Pages

Thursday 28 January 2021

பாகம் : 4 - பருத்தியில் வண்ணப் புரட்சி -அறிவியல் - குறுநாவல் - (நிறைவுப் பகுதி) - மதுரை கங்காதரன்

 

பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 4



அறிவியல் - குறுநாவல் 

       (நிறைவுப் பகுதி)

                                                   மதுரை கங்காதரன் 

தொடர்ந்து பேசியதன் களைப்பு அந்த வெளிநாட்டவரின் முகத்தில் தெரிந்தது.

 அங்கேயும் இரண்டு ஆண்டுகள்! அங்கு இவர் ஏறாத ஆராய்ச்சிக்கூடமில்லை. பார்க்காத அறிவியல் அறிஞர்களும் இல்லை. இனி எனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விமோச்சனமே கிடைக்காது என்று எண்ணி மறுநாள் மீண்டும் இந்தியாவுக்கே செல்ல ஆயுத்தமானார். அன்றைக்கு இரவு நான் எதேச்சையாக அமெரிக்காவில் உள்ள எனது நண்பர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. எனது நண்பர்தான் அவருடைய நண்பர் என்று அப்போது எனக்குத் தெரிய வந்தது. அன்று அங்கே முதன்முதலாக இவரைச் சந்தித்தேன். இவர் அங்கு வந்த நோக்கத்தையும், ஆராய்ச்சியின் விவரத்தையும், தனக்கு நடந்தனவற்றையும் சற்று விரிவாக எனக்கு எடுத்துச் சொன்னார்.”

நானும் கூட அமெரிக்காவில் உள்ள பல ஆராய்ச்சியாளருக்கு ஆராய்ச்சி செய்யும் வசதி அளித்து வருகிறேன். அவர்களின் ஆராய்ச்சி வெற்றி பெற்றால், எனக்கு அதில் ஒரு குறிப்பிட்ட பங்கினைத் தருவார்கள். பலருக்கு வாய்ப்பு தந்திருக்கின்றேன். வருடத்திற்கு ஒரு ஆராய்ச்சியாவது வெற்றி அடையும். அந்த பணமே என் தனிப்பட்ட செலவுக்கும் என் ஆய்வுக்கூடம் பராமரிப்புக்கும் போதுமானதாக இருக்கும்என்று என்னைப் பற்றிய அறிமுகம் செய்து கொண்டேன்

 இவரது பேச்சிலிருந்து இவரின் அசராத நம்பிக்கையும், விடாமுயச்சியும் பார்த்த பின்பு என் மனம், இவருக்கு நீ உதவி செய் என்று கட்டளையிட்டது.’ அப்போது, நான் இவரிடம், உங்களது ஆராய்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தேன். அதன்படி இவர் தன் இந்தியப் பயணத்தை ரத்து செய்தார். அப்போது எனது நிபந்தனையினைச் சொன்னேன். ஒருவேளை, இதில் நீங்கள் வெற்றி பெற்றால் காப்புரிமையில் நூறு சதம் எனது பெயரில் இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஏனென்றால், இதில் எனக்கு முழுக் காப்புரிமை கிடைத்தால், உலகத்தின் பணக்காரப் பட்டியலில் நிரந்தரமாகவே முதலிடத்தில் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. அதனால்தான் நான் அவ்வாறு இவருக்கு அழுத்தம் கொடுத்தேன் என்றார்.

இதனைக் கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் இது மகாமோசம்! ஒருவகையில் இது சதிச்செயல் கூட!” என்று பலவாறு அந்த வெளிநாட்டவரை விமர்சித்தது.

இந்த நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, இவர் ஆராய்ச்சியின் காப்புரிமையை, என் பேருக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் இவரிடத்தில் சொல்லியதைக் கேட்டு நீங்கள் கொதிப்படையலாம். அவ்வேளையில் இவரும் என்னைக் கோபத்துடன் ஏளனமாகப் பார்த்தார். அப்போதையச் சூழ்நிலையில் இவர், கடுமையான எனது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையென முடிவுக்கு வந்தார். எப்படியும் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று மனித சமுதாயத்திற்கு நன்மைகள் தர வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் இவர் மனதில் ஆணித்தரமாக இருந்ததால், தன் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு அதற்கு சம்மதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.”

கண்டுபிடிப்பாளர்களை எப்படியெல்லாம் அலையவிடுகிறார்கள்? இம்சைப் படுத்துகிறார்கள், இயலாமையை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக கொள்கிறார்கள்?’ என்று வெட்ட வெளிச்சமாகப் பலரும் இதன்மூலமாக நன்றாகத் தெரிந்துகொண்டனர்.

அந்த வெளிநாட்டவர், விஞ்ஞானி வினோதனைக் கண்ணால் நான் சொல்வதெல்லாம் சரிதானே?’ என்று அவரைப் பார்த்துக் கேட்க, அவரும் சரி என்று தலையாட்டிவிட்டு, கண்ணாலேயே சமிங்கை செய்து மேலே தொடரச் சொன்னார்.

அன்றையச் சூழ்நிலையில் எனது பணத்தாசை கனவு மென்மேலும் அதிகரித்தது. ஏன் வெறியாகவும் மாறிவிட்டது. எப்படியும் உலகப் பணக்காரர் வரிசையில் எப்போதும் நான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம், எனது மூளையில் நங்கூரமாய்ப் பதிந்தது. இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று என் கொள்கையினை நானே மாற்றிக்கொண்டேன்.  அன்று முதல் நான் இவரின் ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லா வசதிகளை இவருக்குச் செய்து கொடுத்தேன். முதலில் சில இலட்சங்கள் செலவு செய்தேன். ஆனால், இவர் ஆய்வுமேல் கொண்ட ஈடுபாடும், கடின உழைப்பையும் கண்ட நான், இவர் இதில் வெற்றி பெற்றேத் தீருவார் என்கிற நம்பிக்கை பிறந்தது. அதனால் கோடிக்கணக்கில் செலவு செய்தேன்.”.

நான் எவ்வளவுக்கெவ்வளவு பணவெறி கொண்டிருந்தேனோ, அவ்வளவுக்கவ்வளவு இவர் எவ்வித சலனமும் இல்லாமல் கண்ணும் கருத்துமாய் இவரது ஆய்வில் கவனம் செலுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பானது வெற்றிபெறக் குறைந்தது இவருக்குப் பத்து வருடங்களாவது ஆகும் என்கிற எண்ணத்தில் நான் நினைத்தேன். ஆனால் வெற்றி இவர் பக்கத்தில் இருந்தது. இவரது நல்லெண்ணத்திற்கும் விடாமுயற்சிக்கும், கடவுள் ஐந்தே வருடத்தில் இவரது கனவை நினைவேற்றிவிட்டார். அப்போது இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது ஒரு பக்கத்தில் இருந்தாலும், மறுபக்கத்தில் காப்புரிமை விசயத்தில் சற்று அதிருப்தியும். சோகமும் இவர் மனதில் இருப்பதை உணர்ந்தேன். அப்போது எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஐம்பது சதம் இவருக்குக் கொடுப்பதாக உறுதியளித்தேன். அதைக் கேட்ட இவர் சற்று நிம்மதி அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்.”

அப்பாடா, நல்லவேளை இந்த வெளிநாட்டவர் ஆரம்பத்திலே நிபந்தனைப் போட்டது போல முழுக்காப்புரிமையைத் தானே வச்சுக்காம பாதியாவது கொடுத்தாரே. இந்த மனுசன் கிட்டேயும் இரக்ககுணம் இருக்கே! அதுவரைக்கும் சந்தோசம்.  இவ்வளவையும் விஞ்ஞானி வினோதன் பொறுமையா கேட்டுட்டு இருக்காரே. அதுவும் நல்லது. அடுத்து என்ன சொல்ல வர்றார்னு பார்ப்போம்? என்று கூட்டத்தில் உள்ள ஒருவர் தன் அனுதாபத்தை மனதிலே அடக்கி வைத்துக் கொண்டார்.

என் பணத்தாசைக் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால், இவரது ஆசை என்னவாக இருக்கும்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்.”

