SHOW MY SOUL! -
உயிரைக் என் கண்ணுக்குக் காட்டு!
கற்பனைக் (அறிவுள்ள) கதை
சிறுகதை
மதுரை கங்காதரன்
நல்லாட்சிக்குப் பெயரெடுத்த ‘மீனாட்சி பாண்டியம்’ நாடெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அந்நாட்டை ஆளும் மன்னர் சொக்கநாத பாண்டியர் சீரும் சிறப்புமாய் , மக்களுக்கு எவ்வித குறையுமில்லாமல் நீதிநெறி தவறாது ஆட்சி செய்து வந்தார்.
அவருக்கு வயதானபடியால் அவருக்குப் பிறகு அவரது மகன் வீரபாண்டியனை இளவரசராக்கி அவருக்கு
முடிசூட்டு விழா நடத்திட வேண்டுமென்று அமைச்சர் பெருமக்களைக் கூட்டி
ஓர் நன்நாளைக் குறித்தார். இச்செய்தியை நேச நாட்டு மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும், இன்னும் பிற முக்கியமானவர்களுக்கும் தங்களது வீரர்கள் மூலம் தெரியப்படுத்தினார்.
அவ்வளவு சிறப்பாக ஏற்பாடுகள் செய்தும் அந்நாட்டு மக்களுக்கு மனதில் ஏனோ சற்று அதிருப்தி குடிகொண்டிருந்தது. ஏனெனில் மன்னரைப் போல அல்லர் அவரது மகனான இவ்விளவரசர். மன்னரின் அனுபவம், மதிநுட்பம், திறமையான நிர்வாகம், இரக்ககுணம், அறிவு, பொறுமை போன்ற அனைத்திலும் குறைந்த அளவே அவர் பெற்றிருந்தார். அப்படியிருக்கும் அவரால் எப்படி நாட்டை அவர் தந்தையைப் போல் நன்றாக ஆளமுடியும்? என்கிற கேள்விக்குறி அனைவரின் எண்ணமாக இருந்தது. அதோடு கவலையும் அவர்களுக்கு ஒட்டிக் கொண்டுவிட்டது.
முடிசூட்டு விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருந்த சமயத்தில் மன்னர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். இதை யாரும் எதிர்பார்த்திராத அமைச்சர்களும், மக்களும், ஏன் முடிசூட இருக்கின்ற இளவரசனும் முதற்கொண்டு அரசரை எப்படியாவது
குணப்படுத்தி விடவேண்டும் என்று மூச்சாக அதற்கான வழிகளைத் தேடினர்கள். நாடெங்கும் கைதேர்ந்த சகல வைத்தியர்களையும் அழைத்துப் பார்க்கச் செய்தார்.
அனைவரும் சொன்ன ஒரே பதில்
'இன்னும் ஓரிரு
வாரத்தில் மன்னர் உயிர் பிரிந்துவிடும்' என்று உறுதியாகவும், இறுதியாகவும் சொன்னார்கள். இதை கேட்டவுடன் இளவரசர்,
அனைத்து அமைச்சர்களையும் அழைத்து 'நான் முடிசூட்டிக்கொள்ளும் விழா வரையிலாவது மன்னரை எப்படியும் உயிரோடு இருக்கச் செய்திட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
அதைக் கேட்ட அமைச்சர்கள் ,"இளவரசே! விதி நிர்ணயித்த காலத்தில் அந்த எமன் ஒரு வினாடி கூட தாமதம் செய்திடாமல், யார் ? எவரையும் பார்க்காமல் உயிரை பறித்திடுவான்! இது தான் மனித வாழ்க்கை நியதி" என்றனர்.
"அவ்வாறு நான் ஒரு காலும் அனுமதிக்கமாட்டேன். எனது தந்தையின் உயிரை அந்த எமன் பறிப்பதை தடுத்து நிறுத்திட வழி சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டார்.
அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ஏது செய்வதறியாவது விழித்தனர். 'உயிரையாவது, பிடித்து நிறுத்துவதாவது ! அது எப்படி சாத்தியமாகும் ?!' என்று புலம்பினார்கள்.
மன்னரும் "மகனே வீர பாண்டியனே! முடியும் தருவாயில் ஊசலாடும் எனது என் விதியை மாற்ற யாராலும் முடியாது. நான் இறக்கும் நாள் வந்து விட்டது. அதைத் தடுத்திட யாராலும் முடியாது.
மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. என்னை விட நன்கு ஆட்சி செய்து மக்களுக்கு நன்மைகள் பல செய்வாயாக !" என்று இளவரசருக்கு புத்திமதி கூறியதையும் கேட்காமல் இந்த விசயத்தில் தன் முடிவில் கல்லாய் நின்றான்.
காலம் வந்தது.
கூடவே காலனும் வந்தான். முடிசூட்டு விழா நடக்குமுன்னே அவன் தந்தையின் உயிர் பிரிந்தது. எவ்வளவு பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் பலனில்லையே என்று வருத்தப்பட்டார். இந்த சோகம் தீரும் வரையில் தான் அரியணை ஏறப்போவதில்லை ! என்று உறுதி கொண்டார். அதுவரையில் நன்கு ஆட்சி செய்துகொண்டு வந்த இளவரசருக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது.
அதாவது தனது விதி முடியும் நேரத்தில் கூட தன் தந்தை இறந்தது போலவே எனது உயிரும் போகுமே! ஆகையால் இப்போதே எனது உயிர் என்னைவிட்டுப் பிரியாமல் இருக்க அதைப் பிடித்து அடைத்திடவேண்டும்' என்று முடிவெடுத்தான்.
மறுநாள் மக்களுக்கு இதனை ஒரு அவசர செய்தியாக நாடெங்கும் பறைசாற்றி தெரிவிக்கச் செய்தார்.
'யார் எனது உயிரைப் பிடித்துத் கொடுப்பவர்களுக்கு எனது நாட்டில் பாதியளவு கொடுப்பதாக அறிவித்தார்'. மேலும் ‘இந்த கொடூர பரீட்சையில் கலந்து கொள்ள மக்களில் யாரும் முன் வரவில்லை’ என்கிற செய்தியை இளவரசரிடத்தில் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த இளவரசர், "தினமும் யாராவது ஒருவர் என் முன் வந்தே தீரவேண்டும். உயிர் பிரியும் ரகசியத்தையும் அதை பிரியாமல் அடைத்து வைக்கும் வழியையும் சொல்லவேண்டும் " என்று கட்டளையிட்டார்.
மறுநாளிருந்து இளவரசரின் ஆணையை அமைச்சர்கள் நிறைவேற்ற தொடங்கினார்கள். அப்படி தினமும் வருவோர் ஒவ்வொருவரிடத்திலும் அரசன் கேட்கும் கேள்விகள் எவைகளென்றால், " உயிர் எங்கு இருக்கின்றது? அதை எனக்குக் காட்ட வேண்டும்.
எனது உயிரைப் பிடித்து என்னிடம் தரவேண்டும்!" என்று கூறுவார்.
அதற்கு சரியான பதில் கூறாவிட்டால் தலை தரையில் உருளும்.
அன்றும் ஒருவனின் முறை வந்தது.
அவனிடத்தில் "உனக்கு உயிர் இருக்கின்றதா? என்று இளவரசர் கேட்டார். அதற்கு அவன்
"இளவரசரே, என்னால் நடக்க,
பார்க்க, யோசிக்க முடிகின்றது! இதிலிருந்து நான் உயிரோடு இருக்கிறேன் என்று தானே அர்த்தம்"
என்றான்.
இதைக் கேட்ட இளவரசர் "அப்படியென்றால் 'அந்த உயிரைக் என் கண்ணுக்குக் காட்டு" என்றார். அதற்கு அவன் "இளவரசே ! ஒருவர் அடிபட்டதினால் ஏற்படும் வலியைப் பார்க்க முடியுமா? அதை உணரத்தான் முடியும். அதேபோல் ஒளியை கையில் அள்ள முடியுமா? அதைப் பார்க்கத்தான் முடியும். இன்னொரு சரியான உதாரணம் சொல்லப் போனால் , ஆவியாகின்ற தண்ணீரை நாம் கண்ணால் காண முடியுமா? அல்லது அந்த ஆவியை பிடிக்கத் தான் இயலுமா? ஆக சிலவற்றை உணரத்தான் முடியுமே தவிர பார்க்க முடியாது! அதேபோல் சிலவற்றை பிடிக்க முடியாது" என்று பதிலளித்தான்.
இளவரசரோ பிடிவாதமாக "அப்படியா
! இப்போது உனது உயிரைப் நான் பார்க்கப் போகிறேன் பார்! " என்று அதிக உணர்ச்சியுடன் கத்தினார்.
அதற்கு அவன் சிரித்தான். "அது நான் இறந்தால் தான் நடக்கும். அப்போதும் எனது உயிரைப் பிடிக்க முடியாது! " என்றான்.
கொஞ்சமும் இரக்கப்படாமல் , யோசிக்காமல் " யாரங்கே?
இவனது தலையைச் சீவுங்கள் " என்று கட்டளையிட்டார். அவன் உயிர் பிரிந்தது. ஆனாலும் அவரால் பிரியும் உயிரைப் பார்க்க முடியவில்லை. அது மறைந்த இடம் தெரியவில்லை. இளவரசருக்கு கோபம் தலைக்கேறியது. கேவலம் ஒரு உயிரைப் பிடிக்க முடியவில்லை. எனக்கு இவ்வளவு பெரியபடைகள் இருந்தும் என்ன பயன்? என்று கொக்கரித்தான். அதற்கு எல்லோரும் தலை குனிந்தனரே தவிர
, அவரின் இந்த தவறான நடவடிக்கைகளை எதிர்த்துப் பேச யாரும் முன்வரவில்லை. இப்படியாக தினமும் ஒவ்வொருவரின் தலை உருண்டது. அவர் எதிர்பார்த்தபடி எந்த அதிசயமும் நடக்கவில்லை. 'நாளைக்கு யார் தலை உருளப் போகிறதோ?' என்று கவலையுடன் மக்கள் மூழ்கிக் கிடந்தனர்.
