Pages

Friday, 17 October 2025

28.9..2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்-38 - தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ?

 



28.9..2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம்- தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ?

மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி  தலைமையில் கவியரங்கம் நடந்ததுதுணைத்தலைவர் முனைவர் இரா. வரதராஜன்  வரவேற்றார்.பொருளாளர்  இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை வகித்தார் .ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார்.

செயலர் கவிஞர் இரா .இரவி  தலைமையில் ,கவிஞர்கள் இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராஜன், கு கி .கங்காதரன் ,புலவர் மகா .முருகுபாரதி , கி .கோ .குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன். லிங்கம்மாள், போ.சிவ சத்யாஇளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி,நா .குருசாமி ,மா .பரமானந்தம் , இரா .நீல மணிவண்ண கண்ணன் ,அவரது மனைவி கி .காயத்ரி ,சாந்தி திருநாவுக்கரசு ,சே .சாந்தி ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் புலவர் மகா .முருகுபாரதி , கி .காயத்ரி  இருவருக்கும் தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி

 எழுதிய திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கப்பட்டது.   துணைச் செயலர் கு கி .கங்காதரன்  நன்றி கூறினார்.

மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் கலைமாமணி .எம் .ஜேம்ஸ் மறைவிற்கும் ,உலகத்தமிழாராய்ச்சி சங்கத்தின் தலைவர் இராம பாண்டியன் மறைவிற்கும் ,நடிகர் விஜய்நடத்திய பிரசாரக்  கூட்ட நெரிசலில் மறைந்த அனைவருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 





















தமிழ்மொழியில் பிறமொழி கலப்பு ஏன்?

-    கவிஞர் இரா. இரவி

*****

உலகின் முதல்மொழிக்கு பிறமொழி எதற்கு?
உன்னத மொழியில் பிறமொழி கலப்பு ஏன்?

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்!
ஒப்பற்ற மொழியில் கலப்படம் மொழிக்கு கேடு தரும்!

இல்லாதவன் பிச்சை எடுப்பது தவறில்லை
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?

தமிழில் சொற்கள் களஞ்சியமாக உள்ளன
தன்னிகரிற்ற தனிப்பெரும் செம்மொழி தமிழ்!

ஆங்கிலேயர் யாராவது உலகில் எங்கேனும்
ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுவார்களா?

தமிழன் தான் தமிழோடு ஆங்கிலம் கலந்து
தமிங்கிலம் பேசி தமிழ்க்கொலை புரிகின்றான்!

ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதை உடன் நிறுத்திடுக!
அழகுதமிழில் கையொப்பமிட உடன் பழகிடுக!

இருமொழியில் கையொப்பம் வேண்டாமே! !
ஒருமொழியில் தமிழில் போட்டுப் பழகிடுக

வடமொழி எழுத்துக்கள் தமிழுக்கு எதற்கு?
வடமொழி எழுத்துக்கலப்பு தமிழுக்குக் கேடுதான்!

அனைத்து மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
அதனை கலப்படம் செய்து களங்கப்படுத்தலாமா?

தமிழில் எழுத்துக்கு பஞ்சமே இல்லை
தமிழுக்கு பிறமொழி எழுத்து எதற்கு?

நல்லதமிழில் நாளும் எழுதிடுவோம்
நல்லதமிழில் நாளும் பேசிடுவோம்!

•••••











**மா மதுரைக் கவிஞர்* *பேரவை* , மதுரை 

 *சிந்தனைக்* *கவியரங்கம்* - *38* 

நாள் *:28. 09 2025* 

 

வழி வழியாய் அந்த நாள் முதல்

வழி மொழிந்து

 வளம் நிறைந்து

 *வாழும் மொழி

வழிகாட்டும் மொழி- நம்மை 

 *ஆளும் மொழி

தாய் மொழி 

 *தமிழ் மொழி!* 

(4)

தாய்மொழி தமிழின் 

தன்னேறில்லா முன்னேற்றத்தைத்

தடுத்திடும் வாய் மொழி வரும்

 *பிறமொழிக் கலப்பே* !

(6)

விளைபயிர் ஊடே 

விரைந்து பரவிடும் 

முளை பயிர் காடே 

 *களை பயிர்க் கலப்பு !* 

(8)

இனத்தோடு

இனம் சேர

 *நலங் கூடும்! -* மலரோடு

மணம் சேர  நல்ல *மணம் கூடும்!* 

கனிந்த பழத்தோடு இனித்த பால் சேர்க்கப் *பேரமுதம்* !

இனிக்கும்தமிழோடு

 கலக்கும்பிறமொழி *

 *சிறு நஞ்சு

(துளிவிடம்) !

(12)

 *உள்ளது அழியாது!* 

 *இல்லது தோன்றாது* ! 

உயர்ந்தோர் கருத்து!

உலகோர் கருத்து !

தெள்ளுதமிழ் *மறையாது* !

சீரிளமைக் *குறையாது !* 

உள்ளும் 

உணர்வும்

துள்ளும்

 தமிழ்ச் சொல்லே!

 *உயர்வு!* 

(16)

நெல்லோடு மண்!

 *இயற்கை உழவு!* 

தாய் மொழிச் சொல் 

 *வாயோடு  வாழ்வு  !* 

அரிசியோடு கல்!

 *செயற்கை  கலப்பு* !

பிற மொழிச் சொல்

 *நோயாடு தாழ்வு* ! 

(20)

உயிரோடு உயிர்க் கலப்பு உருவானது *பிறப்பு!* 

கடனான உடலோடு உயிர் வாழ்தலே *இருப்பு!* 

கயிறானக் காற்றில் அலைந்தாடலே *உயிர்ப்பு* !- செய் 

கருமத்தை ஆற்றில் தொலைத்தலே

 *இறப்பு* !

 (24)

 *பேசு தமிழா!* 

 *பேசு தமிழ் !* 

 

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர் 

புலனம்: *9611226392*  

நாள் : *28.09.2025*

 ****************

தமிழ்மொழியில் பிறமொழி கலப்பு ஏன்?

புதுக்கவிதை 

கு. கி.கங்காதரன் 

 

தொடக்கத்தில் நோய்யைக் காணாது விட்டால்
தொடர்ந்துத் துன்பத்தைத் தரும் உடலுக்கு
பிறமொழிகளைத் தமிழில் கலக்க விட்டதால் 
படுகுழியில் புதையும் அபாயம் தமிழ்மொழிக்கு

மல்லிகையின் மணமாய்த் தமிழ்மொழி இருக்க
மணமில்லாக் கதம்பமாய்ப் பிறமொழி எதற்கு
அமிர்த்தமாய்ச் செம்மொழிச் செந்தமிழ் இருக்க
ஆலகாலமாய் அந்நியமொழிக் கலப்பு எதற்கு?

வணிகத்தில் விருந்தினராய் நுழைந்த அந்நியமொழிகள்
ஊடகத்தில் உறவாய் உருமாறிய அயல்மொழிகள்
பள்ளியில் பங்காளியாய் பகிர்ந்த ஆங்கிலமொழி
இவ்வகையிலேத் தமிழில் கலந்தது பிறமொழிகள்

ஆங்கிலமொழிக் கலப்பால் தமிழ் ஆங்கிதமிழானது
தமிழகத்தின் பெருமை சிதைந்து போனது
கடவுச்சீட்டு இல்லாமல் வாழும்  பிறமொழிகளை
தமிழ்மொழியிலிருந்து நீக்கி தமிழைக் காப்போம் ..

                              ***************


 



















































******************