Pages

Tuesday, 16 April 2013

தாய் மொழி எப்போது வளரும்? WHEN WILL BE THE MOTHER TONGUE GROW? நாட்டு நடப்புகள்

தாய் மொழி எப்போது வளரும்? 
WHEN WILL BE THE MOTHER TONGUE GROW?
நாட்டு நடப்புகள் 


உலகத்தில் எவ்வளவோ மொழிகள் உள்ளன. ஆனால் சில மொழிகளே பேசப்பட்டு, எழுதப்பட்டு, படிக்கப்பட்டு வருகின்றன. பல மொழிகள் தாய் மொழியாகவே இருந்தாலும் அவைகள்  வெறும் பேச்சளவில் தான் இருக்கின்றன. அதிகமாக எழுதப்படுவதோ, படிக்கப்படுவதோ கிடையாது. ஏன்? அவ்வகையான மொழிகள் வளரவில்லை? அப்படியானால் ஒரு தாய்மொழி வளரவேண்டுமென்றால் என்னென்ன தேவை? என்பது பற்றி பார்ப்போம்.


இதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏழை வீட்டில் யாராவது வேலைக்காரர்கள் இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்களின் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டிற்கு போதுமா? அதாவது தனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா? இன்றைய காலகட்ட்டத்தில் எல்லாமே வியாபார நோக்கில் தான் எந்த ஒரு காரியமும் நடைபெறுகின்றது. அதாவது மொழியின் வளர்ச்சி உட்பட. எந்த மொழி வழியில் பாடங்களை, கல்வியைக் கற்றால் நிறைய சம்பாதிக்கலாம்? என்பதை மனதில் கொண்டே கல்வியைக் கற்கின்றனர். அவ்வாறு கற்றுக்கொண்டால் தான் கை மேல் பலன் கிடைக்கும் என்று எண்ணி எப்பாடுபட்டாவது எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கற்கின்றனர்.. தாய் மொழியாக  இல்லாமல் இருந்தாலும் சரி. வாயில் நுழையாமல் இருந்தாலும் சரி. அம்மொழியை கற்கின்றனர்.


அதாவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி வளரவேண்டுமானால் வெறும் கதை, கவிதை,  இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றில் மட்டும் இருந்தால் போதாதது. அதை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பாதிக்க முடியுமா? அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிகக் குறைவாகும். எந்த மொழியில் கலை, கணினி, அறிவியல், மருத்துவம், அதிநவீன பலதுறை  பாடங்கள், இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மக்களிடையே எளிதாக, வேகமாக பரிமாற்றங்கள் நடைபெறுகின்றதோ அம்மொழியே சந்தேகமில்லாமல் மிக வேகமாக வளரும். அம்மொழியையே மக்கள் பிரயாசைபட்டு கற்பர். அம்மொழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி அதைப்பற்றி கவலை கொள்ளாமல் கற்பார். 


எடுத்துக்காட்டாக தமிழ் எங்கள் மூச்சு , தமிழ் எங்கள் உயிர்  என்று பல தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் மேடைகளில், சின்னத் திரைகளில் முழங்கிவருகின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கவா அவ்வாறு பேசுகின்றனர். இல்லவே இல்லை. தங்கள் சுயநலத்திற்காகவும், பட்டம், பதவி மற்றும் நாலு காசு சம்பாதிப்பதற்கு தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விவரமாக அவர்களின் வாரிசுகளுக்கு அந்நிய மொழிக்கல்வியைத் தான் கறக்கச் செய்து வருகின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை. பின் எப்படி அவர்கள் தாய் மொழியை வளர்ப்பார்கள். பொதுவாக அனைத்து மொழிகளுக்கும் ஆங்கில மொழி ஒரு எமனாக இருப்பது உண்மை. அது பல தாய் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வருகின்றது.


இவ்வளவும் கண் கூடாக தெரியும் போது 'மொழி வளரவில்லையே' என்று கூப்பாடு போடுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா? தாய் மொழி கற்ற அனைவருக்கும் வேலை உண்டா? நம்முடைய அன்றாட தேவைக்கு வெளி மாநிலத்திடம் கையேந்தி நிற்கின்ற நிலை.நம் நாடோ அந்நியனின் உதவியை கையேந்தி நிற்கும் நிலை. கிட்டத்தட்ட அந்நியனின் கைபொம்மையாய் இருக்கிறோம். ஏனெனில் நம்மிடம் நுட்பமான அறிவுள்ளவர்கள் ரொம்ப பேர் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளும் செய்து தருவதில்லை. ஆகையால் அறிவும், திறமையும் மிக்கவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று அந்நாட்டிற்க்காக உழைக்கின்றனர்.


தாய் மொழியைக் கற்பதைக் காட்டிலும் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்றால் அறிவியல் ஆராய்ச்சி செய்வது எளிது. அதோடில்லாமல் நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்கின்றனர். ஏனெனில் அந்த மொழியில்  தான் இன்றைய தினம் வரை உள்ள அனைத்து துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வலைதளத்தில் வேகமாக , எளிதாகவும் கிடைக்கின்றன, ஆனால் தாய் மொழியில் அனைத்துக் கட்டுரைகளை 'தமிழாக்கம்' செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.


அதாவது தமிழறிவு பெற்ற அறிவியலறிவு அறிஞர்கள் யாருமே இல்லை எனலாம். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்களுக்கு தகுந்த ஊதியமோ , வசதியையோ செய்து தருவதில்லை. மேலும் ஆங்கில மொழி வளர்ச்சி காட்டுத்தீ போல் அனைத்து மீடியாக்களில் பரவிவிட்டது. ஏன்? மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் தமிழ் மொழி வழி இல்லை எனலாம். அதனால் பள்ளிவரை தமிழ் வழி பாடத்தைக் கற்றவர்கள் கல்லூரியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆங்கிலம் வளருவதைத் தடுக்க யாராலும் முடியாது. ஒருவேளை தடுத்தால் கிடைக்கும் வருமானம் போய்விடும் என்று எல்லோருக்கும் தெரியும் .


இந்த நிலை தொடருமேயானால் தாய் மொழி வெறும் கேளிக்கைகளுக்கும், வியாபாரத்திற்கும் தான் உதவும். மொழி வளர உதவாது. ஒருவேளை தாய் மொழி வளர வேண்டுமானால் அது பணக்கார மொழியாக மாறவேண்டும். தமிழைக் கற்றவர்களுக்கெல்லாம் கை நிறைய சம்பளம் தரவேண்டும். அதை கற்பவர்களுக்கு ஊக்கத் தொகை தரவேண்டும். அந்நியர்கள் இங்கு வந்து தமிழைக் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். தமிழில் வெளியாகும் அறிவியல் ஆராச்சிக் கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் மற்றும் விருதுகள் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.


உலகளவில் தமிழைப் பரப்புபவர்களுக்கு தகுந்த வசதியும், சம்பளமும் தரவேண்டும். அதாவது ஆஸ்கார் விருது வாங்குவதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம் என்பது போல அன்னிய மொழி படங்கள் தமிழில் 'டப்' செய்தால் அந்த மாதிரி திரைப்படங்களுக்கு விருது கொடுக்கவேண்டும். வந்தாரை வாழவைத்து, அதிக சம்பளம் கொடுக்கும் பணக்கார மொழியாக தமிழை மாற்றவேண்டும். அவ்வாறு பணக்கார மொழியானால் அதன் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.


இன்றைய நிலையில் 'ஆங்கில மொழி' பணக்கார மொழியாக விளங்குகின்றது. அதை பின் தொடர்ந்து பல மொழிகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் பல தாய் மொழிகளுக்கு ஆபத்து தான். நமது மத்திய மாநில அரசுகளும் அந்நிய மொழியை ஊக்குவிக்கத்தான் செய்கின்றது. ஏனென்று கேட்டால் அதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கின்றதாம். அதற்கு முக்கிய காரணம், பல தலைவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது தான். 


அவர்கள் மற்ற மொழிகளை தாமும் படிக்காமல், மற்றவர்களையும் படிக்கவிடாமல் பல ஆண்டுகள் இருந்ததால் மற்ற மொழிகளின் வளர்ச்சி நமக்கு தெரியாமல் போனது. ஆகையால் இப்போது எதற்கெடுத்தாலும் அந்நியனின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலைமை. நமது நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு அந்நியனை பல சலுகைகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கணினி, மருத்துவம், மின் சக்தி, ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் அந்நியன் தயவினால் நடைபெறுகின்றது. ஏனெனில் அவர்களிடத்தில் தொழில் நுட்பம் இருக்கின்றது. திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை மற்றும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும், பணவசதியும் இருக்கின்றது.

ஆகவே நமது தாய் மொழியை பணக்கார மொழியாக்குவோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வேண்டும். பல மொழியில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்தால் நிச்சயம் நடக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் கட்டாயம் தாய் மொழி வளரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாமே நமது மொழியின் பெருமையை பேசி சுயதம்பட்டம் பேசுவதை நிறுத்திவிட்டு மற்ற மொழியினர் நம் மொழியை பெருமையாக பேசுமளவிற்கு செய்தால் தான் தாய் மொழி வளரும்.

நன்றி 
வணக்கம்.


Monday, 15 April 2013

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும் 

                           
நாட்டு நடப்புகள்.

           

நமது நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், மக்களுக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் விளையாட்டிலும், ஆராய்ச்சியிலும் நாம் சாதித்தது மிகமிகக் குறைவே? அதற்கு சாட்சி, 1896 வருடம் முதல் இது நாள் வரை 29 தடவை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஒருமுறை கூட தடகளப் போட்டியில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. அதேபோல் ஆராய்ச்சியில் 1930 ம் ஆண்டு சர். சி.வி. இராமன் பெற்ற பிறகு இதுநாள் வரை யாருமே நோபல் பரிசு பெறவில்லை. அதற்குக் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில முக்கியக் காரணங்களை பார்ப்போம்.

                 

முதலில் நமது கல்வி முறை. பெரும்பாலும் நமது கல்வி செய்முறையோடு இல்லாமல் வெறும் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரம் போலத் தான் இருக்கின்றது. அதில் வேதனைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் நன்றாக அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்கள் கூட பொறியியல், மருத்துவம், கணினி அல்லது   அறிவியலில் சிறப்பாக தேர்ச்சி பெறுவது கிடையாது. காரணம் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்கிற பழமொழிக்கேற்ப கடைசிவரை மனப்பாடமே செய்கின்றனரே தவிர செய்முறையில் அதிக நாட்டம் காட்டுவதில்லை.


பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, முனைவர் பட்டம் வாங்கும்போதே வயது அதிகமாகிவிடுகின்றது. அதன் பிறகு வேலை, கல்யாணம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கத்தில் சினிமா , டி .வி  என்று தொடர் பயணம் செய்வதால் ஆராய்ச்சி செய்து புதியவைகளை கண்டுபிடிப்பதற்கு நேரம் ஏது ? மேலும் பள்ளி பாடத்திலிருந்து கல்லூரி (கலை அல்லது பொறியியல்) பாடம் என்று மாறும்போது அவைகள் மிக மிக கடினமான பாடத்திட்டம் தான். 

 

அதை நடத்துபவர்களுக்கு அதிக கல்வியறிவு இல்லாததால் வெறும் வாசிப்பு (கணிதம், கணினி பாடம் உட்பட) மட்டும் கடமைக்கு வாசித்துவிட்டு வேலையை முடித்துக் கொள்கிறார்கள். ஏதேனும் சந்தேகம் வந்தால் சொல்லித் தருவதில்லை. மீறி தெரிந்துகொள்ள விரும்பினால் வலைதளத்தை நாடவேண்டிய சூழ்நிலை. அதற்கு நேரமும், பணமும் வேண்டும். வலைதளத்தில் உட்கார்ந்துவிட்டால்  பாடத்தைவிட படத்தையும், பாடலையுமல்லவா பார்க்கிறார்கள்!

    

அதேபோல் விளையாட்டிலும் இதேகதி தான். +2 வரை படிப்பில் கவனம் செலுத்தி திடீரென்று விளையாட்டில் ஆசியா அளவில் அல்லது ஒலிம்பிக் அளவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதா? இது விளையாட்டு அல்லது ஆராய்ச்சியில் மட்டும் பொருந்துவது கிடையாது. எல்லாத் துறைகளுக்கும்   பொருந்தும். 


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை... என்று பழமொழிகள் இருக்கின்றன. அதாவது சிறிய வயதிலிருந்தே ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி பெற முடியும். 'ஜிம்னாஸ்டிக்ஸ்'மற்றும் சர்கஸ்  விளையாட்டுகள்  இருக்கின்றது. அந்த விளையாட்டில் உடலை வளைத்து, மடக்கி, நீட்டி விளையாடுவார்கள். அது வயது வந்தவர்களால் செய்ய இயலாது. ஏனென்றால் அவகளின் உடல் ஒத்துழைப்பு தராது. அது போல ஆராய்ச்சியில் ஈடுபட நினைக்கும் மாணவர்கள் ஆறாவது வகுப்பிலிருந்தே அம்மாணவர்கள் விரும்பினால் கணிதம், அறிவியல் பாடங்களை ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது .... என்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரீட்சை வைத்தால் மூன்றரை ஆண்டுகளில் அந்த இரு பாடத்தில் +2 வரை உள்ள பாடத்தை படித்துவிடலாம்.

        

பிறகு கல்லூரி பாடங்களை படிக்கும்போது அவர்களுக்கு எளிதில் புரிவதோடு ஆழ்ந்து, சிந்திப்பதற்கும் நேரம் கிடைக்கும். இன்றிருக்கும் ஆராயச்சி மைக்ரோ அளவு என்று இருந்தது போய் நானோ அளவு நுட்பமாக இருந்தால் தான் சாதனை படைக்க இயலும். வெறும் பாடம் படித்து நோபல் பரிசு வெல்ல முடியாது. சிறு வயது முதற்கொண்டே ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு செய்முறை கல்வியோடு ஆராய்ச்சி படிப்பும் கொடுத்தால் பிற்காலத்தில் நம் நாடு நிறைய நோபல் பரிசு பெரும்.

                   

இதேபோல் சிறு வயது கொண்டே சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கடுமையான விளையாட்டுப் பயிற்சிகள் கொடுக்கும்போது கண்டிப்பாக நமது நாடு பல சாதனைகள் படைக்கும். இதனால் சிபாரிசுகள் தவிர்க்கப்படும். வேண்டுபவர்களை சேர்த்துக் கொள்வது என்பதை ஒழித்துவிடலாம். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. அவைகளை முறியடிப்பதற்கு விசேஷமான பயிற்சியும், விடா முயற்சியும் தேவை. அது உடனே வந்து விடாது. படிப்படியாகத் தான் வரும். இளமை மிகவும் அவசியம்.

         

உதாரணமாக செல்போனில் ஏதாவது புதுமை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு தூரம் வளந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கவே நிறைய மாதங்கள் தேவைப்படும். அதுமட்டுமா? ஆட்டோமொபைல், மருத்துவம், விவசாயம், எரிசக்தி, பொறியியல், இராணுவம், விண்வெளி,  இன்றைய வியாபார நுணுக்கம், கணினி, அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சியின் ஆழம் எவராலும் கணிக்க முடியாது. இந்நிலை இப்படியே நீடித்தால் ஆராய்ச்சி என்பதே மறந்து அந்நிய நாட்டை எப்போதும் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வந்துவிடும். அவர்கள் சொல்வது தான் விலை என்று வருவதற்கு நீண்ட நாட்கள் இல்லை.  