அந்த கேள்விக்கு இவர் அளித்த பதில், என் பணத்தாசைக்கு சாவு மணி அடித்தது. ஏனென்றால் இதில் வரும் வருமானம், ஒவ்வொரு நாட்டிலும், பல துறையைச் சார்ந்த ஆராய்ச்சி ஆய்வகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதோடு அங்கு ஆராய்ச்சி செய்ய வரும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டிய உணவு, இருப்பிடம், ஆய்வுச்செலவு உட்பட அனைத்தும் அவர்களுக்கு இலவசமாகவே கொடுக்க வேண்டும் என்று சொன்னபோது, என்னை நானே இளக்காரமாக நினைத்தேன். இங்கு வரும் வரையில் பணம் ஒன்றே குறியாக இருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு, இவர் மீது நீங்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பு, குறிப்பாக மாணவ மாணவிகள் இளைஞர்களைப் பார்த்தபோது, எனது எண்ணத்தையும் மாற்றிக்கொண்டேன். ஆம்! எனது காப்புரிமை பங்கையும் இலவசமாக உலகுக்கு அளிக்க முடிவு செய்துவிட்டேன் என்றபோது கூட்டமே எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அது அடங்க நீண்ட நேரமானது.                

ஆதாவது, இந்தத் தொழில்நுட்பத்தை இந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்தலாம். அதற்காக எவ்வித விலையும் தரவேண்டியத் தேவையில்லை. இதனால் ஏழை எளியோர் முதல் பணக்காரர் வரை, சரிசமமாக ஒரே விதமாகப் பலன் பெறுவார்கள் என்றபோது கூடியிருந்த கூட்டம் மகிழ்ச்சியின் உச்சமான எல்லைக்குச் சென்றதை அவர்களின் முகத்தில் எதிரொளித்தது.

இதுவரையில், நீங்கள் இவரின் ஆராய்ச்சிப் பற்றியத் தகவல்களைக் காதால்தான் கேட்டீர்கள். இப்போது கண்களால் பார்க்கப் போகிறீர்கள்!” என்று மேடையில் நடுவில் இருந்த அந்தக் கண்ணாடிப் பெட்டியை மறைத்திருக்கும் திரையை விலக்கிக் காட்ட, அதனருகில் அமர்ந்திருந்தவர்கள் உட்பட, நேரில் பார்த்தவர்களும், பெரியத்திரை மற்றும் நேரடியாக ஒலி ஒளிப் பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்து ஊடங்களில் பார்த்த மக்கள், அந்த அதிசயக் காட்சியை வைத்தக் கண்களை எடுக்காமல் கண்டு களித்தனர். அதற்குக் காரணம் வானவில் நிறங்களில் இருந்த பருத்திப் பஞ்சுகள்! இதென்ன மாயமா? மந்திரமா?’ என்று நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்து உறுதி செய்தனர்.

இதற்கே இப்படி ஆச்சரியப்படுகின்றரே! இனி சொல்லப் போகும் விசயத்தைக் கேட்டால், இதோ என் முன் உட்கார்ந்து இருக்கும் விஞ்ஞானி வினோதனை நீங்கள் விடமாட்டீர்கள் என்று பீடிகையைப் போட்டார்.

அனைவரும் என்ன?.... என்ன? உடனே சொல்லுங்கள் என்று ஆரவாரம் செய்தனர்.

ஆதாவது, இயற்கையான நிறமுள்ள இந்தப் பஞ்சைக் கொண்டு நெய்து, அதனை ஆடையாக அணிந்து கொண்டால், உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டமும், இதயத்துடிப்பும் சீராகச் செயல்பட வைக்கும். அதோடு வெளியிலிருந்து தாக்கும் கெட்டக்கிருமிகளையும் இந்த வண்ணமயமான பஞ்சுகள் தடுக்கின்றது என்று சொல்லச்சொல்ல கூட்டம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது.

இது மட்டுமல்ல, இந்தப் பருத்திவிதை பூக்களின் விதையோடு சேர்ந்து உருவானதால், ஒவ்வொரு வண்ணப் பஞ்சுவிற்கும் ஒவ்வொருவிதமான நறுமணம் இயற்கையாகவே தருகிறது என்று சொல்ல மேடையில் உள்ளவர்,

அந்தப் பஞ்சினை முகர்ந்து பார்த்து இது ரோசாப்பூ வாசனை! இதில் மல்லிகை வாசனை உள்ளது!” என்று வர்ணித்தனர்.

கடைசியாக என்றபோது எல்லோரின் ஆவல் குற்றால அருவியாய் அறிந்துகொள்ளும் ஆசையாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தப் பருத்தியிலிருந்து கிடைக்கும் கொட்டை பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை உள்ளதோடு, இதன் மூலம் எடுக்கும் பால் நோய்எதிர்ப்புச்சக்தியைத் தருவதோடு பசியையும் போக்கும் ஆற்றலுடையது! இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இருக்கலாம் என்று இவர் நம்புகிறார். அவைகளை இளைஞர்கள் மற்றுமுள்ள அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்து இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதே இவரது ஆசை. விஞ்ஞானி வினோதன் இதுபோன்ற புதுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதில் பல சாதனைகள் செய்ய வேண்டும்! என்று வாழ்த்தி அமர்கிறேன். நன்றி, வணக்கம்என்று தனது நீண்ட உரையை முடிக்க, கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இவரைப் போல சில பேர் இருக்கிறததாலே என்னவோ புதுப்புது கண்டுபிடிப்புங்க தினமும் நமக்கு கிடைச்சுட்டே இருக்கு என்று அவரைப் போற்றிப் பகழ்ந்தனர். 

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனதில் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் ஒரு தடவையாவது விஞ்ஞானி வினோதனை நேரில் பார்த்துப் பேசிட வேண்டும் என்கின்ற வைராக்கியம் எழுந்தது.

மாணவ மாணவிகள், இளைஞர்கள் ஒரு படி மேலாக இன்று எப்படியாவது அவரிடம் பேச வேண்டும் என்றுத் துடிதுடித்தனர்.

அமைதி அமைதி. இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ளது. இவர் மாலை வரையில் இங்குதான் இருப்பார். அதனால் நீங்கள் தாராளமாக உங்கள் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூட்டத்தினரின் அன்பையையும், ஆர்வத்தையும் அளக்க முடியாமல் திணறினார்.

விழாவின் நிறைவுப் பகுதியாக, இப்போது குலுக்கலில் தேர்ந்தெடுப்பவர்கள் கேள்வி கேட்கலாம் என்றதற்கு

நீங்களே ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டீர்கள் இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று ஒரே மாதிரியாகப் பதிலலித்தனர்.

இப்போது விஞ்ஞானி வினோதன் ஒரு செய்தி தர இருக்கிறார்என்றார் அவர்

அனைவருக்கும் வணக்கம். இதுவரையில் என் வெளிநாட்டுத் தோழரும், இந்த வெற்றிக்குப் பல வழிகளில் உதவியவருமான டாக்டர் ஜான் மில்லர் அவர்கள், மிகத் தெளிவாக எனது கண்டுபிடிப்பின் வெற்றிப் பயணத்தைத் தமிழில் தொகுத்துப் பேசியதற்கும், அதை நீங்கள் இவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டதற்கும் மற்றும் நம்நாட்டு, வெளிநாட்டு அறிவியல் அறிஞர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இன்றைய நிகழ்வு நாளைய விஞ்ஞான வாசலுக்குத் திறவுகோலாக இருக்கும். அறிவியல் அறிவே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விடிவெள்ளி. அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனது அடுத்த ஆராய்ச்சி பற்றிய அறிவிப்புஎன்றபோது அரங்கம் நிசப்தமாகக காட்சியளித்தது.

என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வத்துடன் கேட்டனர். சிலர் இவர் இதில்தான் ஆய்வு செய்வார் என்று ஊகித்து வைத்திருந்தனர்.

