Monday, 25 February 2013

நீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா ?

நீங்கள் குண்டா / ஒல்லியா / கருப்பா / குட்டையா / நெட்டையா / தொப்பையா /அழகைக் கூட்ட வேண்டுமா ?எதற்கு பயம்? நாங்கள் இருக்கிறோம் !
விழிப்புணர்வு / நாட்டு நடப்பு கட்டுரை 
         
மதுரை கங்காதரன்  


டி.வி யை திருகினாலும் சரி, பேப்பரை விரித்த்தாலும் சரி, எந்த வலை தளத்திற்கு போனாலும் சரி, குறுந்தகவல்கள் வந்தாலும் சரி , யாரைப் பார்த்தாலும் சரி , எந்த விற்பனையாளரும் சரி மேற்கூறிய ஏதாவது ஒன்றைப் பற்றி கண்டிப்பாக பேசியேத் தீருவார்கள். அதாவது ஒருவர் மற்றொவருவரை கவருவதால் தன்னுடைய அந்தஸ்து கூடும் என்கிற  ஒரே  குறிக்கோள் தான் இத்தகைய செயல்களைச் செய்யச் சொல்கிறது. அது மட்டுமா ? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியே அழகு நிலையங்கள் பல்கி பெருகி வருகின்றது. அதிலும் பல 'சிறப்பு நிபுணர்களும்' முளைத்துவிட்டார்கள். சிகிச்சை முறைகள் ஆயுர்வேதிக் மருந்து வேண்டுமா அல்லது அல்லோபதி மருந்து வேண்டுமா என்று போட்டி போட்டுக்கொண்டு மக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
       
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அல்லது படித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தவறுவதில்லை. இவ்வளவு ஏன் தினம் தினம் இதே கவலையோடு தான் தூங்குகின்றனர், காலையில் எழுகின்றனர்! இந்த குறையினால் வாழ்க்கையில் ஏதோ பெரிய ஒன்றை இழந்துவிட்டது போல எண்ணி முகத்தில் கலையில்லாமல் எந்தெந்த வழிகளில் அழகை கூட்ட வேண்டுமோ, என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து பார்த்தும் தாங்கள் நினைக்குமளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை மிக மிக தாமதமாக, பக்க விளைவுகள் வந்த பிறகு தான் அதை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். கட்ட கடைசியில் 'உள்ளதும் போச்சுட லொல்ல கண்ணா' என்று புலம்புவது தான் மிச்சம்.

எதற்கு எதற்கு மக்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.

                          

முடி கொட்டுவதை தடுப்பதற்கு ஒரு தைலம் :  இந்த XXX தைலத்தை தொடந்து தடவுங்கள் நிச்சயம் முடி உதிர்வதை நின்றுவிடும் என்று ஒரு தைலத்தை கொடுப்பார்கள். தினம் ஒரு தைலம் அறிமுகமாகின்றது. இவைகள் யாவும் சில மாதமே வந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவர்கள் சொல்வதோ 'இதை தேங்காய் எண்ணையில் கலந்து தேய்த்து வாருங்கள் . முடி கொட்டுவது நின்றுவிடும்' என்பார்கள். 

முடி கொட்டுவதற்கு காரணம், அநேகம் பேர் தினமும் எண்ணெய் தடவுவதே இல்லை. முடியை பெரும்பாலும் காய்ந்து தான் இருக்கும். அது தண்ணீர் ஊற்றாத செடி போல. அது எப்படி பட்டு போகின்றதோ அது போல் தலைமுடியும் கொட்டி விடுகின்றது.
             
இதை தவிர்க்க நல்ல தரமுள்ள தேங்காய் எண்ணெய்தினமும் தவறாமல்  தடவி வந்தாலே போதும். மேலும் நல்ல பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது  முடியை உறுதியுடன் இருக்கச் செய்யும் வழியாகும். ஒரே நாளில் பலனை யாராலும் தர இயலாது. ஆகவே பலன் மெல்லவும், உறுதியும் உங்களுக்கு தேவையானால் தெரிந்த இயற்கையான வகைகளை மட்டுமே உபயோகிங்கள். 

