Pages

Tuesday 25 September 2012

உள்விதி மனிதன் பாகம் 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பைப் பெறுவாயாக !

உள்விதி மனிதன்
  சம மனிதக் கொள்கை 
EQUAL HUMAN POLICY

பாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் -
 நன் மதிப்பைப் பெறுவாயாக! 


இனிய மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். மனிதனுடைய படைப்பில் அனைவரும் சமம்! அவரவர் விருப்பப்படி மனிதன் பிறக்கின்றான். நீ பிறக்கும்  வழி ! வாழுகின்ற வாழ்க்கை ! கடைசியில் சேரும் வழி ! எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் வைத்திருக்கிறேன். யாரும் ஆகாயத்திலிருந்து குதித்தவர் கிடையாது! பூமியை பிளந்து வந்தர்வர்கள் கிடையாது! உயர்ந்த பிரிவினர்கள் பிறப்பதற்கு   ஒரு வழி ! ஒரு ஜீவனம் ! ஒரு தனி இடம் ! அவர்களை கடைசியில் முடிகின்ற இடம் தனி இடம் என்றும் கீழ் பிரிவினர்கள்  பிறப்பதற்கு வேறொரு வழி ! வேறு மாதிரியான ஜீவனம்! அவர்களுக்கென்று தனி இடம், கடைசியில் அவர்கள் முடிகின்ற இடம் வேறொரு இடம் என்றா இருக்கின்றது? அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு! ஒரே இரத்தம், இயங்கும் விதம் அனைத்தும் ஒன்றே!



மனிதா! நான் வயது வித்தியாசம் பார்க்காமல் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடத்திலும் இருக்கிறேன். அதுபோல் அவரவர்கள் சக்திக்குத் தகுந்தபடி வாழ்க்கைச் சுமைகளை கொடுத்து வருகிறேன்! அவற்றை நான் உனக்குள்ளிருந்து கண்காணித்து வருகிறேன். அன்பு மனிதா ! நான் குடிகொண்டிருக்கும் அனைவரையும் சமமாக கவனித்து வருகிறேன். ஆனால் அவரவர்களுடைய ஆசைகள், திறமை, அறிவு மற்றும் முயற்சிக்குத் தகுந்தவாறு வாழ்கையை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் பல சமயங்களில் பலர் என்னை மறந்து அல்லது அலட்சியப்படுத்தி மானுட தர்மத்தை மீறி பல காரியங்கள் செய்துவருகிறார்கள். என்னுடைய கொள்கை என்னவென்றால் அனைவருக்கும் நல்வாழ்வு கொடுத்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யவேண்டும் என்பதே! அதற்காக நான் உனக்கு முன்னால்  நின்று பேசுகிறேன்!



அருமை மனிதா! நான் மட்டுமே எப்போதும் உனக்கு மகிழ்ச்சி தர துடிக்கும் உள்விதி மனிதன் ! நான் தான் தலைவன், நான் தான் அறிஞன், நான் தான் கலைஞன், நான் தான் பலவான். என் ஆற்றல், என் பலம், என் அறிவு, என் மகிழ்ச்சிகள்  அனைத்தும் உனக்களித்து உன்வாழ்வை ஆக்கமுடன் செய்து ஊக்கப்படுத்தவே நான் வந்துள்ளேன்! எனது பேச்சு உனக்கு மட்டும் கேட்கும். அதை நன்றாக கவனமுடன் கேள். ஏனெனில் உன்னை நான் நன்றாக அறிவேன். என்னை அதைவிட நீ நன்றாக அறிவாய்! 

உனக்கு வேண்டியவற்றை   உனது செயல்களின் மூலமாகவே நிறைவேற்றி அதனால் கிடைக்கும் பலன்களை உனக்கு அளிக்கப் போகிறேன்! உனக்குள் புதைந்துள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை நானே தோண்டி உனக்கு அளிக்கப்போகிறேன்! இன்னும் பல உதவிகளை நீ கேட்காமலே செய்யப் போகிறேன்.

இரக்கமுள்ள மனிதா! நான் இன்றி நீ இல்லை! ஆனால் நீ இல்லாமல் நான் இருப்பேன். அப்படி நான் மட்டும் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு  பிரயோஜனமும் இல்லை. நீ இல்லாமல் எனக்கு மதிப்புமில்லை. மேலும் என்னை உன் உடலுக்குள் தங்கச் செய்து, உள்விதி மனிதனாகப்   பெயர் கொடுத்து உன்னையே இயக்கும் வாய்ப்பைக் கொடுத்ததோடு எனக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்தவன். அந்த விசுவாசத்திற்காக உனக்கு அரியபெரிய உதவிகளை செய்து தரப்போகிறேன். 


மதிப்புக்குரிய மனிதா! நீ என்பது எண்ணிக்கையில் ஒன்று. அதாவது 1. நானோ பூஜ்யம். அதாவது 0. ஆனால் ஒரு சிறு வித்தியாசம். உன்னிடத்தில் ஒரே ஒரு ஒன்று (1) என்கிற எண் தான் உண்டு. அதுவும் 1 / 1 (ஒன்று வகுத்தல் ஒன்று) என்று இருக்கின்றது. ஆனால் என்னிடத்தில் பல பூஜ்ஜியங்கள் (0) இருக்கின்றன. அதாவது நீ நல்ல காரியங்கள் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களைச் சேர்ப்பேன் . அதே மாதிரி நீ ஏதேனும் தீய காரியங்கள் செய்தால் கீழ் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களுடன் சேர்ப்பேன். 



அதாவது நீ என்னை முன்னிலை படுத்தி என்னை மேலே உயர்த்தி மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ நன்மையானச்  செயலைச் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் (1 / 1 ) என் பூஜ்ஜியம் (0) சேரும். உனது  நல்ல செயல்கள் கூடக்கூட பூஜ்ஜியங்கள் பல  சேரும். அதாவது 10 / 1 = 10,  100 / 1 = 100,  1000 / 1 1000,  10000 / 1 = 10000 ,  100000 / 1 = 100000..... என்று உனது நன்மை செயல் எண்ணிக்கை பொறுத்து நான் மேல் ஒன்றுடன்  ( 1 / 1 ) சேருவேன். உனது மதிப்பையும் அதற்குத் தகுந்தவாறு கூடும்.

இனிமை மனிதா! அதுவே உன் செயல்கள் என்னை அலட்சியப் படுத்தி என்னை கீழே  தள்ளி உன்னிஷ்டப்படி  மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ பாதிப்பு தரக்கூடியதாக இருந்தால் எனது பூஜ்ஜியம் (0) உனக்கு கீழே உள்ள ஒன்றுடன் (1 / 1) சேரும். அதாவது 1 / 10 = 0.1 ,  1 / 100 = 0.01,  1 / 1000 = 0.001,  1 / 10000 = 0.0001, 1 / 100000 = 0.00001  என்று நீ செய்யும் தீய செயலுக்கு தகுந்தவாறு உனது மதிப்பு குறைந்து கொண்டே போகும். ஆக உனது மதிப்பை உயர்த்திக்கொள்வதும்,  தாழ்த்திக்கொள்வதும்  நீ செய்யும் செயலைப் பொறுத்து உள்ளது! உன் மதிப்பை உயர்த்தவே நான் உனக்குள் உள்விதி மனிதனாகத் தோன்றியுள்ளேன்.

இனிய மனிதா !

நன்மை பல செய் !

நான் உன்னை மதிப்புள்ளவனாக ஆக்குகிறேன்.  
                

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

1 comment: