







.jpeg)




ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!
- கவிஞர் இரா. இரவி
உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்று
உரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று
எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்
உழவுத் தொழில் அழிந்தால் உலகம் இருக்காது
உயிர் வளர்க்கும் உணவு தரும் தொழில்
உயிர்கள் இன்றி உலகம் இருந்து என்ன பயன்?
தொழில்களில் எல்லாம் தலையாய தொழில் உழவு
தரணி முழுவதும் போற்றிப் புகழும் உழவு
தரணி செழிக்க உயிர்கள் வாழ உழவு
தன்னிகரில்லா மட்டற்ற உயர் தொழில் உழவு
ஒரு நாற்றால் வளர்வது ஒப்பற்ற பல மணிகள்
உழைத்தால் உயரலாம் உணர்த்துவது உழவு
விளைநிலங்களை எல்லாம் வீட்டடி மனைகள் விற்பனை
விளைச்சலுக்கு மூடு விழா நடத்துவது மூடத்தனம்
கரும்பு வயல் எல்லாம் கட்டடங்கள் முளைத்தன
கழனி எல்லாம் கற்சுவர்களாக உயர்கின்றன
நெல் விளைந்த நிலங்களில் நீண்ட நெடிய கட்டடங்கள்
நெல் இன்றி உணவின்றி வாடும் நிலை வருவது உறுதி
போற்றிட வேண்டிய உழவை மதிக்காத காரணத்தால்
பொன்மன உழவன் நொந்து நிலம் விற்கிறான்
அலைபேசியை உண்ண முடியாது உணருங்கள்
அலைபேசியை விட உண்ண உணவு அவசியமாகும்
நவீனம் என்ற பெயரில் நாகரீகம் என்ற பெயரில்
நல்ல நிலங்களை எல்லாம் அடுக்ககம் ஆக்குதல் முறையோ?
உயிர் வாழ உதவிடும் உணவு தரும் உழவை
உலகம் போற்றி கொண்டாடி மகிழ் வேண்டும்!
&&&&&&&&&&&&&&&
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
விதையில்லாமல் உழவில்லை
உழவில்லாமல் உணவில்லை
உணவில்லாமல் உயிரில்லை
உயிரில்லாமல் உலகில்லை
உழவே மண்ணைக் காக்கும்
மண்ணே பசுமையைக் காக்கும்
பசுமையே உயிரைக் காக்கும்
உயிர்களே உலகைக் காக்கும்
பசியைத் தீர்ப்பது உணவு
நோய்க்கு மருந்து உணவு
உடல் சக்திக்கு உணவு
உலகைக் காப்பதும் உணவு
உணவில்லா உடலோ சக்தியில்லா சவமாகும்
ஈடில்லா உழவே என்றென்றும் பலமாகும்
மாட்டுப் பொங்கலே தமிழருக்கு திருநாளாம்
மட்டற்ற மகிழ்ச்சியே வாழ்வில் கொண்டாட்டமாம்.
########################