Pages

Tuesday 30 August 2022

National Small Industry Day - தேசிய சிறுதொழில் தினம் - கட்டுரை - கு.கி.கங்காதரன்

 

National Small Industry Day

தேசிய சிறுதொழில் தினம்  

கட்டுரை

கு.கி.கங்காதரன்

 


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ம் நாள் மிக முக்கியத்துவம் கொண்ட நாள். ஏனென்றால் அன்றுதான் "தேசிய சிறுதொழில் தினம்" கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில்  சிறுதொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வரும் ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை  அளிக்கவும், அதனை ஆதரிக்கவும், மேற்கொண்டு ஊக்குவிக்கவும் செய்யப்படுகிறது. இது மட்டுமில்லாமல், தற்போதுள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்குச் சீரான வளர்ச்சியை வழங்கவும், மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய தொழில்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்கவும் இந்த "தேசிய சிறுதொழில் தினம்" விளங்குகின்றது.

        தொழிற்சாலையின் அர்த்தம் என்பது, எதாவது ஒருவிதத்தில் நமக்குப் பயன்படும் தரமான ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகும். தொழிற்சாலையில் இருவகை உண்டு. ஒன்று சிறிய தொழிற்சாலை மற்றொன்று பெரிய அளவில் இருக்கும் தொழிற்சாலை. இதில் எது இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதே உண்மை. இங்கு சிறிய தொழிற்சாலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, நாப்கின்கள், திசுக்கள், சாக்லேட்கள், டூத்பிக், தண்ணீர் பாட்டில்கள், சிறிய பொம்மைகள், காகிதங்கள், பேனாக்கள் போன்றவை உற்பத்தி செய்வது சிறுதொழில் வகையினைச் சேர்ந்ததாகும்.

சமீப காலமாக, இந்த வாசகம் எல்லோர் மனங்களிலும் முக்கியமாக இளைஞர்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்து வருகின்றது என்பதே உண்மை. அதாவது இளைஞர்களே! நீங்கள் படித்து முடித்து வேலை தேடுபவர்களில்லாமல், பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று பலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அத்தகைய வாய்ப்பினை, அதாவது இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கித் தருவதற்கு இந்த நாள் ஒரு பொன்னான நாள் அமையும் என்று சொன்னாலும் மிகையாகாது. சிறு தொழில் தானே? இதில் என்ன பெரிசா சம்பாதிக்கப் போகிறோம்?’ என்று அசட்டையாக இருப்பதைத் தவிர்க வேண்டும். ஏனென்றால், இன்று நீங்கள் பார்க்கும் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் பின்னால் இருக்கும் வரலாறைப் புரட்டிப் பார்த்தோமானால், அவைகள் ஒரு காலத்தில் மிகச் சிறிய அளவிலேயே இயங்கி வந்திருக்கும். அவர்களின் ஈடு இணையற்றக் கடுமையான உழைப்பு, கிடைத்த வாய்ப்புகள், காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்ததால் இன்று இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார்கள். முயன்றால், முடியாதது ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும், முயற்சி செய்தோர் இகழ்ச்சி அடைவதில்லை, என்று பலர் முயற்சியின் சிறப்பைக் கூறியுள்ளனர். 

        சிறிய அளவிலான தொழில்கள் மிகமுக்கியமானவை, ஏனெனில் இது இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கானது, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்களை அதிகரிப்பதோடு, மாசுபாடு, குடிசைப்பகுதிகள், வறுமை போன்ற பிரச்சினைகளைக் குறைப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய அளவிலான தொழில்களில் முதலீடு செய்தால், அது இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும், சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த சிறிய அளவு தொழில்களுக்கான இயந்திரங்கள், சிறிய ஆலைகளில் ஒரே நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் முதலீடு செய்யப்படுவதாகும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம், மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், துறைகளுக்கிடையேயான தொடர்பை ஊக்குவித்தல், ஏற்றுமதியை பெரிதாக்குதல் மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி திறனை ஊக்குவித்தல் போன்றவற்றில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்த சிறுதொழில்களின் பங்களிப்பு மிகவும் அற்புதமானது. பாரம்பரியம் முதல் உயர் தொழில்நுட்பம் வரையிலான 6000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மூலம், நாடு முழுவதும் பரவலாகப் பரவியுள்ள 36 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை உள்ளடக்கிய இந்தத் துறை, 80 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது, மேலும் உற்பத்தி செய்யப்பட்ட 45% உற்பத்தியில் 40% ஏற்றுமதியாக பங்களிக்கிறது. உத்தேச தேசிய உற்பத்திக் கொள்கையின் இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25% ஆக உயர்த்துவது மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் வேலைகளை உருவாக்குவது, அத்துடன் இந்தியாவை அதன் தற்போதைய 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திலிருந்து 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குக் கொண்டு செல்வதாகும்.