உடல் எடையைக் குறைப்பதற்கு மருந்து மற்றும் சாப்பாடு முறை:

                            

இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது. எண்ணெய் , இனிப்பு பலகாரங்கள், நொறுக்கு தீனிகள் சாப்பிடக் கூடாது. சாதாரணமாக இவைகள் குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும். அதோடு நிற்காமல் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து இதை கொண்டு 20 தடவை உட்கார்ந்து எழுந்தால் மூன்றே மாதத்தில் எடை குறையும். தியானம், யோகாவும் செய்யச் சொல்வார்கள். அதே சமயத்தில் சில மருந்துகளையும் சாப்பிட சொல்வார்கள். பணம் செலவழித்தது தான் மிச்சம். பலன் என்னவோ பூஜ்யம் தான். ஏனென்றால் மேற்க்கூரியத்தை யாரும் தவறாமல் செய்ததாக சரித்திரம் இல்லை. அந்த சமயத்தில் ஆர்வமாக செய்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள்.

இதை தவிர்க்க தினம் தினம் உணவுக் கட்டுப்பாடு, தியானம் மற்றும் யோகா வை தவறாமல் செய்து வந்தாலே போதும். மற்ற எதுவும் தேவையில்லை.

இதில் என்ன கூத்து என்றால், எல்லாமே சில நாட்கள் தான் பின்பற்றுவார்கள். பிறகு சீ .. என்று சலித்து பழையபடி இருந்துவிட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பணம் வீணாகியது தான் மிச்சம். மனம் பாதிப்பு அடைந்தது தான் பலன். ஆக நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

முகப்பரு நீக்க , முகத்தின் அழகு கூட்ட :

இதோ இந்த YYYY கிரீம் தடவுங்கள் கருப்பான உங்கள் முகம் வெள்ளையாக மாறும். இந்த சோப்பை கொண்டு தினமும் மூன்று வேலை வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகம் பள பளவென்று ஜொலிக்கும்.

பெரும்பாலும் யாருமே ஒரு தடவைக்கு மேல் முகத்தை கழுவுவதில்லை. அப்படியே வெதுவெதுப்பான நீரில் கழுவுவதில்லை. பொதுவாக வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் எண்ணெயும், பிசுபிசுப்பையும் அகற்ற வல்லது. ஆக அது மட்டும் செய்து சாதாரண சோப்பை உபயோகித்தாலே போதும். உங்கள் முகம் பளிச்சிடும். வறட்சியான முகமாக இருந்தால் முகத்தை கழுவுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே போதும்.

உயரமாக வளருவதற்கு:

இதோ போஷாக்கு நிறைந்த சத்துள்ள டானிக் மற்றும் பானம். இதை பாலில் கலக்கி சாப்பிட்டால் உங்கள உயரம் நான்கே மாதத்தில் அதிகமாகும். 

பாலென்றால் யாரும் விரும்பி குடிப்பதில்லை. பின் எப்படி சத்து கிடைக்கும். உயரமாக வளரமுடியும். 

வாரம் மூன்று முட்டை மற்றும் தினமும் பாலை அருந்தினாலே உங்களுக்கு பலம் கிடைக்கும். உயரமும் கூடும். தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது தவறக்கூடாது. இவைகள் எல்லாம் நன்றாக வேலை செய்வது உண்மையானால் இந்நேரம் ஜப்பானியர்கள் எல்லோரும் நெட்டையாக இருப்பார்கள்.

