Pages

Friday, 12 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன் - I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை பாகம்: 15 நான் உன் பலவீனத்தை 
பலமாக மாற்றுகிறேன் - 
I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH பிரியமுள்ள மனிதா! மீண்டும் நான் உள்விதி மனிதன் வந்திருக்கிறேன்! நீ பிறர்க்கு நன்மை தரும் காரியங்களைச் செய்தால் அதற்கு நான் ஆயிரம் மடங்கு உதவி செய்வேன். ஆனால் தீய காரியங்களைச் செய்தால் நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன் அல்லது அதற்குண்டான வேலையில் இறங்குவேன். நான் அனைவருக்கும் கொடுத்த  செல்வம், மகிழ்ச்சியை நீ ஏமாற்றி குறுக்குவழியில் அபகரிக்க நினைப்பது நான் அனுமதிக்க மாட்டேன். அதைப்பார்த்து சும்மாவும் இருக்கமாட்டேன்.இனிமையான மனிதா! உன்னைப் படைக்கப்பட்டதன் நோக்கம், உனக்கென்று இந்த பூமியில் பல கடமைகள் இருக்கின்றன. உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் காத்தும், அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பதே உனது கடமை. மறைமுகமான அந்த கடமைகளை உன் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். எக்காலத்திலும் என் பெயர் கெடாவண்ணம் இருப்பதற்கும் , இந்த பூமி சுபிட்சம் அடைவதற்குமான அத்தனை வழிகளையும் உன் மூலம் உண்டாக்கப்போகிறேன். எனது ஓட்டம் உனது அறிவை கூர்மையாக்கி அதை செயல்படுத்தும்போது எல்லாமே வியக்கத்தக்க விதத்தில் எல்லோருக்கும் நன்மை தரும் மாற்றங்கள் நீ காண்பாய்!


அன்பு மனிதா! இந்த உள்விதி மனிதனின் பேச்சை கேட்காததால் உனக்கு எல்லாவிதமான சிக்கல்கள் வருகின்றது. அதைச் சரிபடுத்த வேண்டு மென்றால் நான் ஒரு டாக்டராக மாறவேண்டும். அதாவது ஒரு டாக்டர் எப்படி ஒருவரது உடம்பை நன்றாக சோதனை செய்து, ஸ்கேன் , இ.சி.ஜி போன்ற ரிபோர்ட்டை வைத்து நோயை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ உதவியை அல்லது சிகிச்சையை எவ்வாறு துல்லியமாக தந்து நோயை குணப்படுத்துகிறாரோ, அதுபோல உனக்கும் நான் உனக்குள்ளிருந்து கொண்டு  இப்போது உடனே செய்யவேண்டிய அவசர சிகிச்சையை காலதாமதம் செய்யாது செய்யப்போகிறேன். இந்த நொடி முதல் எனது அருள்மொழியை செவிசாய்த்து கேட்பாயானால் நான் உனக்கு எவ்வளவு நன்மை செய்கிறேன் என்பதை உணரமுடியும்.


பிரியமுள்ள மனிதா! உன்னைச் சுற்றிலும் பலர் உன்னுடைய பொருட்களை பணத்தை அபகரித்தோ, ஏமாற்றியோ, எதேச்சையாக கொடுத்தோ ஒருவனிடத்தில் இழப்பாயானால் அவன் ஒருபோதும் அவற்றை திருப்பித் தர மாட்டான். மீண்டும் அவனிடத்திலோ அல்லது அவனைப் போன்றவர்களிடத்தில் உனது பொருட்களை இழந்துவிடாதே! நான் உனக்கு கொடுத்திருக்கும் பொருட்களை போல எல்லோருக்கும் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேலும் பிறரின் பொருட்களை அபகரிக்க நினைப்பது பேராசை தான். எல்லோரும் எனது படைப்புகளை சரிசமமாக அனுபவிக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். இனிமேல் நீ உழைத்து தேடிய சொத்துகளை உன்னை விட்டு பிரிய அனுமதிக்கமாட்டேன். அப்படி உன்னிடத்திலிருந்து எடுப்பவர்கள் நிச்சயம் என்னைப்போல ஆன்ம ஓட்டம் கொண்ட மனிதர்கள் அல்ல என்பதை உனக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்போதும் நேர்மையாக இருக்கவேண்டுமென்பதே எனது இலட்சியம். தனிப்பட்ட உறவினாலோ அல்லது நட்புக்காகவோ அல்லது பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீ நியாயத்தின் பாதையிலிருந்து விலகிவிடாமல் நான் இனிமேல் உன்னை கவனித்துக்கொள்கிறேன். அப்படி பாதையிலிருந்து விலகுபவர்கள், தவறு செய்பவைகள், தீமை விளைவிப்பவர்களை அதிலிருந்து விடுவித்து  உன்னாலான உதவி செய்தும், உன்மூலமாக அவர்களுக்கு வாழ்க்கையில் புத்துயிர் கொடுக்கப் போகிறேன். அது நிச்சயம் நல்ல பலன் தரும்.மரியாதையுள்ள மனிதா! அனைத்து விதத்திலும் என்னைப்போன்று உன்னை தகுதிபெறச் செய்வதே எனது நோக்கம். அதைவிட்டு உனது அற்ப செயலுக்காவும், அற்ப சந்தோஷம் கொடுக்கும் செயலிலும் ஒருபோதும் நான் திருப்தி அடையமாட்டேன். ஏனெனில் அப்படி செய்வது நம் இருவருக்கும் நல்லதல்ல. மேலும் இந்த மனித ஜென்மத்தில், நான் படைத்த அனைத்தையும் நீ அனுபவிப்பதற்காக பல உயிரினங்களை, பல பொருட்களைப் படைத்துள்ளேன் . கேவலம் உன் பேராசையினால் நான் பிரயாசைப்பட்டு தந்ததை மற்றவர்களிடத்தில் குறுக்குவழியில் ஏமாந்ததால் இன்று நீ மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்கிறாய். அதைப் பார்க்கும்போது  எனக்கே சற்றுக்  கடினமாக இருக்கின்றது. அதை தடுக்கவே உன்னுள் புகுந்து உள்விதி மனிதனாக இருக்கிறேன்.

மதிப்புமிக்க மனிதா! நான் உன்னுடன் இருப்பதால் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. எதையும் சாதிக்கும் மனத்துணிவை தருகிறேன். அதைக்கொண்டு அச்சத்தை அகற்று. மற்றவர்களை அன்புகொண்டு, அரவணைத்துகொண்டு நல்ல வழியில் நடத்து. இந்த உலகம் செழிக்க புது மாதிரியான நல்ல செயல்களைச் செய்வதற்கு தயாராகும் மனப்பக்குவம் நான் தருகிறேன். அந்த பக்குவம் உனக்கு இப்போது வந்தாயிற்று. இன்று முதல் இந்த உலகம் உன்னைப்போன்ற பலருடைய நல்ல உள்ளங்கள்  அந்த செயல்களைச் செய்வதற்கு ஆயுத்தமாகிக் கொண்டு வருகின்றது. இனி கவலை வேண்டாம். ஆபத்து வருவது தெரிந்தால் அதை உனக்கு சொல்வதோடு அதை வெல்வதற்கான வழிவகைகளைச் செய்து தருகிறேன்.இனிய நெஞ்சமுள்ள மனிதா! என் ஜீவ ஓட்டம் உள்ள உனது உடல் மிக மிக அற்புதமானது. ஐந்து அறிவு கொண்ட ஜீவராசிகளைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. அதை எக்காரணத்தை கொண்டும் வீணாக்காமல் உலகுக்கு நன்மைதரும் பொருட்டு பலசெயல்களை உன் மூலம் நடைமுறை படுத்தப் போகிறேன். மேலும் அதைக்கொண்டு பல உயிர்களை வாழ வழிவகை செய்து என் பாரத்தை - என் வேலையை - என் கடமைகளை  உனக்கும் கொஞ்சம் பகிர்ந்தளிக்கப் போகிறேன். அப்படி செய்வதால் அதன் மூலம் உனக்கு அதிக அளவு மகிழ்ச்சி கிடைக்கும்.