             

ஆக இந்த மாதிரியான பயிற்சிகள் தருவதால் மாணவர்களின் அறிவும் திறமையும் ஒழுங்கு படுத்தப்பட்டு கூர்மையாக்கப் படுகிறது. அடுத்தடுத்து அவர்கள் திறமைகளைப் பெருக்கிக்கொள்வதால் மற்றவற்றில் அதாவது வேண்டாத செயல்களில் கவனம் செலுத்துவது தவிர்க்கப் படுகின்றது. இதை அரசியல் தலைவர்கள் நன்றாக புரிந்துகொண்டு தகுந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுத்தால் நிச்சயம் நமது நாடு சிறந்த நாடாக மாறும். இப்போதே நமது பழைய கண்டுபிடிப்புகள் வெளிநாட்டுக்கு போய்விட்டது. மீதி இருப்பதையாவது காப்பாற்றப்படவேண்டும். இன்னும் பல சி.வி. ராமன்களை, இராமனுஜத்தை, ஜகதீஷ் சந்திர போஸ்களை உருவாக்குவது நமது கடமை அதற்கு விழிப்புணர்வும், நல்ல பாடத்திட்டமும் வேண்டும். வளர்ச்சிகள் கட்டாயம் இருக்கும். அதை நாம் பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

    

இளைஞர்களின் மாய வலையினை அறுத்தெறியுங்கள்.

ஆராய்ச்சிக்கு வசதியும், முதலிடமும் கொடுங்கள்.

          

நிச்சயம் 2020 ல் இந்தியா ஒரு வல்லரசு தான்.

              

இல்லையேல் பூஜ்யம் தான்.
       

Thursday, 21 March 2013

மனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END

மனிதனின் முடிவு திரைப்படம் போல் 
சுபமாக இருக்க-
WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END 


தன்னம்பிக்கை கட்டுரை 

பொதுவாக எல்லோருக்கும் திரைப்படம் பார்ப்பது என்றால் மிகவும் பிடித்தமானது ஒன்றாகும். ஒரு சிலர் குறிப்பிட்ட திரைப்படத்தை அல்லது திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் நீண்ட நாட்கள் அமோகமாக ஓடுகிறது. அது எதனால்  என்று பார்த்தோமானால் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் நகைச்சுவை கலந்தும், கள்ளம், கபடமில்லாமல் இருப்பார்கள் அல்லது மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படியாக இருப்பார்கள் . அதாவது ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலுமே அதில் வரும் கதாநாயகன் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கடைசியில் அனைவருக்கும் திருப்திபடும் வகையில் நல்ல முடிவு கட்டாயம் கொடுத்திருப்பார்கள். அதைத் தான் எல்லோரும் எதிர்பார்த்துச் செல்கின்றனர். இது திரைப்படம்.

ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் திருப்தியாக , சுபமாக முடிகின்றதா? எத்தனை கஷ்டங்கள், நஷ்டங்கள்? ஏன் எதற்காக மனிதனின் முடிவு வெற்றிகரமாக இருப்பதில்லை? அனைத்திற்கும் காரணம் சுயநலம், நம்பிக்கையின்மை, பொறாமை, நான் என்கிற அகம்பாவம், விட்டுக்கொடுக்கும் மனப்பன்மையின்மை, உறவுகளை பெரிதாக மதிக்காமை, பேராசை, இன்னும் அடுக்கின்கொண்டே போகலாம். 

இவைகளெல்லாம் இல்லாமல் திரைப்படத்தில் வருவதுபோல் மனிதனின் முடிவின் போது எல்லாப் பிரச்சனைகளும் நன்றாக தீர்த்துவிட்டு சுபமாக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதில் கதாநாயன் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ப்பது போல் நீங்களும் ஏன் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதாநாயகனாக மாறக்கூடாது. அனைத்துப் பிரச்சனைகளையும் ஏன் தீர்க்கக் கூடாது?

உங்களாலும் சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அதற்குத் தேவை சிறிதளவு தன்னம்பிக்கை, சிறிதளவு முயற்சி, சிறிதளவு தியாகம். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியை விட்டுச் செல்லும்போது தன்னுடைய பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருந்தால் அதுவே புண்ணியமான காரியமாகும். சொர்கத்திற்கு செல்லும் பாதையும் கூட.

அன்றாட வாழ்விலும் சரி, ஆட்சியிலும் சரி அவர்கள் விட்டு இறங்கும்போது தலை முங்கும் அளவிற்க்கு பிரச்சனைகளை வைத்துச் செல்வதைத் தான் பார்க்கிறோம். ஆட்சியே அப்படியிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் நன்றாக இருக்குமா? இதற்குக் காரணம் மிதமிஞ்சிய மாற்றங்கள். அனைத்தும் குறுகிய காலத்தில் நிகழ்கின்றமையால் எல்லோராலும் அதை உடனே பின்பற்ற முடியாத நிலைமை. உற்பத்தியை கண்மூடித்தனமாக பெருக்கிக்கொண்டே போனால் யார் அதை அனைத்தும் வாங்குவது? வாங்கிவிட்டால் அதை வைப்பதற்கு இடமேது? பெரிய பெரிய கட்டங்கள் கட்டிக்கொண்டு போனால் யார் அதை வாங்கி இருப்பது?  ஒரே நாளில் மனிதனின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் அவ்வளவு பெரிதாக மாறிவிடவாப் போகிறது? 

ஆனால் மீடியாக்கள் அப்படித்தான் காண்பிக்கிறார்கள். அப்படி பெரிதாகப் திட்டங்கள் போட்ட நாடுகள் அனைத்தும் இன்று திவாலா ஆகி மற்ற நாட்டினிடத்தில் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டி யிருக்கிறார்கள். நாடுகள் மட்டுமல்ல. பல முக்கிய தொழில் நிறுவனங்களும் கூட. மாற்றங்களைப் புரிந்துகொள்ளு முன்னமே மீண்டும் அடுத்த மாற்றம்? இப்படி இருப்பதனால் எல்லோரையும் மிக எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள். உலகம் முழுவதிலும்  கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பேர்களின் கைகளுக்கு  மாறுகின்றது. அப்படியிருக்கும்போது அது யாருடைய பணம் எப்படி வந்தது என்று யாருக்குத் தெரியும். அத்தனை வேகத்தில் இடம் மாறுகின்றது. உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை?

ஒரே நாளில் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் !! ??? என்று பல மீடியாக்கள் விளம்பரப் படுத்துகின்றன. ஆனால் அதன் பின்னணியில் எத்தை பேர் ஆண்டியானார்களோ!? அல்லது பணத்தை இழந்தார்களோ? இன்றைய கால கட்டத்தில் தனக்கு அதிக ஆதாயம் இல்லாமல் யாருமே பணத்தை தூக்கித் தரமாட்டார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமே சரியாகத் தான் தெரியும். ஆனால் மறைவில் நடப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதாவது ஒருவருக்காக பல நூறு பேர்கள் ஏமாறுகிறார்கள் என்பது தான் உண்மை. அதுவும் கற்பனை செய்து பார்க்கமுடியாத வகையில் ஏமாற்றுகிறார்கள். அதோடு பிடிபடாமலும் தப்பித்தும் விடுகிறார்கள். இந்த மாதிரி வாழ்க்கை இருந்தால் எப்படி சுமூகமான முடிவு வரும்?? என்றா கேட்கிறீர்கள்!



இப்படியே எல்லோரும் தள்ளிவிட்டால் எப்படி? பகட்டு விளம்பரத்தில் மயங்காமல் முதலில் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை சுபமாக தீர்ப்போம். தன்னம்பிக்கையோடு செய்வோம். திரைப்படம் போல கட்டாயம் திருப்தியான முடிவு ஒவ்வொர்ருடைய வாழ்விலும் நிகழும் என்று நம்புவோம்.


நன்றி
வணக்கம்.