இவனுக்கா? வேலையா?
சிறுகதை
மதுரை கங்காதரன்
"மாப்பிள்ளே, எங்கே கிளம்பிட்டீங்க?" என்று தனது சில நண்பர்களினிடையே
எழுந்த ஒரு குரல் அவன் காதில் விழுந்தது.
"பொண்ணு பார்க்கப் போறதா இருந்தா 'மாப்பிள்ளை'ன்னு கூப்பிடலாம். ஆனா இவன் வேலையிலேத் தேடப்போறான்"
அப்போ,
இப்போ இருந்து இவனை 'உழைப்பாளி'ன்னுக் கூப்பிட்டாப் போச்சு"
"ஆமா, இவன்….. நமக்குத்
தெரிஞ்சுப் பத்து தடவையாவது வேலைக்கு முயற்சி பண்ணியிருப்பான். இதுவரைக்கும் இவனுக்கு வேலை கிடைச்சபாடு இல்லே. ஏண்டா,
இந்த வேலை இவனுக்குக் கிடைச்சுடுமா என்ன?" என்று அளவிள்ளாமல் கேலியும் கிண்டலும் செய்யும் அவன் தன் நண்பர்களைப் பற்றிக்
கவலைப்படாமல் எதிர்வார்த்தையும் பேசாமல் அமைதியாகக் கடந்து சென்றான்.
அவர்களின்
இத்தகைய பேச்சுக்கு அர்த்தம் இருக்கத்தான் செய்தது.
இவனோ பரம ஏழை! நன்றாகப் படித்தாலும் கூட அவனது
வீட்டுச்சூழ்நிலை காரணமாகப் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டுவிடவேண்டிய நிலை உருவானது.
இக்காலத்தில் நன்றாகப் படித்துத் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும்,
போட்டித்தேர்வு எழுதி அதில் வெற்றிப்பெறுவதோடு 'லஞ்சம்' கொடுத்தால்தானே வேலையே கிடைக்கின்றது.
இப்படி இருக்கும்போது எந்த தகுதியும் இல்லாத இவனுக்கு ஒரு நல்ல வேலை
கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்குமா? என்பதே அவன் நண்பர்களின் யதார்த்தமான
கேள்வி!
'முயற்சி திருவிணையாக்கும்', 'தன்னம்பிக்கையைத் தளரவிடக்கூடாது',
கடின உழைப்பே உன்னைக் காக்கும்', 'தோல்வியை நீ
ஒப்புக்கொள்ளாத வரைக்கும் உன்னிடத்தில் வெற்றி இருக்கின்றது' என்று பல தலைவர்கள், தொழில் அதிபர்கள், பெரிய பதவியில் வகிப்பவர்களின் நேரலைப் பேட்டிகளை அவன் அடிக்கடி கேட்டதால்தான் என்னவோ
இவ்வரிகள் அவன் இதயத்தில் பதிந்திருந்தது.
இந்தமுறை
அவனுக்கு அசாத்தியமான ஒரு துணிவு பிறந்தது. அன்மையில்
ஒரு தொழிலதிபரின் பேட்டி அவனையறிமல் மனதைக் கவர்ந்தது. எனக்குத்
தகுதியான ஒரு வேலை, அவருடைய நிறுவனத்தில் முயற்சி செய்தால் என்ன?
படிச்சவங்களுக்கு குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் தகுதியானவங்க.
ஆனா படிக்காத என்னைமாதிரி ஆட்களுக்கு அவங்களைவிட பல வேலைகளுக்கு
வாய்ப்பு இருக்கும்போது நான் ஏன் அசரனும்?' என்று ஒரு
மாவீரனாக அந்த நிறுவனத்தை நோக்கி நடந்தான். அவன் எண்ணம்
வீண்போகவில்லை. அங்கு சில வேலைகளுக்கு ஆட்களைத்
தேர்ந்தெடுப்பதற்காக பலர் கூடி இருந்தனர். அனைவரின் உதட்டில்
ஆங்கிலம் சரளமாக வந்துகொண்டிருந்தது. கையில் விதவிதமானப் பல
துறையில் தேர்ச்சிபெற்ற சான்றிதழ்கள் இருப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை. எல்லாவற்றிற்கும் நேர்மாறாக அவனிடத்தில் எவ்வித சான்றிதழும் இல்லை.
உடையிலும் அவன் எளிமை பறைசாற்றியது.
எல்லாவற்றையும்
பார்த்த பிறகும் அவன் மனம் ‘நான் இதைப்பார்த்து
சற்றுகூட மிரளமாட்டேன், எதற்குமே அச்சப்படமாட்டேன்' என்பதை அவன் தோரணை பேசிற்று.
