லஞ்சம் பன்னிரண்டும் செய்யும்!
சிறுகதை
மதுரை கங்காதரன்
"சார்! தாசில்தார் அலுவலகத்திலே லஞ்சம் வாங்கிறாங்க சார். நீங்க உடனடியா வந்தா அவங்களை பிடிச்சுடலாம்!" என்று ஒரு தொலைபேசியிலிருந்து ஒரு செய்தி லஞ்சம் ஒழிப்பு துறைக்கு வந்தது.
கடமை உணர்வோடு அவர்களை பிடிக்க சாதரண உடையில் சென்றனர்.
அவர்களின் ஒருவர் தாசில்தாரிடம் " சார்! இந்த பாரத்திலே ஒரு கையெழுத்து வேண்டும் சார்" என்று பணிவோடு கூறினார்.
" இந்த பாரமா? இதற்கு ஐநூறு ரூபாய் தந்தால் போட்டுத் தருகிறேன்"
"இந்தாங்க சார் ! ஐநூறு ரூபாய்" என்று அவரிடம் நீட்ட, அது தான் சரியான சமயம் என்று பதுங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாய் பிடித்தனர்.
இதை கொஞ்சமும் எதிர் பாராத தாசில்தார் பேய் முழி முழித்தார்.
இவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியாளர்
"சார்! நீங்க நேற்று நடந்தத்திற்கும் இன்னைக்கு நடந்துகிறதுக்கும் சம்பந்தமில்லாம இருக்கே. இன்னைக்கு இருக்கிற கடமை உணர்வு நேற்றைக்கு இல்லாமல் போனது ஏன்? நேற்று இதேபோல் அந்த பெரிய கடையிலே 'இன்கம்டாக்ஸ்' ரெய்டு நடந்தது. பெரிசா புடிச்சீங்க. ஆனா அவரை விட்டுட்டீங்க.இவரை புடுச்சீட்டிங்க. ஒரே குழப்பமா இருக்கே?"
"அதுவா? நேற்று அங்கே புடிச்சது ஐம்பது லட்சம் ரூபாய். அதுலே எனக்கு பத்து லட்சம் கொடுத்தாரு. நான் எந்த காலத்திலே இவ்வளவு பணம் சம்பாதிக்கிறது? இந்த மாதிரி ஆட்களாலே தானே என்னோட குடும்பம் வசதியா இருக்கு. இல்லாட்டா என்னோட பொழப்பு எப்படியிருக்கும்ன்னு கொஞ்சம் யோசித்துப் பாரு. ஆனா இந்த மாதிரி ஐநூறு, ஆயிரம் வாங்கிற ஆட்கள்கிட்டே நமக்கு என்ன கிடைக்கப் போறது? அதோட இந்த மாதிரி ஆட்களை பிடிச்சு கொடுத்தா டிபார்ட்மெண்ட் லே நல்ல பேரு கிடைக்கும். பரபரப்பா நியூஸ் பேப்பர்லே செய்தியும் போடுவாங்க. ஜனங்களும் 'பரவாயில்லே லஞ்சம் ஒழிப்புத்துறை' தன்னோட வேலை சரியா செய்யுதுன்னு' நினைப்பாங்க" என்று பெரிய வியாக்கியானம் கொடுத்தார்.
சற்று நேரத்திலே "சார் ! இங்கே லஞ்சம்..."
ம்... அடுத்த ஆபரேசனுக்குத் தயாரா இருங்க. சின்ன புள்ளியா ? பெரிய புள்ளியான்னு தெரியல்லேயே ? சரி சரி போய் பார்த்திடுவோம். பெரிசா கறக்கப் பார்ப்போம்" என்று தன் சகாக்களுடன் புறப்பட்டார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment