Pages

Monday 23 May 2022

அறிவுடன் தமிழா விழி! அயலவர் சூழ்ச்சி அழி! புதுக்கவிதை மதுரை கு.கி.கங்காதரன்


அறிவுடன் தமிழா விழி!

அயலவர் சூழ்ச்சி அழி!

 புதுக்கவிதை

மதுரை கு.கி.கங்காதரன்

நற்றமிழின் வாசம் குறைகிறது

ஏற்றம் காணாது தள்ளாடுகிறது

ஊடகத்தில் தூயதமிழ் இல்லை

உன்தமிழ் எடுப்பார் கைப்பிள்ளை?

 

தமிழொளியைப் பரப்பும் சுடர்

தமிழுக்கு வந்ததோ இடர்

அந்நிய மொழியின் மோகம்

அறிந்தே வீழ்ந்ததே சோகம்.

 

சுற்றுச்சூழலை அழிக்கும் காற்றுமாசு

செந்தமிழை சிதைக்கும் ஆங்கிலமாசு

காலணிக்கேற்ப காலறுப்பது முறையா?

கலப்புத்தமிழில் பேசுவது சரியா?

 

கணினியில் தமிழால் ஆக்கிரமிப்போம்

காற்றில் தமிழை ஒலித்திடுவோம்

தமிழேடுகளை இணையத்தில் பதிப்போம்

தங்கத்தமிழெனத் தரணியில் பேரெடுப்போம்!

 

செம்மொழிகளுள் தமிழும் ஒன்று

அம்மொழியினைக் காப்பது நன்று

தமிழர்கள் புறப்படுவோம் இன்று

தகர்த்துக் காட்டுவோம் வென்று!

 *************************