Pages

Showing posts with label கொடை குணம் - சிறுகதை. Show all posts
Showing posts with label கொடை குணம் - சிறுகதை. Show all posts

Saturday, 13 March 2021

கொடை குணம் - சிறுகதை கு.கி.கங்காதரன்

கொடை குணம்
சிறுகதை
கு.கி.கங்காதரன்

"யாருக்குமே கொடுக்கின்ற மனம் இருந்தால்தான் கொடை குணம் பிறக்கும்"

அரிதாக சிலருக்குத்தான் தங்களுக்கு நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்னமே அறிந்துகொள்ளும் ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள். அந்தப் பட்டியலில் சதாசிவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதற்குமுன் பலமுறைகள், அப்படியான நடக்கப்போகும் சில அசம்பாவித நிகழ்வுகளை முன்னமே அறிந்து, அதற்கேற்றாற்போல் அதில் பங்கெடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துத் தப்பித்தும் இருக்கிறார்.

இன்று தனக்கு எங்கிருந்தோ ஏதோ ஒரு ஆபத்து வரப்போகின்றதுஎன்று உள்மனம் எதிரொலித்தது.

இதற்குமுன் சதாசிவம் இம்மாதிரியான வேளையில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது வழக்கம். ஆனால் இன்று ஒரு பெரிய வியாபாரத்தை முடிக்க வேண்டுமென்றால் பயணம் மேற்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் இருந்தார். இதனால் கிடைக்கும் வியாபாரத்தை விட்டுவிட முடியாமல் தவித்தார். முடிவாக என்ன நடந்தாலும் பரவாயில்லை, சென்றேத் தீருவது என்று முடிவும் எடுத்தார். போகும் இடம் தூரமாக இருப்பதோடு விரைவாகவும் செல்லவேண்டும் என்கிற நிபந்தனையும் இருந்தது. இருந்தாலும் தான் இன்று எதைச் செய்தாலும் மிகவும் எச்சரிக்கையாகவும் அதேவேளையில் வேகமாகவும் அதிநம்பிக்கையோடும் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பயணத்திற்காக ஆயுத்தவேலைகள் மடமடவென்று செய்துமுடித்தார். கார் டிரைவராக யாரை அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தபோது அவருக்கு உடனே 'குமரகுரு' ஞாபகம் வந்தது. ஏனென்றால் இளமையும் சுறுசுறுப்போடும் அதில்லாமல் சமயோசிதப் புத்தியோடும் செயல்படக்கூடியவன். எந்த நிலைமையில் இருந்தாலும் தெளிவாகச் சிந்தனை செய்பவன்.

"குரு, வியாபார விசயமா உடனே திருவாரூர் போகவேண்டும். அதற்குவேண்டிய ஏற்பாடு உடனே செய்துவிடு. முக்கியமா, ஒன்னுக்கு ரெண்டு தடவை காரை நன்றாக சரிபார்த்துக் கொள். பயணத்தின்போது எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது" என்று நடக்கப்போகும் அசம்பாவிதத்தை மனதில்கொண்டு அதனை முறியடிக்க முன்ஜாக்கிரதையாகச் சில ஏற்பாடுகளைச் செய்தார்.

"ஆகட்டும் முதலாளி" என்று டிரைவர் குமரகுரு தன் முதலாளி சொன்ன வேலைகளைச் சிரத்தையோடு, விரைவாகவும் செய்ய ஆரம்பித்தான். அவனைப் பொறுத்தவரை எந்த ஒரு வேலையினைச் சொன்னாலும் நேர்த்தியாகச் செய்து முடித்துவிடுவான். அவனுக்குத் திருப்தி உண்டாகும்வரை சலிக்காமல் திரும்பத்திரும்பச் செய்வது அவனது பழக்கமும் கூட.
அனைத்து ஏற்பாடுகளும் துல்லியமாகச் செய்து காரை வாசலில் நிறுத்திவிட்டு தன் முதலாளிக்காக காத்திருந்தான் டிரைவர் குமரகுரு.

அவரும் வேகமாக ஆயுத்தமாகி "குரு, புறப்படலாமா?" என்று கேட்க "புறப்படலாம் முதலாளி. எல்லாவற்றையும் ஒன்னுக்குப் பத்துமுறை சரிபார்த்துட்டேன். எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்று உறுதியாகப் பதில் சொல்லியவாறே காரின் பின்பக்க கதவினைத் திறந்துவிட, அதில் சதாசிவம் வசதியாக உட்கார்ந்த பிறகு, "ம்.. வண்டியை எடுக்கலாம்" என்று குமரகுருவுக்கு பச்சைக்கொடி காட்டினார் சதாசிவம்.

