26/07/2026 மாமதுரைக் கவிஞர் பேரவை
சிந்தனைக் கவியரங்கம் 48
தலைப்பு : வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்
மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார். துணைச் செயலர் கு.கி. கங்காதரன் நன்றி கூறினார்.
கவிஞர்கள் இரா.இரவி, இரா.கல்யாணசுந்தரம், இரா.வரதராஜன், கு.கி.கங்காதரன், கி.கோ.குறளடியான், சுந்தரம்பாண்டி, பால் பேரின்பநாதன், முனியாண்டி, அஞ்சூர்யா செயராமன், மு, இதயத்துல்லா, சோ.தமிழன்பன், பா.பொன்பாண்டி, பா.பழனி, சு.பாலகிருஷ்ணன், மா.வீரபாகு, மதுரை மைந்தன், கவிதாயினிகள் அனுராதா, லிங்கம்மாள், சாந்தி ஆகியோர் கவிதை படித்தனர்.
பேராசிரியர் சி.சக்திவேல் எழுதிய 'இவர்களோடு நான்', கவிஞர் கு.பால் பேரின்பநாதன் எழுதிய 'சமுதாய கண்ணாடி', முனைவர் இரா.வரதாராஜன் எழுதிய 'கட்டங்குடி ஸ்ரீமத் மௌனகுரு சுவாமிகள் வரலாறு' என மொத்தம் மூன்று நூல்கள் வெளியிட்டனர்.
நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து 'கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் விருது' வழங்கினர். சிறப்பாக கவிதை பாடிய தமிழன்பன், இதயத்துல்லா இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டன.
பார்வையாளர்களாக கவிஞர்கள் அரங்க கிரிதரன், பரந்தாமன், சந்தனசெல்வி, தனசிங், மோகனக் கண்ணன் மற்றும் கவிஞர் பால் பேரின்பநாதன் அவர்களின் குடும்பத்தினர், சுகந்தி ஸ்டான்லி, அன்புநாதன் சாமுவேல் ஸ்டான்லி, ஜெமிமா ஸ்டான்லி, ஜெஃப்ரி ஸ்டான்லி, பத்திரிக்கையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாதாமாதம் கவியரங்கம் நடத்துவதற்கு பள்ளியைத் தந்து உதவும் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பா.வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் அனைவரும் நன்றி கூறினார்கள்.
புகைப்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கைவண்ணம்.
*********
நன்றி தினமலர் ஜூலை 28ம் தேதி 2026






வரலாற்று வானத்தில் வலம்வரும் தமிழ் :- (26. 7. ‘26)
பந்தத்துடன் இந்தச்சிறு மன்றத்தினில் வந்தவர்க்கு
சந்தக்கவி ஒன்றைத்தர சிந்தைக்குள் சிந்தித்தேன்
எந்தக்கவி இந்தக்கணம் சந்தத்துடன் பொங்குமென
சிந்திக்கையில் விந்தையுடன் வந்ததொரு இன்பக்கவி
அந்திக்குயில் முந்திவந்து சந்தவொலி தந்திடனும்.
முத்தைத்தரு பத்தித்திரு வித்தைப்படி மெட்டுக்கு
நத்தையெனப் புத்தியிடை சித்தமுடன் கட்டமைக்க
தத்தித்தான் எச்சரிக்கை தந்திட்டேன் உத்தமமாய்
நித்திலமெனப் பட்டிடவே உத்தியுடன் பற்றுகிறேன்
தத்துவமாய்ச் செப்புகிறேன் அத்தைமடி பக்குவமாய்.
உச்சத்திலே நிற்கின்றதும் உச்சிவான் தொட்டதுவும்
அச்சத்தினைத் துச்சமென அக்கரையில் இட்டதுவும்
நிச்சயித்த திட்டப்படி நெத்தியடி விட்டதுவும்
இச்சகத்தில் சத்தியமாய் மொத்தமாய் எந்தமிழே
கச்சிதமாய்க் கப்பலினைக் கரையமர்த்தும் செந்தமிழே.
வரலாற்று வானத்தில் வலம்வரும் தமிழின்று
தரமாக உலகெங்கும் தடம்காட்டும் சிறப்பிருக்க
கரம்தூக்கிப் பிறமொழியார் கனவுகளைத் தகர்த்திடவும்
சரமாகக் கோர்த்தளிக்கும் சங்கதிகளை அடுக்கிடவும்
உரமேற்றி நம்மொழியை உலகெங்கும் பரப்பிடலாம்.
வரலாற்றைப் புரட்டிப்பார் வந்தவழி திரும்பிப்பார்
தரமிழந்த மொழிகளையே தலைநிமிரும் வழியடைத்து
முரசொலிக்க பறைமுழங்க முதுகொடிக்கும் இரும்புக்கரம்
சிறகடித்துப் பறக்கின்ற செருக்குநிறை தமிழ்மொழியை
அரவணைத்து நடக்கின்ற அருங்கலையை உயர்த்திடுவோம்.
*முனைவர் இரா. வரதராசன், துணைத் தலைவர்
மாமதுரை கவிஞர் பேரவை
(998421 64978)
**********
வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்!
- கவிஞர் இரா. இரவி
*****
மொழிகளின் வரலாற்றில் தமிழுக்கு தனி இடமுண்டு
மொழிகளின் தாய்மொழி தமிழ் தரணி அறியும்!
ஓர்எழுத்து சொற்கள் பல உண்டு தமிழில்
ஓர் எழுத்து மாறினால் பொருள் மாறும்!
பழங்காலந் தொட்டே பட்டிமன்றம் கண்ட தமிழ்
பார் போற்றும் புகழ் மிக்க மொழி தமிழ்!
இலக்கியங்களின் களஞ்சியமாகத் திகழும் தமிழ்
இனிய காப்பியங்கள் நிறைந்திட்ட தமிழ்!
இணையத்தில் சிறந்திட்ட மொழி தமிழ்
இளைஞர்கள் விரும்பிடும் மொழி தமிழ்!
அருமை பெருமை மிக்க மொழி தமிழ்
ஆன்றோர் சான்றோர் வளர்த்த மொழி தமிழ்!
சங்கம் வைத்து வளர்த்திட்ட மொழி தமிழ்
சங்கநாதம் முழங்குவோம்! தமிழ் முதல்மொழி
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்
உலகநாடுகள் பலவற்றில் ஆட்சிமொழி தமிழ்!
உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்
உலகமே வியந்திடும் திருக்குறளின் மொழி தமிழ்!
அறம் பொருள் இன்பம் பாடிய திருக்குறள் தமிழ்
அறத்தை உலகிற்கு போதித்து சிறந்த தமிழ்!
வீரத்தை உலகிற்கு உணர்த்திட்ட மொழி தமிழ்
வீரத்திற்கு போருக்கு இலக்கணம் வகுத்த தமிழ்!
வளங்கள் யாவும் தன்னகத்தே உள்ள தமிழ்
வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்!
••••••















*வரலாற்று வானிலே வலம் வரும் தமிழே*
வரலாற்று வானிலே வலம்வரும் தமிழே
வையத்தின் விடிவெள்ளி
வாழிய தமிழே
சுயம்புவாய் தோன்றிய சுடர்மொழி நீயே
சூழுலகுத் தாயென சொல்லொளி நீயே
தொல்காப்பியத் தோன்றல் தொன்மையின் சான்றே
தோல்வியற் றோங்கிய தோகைமணி நீயே
எட்டுத்தொகை ஏந்திய எழில்மிகு வானம்
பத்துப்பாட் டுபரப்பிய பண்புடைத் கானம்
திருக்குறள் தீபமாய் திசையெலாம் எரியும்
திருமறைச் செல்வமாய் மனிதநேயம் வளரும்
ஐந்திணை வகுத்த அறிவுடைத் தமிழன்
அகம்புறம் பகுத்த
அரும்பெரும் முனிவன்
கீழடி மண்ணினில் கிளர்ந்தெழும் சான்றே
கீழ்வான நட்சத்திரம் கீர்த்தியின் முத்தே
கல்லணை கூறிடும் காலம்வெல் ஞானம்
காவிரி பாடிடும் கரிகால்ச் செம்மை
கடல்கடந்து சென்ற கலங்களின் மொழியே
ரோமரும் வணங்கிய வாணிகத் தமிழே
சித்தர்கள் செப்பிய செம்மை மருத் துவமே
சிந்தையின் ஒளியென செழித்தநல் தமிழே
வானியல் வீதியை வகுத்தமுன் னோர்கள்
வாழ்வியல் வேதமாய் வளர்த்தது தமிழே
ழகரம் ஒலிக்கும் / அழகின்தாய் மொழியே
உலகெலாம் போற்றிடும் உயிர்மூச்சு தமிழே
, ந. சுந்தரம் பாண்டி
மதுரை
********



*வரலாற்று* *வானத்தில்*
*வலம் வரும் தமிழ்*
வந்த வழி சொல்லும்
*வரலாறு!*
தந்த மொழி செல்லும்
*தமிழாறு* !
(2)
பேசும் மொழியால்
*பிறந்த தமிழினம்*
வாழும் வழியால்
*சிறந்த* *தமிழினம்*
(4)
கல் தோன்றா
மண் தோன்றா
காலத்தே முன்
தோன்றிய *குடி*
சொல் தோன்றா
பொருள் தோன்றா
ஓசை யொலியால்
உருவான *தமிழ்* (8))
*உலகம் யாவையும்*
*தாமுள வாக்கலும்*
புலம் பெயர்ந்த
தமிழர் வாக்கிலும்
வலம் வந்த
தமிழர் வாழ்விலும்
*நலம் பயக்கும்*
நம் மொழியாம் *நற்றமிழ்* !