இரக்க குணம் கொண்ட மனிதா! இந்த உலகில் பலர் உள்ளே ஒன்றும், அதாவது நஞ்சும், வெளியில் ஒன்றும் , அதாவது தேனுமாய்ப்  பேசுகிறார்கள். அவர்களை நான் இனம்கண்டு அவர்களின் என்ன ஓட்டத்தை எனது ஜீவா ஓட்டத்தின் மூலம் தெரியப் படுத்துகிறேன். நீ அந்த கொடிய நஞ்சை தீயிலிட்டு பொசுக்கி அதனை அழிக்க ஏற்பாடு செய்கிறேன். நான் உனக்குள் இருக்கும்வரை இந்த தீய சக்தியை அணுக விடாமல் தடுத்துவிடுகிறேன். அதனால் உனக்கு எப்போதும் நிம்மதி கிடைக்கும். உன்னுடைய பலமும், பலவீனமும் நான் அறிவேன். அந்த பலவீனத்தை பலமாக மாற்றும்  இரசவாத வித்தையை உனக்கு கற்றுத் தருகிறேன். அதைகொண்டு நீ நினைக்கும் நல்ல காரியங்களை செய்து முடிப்பாயாக!


இனிய மனிதா! நான் உனக்குள்ளிருந்து கொண்டு ஒரு நல்ல செயலை முடிப்பதற்குத் துணிச்சலையும், திறமையாக செயல்படும் ஆற்றலையும் , உனது நல்ல குறிக்கோளை அடைவதற்கான தொடர் முயற்சியையும் நான் தருகிறேன். அதை தட்டாமல் பயன்படுத்திக் கொள். நீ சோர்வடையும்போதெல்லாம் நான் உனக்கு சோலைவனமாக காட்சியளிப்பேன். அதில் இருந்துகொண்டு களைப்பை போக்கிக்கொள். அதே நேரத்தில் அதிலேயே மயங்கி உன் குறிக்கோளிருந்து எப்போதும் பின்வாங்கி விடாதே! அதை வெற்றிகொள்வது எப்படி என்று நான் அவ்வப்போது உனக்கு பயிற்சியளிக்கிறேன். அதை தினமும் செய். நிச்சயம் நீ பெரிய சாதனை மனிதனாக உருவெடுப்பாய் . 

அன்பு உள்ளம் கொண்ட மனிதா! நீ பல சமயங்களில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை கவனிக்கிறேன். அப்படிப்பட்ட சமயங்களில் நான் உனக்கு தக்க வழி காட்டுகிறேன். அந்தமாதிரியான முடிவை என்னிடத்தில் விட்டுவிடு. காலம், நேரம் பார்த்து அந்த காரியத்தை செய்யச் சொல்கிறேன். அதன் படி செய். உனக்கு வெற்றி நிச்சயம். உனக்கு அரிய பெரிய கற்பனைவளத்தை அள்ளித்தருகிறேன். அதன்படி உனது செயலில் ஆர்வம் உண்டாக்குவது எனது கடமை. உனக்குள் சுயகட்டுப் பாட்டை வளர்த்து, சரியான பலமிக்க நுட்ப சிந்தனைகளை கொடுத்து, உள் மனத்தை ஒருமுகப்படுத்தி எதையும் தாங்கும் இதயத்தையும், சகிப்புத் தன்மையும் கொடுத்து உனக்கு இனிமையான மகிழ்ச்சியையும், அனைவரையும் அன்போடு வழிகாட்டும் ஆளுமை மனப்பான்மையும் கொடுத்து உன்னைப்போற்றி வழங்கும் அளவிற்கு உயர்தப்போகிறேன்.அரவணைக்கும் குணம்கொண்ட மனிதா! இப்போது நீ இறப்பின் விளிம்பில் இருந்தாலும் சரி, வாழ்வின் துவக்கத்தில் இருந்தாலும் சரி, மற்றவர்களால் தூக்கியெறியப்பட்டவனாலும் சரி, மற்றவர்கள் உன்னை கேலிசெய்தாலும் சரி, அடித்தாலும், திட்டினாலும், சரி, இகழ்தாலும் சரி, ஒதுக்கினாலும் சரி அவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு இந்த நொடி முதல் நான் சொல்லும் இனிய சொற்களை கேள். முன்பு நீ இருந்த நிலை இப்போது முதல் மாறத் தொடங்கும். உன் வாழ்வில் இன்பக் கனியை சுவைக்க ஆரம்பிக்கப் போகிறாய். அதை பறித்து உனக்கு கொடுக்கிறேன். அதை சுவைத்துப் பார். அந்த சுவையின் இன்பத்தை வேறெந்த இன்பமும் ஈடுகட்டமுடியாத ஒன்றாகும்.இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

1 comment: