Pages

Tuesday 14 May 2013

யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்? WHO CAN DO GOOD EXPORT BUSINESS?

யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?
WHO CAN DO GOOD EXPORT BUSINESS?
 

நாட்டுநடப்புகள்
(விழிப்புணர்வுக்காக) 
  


சமீபத்தில் ஏற்றுமதி / இறக்குமதி  கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடு நன்றாக செய்திருந்தார்கள். சுமார் நூற்றிற்கு மேற்பட்ட வணிகர்கள், சேவை தொழில், சிறு மற்றும் குறுந் தொழில் செய்வோர் மற்றும் அதன் மேலாளர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள்...


   

* இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதி தொழில் நன்றாக உள்ளது.

* உள்நாட்டு போட்டியை சமாளிக்க உதவுவது.

* லாபம் ஈட்டுத் தருவது 

* நாட்டிற்கு அன்னிய செலாவணி ஈட்டுத்தருவது.

* அரசின் சலுகைகள் நன்றாக உள்ளது.

* எளிதாக கிடைக்கும் வங்கிகளின் உதவிகள்.

* ஏற்றுமதி துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் உதவிகள்.

* உலக நாடுகளின் தேவைகள் பெருக்கம் 

இவைகளெல்லாம் தெளிவாக பேசப்பட்டது...

 

அதில் பேசியவர்களெல்லாம் அநேகம் பேர் வெறும் ஏட்டளவு அனுபவம் கொண்டவர்கள். உண்மையில் அவர்கள் ஏற்றுமதி தொழில் செய்யாதவர்கள். அதாவது அது எப்படி இருந்ததென்றால் கிரிக்கெட் விளையாட்டு விளையாடி அனுபவமில்லாதவர்கள் வெறும் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துவிட்டு 'கிரிக்கெட் விளையாட்டில் நூறு ரன்கள் எடுப்பது எப்படி?அதன் மூலம் எப்படி நிறைய சம்பாதிக்கலாம்?' என்று விலாவாரியாக பேசுவது போல் இருந்தது. 

 

நமது நாட்டின் மக்கள் தொகை நூறு கோடிக்கு மேல். அதில் எத்தனை பேர் கிரிக்கெட் விளையாடி எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அதேபோல் நமது நாட்டில் தொழில் மற்றும் சேவை செய்வோர் ஏராளம் பேர் இருப்போர். அனைவருக்கும் ஏற்றுமதி பற்றி தெரியாதா? எப்படி ஒரு சில நூறு பேர்கள் மட்டும் ஏற்றுமதியை தொடர்ந்து லாபகரமாக, வெற்றிகரமாக செய்து வருகிறார்கள்? இந்த ரகசியம் தான் பலருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

 
அதாவது அம்பானி. டாட்டா குழுமம் ஏற்றுமதி செய்வதற்கும், ராமசாமி, குப்புசாமி ஏற்றுமதி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குமா? இருக்காதா? மேலும் முதலில் இருப்பவர்களின் முதலீடு பெரும்பாலும் வங்கி கடன்கள், அரசியல் செல்வாக்குகள்  மற்றும் பொதுமக்களின் முதலீடு பணம். ஆனால் பின்னது சொல்லப்பட்டவர்கள் தங்களது சொந்த முதலீட்டில் தொழில் அல்லது சேவை செய்பவர்கள். அப்படி இருக்கும்போது நமது அரசாங்கம் பொதுவாக பெரிய தொழில் மற்றும் பணக்காரர்களுக்கு மிகுந்த பலனையும் சலுகையும் வாரி வாரி தருகின்றது. அதிகாரிகளும் அவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றனர். அவர்களால் செய்ய முடியாத ஏற்றுமதியா சிறு தொழில் செய்வோர் செய்துவிடப் போகிறார்கள்?

  

அதுவும் அந்நிய முதலீட்டில் தொழில், சேவை செய்வோருக்கு அதைவிட சிறப்புச் சலுகைகள். சமீபத்தில் 'நோக்கியா' என்கிற மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனம் சுமார் 2,300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக செய்தி வந்தது. அதாவது வரி ஏய்ப்பு செய்து லாபம் சம்பாதிப்பது. அப்படி நமது நாட்டில் மட்டுமே சாத்தியம்.  

பின் ஏன் சிறு தொழில் செய்வோர் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? இங்கு தான் ஆசை காட்டி நஷ்டம் உண்டாக்கும் வேலை நடக்கிறது. ஆனால் சொல்வது பெரிய பெரிய வார்த்தைகள்! சலுகைகள்! இன்னும் பலப்பல ஆசைவார்த்தைகள் ..ஆனால் ஏற்றுமதிக்கு ஆசைப்பட்டு வியாபாரம் செய்த பலபேருக்கு பலத்த நஷ்டம் தான் மிச்சம்..

 
நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் பெரிய பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் இறக்குமதிக்குத் தான் மிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். அதாவது உள்நாட்டிற்குத் தேவையான பொருட்களை குறிப்பாக தங்கம், வெள்ளி, வைரம், பெட்ரோல், டீசல் எண்ணெய், பருப்பு தானியங்கள், சோப்பு, ஜவுளி, சிமெண்ட், இரும்பு , பருத்தி, உரம், வீட்டு உபயோக சாமான்கள் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் எல்லாமே வெளிநாட்டில் விலை குறைவாக கொள்முதலில் இறக்குமதி செய்து உள்நாட்டில் அதிக விலைக்கு விற்பது தெரியவரும். அவர்களால் தான் இங்கு விலைவாசி தாறுமாறாக ஏறி இருப்பதன் ரகசியம்.

மூலப்பொருட்கள் தவிர அதைவைத்து பொருட்களையும் தயாரித்து உள்நாட்டில் சிறு சிறு வியாபாரிக்கு போட்டியாக விற்கின்றனர். உதாரணமாக சோப்பு, ஷாம்பு , க்ரீம், நொறுக்கு தீனிகள், பேஸ்ட், அன்றாடம் உபயோகிக்கும் அனைத்துப் பொருட்கள் அடங்கும். எங்கே அவர்கள் ஆடம்பரமாக விளம்பரம் செய்வது போல் சிறு சிறு வியாபாரிகளால் செய்ய முடியுமா? இதில் கூத்து என்னவென்றால் அவர்கள் உள்நாட்டில் விற்கும் எந்த பொருளும் ஏற்றுமதிக்கு லாயக்கில்லாதவை! எல்லாமே இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் தான். உதாரணம்.. டீ , சர்க்கரை, அரிசி முதல் தரம் ஏற்றுமதி செய்துவிட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் உள்நாட்டில் விற்பனை செய்கிறார்கள்.

 

மேலும் அவர்களால் (எந்த பெரிய நிறுவனமும்) பல பொருட்களை நல்ல தரத்தோடு ஏற்றுமதி செய்யமுடியாது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்றுமதிக்கு எத்தகைய தரம் வேண்டும் என்று தெரியும். பலவித சிக்கல் வரும் என்று தெரியும். லாபம் எடுக்கமுடியாது என்றும் நன்றாக தெரியும். மூலப்பொருட்களாக இறக்குமதி செய்வதில் கொள்ளை லாபம் கிடைக்கும்போது ஏன் ஏற்றுமதி செய்து கையை சுட்டுக்கொள்வானேன் ?

சமீபத்தில் கொடிகட்டிப்பறந்த பின்னலாடை, ஜவுளி மற்றும் ஸ்பின்னிங் மில்கள் எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல்  போனதன் காரணம் பருத்தி விலையேற்றம், டாலர் மதிப்பு கூடுதல், சாயத் தொழிலுக்கு பூட்டு, மின்வெட்டு, தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்களின் சம்பள பிரச்சனை இன்னும் பல. அதனால் ஏற்றுமதியில் சரித்திரம் படைத்து வந்த திருப்பூர் இப்போது நொந்து நூலாகி விட்டது. அதனால் எத்தனை கோடீஸ்வரர்கள் ஆண்டியானர்கள் எனபது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
 

வறட்சி, மழையின்மை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலால் விவசாயம் கேள்விக்குறியாய் நிற்கிறது. பின் எப்படி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும்? அதேபோல் கடல் சார்ந்த பொருட்கள் இப்படி பலப்பல.

பல பெரிய நிறுவனங்கள் உற்பத்தி தொழிலை கவனிக்காமல் ஐ. டி சேவைகள் மற்றும் மென்பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதற்குப் பெயர் தான் உலக தாராள மயமாக்கல், உலக பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்தல் போன்றவை. நமது அரசாங்கமும் அதற்கு அதிகமாக உதவிகள் செய்துவருக்கின்றது. அதனால் உற்பத்தி விழுக்காடும் , பணவீக்கமும் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதை தினமும் பல மீடியாக்களிருந்து அறிகிறோம். அரசாங்கமும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை என்பது உண்மை. ஆனால் எந்த பொருள் அரசாங்கம் ஏற்றுமதி / இறக்குமதி அனுமதி கொடுக்கின்றதோ அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து நிற்கின்றது.    

 

ஆகையால் பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தராதலால், அரசின் இலக்கு சிறு மற்றும் குறுந் தொழில் செய்வோரின் மேல் விழுந்திருக்கின்றது. அதனால் வங்கி 10 % வட்டி லாபம் ஈட்டவேண்டும். ஆனால் ஏற்றுமதி செய்வோருக்கு அந்த 10% லாபமாக நிற்குமா எனபது மிகப்பெரிய கேள்விக்குறி.    



சரி இப்போது எப்படி பெரிய தொழில் செய்வோர்கள் ஏற்றுமதி தொழிலில் லாபம் பார்கிறார்கள்? சிறு தொழில் செய்வோர்கள் நஷ்டப்படுகிறார்கள்? என்று பார்ப்போம்.

ஏற்றுமதிக்கு தேவையான செயல்கள்:



1. ஏமாற்றாத நல்ல வாடிக்கையாளரைக் கண்டுபிடிப்பது. 
    (ஏமாற்றும் வியாபாரிகளை கண்டுபிடிப்பது கடினம் தான்)

2. அவர்கள் சொல்லும் / எதிர்பார்க்கும் தரத்தில் உற்பத்தி செய்வது 
   (சிறிது மாறினாலும் / தரம் குறைந்தாலும் அனைத்தும் தள்ளுபடி / நஷ்டம் தான் )

3. உலகளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளை உபயோகிப்பது 
   (ஒவ்வொரு வினாடிக்கு மாறும் மாற்றத்தை சமாளிக்க வேண்டும்)

4. குறித்த நேரத்தில் பொருளை உற்பத்தி செய்து அனுப்பவேண்டும்.
  (சிறிது தாமதமாக அனுப்பினாலும் தள்ளுபடி / நஷ்டம் தான்)

5. பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு உண்டான முதலீடு மற்றும் இடவசதி.

  (இரண்டும் இருந்தால் மிகவும் நல்லது)

 

சரி இப்போது கீழ்கண்டவைகளை சிறுதொழில் செய்வோர் எப்படி நஷ்டமின்றி சமாளிப்பார்?



1. தினமும் இருக்கும் மின் தடை மற்றும் மின் பற்றாக்குறை  (ஜெனெரேட்டர் உபயோகித்தால் லாபம் அம்போ தான்)

2. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சம்பள உயர்வு (எப்படி சமாளிப்பது ?)

3. மூலப்பொருட்களின் விலையேற்றம். ( ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விலை?)

4. உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்.

5. பெட்ரோல் , டீசல், போக்குவரத்து செலவு ஏற்றம்.

6. நிலைத்தன்மையில்லாத உலகப்பொருளாதாரம்.

7. உலக நாடுகளில் தினம் தினம் நடக்கும் அரசியல் மாற்றம்

8. மாறிவரும் வரும் சட்டதிட்டங்கள் அதை அறிந்துகொள்ள போதிய நேரமின்மை.

9. உள் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பிரச்சனைகள்  (உறவு முறையில் இயங்கும் சொந்த வியாபாரம் உட்பட)

10. வங்கி வட்டியின் ஏற்றம்

11. மாறிவரும் மக்கள் எண்ணங்கள்

12. பலநாடுகளில் நிலவிவரும் தீவிரவாதம், கலவரம், உள்நாட்டுப்போர், போராட்டம் ஆகியவற்றின் தாக்கம்.

13. இயற்கை சீற்றம் (பூகம்பம், வெள்ளம் வறட்சி, எரிமலை சீற்றம் போன்றவை)

14. லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் ஆகியவைகளின் சமாளிப்புகள்

15. தினம் தினம் உருவாகும் புதுப்புது போட்டியாளர்கள்.

16. உலக நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் மதிப்பு குறைவு மற்றும் ஏற்றம்

17. ஏற்றுமதி / இறக்குமதி கொள்கை மாற்றம்

18. வரிவிதிப்பு மாற்றம்

19. அரசியல் ,  அதிகாரிகள், சட்டம் குறுக்கீடுகள்

20. எளிதில் புரியாத ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள்



இவ்வளவும் மனதில் கொண்டு தான் ஏற்றுமதியை வெற்றிகரமாக செய்யமுடியும். இப்போது சொல்லுங்கள். யாரால் முடியும் என்று?


சிறுதொழில் செய்பவர்களால் முடியுமா?
அல்லது
பெரிய தொழில் நடத்துபவர்களால் முடியுமா?