ஆனால் இவர் எல்லாவற்றையும் தாண்டி, நான் அரிசியில் ஆராய்ச்சி செய்து அதில் பலவண்ண அரிசியை உருவாக்குவது என்று திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால் வெண்மை கொண்ட அரிசி போன்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் ஏதாவது ஒரு வண்ணம் கொண்ட உணவுப் பொருட்களில்தான் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதோடு. நோய் எதிர்ப்பு சக்கதியும் மிகுதியாக இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. எனவே வண்ணமுள்ள அரிசி. அச்செயலைச் செய்யும் என்று நம்புகிறேன்!என்றபோது அரங்கமே விஞ்ஞானி வினோதன் வாழ்க! வாழ்க!! என்று வாழ்த்தியது. அங்கு கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

இப்போது நிறைவாக நமது இந்தியாவின் சிறந்த அறிவியல் அறிஞர் பேச வருகிறார்என்று விழா ஒருங்கிணைப்பாளர் அவரைப் பேச அழைத்தார்.

அவர் எழுந்து ஒலிபெருக்கியின் அருகில் சென்றபோது, ஐயா அந்த நிகழ்வைச் சொல்ல வேண்டாம் என்று விஞ்ஞானி வினோதன் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல

இல்லை இல்லை சொல்லியேத் தீரவேண்டும். அப்போதுதான் என்போன்ற விஞ்ஞானிகளுக்குப் புத்தி வரும் என்று ஆவேசத்துடன் பேசினார்.

இதோ விஞ்ஞானி வினோதன், ‘இந்தியாவின் இளைய இன்றைய சமுதாயத்திற்கு, அறிவியலில் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, விஞ்ஞானிகளுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்குவார் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. யாருக்குமே தெரியாத, அவரோடு நடந்த ஒரு நிகழ்வினை உங்களோடு பகிர்ந்து கொள்ள வரும்புகிறேன். அப்போதுதான் என்னைப் போன்ற அறிவியல் அறிஞர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களிடத்தில் எவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்று தெரிய வரும்?” என்று ஒரு புதிர் போட அனைவரும் ஒரு சில வினாடிகள் மௌனமானார்கள். இவர் என்ன சொல்ல வருகிறார்? என்று தங்கள் பார்வையினைக் கூர்மையாக்கிக் கவனித்தார்கள்.

இவர் என்னிடமும் தன் ஆராய்ச்சிக்கு உதவி கோரி வந்தார். இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையினை நன்றாகப் படித்துப் பார்த்தேன். இக்காலத்திற்கு இவ்வுலகைக் காப்பதற்குப் பயன்படக் கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று நன்கு உணர்ந்தேன். அப்போது என்னுடைய அகந்தை தலைத்தூக்கியது. இந்த ஆராய்ச்சியில் இவர் வெற்றிபெற்றால் எங்கே  இப்போது இருக்கும் எனது மதிப்பு மரியாதை கௌரவம் குறைந்துவிடுமோ? என்று  நினைத்தேன். அதனால் இவர் இவ்வாராய்ச்சியில் என்றுமே வெற்றி பெறக்கூடாது என்று நான் உறுதியோடு இருந்தேன். அதனால் இவரின் நம்பிக்கையினைத் தவிடுபொடியாக்க. இவரிடத்தில், ‘இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா?’ என்று கேலி செய்ததோடு, இவரை அவமானப்படுத்தி, ‘இந்தக் கட்டுரை வெறும் வெத்துவேட்டு! என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டேன். அப்போது நான் எழுதிய கட்டுரைகளை இவர் எழுதிய இந்தக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். என்னதான் நான் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல ஊடகங்களில் வெளிவந்தாலும், அவையனைத்தும் மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் இல்லாததை என்னால் அறிய முடிந்தது. நான் எனது கட்டுரையின் எண்ணிக்கைகளை மட்டும் கூட்டினேனே தவிர இந்த சமுதாயத்தின் பயன்பாடு பற்றிக் கவலைபடவில்லை. என் சுயநலம், ஆனவம் ஒழிந்தது. இவர் மட்டுமல்ல. இவரைப் போல் பல இளம் விஞ்ஞானிகளை அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிவரச் செய்யாமல் தடுத்திருக்கிறேன். அவற்றில் எனது ஞாபகத்தில் இப்போது இருக்கின்ற கட்டுரைகளான உப்புத் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வேர்களின் மூலம் குடிநீராக மாற்ற முடியும் என்கிற ஆராய்ச்சியும், காந்தசக்தி மூலமாக தண்ணீரோ, வெப்பமோ இல்லாமல் மின்சாரம் எடுக்கலாம் என்கிற ஆராய்ச்சியும் அடங்கும். அம்மாதிரியானக்  ஆராய்ச்சிக் கட்டுரையினைக் கொண்டு வந்தவர்களையெல்லாம் விரட்டாத குறையாக வெளியே அனுப்பினேன் என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. ஒரு வகையில் நம்நாடு பல துறைகளில் வேகமாக முன்னேற்றம் அடையாததற்கு என்போன்ற விஞ்ஞானிகளின் கர்வமும், சுயநலமும்தான் காரணம் என்று ஆணித்தரமாக சொல்லுவேன். அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்களோ? என்ன செய்கிறார்களோ? என்ன பாடுபடுகிறார்களோ? என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கொண்டு அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் அப்படியே  விட்டுவிட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை, நான் அவர்களுக்கு ஆராய்ச்சிகளில் உதவி செய்திருந்தால், நம்நாட்டின் மதிப்பு உயர்ந்திருக்கும். ஆனால், அவர்களைப்போல இல்லாமல் இந்த விஞ்ஞானி வினோதன், தன் ஆராய்ச்சியிலிருந்து பின் வாங்காமல் தான் நினைத்தைச் சாதித்தது விட்டார். இனி விஞ்ஞானி வினோதனின் அரிசி ஆராய்ச்சிக்குப் பக்கபலமாக நான் இருக்கப் போகிறேன், அதோடு இன்றுமுதல் வளரும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக இருந்து, உலக மக்களுக்குப் பயன்தரக் கூடிய ஆராய்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன்! இது உங்கள் மீது ஆணை! நன்றிஎன்று வீரவசனம் பேசியது, இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்கு அக்கறை காட்டாத தன்னைப்போல அனைத்து அறிவியல் அறிஞர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தாக இந்நிகழ்ச்சியை காண்பவர்கள் எண்ணினர். இனி வரும் நாளில் நம்நாடு அறிவியலில் முன்னோடியாக இருக்கும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த தலைமை விஞ்ஞானி, எல்லோர் முன்னிலையில் அப்பட்டமாக தான் தவறு செய்ததற்கான  வருத்தததையும், இனி தான் ஆராய்ச்சிக்கென்று உதவி கேட்டு வருபவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகிறேன்? என்கிற மனமாற்றத்தையும் கேட்ட மாத்திரத்தில், விஞ்ஞானி வினோதனுக்கு தன் ஆராய்ச்சியில் அடைந்த வெற்றியினைக் காட்டிலும், இந்த தலைமை விஞ்ஞானி தன் தவறை உணர்ந்ததே  மிகப்பெரிய சாதனையாகவும், வெற்றியாகவும் கருதியதோடு இதயப்பூர்வமான மகிழ்ச்சியையும் அடைந்தார். 

கருத்தரங்கு முடிந்தவுடன் விஞ்ஞானி வினோதனை நோக்கி இளைஞர் கூட்டம் படையெடுத்தது.

நிறைவுற்றது 

பாகம் : 3 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் - மதுரை கங்காதரன்

                                                 பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 3



அறிவியல் - குறுநாவல் 

                                                    மதுரை கங்காதரன் 


 தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு வேண்டியது கையிலே காசு, வாயிலே தோசை! அதாவது இடது கையாலே செலவழித்த உடனே, வலது கையிலே லாபத்தை அள்ளனும். அதுதான் அவர்களுடைய வியாபாரக் கொள்கை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் யாராவது இளித்தவாயர்கள்…. இந்த வார்த்தையினைச் சொல்வதற்கு மன்னிக்கவும்…. கஷ்டப்பட்டு புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். பெருமுதலாளிகள் நோகாமல் அதனை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்கள்? இதில் நானும் விதிவிலக்கல்ல!” என்றபோது அவர் சற்று உணர்ச்சியுடன் காணப்பட்டார்.