சிறுதொழில் செய்வதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

உற்பத்தியைக் கவனத்துடன் கண்காணிக்கலாம்

பொருட்களின் தேவையினை அறியலாம்

அதிக வேலைவாய்ப்புகள் தரலாம்

தொழில் தொடங்க சிறு மூலதனமே போதுமானது

தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பு உண்டாகுதல் 

வாடிக்கையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படுதல்

எளிதான மேலாண்மையே போதுமானது

வேலையில் சுதந்திரம் இருக்கும் போன்றவை.

 

சிறுதொழிலில் உள்ள சில பிரச்சினைகளை இப்போது பார்க்கலாம்

1. பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாகிறது

2. கிடைக்கும் உபரி அல்லது துணைப்பொருட்கள் வீணாகுதல்

3. குறைந்த அளவிலான இயந்திரங்களின் பயன்பாடு

4. தொழிலாளர்களின் பற்றாக்குறை

5. கடன் பெறுவதில் சிரமம்

6. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது கடினமான வேலை

7. ஏற்ற தாழ்வு கொண்ட மூலப்பொருட்களின் விலை

8. பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம்

9. பழைய பழைய நுட்பங்களையே பயன்படுத்தும் சூழல்

10. புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாமை

11.பெரிய அளவிலான தயாரிப்பாளர்களுடன் தொழில் போட்டியை எதிர்கொள்வது கடினமான செயல் போன்றவை.

 

 இதற்கு முன்பே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கிய உந்துதலை கொடுப்பதற்காக, தொழிற்சாலைகள் தங்கள் அலகுகளை அமைப்பதற்கான அடிப்படை மற்றும் விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் தொழில்துறை வளாகங்களை உருவாக்குவதில் அமைப்பு ஈடுபட்டுள்ளது. SIPCOT இதுவரை 15 மாவட்டங்களில் 24 தொழில் வளாகங்களையும், 6 துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் (SEZ) தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது. சிப்காட் பெரிய தொழில்துறை அலகுகளுக்கு உதவிக்கான கட்டமைக்கப்பட்ட தொகுப்புகளை அனுமதிப்பதில்/வழங்குவதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரு சிறப்பு ஏஜென்சியாகவும் செயல்பட்டு வருகின்றது. நிறைவாக மக்களாகிய நாம் சிறுதொழிலை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க ஆரம்பித்தால் அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..

 

####################################

Monday 1 August 2022

24.7.2022 முயன்றால் முடியும்! புதுக்கவிதை - கு.கி.கங்காதரன்

 முயன்றால் முடியும்!

24.7.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை கவியரங்கம் 

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 



  மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு மாலையிட்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.



  மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரவலர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. 

    முயன்றால் முடியும் என்ற தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .துணைச்செயலர் கு.கி. கங்காதரன், பொருளாளர் இரா. கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். பேரவையின் தலைவர். பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா.இரவிகு.கி.கங்காதரன்இரா.கல்யாணசுந்தரம்குறளடியான்மு.க.பரமசிவம், இஸ்மத்பால கிருட்டிணன்கவிக்குயில் இரா. கணேசன்லிங்கம்மாள்பா.வீரபாகுக.செயராமன்கு.பால் பேரின்பநாதன்சாந்தி திருநாவுக்கரசுமதுரகவி க.சரத்குமார்சங்கர நாராயணன்நாகேந்திரன்இரவி சந்திரன்உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை பாடினார்கள். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மகன் திரு .ஆதி சிவம் நன்றி கூறினார்.














































முயன்றால் முடியும்!

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன் 


மனிதா பிறப்பது ஒருமுறை
மானுடம் காப்பது நெறிமுறை
முடியாது என்பார் மூடர்கள்
முடியும் என்பார் அறிவாளிகள்

வெற்றிக்குத் தேவை முயற்சி
வேண்டும் அதற்குப் பயிற்சி
தோல்வி என்பது தொடக்கம்
துணிந்தால் கிடைக்கும் பதக்கம்

விழுந்தே கிடந்தால் வீழ்ச்சி 
எழுந்து நடந்தால் எழுச்சி  
முயற்சி செய்தால் வளர்ச்சி 
முடிந்தால் வாழ்வில் மகிழ்ச்சி

முயற்சி நம்பிக்கை அளிக்கும்
நம்பிக்கை திறமையை வளர்க்கும்
திறமை துணிவைத் தரும்
துணிவு வெற்றியைக் காட்டும்

கவலைகளைத் துடைத்திடும் முயற்சி
கட்டாந்தரையைப் பசுமையாக்கும் முயற்சி
தீமைகளை நன்மையாக்கும் முயற்சி
தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சி

********************************