எளிதான புழக்கமாகும் பொருட்கள் -
வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்
EASY LIQUIDITY BUSINESS IS VERY STRONG AND EVER GREEN ONE
விழிப்புணர்வு கட்டுரை
எது எளிதான புழக்கம் ( EASY LIQUIDITY ) எதில் இருக்கின்றதோ அதற்கு எப்போதும் அழிவு என்பதே இருக்காது. அந்த வகையில் எந்த பொருள் அதிகமாக விற்கப்படுகின்றதோ அதனுடைய விலை குறைவாகத் தான் இருக்கும். அதன் மூலம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். மேலும் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களும் வாங்குவதால் அதற்கு தனி மரியாதை உண்டு எனலாம். அதாவது எந்த ஒரு பொருள் மலிவாக கிடைகின்றதோ அதில் ஓரளவு லாபமும் இருக்கும். வியாபாரத்திற்குக் குறைவில்லாமலும் இருக்கும். அதேபோல் வாங்கு -வதற்கும், மறுவிற்பனை அல்லது பழையது விற்பதற்கு எளிதாகவும் இருக்கும்.
ஆனால் எந்த ஒரு பொருள் விலை அதிகமாக இருக்கின்றதோ அந்த பொருள் உண்மையில் அதிகமாக புழக்கத்தில் இருக்காது. உடனேயோ அல்லது சிலமாதம் கழித்து திரும்ப மறு விற்பனை விற்கப் போகும்போது அடிமாடு விலைக்குத் தான் போகும். உதாரணமாக ஒரு கார் புதிதாக வாங்கி ஒரு மாதத்தில் விற்கப் போக நேர்ந்தால் லட்சம் ரூபாய் வரை குறைவாகத் தான் விலை போகும். அதேபோல் தங்கம், வீடு, பிளாட் . அவைகளை ஆசைப்பட்டு வாங்கி பிறகு தவணை கட்ட முடியாமல் அதிக வட்டி கட்டியும், முடிவில் அசலும் பொருளும் கை விட்டுப் போகும்போது தான் அதன் வலிமை தெரியும்.
அதற்குக் காரணம் நப்பாசை ! பேராசை! எல்லோரும் வாங்குகிறார்கள் நாமும் வாங்கினால் என்ன? என்று ஆழம் தெரியாமல் காலை விடுபவர்கள் ஏராளம் பேர். ஆனால் அந்த ஆசை வாழ்க்கையையே அழிக்க முயன்றால் என்ன செய்வது? ஆசை காட்டத் தான் செய்வார்கள்! ஆஹா .. ஓஹோ .. என்று புகழுவார்கள். இன்னும் சிலர் இதை வாங்கினால் இன்னும் சில மாதங்களில் அவ்வளவு ரூபாய்க்குப் போகும்! இவ்வளவு ரூபாய்க்குப் போகும் ! என்று சும்மா அள்ளிவிட்டு ஆசை விதையை விதைப்பார்கள். அதுவும் போதாமல் அதைப்பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.
இன்னும் சில விளம்பரத்தில் 'இது போல் உலகத்தில் ஏதுமில்லை. இனி மேலும் வராது. இது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்கிற வசனத்தை நடிக, நடிகையர்களை , மாடலிங் உள்ளவர்களைக் கொண்டு பேசவைப்பார்கள். அனேகமாக எல்லோரையும் பேச்சில் , பகட்டான விளம்பரத்தில் கவரப்பார்ப்பார்கள். மேலும் இதுவரை இத்தனை பேர் சேர்ந்து இவ்வளவு பயனடைந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்துடன் புருடா விடுவார்கள். அதற்குச் சாட்சியாக சிலரை பணம் கொடுத்து பேசவைப்பார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு மோசம் செய்யாமல் 'ஆமாம்! நான் இதில் முதலீடு செய்தேன். இவ்வளவு லாபம் கிடைத்தது என்று அளப்பார்கள். துருவித் தோண்டி பார்த்தோமானால் அவைகள் எல்லாமே கப்சா என்பது தெரியவரும். அஞ்சுக்கும் பத்திற்கும் பொய் சாட்சி சொல்வதுபோல் பொய்யாய் பேசி புழுகுவார்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனென்றால் கடினமாக உழைத்து, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் இதன் மூலம் ஏமாறாமல் இருப்பது நல்லதல்லவா?
அதாவது ஒரு சில விளம்பரங்கள் வெகுகவர்ச்சியாக , வெகு ஆடம்பரமாக, முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு வியாபாரம் செய்யப் படுகின்றதோ அவைகள் பெரும்பாலும் தரம் குறைந்தும், எதிர்பார்த்த பலன்கள் இல்லாமலும், சில சமயத்தில் எதற்கும் லாயக்கற்றதாக இருக்கும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அத்தகைய விளம்பரம் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரையில் தான் இருக்கும். பிறகு காணாமல் போய்விடும்.அதாவது ஒரு பெயரில் ஏமாற்றிவிட்டு அடுத்த மாதத்தில் வேறொரு பெயரில் புதிதாக விளம்பரப் படுத்துவார்கள். எப்படித் தான் சிலர் அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகின்றனர். பலரும் ஏமாந்து கொண்டும் வருகின்றார்கள். தொடர்ந்து விளம்பரம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள்.
அதேபோல் பத்து ரூபாய்க்கு விற்கவேண்டிய பொருளை ரூபாய் நூறு வரை விளம்பரம் செய்து விற்பார்கள். அதாவது இதுவும் ஒரு வகையில் ஒரே விலையில் ஏலம் அதிகம் விடுவது போலத் தான்.உதாரணமாக இரண்டு நாட்கள் ஓடாத படத்தை ஆஹா .. ஓஹோ ..என்று பில்டப் செய்து விளம்பரப் படுத்துவார்கள். அதேபோல் தங்கம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகியவைகளின் விலை ஒரு நாள் சரிந்தது என்று விளம்பரப் படுத்துவார்கள். மறுநாள் விலை ஜிவ்வென்று உயர்ந்தது என்று மீடியாக்கள் சொல்லும். ஆக விலை அதிகமான அல்லது தொடர்ந்து விலை ஏறும் பொருட்களை உடனே வாங்காமல் தூரத்தில் நின்று வேடிக்கை பாருங்கள். அதன் உண்மை நிலை உங்களுக்கே தெரிய வரும்.
***********************************************************************************
விளம்பர மோகம் வேண்டாம் ...
வீண் விரயம் , நஷ்டம் அடைய வேண்டாமே!
***********************************************************************************
No comments:
Post a Comment