இருவரும்  காரில் ஏறி அமர்ந்ததுதான் தாமதம், கார் சாலையில் பறக்க ஆரம்பித்தது. எந்தச் சாலையில் எப்போது வேகமாகச் செல்லவேண்டும்? எப்போது நிதானமாகச் செல்லவேண்டும் என்பது குமரகுருவுக்கு அத்துப்படி.

சாலைக்கு வந்துவிட்டால் யாராக இருந்தாலும் சாலைவிதிகளைச் சரியாகக் கடைபிடித்தால்தான் எந்த ஒரு விபத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அதில் யாராவது ஒருவர், சாலைவிதிகளை மீறும்பட்சத்தில், அவருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சிலவேளைகளில் கோர நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அதில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக பல உயிர்கள் பலியான சம்பவங்களும் சில நடக்கவும் செய்திருக்கின்றன.

டிரைவர் குமரகுருவின் பார்வையும் கவனமும் சாலையில் லயித்திருந்திருந்தன. சதாசிவத்தின் எண்ணங்களோ தனக்கு நடக்கப்போகும் அசம்பாவிதத்தைப் பற்றி ஒருபுறம் இருக்க, இந்தப்பயணத்தால் தன் வியாபாரத்தில் கிடைக்கும் பெரிய பலனைப் பற்றியையும் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

இதுவரைக்கும் எல்லாமே சரியான பாதையில் போய்க்கொண்டிருந்த அந்தக் காரை மோதும் வண்ணம், திடீரென்று தவறாக மற்றொரு கார் எதிர்திசையில் வந்து கொண்டிருக்கின்றது.

"குரு, அதோ ஒரு கார்! மோத வருவதுபோல் நமக்கு எதிரே வருது, பார்த்து …" என்று உசார் படுத்தினார். அவ்வேளையில் தமக்கு நடக்கப்போகும் அசம்பாவிதம் இதுதான்என்றும் உணர்ந்தார்.

"ஐயா, பாரத்துட்டேன். ஆனால் அந்தக் கார், நம்மைக் கவனிக்காமல்..."
"அந்தக் காரில் 'பிரேக்' இல்லைபோல இருக்கு. ஏதாவது உடனே செய்!"
"முயற்சி பண்ணுகிறேன் முதலாளி"  

உடனே ஏது செய்வதறியாது குமரகுரு தனது அத்தனைத் திறமையும் அனுபவமும் கொண்டு சாமர்த்தியமாக காரைத் திருப்பிச் சட்டென்று 'பிரேக்' போட, அதைச் சற்றும் எதிர்பாராத சதாசிவம் நிலைகுலைந்து முன்இருக்கையில் மோத, கார் எவ்வித சேதமில்லாமல் தப்பித்தது. ஆனாலும் சதாசிவத்தின் தலை, முன்இருக்கையில் மோதியதால் அவர் தலையிலிருந்து பொலப்பொலவென்று இரத்தம் ஆறாய் வெளிவந்தது. அதைப்பார்த்துச் சுதாரித்த குமரகுரு, ஒரு துணியால் அவர் தலையைச் சுற்றி மேற்கொண்டு இரத்தம் அதிகமாக வெளிவராமல் தடுத்தான்.

"முதலாளி, முதலாளி" என்று குமரகுரு பலமுறை கூப்பிட்டும் சதாசிவம் விழிக்காமல் இருக்கவே அவனுக்கு லேசாகப் பயம் தொத்திக்கொண்டது.  

ஆயினும் சதாசிவம் தலையிலிருந்து அதிக இரத்தம் வெளியேறியதால் மயக்கமாகிப் போனார். 'தன் முதலாளிக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. எப்படியாவது அவரை நல்ல நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும்' என்கிறத் துடிப்பு அவனுள் இருந்தது.

நிலைமை மேலும் மோசமடைவதற்குள் பக்கத்தில் ஏதேனும் ஆசுபத்திரி  இருக்குமா? என்று காரை உருட்டிக்கொண்டே ஓட்டிச் சென்றான் குமரகுரு. அந்த இடம் கிராமம் போல இருந்ததால் அவனால் ஆசுபத்திரியை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாமல் போனது.

'சீக்கிரம் ஒரு நல்ல ஆசுபத்திரியைக் காட்டு!' என்று பல தெய்வங்களை மனதில் வேண்டிக்கொண்டான்.