இதற்குத் தீர்வு : இறக்குமதி செய்யும் (பெரிய பெரிய நிறுவங்கள்) கட்டாயம் அந்த அளவுக்கு ஏற்றுமதி செய்தே தீரவேண்டும். அப்படிச் செய்வதால் உள்நாட்டில் அவர்களின் போட்டி குறைகிறது. சிறு மற்றும் குறுந் தொழில் செய்பவர்கள் நிம்மதியாக வியாபாரம் செய்யலாம். மேலும் பெரிய நிறுவனங்களில் உள்ள நல்ல கட்டமைப்பு வசதி மற்றும் அதிகமான உற்பத்தித்திறன் இருப்பதால் கட்டாயம் வருடத்திற்கு 50% மாவது ஏற்றுமதி செய்தே தீரவேண்டும் என்றிருந்தால் கட்டாயம் விலைவாசி குறையும். பலருக்கு நன்மையும் கிடைக்கும். மேலும் அந்நிய முதலீட்டில் சில்லறை வணிகத்திற்கு அனுமதிப்பது கூடவே கூடாது. ஏற்கனவே உள்நாட்டில் பெரிய நிறுவனங்கள் சிறு தொழிலுக்கு போட்டியாக இருந்து வருகின்றது. 

   

இதில் அந்நிய ஆதிக்கம் நுழைந்துவிட்டால் கட்டாயம் நமது நாட்டில் தொழில் வளர்ச்சி ஒன்றுமே இருக்காது. இப்போதே அனைத்திற்கும் மற்ற நாட்டில் கையேந்தி நிற்கும்போது பின் எப்படி வரும் 2020ம் ஆண்டில் நமது நாடு ஒரு சிறந்த வல்லரசாக இருக்கமுடியும். இப்போது விதைக்கும் விதை தான் பின்னாளில் மரமாக வளரும். ஆகையால் ஒன்றிற்கு பலமுறை யோசித்து ஏற்றுமதியில் கால் பதியுங்கள். அதேபோல் இதேபோல் ஏற்றுமதி செய்தவர்கள் உண்மையில் லாபம் அடைந்துள்ளனரா? என்று உறுதி செய்த பிறகு ஏற்றுமதி ஆரம்பியுங்கள். இந்த கட்டுரை உங்கள் ஏற்றுமதி எண்ணத்தை பலவீனப்படுத்துவது அல்ல. உங்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. பொதுவாக ஒரு தொழிலில் லாபம் இருக்கிறதென்றால் அதை கூவி கூவி அழைத்து வந்து சொல்லத் தேவையில்லை. மேலும் சலூகைகள் கொடுக்க வேண்டியதுமில்லை. இது தான் வியாபார விதி.  

ஏற்றுமதி / இறக்குமதி பயிற்சி வகுப்பில் நாள் முழுவதும் அதைப்பற்றிய விளக்கங்கள் பலர் கொடுப்பார்கள். எவ்வளவு விளக்கங்கள் எடுத்துரைத்தாலும் கடைசியில் என்ன செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்கிற குழப்பமே மிஞ்சும். ஏனெனில் அவ்வளவு வேலைகள் செய்யவேண்டியது இருக்கின்றது. அதுவும் மிகத்துல்லியமாக எல்லாமே இருக்கவேண்டும். சிறிது மாறினாலும் நஷ்டம் தான். 

மேலும் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். எலிப்பொறியில் வம்படியாக வடையோ அல்லது தேங்காயோ வைப்பது எலிகள் அதை தின்று கொழுத்து போவதற்காகவா? அதேபோல் மீனுக்குத் தேவையான புழுவை தூண்டிலில் வைப்பது யாருக்கு ? எதற்காக? என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நன்றாக சிந்தித்து விழிப்புணர்வோடு செயல்படுங்கள். 

ஆரம்பத்தில் ஓஹோ என்று பெரிதாக செய்யாமல் சிறிது வருடமாவது சிறிய அளவில் செய்து பாருங்கள். ஒத்து வந்தால் சற்று பெரிய அளவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மிகப்பெரிய அளவுக்கு எப்போதுமே முயற்சிக்க வேண்டாம்.

நன்றி 
வணக்கம்.
   

1 comment:

  1. ஆர். முத்துக்குமார்21 May 2013 at 00:29

    வணக்கம்

    நான் ஆர். முத்துக்குமார். சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸின் ஆசிரியர். உங்களுடைய மொபைல் எண் தேவை. என்னுடைய எண்: 72000 73079

    நன்றி

    ReplyDelete