அதே சமயத்தில் தூரத்து நாட்டு இளவரசன் 'வீரசிம்மன்' அந்நாட்டின் வழியே செல்ல நேர்ந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் அந்நாட்டைப் பற்றிய பெருமைகள் அவருக்கு முன்னரே தெரியும். அவரே இந்நாட்டைப் பற்றிப் புகழ்ந்து பலரிடம் சொல்லியிருக்கிறார். அப்படியிருந்த இந்நாட்டு மக்கள் ஏன் துயரத்தில் இருக்கின்றார்கள்? என்று சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இளவரசர் கேட்கும் அந்த விந்தையான கேள்விகளுக்கு யாரால் எப்படி சரியான பதில் சொல்ல முடியும்? இயற்கையில் பிரியும் உயிரை எப்படி காட்டமுடியும்? என்று சற்று யோசிக்கலானான். இப்படி அறிவிழந்து இளவரசர் கேட்கும் கேள்விகளுக்கு மதிநுட்பத்துடன் தான் பதில் சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் கூடிய விரைவில் எல்லோரையும் கொன்று குவித்துவிடுவார்' என்பதற்காக ஆழமாக சிந்தித்து அருமையான பதிலுக்குத் தயாரானார்.
மறுநாள் வீரசிம்மன் அரசவைக்குச் சென்று இளவரசர் முன் நின்றார்.
"அரசே! இன்று நான் உங்களுடைய உயிரைக் காட்ட வந்திருக்கிறேன்.உங்களின் இந்த உயிரைப் பற்றிய சந்தேகம் எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் இவ்வளவு பேர் இறந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்று புதிர் போட்டு பேசினார்.
அதைக் கேட்ட இளவரசருக்கு மகிழ்ச்சி தாங்கஇயலவில்லை. பரவாயில்லை ! இப்போதாவது ஒருவர் தகுந்த பதிலுடன் வந்தாரே என்று பெருமைபட்டார். இருப்பினும் "வீண் பேச்சுக்கு இங்கு இடமில்லை.
உயிரை எனக்கு உடனே காட்டு!
என்றார்.
"இளவரசே !இதில் ஒரு ரகசியம் இருக்கின்றது. அவரவர் உயிரை அவரவர் தான் பார்க்க முடியும்.
எனது உயிரை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் உங்கள் உயிரை நீங்கள் பார்க்கலாம்! பிடித்தும் வைக்கலாம்"
என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்.
" எப்படி எனக்கு காட்டப் போகிறாய்?
என்று விளக்கமாகச் சொல்" என்றான்.
"முதலில் உங்கள் உடலுக்குள் இருக்கும் உயிரை வெளியில் கொண்டு வரவேண்டும்".
"எப்படி கொண்டுவரப்போகிறாய் ?"
"உங்கள் கழுத்தை சற்று கீற வேண்டும். அதிலிருந்து உங்கள் உயிர் வெளியில் வந்துவிடும். அப்படி வெளியில் வந்த உயிரை பல வருடங்கள் அருந்தவம் செய்து பெற்ற இந்த மந்திர பாத்திரத்தில் அடைத்துவிடுகிறேன். பிறகு உங்கள் தலையை ஒட்ட வைத்து இந்த மந்திர பாத்திரத்தை உங்கள் கையில் கொடுத்தால் மறுபடியும் நீங்கள் உயிர் பெற்று எழுவீர்கள். பிறகு நீங்கள் இறக்காமல் நெடுங்காலம் நாட்டை ஆளலாம் "
என்றார்.
ஆர்வ மிகுதியினாலும் , பேராசையினாலும் "அப்படியே ஆகட்டும்" என்று கட்டளையிட்டார். இது தான் சரியான நேரம் என்று தன்னிடம் இருந்த உடைவாளை எடுத்து அந்த இளவரசரரின் தலையைச் சீவினார்.
"ஆ.. ஆ.." என்று அலறலுடன் தரையில் சாய்ந்து மடிந்தார்.
மதிகெட்டு , அறிவிழந்து கொடுங்கோலாட்சி செய்து நாட்டு மக்களை தினம் தினம் துயரத்தில் ஆழ்த்திய இளவரசர் இறந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது.
தக்க சமயத்தில் தந்திரமாய் மக்களைக் காப்பாற்றிய வீரசிம்மனை அந்நாட்டு இளவரசராக முடிசூட்டி கொண்டாடினர். அன்று முதல் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்து மக்கள் மனதில் சிறந்த காவலனாக நிலைத்து நின்றான். அந்நாட்டு மக்களின் விதியை மதியால் வென்றார். மதியில்லாத அந்த இளவரசரின் விதியோ முடிந்தது.
########################################################################