28.4.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை " தமிழுக்கு ஈடில்லை காண் ! " என்ற தலைப்பில் நடந்தது.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -
" தமிழுக்கு ஈடில்லை காண் !" என்ற தலைப்பில் நடந்தது மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.
செயலர் கவிஞர் இரா.இரவி கவியரங்கத் தலைமை வகித்தார் , பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் வரவேற்றார், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதாயினி சோ .வனஜா நன்றி கூறினார் .
மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில் " தமிழுக்கு ஈடில்லை காண் ! " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது.
புலவர் மகா .முருகபாரதி , முனைவர் இரா .வரதராசன், கவிஞர்கள், இரா . கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மாவீரபாகு , இரா .இராம பாண்டியன் , அழகையா, கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அனுராதா , சோ .வனஜா, மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி திருவள்ளுவர் கழகம் ம .ஆறுமுகம் , முன்னாள் இராணு வீரர் சமயக்கண்ணு, செ..அனுராதா , பொன்பாண்டி , சு .பாலகிருட்டிணன் , எம்.முனியாண்டி , இந்தி ஆசிரியர் வேல்பாண்டி , ஷா ஜஹான் , ஆகியோர் கவிதை பாடினார்கள் .
கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் பொன்பாண்டி , சு .பாலகிருட்டிணன், சோ .வனஜா விருது பெற்றனர். மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் , மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் நினைவாக , அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன . .
துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய " மணக்கும் மரபு மலர்கள் " என்ற நூல் வெளியிட்டனர் .
கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
தமிழுக்கு ஈடில்லை காண்!
- கவிஞர் இரா. இரவி
***
தமிழ்மொழி போல் இனிதான மொழி இந்தத்
தரணியில் ஏதுமில்லை என்றார் மகாகவி பாரதியார்!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார்
தன்னிகரில்லா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்!
தமிழ்மொழி பயின்று திருக்குறள் படிக்க
தமிழனாகப் பிறக்க ஆசைப்பட்டார் காந்தியடிகள் !
தமிழர்களின் வீரத்தைக் கண்டு வியந்து
தமிழனாகப் பிறக்க விரும்பினார் நேதாசி!
பல்லாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
பண்டைத் தமிழுக்கு இணையானது ஏதுமில்லை !
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல்
பயன்பாட்டில் இருந்து வரும் சிறந்த மொழி தமிழ் !
என்ன வளம் இல்லை எம் தமிழ்மொழியில்
என்று கேட்குமளவிற்கு அனைத்து வளம் மிக்க மொழி !
எண்ணிலடங்கா இலக்கிய இலக்கணங்கள் உள்ளவை
எங்கும் உலகம் எங்கும் ஒலித்திடும் தமிழ் !
உலகப்பொதுமறையை உலகிற்கு வழங்கிய
ஒப்பற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி !
ரசியாவின் டல்சன் இழைகள் அறையில் உள்ள
ரம்மியமான ஒரே இந்திய நூல் திருக்குறள் !
பல்லாயிரம் வயதாகியும் இளமையாக இருக்கும் மொழி
பன்னிசை முதலில் இசைத்த மொழியும் தமிழே!
தமிழுக்கு ஈடில்லை காண் புகழ்ச்சி அல்ல உண்மை
தமிழே உலகின் முதல்மொழி ஆய்வறிக்கை முடிவு!
*********************
தமிழுக்கு ஈடில்லை காண்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
அகிலத்தில் ஆதியில் உருவான மொழி
இலக்கணத்தைத் வகுத்துத் தந்த உளி
முத்தமிழாய் உலகில் விரிந்துள்ள ஆழி
முச்சங்கமாய்த் தமிழர்களுக்குத் தந்த விழி
தமிழை அன்னையென அழைப்பார்கள்
தமிழைக் கடவுளென வணங்குவார்கள்
தமிழைச் செம்மொழியென மதிப்பார்கள்
தமிழை அமிழ்தமெனப் போற்றுவார்கள்
தமிழை ஆட்சிமொழி கொண்ட நாடுகளுண்டு
தமிழின் வேற்சொற்கள் பன்மொழிகளில் உண்டு
உயிரும் மெய்யும் உணர்த்தும் எழுத்துகளுண்டு
ஆறுமுக வடிவாய் நிற்பதற்குக் காரணமுண்டு..
ஈராறு கண்களாய் உயிரெழுத்துகள் (12)
அரத்தின் கூர்மை வேலான ஆயுதவெழுத்து (1)
ஓராறு முகங்கள் ஈராறு கரங்கள் (18)
உணர்த்தும் பதினெட்டு மெய் எழுத்துகள்
இதோடு உயிர்மெய்யெழுத்துகள் கூட்டினால் 247
இருபத்து நான்கு மணிநேரமும் ஏழு நாட்களும்
எந்நேரமும் எந்நாளும் தமிழை மறக்காதே
எம்மொழியும் தமிழுக்கு ஈடில்லை மெய்யானதே..
************