியாதையும் உண்டாக்கச் செய்யும் . அந்த அறிவுரை எப்படி இருக்கவேண்டுமென்றால், இப்போது கற்கும் கல்வியும், பெறுகின்ற அறிவும் அவனுக்குள் இருக்கும் ஆற்றலும் திறமை வெளிக்கொண்டுவருவதோடு வருங்கால வாழ்கையில் பல வெற்றி அடைவதற்கு உதவும் என்பதை எடுத்துரைக்க வேண்டும். மேலும் இளம் வயதில் கல்வி கற்பது எளிது என்றும் அவசியமானது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அதன் மூலம் பெரிய பொறுப்புகள் வகிக்கும் உயர் பதவி அடைவதற்கும், தலைவராவதற்கும், தொழிலதிபராவதற்கும் உதவிகள் செய்யும் என்பதை நம்பிக்கையூட்ட வேண்டும்.


 

எல்லா மாணவர்களுக்கும் இயற்கையிலே அவர்களது மூளையில் அறிவும் ஆற்றலும் பெரிய அளவில் பொக்கிஷம் போல் புதைந்து இருக்கின்றது. அதை வெளியே கொண்டுவரும் வழி வகைகளை  ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி, நல்ல மனப்பாங்கு ஆகியவற்றை விருத்தி செய்வதற்கான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். அதற்கு உதாரணமாக பல தலைவர்கள், மன்னர்கள், சாதனை மற்றும் வெற்றியாளர்களின் சரித்திரங்களை பாடங்களுக்கு மத்தியில் சொல்லவேண்டும். அதன் மூலம் அவர்கள் ஊக்கமடைந்து ஆக்கபூர்வமான செயலில் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் அவர்களின் தனித்திறமை வெளிப்படும். ஒருபோதும் அவர்களுக்குள் எதிமறை எண்ணங்களை விதைக்கவே கூடாது. 'உன்னால் எதையும் செய்ய முடியும் ' என்றும் 'வெற்றி அடைய முடியும்' என்கிற நேர்மறை எண்ணங்களை வளர்க்கவேண்டும்.

 

ஆசிரியர்களின் ஒவ்வொரு சொல்லும் மாணவனுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கவேண்டும். வாரம் அல்லது மாதம் ஒரு முறை மாணவர்களுக்கு கணினி மூலமாகவோ அல்லது 'ஓவர் ஹெட் புரொஜெக்டர்' துணையுடனோ அறிவுக்கு வேலை தரும் செய்முறை பயிற்சிகளையும், கல்வியறிவு பட்டறை வகுப்புகளை தவறாது நடத்தவேண்டும்.


  

ஆசிரியர்கள் மாணவனின் முன்னேற்றத்திற்கு திசைகாட்டும் கருவி. மாணவனுக்கு பல திசைகளில் வாய்ப்புகள் இருப்பதையும், அவரவர்களின் கல்வி தகுதி, திறமை பொறுத்து கிடைக்கும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

  

மாணவர்கள் பயப்படும்படியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ளக் கூடாது. மிரட்டும் தோரணையில் மரியாதை பெறக்கூடாது. ஆசிரியருக்கும், மாணவனுக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாகவும், கல்வியறிவு கொடுக்கும் பாலமாகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சந்தேகம் வருவது இயல்பே. அதை பொறுப்புடனும், பொறுமையுடனும் தீர்க்க வேண்டும். மாணவர்களைப் பொருத்தமட்டில் ஆசிரியர்களே அவர்களின் கனவு கதாநாயகர்கள். அவனுக்குள் 'ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும், எல்லா சந்தேகங்களை தீர்த்துவிடுவார்கள்' என்கிற அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதை மெய்யாக்கும் வண்ணம் ஆசிரியர்கள் செயல்படுத்திக் காட்டவேண்டும்.


 

மாணவனின் குறைகள் அல்லது சந்தேகங்களை ஆசிரியர்கள் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னேயோ, பள்ளிவிட்ட பின்போ, மதிய உணவு இடைவேளையிலோ தீர்ப்பதற்கு  நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். அதனால் மாணவனுக்கு ஆசிரியரிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படும். அந்த ஆசிரியரையே அவன் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழ்கையில் முன்னேறுவதற்கு ஏதுவாக இருக்கும்.


    

மாணவனின் கருத்துகள் சுதந்திரமாகவும், உரிமையாகவும் வெளியே வரும்போது தான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படுத்த வழி செய்யும். நாளடைவில் அந்த சிந்தனை மனதில் பதிந்து, அந்த கனவு அவனின் குறிகோளாக மாறி, எண்ணங்களாக பின் செயலாக உருவாகி பலருக்கு நன்மை தரச் செய்யும். ஆகவே ஆசிரியர்கள் அவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டு அது நல்லதாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்தல் அவசியம். அவ்வாறு ஆசிரியர்கள் செய்தால் அந்த உதவியை மாணவன் தன வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டான்.


   

ஆரம்பத்தில் மாணவன் வாழ்கையில் ஒருவித குறிக்கோளுமில்லாமல் தெளில்லாத கரடு முரடான பாறைக்குச் சமமாவான். ஆசிரியர்களால் தான் அவற்றை அழகான முறையில் செதுக்கி எல்லோராலும் போற்றப்படும் அல்லது வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கமுடியும். அதற்கு ஆசிரியர்களின் இடைவிடாது முயற்சியினால் அறிவு என்கிற உளியைக் கொண்டு மாணவனைக் கொண்டு நல்ல கல்விச் சிலையை செதுக்க முடியும். அதுவும் கவனமாகவும் பிசிறு இல்லாமலும் செதுக்கவேண்டும். மாணவனுக்கு கிடைக்கும் பள்ளி வாழ்க்கை என்பது ஒரே ஒரு தடவை தான். அதை அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைந்த அளவோ செதுக்கினால் நினைத்த சிலையின் வடிவம் கிடைக்காது. செதுக்கிய கற்களை ஒட்ட வைக்கவோ அல்லது தவறான சிலையை அழித்து வேறு புது சிலையைப் படைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.


    

மாணவனில் கல்விப் பயணம் என்பது கிட்டத்தட்ட இரயில் பயணம் போலத் தான். தான் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி மீண்டும் வேறொரு இரயில் பிடித்து பயணத்தை தொடர்ந்து தான் கொண்டுள்ள கடைசி குறிக்கோள் அடையும்வரை பயணம் செய்வதுபோல ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி இன்னும் அதிகமாக என்று தன்னுடைய லட்சியம் அடையும் வரை அவனின் கல்வி பயணம் தொடர்கிறது.


    

செல்லத்தக்க நாணயம் ஒரு பக்கம் தலையும், மறு பக்கம் பூவும் சரியாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும். இங்கு தலைப் பக்கம் என்பது ஆசிரியர்களைக் குறிக்கும். அவர்கள் மாணவனின் முன்னேற்றத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றுக்கொண்டு அதற்குத் தக்கவாறு கவனமாக அவர்களைச் செதுக்க வேண்டும். பூ வின் பக்கம் தான் மாணவன். அதில்  மாணவனின் மதிப்பு அடங்கியுள்ளது. தலை சரியாயிருந்து பூ சரியில்லை என்றாலும், பூ சரியாயிருந்து தலை சரியில்லை என்றாலும் அந்த நாணயம் செல்லத்தகாத நாணயமாகும்..


    

ஆசிரியர்கள் , மக்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்கள் என்கிற மரியாதை உண்டு. அவர்களின் கடமை சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்குத் தருவது. அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி சில மாணவர்களுக்கு அதிக சலுகையும், மற்ற மாணவர்களுக்கு சராசரியாகவும் நடந்துகொள்ளுதல் கூடாது. நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகள் ஆசிரியர்களின் மூலமாக தான் மாணவர்களுக்கு சேரும். அதில் எவ்வித தவறான வழிகாட்டுதலும் இருத்தல் கூடாது.


 

மாணவர்கள் குறைந்தபட்சம் ஐந்து பாடங்களை கற்க்கின்றனர் . அனைத்து பாடங்களும் முக்கியம் என்பதை மாணவர்களின் மனதில் ஏற்ற வேண்டும்.  சில ஆசிரியர்கள் 'என் பாடம் தான் படிக்கவேண்டும் ' என்று மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வீட்டுப் பாடங்களை கொடுப்பது, பரீட்சை வைப்பது, பாடங்களை படித்து வரச் சொல்வது போன்றவை கூடவே கூடாது. ஆசிரியர்கள் நான், எனது என்று ஈகோ பார்க்கவே கூடாது. சில ஆசிரியர்கள் முதலில் மெதுவாக பாடங்களை நடத்தி  பரீட்சை நெருங்க நெருங்க வேக வேகமாக பாடங்களை நடத்தி விடுகின்றனர். அதனால் மாணவர்கள் ஒரே நேரத்தில் அதிக பாடங்களை படிக்கும்படியும், அவர்கள் புரிந்தோ புரியாமலோ படித்து வருகின்றனர். அவ்வாறு செய்வதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். பாடங்களை திட்டமிட்டு சீரான வேகத்துடன் பாடங்களை நடத்த வேண்டும். நடத்தும்போதே மாணவர்களின் மனதில் பதியச் செய்துவிட வேண்டும்.