அவன் நேரத்திற்குச் சற்றுத் தொலைவில் ஒரு ஆசுபத்திரி இருப்பதைக் கண்டவன், காணக் கிடைக்காத காட்சியாக அதனைப் பார்த்தான். உடனே உள்ளே சென்று டாக்டரிடம் நடந்ததைக் கூறி தன் முதலாளிக்கு வேண்டிய சிகிச்சையை வழங்குமாறு வேண்டிக்கொண்டான். அங்கிருந்த டாக்டரும் நர்சும் கொஞ்சம்கூட தாமதம் செய்யாது உடனே சிகிச்சையை ஆரம்பித்தார்கள். பல சோதனைகள் செய்தனர். கடைசியாக அவர் தலையிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவருக்கு இரத்தம் உடனே உடலில் செலுத்தியாகவேண்டும் என்று குமரகுருவிடத்தில் டாக்டர் சொன்னார்.

"டாக்டர் எந்தவகை இரத்தம் வேண்டும்" என்று சொல்லும்படி விரைவுபடுத்தினான். 
"இந்த பாருங்க தம்பி, இவரோட இரத்தம் அரியவகை இரத்தம். உடனே கிடைப்பது ரொம்பக் கடினம். ஆனா முயற்சி பண்ணுகிறேன்என்று கைபேசி மூலம் பல இரத்த வங்கிகளுக்குத் தொடர்பு கொண்டார் டாக்டர்.
"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் முதலாளியை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்" என்று கெஞ்சாத குறையாக சொன்னான்.

அதேநேரத்தில் அந்த அரியவகை இரத்தத்தைத் தனக்குத் தெரிந்தப் பலரிடம் கேட்டுப்பார்த்தான் குமரகுரு.

அவர்களுக்குக் கிடைத்தபதில்கள் இல்லை என்றும் நாளை காலையில் கிடைக்கும்என்றே வந்தன.
டாக்டர் ஒரு கட்டத்தில் அமைதியாய் யோசனையில் மூழ்க, அதனைக் கலைத்தான் குமரகுரு.

"டாக்டர், கடைசியாக எனது இரத்தம், எந்தவகை இரத்தம் என்று பரிசோதித்துப் பாருங்க டாக்டர். அப்பறம் கடவுள் விட்ட வழிஎன்று தனது கடைசி நம்பிக்கையை முயற்சித்தான் குமரகுரு.

அவனுடைய நம்பிக்கையும் டாக்டரின் முயற்சியும் வீண்போகவில்லை. ஆம்.. குமரகுருவின் இரத்தமும் சதாசிவத்தின் இரத்தமும் ஒரேவகையைச் சேர்ந்தது என்று பரிசோதனையின் முடிவு அறிவிக்க, மேற்கொண்டு நடக்கவேண்டியதை டாக்டரும் நர்சும் சற்றும் தாமதிக்காமல் உடனே ஆரம்பித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக சதாசிவத்திற்கு சுயநினைவு திரும்ப ஆரம்பித்தது. தான் மிகப்பெரிய ஆபத்திலிருந்துத் தப்பித்ததாக உணர்ந்தார். பக்கத்தில் படுத்திருந்த குமரகுருவின் கையிலிருந்து இரத்தம், அவர் உடலில் ஏறிக்கொண்டிருந்தது. இன்று காலையில் தனது உள்மனம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்ததால்தான் இந்த விணைஎன்று அவர் எண்ணிக்கொண்டார். இந்நிலையில் அவர் தம் வியாபாரத்தைவிட தனது உயிரைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்.

சிறிதுநேரத்தில் முழுவதுமாக குணமடைந்தவராக உடலில் தெம்பும் மனதில் திடமும் தெரிந்தன. ‘தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம்என்று சொல்லிக் கொண்டார்.

"டாக்டர், நீங்கள் சரியான சமயத்திலே என் உயிரைக் காப்பாத்திட்டீங்க. அதுக்கு என்னோட பரிபூரண நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றவாறு டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட முயற்சித்தார் சதாசிவம்.

"இது, என்னைப் போன்ற ஒவ்வொரு டாக்டரின் கடமை. இதைப் பத்திப் பெரிசா பேசவேண்டியதில்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நீங்க குணமாகிவிடுவீங்க. உங்களுக்கு இப்ப நல்ல ஓய்வு தேவை" என்று டாக்டர் சதாசித்திற்கு நம்பிக்கையளித்தார்.

"என்ன இருந்தாலும் இந்த உயிர் பிழைச்சது உங்களால்தானே டாக்டர்!"

"எனக்கு நீங்க நன்றியைச் சொல்வதைவிட, உங்கள் டிரைவருக்கு முதல்லே நன்றியைச் சொல்லுங்க. அவர்மட்டும் உங்களுக்குச் சரியானபடி முதலுதவியைக் கொடுத்திட்டு, இங்கு வந்திருக்காவிட்டால் நீங்கள் பிழைத்திருக்க மாட்டீங்க" என்று தனது அபிப்பிராயத்தைச் சொன்னார் டாக்டர்.  

"கண்டிப்பாக. அவன் எனக்குக் கொடுத்த உயிர்பிச்சைக்கு என் நன்றியை தெரிவிப்பதோடு அவனை வாழ்நாள் முழுவதும் நன்றாக கவனித்துக் கொள்வேன். இப்போது உங்களுக்கு ஏதாவது பெரிசா செய்யனும்னு நினைக்கிறேன். நீங்க மறுக்கக் கூடாது. என்னைப்போல அவசர சிகிச்சைக்கு மட்டுமில்லாம ஏழைகளுக்கும் உங்க மூலமா இலவசசேவை கொடுக்கணும். அதுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன்" என்று தன் செய்நன்றியை உடனே காட்டவேண்டும் என்றுத் துடித்தார் சதாசிவம்.

"இப்ப அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஏற்கனவே நான் ஏழைகளுக்கு இலவசமாத்தான் சிகிச்சை கொடுக்கிறேன். மீறி எனக்கு ஏதாவதுத் தேவைப்பட்டா உங்களிடம் வருகிறேன்" என்று அவருடைய கைபேசி எண்ணையும், விசிட்டிங் கார்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டார் டாக்டர்.

டாக்டரின் நடவடிக்கை அங்கிருந்த நர்சுக்கு அதிசயமாக இருந்தது. ‘இந்த டாக்டரிடம் பணக்காரர் யாராவது சிக்கிக் கொண்டால் அவரிடத்தில் எவ்வளவு பணம் கரக்கமுடியுமோ அவ்வளவு பணம் கரக்கக் கூடியவர்என்று அந்த நர்சுக்கு நன்றாகவேத் தெரியும். பின் ஏன் இந்த திடீர் ஞானோதயம்?' என்பதற்கு விடைத்தெரியாமல் தவித்தாள்.

"டாக்டர் என்ன இருந்தாலும் அவர் கொடுத்த வாய்ப்பை ஏத்துக்காம இருந்தது எனக்கு வருத்தம்தான். இதுதான் தகுந்த சமயம்னு அவர்கிட்டேயிருந்து சில லட்சத்தைக் கரந்திருக்கலாம். அநியாயமா விட்டுட்டீங்களே"

"நர்சு.. நீ சொல்றதுபோல, அவர் இங்கு சிகிச்சை எடுக்க வந்தவுடனே, அவரிடமிருந்து சில லகரம் கரந்துவிடத் திட்டம்போட்டது உண்மை"

"பின்னே, ஏன் டாக்டர் அந்தமாதிரி செய்யலே?"

"அவருக்கு அரியவகை இரத்தம் தேவைன்னும் அந்த இரத்தம் இலேசா கிடைக்காதுன்னும் நமக்கு நல்லாத் தெரியும்"

"அதுக்கு என்னா டாக்டர் செய்யுறது. நீங்க அதுக்கு முயற்சி பண்ணீங்களே. நல்லவேளை அந்த டிரைவரோட இரத்தம் சேர்ந்திச்சு. அதனாலே அவர் பொழச்சார். இல்லாட்டிப் பொணமாத்தான் போயிருப்பார்" என்று சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள் நர்சு.

"அது தப்பு. நான் நினைத்திருந்தா ரொம்ப எளிதா அவரைக் காப்பாத்திருக்கலாம். ஆனா எனக்கு மனசு வரலே. மனசு இருந்தாத்தான் கொடை குணம்வரம்னு டிரைவர் மூலமா எனக்கு இப்பதான் தெரிச்சது"

"என்ன டாக்டர் சொல்றீங்க?"

"ஆமா.. அதுதான் உண்மை. ஏன்னா என்னோட இரத்தமும் அந்த அரியவகையைச் சேர்ந்தது. சொல்லப்போனா நான்தான் அவருக்கு முதல்லே இரத்தம் கொடுத்திருக்கணும். நான் அதைச் செய்யலே. என்னைப் போல சுயநல டாக்டர் பலர் இருக்கிறதாலேயேப் பல நோயாளிங்க செத்திருக்காங்க. இதுவரை எந்த டாக்டராவது தனது இரத்தத்தை சாகக் கிடக்கும் நோயாளிக்கு கொடுத்திருக்காங்களா? இல்லையே. எந்தவகை இரத்தமானாலும் காசுக்காகத்தானே வாங்கி நோயாளிகளுக்குக் கொடுக்கிறாங்க. என் செயலைப் பார்த்து நானே வெட்கப்படுறேன். ‘தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்னு டாக்டர்களும் அவசியம் தெரிஞ்சுக்கணும். இனிமே என்னால் முடிஞ்ச அளவுக்கு அதைக் கடைபிடிக்க ஆரம்பிக்கப்போறேன். இந்தமாதிரி நிகழ்ச்சி இனி என்வாழ்க்கையிலே நடக்கவேக் கூடாதுன்னும் முடிவுபண்ணிட்டேன்" என்று என்று தன் மனதில் உள்ளதை வெளியேக் கொட்டினார் அந்த டாக்டர்.

இந்த உண்மையைக் கேட்ட அந்த நர்சுவின் மனதிலும் ஒருவித எண்ணம் உதித்தது.
"டாக்டர்ங்க மட்டுமில்லே. நர்சுகளும் இரத்த தானத்தைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். அது நான் இப்பவே அதுக்குத் தயாராகிவிட்டேன்"

"என்னுடைய உன்னுடைய இந்த கொடை எண்ணம் கண்டிப்பா ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இது உறுதி" என்று உணர்ச்சி வசப்பட்டார் டாக்டர்.     

"நர்சுஎன்று அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தார் டாக்டர்.
அவங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சுட்டு இருக்காங்க?"

அவர்களைப் பார்த்தவாறே "அவங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டே இருக்காங்க. புறப்படுறதுக்கும் தயாராகிட்டாங்க போலிருக்கு" என்கிறத் தகவலை டாக்டருக்குத் தந்தாள் நர்சு. அங்கே...

"முதலாளி!"

"என்ன குரு?"

"அடுத்து எங்கே போகணும் முதலாளி?"

"நேராக வீட்டுக்கு. இனி அந்த வியாபாரம் எனக்கு வேண்டாம்"

"சரிங்க முதலாளி. நான் ஒன்னு சொல்ல நினைக்கிறேன். முதலாளி கோபிக்ககூடாது"
"என்ன குரு. சும்மா சொல்லு"

நாளைக்கு என் டிரைவர் வேலையை ராசினாமா செய்யப்போறேன்!" என்கிற அதிர்ச்சி தகவலை சொன்னான்.

திடீரென்று இப்படி பேசியபோது ஒன்றும் பிடிபடாமல் விழித்தார் சதாசிவம்.

"ஏன்? என்ன காரணம் குரு?"

"என்னாலேதானே முதலாளி உங்களுக்கு இந்த துன்பம் நேர்ந்திச்சி. உங்க உடம்பும் இப்படி ஆயிடுச்சி. அதோடு பெரிய வியாபாரமும் போயிடுச்சு"

"குரு, உண்மையிலே நீ காரை ஓட்டிட்டு வந்ததாலேதான் நான் பிழைச்சேன். வேறே யாராவது ஓட்டிட்டு வந்திருந்தா நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு? என் உசுரு விட வியாபாரமா முக்கியம்? நீ செஞ்சுருக்கிற இரத்த தானத்தை அவ்வளவு சுலபமா வேறே யாரும் செஞ்சிருக்கமாட்டாங்க"

"இல்லை முதலாளி, என்னோட மனசு.."

"நான் இன்னொன்று சொல்றேன். அதைச் சொன்னா இன்னும் அதிர்ச்சி ஆயிடுவே"
"அது என்ன முதலாளி?"

"இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்கும்ன்னு எனக்கு முன்னமே தெரியும். என்னோட உள்மனசு எவ்வளவோ தடுத்தும், என்னோட பேராசையினாலேதான் நான் இந்த கதிக்கு ஆளாயிருக்கேன். உன்னோட கொடை மனசு என்னையும் கொடைக்காரனா மாத்திடுச்சி. என்னோட அகக்கண்கள் திறந்திருச்சி. புதிய சக்தியும் பொறந்திருச்சி. இன்றையிலிருந்து என்னாலானப் பல உதவிகளைத் துயரப்படுகிற ஏழைகளுக்கு உன்மூலமாச் செய்யனும். அதுதான் என்னோட ஆசை. அதை நிறைவேத்துவாயா?"

"முதலாளி, இதைவிட எனக்கு மகிழ்ச்சி எதுவுமில்லை" என்று ஆனந்தக் கண்ணீரோடுச் சம்மதித்தான் டிரைவர் குமரகுரு.

&&&&&&&&&&&&&&&