(12)
பேசு தமிழ் ( இயல்)
*பால் அமுதம்*
பாடு தமிழ்( இசை )
*தேன் அமுதம்*
நாடு தமிழ் ( நாடகம் )
*வீட்டமுதம்*
கூடு தமிழ் மூன்று
*கூட்டமுதம்*
(16)
*வான் வலம் வரும்* *கோள்கள்* யாவும்
தான் சுழன்று சுற்றும் பாதையில்
மாறுமோ ?
*வான் புகழ்* வள்ளுவன் தமிழ்
தான் *தன்னிலை* *மாறுமோ* ?
(20)
இன்றுள தமிழர் நன்று வாழ
நன்றியுடன்
*நல்ல தமிழ்*
நாளும் பேசிட
*மன்னு தமிழ்* *மாண்புற வாழ்க!*
மதிப்புயர
*வாழ்வோம்*
(24)
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி*
பெங்களூர்
*25.07.2026*
*தமிழின் சிறப்பு*
மன்னுதமிழ்' என்பது நிலைபெற்ற, சிறப்பான தமிழ்மொழியைக் குறிக்கும் சொல் ஆகும். இது காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் நமது செம்மொழித் தமிழின் பெருமையைப் பேசும் இலக்கியச் சொல்லாடலாகும்.
**************
வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்
வா இளைஞனே! வருங்காலக் கலைஞனே!
வந்து பார் வரலாற்று வானத்தை!-அதில்
வலம் வரும் சங்கத் தமிழ்ச் சந்தத்தை
வளந்தருந் தங்கத் தமிழ்க் கோலத்தை !
பரிதி எனுந் தேரேறிப் பாரதிர வருகிறான்
பார் பாரதி வறட்சிநீக்கி வளமாக்கிட -வானத்தைப்
புரட்சியால் புதுப்பிக்கிறான் பார் புதுவை பாரதிதாசன்
முழங்கும் இடியோசையெல்லாம்- அவன்
வழங்கும் வெடிப் பாக்களன்றோ !
கரும்பினிய கம்பராமாயணம்
கற்பிற் கணியாம் காலணி சிலம்பைக்
கையில் ஏந்திய செந்தமிழ்ச் சிறப்பும்
அருந்தமிழ்ச் சிறப்பைச் செப்பிடும்
பெரும்புகழ்க் குறுங்குறளும்
பின்னிப்பிணைந்து தீட்டிய நீல
வண்ணக் கூறையை வந்திங்கு பார் நீ !
வட்ட நிலா மெட்டுப்பாடி வாலியைத் தேடிப் போனவளை எங்கே காணவில்லை என ஏங்கி
வானவில்லங்கே வளைந்து தேடுது பார் !
ஓடிவரும் மேகம் எல்லாம் பாடுது பார்!
பட்டுக்கோட்டையை
தேடுதுபார் கண்ணதாசனைப் பாடுநீயும்
வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழே நீ
வாழிய வாழிய வாழியவென்றே!
சமுகி
அனுப்புபவர்
**********
வரலாறு வானத்தில்
வலம் வரும் தமிழ்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
காலத்தையும் வெல்லும் தமிழின் வரலாறு
கன்னித்தமிழின் வயது என்றும் பதினாறு
இயற்கைச் சீற்றங்களாலும் சிதையாதச் செந்தமிழ்
அந்நிய மொழிகளாலும் அழியாதத் அருந்தமிழ்
அகண்ட வானம் இடியோசைகளுக்கு அஞ்சிடாது
அன்னைத் தமிழும் எம்மொழிக்கும் கெஞ்சிடாது
வானத்தை வளைக்க எவராலும் முடியாது
வண்டமிழை நசுக்க எக்காலமும் நடக்காது
தமிழினத்திற்கு தந்ததே நற்றமிழ் அதிகாரம்
தமிழுக்கு கிடைத்த செம்மொழி அங்கிகாரம்
காலச்சுவட்டில் தொய்வில்லாமல் தொடரும் முத்தமிழ்
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டும் கொடைத்தமிழ்
வரலாற்றில் காலாவதியான பற்பல அந்நிய மொழிகள்
வெற்றிவாகையுடன் காவியமாய் வாழும் தமிழ்மொழி
தோண்டத்தோண்ட நீளுகின்றது தமிழினத்தின் வரலாறு
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த பழமைபொருட்களேச் சான்று
ஒலி பிறந்தபோதே உருவான தமிழ்ச் சொற்கள்
உலகம் சுற்றும் வரை எக்காலமும் வலம் வரும் தமிழ்
வானத்தின் நீளமும் அகலமும் கற்பனையைக் கடந்தது
வரலாற்றில் தமிழின் முதலும் முடிவும் தமிழரைப் பொறுத்தது.
**********
***********************************************