                                    

கடைசியாக உங்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் சினிமா நடிகர், நடிகை யானாலும் சரி, சின்னத்திரை ஆனாலும் சரி பல நடிக , நடிகையர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தட்டிப் போவதன் காரணம் மேற்கூறிய பிரச்சனைகளே. ஏன் அவர்கள் நினைத்தால் தங்கள் அழகைக் கூட்ட ஆயிரங்கள் என்ன லட்சங்கள் கூட செலவழிக்கத் தயாராக் இருப்பார்கள். அவர்கள் இதைவிட அதிக தரம் வாய்ந்த பொருட்களை உபயோகப்படுத்தியும் இருப்பார்கள். பலன் என்னவோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். பெரும்பாலும் அலர்ஜியால் பாதிக்கப் பட்டு இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்டவர்கள்  தான் அதிகம் பேர்.

இன்னும் ஒருபடி அதிகமாக சொல்லப் போனால் நடிகர்கள் புருவங்கள், மீசை எல்லாமே ஒட்டு ஆகவோ அல்லது கருப்பு மையால் வரைந்தோ இருப்பார்கள். தலையில் முடி இல்லாததால் டோபா அல்லது விக் போட்டிருப்பார்கள். முகத்தில் சுருக்கங்களை மறைக்க அரை இஞ்ச் பவுடர் அல்லது கிரீம் போட்டிருப்பார்கள். எல்லாமே டக் டக்கென்று காட்சிகள் மாறுவதால் நமக்கு அதிகமாக வித்தியாசம் தெரிவதில்லை. நடிகையர்கள் கூட அப்படித் தான்.

எந்த ஒரு கருப்பான நடிகர்கள் சிகப்பாக நேரில் காட்சியளித்திருக்கிறார்களா? குட்டையானவர்கள் நெட்டையாக வளர்ந்துள்ளனரா? ஓம குச்சியை இருப்பவர்கள் குண்டாக அல்லது குண்டாக உள்ளவர்களாக மாறியுள்ளனரா? தொப்பை உள்ளவர்கள் சிலிம் ஆக மாறி இருக்கின்றனரா? ரூபாய் லட்சம் கொடுத்து தலைமுடியை ஒட்டிகொண்டவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு இருப்பவர்களைப் பாருங்கள். அதன் உண்மை புரியவரும்.காரணம் சில இயற்கைகள் மாற்றுவது முடியாத காரியம்.    

பிரபல ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள்  என்னென்னவோ எவ்வளவோ எங்கெங்கோ பல லட்சம் செலவு செய்து பார்த்தார். அவர் முகம், முடியில் எதுவும் மாற்றமில்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அழகு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இயற்கையில் இருக்கும் அழகு என்றும் நிரந்தரம். செயற்கையாய் செய்துகொள்ளும் அழகு சிறிது நேரத்தில் மறைந்து போகும். மீண்டும் அழகை ஏற்றிக்கொள்ள வேண்டும். மேக் அப் இல்லாமல் எந்த ஒரு நடிகர் நடிகையும் வெளியில் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் பார்க்குபடி இருக்க மாட்டார்கள்.  

இதையும் மீறி சில நடிக, நடிகையர்கள் என்றும் இளமையாக இருப்பதன் இரகசியம் அவர்கள் விதவிதமான ஷாம்புகள்  உபயோகிப்பதால் அல்ல, விலை உயர்ந்த கிரீம்கள்  தடவுவதால் அல்ல, அழகுகலை நிபுணர்கள் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மேற்கொள்ளும் தினம், தினம் செய்யும் உடற்ப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை. இவைகளை அவர்கள் பிரமாதப்படுத்திச் சொல்வதில்லை. ஏனெனில் இவைகளுக்கு செலவு இல்லை. வரவும் இல்லை அவர்கள் பணத்திற்காக மட்டுமே சோப்பு, கிரீம், ஷாம்பு  என்று விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். உண்மையில் அவைகள் அவர்கள் உபயோகிப்பது கிடையாது.

ஆகவே..
இயற்கையாய் இருங்கள்..

இயற்கையை பின்பற்றுங்கள்..

இளமையாய் உணருங்கள்..
இன்பமாய் வாழ்க்கையை அனுபவியுங்கள்..     

  

No comments:

Post a comment