    

ஆசிரியர்கள் மாணவர்களின் உள் வாங்கும் திறமையும், அவர்களின் தகுதிக்கேற்ப ஆசிரியர்கள் பாடங்களை சொல்லித் தருதல் அவசியம். திரைப்படத்தில், திரைப்பட பாடல்களில் வரும் நல்ல வரிகளை படிக்கச் செய்தால் அவர்கள் ஆர்வத்துடன் பின்பற்றுவார்கள். மேலும் நல்ல செய்திகளையும், விழிப்புணர்வு வாசகங்களை படிக்க வைத்தல் நன்மை தரும். மனப்பாடம் செய்து படிப்பதை விட புரிந்துகொண்டு படிக்கவைக்க வேண்டும். அதுபோல் பிரச்சனைகளை சமாளிக்கும் முறையினையும், ஏதாவது உபயோகமுள்ள ஒரு கைத்தொழிலை கற்றுக்கொடுத்தல் அவசியம்.


   

கல்வி சொத்து என்பது அள்ள அள்ள குறையாது. கொடுக்க கொடுக்க வளர்வது என்பதால் அதை மாணவர்களுக்கு தாரளமாக வழங்குதல் நன்மை தரும். எக்காரணம் கொண்டும் அதை வியாபாரமாக்கக் கூடாது. கல்வி எளியோரை உயர்த்தும் ஒரு நெம்புகோல். அதைச் செய்வது சமூகத் தொண்டு செய்வதற்க்குச் சமம். காசை வாங்கிக்கொண்டு கல்வி புகட்டுவது என்பது பணத்தை வாங்கிக்கொண்டு தாய்ப் பால் கொடுப்பதற்க்குச் சமம். ஒருவகையில் கல்விக்கு துரோகம் செய்வதாகும். 


  

கல்வி கற்றுக்கொடுத்து புரியவைத்தல் என்பது ஒரே இரவில் சாதனை செய்கின்ற விஷயம் இல்லை. படிப்படியாக, சிறுக சிறுக சாப்பிடுவதற்கு இணையாகும். ஒரே நேரத்தில் அதிக சாப்பாட்டை சாப்பிட முடியுமா? முடியாதல்லவா? மாணவர்களுக்கு அவர்கள் போக்கில் சென்று நகைச்சுவையுடனும், நடிப்புடனும் பாடம் நடத்தினால் அவர்கள் எளிதில் புரியும்.


  

மாணவனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவிக்க வேண்டும். அவர்களின் குடும்ப பின்னணியை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு அவர்களுக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்த்தவேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் துணையாய் இருக்க வேண்டும். அவர்கள் அடையும் வெற்றி வீட்டிற்கும், பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை தேடித் தரும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

                           

'கனவு காணுங்கள்' என்றவரும் வரும் '2020 ம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வல்லரசு நாடாக விளங்கும் ' என்றவருமான திரு அப்துல் கலாம் என்கிற தலை சிறந்த அணு விஞ்ஞானி, பிரகாசமான மாணவனுமாய் இருந்து பிறகு பெருமைக்குரிய ஆசிரியருமாய் இருந்து நாடுபோற்றும் விஞ்ஞானியாய் பணி செய்து உலகம் போற்றும் ஜனாதிபதியாய் கடமை செய்தும் அதன் பிறகு இன்றும் இளைஞர் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் ஆசிரியராய், சமூக சேவகராய் தன்னை அர்ப்பணம் செய்துவரும் அந்த மாமனிதனை மாணவர்கள், ஆசிரியர்கள் முன்மாதிரியாய் வைத்து பணியாற்றினால் வருங்கால இந்தியா நிச்சயமாக உலகில் ஒரு வல்லரசாக மாறுவதோடில்லாமல் நல்லரசாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.   


  

மாணவர்களுக்கு தொலைநோக்கு பார்வையை பார்க்க கற்று கொடுத்தும், அவர்களின் திறமைக்கேற்ப ஒரு குறிக்கோளை உண்டாக்கியும் அதை இடைவிடாது பின்பற்றச் செய்தும் , அதற்கு உதவியும், சூழ்நிலைகளையும், வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். இவைகள் ஆசிரிகளின் அர்ப்பணிப்பு மூலம் தான் வரும்.   