அதாவது, பணக்காரர்களின் செயல் எப்படி இருக்கிறதென்றால்ஒருவரின் தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல், அவர்கள் பெறும் வெற்றியை மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர். அப்படி அடைந்த வெற்றிற்கு என்னமோத் தாங்கள்தான் காரணம் என்கிற பிம்பத்தை உண்டுபண்ணுவதோடு, அதனை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தித் தலைகால் புரியாமல் கொண்டாடுவதே அவர்களது தலையாய நோக்கமாகக் கொள்கின்றனர்என்றபோது அனைவரும் ஒருபுறம் அதிர்ந்தனர். ஜான் மில்லரின் உண்மை பிசகாத வெளிப்படையான இந்தப் பேச்சு, விஞ்ஞானி வினோதனுக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை, அதன்  உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. அதேவேளையில் தான் இந்தக் கருத்தைக் கூறியிருப்போமா? என்கிற கேள்வியும் அவருள் எழுந்தது.

இந்த வெளிநாட்டுக்காரர், ‘யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லைன்னு, இவருக்கு என்ன நடந்ததோ அதை சொல்லியேத் தீருவேண்ணு புட்டுப்புட்டு வைக்கிறார் போலல்லே இருக்கு.  இதைக் கேட்ட பிறகாவது, உலகில் உள்ள தனியார் நிறுவனங்க, அரசுங்க இவர் போன்றக் கண்டுபிடிப்பாளர்களுக்கு உரிய உதவிகள் செய்வாங்கன்னு நான் நம்புறேன்!” என்று கூட்டத்தில் ஒருவர் அவரின் கருத்தை முணுமுணுத்தார்.

தொடர்ச்சியாக, இவரது ஆராய்ச்சியில் இவர் எண்ணியபடி எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை. சாயத்தண்ணீரைச் சுத்திகரிக்க அதிக செலவு ஆனதோடு, அதிக நேரமும் ஆனது. மீண்டும் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டார். திடீரென்று யாருக்குமே எட்டாத ஒரு யோசனை இவரது மூளையில் உதித்தது. அதாவது செய்த செயலுக்குத் தீர்வைத் தேடாமல், செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரி செய்தால்! அடுத்து நடக்கும் செயல்களும் மிகச் சரியாகத்தானே இருக்கும்!’ என்பதே இவரது நம்பிக்கை.”

 அதாவது துணிகளாக அல்லது நூல்களாகத் தயாரிக்கப்பட்டுத் தானே அதில் பலவிதமான நிறத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு எல்லாவற்றிருக்கும் பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சுதானே மூலமாக விளங்குகின்றது. மேலும் வெண்மையாக இருப்பதால்தான் நாம் நினைக்கும் வர்ணங்களை அதற்குத் தரமுடிகிறது. ஆனால் வெண்மை நிறத்திற்குக் காரணம் வானவில்லில் இருக்கும் நிறங்கள் என்று முக்கோணப் பட்டக ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதாவது இவர் என்ன சொல்ல வருகிறாரென்றால் பருத்தி விதைகளில் சில பல ஆய்வுகளை மேற்கொண்டால் அந்த விதையிலிருந்து நமக்குத் தேவையான வர்ணத்தைப் பெறலாம் என்பது தான் இவருக்கு வந்த யோசனைஎன்றபோது அனைவரின் எதிர்பார்ப்புகள் எகிறிப் போனது என்றே சொல்ல வேண்டும்.

அதாவது பருத்தியில் இருக்கும் பஞ்சே, இயற்கையாகவேப் பல நிறங்களில் கிடைத்தால் சாயம் போடுவதற்கு வேலையே இருக்காது அல்லவா? அதனால் தண்ணீரும், நிலமும் மாசுபடுவதை முற்றிலும் தடுக்கலாம்என்று நம்பினார். அதாவது இது எப்படியென்றால், இரசாயன உரங்கள் பயன்படுத்திய உணவுப்பொருட்களை சாப்பிடுவதால்தானே பலருக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகிறது. அந்நோய்களைக் குணப்படுத்த நாம் பல புதிய புதிய மருந்து மாத்திரைகள், டானிக் என்று உட்கொள்ளுவதால்தான் மனித குலத்திற்கு இனம் தெரியாத புதிது புதிதாக வியாதிகள் வருகின்றது?” என்றபோது,

ரொம்ப சரியாச் சொன்னீங்க என்று அங்கிருந்த கூட்டம் ஒத்துக் கொண்டது.

அப்படியில்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிட்டு, அதில் கிடைக்கும் காய், கனிகள், கீரை வகைகள் உட்கொண்டால், பெரும் வியாதிக்கு ஆளாகாமல் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியுமல்லவா! அதுபோலத்தான் இயற்கையாகவே பருத்தியில் கிடைக்கும் வெண்பஞ்சுகள், பல வர்ணங்களுடன் கிடைத்தால் தண்ணீர், நிலம் மாசுபடுவதைத் தடுப்பதோடு, அதனால் நெய்யப்படும் ஆடைகள் நம் உடலைக் காப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுமல்லவா!” என்று சொல்லியதுதான் தாமதம், அந்நிகழ்ச்சியை நேரடியாக மற்றும் ஊடகங்கள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இவர் எத்தகையச் சிறப்பானதொரு கண்டுபிடிப்பை உலக மக்களுக்கு வழங்கியிருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்தனர். மாணவ மாணவிகள் இளைஞர்களோ நானும் விஞ்ஞானி வினோதனைப் போலவே, அன்றாட வாழ்வில் பயன்படும் ஏதாவது ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பேன் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டனர். 

கூட்டத்தின் சலசலப்பு சற்று அடங்கியவுடன், இந்த யோசனை உதித்த மாத்திரத்தில் இவருடைய கடமை அதிகமாயிற்று. எப்படியும் இதில் வெற்றி பெற்றேத் தீர வேண்டுமென்ற காரணத்தினாலும், அதில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டுமென்ற ஆசையினாலும், பேருக்காக உண்ணுவது, உறங்குவது என்று இவர் தன்னை மாற்றிக் கொண்டார். மற்ற நேரத்தில் ஓயாது தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

சூரிய ஒளியின் உதவியால் தானே பூக்கள் பல நிறங்களில் உருவாகி மலர்ந்து காட்சியளிக்கின்றது. அந்தப் பலவர்ணபூவின் விதைகளோடு பருத்தி விதையையும் சேர்த்தால் கட்டாயம் பல வர்ணமுள்ள பருத்தி விதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு உண்டானது. அவ்வேளையில் இவருக்கு அறிவியல் உலகில் பல சாதனைகள் நிகழ்த்திய ஒரு விஞ்ஞானி மேற்கொண்ட அசுரத்தனமான ஆராய்ச்சிகள் ஞாபகத்திற்கு வந்தது. அதையே முன்மாதிரியாகக் கொண்டு தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டார். அதாவது தாமஸ் ஆல்வா எடிசன், எவ்வாறு பல உலோகக்கம்பி இழைகளைக் கொண்டு மின்சார பல்பு கண்டுபிடித்தாரோ? அவ்வாறு போல் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். அத்தைகைய விடாமுயற்சியோடு கடினஉழைப்புக்கும் தயாரானார். இவ்வாராய்ச்சிக்கு, நவீன கருவிகளுடன், நல்ல கட்டமைப்புள்ள ஒரு ஆய்வுக்கூடம் இவருக்குத் தேவைப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் பல நூறு விதைகளை வளர்க்கும் வசதியும் இருக்க வேண்டும்என்றும் விரும்பினார். திட்டமிட்டபடி அங்கு பல ஆயிரம் விதைகளின் கலப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்என்று எண்ணினார். அதன் விளக்கமான ஆய்வுகளைப் பற்றி, பல ஆராய்ச்சிப் புத்தகங்களில் சொல்லப்பட்டும், நிரூபிக்கப்பட்ட முடிவுகளின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சுமார் ஐநூறு பக்கங்களில் ஒரு கட்டுரையினை எழுதினார்என்று பேசியதைக் கேட்டபோது விஞ்ஞானி வினோதனின் மனம் கணத்தது. அதனை வெளியில் காட்டாமல் முகத்தை மேலே பார்ப்பதுபோல பாசாங்கு செய்தார்.   

அதன் பிறகுதான் இவருக்குப் பலவிதமான பிரச்சனைகள் முளைத்தது. மனிதர்களைப் பற்றிய உண்மையான சொரூபமும் தெரிந்தது. இவர் எழுதிய கட்டுரையினை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் இருக்கும் பல்வேறு அறிவியல் அறிஞர்களிடம் தன் கண்டுபிடிப்பினை எடுத்துச் சொன்னார். சிலர் முழுவதும் படிக்காமலே இதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை!’ என்று முகத்தில் அடித்தாற்போல் நேரடியாக சொல்லும்போது, இவரது இதயம் என்ன பாடுபட்டிருக்கும்? என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.”

ஆமாம் யாராக இருந்தாலும் அந்நேரம் மனமுடைந்து போயிப்பார்கள் என்று பதிலாய்ச் சொன்னார்கள்.

 ஆனால், இவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. மீண்டும் படையெடுத்தார். அவர்களில் சிலர் சரி, கட்டுரை ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் கண்டுபிடிப்பினைப் பற்றி ஐந்து நிமிடத்தில் விளக்கிச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சொல்லியதைக் கேட்டவுடன் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார். அதற்குக் காரணம், பல மாதங்களாக உழைத்துப் புதிதாகக் கண்டுபிடித்த ஒன்றை எப்படி ஐந்து நிமிடத்தில் அவர்களிடம் சொல்லி விளங்க வைப்பது? அப்படி விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த அறிவியல் அறிஞர்கள் என்ன, அனைத்தையும் படித்துக்கரைத்துக் குடித்தவராக இருப்பாரா? அதாவது ஒருவர், அவர் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையினை வெளியிட்டிருந்தாலும் அவர் எப்படி அனைத்தும் தெரிந்தவராக இருப்பார்? என்பது யதார்த்தமான உண்மையாகவே இருந்தாலும், அவர்கள் சொல்வதைத்தானே வேதவாக்காகக் கல்வியாளர்களும் சரி, அரசும் சரி, ஏனையோரும் ஆணித்தரமாக ஏற்றுக் கொள்கின்றனர்.”

கூட்டமும் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக பேசாமல் அமைதி காத்தது.

தொலைநோக்குப் பார்வையில் அறிவியல் அறிஞர்கள் சொல்லும்போதெல்லாம், அவர்களைப் பல துறையினைச் சார்ந்தவர்கள் ஏளனம் செய்ததோடு, கடுமையாக விமர்சித்ததை அதன் வரலாறு காட்டுகிறது. அணுவில் மிகப்பெரிய ஆற்றல் இருக்கின்றது என்றும், நிலவில் மனிதன் காலடி பதிக்கலாம் என்பதை அறிவியல் அறிஞர்கள் பலர் சொன்னபோது என்னென்ன விமர்சனங்கள அவர்கள் மீது வைக்கப்பட்டன என்பதை அறிவியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியவரும். அதுபோல விஞ்ஞானி வினோதனும் அனுபவித்தார்.

ஆமாம் என்று அதனை எல்லோரும் ஆமோதித்தனர்.

நிறைவாக அவர்களுக்கு விளங்கிய வரையில், இவரது கட்டுரையினை மதிப்பீடு செய்து ஒரு அறிக்கை மேலிடத்திற்கு அனுப்பினார்கள். அதில் இவர் அடிப்படையில் ஒரு வேதியியல் முதுகலைப் பட்டதாரி. இவரால் எப்படி தாவரவியலில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும்? மேலும் இவரின் ஆராய்ச்சிக்கு ஆய்வுக்கூடம் அமைக்க சில கோடிகள் கூட ஆகலாம்! அவ்வளவு பணமும் செலவு பண்ணிய பின்பும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது!” என்று அதில் இருந்ததால் இவர் மேற்கொண்டு என்ன செய்வதென அறியாமல் திணறினார். சுருக்கச் சொன்னால் கிட்டத்தட்ட எல்லோரும் இவரது கண்டுப்பிடிப்பைத் தட்டிக் கழித்தார்கள்.”

அடுத்து என்ன நடந்திருக்கும்? என்று  கூட்டத்தில் உள்ளவர்கள் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் வினோதனின் மனதில் அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் மின்னலாகத் தோன்றி மறைந்தன.

 கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தனியார் மற்றும் அரசு மூலமாக இமாலய முயற்சி செய்தும் இவரைக் கண்டுகொள்ள ஒருவரும் இல்லை. எப்படியும் இந்த ஆராய்ச்சியில் நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை விஞ்ஞானி வினோதனுக்கு இருந்தது. இறுதியாகஇங்கு ஆதரவு இல்லாவிட்டால் என்ன? வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் முயற்சி செய்தால் என்ன?’ என்று  அங்கு இவருடைய நண்பர் வீட்டில் இருந்துகொண்டே முயற்சி செய்தார். ஆனால் அங்கேயும் இவரது ஆராய்ச்சியை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இது எப்படி சாத்தியம்? இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை! வேறு ஒரு நல்ல ஆராய்ச்சி இருந்தால் சொல்லுங்கள். முக்கியமா செலவு குறைவா இருக்க வேண்டும். குறைந்த நாளில் அதிக லாபம் கிடைக்க வேண்டும்!’ என்று நளினமாகச் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டனர்.”

பாகம் : 4 தொடரும் 


பாகம் : 2 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் - மதுரை கங்காதரன்

                                                   பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 2




அறிவியல் - குறுநாவல் 

(முதல் பாகம் தொடர்ச்சி) 

                                                    மதுரை கங்காதரன் 

முன்பகுதியின் இருபுறங்களில் பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், நடுவில் ஊடகங்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேடையில் பேசுகிறவர்களின் பேச்சைத் தெளிவாகக் கேட்பதற்கு ஒலிபெருக்கிகள் தவிர, ஆங்காங்கே நேரடியாகப் பார்ப்பதற்குப் மிகப்பெரிய மின்திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குக்கு நோபல் பரிசு பெற்றவர்களும், அறிவியலில் பல சாதனை புரிந்தவர்களும் தவிர பல நாட்டு அறிவியல் மேதைகளும் இங்கு வருகை தந்திருந்தனர். இந்த ஏற்பாடுகள், இந்தியாவில் அறிவியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதையும், இளைஞர்கள் அறிவியல் கருத்துகளைக் கேட்க எவ்வளவு ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை உலகுக்கு இதன் மூலம் நன்கு தெரிய வைத்திருக்கின்றது. 

ஓர் முக்கிய அறிவிப்பு என்பதைக் கேட்டவுடன் அனைவரின் கவனமும் அதில் லயித்தன.

அதாவது இந்தக் கருத்தரங்கு நிறைவடைவதற்குச் சற்று முன் வரும் நிகழ்ச்சியாககூடுதல் சிறப்பு அம்சமாகஊடகங்கள்இளைஞர்கள்ஆசிரியர்கள்பொதுமக்களாகிய நீங்கள் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டில் இருக்கும் எண்ணைக் கொண்டுகுலுக்கல் முறையில் தேர்வாகும் சிலருக்குநேரடியாக சில கேள்விகள் விஞ்ஞானி வினோதனிடம் கேட்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர்.

ஒருவேளை என் பேரு குலுக்கலில் வந்தால், ஐயா! உங்களோட ஆராய்ச்சிக்கான இந்தச் சிந்தனை வந்ததற்கான அடிப்படைக் காரணம் என்ன ஐயா?’ என்று நான் கேட்கப்போகிறேன் என்று ஒரு மாணவன் சொல்ல அவனைச் சுற்றி இருந்த மாணவ மாணவிகளும் நாங்களும் அதைத் தான் தெரிஞ்சுக்க வந்திருக்கிறோம் என்றனர்.

நான் கேட்பதாக இருந்தால், அடுத்த ஆராய்ச்சி எதைப் பற்றியதாக இருக்கும்?” என்றார் பொதுமக்களில் ஒருவர்.

என்னோட சீட்டு வந்தால், நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, ஏன் வெளிநாட்டுகாரருக்கு காப்புரிமை கொடுத்தீங்க? இது நம்ம நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தது போலத்தானே என்று கேட்க நினைத்தார் ஒரு ஊடகப் பொறுப்பாளர்.

குலுக்கல்லே என்னோட பேரு மட்டும் வரட்டும்! ஏன்யா உங்களோட ஆராய்ச்சியை நம்ம நாட்டிலே செய்யாம ஏன் வெளிநாட்டுக்குப் போய்ச் செஞ்சீங்கன்னு கேட்கப் போகிறேன்?” என்றார் முனைவர் பட்டம் பெற்ற ஒரு ஆசிரியர்.   

இப்படி ஆளுக்காளு ஏதேதோ கற்பனை பண்ணி பேசிட்டு இருக்கீங்களேஅதை மொதலே நிப்பாட்டுங்க. இப்போதான் இவரு முதன்முதலா தன்னோடக் கண்டுபிடிப்பு பத்தி மனம் திறந்து பேசப் போறார். அதுக்குள்ளே இவர் மேலே அபாண்டமாப் பழி சுமத்துறதும், வெறுப்பா பேசுறதும் சரியாப்படலே. அவரு என்ன சொல்றார்னு கேட்ட பின்னே உங்களோட கேள்வியைக் கேளுங்க? என்ன இருந்தாலும் இவரு இந்தியர்! அதுவும் நம்மத் தமிழன்! அதை ஞாபகத்திலே வச்சிக்கிட்டுப் பேசுங்க” என்றார் ஒருவர் சற்று அதட்டலாக.

அது ஞாபகத்திலே இருக்கிறதாலேத் தானே இதுவரை நாம கட்டுப்பாடோடவும் அமைதியாகவும் இருக்கிறோம். இல்லாட்டா என்னென்னமோல்லே நடந்திருக்கும். ஆனா ஒன்னுக்காக அவரை நாம பாராட்டியேத் தீர வேணடும். படிச்சவங்க முதல் பாமரர் வரைக்கும் அறிவியல் தாகத்தை ஏற்படுத்திட்டாரு பாருங்க, அதுக்கு நாம நன்றி சொல்லணும் என்று முதலில் ஆத்திரத்தோடு பேசியவர், பிறகு அடங்கிப் போனது அதிசயம் என்றேச் சொல்ல வேண்டும்.

நீங்க எல்லாரும் வேணும்னா பாருங்க, நாளை காலைப் பத்திரிக்கையிலே இவருக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படுவதாகப் பல செய்திகள் கட்டாயம் வரும் என்றும் பலர் அபரிவிதமான நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

கட்டாயமாக அதுலே எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதுக்கு அவருக்கு நல்லாவேத் தகுதி இருக்குஇவரு நிச்சயமா நம்ம கலாம் ஐயாவோட மறுபிறவிதான்னு  சொல்லணும். நம்மைப் போல இக்காலத்து இளைஞர்களுக்கு இவரைப் போலுள்ளவங்கதான் அறிவியல் ஆர்வத்துக்கு உரமூட்டுகிற டானிக்! ஏன் பூஸ்ட்ம் கூட! என்று அவர்கள் உணர்வு பொங்க பேசினர்.

இதுவரையில் இயற்கையால் செய்ய முடியாததை இவர் செய்து காட்டியது, உண்மையாகவே இவரு பிரம்மனின் அற்புதமானப் படைப்பு! மனிதர்களைக் காக்க வந்தக் கடவுள்! இல்லை, இல்லை, இந்தக் கலியுகத்தை காக்க வந்த அவதாரம்!” என்று பலர் புகழ்ந்து தள்ளினார்கள்.

எதனாலே மனுசங்க பலர் இப்படி இருக்காங்கன்னு தெரியலே. யாராவது ஒருத்தர் தன்னோட உழைப்பாலே, அறிவாலே, கடினமுயற்சியாலே புகழோ, பதவியோ, பணக்காரனாகவோ ஆயிடக் கூடாது! உடனே அந்த மனிதனை, பொறாமை பிடிச்ச வீணாப் போனவங்க, எப்படியெல்லாம் அசிங்கமா விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கமா மட்டம் தட்டுகிற புத்தி எப்பத்தான் மாறும்னு தெரியலே? அதுலே விஞ்ஞானி வினோதன் விதி விலக்கா என்ன?” என்று கொந்தளிப்பு கொண்ட வேதனையுடன் தன் எண்ணத்தை சற்று உரத்த குரலோடு வெளியில் கக்கினார்.     

இதுவரையில் காத்திருந்த கூட்டம் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல், “விஞ்ஞானி வினோதனைப் பேசச் சொல்லுங்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக மேடையில் அமர்ந்திருந்தவர் விரைவாகத் தங்கள் பேச்சுகளை முடித்துக் கொண்டனர். அதற்குக் காரணம் அவர்களும் விஞ்ஞானி வினோதன் ஆற்றப்போகும் உரையினைக் கேட்க ஆவலோடு இருந்ததே!

வினோதன் தன் பேச்சைத் தொடங்க எழப் போனார்.

ஆனால்

அனைவரும் மன்னிக்கவும் என்று வினோதனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு அறிவியல் அறிஞர் டாக்டர் ஜான் மில்லர் சொல்ல, அரங்கமே ஒரு கணம் குழப்பத்திற்கு உள்ளானது. ஏனென்றால், ஒரு வெளிநாட்டவர் மிகத் தெளிவாகத் தமிழ் பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுஅதில்லாமல், விஞ்ஞானி வினோதனைப் பேச விடாமல் இவர் ஏன் தடுத்தார்? என்கிற காரணம் பிடிபடாமல் அங்கிருந்த கூட்டம் சற்று விழித்தது.

யாரும் எதற்கும் பதட்டப் பட வேண்டாம். என் பெயர் ஜான் மில்லர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதோடு, அதன் சம்பந்தமான எனது ஆராய்ச்சிகளுக்கு மூன்று காப்புரிமைகள் பெற்றுள்ளேன் என்பதை இவ்வேளையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்நான் ஒரு வெளிநாட்டவராக இருந்தாலும் எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். அதையும் நான் விஞ்ஞானி வினோதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட ஐந்து வருடகாலமாகப் பழக்கம். இவரது புதுமையானக் கண்டுபிடிப்பால்தான்” அமெரிக்காவிலிருந்த என்னையையும், இந்தியாவில் இருந்த இவரையும் இணைபிரியாத நண்பர்களாக ஆக்கியது என்று ஒரு புதிய தகவலை பகிர்ந்தவுடன், இவருக்கும் வினோதனின் கண்டுபிடிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? என்கிற மாதிரியானப் பல கேள்விகள் பலருடைய மனதில் ஓடியது.

நான் சொல்ல நினைக்கின்றது என்னவென்றால், விஞ்ஞானி வினோதனின் சாதனையை அவரே சொன்னால், அது தற்பெருமையாகவோ அல்லது தலைக்கணமாகவும் தெரியலாம். அதனால் ஐந்து ஆண்டுகள் அவரோடு இருந்த காரணத்தினால்நான் சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றவுடன் அனைவரும் ஆமோதிக்கும் விதமாக,

அதுவும் சரிதான் ஒரு வெளிநாட்டவர், நம் இந்தியத் தாய் நாட்டின் விஞ்ஞானியான வினோதனைப் பத்திப் பேசும்போது, இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களும், நம் நாட்டின் பெருமையைப் பறைசாற்றச் செய்யும் ஒரு நல்ல வாய்ப்பாகவே நாம் கருதுவோம் என்று சமாதானம் கொண்டனர்.   

இதுமட்டும் காரணம் இல்லை. வேறு ஒரு முக்கிய காரணமும் உள்ளது என்று புதிர் போட்டவுடன் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. என்னவாக இருக்கும்?’ என்று ஆளுக்காளு ஒவ்வொன்றை யோசிக்கலானார்கள்.

நான் எதற்காக இவரை பேசத் தடுத்தேன் என்றால்? இவரது இந்தப் புதிய கண்டுப்பிடிப்புக்கு மேற்கொண்ட முயற்சியில், இவர் வெற்றி பெற்றது முதல், அதை உலகுக்கு அறிவிக்கும் வரையில் இவர் அடைந்த அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் கொஞ்சநஞ்சமல்ல. அத்தகைய நிகழ்வுகளை இவர் இன்னும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் எந்த அளவுக்கு தன்னுடையக் கண்டுபிடிப்பு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வார்? என்பது எனக்குத் தெரியவில்லை. இவரது உரையை ஆவலுடன் கேட்க வந்திருக்கும் நீங்கள், குறிப்பாக மாணவ மாணவிகள், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தோடு, ஒரு கண்டுபிடிப்பாளருக்கு எத்தகையத் துன்பமெல்லாம் வரும் என்பதை நீங்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சியை உள்ளடக்கத் தெரியாமல், அவரின் வேதனை கலந்த பேச்சால் பொங்கி வெளியில் வழிந்தபோது, அவராலேயே தொடர்ந்து பேச முடியாமல் சில வினாடிகள் மௌனம் காத்தார்அதைக் கேட்ட விஞ்ஞானி வினோதனின் கண்கள், கண்ணீரால் குளமாகியது.

ஒருவாறு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார், அந்த வெளிநாட்டு அறிவியலாளர்.   

நான் சொல்லப் போகும் விசயங்கள் கேட்டு எவரின் செயலும் மனமும்  புண்படுமேயானால் அதற்கு என்னை மன்னிக்க வேண்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். விஞ்ஞானி விநோதன் செய்தது என்னவோ? உண்மையில் இவருக்கு நடந்தது என்னவோ? அதை நான் அப்படியே சொல்கிறேன் என்று மறுபடியும் கேட்பவர்களின் ஆவலை அதிகப்படுத்தினார்.

விஞ்ஞானி வினோதன், இங்குள்ள ஒரு சாதரண அரசு மானியம் உதவி பெறும் கல்லூரியில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளமையில் இருந்தே இவருக்கு வேதியியலில் மேல் அலாதியான ஈடுபாடு. தன் வாழ்க்கையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல கண்டுபிடிப்பு ஒன்றைத் தரவேண்டும் என்கின்ற அறிவியல் தாகம் அவரிடத்தில் இருந்தது. இவரது இந்தக் கண்டுபிடிப்பு மூலம் இவரது ஆசை நிறைவேறிவிட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம்

அதற்காக இவர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற எண்ணினார். குறிப்பாக நீர் சுத்திகரிப்பு அல்லது நீர் மேலாண்மை பற்றி ஆராய முனைந்தார். அப்போது இவர் கவனத்திற்கு ஒரு யோசனை வந்தது. ஆடைகளுக்குப் பல வேதிப்பொருட்களும், தண்ணீரும் கலந்து பல செயல்கள் மூலம் அதற்கு நிறங்கள் ஏற்றிய பிறகு, வீணாகும் அந்த நஞ்சுத் தன்மை கொண்ட  தண்ணீர், ஆற்றிலும், குளத்திலும் கலப்பதால், குடிதண்ணீரை மாசடையச் செய்வதோடு, நல்ல நிலங்களையும் கேடு விளைவிப்பதைக் கண்டார். அதற்குத் தீர்வாக, எளிய முறையில் விரைவாகவும், அதேவேளையில் செலவு மிகக்குறைவாகவும் இருக்கும்படியான, தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஒரு தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தன்னந்தனியே இறங்கினார். கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பாடுபட்டார். அவருக்கு உதவி செய்யவோ, வழிகாட்டியாகவோ யாரும் வரவில்லை என்பதுதான் கொடுமை. ஒரு சிலர் வந்தாலும் அதற்காக அவர்கள் எதிர்பார்த்தத் தொகை மிக அதிகம். அவர்கள் இவருக்கு உதவி செய்யும் எண்ணத்தைக் காட்டிலும் பணத்தாசையே மேலோங்கி இருந்தது

இதனைக் கேட்ட அனைவருக்கும் இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதானே. இந்த காலத்திலே உண்மையான உழைப்புக்கு யார்தான் மதிப்பு கொடுக்கிறாங்க? என்கிற நினைப்பு எட்டிப் பார்த்ததுச் சென்றது.

உண்மையில் விஞ்ஞானி வினோதன் உரையாற்றி இருந்தால், ‘இந்த இடத்தில் மேற்கொண்டுப் பேசச் சற்று தடுமாறி இருப்பார்இவர் மனதில் தைத்திருக்கும் துக்கமே வார்த்தைகளை வெளிவராமல் செய்திருக்கும் என்று இப்போது அனைவரும் உணர்ந்தனர்.

டாக்டர் ஜான் மில்லரும் சமாளித்துக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து மேற்கொண்டு பேசினார் இவர், பல வழிகளில் தன் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். இதற்காக இவருடைய சொந்தப் பணத்தையும், போதாகுறைக்கு பிச்சை எடுக்காதக் குறையாக பலரிடத்தில் கேட்டு தன் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். திரைப்படத்திற்கும், விளையாட்டிற்கும், கலைநிகழ்ச்சிக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு மற்றும் தனியார்துறைகள்! அவர்களிடத்தில் இவரைப் போன்றவர்கள், ஆராய்ச்சிச் செலவுக்கென்று உதவிக்குச் சென்றால், அவர்களின் கண்களையும், காதுகளையும் மூடிக்கொள்வதோடு, அவர்களின் கைகளையும் இறுக்கி மூடிக் கொள்கின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை” என்று நடந்ததை மெல்ல மெல்லச் சொல்லலானார்   

பாகம் : 3 தொடரும் 

பாகம் : 1 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் மதுரை கங்காதரன்

 பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 1

  
            அறிவியல் - குறுநாவல் 

                          மதுரை கங்காதரன் 

சென்னை விமான நிலையம்

இப்போது வருகின்ற விமானத்தில்தான் விஞ்ஞானி வினோதன், அதற்கு அருகாமையில் உள்ள கலாம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் முதன்முதலாக, கலந்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில், யாருமே கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு, அறிவியலில் அவர் நிகழ்த்தியப் புதுமை, இந்த உலகத்திற்கேத் தெரியும். அந்த அற்புதமானச் சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, இதுநாள் வரையில் இல்லாத வகையில், இங்குள்ள பல அமைப்புகள், இந்த நிகழ்ச்சிக்கு அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, உலகமே உற்றுநோக்கும்படியாக மிகப்பிரமாண்டமான முறையில் பொதுமக்களும் பங்குபெறும் வகையில் கருத்தரங்கு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்று அவ்விடத்தில், அவரை வரவேற்க, கூட்டமாக வருக! வருக!!’ என்கிற வாசகம் கொண்டப் பதாகைகள் ஏந்தியவாறு ஒரு பக்கமும், கண்டனம் தெரிவிக்கும் வகையில் திரும்பிச் செல்!’ என்கிற வாசகம் கொண்டப் பதாகைகள் பிடித்த சிலர் மறுபக்கமும், அதில்லாமல் வாழ்க! ஒழிக! கோஷங்கள் எழுப்புகின்றவர்கள் ஒருசிலரும் கூடி இருந்தனர். மொத்தத்தில் அங்கு பலதரப்பட்ட மக்களின் வருகையானது அளவுக்கு அதிகமாகவேக் காணப்பட்டது. அக்கூட்டமானது, மக்கள் விஞ்ஞானி வினோதனின் மீது கொண்டுள்ள இனம்புரியாதப் பாசத்தையும், மதிப்பையும், மரியாதையும் வெளிப்படுத்த வந்துள்ளனர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றது என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே அங்கு வந்த அனைவரும் அமைதியாகவும், கட்டுப்பாடோடவும் இருந்தனர். இவ்வளவுக்கும் வருபவர், பிரபலம் அடையாத, இதுவரை மக்கள் நேரில் பார்த்திராத, சட்டென்று அடையாளம் தெரிந்து கொள்ள இயலாத ஒருவர் என்பதையும் விட,  அவர் எந்த ஒரு கட்சியும் சாராத ஒரு விஞ்ஞானி என்பதே கூடுதல் தகவல். இப்படியான நல்ல, கெட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகும் வகையில், அந்த விஞ்ஞானியிடத்தில், எதற்காக மக்களில் ஒரு சாரார் திடீர் பாசமும், மற்றெரு சாரார் காட்டமும் காட்டுகிறார்கள்? என்பது சிலருக்குப் புரியாத புதிராக இருந்தது.

சமீபத்தில், கோவிட்19 கொரனாவுக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த வரவேற்பைக் காட்டிலும் அப்படியென்ன அவர் சாதித்திருக்கிறார்? என்ற கேள்வி சிலரிடத்தில் எழுந்தன. எதற்காக இவ்வளவு கூட்டம் இங்கே கூடியிருக்கின்றது? என்பதைத் அறிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடத்தில் நன்கு தெரிந்தது.

சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஊர் தமிழனின் ஒரேயொரு கண்டுபிடிப்பு! இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வச்சதை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு!” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் உரக்கப் பேசியதைப் பலரும் ஆமோதித்தனர்.

ரொம்ப சரியாச் சொன்னீங்க! கணினி, மருத்துவத்துறையிலே  கண்ட வெற்றிங்க, பல நாட்டு அறிவியல் அறிஞருங்க, ஆராய்ச்சியாளருங்க சேர்ந்து, இராப்பகலா அயராது பாடுபட்டதாலேத்தான் கிடைச்சது. அதை நாம மறந்திடக் கூடாரு. ஆனா, இவரோட விசயம் அப்படியில்லே. இவரோட கடுமையாக உழைப்பாலே, எல்லாருக்கும் எக்காலத்துக்கும் பயன்படக்கூடியதை  இவர் கண்டுபிடிப்பிடிச்சுத் தந்திருக்கார். அதோடு இவர் நம்ம நாட்டோட கௌரவத்தைப் பன்மடங்கு உயர்த்திருக்கிறார். அதுக்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டியேத் தீரவேண்டும்என்று அங்கு வந்திருந்த ஒருவர், தன் உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சியை மழையாகப் பொழிந்தார்.

எப்படி இவராலே, யாருமே நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு யோசிக்க முடிஞ்சதோ?” என்றார் மற்றொருவர்.

இந்தக் கூட்டத்திலே, முக்கால்வாசிபேரு மாணவருங்க இளைஞருங்கதான். இவங்களையெல்லாம் பார்க்கிறப்போ, விண்வெளி ஆராய்ச்சியில் பல வெற்றிச் சாகசங்கள் செய்த நம்ம மறைந்த ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான கலாம் ஐயாவோட அறிவியல் வாரிசுங்க உருவெடுத்து வந்ததுபோல இருக்குது

அதுவும் சரிதான். நம்ம கலாம் ஐயாவோடக் கனவு இப்போச் செயல்பட ஆரம்பிச்சுட்டதாகவே நம்புறேன். நீங்க வேணும்னாப் பாருங்க, நம்ம இந்தியா கூடிய சீக்கிரம் வல்லரசோடு நல்லரசாகவும் மாறப்போகுதுஎன்று ஆளுக்காளு தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தனர்.

அதேவேளையில் எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், அந்த விஞ்ஞானி வரும் விமானம் தரை இறங்கியது. கண்களைக் கொள்ளையடிக்கும் அந்த காட்சியைக் கண்டவுடன், தவமாய்க் காத்திருந்த அனைவரின் முகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

.... அதோ கையசைத்துக் கொண்டே இறங்குகிறாரே, அவர் தான் விஞ்ஞானி வினோதன் போலத் தெரியுது. ஆஹா என்ன சுறுசுறுப்பு? அறிவுக்கலை அவரோட கனிவான சிரிச்ச முகத்திலே நல்லாவேத் தெரியுதுஎன்றவுடன் கூட்டத்தின் உள்ளவர்களின் பார்வை, விஞ்ஞானி வினோதனிடம் குவிந்தன.

தூரத்தில் இருந்து அவரை பார்த்த அடுத்த நொடியில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் மெய்மறந்து சிலையாகிவிட்டார்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.

மாணவமணிகளே! இங்கு அவரைப் பார்த்தது போதும். நாம் எல்லாரும் உடனே கலாம் உள்விளையாட்டு அரங்கத்திற்குப் போக வேண்டும். ஏற்கனவே பல பள்ளிக்கல்லூரி மாணவர்கள், விஞ்ஞானி வினோதனின் உரையைக் கேட்க காலையிலிருந்தே முன்வரிசையில் உட்கார இடம் பிடித்திருப்பதாக எனக்குச் செய்தி வந்தது. அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நமக்கு அங்கே இடம் உண்டு. ஏன்னா நம்மைப்போல பள்ளிக்கல்லூரி மாணவர்களுக்குத் தனிஇடம் ஒதுக்கி இருப்பதாகச் சொன்னார்கள்.  அந்த அரங்கம் ரொம்பப் பெரியதாக இருந்தாலும் இங்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எல்லாருக்கும் அங்கு இடம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கின்றது? அனைவரும் வாருங்கள் சீக்கிரம் அங்கே போகலாம்! என்று அனைவரையும் விரைவு படுத்தினார் அப்பள்ளித் தலைமை ஆசிரியர்.

சீறிப் பாயும் அம்புகள் போல, விமான நிலையத்தில் விஞ்ஞானி வினோதனைப் பார்க்க வந்திருந்த கார்களும், பஸ்களும், பைக்குகளும் கலாம் உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கிப் பறந்தன.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நம் மக்கள் மற்றும் இளைஞர்கள் அறிவியலின் மேல் கொண்டுள்ள அபாரப் பற்றையும், அதிக ஆர்வத்தையும், முழு நம்பிக்கையையும் நன்கு கணித்து வைத்துள்ளனர்என்றே நாம் எண்ணிக் கொள்ள வேண்டும். விழாக்குழுவினரின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு மாபெரும் அரசியல் தலைவருக்கு, திரைப்படக் குழுவினர் பங்கு கொள்ளும் கலைநிகழ்ச்சிக்கு, சிறந்த விளையாட்டுப் போட்டிக்கு, அட நம் ஜல்லிக்கட்டுக்குக் கூடிய கூட்டத்தைக் காட்டிலும், இப்போது வந்திருக்கும் கூட்டம், முந்தைய அனைத்துச் சாதனையையும் முறியடித்துவிட்டது என்றே நினைக்க வைக்கின்றது.

அங்கு கூடியிருந்தவர்களும் கூட தாங்கள் காண்பது கனவா? நனவா? என்று நம்ப முடியாமல் திகைத்தனர். இதன் காரணமாகத்தான் என்னவோ, விழா அமைப்பாளர்கள் இவ்வளவு பெரிய அரங்கத்தை ஒத்துக்கொண்டதோடு, உலகளவில் பல ஊடகங்களின் வாயிலாகப் பல நாடுகளுக்கு இந்நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிஒலி மூலம் பரப்புவதற்கும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இத்தனையும் கண்ட அனைவருக்கும் மிகப்பெரிய வியப்பைத் தந்ததென்றால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. உலக வரலாற்றில் இன்று வரை இப்படியான விஞ்ஞானக் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்று இருப்பதாகத் தெரியவில்லை என்றேப் பலரும் பேசிக்கொண்டனர்.

மேடையில், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி வினோதனைத் தவிர, சில வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும்,  உலகத்தில், இந்தியாவில் உள்ளத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கும், முக்கிய அரசியல் பிரதிநிதிகளுக்கும் அவரவர் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்ட நாற்காலிகளை ஒதுக்கியும், அதன் எதிரில் அலங்காரம் செய்யப்பட்ட மேஜைகளும் இருந்தன. அங்கேயே நடுவில், மினுமினுக்கும் சிறிய வண்ணமிகு மின்விளக்குகள் பொருத்தப்பட்ட கண்ணாடிப் பெட்டி போன்ற ஒன்று, அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டத் திரையால்  மூடப்பட்டிருந்தது. குத்துமதிப்பாக அனைவரும் அதற்குள்தான் விஞ்ஞானி வினோதனின் கண்டுபிடிப்புச் சம்பந்தமான ஏதோ ஒன்று  இருக்கும் என்று ஊகித்தனர்.  


     பாகம் : 2 தொடரும்