Pages

Sunday, 30 October 2022

30.10.2022 - மாமதுரைக் கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும்

 மாமதுரைக் கவியரங்கம் 4 - 30.10.2022   

      கற்பனையும் கவிதையும்

                  புதுக்கவிதை
              கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

Wednesday, 28 September 2022

25.9.2022 வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு - மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 3 மதுரை

 

மதுரை வடக்குமாசி வீதி, மணியம்மை பள்ளி உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்




             

25.9.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி, உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கில் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்தார். முனைவர் வரதராசன், கவிஞர்கள் இரா.கல்யாண சுந்தரம், கு.கி.கங்காதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் புலவர் மகா. முருகபாரதி, குறளடியான், பால் பேரின்பநாதன், அஞ்சூர்யா க.செயராமன், லிங்கம்மாள், முனைவர் வரதராசன், இரா.கல்யாண சுந்தரம், மா.வீரபாகு, சங்கர நாராயணன், மு.இராமபாண்டியன், சே.அனுராதா, நா.குருசாமி, பொன்பாண்டி, கு.கி.கங்காதரன், எ.அலகையா, சாந்தி திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். கவிதாயினி செ.அனுராதா எழுதிய மதுரை மாநகர் சிறப்பு கண்ணோட்டம் நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய யாப்பியக்கதிர்கள் ஹைக்கூ (கவிஞர் இரா .இரவி அணிந்துரை நல்கிய நூல்) நூலும் வெளியிடப்பட்டன. நூல் ஆசிரியர்கள் வருகை தந்த அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம். புகைப்பபடக் கலைஞர் ஏற்பாடு மதுரைஉலா ரெ.கார்த்தி கேயன். அரங்கம் தந்து உதவியவர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்.அவர்கள்... 

        வள்ளுவத்தின்  தமிழ்ப்பண்பு

             புதுக்கவிதை 

           கு.கி.கங்காதரன் 

 

அணுவுக்குள் அளவற்ற ஆற்றலே அதிசயம் 

பூவுக்குள் தேனை வைத்ததே இரகசியம்

விதைக்குள் மரத்தை அடக்கியதே மகிமை

குறளுக்குள் தமிழ்ப்பண்பு தாங்கியதே பெருமை

 

மலரைக் கசிக்கினால் மணத்தை நுகரலாம் 

முக்கனிச் சாற்றால் இனிமை சுவைக்கலாம்

தங்கத்தை உரசினால் தரத்தைக் காணலாம்

திருக்குறளை அலசினால் தமிழ்ப்பண்பு அறியலாம்

 

வந்தாரை 'வா'வென்று வரவேற்கும் 'விருந்தோம்பல்'

வறியவருக்குத் 'தா'வென்று உணர்த்தும் 'ஈகை'

உயிர்களை அரவனைக்கச் சொல்லும் 'அன்புடைமை'

இறைவனை அடைய வழிகாட்டும் 'மெய்யுணர்தல்'

 

கற்றபடி கடைபிடிக்கச் சொல்லும் 'கல்வி'

அறநெறியால் இன்பத்தைக் காட்டும் 'வெஃகாமை'

உண்மைக்கு உறுதுணையாய் நிற்கும் 'வாய்மை'

சொல்லின் திறத்தை வழங்கும் 'சொல்வன்மை'

 

மனித வாழ்வின் தரமுயர்த்தும் அறத்துப்பால் 

பொறுப்புகளை எடுத்துக் காட்டும் பொருட்பால்

உயிர்களின் படைப்பினை விளக்கும் இன்பத்துப்பால்

முப்பாலில் தமிழ்ப்பண்பு மிகுந்துள்ளதே உண்மை.

                   ******** 







































Tuesday, 6 September 2022

28.8.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 2 - தமிழால் தலை நிமிர்வோம்

                                


மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் நடந்த மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - தமிழால் தலை நிமிர்வோம் -  படங்கள் . நாள் : 28.8.2022 நேரம் : காலை : 10.00 மணிக்கு

நிகழ்ச்சியின் தொகுப்பு: 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. முனைவர் வரதராசன், கவிஞர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். அன்றைய நாளில் கவிதை பாடிய கவிஞர்கள், பேராசிரியர் சக்திவேல்,  இரா.கல்யாணசுந்தரம், இரா .இரவி, இரா.வரராசன், கு.கி.கங்காதரன், லிங்கம்மாள், குறளடியான், முருகுபராதி, இதயத்துல்லா, அரங்க கிரிதரன், சங்கர நாராயணன், செயராமன், மா.வீரபாகு, அஞ்சூரியா செயராம், சு.பால கிருட்டிணன், கு.பால் பேரின்ப நாதன், கோ.சாந்தி திருநாவுக்கரசு, அனுராதா,  இராம பாண்டியன்,         மு.க.பரமசிவம், பொன் பாண்டி, சுப்ரமணியம், ஆகியோர் "தமிழால் தலை நிமிர்வோம்" என்ற தலைப்பில் கவிதை படித்தனர்.   

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய காதல் யாழ்கள், யாவும் தமிழாய், கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. கவிதை பாடிய கவிஞர்கள் அனைவருக்கும் இரு நூல்களும் அன்பளிப்பாக வழங்கினார், நூல்களின் ஆசிரியர் கவிதாயினி சாந்தி..

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

 

          தமிழால் தலை நிமிர்வோம் 

                            புதுக்கவிதை 

                      கு.கி. கங்காதரன் 

 

குயிலின் இனிமை தமிழில் கேட்கலாம்  

மயிலின் நாட்டியம் தமிழில் காணலாம்  

மல்லிகையின் மணமாய் தமிழில் உணரலாம்  

மங்கல ஒலியையும் தமிழில் இசைக்கலாம்  

 

மந்திர அறிவியலும் தமிழில் படிக்கலாம்  

தந்திரக் கதைகளும் தமிழில் சுவைக்கலாம்  

மருத்துவக் குணமும் தமிழில் சொல்லலாம்  

மனிதநேய உறவும் தமிழில் இணைக்கலாம்    

 

காதல் காவியமும் தமிழில் ரசிக்கலாம்

கலாச்சார பெருமையும் தமிழில் போற்றலாம் 

ஆலய வழிபாடும் தமிழில் பாடலாம்  

அரசியல் வரலாறும் தமிழில் ஊட்டலாம்    

 

கணினி வித்தையும் தமிழில் புரியலாம்  

கர்மங்கள் அனைத்தும் தமிழில் பேணலாம்  

இலக்கணச் மரபுகள் தமிழில் வளர்க்கலாம்  

இலக்கிய அமுதமும் தமிழில் பருகலாம் 

 

நாகரிகம் வளர்ச்சியையும் தமிழில் பேசலாம்  

நெஞ்சத்தில் எந்நாளும் தமிழில் நிலைக்கலாம்

தமிழர்களின் வலிமை தமிழில் காட்டலாம் 

துள்ளும் அழகினை தமிழில் விளையாடலாம்  

 

தமிழனே தமிழால் தலையாய் நிமிரலாம் 

தமிழ்மொழி அடையாளமே உடலாய் பேணலாம்

தமிழின்பால் பற்றே உயிராய் எண்ணலாம்

தமிழன்னையை உள்ளத்தில் மதித்து வணங்கலாம்   

                                  *********




































அடுத்த கவியரங்கம் 25.9.2022 ஞாயிறு அன்று மதுரை மணியம்மை பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்..

தலைப்பு: வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு  

அனைவரும் வருக வருக..