 

ஒரே மாதிரியான கிணற்றுத் தவளை அறிவையோ அல்லது செக்கு மாட்டு அறிவையோ அதாவது டாக்டர் மற்றும் இன்ஜீனியர் தவிர வேறு எதுவுமே சிந்திப்பதில்லை. அதை முதலில் மாணவனின் மனதிலிருந்து அகற்றி அதுபோல் இன்னமும் நிறைய படிப்புகள் இருப்பதையும், அதற்கு நிறைய வாய்ப்புகள்  உள்ளதையும் எடுத்துக் கூறவேண்டும். முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சிக்கத் தவறக்கூடாது என்கிற விடாமுயற்சி தத்துவத்தை போதிக்க வேண்டும். உடலுக்கு மனதிற்கு ஆரோக்கியம் தரும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சியையும் கற்றுத் தரவேண்டும். அது மாணவனை எப்போதும் மன அழுத்தத்தை போக்கியும், எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.
   
மாணவர்களின் படைப்புகளை, கருத்துக்களை கேலி செய்து விமர்சிக்காமல் அதை மேலும் மெருகேற்ற உதவ வேண்டும். அதாவது கற்றுக்குட்டி சமையலை உப்பு, புளி கொண்டு சரி செய்து ருசியை கூட்டுவது போல் மாணவனுக்கு வழிகாட்டவேண்டும். அவன் கண் போன போக்கிலே மனம் போகாமல் பாசக்கயிறு கொண்டு கட்டிவிடவேண்டும். 


 

ஆசிரியர்கள் , வாகனங்கள் கடக்கும்  சாலையாக இருப்பதை விட இரயில் பாதையின் தண்டவாளமாக இருப்பதே நல்லது. ஏனெனில் சாலை எவ்வளவு நன்றாக இருந்தாலும் வாகனம் ஓட்டுபவர் கவனமாக ஓட்டினால் தான் எவ்வித சேதமில்லாமல் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சாலை விபத்துக்கள் கவனக்குறைவினால் அதிகமாகவே ஏற்படுகின்றன. அதாவது ஆசிரியர்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் மாணவர்கள் கவனமின்றி இருக்கும்போது அவர்களுக்கு கட்டாயம் வழிகாட்டியாகவும், வழி நடத்திச் செல்பவர்களாகவும் இருத்தல் அவசியம்.


  

அதாவது இரயில் பாதையில் மேல் இரயில் ஓடும்போது பெரும்பாலும் இரயில் தடம் புரளுவதில்லை. ஏனென்றால் இரயில் பாதை வழி காட்டுவது மட்டுமில்லாமல் அதை அங்கே இங்கே தவறாக நகர்ந்து விடாமல் சரியான முறையில் கடப்பதற்கும் உதவி செய்கின்றது. ஆனால் அதற்கு இரயில் பாதை எவ்வித சேதமில்லாமல் இருந்தால் தான் நல்லது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருத்தல் மிகவும் அவசியம். அவர்களை குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்களாக மாற்றுவதில் தான் ஆசிரியர்களின் திறமை இருக்கின்றது.


   

மாணவனுக்கு நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை போன்றவைகளை வளர்க்கத் தவறக் கூடாது. வயதிற்கும், கல்விக்கும் மரியாதை தரவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். பெற்றோர்களிடம் மாணவனின் தவறுகளை சுட்டிக்காட்டி இளமனதை புண்படுத்தாமல் அவர்களிடம் இருக்கும் நல்லபண்புகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை ஏற்படுத்தவேண்டும். இதன் மூலம் மாணவனுக்கு ஆசிரியரிடமுள்ள நன்பகத்தன்மை அதிகமாகும். போட்டி, பொறாமை வேரறுத்து, அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, ஒற்றுமை, தலைமை பண்பு, அன்பு, தியாக மனப்பான்மையை வளர்க்கவேண்டும். 


   

ஆகவே நல்ல பேரை வாங்கவேண்டும் மாணவர்களே ! இந்த நாடு என்னும் தோட்டத்தில் அவர்கள் நாளை மாறும் முல்லைகள்  


 

நல்ல நல்ல மாணவர்களை நம்பி வீடு இருக்கின்றது, நாடும் உலகமும் இருக்கின்றது.

     

நன்றி 
                         
வணக்கம் 
    
முற்றும்