நேர்முகத்தேர்வு
நடக்கும் இடத்தில் தானும் அமர்ந்து கொண்டான். அதன்
மேலாளர் ஒவ்வொருவரையாக சரமாரியாகப் பல கேள்விகள் கேட்டிருப்பார் போல இருக்கு.
புன்னகையோடு போன எல்லாரும் பேயறைந்தால் போல வெளியே வந்துகொண்டிருந்தனர்.
அதைப்பற்றியேல்லாம்
கொஞ்சம்கூட கவலைப்படாமல் அமர்ந்திருந்தான்.
"என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? இன்னும் யாராவது வரவேண்டியது இருக்காங்களா? என்று
மேலாளர் கேட்க "சார், எல்லாரும் வந்தாச்சு.
ஆனா ஒருவர் மட்டும் நம்ம முதலாளியை பார்த்திட்டுத்தான் போவேன்னு இருக்கிறார்"
என்று அலுவலகப்
பையன் சொல்ல, "அவரை முதல்லே நான் பார்க்கிறேன்"
என்று விவரத்தை மட்டும் கேட்டுக்கொண்டு அவனை முதலாளியிடம் அழைத்துச்
சென்றார்.
‘தன்னை யாரும் பார்க்க விரும்பினால் மறுக்காமல் பார்க்க அனுமதிக்கவேண்டும்’ என்பது அங்குள்ள
எழுதப்படாத சட்டம்.
"மேனேஜர் எல்லாத்தையும் சொன்னார். தம்பி, இங்கே வேலையிலே சேரனும்னா குறைந்தது ஒரு பட்டமாவது வாங்கியிருக்க வேண்டும்.
அப்படி ஏதும் உன்கிட்ட இல்லே. அப்படியிருக்கும்போது
நான் எப்படி உனக்கு வேலை தர்றது?" என்று அங்கிருக்கும் நடைமுறையை
எடுத்துச் சொன்னார்.
"ஐயா, இப்போ நான் பட்டம் வாங்கலே. ஆனா பல பட்டங்கள் வாங்குற அளவுக்கு என்கிட்டே அறிவு இருக்கு. இதுவரைக்கும் அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைக்கலே. சென்றவாரம் உங்க பேட்டி பார்த்தேன்.
நீங்ககூட என்போல படிக்காம வேலை தேடுதினதா சொன்னீங்க. அப்பறம் யாரோ ஒரு தொழிலதிபர் உங்களுக்கு வேலையும் கொடுத்ததோடு படிக்க
வைச்சதா சொன்னீங்க. அப்புறம் உங்களோட கடின உழைப்பாலே நல்ல படிச்சு,
இப்போ ஐந்து நிறுவனத்திற்குத் தலைவரா உயர்ந்து இருக்கீங்க. அதுபோல நான் நல்ல உழைச்சு, படிச்சு முன்னேறக் கூடாதா?
நீங்க எனக்கு சொன்ன இந்த பதில்! அந்த
தொழிலதிபர் உங்களுக்குச் சொல்லியிருந்தா இந்த கௌரவம், சொத்து,
சுகம் கிடைச்சுருக்குமா? நீங்களும் சராசரி மனுசங்கபோல
கடந்துவந்த பாதையை மறந்து இப்படி பேசுறது எனக்கு புதுசாத் தெரியலே. இனிமேயாவது உழைப்புக்கு மதிப்பு கொடுத்து ஒரு சிலரையாவது
முன்னேத்துறதுக்கு முயற்சி செய்யுங்க!" என்று
சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே வந்தான்.
அவன்
பின்னே பதறியவாறே,"தம்பி, தம்பி
கொஞ்சம் நில்லுங்க தம்பி. உங்களோட இந்த செயல், என் கடந்தகால வாழ்க்கையை படம் பிடிச்சு காட்டுறதா உணர்றேன். இதுநாள் வரை எனக்குள் இருந்த பணப்பேராசைக்கு சாவுமணி அடிச்சுட்டே. நீ நிச்சயமா என்னைவிட நல்ல நிலைக்கு வருவே. அதுக்கான
வாய்ப்பு நான் தர்றேன். உனக்கு வேலை உண்டு. கூடவே படிக்கவும் வைக்கிறேன். நீ பெரிய ஆளா வந்தபின்னே
தயவுசெய்து என்னைப்போல இல்லாமே உழைக்க ஆசைபடுபவர்களுக்கு நீ உதவி செய்யவேண்டும்"
என்று சொல்ல அவன் அமைதியாகத் தலையாட்டிவிட்டு அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெற்றான்.
********************************************